Skip to content
Home » நான் கண்ட இந்தியா #39 – ஒற்றைப் பானைக் கலாசாரத்தில் இந்துத்துவம்

நான் கண்ட இந்தியா #39 – ஒற்றைப் பானைக் கலாசாரத்தில் இந்துத்துவம்

நான் கண்ட இந்தியா

ஒவ்வொரு மனிதச் சமூகமும் பல்வேறு மனித இனங்களின் கூட்டுக் கலவையாகி, ஒற்றைப் பானைக் கலாசாரம் போல் இருந்து வருகிறது. அந்தப் பானைக்குள் எவரவர் எத்தனை விகிதம் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும் அளவிடவும் எளிதில் முடியும். ஆனால் அவர்கள் வாழும் வாழ்க்கையைக் கணக்கிட முடியாது. இது எவரால், எப்படிக் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதுகூட யாருக்கும் தெரியாது. ஒருங்கிணையும் உச்சப் புள்ளியில், அதன் தீவிரத்தன்மை அதிகரிப்பதைக் கொண்டுதான் பானையின் கொள்பொருளை நாம் கண்முன் காண்கிறோம்.

கீழைத்தேயத்தில் பல பகுதிகள் இந்த உச்சப் புள்ளியைத் தொட்டிருக்கின்றன. எவராலும் கணிக்க முடியாத ஒரு பெரும் நிகழ்வு எதிர் நிகழக் காத்திருக்கிறது. பானையின் உள்ளடக்கங்கள் பற்றி வரலாற்று மாணவர் உத்தேசமாகக் கணிக்கலாம். ஆனால் அவை ஒன்றிணையும் உச்சக் கட்டத்திற்குப் பிறகு, என்னவாகும் என்பதை எவராலும் சொல்ல முடியாது. புறவயக் காரணிகளைத் தாண்டி, ஒவ்வொரு மனிதரின் கணிக்க முடியாத அபிப்பிராயங்களும் அவர்தம் பண்புகளும் இறுதிநேர ஆட்டத்தைத் திசைமாற்றும்.

வரலாறு என்பது வெற்று அறிவியல் புலமாக இருக்க வேண்டும் என்பவர்கள், அதில் தனிமனித அபிப்பிராயங்களை வெறுக்கின்றனர். ஹென்றி ஆடம்ஸ் என்பவர், கணிதத்தில் மாறாத்தன்மை உடைய x, y, z போன்றுதான் வரலாற்றின் பெருவெளியில் சூழ்நிலையின் குறியீடாக ஆளுமைகள் குறிக்கப்படுவதாகச் சொல்கிறார். மறுமுனையில் வரலாறு‌ என்பது தனிமனித ஆளுமையின் அசாத்திய செயல்களால் ஈடேறும் சம்பவம் என்று கருதும் சிலர் உண்டு. ஆனால் ஆளுமை உருவாகிய அடிப்படை காரணங்களைக் குறைத்தும் மறுத்தும் அவர்கள் வரலாற்றை உள்வாங்குகின்றனர்.

எந்தச் சிந்தனைப் பள்ளியும் நான் சொன்ன இறுதி வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அறிவார்ந்த வரலாற்று மாணவர் இரண்டுக்கும் மத்தியில் ஒரு முடிபை மேற்கோள்ள வேண்டும். அதாவாது ஒரு தேசத்தின் குறிப்பிட்ட காலத்தைச் சார்ந்த மிகச் சில ஆளுமைகளை மட்டும் தன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, ஓர் ஓவியரைப் போல் நிறங்களையும் வடிவங்களையும் பயன்படுத்தி தன் யோசனையை அவர் வெளிப்படுத்துகிறார். வரலாற்று ஆளுமைகள் சமீப நிகழ்வுகளால் உந்தப்பட்டு, அடையாளம் தெரியாத சமூகக் காரணிகளால் உலகறியப்பட்டாலும், வரலாற்றின் போக்கையே மாற்றியமைக்கும் ஆற்றல் அவர்களிடம்தான் உண்டு என்பதை இவர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

தற்காலத்தில் சக்தி வாய்ந்த மிகப் பல மனிதர்கள் பூமியில் உள்ளனர். வரலாறு என்பது இவர்கள் சாதனையென்றுதான் இத்தகைய வரலாற்று மாணவர் கருதுகிறார். சமூகத்தின் இயங்கு விதி பற்றி இவர்களுக்கு அக்கறை கிடையாது. இதிலிருந்து தப்பிக்க, தான் ஆய்வு மேற்கொள்ளும் குறிப்பிட்ட நாட்டின் கடந்தகால வரலாற்றில் அம்மாணவர் ஆழங்கால் பட வேண்டும். வரலாற்றைப் புரட்டிப் போட்டதாய் தாம் எண்ணி வந்த மனிதர் மாய்ந்த பிறகும், அவர் கிளர்ச்சி அடைந்த காரணம் இன்னும்‌ உரமாய் இருப்பதை இவர் உணர வேண்டும்.

இயல்புப் போக்கைச் சீர்குலைத்து அசாதாரண மாற்றங்கள் கொண்டுவரும் தலைவராகினும், அவர் மறைவுக்குப் பிறகு அவர் உண்டாக்கிய மாற்றங்கள் மங்கத் தொடங்கும். அவர் காலத்துக்கு முந்தி இருந்த இயல்பான சமூக நிலை மீண்டும் உதிக்கும். இதற்கு எந்த நாடும் விதிவிலக்கல்ல. சமூகத்தை இயங்குவதே இத்தகு மாயவிசைதான். ஒரு நாட்டின் ஒட்டுமொத்த மக்களைப் புரிந்துகொள்வதில் மட்டுமே, அவ்வாராய்ச்சி முற்றுப்பெறும் என‌க் கருதுகிறேன்.

மூன்றாவதாக, இந்தியாவில் இயங்கும் பண்டைக்கால வரலாற்று விசைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனக் கருதுகிறேன். அதிலும் இந்துக்கள் விஷயத்தில் இஸ்லாமியர்கள் அல்லது ஆங்கிலேயர்கள் போலல்லாமல், சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் நிகழ்கால இந்து சமூகத்தில் வழக்கத்தை மீறிய பல ஆளுமைகளும் அவர்தம் முக்கியக் கூறுகளும் இயக்கத்தில் உள்ளதை நாம் அறிகிறோம்.

மகாத்மா காந்தி இவர்களுள் முதன்மையிடம் வகிக்கிறார். இந்திய அளவில் மட்டுமில்லாது, உலக அளவில் அவருக்கு ஒரு தனித்துவமான சிறப்பியல்பு உண்டு. நிச்சயமாக இந்தப் பெரும் மனிதரின் இருப்பு அவரின் செயற்பாடுகள் வழியாகவும், அவரின் எண்ணவோட்டங்கள் வழியாகவும் இந்திய வரலாற்றை அணுகவேண்டும் என்று ஆய்வு செய்யும் மாணவருக்கு உந்துதல் கொடுக்கும். ஆனால் இத்தகைய பக்கச் சார்புப் பார்வைகளுக்கு ஆட்படாமல், இந்தியா பற்றிய நடுநிலை முடிவுகளை எட்டுவதற்கும், இந்து சமூகத்தின் நவீன நிலை குறித்த சித்திரத்தை உள்வாங்குவதற்கும் எத்தகைய உந்துதலுக்கும் ஆட்படாமலிருக்க, ஓர் எழுத்தாளராய் நான் சில விஷேச முயற்சிகளைக் கைக்கொள்ள வேண்டும்.

இந்துத்துவம் என்றால் என்ன?

என்னைப் பொறுத்தவரை இந்துத்துவம் என்பது அருவமான ஒரு பிரம்மாண்டமான விசை. தன் ராட்சசக் கால்படும் இடமெல்லாம், அப்பொருளை இந்துத்துவ விசைக்குள் கொண்டு வரும் ஆற்றல் அதற்குண்டு. தன்னளவில் அதற்கொரு வடிவம் இல்லையென்றாலும், இந்துத்துவச் செல்வாக்கில் உட்செரிக்கும் எதையும் தன் அடையாளத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும். இந்துத்துவம் பற்றித் தெளிவற்ற கருத்துகள் தோன்றுவதற்கு இதுவே தோற்றுவாய் என்றறிக. எனினும் இவர்கள் விடாப்பிடியான ஒழுக்கங்களைப் பின்பற்றுகின்றனர். இந்துக்களின் வாழ்க்கை வரையறுக்கப்பட்டாலும், வேறெந்த மனிதச் சமூகத்தைக் காட்டிலும் தற்சார்பு சிந்தனையில் மேம்பட்டவராய் உள்ளனர்.

இந்துச் சமூகத்தில் இருவேறான மனிதர்களை நீங்கள் காணலாம். தன் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்போக்கான கடவுள் நம்பிக்கை உடையவரும், முற்காலத்திய மனிதரைப் போல் மிக அடிப்படையான கடவுள் கொள்கை உடையவரும் இதில் உண்டு. இருவரும் மனதால் வெவ்வேறு நிலைகளில் இருந்தாலும், இந்துத்துவம் வரையறுத்துள்ள சாதி சமயக் கோட்பாடுகளை எள்ளளவும் மாறாமல் ஒன்றுபோல் பின்பற்றுகின்றனர்.

இந்துத்துவத்தின் மாறாத் தன்மை உடைய பண்டைய மரபுகளை மாற்றி அமைப்பதில் அநேக நெகிழ்வுத்தன்மைகள் உண்டு. புதுப்புது கருத்துகளை உள்வாங்கிக் கொண்ட பின்னும், தன் அடிப்படைச் சித்தாந்தத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டுள்ளது. ஒருவேளை புதிதாக ஒரு சமயம் உதித்தாலோ, புதிதாக ஒரு கடவுள் தோன்றினாலோ, இந்து சமயம் அவர்களுக்கு என்று ஒரு தனியிடம் ஒதுக்கி அப்படியே சுவீகரித்துக் கொள்ளும்.

சமயம் சார்ந்து மட்டும் அல்ல, சமூகத்திலோ பொருளாதாரத்திலோ கூட புது விதிகள் தோன்றினால், தன் இயங்குதன்மைப் பாதிக்காமல் இந்துத்துவம் அப்படியே உள்வாங்கிக் கொள்ளும். பௌத்த சமயத்திற்கு என்ன நேர்ந்தது என்பது இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. பௌத்தம் இந்தியாவில் உதித்த சமயம் ஆனாலும், அதன் சில பிரத்தியேக மரபுகளை இந்துத்துவம் உள்வாங்கிக் கொண்டு, எஞ்சியவற்றைத் தனி மரபாக விட்டுவிட்டது.

அதன்பிறகு பௌத்த மதத்தால் ஒருபோதும் இந்துத்துவம் பாதிப்படையவில்லை. இவ்விருவருக்கும் இடையிலான முரண்பாடு மிகவும் சுவையானது. இந்துத்துவம் பற்றி மேலதிகப் புரிதல் ஏற்பட வேண்டுமானால், நாம் இந்த முரண்பாட்டில் இருந்து தொடங்கலாம். சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் எளிமையான கொள்கைகளை பௌத்த சமயம் வலியுறுத்தியது.

ஆனால் சாதி முறையைப் பாதிக்கும் எத்தகைய அம்சத்தையும் இந்துத்துவம் ஏற்கவில்லை. பௌத்தத்தில் சாதி முறை கிடையாது. ஆனால் தொழில் அடிப்படையிலான பிரிவுகள் உண்டு. பொருளாதார ரீதியான சமூகப் பிரிவுகளே, சமூகத்தின் அடிப்படையாக இருக்கும் என்பதை பௌத்தம் ஏற்றுக்கொண்டது. ஏற்கெனவே கிடப்பில் இருந்த சாதிப் பிரிவினைக்குள் தொழில் பிரிவுகளையும் ஒன்றிணைத்து பௌத்தத்தின் பொருளாதாரப் பிரிவுகளைச் சுவீகரித்ததோடல்லாமல் தன் சாதி முறைக்கும் பங்கம் ஏற்படாமல் இந்துமதம் பார்த்துக் கொண்டது.

இஸ்லாத்தின் கதை வேறு மாதிரியானது. இந்துத்துவத்தின் ராட்சசக் கால்கள், இஸ்லாமியக் கொள்கைகளைச் சுவீகரிக்க எண்ணி கிளை பரப்பியபோது அதன் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அல்லாவும் முகமுதும் இந்துத்துவ வட்டத்திற்கு துளியும் ஒத்துப் போகவில்லை. கூடவே இஸ்லாத்தின் பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகள் எவ்விதத்திலும் பிரிவினையை ஊக்குவிக்கவில்லை.

இஸ்லாத்தின் ஒரு பகுதி நம்பிக்கை, அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கத் தகுந்தவாறு மக்களுக்கு பொறுத்தமானதாய் இருக்க வேண்டும் என்பதில் இஸ்லாமியர்கள் தீர்க்கமாய் இருந்தனர். எனவே இஸ்லாமியரின் வருகைக்குப் பிறகு, இந்துத்துவத்தில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. சீக்கிய மதம் இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு. எங்கெல்லாம் இஸ்லாத்தால் இந்து மதத்தை மாற்றியமைக்க இயலவில்லையோ, அங்கெல்லாம் சோர்ந்து போகாமல் அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்திய மண்ணில் தன் அடையாளங்களைத் துறக்காமல், இஸ்லாமியம்‌ தன் பெயரை ஆழமாகப் பதிவு செய்தது. இஸ்லாமும் இந்துத்துவமும் இந்திய நாட்டிற்குள்ளேயே தனித்தனியாக ஆளுமை செலுத்தத் தொடங்கின.

முதல்முறையாகத் தன்னால் முழுமையாய் உள்வாங்கவோ அல்லது முற்றிலும் நிராகரிக்கவோ முடியாத அந்நிய ஆற்றலை இந்துமதம் எதிர்கொண்டது. இந்துத்துவத்தில் இது ஒரு முக்கியக் கட்டம். முற்றிலும் மாறுபாடான ஒரு சமயத்தின் அருகாமையில் தான் எங்ஙனம் உய்வது என்ற சிந்தனையைச் செலுத்தியதன்பால், இந்து சமயத்தில் இஸ்லாமியம் ஒரு அளவிடற்கரிய மாற்றத்தை உண்டாக்கியது.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
இஸ்க்ரா

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *