Skip to content
Home » நான் கண்ட இந்தியா #30 – பனாரஸ் – 3

நான் கண்ட இந்தியா #30 – பனாரஸ் – 3

பனாரஸ்

ஒருமுறை நான் அமெரிக்கா சென்றபோது அங்கிருந்த பாரசீகப் புலவர் ஒருவர், ‘முஸ்லிம்களின் ஓரிறை நம்பிக்கையால்தான் கற்பனாவாதம் இல்லாமல் போனது. உலக வாழ்க்கை குறுகலாகி, கலை முதலிய விஷயங்கள் அழிந்துபோனது’ என்று சொன்னார். அது சரி, ஆனால் அதில் உண்மை இருக்கிறதா?

இறை உருவங்களுக்கு அருகில் அமர்ந்தாலும், அவற்றை ஆச்சரியமாக பார்த்தாலும், தீவிரமாக யோசித்தாலும் ஏகத்துவக் கொள்கையை நினைத்து நான் ஒருபோதும் வருந்தியது இல்லை. எமது இறைவன் எல்லா வடிவங்களையும் வெறுக்கிறார்.

எத்தனை முறை பரிணாமம் அடைந்தாலும், மனிதர்களால் உருவாக்கப்படும் குறிப்பிட்ட உருவங்களுக்குள் தன்னை அடைத்துக்கொள்ள மறுக்கிறார். இந்தப் பன்முக உருவங்களுக்கு பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் அற்ப மனித இதயத்தின் அபாரமான முயற்சிகள் எல்லாம் பூரணத்துவமாக விளங்கும் ஒற்றை இறைவனைத் தரிசிக்க தானே?

திறந்தவெளி சரிவில் நாங்கள் கீழே இறங்கினோம். பழுப்பு நிறத்தினாலான ஒரு சிறிய கன்றுக்குட்டி, வெள்ளைப் பூக்களால் தொடுத்த மாலையைச் சூடி நின்று கொண்டிருந்தது. மென்மையான தன் பழுப்பு நிறக் கண்களால், சுற்றியிருந்த மக்கள் கூட்டத்தை ஆச்சரியமாகப் பார்த்தது.

பக்தர்கள் வழங்கும் கீரையை முகர்ந்து பார்க்க முடியாத அளவுக்கு, அதன் வயிறு நிரம்பியிருந்தது. அருகில் இருந்த நபர், தன் கைகளை மேலும் கீழும் அசைத்து இந்த அழகான சிறிய கன்று-சாமியின் மகத்துவத்தை எடுத்துச் சொன்னார்.

கங்கை நதிக்கரை முழுதும் சின்னஞ்சிறு குழுக்கள். சிலர் குளித்துக் கொண்டும், இன்னும் சிலர் வீட்டு உபயோகப் பொருட்களைப் புனித நீரில் அலசிக் கொண்டும் செவ்வனே ஓயாத இயக்கத்தில் இருந்தனர். கத்தைக் கத்தையாக மரக்கட்டைகளும், ஈம விறகுகளும், வெண் துணியில் சுற்றிய சிதைமூட்டிய சடலங்களும் அங்கு ஏராளம் இருந்தன.

இறந்துபோனவர்களில் சிலர் இளம் வயதில், மெலிந்த தேகத்தில் இருந்தனர். மற்று சிலருக்கு, மூப்படைந்த பருமன் தேகம். இத்தனை நாள் உடன் இருந்தவன் மண்ணோடு மண்ணாகி, கங்கையில் கரையப்போகிறான் என்று எண்ணி அருகிலிருந்த உறவினர்கள் மிரட்சியுடன் பார்த்தனர்.

எண்ணிலடங்காத தெப்பங்கள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கரையிலிருந்து தெப்பத்தை அடைய, மரப்பலகை இருந்தது. ஒற்றை ஆளிலிருந்து ஒரு குடும்பமே கொள்ளும் அளவுக்கு தெப்பத்தின் வசதிற்கேற்ப நிறைய நபர்கள் குவிந்திருந்தார்கள். துணி, பாத்திரம் முதலியவற்றை அலசி எடுத்து தெப்பத்தில் போட்டுக் கொண்டு வேகமாக நகர்ந்தனர்.‌

நகரின் அருவருப்பான, பிசுபிசுப்பு கூடிய கரிய நிற சாக்கடை நீர் தெப்பங்களின் ஊடாக கங்கை நதியில் கலந்தது. இத்தகைய சூழலில் இங்கு ஏன் காலரா, டைஃபாய்டு போன்ற கொள்ளைநோய்கள் ஏற்படவில்லை என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் கங்கை நீரில் கிருமிகளை அழிக்கும் விஷேச சக்தி இருப்பதாக, இந்நீரை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் சொன்னதாய் என்னுடன் வந்தவர்கள் சொன்னார்கள்.

நாங்கள் இப்போது கங்கையில் பயணித்தோம். எங்கள் தெப்பத்தில் வெள்ளை நிற மெத்தையும் உட்காருவதற்கென்று சிறிய குஷனும் இருந்தது. துடுப்பு போடுபவர் அரை நிர்வாணக் கோலத்தில் இருந்தார். எங்கள் வலப்பக்கத்தில் இருந்த கங்கை கரையை மெல்லமாக கடந்து வேடிக்கைப் பார்த்தோம். இடப்பக்கம் ஆளரவமற்ற வெற்று நிலங்களும், சில மரங்களும் இருந்தன.

மக்கள் கூட்டம் நிறைந்த பக்கத்தைப் பார்க்கும்போது பட்டுப்பூச்சிக் கூட்டம் போன்ற மென்மையான அசைவுகளும், கூச்சல் நிறைந்த ஓட்டமும் தென்பட்டது. யாவரும் காணாத மாயக் கனவுகளை நெசவு செய்கிறார்கள் போலும். செங்குத்தான சரிவையொட்டி சிகப்பு, பழுப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறத்திலான கோயில்கள் தெரிந்தன.

ஆற்றிலிருந்து நூற்றுக்கணக்கான படி உயரத்தில் அவை அமைந்திருந்தன. ஏறி இறங்கும் படிக்கட்டுகளில் பல்வேறு நிறங்கள் இருந்தாலும், வெள்ளை நிறமே பிரதானம். கோட்டைகளும், மதில்சுவர்களும் இருந்தன…

‘இதைப் பார்க்க வெனிஸ் மாதிரி இல்லை?’

முழுமையாகச் சொல்லிவிட முடியாது. வெனிஸ் சிறிய நகரம். அதன் வடிவமைப்பில் குழப்பங்கள் இருந்தாலும், கச்சிதமாய் உருவாக்கப்பட்ட ஊர். மேற்குலகின் மத்தியக்கால அம்சங்கள் பொருந்தி, உலகியல் ஆசாபாசங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மக்கள் அங்கு உண்டு. அவர்கள் காதலை மெச்சுவார்கள். காதலுக்காக அநீதியின் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

பனாரஸ் பரந்து விரிந்த நகரம். அதன்‌ எல்லைகளை விவரிக்க முடியாது. மானுட இனம் பூமியில் தோன்றுவதற்கு முன்பே உருவானது போலான கட்டடங்களும், நகர அமைப்பும், வெளிச்சமும், மக்கட்கூட்டமும் அங்கு இருக்கின்றன. நான் எப்போதும் சொல்லும், ‘உலகம் தோன்றிய காலத்து’ சிந்தனையோடு பனாரஸ் ஒத்துப்போகிறது…

நாங்கள் அதே இறக்கத்தில் இறங்கிக் கொண்டு, செங்குத்தான சாலை வழியே திரும்ப வந்தோம். கோயிலில் மீண்டும் மக்கள் திரளைப் பார்க்க முடிந்தது. கபீரின் வார்த்தைகளால் சொல்ல விரும்புபவர்கள்: ‘கங்கையின் குளிக்குமிடத்தில் தண்ணீரைத் தவிர வேறெதுவும் கிடையாது. அவை பயனற்றவை. நான் அங்கு குளித்திருக்கிறேன். அங்கிருக்கும் சிலைகளுக்கு உயிர் கிடையாது.‌ அவற்றால் பேசவும் முடியாது. நான் அவற்றிடம் கண்ணீர் மல்க புலம்பியிருக்கிறேன்’ என்று சொல்வார்கள்.

ஆனால் நான் அப்படி உணரவில்லை. என் இளம் பிராயத்தில் வாசித்த ஓர் அருமையான நாடகத்தை, பனாரஸ் விஜயம் எனக்கு நினைவூட்டுகிறது. என் சிந்தனைக்கேற்ற நல்ல தீனியாக இருக்குமென்று கருதுகிறேன். ‘நம்பிக்கை’ என்ற பெயரிலான அந்த நாடகம், பண்டைய எகிப்து நகரில் நடப்பது போல் புனையப்பட்டது.

கதாநாயகன் சத்தியத்தின் பால் கட்டுப்பட்டவன். எப்பாடுபட்டாவது சமசரமற்ற சத்தியத்தை நிறுவி, போலிகளை அகற்ற உறுதி கொண்டவன். எகிப்திய மதவாதிகளின் போதனைகளில்தான் அப்பட்டமான போலிகள் குடியிருப்பதை அவன் தெரிந்துகொண்டான்.

போலி மதவாதிகளின் அதிகார ஆசையை வெளிக்கொணர்வதன் மூலம், சாமான்யர்களின் அறியாமையையும் அவர்களுக்கு ஏற்படும் கொடும் பாதகங்களையும் ஒட்டுமொத்தமாய் அழிக்க முடியும் என்று நம்பினான்.

‘மதபோதகர்கள் போலி இறையுருவங்கள் மீது நம்பிக்கை எழுப்புவது வெறும் அதிகார ஆசைக்காகவோ, சுய நலத்திற்காகவோ மட்டுமில்லை’ என்பதை கதாநாயகனுக்கு நிரூபிக்க உயர் போதகர் ஒருவர் மறுமுனையில் நின்று முயற்சி செய்தார்.

‘போலிகளில் பற்று கொள்வதன் மூலம் வாழ்வில் ஆறுதல் அடைந்து, வலிமை பெற மக்கள் விரும்புகின்றனர். அதற்கு இந்த இறையுருவங்கள் வேண்டியவற்றை செய்கின்றன’ என்பதை அவர் நிரூபிக்க விரும்பினார். ஆகவே போதகர் கதாநாயகனை கோயிலுக்கு அழைத்துச் சென்று கடவுள் திருமேனிக்குப் பின் அமர வைத்தார்.

ஆண்டுக்கு ஒருமுறை இறைவி தன் தலையை அசைப்பார். அது கடவுளின் கிருபையால் நிகழ்கிறது என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் கயிற்றை அசைத்து அதன் மூலம் ஆட்டுவிக்கும் போதகரின் வேலை இது. இப்போது கதாநாயகனால் மக்கள் வேண்டுவதைப் பார்க்கவும் கேட்கவும் முடிந்தது.

போதகர் கதாநாயகன் கையில் கயிற்றைக் கொடுத்து, அவன் இஷ்டப்படி இழுக்கவோ அசைவின்றி வைத்துக்கொள்ளவோ சம்மதித்தார். கயிற்றை இழுத்தால் அற்புத சக்தி உயிர்ப்போடு இருக்கும்; மறுத்தால் மக்களின் நம்பிக்கையில் இடிவிழும்.

கேட்பாரற்ற, பாவம் சூழ்ந்த, பார்வை தெரியாத, முடக்குவாதம் கொண்ட, மனம் வெதும்பி துன்பத்தில் வாழும் பலர் கோயிலுக்கு வந்தனர். மக்களின் அழுகுரல் கோயில் பிரகாரமெங்கும் எதிரொலித்தது. இறைவிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் கதாநாயகன் காதுகளை அழுகுரல் சத்தம் குத்தலெடுத்து துன்புறுத்தியது. தங்கள் பாரத்தை இறக்கி வைக்க இறைவனிடம் இருந்து ஒரு சிறிய அசைவு உண்டாகாதா என்று ஏக்கத்தோடு பார்த்தார்கள். ஒவ்வொருவரின் தனிப்பட்ட கதையைக் கேட்ட கதாநாயகன், மனித பாரங்கள் முன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு கயிற்றை அசைத்தான். தேவி இப்போது மகிழ்ச்சியோடு தலையசைத்தாள்!

0

ஒருவேளை இந்தக் கதை பனாரஸில் நடந்து, கதாநாயகனின் இடத்தில் நான் இருந்தால் என்ன செய்திருப்பேன்? என்னால் அதற்கு பதில் சொல்ல முடியாது. ஆனால் வண்ண வண்ண வித்தைகளுக்குப் பின்னால் மதப் பிரசாரம் செய்துகொண்டிருக்கும், உயர் போதகர்களிடம் நீண்ட நாளாக கேட்க வேண்டும் என்றொரு கேள்வி என்னைத் துருத்திக் கொண்டிருக்கிறது.

‘உங்கள் மதத்தில் ஒரேயொரு கடவுள்தான் இருக்கிறார். அவருக்கு உருவமில்லை என்பது உண்மைதானே? எவ்விதப் புற அடையாளங்களும் இல்லாத ஒருவர், இந்தப் பேரண்டத்தின் ஒட்டுமொத்த அழகைக் காட்டிலும் அதி அற்புதமானவர் என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கலாமா? மதத்தின் பூர்ண உண்மையை மக்களுக்கு சொல்லிவிட்டால், அது அவர்கள் நம்பிக்கையைப் பாதிக்கும் என்று இன்னும் நம்புகிறீர்களா?’

0

மலையுச்சிக்குச் சென்று காரில் ஏறும்போது அப்துல் மஜீத்தைச் சந்தித்தோம். அப்துல் மஜீத் இஸ்லாமியர்களுள் குறிப்பிடத்தகுந்த நபர். தானொரு வணிகனாக இருந்தாலும், ஏழை எளியோருக்கு உதவி செய்து கிட்டத்தட்ட பட்டாளிகளின் தலைவன் என்று சொல்லும் அளவுக்கு நற்பெயர் பெற்றிருந்தார். தன் இல்லத்திற்கு வந்து தேநீர் அருந்திச் செல்லும்படி கேட்டுக்கொண்டார். நாங்களும் ஒப்புக்கொண்டோம்.

அப்துல் அரேபிய பின்புலம் உடையவர். அவரின் அரசியல் பார்வை கலந்துபட்டது. ஆனால் இப்போது அவற்றை விட்டுவிட்டார். தான் சார்ந்த இனத்தின் அதி புத்திசாலித்தனமும் நல்ல வாதத் திறமையும் அவருக்கு அப்படியே கைக்கூடியிருந்தது. உலகின் பல நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். நன்கு பக்குவம் பெற்ற மனிதர்.

அவர் வீட்டு முற்றத்தின் உயர்ந்த மதில் சுவர்களை ஐவி கொடிகள் அலங்கரித்திருந்தன. எனவே கொஞ்சம் மங்கலாக இருந்தது.

நீண்ட தூரம் அலைந்து திரிந்த கலைப்பில் ஏதும் பேசாமல் தேநீர் அருந்தினோம். ‘இஸ்லாமிய சகோதர – சகோதரிகள் முற்றத்தில் காத்திருக்கின்றனர், உங்களால் இப்போது அவர்களிடம் பேச முடியுமா?’ என்று அவர் கேட்டார்.

மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி ஏற்பாடு செய்யும் எந்தவொரு அறிகுறியும் இவரிடம் இல்லை. பொதுவாக நாங்கள் சந்தை தெருவைக் கடக்கும்போதே இஸ்லாமியச் சொந்தங்களுக்கு தகவல் சொல்லி வரவைத்து, தேநீர் அருந்தும் இடைவெளிக்குள் அவர்களை அமைதியாக ஆட்படுத்தி தயார்படுத்துவதற்கு நிச்சயம் ஒரு கைத்தேர்ந்த வல்லுநர் தேவை. நாங்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது, முற்றத்தில் ஓர் ஈ எறும்பு கூட இல்லை. ஆனால் இப்போது வெளியே வந்து பார்த்தால், மக்கள் வெள்ளம் அலைமோதியது.

குறைந்தது நூறு பேராவது இருப்பார்கள். அதில் கைவினைக் கலைஞர்களும் குறு வியாபாரிகளும் பெரும்பான்மை. ஏழை மக்களுக்கே உண்டான அடக்கக் குணமும், கோழைத்தனமும், நாணமும் கொண்டு வாய் புதைத்து நின்றிருந்தனர். இருந்தாலும் எஜமானுக்கு அடிமையாய் இராமல், தன் சொந்த திறமையும் உழைப்பும் நம்பி வாழ்வை நகர்த்தும் கண்ணியத்தை அவர்களிடம் இயற்கையாய் காண முடிந்தது.

அவர்களின் ஆடை நலிந்தபோயிருந்தது. சிலர் கைத்தறியில் நெசவு செய்த நீண்ட வெள்ளைத் துணியை உடல் முழுதும் சுற்றியிருந்தனர். எல்லோர் முகத்திலும் விவரிக்க முடியாத தனிமையும் சோகமும் அப்பிக்கிடந்தது.

நான் அவர்களிடம் இருபது நிமிடங்கள் பேசினேன். அப்துல் மஜீத் அவற்றை மொழிபெயர்த்துச் சொன்னார். வெகு சிலருக்கே புரிந்தாலும், இறுதிவரை எல்லோரும் அமைதியாகக் கவனித்தனர். ஒரு சிலரின் புரிதலே அந்தச் சூழலை ஈர்ப்புடனும் அமைதியுடனும் வைத்திருக்க போதுமானதாய் இருந்தது.

பொது உணர்ச்சியும், விழாக்கோல மனக் கிளர்ச்சியும் இல்லாத மக்கள் கூட்டத்தை பனாரஸில் நான் இங்குதான் முதன்முதலாகப் பார்க்கிறேன். எனவே அவர்களின் தனிமையும் சோக உணர்ச்சியும் என் உள்ளத்தில் அப்படியே பதிந்தது. அவர்கள் வெளிப்படுத்தும் மனோபாவமும் உள்ளக் குறிப்பும் இந்திய முஸ்லிம்களின் இயல்பைப் பிரதிபலிப்பதாய் இருந்தது.

கபீர் சொன்னதுபோல் கங்கை நீரை இவர்கள் பயனற்றதாய் கருதுவார்கள் என்று நினைத்தேன். பதில் பேசா கற்சிற்பங்களும் ஆதரவு தராத இறையருவங்களும் இவர்களுக்குத் தேவையற்றதாய் இருக்குமென்று உத்தேசித்தேன். இவர்கள் விரும்பும் இறைவன் ஒளியும் தத்துவமும் ஆனவன். உருவங்களால் அவனை அடக்கிவிட முடியாது. பல்வேறு பரிமாண ரூபங்கள் எடுத்து பல்கிப் பெருகி, மனித குலத்தை சரியான பாதைக்கு அழைத்துச் செல்பவனை இவர்கள் விரும்புகிறார்கள்.

இதை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும், இவர்கள் சார்ந்த மதத்தின் வழி புரிந்துகொள்ள முடிகிறது. இதன் சாரத்தை அவர்கள் கண்கள் மினுமினுக்கின்றன. இந்தக் கூட்டம் பனாரஸில் நடக்கும் மதத் திருவிழா போன்ற கேளிக்கை கூட்டம் அல்ல. இவர்கள் எல்லோரையும் நான் பெரிதும் மதிக்கிறேன்.

நான் இந்தியாவில் சந்தித்த மிகச் சிறந்த முஸ்லிம்களும் இஸ்லாமியத் துறவிகளும்கூட என்னை இத்தனை மடங்கு கவரவில்லை. கடவுளுக்குச் சொந்தமான பூமியில், அவருக்குச் சொந்தமான மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து மகாத்மா காந்தியின் வீட்டிற்கு வெளியே உள்ள திறந்த வெளியில் எவ்வித இறை உருவங்களும் இல்லாமல், தன் சொந்த மன ஆற்றலால் இறைவனோடு இரண்டறக் கலக்க மன வலிமையோடு இவர்கள் பிரார்த்தனை செய்ததை நான் இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

‘இந்தக் கடவுளிடம் வேண்டுங்கள், அந்தக் கடவுளிடம் வேண்டுங்கள்’ என்று வழிகாட்ட எவ்வித இடைத்தரகர்களும் இங்கு இல்லை. மனிதனுக்கு மனிதனே சமானம். போதகர் என்ற பெயரில் எவரொருவரின் முன்னாலும் மண்டியிடத் தேவையில்லை. மனிதன் தனக்குப் பரிச்சயமான உருவங்களை வைத்து இறைவனை உருவாக்கினான் என்பது உண்மை. அதுவே அவனை வேறுபடுத்திக் காட்டவும், தனிமைப்படுத்தவும் காரணமாய் அமைந்தது.

இருந்தாலும் இவர்கள் அதனோடு முரண்டுபிடித்தார்கள். உண்மையைத் தவிர வேறு எதையும் ஏற்க மறுத்தார்கள். மனித உருவில் இருக்கும் தெய்வங்களையும் கோயில்களையும் பெரிதுபடுத்தாமல், உருவமில்லாத ஒரு தெய்வத்தை நம்பி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் தங்கள் நம்பிக்கையைப் பின்தொடர்ந்தது வாழ்ந்திருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில் பேசுவது நானாக இருந்தாலும், தங்கள் மௌனத்தால் ஒரு செய்தியை கடத்தியிருக்கிறார்கள், ‘நாம் எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் சரி, உண்மை ஒளி எதுவோ, அதைப் பின்தொடர்ந்து செல்வோம்.’

சீரான கூட்டத்திற்கு முன் ஒரு ஆள் தனித்து நின்றான். அவன் வெள்ளை நிற பருத்தி ஆடையும் குல்லாவும் அணிந்திருந்தான். நன்கு அகலமான முகம், செதுக்கியது போன்ற கன்னங்கள். கருவிழிகள் இரண்டும் விசாலமாக உருண்டு திரண்டு வானத்தை வெறித்துப் பார்த்தன.

அந்தக் கண்ணில் விநோதமான நெருப்புப் பொறி தட்டியது. சிறிய மூக்கும், வெட்டியெடுத்த வட்ட வடிவ கறுப்பு தாடியும் சண்டை செய்ய தயாரானவன் போல் அவனை அடையாளப்படுத்தியது. தன் கைகளை நீட்டி அகலமாக வைத்து நின்ற அழகிலேயே, அவனொரு நெசவாளி என்று நான் ஊகித்துவிட்டேன். அது கபீரின் சாயல் என்று நம்புகிறேன். பதினைந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த பெரும் புலவரும் ஆசானுமாகிய கபீர்தாஸின் வாழ்வியல், கடவுளின் ஒற்றைத்தன்மையைப் போதிக்கிறது:

ஓ, என் சேவகா, நீ என்னை எங்கே தேடுகிறாய்? நான் உன் அருகில்தானே இருக்கிறேன்.
நீ என்னை கோயிலிலும் மசூதியிலும் தேட வேண்டாம்…
நீ செய்யும் சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் நான் இல்லை,
நீ கடைப்பிடிக்கும் யோக முறையிலும் துறவு வாழ்க்கையிலும் நான் இல்லை.
நீ என்னை உண்மையாகவே தேடினால், அடுத்த கணமே நான் உன் பார்வைக்குத் தெரிவேன்…
நீ சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சிலும் நான் இருக்கிறேன்!

0

இஸ்லாமிய மற்றும் இந்துத்துவ பனாரஸைச் சுற்றிப் பார்த்த பிறகு, பனாரஸின் புகழ்வாய்ந்த பௌத்த சின்னங்களுக்குச் சென்றோம். அதை பௌத்த இடுபாடுகள் என்று சொன்னால் பொருந்தும். தற்காலத்தில் எல்லாம் சிதலமடைந்து விட்டன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சார்நாத்தில் செயல்பட்டுவந்த புகழ்மிக்க பௌத்த மடலாயம் இது. தற்போது அகழ்வாராய்ச்சிக்கு உட்பட்டிருக்கிறது.

ஒருபக்கம் புதிய பௌத்த விகாரம். அதிலிருந்து காவி வஸ்திரம் அணிந்த பௌத்த பிக்குகள் இரண்டு, மூன்று பேராக வரிசையில் சென்றனர். மறுபக்கம் ஜப்பானியர்கள் நிர்மாணித்த அதனினும் புதிய மற்றொரு பௌத்த கோவில். அதன் சுவர்கள் ஜப்பானியக் கலைஞர்களால் வண்ணமேற்றப்பட்டதால், பார்ப்பதற்கு மோன்பானஸில் (Montparnasse) உள்ள நவீன தேநீரகம் போல் இருந்தது.

இரண்டு கோயிலுக்கும் இடையே பழைய கட்டடத்தின் இடிபாடுகள் மிச்சமிருந்தன. இந்தச் சிறிய காப்பகத்தை சில நிமிடங்களுக்கு உத்துப் பார்த்தால், பண்டைய பௌத்த கால நினைவுகள் கண்முன் வரும். வழக்கம் போல் பிரம்மாண்ட புத்தர் உருவம் இருந்தது. சிந்தனை, வலிமை, அன்பு, கருணை என்ற பல ரசங்கள் ததும்பும் முகம்.

இந்தக் குழப்பமான உலகில் எனது இருப்பு முக்கியமற்றதாக இருப்பதோடு, மேலும் தெளிவின்றி உள்ளது. ஆனால் எது எப்படியிருந்தாலும் உலக மாந்தரை ஒன்றுபோல் நேசிக்கும் இந்த அற்புத ஆசானை நான் மிகச் சரியாகப் புரிந்துகொண்டு நெருக்கமாக உணர்கிறேன்.

இந்தியாவின் பிரம்மாண்ட புத்தர் சிலைகளை வைத்து, அதன் பௌத்த கலை அம்சத்தை எடைபோட முடியாது. சிறிய சிற்பங்கள்தான் அந்தக் கலை நேர்த்தியை ஒளித்து வைத்திருக்கின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அனுதாபம் கொண்ட மென்சிரிப்பைப் பக்குவமாய் வடித்திருக்கின்றனர். இப்போதுள்ள மோனாலிசா ஓவியமும், ரோடின் செதுக்கிய சிற்பங்களும் அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் விகாரமாய் உள்ளன.

கலை நேர்த்தியில் உள்ள இத்தகைய நுட்பமான புரிதல்களே, இந்தியாவின் பௌத்த காலத்தை மனிதத்தோடு புரிந்துகொள்ள உதவுகிறது. ‘இந்துத்துவத்தால் இந்தியாவில் பௌத்தத்தைத் துரத்தி எறிய முடிந்ததென்றால், இந்து அல்லாத இஸ்லாமிய மதத்தை விழுங்கவும் பிடுங்கி எறியவும் விடாமல் இந்துத்துவத்தின் கைகளை பிணைத்திருப்பது யார்?’ என்று என்னிடமே கேட்டுக்கொண்டேன்.‌

பௌத்த ஆட்சியில் அசோகர் கால இந்தியாவில் இருந்த கலை உச்சமும், தத்துவ விளக்கமும் இஸ்லாமியர் ஆட்சிக் காலத்தில் இருந்த நுட்பங்களைக் காட்டிலும் உயர்ந்தவை. எனது கேள்விக்கான பதில், அப்துல் மஜீத் வீட்டு முற்றத்தில் நின்றுகொண்டிருந்த அப்பாவி ஏழைகள் முகத்தில் இருந்தது.

பௌத்தமும் தன்னை உருவ வழிபாட்டில் தொலைத்து கொண்ட மதம். அதன் கொள்கைகளும் நம்பிக்கைகளும் உருவங்களுக்குள் புதைந்துவிட்டன. கொள்கை ஒன்றே நிலையானது. அதை எப்பாடுபட்டாவது பாதுகாக்க வேண்டும். தெய்வத்தோடு தொடர்பு கொள்ளும் ஒரே சாதனம் கொள்கைதான். அப்துல் மஜீத் வீட்டு முற்றத்தில் இருந்த ஏழை சகோதரர்கள் எனக்குச் சொல்லித் தந்த பாடம் இதுதான். இந்தச் செய்தி பைபிளில் கூட இருக்கிறது: ‘ஆதியிலே வார்த்தை இருந்தது, . .‌ . அந்த வார்த்தை தேவனாயிருந்தது.’

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்து வருகிறார். மொழிபெயர்ப்பில் ஆர்வம் கொண்டவர். இதுவரை இரண்டு நூல்கள் வெளியிட்டுள்ளார். வரலாறும் இலக்கியமும் இவருடைய விருப்பத்துக்குரிய துறைகள்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *