Skip to content
Home » நான் கண்ட இந்தியா #31 – கல்கத்தா – 1

நான் கண்ட இந்தியா #31 – கல்கத்தா – 1

கல்கத்தா

இந்தியாவின் முன்னாள் தலைநகராக விளங்கிய கல்கத்தாவை, ஐரோப்பாவின் அநேக நகரங்களோடு நீங்கள் ஒப்பிடலாம். இது ஆங்கிலேயர்களால் நிர்மாணிக்கப்பட்ட ஊர். இதன் கட்டட பாணியைக் கண்டு ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. ஆனால் அதே சமயம் நீங்கள் வெகுவாகக் காணும் கிழக்கு-மேற்கு கலை பாணியின் ஒன்றிணைந்த வித்தியாசக் கலவை இங்கு இல்லை‌. நடைமுறைத் தன்மைக்கேற்ற வசதிகளும் வணிக மையமான நுட்பங்களும் கல்கத்தாவை முதன்முறையாக பார்க்கும்போதே தெளிவாகப் புலனாகும்.

கல்கத்தா நகரம் வங்காளத்தின் இதயமாகச் செயல்படுகிறது. இந்தியாவின் சிந்தனை மரபுக்கும் செயல்பாடுகளுக்கும் விஷேச சுவை சேர்ப்பதில் வங்காளத்தின் மனோபாவம் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆனால் இந்தியாவிற்கு கல்கத்தாவின் பங்கு என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டுமானால், அந்நகரின் இந்து – முஸ்லிம் – ஆங்கிலேயக் கூட்டுக் கலாசாரத்தை ஓரளவேனும் புரிந்துகொள்ள வேண்டும்.

‘கல்கத்தாவில் நிகழ்ந்தவை எல்லாம் கடந்துபோன விஷயங்கள். மிகச் சமீபத்தில் நிகழ்ந்ததாக இருந்தாலும், அவற்றைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நிகழ்கால நடப்புகளுக்கு நீங்கள் தில்லி மற்றும் எல்லைப்புற மாகாணங்களை எதிர்நோக்க வேண்டும்’ என்று சில இந்திய நண்பர்கள் சொன்னார்கள்.

இதில் ஓரளவு உண்மை இருக்கலாம். ஆனால் புதிய இந்தியாவில் செயல்படுத்தப்படும் எந்தவொரு முன்னெடுப்பும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கல்கத்தாவில் வளர்ந்தெழுந்த இயக்கங்களின் தாக்கத்தில் உருப்பெற்றதாகவே இருக்கிறது. இந்த இயக்கங்கள் எல்லாம் 19ஆம் நூற்றாண்டின் வாக்கில் கீழைத் தேயம் முழுக்க விசிறியடித்த புரட்சி அலையில் கரையொதுங்கியவை. ஆகவே இந்தியா உட்பட கீழைத் தேயம் எதுவாக இருப்பினும், அதன் 19ஆம் நூற்றாண்டு இயக்கங்கள் பற்றிய அடிப்படை விஷயங்களை அறிந்துகொள்ளுதல் அவசியம்.

இந்தியாவில், பிரம்ம சமாஜத்தை நிறுவிய ராஜா ராம் மோகன் ராயிடம் (1772-1833) இருந்து இயக்க வரலாறு தொடங்குகிறது. ‘பிரம்ம’ எனும் சொல், உபநிடதங்கள் மற்றும் வேதாந்தத் தத்துவங்களின் இறைவனாகிய பிரம்மாவைக் குறிக்கிறது. ‘சமயா’ எனும் சொல் சமூகத்தைக் குறிக்கிறது. ஆக இது கடவுளின் சமூகத்தைக் கட்டியெழுப்பும் முயற்சி என்று சொல்லலாம்.

இந்தியச் சமூகத்தில் மனித இருப்பை இறைவனில்லாமல் பூர்த்தி செய்ய முடியாது. ஆகவே எந்தவொரு இயக்கம் தோன்றினாலும், அதில் இறைவன் பற்றிய வரையறை வேண்டும். இறைவன் குறித்த பிரம்ம சமாஜத்தின் கருத்தாக்கமும் இஸ்லாமிய கருத்தாக்கமும் ஒன்றுபோல ‘கடவுள் ஒருவரே’ என்பதை வலியுறுத்துகிறது.

ராஜா ராம் மோகன் ராய் வங்காளத்தின் இஸ்லாமிய அரசோடு தொடர்பு கொண்டிருந்த ஒரு பிராமணர். இஸ்லாமியத் தத்துவங்களால் அவர் பெரிதும் உந்தப்பட்டார். எல்லாவற்றுக்கும் மேலாக, இஸ்லாத்தின் சூஃபி தத்துவத்தை ஆழமாகப் படித்தார். சிந்தனையில் மட்டுமின்றி ரசனையிலும்‌ மனோபாவத்திலும் தானொரு இந்து என்பதை மறந்து, இஸ்லாமியனாகவே தோன்றினார்.

ராஜா ராமின் விருப்பத்துக்குரிய மேற்கோள்கள் சூஃபி தத்துவத்தில் இருந்து எடுத்தாளப்பட்டன. இஸ்லாமிய சூஃபித்துவத்தில் அவருக்கு அளவுகடந்த அன்பு இருந்தாலும், புதிதாகத் தொடங்கிய இயக்கத்தை மரபார்ந்த இஸ்லாமியக் கொள்கையோடு, பகுத்தறிவுப் பார்வையில் ஒருங்கிணைத்தார். ஒருவேளை இது எனக்கு மட்டுமே தோன்றிய கருத்தாக இருக்கலாம்.

சமூக நடப்புகளால் அதிருப்தி அடைந்த ராஜா ராம், தன் பதினைந்தாவது வயதில் மடை மாறத் தொடங்கினார். பனாரஸில் தங்கி சமஸ்கிருத மொழியை ஆழமாகப் படித்தார். இந்து மத வேத நூல்களை ஒன்றுவிடாமல் கற்றார். அதைத் தொடர்ந்து ஆங்கிலம் மற்றும் கிறிஸ்தவப் படிப்பினைகள் அவருக்குக் கைக்கூடின. கிழக்கிந்திய கம்பெனிக்காக உழைத்து, ஜான் டிக்பி என்ற பரிவான ஆங்கிலேயரால் அரவணைக்கப்பட்டு, போதுமான பணம் சேர்த்து 1814இல் கல்கத்தா வந்து சேர்ந்தார்.

அதற்கடுத்த ஆண்டு பிரம்ம சமாஜம் நிறுவப்பட்டது. மற்றெல்லா இயக்கங்கள் போலவே, பிரம்ம சமாஜமும் பல்வேறு படிநிலைகளைத் தாண்ட வேண்டி இருந்தது. சமாஜத்தின் குணாதிசயத்தை, அவர் தன் வாழ்நாளிலேயே ‘சிநேகிதச் சங்கம்’ என்று பெயர் சூட்டியதிலிருந்து தெரிந்துகெள்ளலாம். இந்துத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மையமாக ராஜா ராம் மத்தியில் இருந்தார். அவரின் ஒரு கரம் கிறிஸ்தவத்தைக் குறித்தது. மற்றொரு கரம் இஸ்லாமியத்தைக் குறித்தது. இப்படி மும்மதங்களையும் தன்னுள் ஐக்கியப்படுத்தினார்.

இந்த முக்கோணப் புரிதலில் இஸ்லாமியத்தைக் கடவுள் சார்ந்த வரையறையில் பயன்படுத்தினார். இறைவன் மனித உருவிலோ, கற்சிலையிலோ, உருவப்படங்களிலோ இல்லையென்று ஏகத்துவத் தத்துவத்தை முன்னிறுத்தினார். ராஜா ராமின் கிறிஸ்தவக் கருத்தாக்கமும் இஸ்லாமியக் கொள்கையோடு உடன்படுகிறது.

இயேசு கிறிஸ்து மிகச் சிறந்த தீர்க்கதரிசி. தன்னையொரு கடவுளின் தூதராகக் கருதியவர். தானொரு கடவுள் என்று அவர் ஒருபோதும் சொன்னதில்லை. தன் சீடர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, மிகத் தவறாக உள்வாங்கப்பட்டார். ராஜா ராமின் கட்டுக்கோப்பான ஓரிறை நம்பிக்கையால்தான் இந்தியாவில் இன்றளவும் தனிஒருமைக் கோட்பாட்டைப் பின்பற்றும் கிறிஸ்தவத் திருச்சபைகள் இயங்கி வருகின்றன. ஆனாலும் அவர் கிறிஸ்தவ நெறிமுறைகளில் இருந்து கருத்தாழமிக்க நிறைய செய்திகளைச் சுவீகரித்துக் கொண்டார்.

தனது இயக்கத்தின் கடவுளை வரையறுத்த பின்னர், சமூகத்தில் நிலவி வரும் கொடுங்கோன்மைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினார். உடன்கட்டை ஏறும் வழக்கத்தைக் காட்டமாக எதிர்த்தார். பிரம்ம சமாஜத்தின் தொடர் எதிர்ப்புகளின் காரணமாக, 1828ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி, உடன்கட்டை ஏறும் பழக்கத்திற்கான தடைச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. உடன்கட்டை ஏறுதல் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு அடுத்தபடியாக சாதி முறைகளை எதிர்த்தார். ஆனால் அவராலேயே சாதி வழக்கத்தில் இருந்து வெளிவர முடியாததால், பேச்சளவிலேயே நின்றுபோனது. பாலின சமத்துவத்தை மேம்படுத்த வேண்டி அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொண்டார். அதுவும் அற்பமாக முடிந்தது. ஆனால் பலதாரமணத்திற்கு எதிராக இவர் கொடிபிடித்த பிரசாரங்கள் பெருமளவில் பயனளித்தன. இந்துக்களிடம் பலதாரமணம் தற்போது அருகிவிட்டது.

பெண்களுக்குச் சொத்துரிமை வழங்குவது குறித்து, ராஜா ராம் முன்வைத்த கோரிக்கைகள் அவர் காலத்தில் புரிந்துகொள்ளப்படவில்லை. இப்போதுவரையிலும் இந்நிலை நீடிக்கிறது. இவரின் கல்வி சார்ந்த சீர்திருத்தங்களின் பலனாக கல்கத்தா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவியதன் மூலம் ஆங்கிலேய உயர் மட்ட கலாசாரத்தின் காலடி இந்திய மண்ணில் ஆழமாகப் பதிந்தது.

ஒரு முன்னோடியிடம் இருந்து என்னவெல்லாம் எதிர்பார்க்க முடியுமோ, அத்தனைக்கும் பாத்திரமாகி 1833இல் ராஜா ராம் இறந்து போனார். அவரின் மரணத்தோடு பிரம்ம சமாஜத்தின் முதல் அத்தியாயமான சமரசமற்ற பகுத்தறிவுக் காலம் முடிவுக்கு வந்தது.

பிரின்ஸ் துவாரகநாத் தாகூரின் வருகையோடு இரண்டாம் அத்தியாயம் தொடங்குகிறது.

ஓரளவுக்கு மேல் தேசியவாதமும் தாராளவாதமும் பெருந்திரள் மக்களால் நெடுங்காலத்திற்கு ஜீரணிக்க முடியாது. அதை முயற்சிப்பது சுவையற்ற செயற்கை உணவை வற்புறுத்தி உண்ணச் சொல்வதற்குச் சமானம். மனிதர்கள் எப்போதும் புலனாகாத விஷயங்களுக்குப் பின்னால் ஆர்வத்தோடு செல்வார்கள்.

தன் பின்பற்றுநர்களுக்காக இறையியல் கொள்கை ஒன்றை ராஜா ராம் வடிவமைத்தார்‌. ஆனால் வழிபடும் முறைமைகளை அவர் ஏற்படுத்தவில்லை. அவருக்கு வழிபாட்டில் நம்பிக்கை இருந்தது இல்லை. தியானத்தில் மட்டுமே பற்றுக்கொண்டிருந்தார். ஆக அவர் வாழ்நாள் முழுக்க பிரம்ம சமாஜத்தில் கூட்டு வழிபாடு நிகழ்ந்தது கிடையாது. மக்களை ஒன்றிணைப்பதில் ஏதோவொரு உணர்ச்சிப்பூர்வ இடைவெளி பாக்கியிருந்தது‌.

பிரம்ம சமாஜிகளின் உணர்ச்சிப்பூர்வமான பசியை, தேபேந்திரநாத் தாகூர் தீர்த்துவைக்க வழிசெய்தார். எழுத்துப்பூர்வமாகச் சில சத்தியங்களைச் சமர்ப்பித்தார். வழிபடுவதற்கான நெறிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டது. வாராந்திர முறையில் ஒன்றுகூடி கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். இவர் கொண்டுவந்த சத்தியங்கள், ராஜா ராம் மோகன் ராயின் கொள்கைகளுக்குக் கட்டுப்படுவதாய் அமைந்தன.

அதில் முக்கியமானவற்றைச் சொல்கிறேன்:

  1. கடவுளுக்குப் பிடித்தமானவற்றைச் செய்தும்; அன்பின் வழியிலும் அவரைத் தரிசிக்க வேண்டும்.
  2. உருவ வழிபாட்டைத் தவிர்க்க வேண்டும்.

தேபேந்திரநாத் தாகூர் என்ற பெயரின் கீழ் இயங்கும் சங்கம் முந்தைய காலகட்டத்தில் இருந்து சற்று விலகுவதாகத் தெரிந்தது. இதை ‘சத்தியத்தைத் தேடுபவர்கள் சங்கம்’ என்று அவர் அழைத்தார். இந்த மேலோட்டமான பெயரை ஏந்திக்கொண்டு, தேசியவாத அமைப்பாக அடையாளம் பெற்றது. கிறிஸ்தவ ஊடுருவலுக்கு எதிராக வெளிப்படையாகப் பிரசாரம் செய்தனர். சங்கத்தின் அடிப்படைக் கூறுகளில் கிறிஸ்தவக் கொள்கைகள் இருந்தாலும், கிறிஸ்தவர்கள் அந்நியர் என்ற காரணத்தால் கிறிஸ்தவ மதமாற்றத்தை எதிர்த்தனர்.

முற்போக்கு இயக்கத்தில் மதப் பழக்கங்களும், தேசியவாத எண்ணங்களும் முளைவிட்டன. கேசப் சந்திர சென் வருகையையொட்டி இவை மேலும் வலுவடைந்தன. அவர் தலைவர் ஆனதும், ‘நம்பிக்கையாளர் சங்கம்’ எனப் பெயர்மாற்றம் பெற்றது. பகுத்தறிவு காலத்திலிருந்து மாயாவாத உணர்ச்சிப் போக்குக்கு சங்கம் மாற்றமடைவது வெளிப்படையாகத் தெரிந்தது.

கேசப் சந்திர சென் வரிசையாகப் பல சடங்குமுறைகளை அறிமுகப்படுத்தினார்‌. ஆனாலும் உருவ வழிபாட்டை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. நம்பிக்கையோடு கைக்கோர்த்தபின் சிந்தனைகளுக்கு சிறகு முளைத்துவிடுகிறது. முன்பொரு காலத்தில் கற்பனையில் குடிகொண்டிருந்த திட்டங்கள் எல்லாம் இப்போது கைமேல் வந்து விழுந்தன.

பிரம்ம சமாஜிகள் சாதிய அடையாளங்களைத் தூக்கி எறிந்தனர். சங்கத்தின் கொள்கைகளை இண்டு இடுக்கெல்லாம் கொண்டு சேர்க்கும்படி ஆசிரமங்கள் செயல்பட்டன. பாம்பே மற்றும் மதராஸ் மாகாணங்களில் உள்ள சங்கங்கள் தன்னாட்சி அதிகாரம் பெற்றன. பழைய உறுப்பினர்கள் சங்கத்தின் புதிய மாற்றங்களுக்கு உடனடியாக இசைந்துபோக முடியாமல் தவித்தனர். சங்கம் இரண்டாக உடைந்தது. இந்து மதத்தில், கேசப் விரும்பிய அளவுக்கு மாற்றங்களைக் கொண்டு வர பழைய உறுப்பினர்கள் முரண்டு பிடித்தனர். ஆகவே கேசப்பும் அவர் பின்பற்றுநர்களும் தனியொரு கிளையைத் தொடங்கி, அதன்மூலம் சீர்திருத்தங்களைத் தொடர்ந்தனர்.

பிரம்ம சமாஜத்தின் குறிப்பிடத்தகுந்த மூன்று தலைவர்களுள் கேசப் சந்திர சென் கவர்ச்சிகரமான மனிதர். தன் முன்னோர்களைக் காட்டிலும் மக்கள் மனத்தை சல்லடைப் போட்டு சலித்தெடுத்து உண்மையை உணர்ந்தவர். கூட்டங்களில் பயன்படுத்துவதற்காக அவர் சேகரித்த தொகுப்பில் பௌத்த, கிறிஸ்தவ, முஸ்லிம் மற்றும் இந்து மதத்தின் வேத நூல்கள் உண்டு. வழிபாட்டுக் கூடத்தை கொடி அசைத்து, மத்தளம் அடித்து, இசையமைத்துப் பாட்டுப் பாடும் நிகழ்வாக மாற்றினார்.

கேசப் ஒரு தனி வழிபாட்டு முறையைப் பின்பற்றினார். கல்கத்தாவில் ஆண்டுதோறும் ஒரு கலாசார விழாவை முன்னெடுத்து, அதன்மூலம் பொது மக்களுக்கு கொண்டு சேர்த்தார்.‌ இந்த விழாக்களைப் பார்க்கும்போது, வரலாற்று நிகழ்வுகளின் ஒத்திசைவுகளை யோசிக்காமல் இருக்கமுடியாது. பெயரும் வடிவமும் மாறலாம்‌. ஆனால் தொண்டர்களை தலைவர் வழிநடத்தும் முறை ஆண்டாண்டு காலம் ஆனாலும் மாறாது. உணவும் பொழுதுபோக்கும் கொடுத்து, முக்கியச் சமாச்சாரங்களில் அவர்கள் காதுகொடுக்காமல் இருக்க வேண்டியதெல்லாம் செய்வார்கள்.

சமூகப் பார்வையில் பார்த்தால், கேசப் இளம் வயதில் துணிச்சலாக இருந்தவர். பிரம்ம சமாஜத்தில் குழந்தைத் திருமணங்களையும் பலதாரமணங்களையும் முற்றிலும் ஒழித்தார். ஒருகட்டத்தில் இவற்றை இந்திய அரசாங்கமும் அங்கீகரித்து சட்டமாக்கியது. இவையெல்லாம் இயற்கையிலேயே பிரம்ம சமாஜத்தை இந்து மதத்திலிருந்து வேறாக அடையாளப்படுத்தின.

இங்கிலாந்து சென்று வந்த பிறகு, கேசப்பின் சீர்த்திருத்த நடவடிக்கைகள் இன்னும் சூடுபிடித்தன. இருபாலருக்குமான பள்ளிக்கூடங்கள் திறந்தார். பாரத ஆசிரமம் என்றழைக்கப்படும் இல்லங்களின் மூலம் மேம்பட்ட குடும்ப வாழ்க்கையும் குழந்தைகளுக்கான கல்வியும் உறுதி செய்தார். பொதுக்கூட்டங்களில் ஆண்களோடு பெண்களும் கலந்து கொண்டனர். பெருந்திரள் மக்கள் கூட்டத்தை கவரும் வண்ணம், பத்திரிகை ஊடகத்தைச் சரியாகப் பயன்படுத்தினார். ஆசிரமங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். ஆனால் மாற்றத்திற்கான அழைப்புக்குரல் வலுவாக ஒலிக்கத் தொடங்கியது.‌ கேசப்பின் வேகம் போதாது என்று இளைஞர்கள் கருதினர்.

வளப்பமான மாற்றங்களால் இன்னும் சில நாட்களில் தெய்வீக அந்தஸ்து பெற காத்திருந்த மனிதர், சுயநலம் மிக்க கருமிகளைக் காட்டிலும் அதீத மோசமான சம்பவமொன்றைச் செய்தார். தனது சிந்தனைகளையும் எண்ணவோட்டங்களையும் இயக்கத்தை நிர்வகிக்கும் சிறிய அங்கத்தில் கலந்தாலோசித்து அதன்மூலம் மக்களைச் சென்றடையாமல், எல்லாவற்றையும் தான், தனக்கு, தானே என்றிருந்தார்‌. ஓர் இயக்கத்தைக் கட்டியெழுப்ப தனி மனிதனின் ஆளுமை மிக முக்கியக் கருவி. அதே ஆளுமை பலவீனமடையும்போது இயக்கம் சில்லு சில்லாக உடைந்துவிடுகிறது.

கேசப் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தினார். அவர் வார்த்தை வேதமானது. தன்னைக் கடவுள் என்று அத்தனைச் சீக்கிரம் சொல்லிக் கொள்ளமுடியாது என்பதை அறிந்து, அதைக் காட்டிலும் மேலான காரியமொன்றைச் செய்தார். இறைவன் தனக்கு தெய்வீகக் காட்சி அருளியதாக நம்ப வைத்தார். இந்தத் தெய்வீக சம்பாஷணைகளால் (இவற்றை அவர் உண்மையிலேயே நம்பினார்) சர்வ வல்லமை படைத்தவராகத் தன்னை நிரூபித்தார்.

நூற்றுக்கணக்கான இளம் சீடர்கள் அவர் காலில் விழுந்து வழிபடத் தொடங்கினர். இவ்வேளையில் சமூகச் சீர்திருத்த இயக்கத்திலிருந்து மாபெரும் அடியெடுத்து வைத்து, தன்னையொரு மத அபிப்பிராய இயக்கமாக பிரம்ம சமாஜம் நிலை நிறுத்தியது.

கல்கத்தாவிற்கு அருகில் ஓர் எஸ்டேட்டை விலைக்கு வாங்கிப் போட்டு, அதைத் தன் ‘கானக உறைவிடம்’ என்று கேசப் அழைத்தார். அங்கிருந்துகொண்டு கடுமையான துறவு வாழ்க்கை வாழ்ந்தார்‌. அவரின் சீடர்கள் மண் குவளையில் நீர் அருந்தி, தங்கள் உணவை தாமே சமைத்து, சுத்தப்படுத்தி, வழி உண்டாக்கி வாழ வேண்டும் என்று அறிவுறுத்தினார். பழங்கால துறவு வாழ்க்கையின் தாக்கத்தால் உலக வாழ்விலிருந்து தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்துக் கொண்டார். சமூகச் சேவை என்ற பொது மனப்பாங்கில் இருந்து விலகி, தனித்துவ அடையாளமே பெரிது என்ற எண்ணம் பிரதானமானது. கானக உறைவிடத்தில் அவர் பயிற்சியளித்த சீடர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்:

  1. யோகி – பேரானந்த ஒற்றுமையில் அருங்குணம் நிறைந்தவர்.
  2. பக்தன் – இறைவனின் பேரானந்த கருணையில் அருங்குணம் கொண்டவர்.
  3. ஞானி – உண்மையைத் தேடுபவர்.
  4. சேவகன் – மனித குலத்திற்காகச் சேகவம் செய்பவர்.

இந்தக் காலகட்டத்தில் கீழைத் தேயத்தின் சில பகுதிகள் தங்கள் பண்டைய பழக்கவழக்கங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் திரும்பின. இதிலிருந்து அந்நியப்பட்டு, பிரம்ம சமாஜத்தின் சமூகக் காரணங்களுக்காக அதைப் பின்பற்றிக் கொண்டிருப்பவர்கள் ஒன்றிரண்டு பேர் வாய்த்தால், ஆசிரமவாசிகளைக் காட்டிலும் இவர்களால்தான் கேசப் சந்திர சென்னுக்கு உயர்ந்த மரியாதை ஏற்பட்டது.

‘நியூ டிஸ்பென்சேஷன்’ என்றொரு மதத்தைத் தொடங்கினார். அது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒழுக்க விதிகளுக்கான ஒரு மதம். தன் புதிய மதத்தின் தீர்க்கதரிசியாக இறைவன் தன்னை அனுப்பிவைத்தான் என்று தாமே ஒப்புக்கொண்டு மக்களுக்கும் பரப்பினார். அது ஒரு சர்வதேச மதமாக அறிவிக்கப்பட்டு, அனைத்து மதங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற கொள்கையில் உருவாக்கப்பட்டது.

1881இல் தன் மதப் பிரச்சார குழுவினருடன் சேர்ந்து மேடையேறினார். ‘நபா பிதான்’ என்று எழுதியிருந்த சிகப்பு பதாகை அவர் கையில் இருந்தது. அதற்கு ‘நியூ டிஸ்பென்சேஷன்’ என்று பொருள். இந்து மதம் சார்ந்த திரிசூலம், கிறிஸ்தவ மதம் சார்ந்த சிலுவை, இஸ்லாமியம் சார்ந்த பிறைநிலா போன்ற வடிவங்கள் அந்தப் பதாகையில் பொறிக்கப்பட்டிருந்தன. அவருக்கு முன் இருந்த மேஜையில் பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம், இந்துத்துவம் என்று உலகின் நான்கு பெரும் மதங்களைச் சார்ந்த புனித நூல்கள் வைக்கப்பட்டிருந்தன.

‘நியூ டிஸ்பென்சேஷன்’ ஏகத்துவ நம்பிக்கையும் உருவ வழிபாட்டு நிந்தனையும் கொள்கையாகக் கொண்டிருந்தது. இருந்தபோதிலும் இந்துத்துவத்தின் பல கடவுள் நம்பிக்கையைக் கையிலேந்தி, அவையெல்லாம் ஏகத்துவ சக்தியின் வெவ்வெறு வடிவங்கள் என்று சொன்னார்.

இவ்விடத்தில் ஏற்கெனவே சில சந்தர்ப்பங்களில் இந்தியா பற்றி நாம் உற்றுக் கவனித்த உண்மையொன்றை நிறுத்தி நிதானமாகக் கடக்க வேண்டும். இந்திய வரலாறு எத்தனைக் குறுகியதாக இருந்தாலும், அதனைக் கையிலெடுத்துப் படிக்கும் ஒருவரின் வாசிப்பில் ஒற்றைக் கீதம் மீண்டும் மீண்டும் ஒலிக்கிறது.

அணிவகுத்துச் செல்லும் வீரர்களை ‘லெஃப்ட், ரைட், லெஃப்ட், ரைட்’ என்று நெறிப்படுத்துவது போல இந்திய வரலாற்றை, ‘ஒன்றுபடுத்து, பிரவினை செய், ஒன்றுபடுத்து, பிரிவினை செய். . .’ என்ற கீதம் தொடர்ச்சியாகக் கட்டுப்படுத்தி வருகிறது. 1824 முதல் 1884 வரையிலான பிரம்ம சமாஜத்தின் செயல்பாடுகள் ‘ஒன்றுபடுத்து’ பாணியில் அமைந்திருந்தன.

கேசப் சந்திர சென் தலைமையிலான அதன் இறுதிக்கட்டம், முந்தைய மையத்திலிருந்து எத்தனைத் தூரம் விலகிச் செல்ல முடியுமோ அத்தனைத் தூரம் விலகியிருக்கிறது. பல கடவுள் நம்பிக்கையை ஆதரித்ததன் மூலம், ‘பிரிவினை’ கொள்கை மிக வெளிப்படையானது. கேசப் சந்திர சென் வாழ்நாளின் இறுதிக்கட்டத்தில் தோன்றிய மற்றொரு இயக்கம் ஆரிய சமாஜம். இவ்விரண்டும் சேர்ந்து ‘பிரிவினைவாத’ கொள்கைகளை முழுவீச்சில் பரப்புரை செய்தன. ஆரிய சமாஜம், தான் செயல்படுவதற்கான உத்வேகத்தை கேசப்பிடமிருந்து முடிந்த அளவு கறந்து கொண்டது. மிச்ச மீதி உத்வேகத்திற்கு பிரம்ம சமாஜத்திலேயே கைவைத்தது.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *