Skip to content
Home » நான் கண்ட இந்தியா #41 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 1

நான் கண்ட இந்தியா #41 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 1

நான் கண்ட இந்தியா

கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல், இந்திய தேசத்தில் மகாத்மா காந்தியின் வலிமையான தாக்கத்தை உணர்ந்துகொள்ள வேண்டுமானால், அவரின் தனிப்பட்ட வாழ்வின் சில ஆணித்தரமான பக்கங்களை அலசி ஆராய்வது அவசியம்.

காந்தியின் குழந்தைப் பிராயத்தில் இருந்து நாம் இந்த ஆராய்ச்சியைத் தொடங்குவோம். காந்தி வம்சாவளியினர் பனியா சாதிப் பிரிவைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். இவரின் மூதாதையரில் ஒருவர் மளிகை வியாபாரம் செய்திருக்கிறார். ஆனால் காந்திக்கு முந்தைய மூன்றாம் தலைமுறையில் இருந்து, அவர் குடும்பத்தினர் சொந்த மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

காந்தியின் தந்தையார் கபா காந்தி, போர்பந்தரின் முதன்மை மந்திரியாகவும் ராஜஸ்தானிக மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். சமஸ்தானத்திற்கு உட்பட்ட இனக்குழுக்களுக்கும் சமஸ்தானாதிபதிக்கும் இடையிலான முரண்பாடுகளை இம்மன்றத்தில் வைத்துதான் தீர்த்து வைப்பர். இப்போது இம்மன்றம் உயிர்ப்போடு இல்லை.

ஆக, பிறப்பிலேயே வணிகம் சார்ந்த அறிவு மகாத்மா காந்தியிடம் இயற்கையாகக் குடிகொண்டிருந்தது. இந்தியாவை ஆளும் வர்க்கத்தின் ஒருசிலரோடு தம் இளம் பிராயத்தை அவர் செலவு செய்திருந்ததால், நீதித்துறைச்‌ சார்ந்தும் மனித ஆற்றலைக் கையாளும் உத்திமுறை சார்ந்தும் அவருக்கு நல்ல அனுபவம் இருந்தது. போர்பந்தரில் 1869ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி பிறந்தார்.

தன் தந்தையாரிடம் இருந்து அவர் சுவீகரித்துக் கொண்ட சில பழக்கவழக்கங்கள், மனித ஆற்றலைக் கையாள்வதற்கும் விழாக்களை ஒருங்கிணைப்பதற்கும் பயன்பட்டால்கூட, தன் தாயாரிடம் இருந்து உள்வாங்கிய மனோபாவங்கள் தெய்வீகமான மாற்றத்தை அவருள் உண்டாக்கின. காந்தியின் தாயார், புனிதத்தன்மை வாய்ந்த சமயப் பற்றாளர். கார்காலப் பொழுதின் நான்கு மாதங்களிலும், பழங்கால இந்து சமய மரபுப்படி உண்ணாநோன்பு மேற்கொள்வார்.

கேட்பதற்கு அரிய வீர தீர சத்தியங்களை ஒப்புக்கொள்வதோடு அல்லாமல், இறுதிவரை வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நிறைவேற்றுவார். சூரிய உதயத்தைப் பார்க்கும்வரை, உணவு உட்கொள்ள மாட்டேன் என்று அவர் அடிக்கடி சபதம் எடுத்துக் கொள்வதுண்டு. அந்தக் காலத்தில் சூரிய உதயத்தைப் பார்த்துவரும்படி, தன் மகன்களைப் பணித்து விடுவது ஒரு வழக்கம். ஆனால் தாமே வெளியே வந்து சூரியனைப் பார்த்து உறுதி செய்யும்வரை, அவர் உணவு உண்ணமாட்டாராம். சில சமயங்களில் அப்போதுதான் சூரியன் மறைந்திருக்கும். ஆனால் கண்ணால் காணும் வரை காத்திருந்து, அதற்குப்பின் விரதத்தை முடித்துக் கொள்ளும் அளவுக்கு வைராக்கியம் உடையவராய் இருந்திருக்கிறார்.

தன் சமுதாய வழக்கப்படி காந்திக்கு 12 வயதில் திருமணம் ஆனது. ஒரு சராசரி இந்து கணவனைப் போலவே, தானும் நடந்துகொண்டார். 18 வயதுவரை, மகாத்மா காந்தியைப் பிற இந்து ஆண்மகன்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் யாதொரு தனித்தன்மையும் தோன்றவில்லை. சில சந்தர்ப்பங்களில் உணர்ச்சி வயப்படும் குணமும் கூச்ச சுபாவமும் சற்று அந்நியமாகத் தோன்றலாம்.

இந்து மதத்துடன் நேரடித் தொடர்புடையவராக இருந்ததால், அதன் மரபார்ந்த எல்லைகளை மீறுவதில் அவருக்கு அத்தனை உவப்பு இல்லை. தன் மதப் பழக்கத்திற்கு எதிராக, ஒருமுறை மாமிசம் உண்ணும் ஆசையில் சுவைத்துப் பார்த்துள்ளார். ஆனால் அதில் பிடிப்பு உண்டாகவில்லை போலும். இரவெல்லாம் வயிற்றுக்குள் ஆட்டுக்கிடா கத்துவது போன்ற சத்தம் கேட்டதாக வேடிக்கையாய்ப் பதிவு செய்துள்ளார்.

மிகுந்த நேர்மையுடன், சுய பகுப்பாய்வுக்கு உட்படுத்தித் தன்னைப் பற்றி அநேகம் சிந்திக்கும் மனிதராக மட்டுமல்லாமல், சட்டத் திட்டங்களுக்கு கட்டுப்பட்டு எது சரி, எது தவறு என்று அறிந்து செயலாற்றும் மனிதராகவும் அச்சமயம் அவர் வளர்ந்திருந்தார்.

தந்தையாரின் மரணத்துக்குப் பிறகு, காந்தியின் சகோதரர் தன் பிராமண நண்பரின் அறிவுரைப்படி, சட்டம் பயில்வதற்காக காந்தியை லண்டன் அனுப்பிவைத்தார். மத உபச்சார விதிகளில் இருந்து தன் மகன் தடம் புரண்டு விடுவானோ என்று காந்தியின் தாயார் வருந்தினார். அவரைச் சமாதானப்படுத்தும் முகமாக மது, மாமிசம் போன்றவற்றைத் தொடமாட்டேன் என்றும், பெண்களோடு உடலுறவு வைத்துக்கொள்ள மாட்டேன் என்றும் வாக்குறுதி அளித்து விடைபெற்றார். தன் அம்மாவைப் போலவே மிகுந்த கடப்பாட்டுடன் இவ்வுறுதியைக் காப்பாற்றினார். சுருங்கச் சொன்னால், தான் ஒரு கலாசார இந்துவாகவே கடைசிவரை இருப்பேன் என்றதோடு, அங்ஙனமே விடாப்பிடியாக இருந்தார்.

இரண்டாம் அத்தியாயம் இங்கிலாந்தில் தொடங்கியது. புறவயமாகப் பார்த்தால் இன்னும் அவர் ஆச்சார குணங்கள் உடைய, நேர்மையான, தீவிர இந்து மதப் பற்றாளர் போலத் தோன்றினார். இளமையில் தான் செய்த தவறுகளை, மீள இரட்டிக்காமல் திருத்திக் கொள்ள முயன்றார். அவரின் பொருளாதாரச் சிக்கனமும் வேடிக்கை நிறைந்த குணமும் இதற்குத் துணையாக இருந்தன. பல நாட்களாக தன்னுள் சேகரமான ஐயங்களை, முதன்முறையாக இங்கிலாந்து மண்ணில் இருந்துதான் கேள்வி கேட்கத் தொடங்கினார். உணவுப் பழக்கத்தையும் மத அபிப்பிராயத்தையும் தன்னுடைய இருபெரும் முக்கியக் கருத்தாக்கமாகக் கொண்டார்.

சைவ உணவகத்துக்குச் சென்று, அங்கு உணவருந்த வரும் குறிப்பிடத்தகுந்த ஆங்கிலேயர்களிடம் சைவ உணவுமுறையின் நன்மைகளை எடுத்துச் சொன்னார். ஒருவரின் தேக ஆரோக்கியத்திலும் குணநலனிலும் சைவ உணவுப் பழக்கம் எம்மாதிரியான தாக்கத்தை உண்டாக்குகிறது என்று அவர்கள் வாயிலாக ஆராயத் தொடங்கினார். அப்போதிலிருந்து சைவ உணவுப் பழக்கம், எவ்வகையிலும் மதரீதியான கடப்பாட்டு ஒழுக்கம் என்றில்லை என காந்தி அவரளவில் முடிவு செய்தார். வாழ்வின் சுதந்திரமான பழக்க வழக்கங்களில் இதுவும் ஒன்று என அறிவித்தார். இதை அவர் அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகள் மூலம் உறுதி செய்தார்.

தனிப்பட்ட முறையிலும் நண்பர்களோடும் அவர் பல சைவ உணவு முறைகளைப் பரிசோதித்தார். அச்சோதனைகள் மதரீதியாக மட்டுமல்லாமல், அறிவியல் பூர்வமாக இருக்கவும் அதிகம் மெனக்கெட்டார். சைவப் பழக்கம் ஆரோக்கியமான நெறிமுறை என்பது மட்டும் கருத்தல்ல, விலங்குச் சங்கிலியில் உச்சத்தில் இருக்கும் மனிதன் மற்ற உயிரினங்களைப் பாதுகாப்பது ஒழுக்க ரீதியிலான அறம் என்றும் அவர் நம்பினார். சைவப் பழக்கம் உடையவர்கள்தான் முரட்டுத்தனம் இல்லாமல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி கொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள் என்பது அவர் கணிப்பு.

தனது கிறிஸ்தவ நண்பர்கள் மூலம், காந்திக்கு மேற்கத்திய தத்துவங்களும் சமயங்களும் பழக்கமாகின. வாழ்க்கை பற்றிய பொது பரிமாணத்தைக் கட்டியெழுப்ப ரஸ்கினும் டால்ஸ்டாயும் அவருக்குப் பேருதவியாக இருந்தனர். டால்ஸ்டாயின் தாக்கத்தால் பின்னாளில் தனியொரு பள்ளிக்கூடமே நிறுவினார், காந்தி. கிறிஸ்தவ மத நூலைச் சிரத்தையோடு படித்தார். இயேசுவின் மலை பிரசங்கத்தால் ஆழமாகக் கவர்ந்திழுக்கப்பட்டார்.

எட்வின் அர்னால்ட் ‘சாங் செலஸ்டியல்’ எனும் பெயரில் பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதை வாசித்த பிறகு, இந்து சமய நூல்கள் பற்றி அவருக்கு மேலான சிந்தனைகள் உதித்தன. அதன்பிறகு பகவத் கீதையின் அணுக்க வாசகர் ஆகி, அதன் தத்துவங்களை நிஜ வாழ்விலும் பின்பற்றத் தொடங்கினார். தன் ஒவ்வொரு நடவடிக்கையும் நம்பிக்கையும் பகவத் கீதையில் இருந்து உருவானதென்று காந்தி விளக்கம் கொடுக்கிறார். அதற்கு அந்நியமாக இருப்பவை கூட கீதையின் தாக்கத்தால் உருப்பெற்றது என்பது அவர் நம்பிக்கை.

மிகச் சரியாக இதே காலகட்டத்தில்தான், மொழிபெயர்க்கப்பட்ட குர்ஆன் நூலை அவர் வாசித்தார். ஆனால் பிற மதத் தத்துவங்களைக் காட்டிலும் இஸ்லாமியத் தத்துவங்கள் பற்றி அவருக்குப் பெரிய அறிமுகம் இல்லை‌. என் கணிப்பு தவறில்லை என்றால், காந்திக்கு இஸ்லாமியர்களைப் பிடித்துப்போனதற்கு அவரின் நேரடித் தொடர்பில் இருந்த இஸ்லாமியர்களே காரணம் என்று சொல்வேன். கடவுளின் உண்மைத் தத்துவங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பண்பு, செய்யும் வேலையில் நேர்மையாக இருத்தல் போன்ற அசல் இஸ்லாமிய குணங்களை அவர் தரசித்திருக்க வேண்டும்.

பொதுவாகவே இஸ்லாமியர்களைக் காட்டிலும் இந்துக்கள் நேர்மையானவர்கள் என்றால்கூட, குழப்பமூட்டும் தெளிவற்ற தன்மையை ஒருபோதும் இஸ்லாமியர்கள் விரும்ப மாட்டார்கள். வாழ்க்கை என்றால் இதுதான், அதுதான் என்று வரையறுக்கப்பட்ட ஓர் எளிய கொள்கையைப் பின்பற்றுவார்கள். ஒருவேளை இவ்வரிய குணங்களை காந்தி கண்ணார தரிசித்திருக்கலாம். ஆனால் இதை உறுதிப்படுத்த முடியாது.

இங்கிலாந்தில் காந்தி படித்த பாடங்களும், அதனூடாக அவரைத் தொற்றிக் கொண்ட நம்பிக்கைகளும் அவரின் சுயத்தை உணர்த்தும் அனுபவம் ஆகின. எனினும் அவை உணவு, சமயம் என்ற அளவிலேயே நின்றுபோயின. அவரது அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பார்வைகள் சமயத்தின்பால் இணக்கம் பாராட்டுபவராக காந்தியின் பிம்பத்தை கட்டமைத்தன. சமூகத்தில் தனக்கு விதிக்கப்பட்ட வேலைகளைச் செய்து, கௌரவமாக வாழ்க்கை நடத்தும் ஒரு வக்கீல், காந்தி. மற்ற வக்கீல்களில் இருந்து அவர் ஒரே ஒரு விஷயத்தில் வேறுபடுகிறார். ஆன்மிக மயமான வாழ்வில் உண்மைக்கு கட்டுப்பட்டு நடந்தால், செய்யும் தொழிலில் விருத்தி உண்டாகும் என நம்பினார். இதன் பொருட்டோ என்னவோ, பிற்காலத்தில் புகழ்பெற்ற வக்கீலாகவும் திகழ்ந்தார்.

ஒவ்வொரு வழக்குரைஞரும் காந்தியின் தொழில்‌முறை வரலாற்றுச் செய்திகளை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். படிப்பு முடித்து இந்தியா திரும்பிய சமயத்தில், வழக்குரைஞர் தொழில் அவருக்கு ஏமாற்றம் தந்தது. வக்கீல்களின் வழக்கமான கோல்மால் உத்திகளும், பொதுச் சபையில் பேசும் தைரியமும் காந்திக்கு கைவரவில்லை. சட்டத்துறையில் உள்ள குறுகிய நோக்கங்களையும் சூழ்ச்சிகளையும் வெறுத்தார். எனவே தன் 24ஆவது வயதில், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு சட்ட நிறுவனத்தில் வேலை கிடைத்தபோது, அவ்வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.

காந்தியடிகள் வாழ்க்கையில் மூன்றாம் பெரும் முன்னேற்றம், அவரின் தென்னாப்பிரிக்க வாழ்க்கையில் ஆரம்பித்தது. மதப்பற்றுமிக்க பாரம்பரிய பழக்கவழக்கங்களில் இருந்து மாறுபட்டு, தான் சார்ந்த சமூகத்தின் மேன்மைக்கான பார்வையை, தென்னாப்பிரிக்க வாழ்க்கையில்தான் காந்தி ஏற்படுத்திக் கொண்டார். பொதுவாகவே தன்னால் இயன்ற எல்லா வழியிலும் போராட்டத்தை உந்திச் செல்ல, புரட்சியாளர்கள் முயற்சிப்பர். ஆனால் ‘செல்ல வேண்டிய வழியும், அடைய வேண்டிய லட்சியமும்’ எங்ஙனம் இருக்க வேண்டும் என்பதில் காந்தி மும்முரமாக வேலை செய்யக் கூடியவர். அவர் அமைதியான மார்க்கத்தைப் பின்பற்றினார்.

சுயத்தை உணரும் உள்ளார்ந்த செயல்முறைக்கு இணையாக, மற்றொரு செயல்பாடும் மறைவாக நடைபெற்றது. லண்டன் போன்ற பெரும் நாடுகளோடு சமாதான உறவு பேணும் நிலைக்கு இந்திய மக்களின் மனநிலையில் மாற்றம் உண்டாக்கினார்.

காந்தியின் சமூகப் பணிகள் எல்லாம் சுயத்தை நோக்கிய புரிதலுக்கான அச்சாணி என்று இன்னும் வழிபடக் கூடிய பலர் உண்டு. காந்தி ஒரு சுதந்திரச் சிந்தனையாளர்; இந்தியாவின் பொருட்டும் மனிதகுலம் பொருட்டும் அவர் செய்யும் காரியங்கள் என்னவாக இருப்பினும், தனி மனித வாழ்க்கையின் முழுமையை நோக்கி எய்த ஈட்டியாகத்தான் இருக்கும் என்பது அவர்கள் எண்ணம். இதுபோன்றவர்களுக்கு, தான் சொல்லவரும் கருத்தை மெய்ப்பிக்க, மகாத்மா காந்தியின் சுயசரிதையிலேயே போதுமான செய்திகள் உள்ளன.

தேச சேவைக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ளும் முன்னேற்பாட்டு நடவடிக்கையாகத்தான் மகாத்மா காந்தியின் சுய பரிசோதனைகள் அமைந்தன என நம்பும் சிலர் உண்டு. பாடம் கற்பிக்கும் ஆசிரியர், அப்பகுதியில் பாண்டித்தியம் பெற வேண்டும் அல்லவா? என்று இவர்கள் சுட்டிக்காட்டுக்கின்றனர். மகாத்மா காந்தியின் வாழ்வில் இருந்தும், எழுத்தில் இருந்தும் தம் பக்க நியாயத்திற்கான பல சான்றுகளை அடுக்குகின்றனர். நான் இந்த இரண்டாவது வகைமைக்குள் என்னை அடையாளம் காண்கிறேன். வாழ்க்கைக் குறித்தான மகாத்மா காந்தியின் தத்துவத்தைக் கீழ்வரும் இந்து சமயப் புனித நூல் வசனத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். நாள்தோறும் வழிபாடு நேரத்தில் இவ்வசனத்தை அவர் முன் உரக்கப் படித்துக் காட்டுகின்றனர்: ‘நான் ஏங்குவதெல்லாம் அதிகாரத்திற்கோ, சொர்க்கத்திற்கோ, மறுபிறவிக்கோ அன்று. உலக உயிர்கள் அடைபட்டிருக்கும் துன்பச் சிறையிலிருந்து விடுபட வேண்டும் என்றுதான் அனுதினமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்.’

ஆக, பிறப்புச் சங்கிலியில் இருந்து விடுபடாதவரை இந்து சமய மரபுப்படி சொர்க்கம் செல்ல சாத்தியமில்லை. மனிதக்குலத்தின்பால் உள்ள பரிவும் இரக்கமும் காந்தியின் செயல்பாடுகளை முன்னகர்த்தி செல்கின்றன. துன்பத்தில் வாடும் நலிந்தோரின் வாழ்க்கையை, எத்தனைச் சிரமங்கள் அடுக்கி வந்தாலும், அதை மேம்படுத்தும் சிரத்தை உடையவராக காந்தி உள்ளார்.

காந்தியின் ‘நலிந்த ஜீவன்கள்’ எனும் பட்டியல் படி, யார் யாரெல்லாம் அரவணைப்புக்கு உட்பட்டவர்கள் எனச் சிந்தித்துப் பார்க்க நான் ஆசைப்படுகிறேன். இந்துக்கள் மட்டுமா, பிற சமயத்தினருமா அல்லது இந்தியாவுக்கு புறம்பாக உள்ள நலிந்த‌ மக்கள் மீதும் காந்தியின் அரவணைப்புக் கரங்கள் பாயுமா?

‘உலகை நேசித்தும், பிறர் உயிர்களுக்கு நன்மை பாராட்டியும்தான் ஒருவர் சொர்க்கம் செல்ல முடியுமா?’ என்று மேற்கத்திய மக்கள் ஆச்சரியப்பட்டுக் கேட்கலாம். ஆனால் கீழைத்தேய மக்களுக்கு இதுவொன்றும் விசித்திரமான செய்தி இல்லை. ஏனெனில் சொர்க்கம் செல்ல விரும்பும் ஒருவன், விடாப்பிடியான மனத்துடன் இருபது ஆண்டுகளானாலும் ஒற்றைக் காலில் நின்று முக்தி பெறுவது இங்கு இயல்பான காரியம்.

இச்சூழலில் எத்தனை ஆண்டுகள் ஒற்றைக் காலில் நிற்பது என்ற கடுகடுப்பு தோன்றாது. அதுவோர் ஆன்மிகக் கலைபோல கடைபிடிக்கப்படும். அந்த மனிதர் பார்ப்பதற்கு வசீகரமாக இருக்கலாம். ஆனால் அவரால் ஒரு பயனும் கிடையாது. அவரால் சமூக முன்னேற்றத்திற்கு தடை உண்டாகும். இத்தகையோர் இடையே மனிதகுல மேன்மையைக் காட்டிலும் ‘தான்’ என்ற சுயநலம் மேலோங்கி இருக்கும். அனைவருக்குமான மன மகிழ்ச்சியைத் தடை செய்யும் இதுபோன்ற மதங்களின் போக்கைத்தான் கீழைத்தேய இளைஞர்களில் ஒரு சாரார் வெறுக்கின்றனர்.

மகாத்மா காந்தியின் வாழ்க்கை சுய பரிசோதனையிலும் தன்னைக் கண்டடைவதிலுமே முற்றுப் பெறுவதாய் இருந்தால், இந்தியாவின் எதிர்காலம் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு ஆட்படும். தலைமுறைத் தலைமுறையாகக் கீழைத் தேயங்களில் மகிழ்ச்சி உதயமாவது, தன்னலமற்ற மதங்களின் சேவையால் மட்டுமே சாத்தியப்பட்டுள்ளது. அக்காரணத்தின் பயனால்தான் இன்றும் மதங்கள் நிலைத்திருக்கின்றன.

(நான் ஒருமுறை பாரிஸில் சந்திந்த பாரசீக மாணவரிடம் பின்வரும் கேள்வியை எழுப்பினேன். நீங்கள் ஏன் புராணம் பொதிந்த, உங்கள் நாட்டுச் சமய நூல்களை வெறுக்கிறீர்கள்? அதற்கு அவர் சொன்ன பதில் ஆழமாக இருந்தது. ‘அவை எங்களைச் செயல்பட விடாமல் தடுத்தன. சுயம் பற்றிய சிந்தனைக்கு அழுத்தம் கொடுத்தன. மேற்கத்தியர்களால் நாங்கள் அடிமைப்பட்டதற்கு, இதுவும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். எனவே அடுத்த ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், அவற்றின் துணையின்றி நலமோடு வாழ்வோம்’ என்றார்.)

தென்னாப்பிரிக்காவில் காந்தியின் மனப்போக்கை புரட்டிப்போட்ட சம்பவம் எதுவென்று ஆராய கடமைப்பட்டுள்ளோம். தன் நாட்டிலிருந்து வெகு தூரத்தில் இருந்தாலும், அங்கிருந்தபடியே இந்தியாவின் சிறிய சித்திரத்தை அவர் கண்டார். அதன் குறைபாடுகளும் மனத்தாங்கலும் பூதக்கண்ணாடி வைத்து பார்ப்பதுபோல் பெரிதாகத் தெரிந்தன. இனி ஒருபோதும் இவற்றைச் சமூக ஒழுங்காகக் கடைப்பிடிக்க அனுமதியோம் என்று உறுதிபூண்டார்.

இந்தியாவின் கறைபடிந்த மேஜைமீது மேற்கத்தியர்கள் இழைக்கும் சுரண்டல், அடிமைத்தனம், பழிப்புக்கு இடமான சட்டத்திட்டங்கள் என்று ஏராளம் இருந்தன. குறைப்பாட்டு மேஜையில் கையாலாகாத்தனமும், திறன் இன்மையும், சீர்கெட்ட சமூக அமைப்பும் இருந்தன. இவ்விரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக நான் கருதுகிறேன். இங்குள்ள காயங்களுக்குப் பிறர் வந்து களிம்பு பூசுவதற்குள், இந்தியா தாமாக மாற்றம் அடையவேண்டும். காந்தி ஒருபோதும் இதை எண்ணி வருத்தமடைந்து கண்ணீர் வடிக்கவில்லை; இந்தியாவின் இறங்குமுகக் காலம் என்று பழிக்கவில்லை. இந்திய வளர்ச்சியில் அதிருப்தி அடைந்த பலர், மனம் வெதும்பி இருந்தபோது, நாட்டின் முன்னேற்ற விதைகளை அவர் தூவினார்.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

1 thought on “நான் கண்ட இந்தியா #41 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 1”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *