கிறிஸ்தவமும் மேற்கத்திய கலாசாரங்களும் தங்கள் பங்குக்கு இந்து மதத்தைத் தகர்க்கும் செயல்களில் ஈடுபட்டன. அதனால் இந்துத்துவத்தின் குழப்பம் இருமடங்கு அதிகரித்தது. இதுவரை உட்புறக் குழப்பங்களுக்கு மட்டுமே செவிசாய்த்து வந்த மதம், இனி புறவயச் சூழலுக்கும் அதன் மாற்றங்களுக்கும் பதில் கூற வேண்டும்.
இஸ்லாமியத் தொடர்பினால் இந்து சமயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் ஒட்டு உடைசல்கள் விரிசலடையத் தொடங்கின. 19ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்து மதத்தில் ஏற்பட்ட சமூக மற்றும் சமயச் சீர்த்திருத்தங்கள் எல்லாம், அம்மாற்றங்களை நேரடியாக ஒப்புக்கொள்ள இயலாமல் மறைமுகமாகச் சமயத்தில் உட்செரிக்கும் போக்காக அமைந்தன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
மேற்சொன்ன செயல்பாடுகளால் இடைவெளி குறையும் என்று ஊகிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக அதிகரித்தது. இந்து சமயத்தின் வெவ்வெறு பிரிவினருக்கு இடையிலான வேற்றுமைகள் அதிகரிக்கத் தொடங்கின. தொடர்பு கொள்ள முடியாத தனித்தனி தீவு போல் பிரிந்தனர்.
இவ்வேளையில் மேற்குலகின் அரசியல் கோட்பாடுகள் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தின்மூலம் மெல்ல கசிந்து, தேசியம் என்றொரு கருத்துப்படிவத்தை மனத்தில் பதித்தது. மக்களிடையே இவ்வாறான அரசியல் எழுச்சி உருவானதற்கு மிக நுண்ணிய முதல் சான்று, இந்திய தேசிய காங்கிரஸின் தோற்றம் எனச் சொல்லலாம். இவ்வமைப்பில் பல போதாமைகள் இருந்தாலும், முதன்முதலாக இந்தியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நோக்கோடு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தகுந்த விஷயம். சுதந்திர இந்தியாவின் வளமும், அதன் 300 மில்லியன் ஜீவராசிகளும் உலக அரசியலைத் தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிப்பர் என்பதில் குழப்பம் இல்லை.
இந்திய காங்கிரஸின் உருவாக்கத்தில் தாராளவாத மற்றும் புரட்சிகர எண்ணம் கொண்ட ஆலன் ஆக்டேவியன் ஹியூமின் பங்கு அளவிடற்கரியது. பொருளாதாரப் பிரச்சினைகளை ‘பேஃஸ் பிரிட்டானிகா’ சரிசெய்ய தவறிவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார். ஆகையால் விவசாயிகள் ஆதரவற்றுக் கிடந்தனர். ஆட்சியதிகாரத்தில் இந்தியர்களுக்கு இடம் வழங்கப்படாது போனால், தங்கள் கஷ்டங்களை சொல்லித் தீர்க்கவும், அதற்கு விடைகாணவும் வழியில்லை என்று அவர் யோசித்தார்.
இதேபோன்ற எண்ண அலையில் உள்ள நபர்களை ஒருங்கிணைப்பதே காங்கிரஸின் முதல் வேலையென்று தீர்மானித்தார். பின் அவர்களை வைத்து நாட்டின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வேலைகளையும் அதற்குண்டான காரியங்களையும் செயல்படுத்த விழைந்தார். 1885ஆம் ஆண்டு பம்பாய் மாகாணத்தில் காங்கிரஸின் முதல் கூட்டம் நிகழ்ந்தது.
அதில் சில வக்கீல்களும் பள்ளி ஆசிரியர்களும் இதழ் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். இந்திய மக்கள் பெருவாரியாக ஆட்சிப் பணியிலும் ராணுவச் சேவையிலும் பங்காற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். முதல் காங்கிரஸ் மாநாட்டை, பிரதிநிதித்துவம் பொருந்திய கூட்டம் என்று சொல்ல முடியாது. ஆனால் மூன்றாண்டுகளில் அதன் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்தது. பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பிரதிநிதியாகக் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் அமைப்பு உதிரியான கூட்டம் என்று தொடக்கத்தில் சில விமரிசனங்கள் எழுந்தன. இது முழுக்க, முழுக்க நடுத்தர மக்களின் மனப்பான்மை சார்ந்து இயங்குகிறது என்றும் பொதுத் திரளான மக்களோடு அதற்குத் தொடர்பில்லை என்றும் சொன்னார்கள். வேலை தேடுவதில் உள்ள சிரமங்களையும் இதனோடு சேர்த்துப் பேசினர். இவையெல்லாம் உண்மைதான். ஆனால் இதற்கு மற்றுமொரு பரிமாணம் உண்டு.
இந்த இருபது ஆண்டுகளில், இந்திய ஆட்சி நிர்வாகத்தில் உள்நாட்டு மக்களின் பங்கு கணிசமாக உயர்ந்துகொண்டிருக்கிறது. இதனால் இந்தியர்களில் குறிப்பிட்ட வகுப்பினருக்குச் சாதகமான சில சட்டத் திட்டங்களை வரையறுத்து அமலாக்கம் செய்யும்படி இந்திய அரசாங்கத்தை இவர்களால் நிர்பந்திக்க முடிகிறது. அந்நிய ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை, இந்தியா என்பது மகாராணியின் கிரீடத்தை அணிசெய்யும் வெற்று ரத்தினம். ஆனால் ஒரு தேசமாக இதன் சில வகுப்பினரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயங்கள் உண்டு. இந்திய மக்கட் திரளைப் பொறுத்தவரை, தேசிய எழுச்சியின் முதல் சமிக்ஞை இது. பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் முதல் மைல்கல்லாகவும் நாம் இதைப் பார்க்கவேண்டும்.
பல சட்டங்கள் இயற்றப்பட்டாலும் 1885ஆம் ஆண்டிலிருந்து பொருளாதாரப் பிரச்சனைக்கான மாற்று வழியோ, சமூக முரண்களைத் தீர்க்கும் யோசனையோ இதுவரை கிடைத்தபாடில்லை. காங்கிரஸ் அமைப்பினர் இதுபற்றிய உரையாடல் மேற்கோண்டு, தம் கருத்தை ஊடகத்தின்பால் பரவலாக்கம் செய்தனர். தேசப்பற்றுள்ள சில முக்கிய நபர்கள் இதன் உறுப்பினராக இருந்தனர். இதுபோன்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட சிலருக்கு, உண்மையிலேயே மக்களின் தேவை என்னவென்று தெரிந்திருந்தது.
காங்கிரஸ் அமைப்பின் அரசியல் லட்சியங்கள் பின்வருமாறு:
(1) பிரிட்டன் ராஜ்ஜியத்தில் இருந்து பெயர்ந்து போகாமல், அரசியல்பூர்வமான சுய ஆட்சி நிர்ணயம் வேண்டுவது.
(2) மேற்கத்திய பாணியிலான அரசாங்க அமைப்பை நிறுவுவது.
இத்தனைக்கும் மேனாட்டு அரசாங்கங்களின் இயங்குமுறை பற்றி இவர்கள் ஏதும் அறிந்திலர். இந்திய நாட்டில் பூர்வாங்கமாக செயல்பட்டு வரும் உள்ளூர் அரசாங்கத்தை எங்ஙனம் மேன்மைப்படுத்தப் போகிறோம் என்ற தெளிவும் இவர்களுக்குக் கிடையாது.
சிலநேரங்களில் இந்தக் கொள்கைக்கு ஒவ்வாதபடி புரட்சிகர யோசனைகளைக் கடைபிடிப்பார்கள். காலத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப அவை மாறுபடும். ஆனால் எல்லா வேளையிலும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு இயங்குவதே பெரும்போக்காக இருந்துள்ளளது. கிளைவிடும் புரட்சிகர எண்ணங்கள் எல்லாம் குறிப்பாக வங்கத்தைச் சார்ந்த இந்துக்களிடம் மையம் கொண்டவையாக இருக்கின்றன. காங்கிரஸின் தொடக்கக் காலக்கட்டத்தில் இந்துக்களே பெரும்பான்மையினராக இருந்தனர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்தப் புரட்சிகர யோசனைகள் எல்லாம் ஒன்றுபோல் இல்லை. தமக்குள் பல வித்தியாசங்கள் கொண்டுள்ளன. அதில் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.
1) இங்கிலாந்து ராஜ்ஜியத்தில் இருந்து பிரிந்தோ பிரியாமலோ, சட்டப்பூர்வ அங்கீகாரம் அல்லது புரட்சிகர வன்முறை வழியில் இந்தியாவிற்கு சுயராஜ்ய அந்தஸ்து பெறுதல்.
2) இந்தியர்களுக்கு இடையே உள்ள அனைத்துவகைப் பிரிவினைகளையும் உடைத்து ஓர் ஒருங்கிணைந்த தேசமாக வளர்த்தெடுத்தல்.
3) இந்து மதத்தை மேலும் வலுப்படுத்தி, இஸ்லாமியம் முதலான அந்நிய மதங்களை வெளியேற்றுதல்.
இதில் மூன்றாவதாகக் குறிப்பிட்டுள்ளது, சில நேரங்களில் பழமை நோக்கிய நகர்வாகத் தெரிந்தாலும், புரட்சிகரப் பணி எனச் சொல்லும் அளவுக்கு உக்கிரமாகவும் ஆக்ரோஷத்துடனும் செயல்படுத்தப்பட்டது.
(முதல்) உலகப்போர் நிகழ்வதற்கு முன்புவரை, காங்கிரஸ் கட்சியில் இந்து மதத்தினர்தான் பெரும்பான்மையினராக அங்கம் வகித்தனர். அதற்குப்பின் வருடாவருடம் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போனது. இவர்களின் நேரடித் தாக்கம் பற்றி பின்னர் பேசுவோம்.
சட்டப் பின்னணி சார்ந்த முக்கிய நபர்களில் குறிப்பிடத்தகுந்த ஓர் இந்து மதத்தவர் இருந்தார். ஃபெர்குசன் கல்லூரி மற்றும் இந்தியச் சேவகர்கள் அமைப்பு அவரால் உருபெற்றவை. அவர் பெயர் கோகலே. மேற்கத்திய தாக்கத்திற்கு ஆட்பட்டு, நீதித்துறை பின்புலத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கு இந்தியா பற்றி எந்தவொரு புரிதலும் இருக்காது. அத்துடன் வேலை வேண்டும் எனும் வெற்றுக் கூச்சலைத்தான் எழுப்பிக் கொண்டிருப்பார்கள். கோகலே இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம், மேற்குலக ஜனநாயகத்தின் நகலாக அமையவேண்டும் என்று குரல் கொடுத்த காங்கிரஸின் குறிப்பிடத்தகுந்த ஆளுமைகளுள் இவரே இறுதியானவர். பிரிட்டன் நாட்டினரோடு இணக்கமான உறவைக் கைக்கொள்வதன் மூலம், நாம் அந்த உதவியைப் பெறலாம் என்றார். அத்தோடு இந்தியாவின் இந்து சமய கட்டுமானங்களைச் சேதப்படுத்தாமல், இந்திய ஒன்றியத்தை வென்றெடுக்க வேண்டும் என்பது அவர் அவா. மகாத்மா காந்தியின் ஆதர்சம் கோகலே என்பதைத் தெரிந்துகொண்டால், அவருடைய முக்கியத்துவம் மேலும் கூடும்.
இவர்களைப் போன்ற சில மனிதர்கள், விருப்பு வெறுப்புடன் பிரிட்டன் உதவியால் மேற்கத்திய அரசியலமைப்புச் சட்டத்தை நிறுவும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கையில், வேறு சிலர் இன்னும் வேறுமாதிரியான வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஜப்பானியர்கள் ஈன்ற வெற்றி, தம் சொந்த நாட்டுப் பொருளாதாரக் கொள்கைகளோடு பூர்ண சுதந்திரம் நோக்கி நடைபோட அவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. ரஷ்யப் புரட்சியின் காரணமாக பிரிட்டன், காலனித்துவம் மற்றும் முதலாளித்துவத்துக்கு எதிரான அலை பீறிட்டு கிளம்பியுள்ளது. மக்களுக்கு ஆதரவான கிளர்ச்சி ஏற்பட, இவை பெருந்துணையாக விளங்குகின்றன.
உலகெங்கும் இத்தகைய போராட்டங்கள் நிகழ்ந்துகொண்டிருக்க, மகாத்மா காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினர், பிரிட்டனுக்கு எதிராக ஒரு தனித்துவ முறையில் போராட்டத்தை கையிலெடுத்தனர்.
மகாத்மா காந்தியின் செயல்பாடுகளுள் சில இந்து மதத்தின் நீட்சியாகவும், அதிலிருந்து திரிபு வேறுபட்டும் திகழ்கின்றன. அவை வெறும் அரசியல் தளத்தில் மட்டுமோ, இந்து மதத்தின் மீது மட்டுமோ தாக்கம் உண்டாக்காமல் பரந்த அளவில் இந்தியர்களையும் இந்தியாவிற்கு அப்பாற்பட்ட வெளியுலகத்தையும் பாதிக்கும் இயல்புடையன. எனவே நாம் இதைப் பற்றி தனியே பேசிய வேண்டிய தேவையுள்ளது.
(தொடரும்)
__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.