Skip to content
Home » நான் கண்ட இந்தியா #32 – கல்கத்தா – 2

நான் கண்ட இந்தியா #32 – கல்கத்தா – 2

தயானந்த சரஸ்வதி

ஆரிய சமாஜத்தின் நிறுவனர் வசீகரமான உடல் தோற்றம் உடையவர் என்பதோடு ‘கேசப் சந்திர சென்’போல் முக்கியமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் தந்தை அம்ப சங்கர் ஒரு பிராமணர். இவரின் இயற்பெயர் மூல்சங்கர். ஆனால் அதைக் காட்டிலும் தயானந்த சரஸ்வதி எனும் பெயரால்தான் ஆரிய சமாஜத்தில் பெரிதும் அறியப்படுகிறார்.

வழிவழியாக சிவனை வழிபடும் குடும்பத்தில், இத்யாதி இந்து பழக்க வழக்கங்களைப் பின்பற்றும் அசல் சிறுவனாக வளர்ந்து வந்தார். ஆனால் தன் பதினான்காவது வயதில் தனக்கென்று சொந்த புத்தி இருப்பதையும், தான் எவ்விதப் பழக்கவழக்கங்களுக்கும் அடிமை இல்லை என்பதையும் போட்டு உடைத்தார்.

ஒருமுறை சிவராத்திரி அன்று உண்ணாநோன்பு மேற்கொண்டு சிவபூஜையில் ஆழ்ந்திருக்கையில், சுண்டெலி ஒன்று இறைவன் திருவுருவத்தின் மேலும் கீழும் ஏறி படையலில் இருந்த உணவுப் பண்டங்களைக் கொறித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அன்றுதொட்டு, ‘தன் சிலைமீது ஏறி இறங்கி விளையாடும் சுண்டெலியைக் கட்டுப்படுத்தத் தெரியாத ஒருவர்தான், தூணிலும் துரும்பிலும் இருப்பார் என்று சொல்வதை இனியும் என்னால் ஏற்க முடியாது. . .’ என்று உறுதிகொண்டார்.

1848இல் அவருக்கு 21 வயதாக இருக்கும்போது, திருமணம் செய்துகொள்ளும்படி அவரின் பெற்றோர்கள் வற்புறுத்தினர். அதனால் மனமுடைந்து வீட்டைவிட்டு வெளியேறினார். அதற்குப்பின்புதான் தயானந்தர் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டு, துறவறம் பூண்டார். எட்டு வருடங்கள் அங்குமிங்கும் அலைந்து, பயிற்சி பெற்ற சந்நியாசிகளிடம் துறவு பாடம் கற்றார். அதற்குப் பின் உருவ வழிபாட்டுற்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினார்.

இந்து சீர்திருத்தவாதிகளிலேயே, தயானந்தரின் நடவடிக்கைகள்தான் தொடக்கக் காலக்கட்டத்தில் முஸ்லிம்களோடு பெரும்பாலும் ஒத்துப்போகிறது. ஒற்றைத் தெய்வ வழிபாட்டில் அசைக்கமுடியாத நம்பிக்கையும் உறுதியும் வைத்திருந்தார்.

அவரின் ஒற்றைத் தெய்வ வழிபாடு இந்து மத வேத நூல்களின் சாரத்திலிருந்து உள்வாங்கப்பட்டது என்றாலும், இதுவரை எந்தவொரு சீர்த்திருத்தவாதியும் அதை இத்தனைத் தீவிரமாக வெளிப்படுத்தியது இல்லை. இந்து மதத்தின் வேத விற்பன்னர்கள் எல்லோரும் ஒற்றைத் தெய்வ நம்பிக்கையில் குடிகொண்டவர்கள் என்றாலும், இத்தனை ஜனரஞ்சகமாக மக்களிடம் கொண்டுசென்றவர் எவரும் கிடையாது.

மதங்களின் வரலாற்றைத் தெரிந்துகொண்டால், இதற்கான காரணத்தை எளிதில் புரிந்துகொள்ளலாம். பழங்கால கிறிஸ்தவ தேவாலயங்களில் மக்களிடம் உண்மையைத் தெரிவிக்காமல், பாதிரிமார்கள் தங்களிடமே ரகசியத்தைப் பொதிந்து வைத்திருப்பார்கள். உருவங்களையும் குறியீடுகளையும் மட்டுமே மக்கள் வழிபட்டால் போதுமென்று அவர்கள் நம்பினார்கள். அதுதான் அவர்களுக்கும் ஏதுவாக இருந்தது.

ஆனால் இஸ்லாத்திலும் கிறிஸ்தவத்திலும் சீர்த்திருத்த திருப்சபைகள் தொடங்கப்பட்ட பின்னர், வேத நூல்கள் எவையெல்லாம் உண்மையென்று சொல்கிறதோ அவற்றையெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வழக்கம் உருவானது. கடவுள் பற்றி மெத்த படித்தவனுக்கு என்ன தெரியுமோ, அதே சங்கதி வீதியில் திரிபவனுக்கும் தெரிய வேண்டுமென்று இஸ்லாம் கருதுகிறது.

தயானந்தர் கல்கத்தாவிற்குச் சென்று அங்கிருந்த கேசப் சந்திர சென்னைச் சந்தித்த பிறகுதான், ஆரிய சமாஜம் ஓர் உறுதியான அமைப்பாக உருப்பெற்றது. தயானந்தரின் போதனைகள் நிலையான வடிவம் பெற்றதும் அதற்குப் பின்புதான். உங்கள் ஆன்மாவைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, ஒற்றைத் தெய்வ நம்பிக்கையைப் பின்பற்றுங்கள் என்று சொல்லி வற்புறுத்தும் மார்க்கமாக அல்லாமல் புதிய இந்து சமுதாயத்தின் அடிக்கட்டுமான வேலைகளில் இறங்கி வேலைசெய்யும் அமைப்பாக ஆரிய சமாஜம் உருவானது. ஆரிய சமாஜமும் பிரம்ம சமாஜமும் அடிப்படையில் இந்து சமுதாய சீர்த்திருத்த மனோபாவம் கொண்டிருந்தாலும், அவர்களின் வடிவமைப்பும் இயற்கையும் கொள்கையும் பன்மடங்கு வேறுபட்டிருந்தன.

இந்தியர்கள் எந்த மதத்தினராய் இருந்தாலும், வேறுபாடுகள் கலைத்து ஒன்றுசேர்க்கவல்ல உதவியை பிரம்ம சமாஜம் மேற்கொண்டது. ஆனால் ஆரிய சமாஜம் பிரிவினையைத் தூண்டியது. பிரம்ம சமாஜம் ஒரு சமூக, சமயச் சீர்த்திருத்த இயக்கம். அதன் தேசியவாத அரசியல் சார்பு பலகீனமாக இருந்தது. ஆனால் ஆரிய சமாஜம் சமயம் அல்லது சமூக அமைப்பாக இருந்ததால் பலமான அரசியல் சார்புடன் செயல்பட முடிந்தது. இதன் அரசியல் பார்வை குறுகலான தேசியவாத கண்ணோட்டம் உடையது.

ஏழு கோடி மக்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுவதால், அதனை ஒருபோதும் அழிக்க முடியாது. பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்துக்களின் அதே இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். அதைத்தாண்டி இஸ்லாமிய நம்பிக்கைக்கு என்று, தனித்த கலாசார அடையாளம் இருக்கிறது. அதை அவர்கள் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இஸ்லாமியர்களின் மக்கள்தொகை ஐந்தில் ஒரு பங்கு என்றாலும், எல்லைப்புற மாகாணங்களில் போர்நெறி அம்சம் பொருந்தி வீரனுக்கான மனோபாவத்தில் உறுதியிடன் இருக்கின்றனர். இந்து சமூகம் போல், இஸ்லாமியர்களிடையே சாதி வேற்றுமை கிடையாது. அதுவே அவர்களை ஒன்றிணைக்கும் சக்தி. ஆகவே தயானந்தரின் தேசியவாதம், தேசியவாதம் என்ற புரிதலுக்குள்ளும் அடங்காமல் குறிப்பிட்ட சமூகம் சார்ந்த இயக்கமாகவே செயல்பட்டது. பல நேரங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இயக்கமாகவே இதன் செயல்பாடுகள் அமைந்தன. சான்றாக, பசுவதைத் தடுப்பு என்பது விவசாயப் பகுதிகளில் முக்கியத்துவம் பெறலாம்; ஆனால் மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு எதிரான வன்முறையாகத் திரும்பினால் அதில் சிக்கல் இருக்கிறது.‌

சொந்த சமூகத்திற்குள் ஆரிய சமாஜம் மேற்கொண்ட சீர்த்திருத்தங்களைப் பார்த்தால், வாரி அணைத்துக்கொள்ளத் தோன்றும். உறுப்பினர்களுக்கு இடையேயான சாதி வேற்றுமையை ஒழித்து, பாலின சமத்துவத்தை முன்னிறுத்தியது. ஆனால் இவையெல்லாம் செய்தாலும், தனியொரு சாதியாகவே அடையாளம் கொள்ளப்பட்டது. ஏற்கெனவே உள்ள பல நூறு சாதிகளுக்குள் இதுவும் ஒரு சாதியாக மாறியது.

இதனால் இந்து முஸ்லிம்களுக்கு இடையேயான பிரிவினைத் துயரங்கள் மேலும் வலுவடைந்ததோடு, கலவரங்கள் ரத்தக்களேபரம் ஆகின. ஆரிய சமாஜத்தைப் பொறுத்தவரை, தீயவர்களைக் கொல்வது அறமான காரியம். ஆனால் தீயவர் என்று அவர்கள் நினைத்ததே இஸ்லாமியர்களைத்தான்.

ஆரிய சமாஜத்தின் தலைவர் மறைந்த பிறகு, இயக்கம் பல துண்டாக உடைந்தது. முதலில் ‘பிரிவினையின்’ பால் பலமடங்கு முன்னோக்கிச் சென்றது; தற்போது மீண்டும் பின்னோக்கிச் சென்று மக்களை ‘ஒருங்கிணைக்கும்’ வேலைகளில் ஈடுபடுகிறது சமாஜம். இது உலகப் போருக்கு பிந்தையச் சூழல். இதற்குப் பல காரணங்கள் உண்டென்றாலும், சுதந்திரத்தை முன்னிறுத்தும் தேசியவாத முழக்கமே முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது. இந்துக்கள் தரப்பில் மகாத்மா காந்தி தலைமை வகிக்கிறார். இஸ்லாமியர்கள் தரப்பில் டாக்டர் அன்சாரியோடு முக்கியப் பிரபலங்கள் நம்பிக்கை அளிக்கின்றனர். அந்தக் காலக்கட்டம் பற்றிப் பின்னர் பேசுவோம்.

ஆனால் இந்தத் திடீர் முன்னோக்கு பின்னோக்கு நகர்வுகள்தான் இந்திய வாழ்வின் நாடித் துடிப்பாக இருக்குமா? இதனால் இந்தியாவின் வேற்றுமையைப் பாதுகாக்க முடியுமா? ஒருங்கிணைந்த தேசமாக எப்போதும் இந்தியா இருக்குமா?

0

கல்கத்தாவில் அப்துர் ரஹ்மான் சித்திக்கின் வீட்டில் தங்க வைக்கப்பட்டேன். பால்கனில் யுத்தம் நடந்தபோது, டாக்டர் அன்சாரியோடு இந்திய செம்பிறைச் சங்கத்தில் இளம் லெப்டினன்ட்டாக இருந்தவர், அப்துர் ரஹ்மான். அவர் கிலாபத் இயக்கம் உட்பட, உலகப் போருக்கு பிந்தைய பல சுதேசிய இயக்கங்களில் முக்கிய அங்கம் வகித்துள்ளார். பிற தலைவர்களைப் போல் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

தற்போது அரசியல் பணிகளில் இருந்து ஓய்வுபெற்று, சணல் வியாபாரத்தில் இறங்கிவிட்டார். மத்திய வயது மதிக்கத்தக்க அப்துர் ரஹ்மானுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவரது அண்ணன் மகனும், அண்ணன் மகனின் மனைவியும் அவரோடு வசித்து வந்தனர். அந்த பார்சி பெண்ணைப் பார்ப்பதற்கு, பழங்கால பாரசீக ஓவியம் போல் இருந்தாள்.

சுறுசுறுப்பு பொருந்திய ஒரு சுட்டிக் குழந்தையும் அங்கு இருந்தது. அவள் பெயர் வர்தா. மகாத்மா காந்தி வசிக்கும் ஆசிரமத்தின் பெயரால் அவளை அழைக்கின்றனர். அப்துர் ரஹ்மான் சித்திக்கின் இல்லம் ஓரளவுக்கு இந்திய வாழ்வின் வெளிப்புறத்தைப் பிரதிபலிக்கிறது எனலாம். அங்கு நவீன இந்தியாவின் வழக்கமான இஸ்லாமியர்களையும் இந்துக்களையும் பார்ஸிகளையும் பார்க்க முடியும்.

0

பல்கலைக்கழகம் என்னைக் கவர்ந்தது. கலாசாரப் பின்னணியும் முற்போக்குச் சாயலும் அதன் சுற்றுச்சூழலில் நிறைந்திருந்தன. இந்து மாணவர்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும், இஸ்லாமியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்தது. இஸ்லாமிய மாணவர்கள் தங்கள் விடுதி அறைக்கு என்னை அழைத்துச் சென்று நெடுநேரம் உரையாடினர். உரைகளைத் தாண்டி, நிறைய மாணவர்கள் வங்காளி பாடல்களைத் தங்கள் குரலால் பாடி குதூகலப்படுத்தினர்.

கல்கத்தாவில் இந்து – முஸ்லிம் உறவு என்பது, திருமணமான வயது முதிர்ந்த ஜோடியைப் போன்றது. இருவர்க்கும் அன்றாடம் சண்டை நிகழும். ஆனால் ஒருவரைப் பிரிந்து மற்றொருவரால் நீண்ட காலம் வாழ முடியாது.

மாணவர் மன்றம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, பல்கலைக்கழக வளாகத்தின் பலகணியில் இருந்து நான் எனது நீண்ட நெடிய உரையை வாசிக்கத் தொடங்கினேன். அங்கிருந்து பேசினால்தான் ஏழாயிரம் மாணவர்களையும் சென்றடைய முடியும்.

வங்காள இளைஞர்களோடு எனக்கேற்பட்ட முதல் அனுபவத்தை மறக்க முடியாது. பலகணியில் இருந்து கீழே பார்க்கையில் ஒருவித விசித்திரமான சித்திரம் மனத்தில் தோன்றியது. உத்திர பிரதேசவாசிகளைவிட வங்காளிகள் இன்னும் அடர்நிறத்தில் தெரிந்தனர். அவர்கள் அணிந்த வெள்ளைத் துணியோடு பார்க்கையில் மேலும் ஊர்ஜிதமானது. நான் பேசப் பேச ஆயிரக்கணக்கான கருவிழிகள் மினுமினுக்கத் தொடங்கின. இவை எனக்கு வெண்பஞ்சு மேகக்கூட்டங்களுக்கு மத்தியில் நட்சத்திரங்கள் ஜொலிப்பதுபோல் தெரிந்தன.

நான் பேசியதில் அவர்கள் உடன்படும் கருத்து வந்தால், ‘வந்தே மாதரம்!’ என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். இஸ்லாமியர்களுக்கு ஆதரவான கருத்து வந்தால் ‘அல்லாஹ் அக்பர்!’ என்று அவர்களும் ஆமோதித்தனர். முந்தைய வாசகத்திற்கு ‘இந்தியத்தாய் வாழ்க’ என்று பொருள். இது இந்துக்களின் தேசிய கோஷம். பின்னர் சொன்னது இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற வாசகம்.

சர் ஜே.சி.போஸின் ஆய்வுக்கூடத்தை நேரில் பார்த்தேன். தன்னுடைய புகழ்பெற்ற அறிவியல் தேற்றத்திற்கு செயல் விளக்கம் கொடுத்தார். அவர் ஒரு மிகச்சிறந்த தாவரவியலாளர். ஒரு மரத்தில் உள்ள சிறிய இலை மின்சாரத் தாக்கத்திற்கு ஆட்பட்டால், அம்மரத்தின் உள்ள எல்லா இலைகளும் ஒன்றுபோலவே எதிர்வினையாற்றும் என்று சொன்னார். கண்கொள்ளத்தக்க அவரின் அழகிய தோட்டத்தில், பெரிய மரமொன்றில் இந்தச் சோதனையைச் செய்து காண்பித்தார்.

அவரின் உதவியாளர் ஓர் இலையைத் தொட்டதும், மொத்த மரமும் நடுங்கியது! ‘இறைவா, இந்தச் சாதாரண மரத்தில் உள்ள ஒற்றை இலையில் மின்சாரம் பாய்ந்தாலோ இன்ப துன்பங்கள் நேர்ந்தாலோ, ஒட்டுமொத்த மரமும் அதற்கு எதிர்வினையாற்றுகிறது. அப்படியானால் இந்தப் பூமியில் வாழும் உன் குழந்தைகள் எல்லாம் பிறரின் துன்பத்தைக் கண்டு எத்தனை மடங்கு துடித்திருக்க வேண்டும்?’ என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.

கல்கத்தாவின் அனைத்து மகளிர் சங்கக் கூடுகை ஒன்றை திருமதி போஸ் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார். நான் அதில் உரையாற்றினேன். அதற்குப்பின் முஸ்லிம் குழந்தைகள் படிக்கும் பர்தா பள்ளிக்கூடம் ஒன்றைப் பார்வையிடச் சென்றோம். திறன் வாய்ந்த, தகுதியான இஸ்லாமிய சகோதரி ஒருவர் அந்தப் பள்ளிக்குத் தலைமைத் தாங்கியிருந்தார். அவரிடம் பேகம் முகமது அலியின் சாயலை நான் கண்டேன்.

அவர் ஆண்களோடு கலந்து பேசினாலும், தனது பர்தாவைப் பாதுகாப்பாகக் கையாண்டார். இஸ்லாமியப் பெண்கள் விடுதலை அடையாமலே, கல்வி கற்கவேண்டும் என்று உறுதியாக இருந்தார். இஸ்லாமியப் பெண்களை இருபாலர் கல்லூரிக்கு அனுப்ப மறுக்கும் பெற்றோர்கள் கல்கத்தாவில் ஏராளம் இருக்கின்றனர். இதுபோன்ற கல்வி நிறுவனங்களின் தேவையை அவைதான் தீர்மானிக்கின்றன.

0

கல்கத்தாவின் புகழ்பெற்ற பாடகி நூர் ஜஹானின் குரலைக் கேட்க, அப்துர் ரஹ்மான் எங்களை அழைத்துச் சென்றார். நூர் ஜஹான் என்றால், ‘உலகின் ஒளி’ என்று பொருள். கல்கத்தாவின் வானில் நூர் ஜஹான் ஒரு நட்சத்திரம் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்களுள் அவரும் ஒருவர். கல்கத்தாவிற்கு வரும் ஒவ்வொரு பயணியும் காளி கோவிலுக்குச் செல்வதைப் போல, நூர் ஜஹானின் குரலைக் கேட்பதும் ஒரு சடங்காக உள்ளது.

நூர் ஜஹான் வசிக்கும் பகுதியில் எல்லோர் வீட்டிலும் சங்கீதம் குடியிருந்தது. நாங்கள் இருட்டில் நடந்துபோகையில், எல்லா மருங்கிலும் இசையின் சப்தம் கேட்டது. நூர் ஜஹானின் வீடு சற்றே விசாலமானது என்றாலும் நாங்கள் வருவதற்குள் முற்றம் நிரம்பிவிட்டது.

அங்கு இரண்டு பகுதிகள் இருந்தன. நூர் ஜஹான் வீற்றிருந்த பகுதியில் நாங்கள் அமர்ந்தோம். எங்களுக்கு அருகில் ஒரு சாளரம் இருந்தது. அதற்கு நேர் எதிர்புறத்தில் பாடகர் அமரும் இடம். ஆண்களும் பெண்களும் நூர் ஜஹானின் பாடலைக் கேட்க ஆர்வத்துடன் காத்திருந்தனர். மேலும் பலர் வந்தவண்ணம் இருந்தனர். அறை முழுதும் விழாக்கோலம் கொண்டிருந்தது.

சில ஆண்கள் கோட் அணிந்திருந்தனர். இன்னும் சிலர் உள்ளூர் ஆடைகள் உடுத்தியிருந்தனர். பெண்கள் வழக்கம்போல இந்தியச் சேலைகள் உடுத்தி அமர்ந்திருந்தனர். வேலையாட்கள் விருந்தினர்களுக்கு எலுமிச்சை சாறும் எலுமிச்சை சாறுபோல் தெரிந்த வேறோன்றும் பரிமாறினர். அதைக் குடித்ததும் பார்வையாளர்கள் அதீத புத்துணர்வோடு பிரகாசம் அடைந்தனர். எனவே நிச்சயம் அது எலுமிச்சை சாறாக இருக்க வாய்ப்பில்லை. சாளரத்தின் அருகில் இருந்த தீவிரக் குழுக்களும் சலிப்பேறிய ரசிகர்களும் கொண்டாட விரும்பிய ரசிகர்களுக்கு இடையூறாக இருந்தனர்.

அறைகலன்கள் ஐரோப்பிய பாணியில் அமைந்தவை என்றாலும், ‘உலகின் ஒளியான’ நூர்ஜஹானின் குரலில் ஐரோப்பிய தொனி துளியும் இல்லை. தனக்கென தரையில் விரிக்கப்பட்ட மெத்தையில் அமரவே பெரிதும் விரும்பினார். தங்க இழையில் பூவேலைப்பாடுகள் செய்த மெலிதான மஞ்சள் நிற அங்கியை உடுத்தியிருந்தார்.

அந்த உடையில் மடிப்பு ஏற்படும்போதெல்லாம், ஈங்கை மலரை கொத்தாகச் சேர்த்து நிலவொளியில் ஒளிர வைத்ததுபோல் மின்னியது. வெறும் கைகளை மேலும் கீழும் உயர்த்தி இசைக்கு ஏற்ப நயனம் செய்வதைப் பார்க்க அத்தனை வனப்பாக இருந்தது.

அவ்வாறு கைகளை அசைக்கும்போது தங்க வளையல்கள் குலுங்கின. தன் சங்கிலியை உற்றுப் பார்க்கும் ஓர் அடிமை ரசிகனைப்போல, லாவண்யமாக தன் கைகளை அசைத்தார். அவர் எத்தனை வயோதிகம் நிறைந்தவராக இருந்தாலும் பரவாயில்லை, முக லட்சணத்தில் இருபத்தைந்து வயதுதான். அச்சில் வார்த்தது போலான தெளிந்த முகம். சற்றே நீளுருண்டை வடிவத்தில் அழகு குறையாத சிறிய கன்னம்.

தூரத்திலிருந்து பார்க்க ஒருதுளி வெளுத்த நிறம் போலத் தெரிந்தார். மஞ்சள் மற்றும் தங்க இழையின் பிரதிபலிப்பில் அவரைப் பார்க்க நண்பகல் வெயிலில் அலசியெடுத்தார் போலத் தெரிந்தது. நூர் ஜஹானின் பளபளக்கும் கண்கள் இரண்டிலும், அடர்த்தியான உணர்ச்சிகள் எட்டிப் பார்த்தன. துளையிட்ட நாசியில் இருந்து வைரம் ஜொலித்தது.

நாசியில் துளையிட்டு வைரம் அணியும் வழக்கம், காதில் துளையிட்டு கம்மல் அணிவதைக் காட்டிலும் காட்டுமிராண்டித்தனமானது அல்ல. அது எப்போதும் உறுத்தலாகவே இருக்கும். நூர் ஜஹான் கம்மல் அணிந்ததோடு, தன் உறுதியான நீண்ட கழுத்தில் தங்கச் சங்கிலியும் தொங்கவிட்டிருந்தார். அவள் மெட்டிசைத்து பாடும் போது, கழுத்து முன்னும் பின்னும் அசைந்தது.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *