கல்வித் தளத்தில் நடைமுறைக்கு ஏற்ப முறையாகப் பாடம் சொல்லித் தருகின்றனர். ஆனால் நான்கு வெவ்வேறு மொழிகளில் பாடத்திட்டம் அமைந்திருக்கிறது. ஆதரவின்றி தனித்துவிடப்பட்ட குழந்தையின் பூர்வாங்க விவரங்களையும், பெற்றோர் பேசிய மொழிகளையும் எப்படித் தெரிந்துகொள்கிறீர்கள் எனக் கேட்டேன். ஆதரவற்ற குழந்தைகளிடம் தான் சார்ந்த சமூகத்துக் குறியீடும், பெற்றோர்களின் மதப் பின்னணி சார்ந்த குறியீடும் எப்போதும் தொக்கி நிற்பதாய் சொன்னார்கள்.
பெண் குழந்தைகளும் சரிசமமாகப் போற்றும்படி இருந்தனர். சமையல் வேலை, பணியாள் வேலை, தையல் நூற்பு, இல்லத்தரசிக்கான கடமைகள் என்று சகலமும் கற்றுக்கொடுக்கப்பட்டது. வீட்டு வேலைகளைக் கவனமாகச் சொல்லிக் கொடுத்தனர். இல்லத்தரசியாக வீட்டு வேலை தெரிந்த பெண்களுக்கு நல்ல தேவை இருப்பதாகச் சொன்னார்கள்.
ஆனால் ஆதரவற்றோர் இல்லத்தில் வளரும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினால், விண்ணப்பிக்கும் நபரின் நடத்தையும் சமூக மரியாதையும் பல கோணங்களில் பரிசோதித்த பிறகே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மணப்பெண்ணுக்குத் தேவையான நியாயமான சீர்வரிசைகளும் புழங்கு பொருட்களும் கொடுக்கின்றனர். கணவனிடம் இருந்து அப்பெண்ணுக்குப் போதிய அரவணைப்பு கிடைக்கிறதா என்று சிலகாலம் வரை அந்நிறுவனத்தின் கண்காணிப்பு தொடர்கிறது.
ஆண் குழந்தைகளுக்கான உணவுகளைப் பெண்களே தயாரிக்கின்றனர். ஆனால் பாத்திரங்களைக் கழுவும் பொறுப்பு ஆண்களிடம் விடப்படுகிறது. என்னிடம் இரண்டு சமையலறைகள் காண்பிக்கப்பட்டது. ஒன்று இந்துக்களுக்கு; மற்றொன்று இஸ்லாமியர்களுக்கு. இந்தப் பிரிவினைக்கு சைவ, அசைவ பிரச்சனைகள் காரணம் கிடையாது. ஏனென்றால் அங்குள்ள இந்து சிறுவர்கள் எல்லோருமே அசைவம் உண்பவர்கள். உண்மையான சிக்கல் சாதி வேற்றுமையில் இருந்தது: இஸ்லாமியர்கள் தயாரிக்கும் உணவை இந்துக்களால் உண்ண முடியாது; அல்லது இஸ்லாமியர்களோடு உண்ணமுடியாது என்பதுதான் சிக்கல்.
ஒட்டுமொத்த இடத்திலும் சுகாதாரத்திற்கு குறைவில்லை. சுகபோக வஸ்துக்களுக்கு இடமின்றி எளிமையாக இருந்தன. அங்கு வசிக்கும் மாணவர்களிடம் பொருளாதாரத் தாழ்வுணர்ச்சி தோன்றாமலிருக்க இதுவொரு நல்ல உத்தியாகத் தெரிந்தது. இந்நிறுவனத்தின் புரவலராக விளங்கும் மேன்மை பொருந்திய நிஜாம் அவர்களை, நடைமுறைச் சார்ந்த இப்புத்திசாலித்தனமான கொள்கைக்காகவே நிச்சயம் பாராட்ட வேண்டும்.
ஆட்சியாளர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்களால் ஏழை மக்களுக்கு நிர்மாணிக்கப்படும் இவ்வகைப்பட்ட நிறுவனங்களைப் பெரும்பாலும் செல்வத்தைக் கொட்டியளந்து பார்வையாளர்களைக் கவரும்படி மெருகூட்டுவது வழக்கம். ஆனால் இதனால் நடைமுறை வாழ்க்கையில், அங்கு வசிக்கும் நபர்களிடையே இவ்வாறான உயரிய வாழ்க்கைக்குத் தான் தகுதி படைத்தவன் இல்லை என ஏற்றுத்தாழ்வு தோன்றுவதுதான் மிச்சம்.
ஸ்காட்லாந்து நாட்டைச் சார்ந்த தம்பதிகளிடம் இந்நிறுவனத்தின் மேற்பார்வை பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவ்விருவரும் மிகப் பொருத்தமான வேலைகளை திறமையாகக் கையாண்டதுடன், சிறந்த கல்வியாளர்களாகவும் திகழ்ந்தனர். குறிப்பாக ஸ்காட் பெண்மணி, தன் இயல்புக்கு மீறிய தாய்மையை வெளிப்படுத்தினார். இம்மாதிரியான குழந்தைகளுக்கு அறிவுப்பூர்வமான திறன்களைக் கற்பிப்பதைக் காட்டிலும், சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது.
அன்று மாலை உணவருந்தும் போது, காப்பகம் தொடர்பான சில பிரச்சனைகளை முன்வைத்தேன். நான்கு வெவ்வேறு மொழிகளில் பாடத்திட்டம் கற்பிக்கப்படுவது ஏன்? ஒவ்வொரு குழந்தையும் தான் சார்ந்த சமூகத்தின் மொழியைத் தெரிந்துகொள்வது சரியென்றாலும், ஹைதராபாத் முழுவதும் அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்ட ஒற்றை மொழி இருந்திருக்க வேண்டும். பல்வேறுபட்ட சமூகங்களுக்கு இடையே வர்த்தகம் முதலான பல்வேறு தொடர்புகளுக்கு, குறிப்பாகக் கல்வி பயன்பாட்டிற்கு அம்மொழியைப் பயன்படுத்தியிருக்கலாம்.
இந்து முஸ்லிம் இருவரும் மாமிசம் உண்ணும்போது, ஏன் தனித்தனியாக உணவு பரிமாற வேண்டும்? இஸ்லாமியர்கள் சமைத்த உணவை இந்துக்களால் உண்ணமுடியாது என்றால், இந்துக்களைச் சமைக்கவிட்டு இஸ்லாமியர்கள் உணவருந்தலாமே? தன் மாணவர்களை ஒருங்கிணைத்து அமரவைத்து உணவு பரிமாற முடியாத பள்ளிக்கூடம், சீரிய குடிமகன்களை உருவாக்கும் எதிர்கால இலக்கிலிருந்து பலமடங்கு பின்தங்குகிறது.
சர் அக்பர் ஆச்சரியத்தில் தலையசைத்தார். இந்திய விவகாரங்கள் பற்றி என் புரிதலை நினைத்து அதிர்ந்து போனவர் போல் தெரிந்தார். அவர் சொன்னார்:
‘இஸ்லாமியர்கள்தான் இங்கு ஆட்சியாளர்கள். இந்தச் சமயத்தில் இதுபோலெல்லாம் செய்தால், அதிகார பலத்தை அனுகூலத்திற்கு ஏற்ப பயன்படுத்தியதுபோல் ஆகிவிடும். எனவே நாங்கள் விரும்புவது போல், ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வியும் வாழ்க்கையும் வழங்குதில் சிக்கல் ஏற்படலாம்.’
சர் அக்பரின் உணர்வுபூர்வமான புரிதலை நான் இயல்பாகவே மதிக்கிறேன். ஆனால் நான் கேள்வியெழுப்பியதற்கு அறியாமை மட்டுமே காரணம் அல்ல. பழங்காலத்து இந்தியாவாக ஒவ்வொரு சமூகத்தினரும் தனித்தனியாகப் பிரிந்து கட்டுக்கோப்புடன் வாழ்ந்திருந்தால், நான் இக்கேள்விகளைக் கேட்டிருக்கமாட்டேன்.
ஆனால் நான் கண்டு உரையாடும் இந்தியாவில் ஒவ்வொருவரும் ஒற்றுமை, தேசியம், சகோதரத்துவம் என்று பேசுகிறார்கள். இன்னும் சில நாட்களில் இந்தியா விடுதலை அடையப் போகும் செய்தியை மெச்சுகிறார்கள். இந்தச் சிறுவர்களுக்கு அருகருகே அமர்ந்து ஒற்றுமையாக உணவருந்துவதிலேயே இசைவுத் தன்மை ஏற்படாதபோது, நாளை நாட்டின் தூண்களாக மாறி அதன் முன்னேற்றத்திற்கான மாற்றுக் கரங்களாக இருப்பார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?
பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்படாத மாகாணங்களில், சில அந்நியமான சிக்கல்கள் உள்ளன. இந்து பெரும்பாண்மையினரை இஸ்லாமிய சிறுபான்மையினர் ஆட்சி செய்வதும்; இஸ்லாமிய பெரும்பாண்மையினரை இந்து சிறுபான்மையினர் ஆட்சி செய்வதும் இங்கு சில வேடிக்கையான முரண்கள். இந்து மன்னர் ஆட்சி செய்யும் வேறொரு மாகாணத்தை நான் பார்த்திருந்தாலும், இதே குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பேன். எல்லாவித மத அபிப்பிராயங்களைப் பூர்த்தி செய்வதைத் தாண்டியும், எதிர்கால இந்தியாவுக்கு உழைக்கும் கரமாக விளங்கும் இளைஞர்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைத்து இயக்க நாம் ஏதாவது செய்ய வேண்டும்.
0
லேடி அமீனா வீட்டில் சந்திந்த ஹைதராபாத் பெண்களைப் பற்றி ஒரு நீண்ட விவரணைக் குறிப்பே எழுதலாம். அதில் அமீனாவிற்கு நெருக்கமான மூன்று இளம் பெண்களை மட்டும் நான் இங்கு குறிப்பிடுகிறேன்.
துர்ரு ஷேவார் என்றொரு இளவரசி, முடிசூடப்போகும் அடுத்த ஆட்சியாளரை மணம் புரிந்திருந்தார். அவர் உதுமானியப் பேரரசின் இளவரசியாக இருந்தவர். ஆனால் தற்போது இந்திய இளவரசியாக அதன் சூழலுக்குத் தகுந்தாற்போல் தன்னை தகவமைத்துக் கொண்டார். ஒரு மனைவியாக, அம்மாவாக, சமூகத்தின் உயர் மதிப்பு வாய்ந்த பெண்மணியாக தன்னை பாங்குற பிரகடனப்படுத்திக் கொண்டார் ஷேவார்.
இருபத்து மூன்று வயது நிறைந்த துர்ரு ஷேவாரைப் பார்த்தால், கிட்டத்தட்ட லேடி அமீனாவின் மகள் என்று சொல்லலாம். ஆனால் அந்த இளம்பெண்ணிடம் இருந்த அசாதாரண அறிவு முதிர்ச்சியைக் கண்டு, எவரொருவரும் மயங்கிவிடுவர். அவர்கள் இருவருமிடையே இரண்டு சமவயதுப் பெண்மணிகள் பேசிக் கொள்வதுபோலான நட்புறவு மலர்ந்திருந்தது.
இளவரசியின் பதின் வயதில் நான் அவரை துருக்கியில் பார்த்திருக்கிறேன். இப்போது லேடி அமீனாவிற்கு அருகில் நிற்கும்போது, அவர்தானா என்று குழப்பமடையும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்.
கிட்டத்தட்ட ஆறடி உயரம். எல்லோரைக் காட்டிலும் வளர்த்தியான உருவம். அவரிடம் இளவரசிக்கான மிடுக்கும் கண்ணியமும் இருந்தால்கூட, உண்மையிலேயே அடக்க குணமும் கூச்ச சுபாவமும் கூடியிருந்தன. நான் பார்த்த மென்மையான குழந்தை முகம், வலிமையான மனித முகமூடிக்குப் பின்னால் இப்போது மறைந்துவிட்டது.
எளிமையான சேலையும் நாசூக்கான அலங்காரமும் நகைகளும் பூண்டிருந்தார். கம்பீரமான தோள்பட்டையின்மேல் மஸ்லின் அணிந்த முகம் விரைப்பாகத் தெரிந்தது. ஓரளவு நீண்ட முகம், அகலமான நெற்றி, அழகிய கூந்தல், வட்டமான சிறிய கன்னம். அவர் கண்கள் அகலமானவை. நீல நிற கண்களின் மேலாக வளைந்த புருவங்கள். உச்சபட்ச வெண்ணிறப் பற்களை இலைமறை காயாக மறைக்கும் கவனமாகச் செதுக்கிய சிகப்பு நிற சிறிய இதழ்கள். சீராகத் தொடங்கும் நாசி, இதழ் பகுதியையொட்டி சற்றே வளைந்திருந்தது.
நான் இந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கிறேன் என்று ஆச்சரியப்பட்டேன். சட்டென்று நினைவுக்கு வந்தது. கான்ஸ்டான்டினோப்பிள மீது படையெடுத்த மெகமுதுவின் உருவப்படம் அது. அதனை பெல்லினி வரைந்திருந்தார். சற்றே சீரழிந்துபோன அரசக் குடும்பத்தின் வலிமையான மற்றும் திறமைவாய்ந்த ஆட்சியாளர்களின் பண்பை அவர் ஒருங்கே பெற்றிருந்ததில் எனக்கு அந்நியத்தனமான வியப்பு உண்டானது.
கருணைவயப்பட்ட விதியின் விளைவால் தான் இருக்கவேண்டிய இடத்திற்கு அவர் அனுப்பப்பட்டிருக்கிறார். ஏனெனில் பழங்கால உதுமானியப் பேரரசில் இன, மத துவேஷங்களுக்கு இடமில்லை. மெகமுது மன்னரைப் போல துர்ரு ஷேவாருக்கும் கவிதை எழுதுவது, பாடம் படிப்பது என்ற பல்துறை ஆர்வம் இருந்தது. உருது மற்றும் ஆங்கிலத்தைத் தாய்மொழிபோல சரளமாகப் பேசினார். அவர் தன் ஆசை மகனை, ‘என் சர்க்கரைக்கட்டி’ என துருக்கி மொழியில் அழைத்த கணம், அவர் துருக்கியப் பெண்மணிதான் என புத்தியில் உரைத்தது. அவர் ஒருபோதும் பர்தா அணியாமல் சுதந்திரமாகச் செயல்படுகிறார் என்று ஒருவர் சொன்னார்.
ஹைதராபாத் பெண்கள் பற்றி அவரின் அபிப்பிராயம் என்ன, கல்வித் துறையில் ஹைதராபாத் மாகாணத்தின் சாதனைகள் என்னென்னவென்று ஹைதராபாத் மாகாண மகளிர் மாநாட்டின் பத்தாவது பொதுக்கூட்டத்தில் அவர் பேசிய உரையின் சாரத்தை வாசித்துப் பார்த்தால் புரிந்துவிடும். கல்விப் புலத்தில் துர்ரு ஷேவார் எத்தனை ஆர்வமிக்கவராக இருக்கிறார்; தன் தகைசால் முன்னோர்களைக் காட்டிலும் எத்தனை மடங்கு மேலோங்கி உழைக்கிறார் என்று அதன்மூலம் தெரிந்துகொள்ளலாம். நகர் மண்படத்தில் உருது மொழியில் அவர் உரையாற்றிய பொழிவின் சாரத்தை ஆங்கில மொழிபெயர்ப்பில் பின்வருமாறு இணைத்திருக்கிறேன்:
‘. . . இப்போது ஹைதராபாத் எனது சொந்த ஊர். உங்கள் ஆசை, கனவு, இலட்சியங்களோடு, குழந்தைகளின் எதிர்கால நலனையும் நான் இனி பேணிக் காக்கப் போகிறேன் . . . . நீங்கள் என்னை உங்களில் ஒருவராக அங்கீகரிக்கும் நாளுக்குத்தான் இத்தனைக் காலம் காத்திருந்தேன். உங்கள் நலனுக்காக எவ்வித காரியங்களையும் நான் செய்யத் தயாராய் இருக்கிறேன் என்று நம்புங்கள்.
இந்தியப் பெண்கள்மீது எனக்கு அளவுகடந்த மரியாதையும் அக்கறையும் உண்டு: அவர்களின் கடலளவு பொறுமையும், மலையளவு தைரியமும் மரியாதையைக் கூட்டுகின்றன; நிகழ்கால மற்றும் எதிர்கால நலன்மீது அக்கறை கூடுகின்றது. இன்றையக் காலக்கட்டத்தில் உலகளாவிய பெண்களிடையே, எதிர்வரும் சந்ததிக்கு சரியான பாதையை வழிகாட்டவேண்டுமென்ற பொறுப்புணர்வு அதிகரித்திருக்கிறது. விசுவாசம், பக்தி, கடமையுணர்வு போன்ற பண்புகளை மரபுரிமையாகக் கொண்டுள்ள இந்தியப் பெண்களால் உலகம் பெறவேண்டியவை எண்ணிக்கையில் அடங்காது. ஆகவே மனிதகுலத்திற்கு சேவை செய்வதில் இந்தியப் பெண்கள் முன்னணி வகிக்க வேண்டும். இன்றைய தேதியில் உலகின் நாகரிகம் அடைந்த பல தேசங்களில், பெண்கள் மண்ணின் மைந்தர்களாக ஜொலிக்கின்றனர். ஒட்டுண்ணியைப் போல் துணைதேடி அலையாமல், வாழும் உரிமை – கோரும் உரிமை – கொடுக்கும் உரிமைகளோடுச் சேர்ந்து, நாட்டிற்குப் புகழ் சம்பாதிக்கும் உரிமையையும் தேடித் தருகின்றனர் . . . ’
மகளிர் கல்லூரி பற்றி பேசியபிறகு, ஹைதராபாத்தில் உள்ள நான்கு தொடக்கப்பள்ளிகளைக் குறிப்பிட்டு, தொடக்கக்கல்விக்கான தேவையை வலியுறுத்தி உரையாற்றினார்:
‘இந்த ஒளிகொடுக்கும் கலங்கரை விளக்கத்தின் வெளிச்சத்தில் படராமல், இன்னும் ஆயிரம் மாணவர்கள் ஊருக்கு புறம்பாக வசிக்கின்றனர். இந்த ஒளி மேலும் சுடர்விட்டு எரிந்து எல்லோரையும் சென்றடைய வேண்டும். ஏழை பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல் எல்லோரும் சரிசமமான கல்வி பெற வேண்டும் . . . .’
(தொடரும்)
படம்: இளவரசி துர்ரு ஷேவார்
__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.