Skip to content
Home » நான் கண்ட இந்தியா #36 – ஹைதராபாத் – 3

நான் கண்ட இந்தியா #36 – ஹைதராபாத் – 3

‘இறை வழிபாட்டில் உயர்ந்தவராக இருப்பதைக் காட்டிலும் அறிவாளுமையில் உயர்ந்தவராக இருக்கவேண்டும்’ என்ற முகமதின் வசனங்களை மேற்கோளிட்டுச் சொல்லி, இந்து மதத் தத்துவங்களையும் தான் சரிசமமாய் உள்வாங்குவதாய் துர்ரு ஷேவார் சொன்னார். ‘வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமே உதவாது. அது வெறும் ஆயிரத்தில் ஒரு பங்குதான். உண்மையான கல்வி என்பது குறுகிய மனப்பான்மைகளை வேரறுக்கும்; பச்சாதாபம் தோற்றுவிக்கும்; சமூகத்தில் நிலவும் மூடநம்பிக்கைகளை வெட்டிச் சாய்க்கும்; பயம் முதலான தப்பெண்ணங்களை வெளியேற்றும்’ என்றார்.

அந்தப் பொழிவு முழுவதும் அவர் வயதுக்கு ஒவ்வாத தீவிரத்தன்மையையும் முதிர்ச்சியையும் பார்க்க முடிந்தது. தான் பெரிதும் மரியாதைச் செலுத்தும் கனம் பொருந்திய நிஜாம் அவர்களை வணங்கி மகிழ்ந்தார். கிட்டத்தட்ட நிஜாமின் பிள்ளைபோல் அவரோடு ஒட்டிக்கொண்டார். பெண்களுக்கு வேண்டிய பொருளாதாரச் சுதந்திரம் பற்றி பின்னர் பேசத் தொடங்கினார்.

ஓர் இளவரசியாக இருந்தாலும், ‘எல்லாப் பெண்களும் கண்ணியமான பணியில் அமரவேண்டும்’ என்று அவர் விரும்பினார். ‘தன் சொந்தத் தேவைக்குப் போதுமான பணத்தைச் சம்பாதிக்க, மரியாதை நிறைந்த ஒரு பணியை பெண்கள் தேடிக் கொள்ள வேண்டும். சொற்பமான ஊதியமாய் இருந்தாலும், குடும்ப வருமானத்திற்கு அது பெருமைச் சேர்க்கக் கூடியதே அன்றி அவமானகரமானது அல்ல’ என்று வலியுறுத்திச் சொன்னார்.

கல்வி சார்ந்த எல்லா முக்கியப் பிரச்சனைகளையும் தன் பேச்சினூடாகத் தொட்டுச் சென்றார். முன்னேற்றத்திற்கான அடிப்படைத் தேவைகள் என அவர் நிரல்பட கோர்த்த பட்டியலில் இருந்து, சமூக மாற்றத்திற்கான பெண்ணாக நாம் இவரை உருவகம் செய்து பார்க்க முடிகிறது.

லேடி அமீனாவின் மற்றிரண்டு இளம் தோழிகள், சரோஜினி நாயுடுவின் புதல்விகள். அழகு கொஞ்சும் இருவரும் ஏதோவொரு சாயலில் தன் அம்மாவின் உருவமைவில் தெரிந்தனர். பத்மஜா ஓர் அழகுப் பதுமை. இரக்கக் குணம் மிகுந்த மென்மையான பெண். சிரத்தையோடு மெனக்கெடும் சாமர்த்தியசாலி. லீலாமணி பாயும் புலி போன்றவர். கவனம் ஈர்க்கும் முகம். நெருப்புத் தெறிக்கும் கண்கள். சட்டென்று புரிந்துகொள்ள முடியாத சுபாவம்.

இவ்விருவரில் சுட்டிப் புலிக்குத்தான் தன் தாயாரின் சுபாவம் அதிகம் பொருந்திருப்பதாய் எனக்குத் தோன்றியது. தன் திறமையும் கல்வியும் வைத்துக்கொண்டு எந்த இயக்கத்திற்குச் சென்றாலும், அங்கு அவர் பெரும் சொத்தாக இருப்பார். அந்தக் கணம்வரை தான் எந்தப் புலத்தில் ஈடுபடப் போகிறோம் என்ற தெளிவு இல்லாதவராய் எனக்கு அவர் தோன்றினார்.

0

ஹைதராபாத்தில் எனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. கமலா தேவியை நான் அங்குச் சந்தித்தேன். தெற்கிலிருந்து என்னைச் சந்திப்பதற்காகவே அத்தனைத் தூரம் பிரயாணப்பட்டு வந்திருக்கிறார். மகாத்மா காந்தியை நான் வார்தா ஆசிரமத்தில் சந்திக்கும்போது அவரும் அங்கு உடன் வருதாய் சொன்னார். நான் மிகுந்த சந்தோஷப்பட்டேன். புதிய இந்தியாவிற்காக உண்மையிலேயே உழைக்கக்கூடிய செயல்பாட்டாளர்களுள் விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்களில் இவரும் ஒருவர். அத்தகைய நபரிடம் நேரிடையாகப் பேசக் கிடைத்த வாய்ப்பை எண்ணி மகிழ்ந்து போனேன். அந்நியர்கள் அத்தனைச் சுலபத்தில் அடையக்கூடிய உயரம் அல்ல அது.

0

இந்தியாவில் உஸ்மானியா பல்கலைக்கழகம் தொடர்ச்சியான பேசுபொருளாக இருந்தது. ஜாமியா பல்கலைக்கழகம் உருவாகும் வரை, இந்நிறுவனம்தான் உருது மொழியில் உயிர்க்கல்விப் பாடங்களை பயிற்றுவித்தது. சொல்வதைக் காட்டிலும் கடினமான காரியம் இது. அறிவியல் பாடங்களைப் போதிக்கும் அளவுக்கு உருது மொழியிலான தொழில்நுட்ப வார்த்தைகள் வளர்ச்சி பெறவில்லை. விருப்பத்திற்கு ஏற்றவாறு அதனை உருவாக்கவும் முடியாது.

தொழில்நுட்ப வார்த்தைகளை மேற்கிலிருந்து இரவல் வாங்கிக் கொண்டாலும், அதனை உருது மொழியில் மறுகட்டமைப்புச் செய்ய ஓர் இந்திய மூளை வேண்டும். அறிவியல் புலத்தில் பயிற்சி ஆழமிக்க உருதுமொழி அறிந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மட்டுமே அத்தகைய வார்த்தைகளை வேற்று மொழியில் இருந்து பெயர்க்க முடியும். இதற்காகவே ஹைதராபாத்தில் இருந்து எண்ணற்ற ஆய்வு மாணவர்கள் அடிக்கடி ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது உண்டு.

பட்டம் பெறச் செல்லும் இளைஞர்கள் மட்டுமின்றி, பட்டம் பெற்ற ஆண்களும் தம் உயராய்வு படிப்பிற்காக ஐரோப்பா செல்வதுண்டு. தத்துவம் மற்றும் விஞ்ஞானச் சொற்களை மொழிபெயர்ப்பதற்கென்றே இப்போது இங்கு மாபெரும் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. டாக்டர் மக்கன்ஸி எனும் திறமான ஸ்காட்லாந்து அறிஞர், ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களுக்கு ஈடாக இந்நிறுவனத்தை வளர்த்துவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் மொழிபெயர்ப்பு மையத்தின் தலைமைப் பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.

இங்கு வேலை நடைபெறும் விதத்தை அவர் விவரிக்கக் கேட்கும்போது அலாதியாக இருக்கும். வெவ்வேறு அறிவியல் புலம் சார்ந்த அறிஞர்களிடமிருந்து எங்ஙனம் வார்த்தைகள் கோர்க்கப்படுகின்றன; அவர்களிடையே ஒருமித்த கருத்து தோன்றுவது எப்படி என்று பொறுமையாக விவரித்தார். அதிமுக்கியமான இவ்வேலைக்குத் திட்டமிட்ட நடைமுறைகளும் செயல்திட்டங்களும் தொலைநோக்குப் பார்வைகளும் சீர்மையாக உள்ளன.

ஹைதராபாத்தின் ஆய்வாளர்களும் சான்றோர்களும் உள்ளூர் மற்றும் ஐரோப்பிய கலாசாரத் தெளிவு பெற்றவர்களாக இருந்தனர். பல்கலைக்கழகப் படிப்பிற்கு என்று தெளிவான பாரம்பரியம் உண்டு. வரலாறு, தத்துவம், அறிவியல் என்று துறைவாரியான சில முக்கிய நபர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். அதில் ஒருவரை எனக்கு முன்னரே தெரிந்திருந்தது. டாக்டர் ஹமீதுல்லா அவர்களை நான் பாரிஸில் சந்தித்திருக்கிறேன். வரலாற்றுத் துறையில் அவரின் பங்களிப்புக்காக, பாரிஸ் பல்கலைக்கழக வட்டத்தில் மரியாதைக்குரிய நபராக மதிக்கப்படுபவர் அவர்.

முதுபெரும் தோய்ந்த ஆய்வாளர்களின் அசாத்திய உருது மொழி ஆற்றல்களுக்கு மத்தியில், மௌலானா அப்துல் ஹக் என்பார் சிறிது வேறுபட்டு இருந்தார். ஆய்வாளர் என்பதையும் தாண்டி, இந்நிறுவனத்தின் சிந்தனைத் தொட்டியில் அதிமுக்கிய நபரென்றும் அடிக்கடி குறிப்பிடப்படுகிறார். வட்டமான வெள்ளைத் தாடியும், இறுக்கமான கோட்டும் அவரது வாடிக்கையான தோற்றம் எனலாம். அதிகம் பேசமாட்டார். தன் முழு வாழ்வையும் படிப்பு, ஆராய்ச்சி, எழுத்து என்று கல்விப்புலத்திற்கே அற்பணித்தவர்.

உஸ்மானியா எனும் இப்பிரம்மாண்ட நிறுவனத்தைக் கட்டியெழுப்புவதில் மேன்மை தாங்கிய ஹைதராபாத்தின் ஆட்சியாளர், நிஜாம் அவர்களின் புரவலத்தன்மையே பெரிதும் உதவியது. ஹைதராபாத்தை பட்டொளி வீசும் கல்வி மையமாக மாற்ற வேண்டுமென்று தன் மனத்தில் உறுதிகொண்டு, அதற்கேற்ற வேலைகளைச் செய்து வருகிறார்.

முன்பிருப்பதைக் காட்டிலும் மேலும் ஒரு படி மேம்பாடு அடையச்செய்ய தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனைக்கும் வளைந்து கொடுத்தார் சர் அக்பர். அவர் சொல்வதற்கெல்லாம் மௌலானா அப்துல் ஹக் செயலுருவம் கொடுத்தார்.

கல்விநிலை உயர்வுக்கும் படைப்பாற்றலுக்கும் இத்தனைச் சிரத்தையோடு பாடுபடுகிறார்கள் என்றால், இதுவரை இந்தியா காணாத ஒரு புதுமையான பல்கலைக்கழகத்தை நிர்மாணிக்கும் திட்டங்கள் பேச்சுவார்த்தையில் இல்லாமல் போகுமா? 20 லட்ச ரூபாய் செலவு செய்து உருவாக்கப் போவதாய் சொல்கின்றனர்.

உள்நாட்டைச் சார்ந்த கட்டடக் கலைஞர்கள் சிலர், இரு ஆண்டுகளுக்கும் மேலாக பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் சென்று வந்து இத்திட்டத்தை முன்மொழிந்துள்ளனர். இடம் தயாராக இருக்கிறது. சாலை, கழிவுநீர் வடிகால் வசதிகளும் செயற்பாட்டில் உண்டு. சில சிறிய கட்டடங்களும் எழும்பிவிட்டன. எனவே இன்னும் இரண்டு ஆண்டுகளில், உருது வழியிலான கல்விநிலையிலும் கட்டுமான வசதியிலும் மிகக் குறிப்பிடத்தகுந்த பிரம்மாண்ட நிறுவனம் ஒன்று உதயமாகப்போகிறது. இப்போதுவரை பழைய கட்டடங்களில் பல்கலைக்கழகப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

0

இறுதி நாளின் அந்திப் பொழுதில் எனக்கு ஒருவித விசித்திர உணர்வும், ஹைதராபாத் மீது பற்றுகையும் ஏற்பட்டது. பெரும் கூடாரத்திற்கு அடியில் உஸ்மானியா பல்கலைக்கழகச் சார்பில் இரவு உணவு தயார் செய்திருந்தனர். ரம்மியமான சிறிய உரைகளும் உரையாடல்களும் அந்த மாலையை மேலும் அழகாக்கின. அப்போதுதான் முஷாரா வந்தது. எனக்கு இந்தப் பெயர் மிகப் பழங்காலத்திய துருக்கியை ஞாபகப்படுத்தியது. அதாவது முக்கியச் சந்திப்புக் கூட்டங்களில் நரம்புக் கருவிகளால் பாட்டிசைக்கும் பாணர்களின் காலம். மேலும் மேலும் மெருகேற்றி தெளிவுடன் கவிதை இயற்றும் பாணருக்கு, உணவரங்கத்தின்‌ மதில் முழுதும் தொங்கவிடப்பட்ட பட்டுச் சால்வைகளை அள்ளிப் பரிசு கொடுப்பார்கள். அத்தகைய கவிதைப் போட்டியைத்தான் முஷாரா என்று அழைப்போம்.

அந்தப் பழக்கம் இந்தியாவில் இன்னும் உயிரோட்டமாக இருக்கிறது. ஆனால் இங்கிருக்கும் பாணர்கள் நரம்பு வாத்தியங்களோ, மேம்படுத்தப்பட்ட கவிதைகளோ இயற்றுவது இல்லை. முன்தயாரித்த கவிதைகளோடு அரங்கேறுகின்றனர்.

இந்நிகழ்வு பெரிய கூடாரத்தின் அடியில் நடைபெற்றதால், கூட்ட நெரிசலைச் சமாளிக்க பலரும் நின்றுகொண்டே பார்க்கும்படி இருந்தது. உட்காருவதற்குப் போதிய‌ இட வசதி இல்லை. கதவையொட்டி சிகப்பு நிற‌ பட்டுத்துணியால் அலங்கரித்த சோஃபா இருந்தது. அதில் தங்கநிற ஜரிகையால் பூவேலைப்பாடுகள் நிறைந்திருந்தது. அதன் முன் ஹூக்கா வைத்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியைத் தலைமைத் தாங்கி வழிநடத்தும் ஹைதராபாத்தின் முதன்மை மந்திரி ஓர் இந்துவாக இருந்தாலும், அவரே ஓர் உருது மொழி கவிஞராகவும் திகழ்ந்தார். உள்நாட்டு ஆடையில், வசீகரமான முதும் கனவானாக சோஃபாமீது கம்பீரமாக உட்கார்ந்து ஹூக்கா புகைத்துக் கொண்டிருந்தார். சோஃபாவுக்கு முந்தி பாணர்கள் வரிசையாக உட்கார்ந்து, ஒவ்வொருவராய் அவர்முன் சென்று கவிதை பாடினர்.

பழங்கால உருது பாடல்களில் இருந்து விழா தொடங்கியது. ஜால்ரா கலவையுடன் திரும்பத் திரும்ப அதே வரிகளை மெட்டில் அமைத்துப் பாடினர். பார்வையாளர்கள் குறிப்பிட்ட வரியை இடைமறித்து குரல் உயர்த்தினால், பாணர் அவர்களை நோக்கி சலாமிட்டு மீண்டும் அதே வரியைப் பாடுகிறார். சில நேரங்களில் ஒருசில வரியைப் பாடிவிட்டு சுற்றும்முற்றும் பார்த்து அமைதியாக எதையோ எதிர்பார்க்கிறார். அவ்விடம் கொண்டாடப்பட வேண்டுமென்று அவர் கருதுவதாய் நான் நினைக்கிறேன். பார்வையாளர்கள் மகிழ்ச்சியோடு ஆமோதித்தவுடன், மீண்டும் சலாம் செய்துவிட்டு பாடத் தொடங்குகிறார் பாணர். இந்தப் பழக்கவழக்கங்கள் எல்லாம் பாரசீக மரபில் இருந்து வந்தவை எனத் தெளிவாகத் தெரிகிறது. பழங்கால துருக்கியின் திவான்களை (பழம்பெரும் துருக்கிய புலவர்களின் பாடல் தொகுப்பு) எனக்கு இது நினைவூட்டுகிறது . . . . விடியல் காற்று, எரியும் சூரியன், இராப்பாடி, ரோஜாப்பூ, மது, மதுக்கிண்ணம் பறிமாறுபவர் . . . என்று எல்லாம் அங்கிருந்து வந்தவை.

நவீன கால பாணர்கள் பாடத் தொடங்கிய பிறகு, எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. பாரசீக பழக்க வழக்கங்களுக்கு முடக்கு போட்டுவிட்டு, புதுவிதமான தொனியைப் பின்பற்றுகின்றனர் என வெளிப்படையாகத் தெரிந்தது. எனக்குப் புரிந்தவை குறைவு என்றாலும், பரிட்சயமாக இருந்தது. இதுதான் நவீன கீழைத்தேய இசை. பார்வையாளர்கள் இடையே இதற்கும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. நாங்கள் கூடாரத்தை விட்டு வெளியே வந்தபோது நடுராத்திரி இருக்கும். ஆனாலும் அங்கிருந்த பெருவாரியான புலவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கண்கொட்டாமல் விழித்திருந்தனர். ஆக ஹைதராபாத் பற்றிய என் இறுதி நினைவுகள், நம் எல்லோருக்கும் பொதுவான அதன் மிகச் சமீபத்திய வரலாற்றின் பிரதிபலிப்பாய் என் மனத்தில் தங்கியது.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *