Skip to content
Home » நான் கண்ட இந்தியா #42 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 2

நான் கண்ட இந்தியா #42 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 2

நான் கண்ட இந்தியா

இந்தியாவை ஆளும் வர்க்கத்தினர் தனி ரயில் பெட்டியில் செல்வதும், அதற்குள் உள்ளூர்வாசிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதும் காந்தி அறிந்திருந்தார். தான் ஒரு புகழ்பெற்ற வக்கீலாக இருந்தபோதும், தன்னை அந்த ரயில் பெட்டியின் முதல் வகுப்பிலிருந்து தூக்கியெறிந்தபோதுதான் காந்திக்கு அதன் முக்கியத்துவம் புரிந்தது.

இந்தியாவில் ஒருசில வகுப்பினர், பொது சாலைகளைப் பயன்படுத்த அருகதையற்றவர்கள் என முத்திரைக் குத்துவதை காந்தி நிச்சயம் பார்த்திருப்பார். தென்னாப்பிரிக்க நடைபாதையில் இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது, காந்திக்கு அந்தக் கொடூரம் புரிந்திருக்கும். இந்தியாவின் உயர் ரக வகுப்பைச் சார்ந்தவனாகத் தன்னைக் கருதும் சிலர், குறிப்பிட்ட வகுப்பினரைத் தமக்கும் கீழாக நடத்துவதை இயல்பென நினைத்து வருகின்றனர். காந்தியும் அப்படி இருந்தவர்தான். அந்நிய நாட்டு ஆட்சியாளர்கள் என்றால், சமூகத் தராசில் ஒருபடி மேலான மதிப்பு உண்டு.

ஆனால் தென்னாப்பிரிக்காவில், இந்தியர்கள் எல்லோரும் பாரபட்சமின்றி கீழாக மதிக்கப்பட்டனர். ஆகவே இந்தியர்கள் என்ற ஒருமைத்துவத்தையும், அந்நியர் – பூர்வீகர் என்று பாகுபாடின்றி சமமாக மதிப்பிடும் அரசின் போக்கையும் அவர் உணரத் தொடங்கினார். சமத்துவ உரிமை கோரும் ஒருவர் அதற்கான தகுதி வாய்ந்தவராக இருப்பது மட்டும் கருத்தல்ல, தன்னளவில் எல்லோரும் சமம் என நம்புபவராக இருக்க வேண்டும். இந்தியாவின் சோக சரிதம், இந்து மனநிலையில் பொதிந்து உள்ளது. குறிப்பிட்ட வகுப்பினருக்கு தாம் செய்தவற்றை, இந்தியா முழுவதும் தற்போது அனுபவிக்கிறது என்று அவர் பின்வரும் வரிகளில் பதிவு செய்கிறார்:

‘தாம் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட வகுப்பினர் என்று பழங்கால யூதர்கள் கருதினர். அதன் விளைவாக நியாயமற்ற விசித்திர பிரதிபலனை அவர்தம் சந்ததியினர் அனுபவிக்க நேர்ந்தது. கிட்டத்தட்ட அதுபோன்று இந்துமதத்திலும் தாம் ஆரிய வகுப்பைச் சார்ந்தவன் என்றும், நாகரிகம் பெற்றவன் என்றும் ஒருசிலர் கருதுகின்றனர். தன் நண்பர்களையும் உறவினர்களையும் தீண்டத்தகாதவராக ஒதுக்கினர். இதனால் இந்துமதத்தினர்‌ மட்டுமல்லாது, தென்னாப்பிரிக்கவில் உள்ள ஒட்டுமொத்த பார்சி மற்றும் முஸல்மான் சமூகமும் நியாயமற்ற அநீதிகளுக்கு ஆளாகிறது. இந்துக்களைப் போன்ற நிற ஒப்புமையும் இந்தியப் பூர்வீகப் பண்புமே இவர்களின் இக்கதிக்கு போதுமான காரணியாக இருக்கிறது.’

இதுவெறும் தார்மீக பரிபாலனம் மட்டுமே. செயல்முறை அம்சத்தைப் பொறுத்தமட்டில், அவருக்கு தெளிந்த பார்வை இருந்தது. காந்தியின் செயல்திட்டம் பின்வருமாறு:

(1) தென்னாப்பிரிக்காவில் இந்திய காங்கிரஸ் அமைப்பை நிறுவி, அதையொரு பிரதிநிதித்துவ மற்றும் செயற்திட்ட குழுவாக வழிநடத்தி, சமூகத்தின் இரட்டை விளிம்பிலிருப்பவர்களையும் சரிசமமாக நடத்துதல்.

(2) அரசின் முறைகேடுகளையும் மக்களின் தேவைகளையும் சுட்டிக் காட்டும்படி ஓர் அச்சுக் கூடத்தை நிறுவுதல்.

(3) புதிய கொள்கைப்படி தனிநபர்களுக்கு பயிற்சியளிக்க ஓர் ஆசிரமம் தொடங்குதல்.

(4) சட்ட இயந்திரமும் அச்சு ஊடகமும் மக்களின் குறைதீர்க்க தவறும் பட்சத்தில், தான் மேற்கொள்ளும் வேலைக்கு முழுக்கு போட்டுவிட்டு, ஒத்துழையாமை போராட்ட முறையைக் கடைப்பிடித்தல்.

மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் மேற்கொண்ட செயல்பாடுகள் எல்லாம், பின்னாளில் இந்திய தேசத்தில் அரங்கேற்றும் பெரிய அளவிலான நாடகத்திற்கு செய்து பார்த்த ஒத்திகை எனக் கூறலாம். சுயத்தைக் கண்டடையும் முகமாக, அவர்தன் சொந்த வாழ்வின் சுதந்திர உணர்வையும் விட்டுக் கொடுக்கும் அளவுக்குச் செயல்பட்டார். அடிப்படை புலன் இன்பங்களோடு, உடலியல் ஆசைகளையும் முற்றும் துறந்தார்‌.

தன் 36ஆவது வயதில், பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பேன் என்று சபதம் எடுத்துக் கொண்டார். அகிம்சை கொள்கை அவர் வாழ்வின் அங்கமானது. பொதுவில் வரும் மிரட்டல்களைத் துணிகரமாக எதிர்கொண்டார். தென்னாப்பிரிக்காவில் இருந்த இந்தியாவின் சிறிய சித்திரத்தை அவர் விடாப்பிடியாக கைக்கொண்டிருந்தார். அங்கிருந்த 7000 பேரும் ஒத்துழையாமை இயக்கத்தில் காந்திக்கு உறுதுணையாக நின்று, சிறைக் கொடுமைகள் அனுபவித்தனர். இதனால் ஏற்படும் இன்னல்களை கண்ணியத்துடனும் சகிப்புத்தன்மையுடனும் எதிர்கொள்ளாமல், மகிழ்ச்சிகரமாய் ஏற்றுக்கொண்டார்கள்.

ஆயுதமேந்திய ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எதிராய், இரத்தம் சிந்தும் புரட்சியில் ஈடுபட்டிருந்தால் எளிமையாக மட்டுப்படுத்தியிருப்பார்கள். காந்தி கையாண்ட சத்தியாகிரகப் போராட்டத்தின் முக்கியத்துவம், முதல் பாய்ச்சலிலேயே தெளிவாகத் தெரிந்தது. ரத்தம் சிந்தி போராடுவதைக் காட்டிலும் அமைதியான வழிமுறையே பயனுடையதென நிரூபணம் ஆனது.

ஜெனரல் ஸ்மட்ஸுடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் குறையை நிவர்த்தி செய்ய சத்தியாகிரகப் போராட்டம்தான் அவருக்குச் சரியெனப்பட்டது. இந்தியர்களின் தைரியத்தையும் சுயக் கட்டுப்பாட்டையும் பரிசோதிக்கும் முகமாக, இப்போராட்டம் அமைந்தது. இந்துக்களுக்குப் பிறரைவிடச் சுயக் கட்டுப்பாடு அதிகம் என்றாலும், சரீர தைரியம் குறைவு. இந்துக்களின் இதயத்திலிருந்து பயத்தை அகற்றினால்தான் அச்சமூகத்து இளைஞர்கள் சுதந்திரமாக இருப்பார்கள் என்று சரியாகக் கணித்ததோடு, தன் செயல்பாடுகளின்மூலம் அதைச் சாதித்தும் காட்டினார். 1914ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் இருந்து காந்தி வெளியேறினார்.

நான்காவதும் இறுதியுமான அத்தியாயம், இந்தியாவில் தொடங்கியது. கோகலேவின் அரசியல் ரீதியான வழிகாட்டுதல்களை காந்தி அப்படியே ஏற்றுக் கொண்டார். அதாவது, உலகின் நன்மைக்காகத்தான் பிரிட்டிஷ் பேரரசு உழைத்துக் கொண்டிருக்கிறது; அதனொரு பகுதியாக இந்தியாவும் பலனடைகிறது. பிரிட்டிஷ் பேரரசின் குற்றங்குறைகள் தன் கண்ணுக்குத் தெரிந்தாலும், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு பிரிட்டிஷ் அரசின் உதவியும் வழிகாட்டுதலும் ஒத்துழைப்பும்‌ தேவை என்று அவர் நம்பினார்.

இந்து சுவராஜ் என்று அழைக்கப்படும் இந்தியத் தன்னாட்சியை (இந்தியன் ஹோம் ரூல்) கைக்கொள்வதற்கு முன்பு, ஓராண்டு காலம் இந்தியாவின் நீல அகலங்களைப் புரிந்துகொள்வதற்காகப் பயணம் மேற்கொள்வதாய் கோகலேவிற்கு சத்தியம் செய்திருந்தார் காந்தி. பிரிட்டன் சாம்ராஜ்யத்துடன் உறவை முறித்துக்கொள்ளக்கூடாது என்பதில் இருவரும் குறியாய் இருந்தால்கூட, சிறிய முரண்பாடு இருந்தது. காந்தி, இந்து சுயராஜ்யம் ஏற்பட விரும்பினார். ஆனால் கோகலேவிற்கு அதில் நம்பிக்கை இல்லை.

‘இந்தியாவில் ஓராண்டு தங்கினால், உங்கள் பார்வை மாறுபட வாய்ப்புண்டு,’ என கோகலே சொல்வாராம். இந்தியர்கள் தம் நாட்டைச் சுயமாக ஆளும் திறன் இல்லாதவர்கள் என்பதற்கு இதற்கு காரணமா, இல்லை இந்தியா போன்ற காலனி நாட்டுக்கு எவ்விதப் பேரரசும் சுதந்திரம் வழங்காது என்பது காரணமா? கோகலே இவ்விரண்டையும் வைத்துதான் அப்படிச் சொன்னார்.

தாராளவாதிகளும் அரசியல் நிபுணர்களும் மிதமான அரசியல்வாதிகளும் அவர் சொல்வதைத்தான் ஏற்றுக்கொண்டார்கள். அந்நிய ஆட்சியாளர்கள் இந்தியாவை ஆளுவதற்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்க முடியாமலும், தாமே இந்திய ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு நிர்வாகம் செய்ய தைரியமில்லாமலும் இருந்தனர். இந்தியாவில் சுயாட்சி திரும்பினால், அதிருப்தியூட்டும் கலவரம் வெடிக்கும் அல்லது தாராளவாத அந்நிய ஆட்சியாளர்களின் ஆதிக்கம் மேலோங்கும் என்று அவர்கள் நம்பினர். ஆனால் காந்திக்கு இதைக் கண்டு பயமில்லை.

ஓராண்டு காலம் இந்தியா முழுக்க பயணம் செய்து, விரிவான புரிதலுக்கு வந்தார் காந்தி. இந்திய மக்களின் போதாமைகளைக் கூர்ந்து கவனித்ததோடு, தன் செயல்பாட்டின் மூலம் அதற்கு விடைகாண வேண்டும் என முடிவுசெய்தார். எளிய மக்களின் வாழ்க்கையில் அவர் கவனம் குவிந்தது. தன்னை அம்மக்களுள் ஒருவராக அடையாளப்படுத்தினார். அரை நிர்வாண கோலத்தில், நடுத்தர இந்திய ஆடையை உடுத்தத் தொடங்கினார். காந்தியின் சகல பழக்க வழக்கங்களும், அவரை ஓர் ஏழைப் பங்காளர் என நிரூபித்தது.

வெறுமனே அறம் போதிக்கும் போதகராய் மட்டுமில்லாமல், பொறுமையுடனும் பக்குவத்துடனும் அதிகாரத்தால் இழைக்கப்படும் அநீதிகளைத் தைரியத்துடன் முன்வந்து சரிசெய்யச் சொல்லித் தட்டிக்கேட்கும் பக்குவமுடையவராகவும் விளங்கினார். ஆயுதமேந்திய படைபலத்தின் முன்னால் மக்கள் ஒன்றும் நிராயுதபாணிகள் அல்ல, சத்தியாகிரகம் என்றொரு அசாத்திய நெறிமுறை இருக்கிறது என பிரசாரம் செய்தார். மக்கள் அவரைத் தமக்கான பிரதிநிதியாகப் பார்க்கத் தொடங்கினர். தமக்கான தேவைகளும் உரிமைகளும் வரையறுக்கபடாதவையாக இருந்தாலும், அவற்றைப் பெற்றுத் தரும் ஆதர்ச நம்பிக்கையாக காந்தியைப் பார்த்தனர்.

அதிகார வர்க்கத்தினருக்கு சத்தியாகிரகப் பேச்சில் திருப்தி இல்லை. சத்தியாகிரகம் பற்றி ஆங்கிலேயர்களின் அபிப்பிராயம் மற்றும் காந்தியின் நம்பிக்கைக் குறித்து, அவரின் சுயசரிதையில் இடம்பெறும் ஒரு பகுதியால் விளங்கிக் கொள்ளலாம் (சத்திய சோதனை, இரண்டாம் தொகுதி, பக். 297-8).
‘ . . . பம்பாய் அரசாங்கத்துடனான நேர்காணலின் போது, (கத்தியாவாடியில் உள்ள) பகர்சாவில் நான் ஒருமுறை உரையாற்றுகையில், சத்தியாகிரகப் போராட்டமுறை குறித்து பேசியதற்காக, அம்மாகாணத்துச் செயலர் தன் அதிருப்தியைப் பகிர்ந்து கொண்டார்.
‘இது ஓர் அச்சுறுத்தல் இல்லையா?’ என்று அவர் கேட்டார். ‘வலிமையுடைய அரசாங்கம் அச்சுறுத்தலுக்கு ஆட்படும் என நீங்கள் நினைக்கிறீர்களா?’

‘இதில் எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது,’ என்று நான் சொன்னேன், ‘இது மக்களுக்கான விழிப்புணர்வு. என் முன்னிருக்கும் சட்டப்பூர்வமான குறைதீர்க்கும் உபாயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வதுதே என் கடமை. சுயாதீனமாக எழுச்சி பெற விரும்பும் தேசத்திற்கு, தான் விடுதலை பெறவேண்டிய அனைத்து வழிமுறைகளும் தெரிந்திருத்தல் அவசியம். இறுதியில் வன்முறையைக் கடைசி ஆயுதமாக பிரயோகிப்பார்கள். ஆனால் சத்தியாகிரகம் என்பது அகிம்சை ஆயுதம்‌. அதன் எல்லைகளையும் பயன்படுத்தும் உத்திகளையும் மக்களுக்குச் சொல்வதே என் தார்மீகக் கடமை. பிரிட்டிஷ் அரசாங்கம் வலிமையானது என்பதில் எனக்குச் சந்தேகம் கிடையாது. ஆனால் அதைத் தகர்க்கும் சக்தி சத்தியாகிரகப் போராட்டத்திற்கு உண்டு.’

அந்நிய அரசாங்கத்திடம் இருந்து சுயாட்சி உரிமை பெற விரும்பும் வெற்றுக் கருவி அல்ல சத்தியாகிரகம், இது மக்களுக்கான மாற்றுப் புரட்சி முறை என்று காந்தி தெளிவுறுத்தினார். அந்நிய அரசாங்கமோ இந்திய அரசாங்கமோ – ஆளும் வர்க்கம் எதுவாக இருப்பினும், மக்களின் குறையைப் போக்கவல்ல ஏதுவான போராட்டமுறை இது.

யுத்தகாலத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தை முழுவீச்சில் நடைமுறைப்படுத்தாமல், பேச்சுவார்த்தை அளவில் பயங்காட்டினாலே ஆங்கிலேயர்களிடம் இருந்து நிறைய சலுகைகள் எதிர்பார்க்க முடிந்தது. அங்குதான் சத்தியாகிரகம்மீதான காந்தியின் நம்பிக்கை மேலும் உறுதியானது. யுத்த நேரத்தில் இந்தியப் பிராந்தியம் பிரச்சனைக்கு உள்ளாக வேண்டாம் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். அதேசமயம், செம்ஸ்போர்ட் பிரபு நீதித்துறை அறிவும் நிர்வாகத் தந்திரமும் கைக்கூடியவராய் இருந்தார். என்ன காரணமாக இருந்தாலும், இதுவரை இல்லாத அளவுக்கு தேசிய பெருமையும் சுய-நம்பிக்கையும் தைரியமும் கொண்டு இந்திய மக்கள் உருப்பெறத் தொடங்கினார்கள் .

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *