Skip to content
Home » நான் கண்ட இந்தியா #29 – பனாரஸ் – 2

நான் கண்ட இந்தியா #29 – பனாரஸ் – 2

பனாரஸ்

இடப்புறம் இருந்த வீட்டில் இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தனர். வீட்டு மாடியில் பரஸ்பரம் தண்ணீர் ஊற்றிக் கைகளைக் கழுவிவிட்டு உள்ளே நுழைந்தோம். மேஜைகள் தாழ்வாக இருந்தன. அதில் ஒவ்வொருவருக்கும் தனித்தனி செப்புத் தட்டில் உணவு தயாராக இருந்தது.

முழுக்க முழுக்கச் சைவ சாப்பாடு. அனைத்து வகை காய்கறிகளையும் தக்காளிச் சாற்றில் பிழிந்து சமைத்திருந்தனர். வேகவைத்த அரிசியும் காய்கறிகளும் பிரமாதமான ருசி. அங்கிருந்த தட்பவெப்பத்திற்கு ஏற்ற உணவு அதுவாகத்தான் இருக்க முடியும் என்று நம்புகிறேன்.

டாக்டர் பகவான் தாஸின் பேத்திகள், கலாசாரத்திற்கு கட்டுப்பட்டவர்கள். எங்களோடு அமர்ந்து உண்ணாமல் இறுதிவரை பரிமாறிக் கொண்டிருந்தார்கள். இருவரும் பருமனில்லாத ஒடிந்த தேகம். அடர் நிறம். கண்களில் பிரகாசம் நிறைந்து, உள்ளத்தில் புத்திக் கூர்மை தெரிந்தது.‌

உணவு முடித்து தங்கள் அறைக்கு திரும்புகையில், நான் அவர்களைப் பார்த்தேன். ஒரு சிறிய மேஜையில் புத்தகங்களையும் குறிப்பெடுத்த காகிதங்களையும் கத்தைக் கத்தையாக அடுக்கி வைத்திருந்தனர். அந்த மேஜைமேல் சாய்ந்து கொண்டிருந்த இருவரையும் உணவறையில் இருந்து பார்த்தால், நன்கு தெரியும். இருவரும் பல்கலைக்கழகத் தேர்வுக்குத் தயாராகி வருவதாய் சொன்னார்கள்.

மறுநாள் காலை, பனாரஸ் நகரத்தின் சூர்ய உதயத்தை என் சாளரத்தில் இருந்து பார்த்தேன். சமுத்திரத்தில் பயணித்தபோது, இந்திய வானம் பற்றி எனக்கேற்பட்ட அபிப்பிராயம் மீளவொருமுறை மனத்தில் தோன்றியது. காற்றின் தூய வெண்ணிறமும், சற்றே அந்நியமான மங்கிப்போன அப்பழுக்கற்ற நீல வானும், ஆதிகால இந்திய வெளிச்சத்தை என்மேல் பாய்ச்சியதில் வியப்பில்லை.

ஆடை உடுத்திக் கொண்டு மாடிக்குச் சென்றேன். அதிகாலையிலேயே ஆற்றுக்குச் செல்ல திட்டமிருந்தாலும், இன்னும் யாரும் தயாராகவில்லை. கொஞ்ச நேரத்தில் முஜீப் வந்தார். அவசரமும் பதட்டமும் நிறைந்த அவர் கண்களில் அமைதி இழையோடி சாந்தம் குடியிருப்பதை முதன்முறையாகப் பார்க்கிறேன்.

மன அமைதியோடு விடிந்த அந்த நாளை என்றும் என்னால் மறக்கமுடியாது. வெறும் பன்னிரெண்டு மணிநேரத்தில் இத்தனை நெருக்கமான, நெஞ்சுருக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தது அநாயாசமாக இருந்தது. அவற்றுள் நீங்காமல் ஒட்டிக்கொண்ட மனப்பதிவுகள் சிலவற்றைப் பகிர்கிறேன்.

பாபு சிவ பிரசாத்தின் வீட்டுக்குச் சென்றோம். தேநீரும் பழங்களும் கொடுத்து குடும்பத்தோடு வரவேற்றார். தற்போது அவர் தங்கியிருக்கும் இந்தச் சிறிய வீடு முன்னிருந்த அரண்மனைக்கு முற்றிலும் முரணானது. இது ஓர் ஒற்றை மாடிக் கட்டடம். மேலே அறைகள் கிடையாது, வெறும் மாடி.

மற்ற கட்டடங்களும் விநோதமாக இருந்தன. வீட்டைச் சுற்றி நிறைய மரங்கள். இலை தழைகளைப் பற்றிக்கொள்ள அதன் ஊடாகக் கை நீட்டினால் கங்கை ஆற்றைத் தொட்டுவிடலாம். வீடு முழுவதும் உள்நாட்டுப் பாணியிலான அறைகலன்கள். ஆனால் தூய வெண்ணிற பருத்தித் துணியால் போர்த்தப்பட்ட சாய்வு நாற்காலிகளும் சில இருந்தன.

அதில் ஒரு நாற்காலியில், மொட்டைத் தலையோடு செருப்பு அணியாமல் அவர் உட்கார்ந்திருந்தார். அவர் ரோமம் பஞ்சு போல் வெண்மையாய் இருந்தது. பழங்கால மனிதரைப் போல் தன் அகண்ட நெஞ்சை மறைக்கும்படி நீண்ட தாடி வளர்த்திருந்தார். வாட்டசாட்டமாக இருந்த இவர் கருணைமிக்க கண்களால் என்னைப் பார்த்த பார்வை, என் தாய்வழி தாத்தாவின் நினைவுகளைக் கண்முன் கொண்டு வந்தது.

தாத்தாவின் கண்களை ஏன் எனக்கு அத்தனைப் பிடித்திருந்தது என்று இளமையில் எனக்குத் தெரியாது. ஆனால் இப்போது புரிகிறது. பாபு சிவ பிரசாத்தின் கண்களைப் போல் அதில் வலிமை வெளிப்படுகிறது; எதார்த்தம் தெரிகிறது; அப்பழுக்கற்றத் தூய்மையைப் பிரதிபலிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அதில் ஒரு குழந்தைத்தனத்தை நான் பார்க்கிறேன்.

பாபுவின் ஒவ்வொரு செயலிலும் விளையாட்டுத்தனம் ஒளிந்திருக்கும். முன் அனுபவமின்றி அவர் நிர்மாணித்த பாரத மாதா கோவிலும் அப்படிப்பட்டதுதான். அவரின் பிரமை பிடித்த செயல்களைக் கண்டால், தன் தந்தையார் வீட்டில் தன்னோடு விளையாடுவதற்காக மாற்றார் வீட்டுக் குழந்தைகளை அழைத்து வரும் ஒரு பெருந்தன்மை மிக்க சிறுவனைப் போல் தோன்றும். அனைத்துலகிலும் நிறைந்த அல்லாஹ், அவரையும் அவர் கோயிலையும் வாழ்த்துங்கள்!

அடுத்ததாக ஆண்களும் பெண்களும் நிறைந்த பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திற்குச் சென்றோம். அங்கிருந்த பயிற்சிப் பட்டறைகளைப் பார்த்தால், ஆண்கள் வெறுமனே பொறியாளர் ஆவதற்கு மட்டும் உழைப்பவர்களாகத் தெரியவில்லை. நுட்பமான வேலையாளாக, கலைத்திறத்தோடு இயந்திரவியல் படித்தார்கள். மாலை வேளையில் மாணவர்களோடு உரையாடிவிட்டு, அங்கிருந்த பேராசிரியர்களைச் சந்தித்தேன்.

அங்கிருந்தவர்கள் எல்லா வகை ஆடைகளும் உடுத்தியிருந்தனர். மிகக் கண்ணியத்தோடு பேச்சுக் கொடுத்தனர். பிறகு அங்கிருந்த மற்றொரு துறைக்குச் சென்றேன். ஜாமியாவுக்கு நிகரான கூடம் அது. இங்கு இவர்களுக்கு இந்தி மொழியில் பாடம் சொல்லித் தருகிறார்கள். மாணவர்களோடு பேசியது ஆர்வமாக இருந்தாலும், நிரம்ப இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் பற்றி சொல்லியதைக் காட்டிலும் வேறு சில புதிய விஷயங்களை அவதானித்ததில் ஓரளவு மகிழ்ச்சி.

ஜாமியாவில் இருந்ததைப் போல் நிம்மதியும் நட்புணர்வும் இங்கு இல்லை. ஆனால் அதற்கான முகாந்திரம் இருந்தது. ஒத்துழையாமை இயக்கத்தால் பாதிக்கப்பட்டதால் இவர்கள் எல்லோரும் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாய் எனக்குச் சொன்னார்கள்.

மாண்டிசோரி முறையிலான மழலையர் பள்ளி ஒன்றுக்குச் சென்றிருந்தோம். அன்னி பெசண்ட்டின் பிரம்மஞான சங்கத்தின் வழிகாட்டுதலில் இயங்கும் அழகான கல்வி நிறுவனம். ஒவ்வொரு மொழியிலும் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் தனித்தனி ஆசிரியர்கள் பயிற்றுவித்துக் கொண்டிருந்தனர். இந்தியாவின் பன்மைத்துவ வேறுபாடு, இத்தனைச் சிறிய பள்ளிக்கூடத்தை இங்ஙனம் உள்வாங்கியிருப்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.

பனாரஸ் வீதிகள் பற்றிச் சொல்கிறேன்: கங்கையை நோக்கிச் சென்ற இரு செங்குத்தான வீதிகள் இன்னும் என் மனக்கண்ணில் அப்படியே உள்ளன. முதல் தெருவில் கடைகள் மற்றும் விற்பனையகங்கள் இருமருங்கிலும் வண்ணமயமாக ஜொலித்தன. கைவினைப் பொருட்களும், பனாரஸ் ஓவியங்களும் ஏராளம். அங்கிருந்த செம்புத் தொழிற்சாலையால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். செம்பினால் செய்த அழகுப்பூர்வமான வீட்டு உபயோகப் பொருட்கள் எண்ணிலடங்காத வகைகளில் அங்குப் பிரத்தியேகமாக கிடைத்தன.

துணிக்கடைகள், உணவு அங்காடி, அதிலும் குறிப்பாக காய்கனி கடைகள் அங்கு ஏராளம். ஆனால் அங்கு மனிதர்களுக்கு இணையாகப் பல பசுக்கள் இருந்தன.‌ எவ்விதக் கட்டுப்பாடுமின்றி கடைத்தெருக்களைச் சுற்றி வந்தன. அரசக் குடும்பத்துப் பிள்ளைபோல் அதற்கு ராஜ மரியாதை கொடுத்தனர். தன் இஷ்டப்படி ஏதாவதொரு கடைமுன் நின்று, அங்கிருக்கும் காய்கறிகளைச் சகட்டு மேனிக்கு மேய்ந்துவிடும். ஆனால் யாரும் அதைத் துணிந்து விரட்டிவிட மாட்டார்கள். மாறாக அதன் பக்கத்தில் நின்றுகொண்டு பயபக்தியோடு வழியனுப்பி வைப்பார்கள்.

நான் அன்றைக்கு என்றுபோலும் இல்லாமல், ஒரு ஹீரோவாக உணர்ந்தேன். மென்மையான பசுவுக்குப் பதில், காட்டுப் புலி ஒன்று வந்தால்கூட அதை எதிர்கொள்ளும் தைரியம் இருந்தது. ஆனால் எவ்விதக் காரணமின்றியும் அவர்கள் உருவாக்கி வைத்த பயம் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கியது. கடைத்தெருவுக்கு பக்கத்தில் அங்குமிங்கும் கோயில்கள் இருந்தன. அதனொரு படியில் நடுத்தர வயதுள்ள ஆசாமி ஒருவர் வேதங்கள் ஜெபித்துக் கொண்டிருந்தார்.

பனாரஸின் பெரிய கோயில் ஒரு விஷ்ணு ஆலயம். உட்பகுதி நுட்பமாக இருந்தது. விதவிதமான மார்பிள் வடிவங்கள். ஒவ்வொரு பகுதியையும் விஷேசமாகப் பிரித்திருந்தனர். உட்கூரையில் விநோதமான உருவங்கள். திருவுருவத்திற்கு முந்தியும் பூவேலைப்பாடுகளால் ஆன கம்பிகள் இருந்தன‌. எங்கு பார்த்தாலும் திருவுருவங்கள். சில உருவங்கள் பூக்களில் இருந்து உதித்தன.

ஆண்களும் பெண்களும் நூற்றுக்கணக்கான அளவில் சுற்றி நின்று பூக்களை வீசிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தனர். சிலர் முகத்தில் பல்வேறு குறிப்புகள் அளவுக்கு மீறி வெளிப்பட்டன. அவர்கள் பாவனையிலும் முகக்குறிப்பிலும், உளப்பாங்கை அறிந்து கொள்வது கடினமாக இருந்தது.

தேனீக்கள் சத்தமிடுவது போல் பலத்த ரீங்கார ஒலி ஓம் என்று ஒலித்தது. இதைப் பார்ப்பதற்கு வழிந்து நிறையும் துருக்கிய சுடுதண்ணீர் குளியல் அறையோ எனத் தோன்றியது. பக்தர்களின் மூச்சுக்காற்றால் இங்கும் நீராவி வெளியேறியது. கொஞ்ச நேரத்தில் அவர்கள் எல்லாம் பனிமூட்டத்தில் தோன்றிய கற்பனைக் கூட்டம்போல் தெரிந்தனர். ஓரிடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் அலைந்துகொண்டு அடையாளம் கொள்ள முடியாதபடி ஓடினார்கள்.

குறுகலான சிறிய வீதி: படியில் இறங்கி கீழே சென்றோம். அவை எந்த அளவுக்கு குறுகல் என்றால், இரண்டு கைகளையும் பரவலாக நீட்டினால் இருமருங்கிலும் உள்ள கட்டடங்கள் விரல்களை முட்டும். கட்டடங்கள் எல்லாம் சின்னஞ் சிறிய கோயில்களாக இருந்தன. பெரும்பாலும் அவை மிருக உருவம் கொண்ட கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. கிட்டத்தட்ட காடு முழுவதையும் கடவுளாக்கி வைத்திருந்தனர். இறையுருவங்கள் பூச்சூடி இருந்தன. ஆடைகளிலும் பூ அலங்காரம் மிகுந்திருந்தது.

கட்டடங்கள் எல்லாம் கற்பனைக்கு அப்பாற்பட்ட பொம்மைகள் போல் இருந்தன. இதுநாள்வரை நான் பார்த்த தூரக் கிழக்கு தேசம் எப்போதும் போலன்றி, இன்று எனக்கு வித்தியாசமாக இருந்தது. மெஜந்தா சிகப்பு, ஊதா மற்றும் காப்பி நிறத்தில் அவை இருந்தன.

இதுவரை பார்த்தவர்களுள் யானை கடவுள்தான் நட்புக்கும் மகிழ்ச்சிக்கும் உரியவர். துதிக்கையை ஒரு பக்கம் ஒதுக்கிவைத்து, புட்டத்தில் அமர்ந்து, தலையில் பூச்சூடி இருந்தார்.
கண்கள் விவேகத்துடன் ஆச்சரியமூட்டின. பெரிய கோயில்களைக் காட்டிலும் இந்தச் சிறிய ஆலயங்களும் மிருகக் கடவுள்களும் என் மனத்திற்கு பிடித்துப்போனார்கள்.

இது ஒருவரின் தனித்துவ எண்ணத்தை தூண்டிவிடும். ஒவ்வொரு இனக்குழுவின் போராட்டத்தையும் பிரதிபலிக்கும். தன்னைக் கஷ்டத்திலிருந்து காப்பாற்றும் கடவுளை ஒவ்வொருவரும் தனக்கே உரித்தான உருவத்தில் வெவ்வேறு மாதிரி உருவகப்படுத்துகின்றனர். மனிதப் பிரச்சனைகள் எல்லையில்லாமல் போவதால், உருவங்களும் பெருகிக் கொண்டு போகின்றன.

காட்டுத்தனமான குறியீடுகளால் பல்கிப் பெருகிய ஆதிகால கற்பனையுலகில் இருப்பதுபோன்ற சூழல். பூமியில் மனிதன் தோன்றியதில் இருந்தே, தனக்குப் பழக்கமான விஷயங்களைத்தான் வழிபட முயற்சித்தான். இந்தியக் காடுகளைக் காட்டிலும் அவனுக்குப் பழக்கப்பட்ட விஷயம் என்னவாக இருக்க முடியும்?

மீண்டும் ஒருமுறை ‘பூமி தோன்றிய போதிருந்த காலக்கட்டத்து…’ சூழல் நிலவியது. இந்தச் சிறிய கோயிலில் வழிபடுபவர்களைப் பாரக்கும்போது, அவர்கள் மனதளவில் குழப்பமான குறியீட்டுத்தனங்களால் நிறைந்த ஓர் அர்த்தமூட்டக்கூடிய வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள் என்பது போலத் தெரியும். இன்னும் இவர்கள் ‘அருவமான’ கருத்தாக்கங்களுக்கு முன்னேறி வரவில்லை.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *