ஹைதராபாத் செல்லும் வழியில் மீண்டும் சரோஜினி பற்றி யோசித்தேன். ஹைதராபாத் அவருடைய சொந்த மாகாணம். அங்கு அவர் யானைமேல் சவாரி செய்து பள்ளிக்கூடம் செல்வாராம். நாற்பது வருடங்களுக்கு முந்தைய ஹைதராபாத்தின் கதை அது. இப்போது நவீன ஐரோப்பிய நகரமாக அது மாறிவிட்டது. மோட்டார் கார்களும் சொகுசு வண்டிகளும் யானைகளுக்குப் பதில் வந்துவிட்டன. மேற்கோண்டு அந்நகரின் அற்புதமான தார் சாலையில் சீருடை அணிந்த காவலர்கள், போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்துவதைப் பார்க்கலாம்.
ஹைதராபாத்தில் சர் அக்பர் ஹைதாரி வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். நான் அவரை தில்லியில் ஏற்கனவே சந்தித்துள்ளேன். இந்தியாவின் புத்திக்கூர்மையான நிதி ஆலோசகராக அவர் அறியப்படுகிறார். ஹைதராபாத்தின் நிதி கொள்கையைச் சீராகக் கையாள்வதுடன், எதிர்வரும் காலத்தில் பஞ்சம் போன்ற நெருக்கடி நிலை ஏற்பட்டாலும் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள போதுமான நிதியைத் தேக்கி வைத்திருந்தார். ஹைதாரியின் அசாதாரண நடவடிக்கைகளைக் கேட்டதும், அவர் ஒரு நவீன ஜோசப் என்று சொன்னேன்.
ஆனால் சலாம் இல்லத்தில் அவரைச் சந்தித்தபோது புள்ளியியல், நிதி, இயல்புரை அறிவியல் போன்ற துறைகளோடு அவரிடம் ஒன்றிணைய முடியவில்லை. கலாசார அறிவு நிறைந்தவராகத் தெரிந்தார். உண்மையில் நான் அவரைக் கல்வித்துறை அமைச்சர் என்றே நினைத்திருந்தேன்.
சர் அக்பருக்கு அறுபது வயதிருக்கும். கொஞ்சம் கொழுத்த உடல். எப்போதும் ஐரோப்பியப் பாணியில் ஆடைகள் உடுத்துவார். அவர் கண்களில் பரிவு தெரிந்தது. ஒழுங்கமைந்த வட்டமான தாடி. அவரின் நடத்தையில் மேற்கத்திய கலாசாரத்தின் துடிப்பும் வெளிப்பாடும் உண்டு. அதே சமயம் ஆழ்ந்த உணர்ச்சியும் சிந்தனையோட்டமும் கொண்ட கிழக்கின் கருணையும் அமைதியும் கலந்த பார்வை இல்லாமல் இல்லை. ஹைதாரியின் ஆங்கில இலக்கிய மேதமையைக் காட்டிலும், அவரின் கீழைக் கலாசாரங்களை உணர்ந்தவர்களே அதிகம்.
ஹைதாரியைப் பற்றி தெரிந்தவர்கள் அவரின் ஆங்கில அறிவைக் கண்டு மெச்சாமல் இருக்கமாட்டார்கள். ஷேக்ஸ்பியரின் கவிதை வரிகளை மட்டுமல்லாது, அவரின் சமகாலத்தில் வாழ்ந்த இரண்டாம் தர அந்தஸ்து பெற்ற கவிஞர்களின் கவிதைகளையும் ஹைதாரியால் மேற்கோள் காட்டமுடியும் என்று ஹைதராபாத்தில் வசிக்கும் பிரிட்டிஷ் ஊழியர் ஒருவர் என்னிடம் சொன்னார். அபாரமான நிதி அறிவைத் தாண்டி, பிரிட்டிஷாரோடு ஒத்துப்போகும் அவருடைய மற்றொரு அம்சத்தையும் இதன்மூலம் கண்டடைந்தேன்.
ஆனால் என்னைப் பொறுத்தவரை சர் அக்பர் மற்றொரு விஷயத்தில் தனித்தன்மை வாய்ந்தவர். நன்கு படித்து, ஆங்கில இலக்கியத்தில் பாண்டித்தியம் பெற்ற பல இந்தியர்களை நான் பார்த்திருக்கிறேன். இந்தியக் கலாசாரத்தின் இரு விளிம்பாக இருக்கும் இந்து – முஸ்லிம் சமயங்கள் பற்றி நல்ல புரிதல் அவர்களுக்கு உண்டு. ஆனால் இந்த இரண்டு சமயங்களும் அவரவர் மூளையில் தனித்தனியே பதிவாகியுள்ளன. சிலர் இந்து சமயம் மேலோங்கியும், வேறு சிலர் இஸ்லாமியம் மேலோங்கியும் சிந்திக்கின்றனர். உங்களிடம் பேசும்போது இந்து அல்லது இஸ்லாம் என்று தாம் சார்ந்த சமயத்தை மேன்மைப்படுத்தி உரையாடுவார்கள்.
சிலர் இரண்டு சமயங்களும் ஒருங்கிணைய நம்பிக்கைக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் அரசியல் காரணங்களுக்காகச் சிறுபான்மையினர் என்று தாம் கருதும் சமயத்திற்கு ஆதரவாக உதட்டளவில் உறுதுணையாகப் பேசுகின்றனர். ஆனால் சர் அக்பருக்கு எவ்வித மெனக்கெடலும் இல்லாமல் எல்லாம் புரிந்திருந்தது. பல்வேறு கலாசாரப் பிண்ணனிகளை விசேஷமான முறையில் ஒருங்கிணைத்தார். கல்விச் சிந்தனையில் அறிவுப்பூர்வமான செயல்முறைத் திட்டங்களை வகுத்தார். இந்தியக் கலாசார வெளியில் கிரேக்கம், பௌத்தம், இந்து, முஸ்லிம் என்று என்னவெல்லாம் இருக்கிறதோ அத்தனையும் தழுவிய நிலையில் தானொரு திட்டம் தீட்டினார்.
பௌத்த எச்சங்களைத் தாங்கி நிற்கும் ஈடு இணையில்லாத அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளையும் இஸ்லாமியக் கட்டடக்கலை கண்டு மெய்சிலிர்ப்பது போல் கொண்டாடித் தீர்த்தார். காலத்தால் அவர் பிந்தையராக இருந்தாலும், தன் சுபாவத்தால் எதிர்காலத்திற்கும் தேவைப்படும் மனிதராக மதிக்கப்படுகிறார். இந்தியாவை ஒரு தேசமாகக் கட்டமைக்க வேண்டுமானால், அதன் பலதரபட்ட கலாசாரங்களையும் நம்பிக்கைகளையும் ஒன்றாகக் குழைத்து ஒருங்கிணைக்க வேண்டும்.
உஸ்மானியா பல்கலைக்கழகம்மீது சர் அக்பருக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தது. அதன்மீது ஆர்வம் கொள்ளும்படி நானும் அப்பல்கலைக்கழகம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்குத்தான் அவர் அழைப்பின் பெயரில் நான் ஹைதராபாத் வந்தேன். அவர் வீட்டிலேயே தங்குவதற்கும் ஏற்பாடு செய்திருந்தார்.
வீட்டின் அழகும் அமைப்பும் எளிதில் என்னைக் கவர்ந்தது. மேற்பரப்பில் மட்டுமல்லாது சமையலறை, சலவையறை, ரகசிய அலமாரி என்று ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அவ்வீட்டு எஜமானியின் கைவண்ணம் உயர்வாகத் தெரிந்தது. அவ்வீட்டு எஜமானியின் பெயர் லேடி அமீனா. இந்தியாவின் மதிப்புமிக்க தயாப்ஜி குடும்பத்தைச் சார்ந்தவர். காலந்தோறும் அக்குடும்பத்தைச் சார்ந்த யாரேனும் ஒருவராவது மதிப்புமிக்க ஆளுமையாக இருந்துள்ளனர்.
முஸ்லிம்களுள் தயாப்ஜி குடும்பத்தைச் சார்ந்த பெண்களே முதன்முதலில் நவீனமாகச் செயல்படத் தொடங்கினர். ஆண்களும் பெண்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். தற்போது லேடி அமீனாவின் ஒன்றுவிட்ட சகோதரி பேகம் ஷெரிப் அலிக்குப் பெண்ணிய உலகில் சர்வேதச அங்கீகாரம் இருக்கிறது. மற்றொரு சகோதரி இசையுலகில் புகழோடு விளங்குகிறார்.
லேடி அமீனாவிற்கு எந்த ‘இசங்களிலும்’ ஆர்வம் கிடையாது. அவர் மனோபாவத்திற்கு எந்தக் கொள்கையிலும் முழுமூச்சில் ஈடுபட முடியாது. அவரைக் கண்முன் பார்க்கும் கணத்தில், உடலும் மனமும் ஒத்திசையும் புள்ளியை உணர்வீர்கள். வாட்டசாட்டமான அழகுப் பெண்மணி. நேர்த்தியான ஆடைகள் உடுத்தியிருந்தார். அவரின் நடை, பேச்சு, சாயலில் இருந்தே பிறிதொருவரின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு செயல்படுபவர் எனத் தெரிகிறது.
கோட்டையில் வசிக்கும் ஆங்கிலேயப் பிரபுத்துவக் குடும்பத்தைச் சார்ந்த பெண்மணிபோல் உள்ளார். ஆனால் ஆங்கிலேயப் பெண்மணியிடம் தொண்டு செய்யவும், வீட்டைப் பராமரிக்கவும், கோட்டையைப் பாதுகாக்கவும் தனித்தனி சேவகர்கள் இருப்பார்கள். லேடி அமீனாவைப் பொறுத்தவரை எல்லா வேலைகளும் அவர் தலைமையில்தான் நடக்கின்றன. தன் சேவகர் கூட்டத்தை ஒற்றையாளாகக் கட்டுப்படுத்தி, சாமர்த்தியமாக வேலைவாங்கி எந்தவொரு பொது நிகழ்ச்சியையும் அதகளப்படுத்துகிறார்.
லேடி அமீனாவின் எந்தவொரு அதிகாரத்தையும் வேறொருவரால் பிரதிநிதித்துவம் செய்ய முடியாது. சமையலறையில் இருந்து வரவேற்பறை வரை, வீட்டு விசேஷங்களில் இருந்து பொதுக்கூட்டம் வரை எல்லாவற்றையும் தன் கண்ணசைவில் கட்டுப்படுத்துகிறார். அதன்மூலம் ஒற்றுமையும் அமைதியும் வீட்டில் நிலவுகிறது. இதற்கெல்லாம் அவர் எப்படி நேரம் ஒதுக்குகிறார் என்றொருவர் ஆச்சரியப்படலாம். தேநீர், மதிய உணவு, இரவு உணவு என்று ஒவ்வொரு வேளைக்கும் விருந்தினர் வந்து கொண்டே இருப்பார்கள். இதற்கிடையில் அவர்தன் அன்றாட ஐந்து வேளை தொழுகையையும் நடத்தி விடுகிறார்.
இஸ்லாமியத் தொழுகை முறைப் பற்றி தெரிந்தவர்கள் மட்டுமே, அதன் கால அளவை உத்தேசிக்க முடியும். இதைத்தாண்டி மதிய நேரங்களில் புத்தகங்கள் படிப்பது அல்லது தையல் நூற்பது என்று ஓய்வில்லாமல் ஏதாவது செய்துகொண்டிருப்பார். அவரிடம் எப்போதும் பதட்டம் கிடையாது. எனக்குத் தெரிந்த பரபரப்பான பெண்களிலேயே, ஓய்வு அறிந்து செய்யும் வேலையை ரசித்துச் செய்யும் நுண்ணறிவு பெற்றவர் இவரொருவர்தான்.
இந்தியாவில் உள்ள இந்துக்களிடம் இருந்து இஸ்லாமியர்கள் தெளிவாக வேறுபட்டவர்கள் என்று நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு லேடி அமீனா. ஒரு சிற்பி கல்லைச் செதுக்கி சிலையை வடிப்பதுபோல், அமீனா தன் குணங்களைச் செதுக்கி வடிவமைத்திருக்கிறார். அதுவரை நான் முரண்பட்ட பல விஷயங்கள் அமீனாவிடம் உண்டு. அவர் ஒரு மரபுவழிபட்ட முஸ்லிம், இருந்தாலும் இனவாதப் புத்தி கிடையாது. இந்தியாவை அளவுகடந்து நேசித்தார். மத வித்தியாசங்களை ஒருபோதும் பொருட்டாகக் கருதியதில்லை.
அவரின் நடத்தையால் துருக்கியின் சுல்தான் இரண்டாம் முகமதின் வசனமொன்று எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. ‘என் நாட்டு மக்கள் மசூதியிலும் தேவலாயத்திலும் தொழுகைக் கூடத்திலும் மாறிமாறி வழிபட்டால் என்ன, அவர்களிடம் எவ்விதப் பாரபட்சத்தையும் நான் பார்க்கமாட்டேன்.’ தன் கணவரைப்போல அவரும் இஸ்லாமியம் சாராத கலைகளை ரசித்தார். ஆனால் அதில் மற்றுசில இந்திய முஸ்லிம்களைப் போல அவநம்பிக்கைப் பார்வையோ, கசப்பூர்ந்த ரசனையோ இல்லை.
அவர் எதைக் கண்டும் கிளர்ச்சி அடைந்ததில்லை. மிகக் குறிப்பிடத்தகுந்த குணங்களும் நம்பிக்கையும் உடையவர். இந்துமதம் பற்றி புகழ்ந்து பேசுபவர்களையும் இஸ்லாம் பற்றி குறைசொல்பவர்களையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்துக் கவனிக்கும் பக்குவம் பெற்றவர். ஒருவேளை இதற்கிடையில் தொழுகை செய்வதற்கான நேரம் நெருங்கிவிட்டால், எந்தவொரு சலனமும் இன்றி சாந்தமாக வழிபடத் தொடங்குவார்.
லேடி அமீனாவின் உணர்திறனைத் தாங்கும் வலிமையை இரு நிகழ்வுகளில் பார்த்திருக்கிறேன். முதலில் அவர் பூடகமான விஷயங்களில் மனம் செல்லவிடாமல், மிகைப்படுத்தப்பட்ட துறவற வாழ்வை முற்றிலுமாக நிராகரிக்கிறார். இதன்மூலம் மனிதச் சமூகத்தின்பால் மனம் ஒன்றிவிடாமல் தடுக்கும் எல்லாவித மாயாவாதங்களையும் அவர் எதிர்க்கிறார். மரபுவழி முஸ்லிம்களுக்கு மிகையூட்டிய துறவத்தில் நாட்டம் இருக்காது என்பதால், அவர் இங்ஙனம் இருக்கிறார் என்று முதலில் புரிந்துகொண்டிருந்தேன். ஆனால் இதற்கான காரணம் அவரின் சொந்த வாழ்க்கையின் சோகக் கதைக்குள் சென்றது.
அமீனாவின் அன்பிற்குரிய உறவினர் ஒருவர், மாயாவாதங்களால் ஈர்க்கப்பட்டு ஃபக்கீர் ஆக மாறியிருக்கிறார். ஆனால் சில நாட்களுக்குப் பின் கடுமையான துறவறப் பயிற்சியால் அவர் உயிரிழந்துவிட்டார். அமீனாவின் உணர்திறனைப் பரிசோதித்த இரண்டாவது சம்பவம், அவரின் சிநேகித உறவு பற்றியது. தனிப்பட்ட முறையில் அமீனாவின் நேர்மையான நட்புக்கு நானே பாத்திரமானதால், அவரை ரசிப்பது வாடிக்கையாகிப்போனது. அமீனாவிற்கு பிறப்பிலேயே அதிகாரங்கள் இருந்தன. ஆட்பலமும் பணபலமும் அதிகார பலமும் படைத்த பின்னும், நட்புக்காக அவர் எதையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை. ஒருவேளை இதுவே அவரின் அன்பிற்குரியவர்களிடத்து பாசத்தை மிகுவித்தும், முன் பின் தெரியாதவர்களிடத்து விரோதத்தை தூண்டியும் இருக்கலாம். அவரின் இளைய நண்பர்கள் எப்போதும் அமீனாவிடம் அர்ப்பணிப்போடு இருக்கின்றனர். அவர் கண்டிப்பைக் கைவிடவில்லை என்றாலும், அமீனாவோடு இருக்கும்போதெல்லாம் வீட்டில் இருப்பதுபோல் உணர்கின்றனர்.
மகளிர் கல்வி நிறுவனங்களுக்குப் புரவலராகச் செயல்படுகிறார். பெண்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களுக்கு என்னைக் கூட்டிச் சென்றார். மரபுவழி கல்விச் சிந்தனை உடைய ஆங்கிலேய முதல்வர்களால் அந்நிறுவனங்கள் சீரிய முறையில் செயல்பட்டு வந்தன. இந்துக்களும் இஸ்லாமியர்களும் இன, மத பாகுபாடின்றி ஒன்றுசேர்ந்து பாடம் பயிலும் சூழல் இருந்தது. அமீனாவின் ஆதரவில் செயல்பட்ட நிறுவனங்களுள் என்னைப் பெரிதும் கவர்ந்தது, அநாதை இல்லம் என்று சொல்வேன். வறுமைப் பீடித்த வகுப்பினர்களிடையே பெரும் அளவிலான திட்டத்தில் தொடக்கக் கல்வி பயிற்றுவிக்க விரும்பினால், இந்தியாவிற்கு மிகச் சிறந்த முறை இதுவாகத்தான் இருக்கும்.
சொந்த பந்தம் இல்லாத இருபாலின குழந்தைகளும் அங்கு மாணவர்களாய் இருந்தனர். சிறுவர் சிறுமியர்களுக்குத் தனித்தனியே பாடம் சொல்லித்தரப்பட்டது.
முதலில் சிறுவர்களைப் பார்த்தோம். ஐந்து முதல் பதினான்கு வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் எல்லோரும் தங்கள் கைப்பட நெய்த ஆடைகளையும் தோலில் பதனிட்டு தாமாகச் செய்த காலணிகளையும் அணிந்திருந்தனர். நெசவு வேலை, தச்சு வேலை, ஷு தயாரித்தல், தோல் பதனிடுதல் என்று பலவாறான கைவினைத் தொழில்கள் இங்குக் கற்றுக் கொடுக்கப்பட்டன. வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் இரண்டு, மூன்று வேலைகளில் தேர்ச்சி பெறுபவர்கள் நல்ல வேலையில் அமர்கிறார்கள். இந்நிறுவனத்தில் இருக்கும் ஒவ்வொரு பண்ட பாத்திரமும் அறைகலனும் உடுப்பும் மாணவர்கள் உருவாக்கியது. இச்சிறுவர்களை நம்பிக்கையோடு காட்டில் இறக்கினாலும், வாழ்க்கை நடத்த தேவையான பொருட்களைச் செய்து அங்கும் பயமின்றி வாழ்வார்கள்.
இங்கிருக்கும் கணிசமான குழந்தைகள் காட்டிலிருந்து பெறப்பட்டவர்கள் என்றாலும், சராசரி குழந்தைகளைப்போல் ஆரோக்கியத்துடன் இருந்தனர். அவர்களுக்குப் போதுமான விகிதாச்சாரத்தில், தேவையான ஊட்டச்சத்துக்கள் முறையாக வழங்கப்பட்டன.
(தொடரும்)
__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.