Skip to content
Home » நான் கண்ட இந்தியா #43 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 3

நான் கண்ட இந்தியா #43 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 3

நான் கண்ட இந்தியா

1916-18 காலகட்டத்தில் இந்திய விவசாயிகளுடன் அணுக்கமான தொடர்பில் இருந்தார் காந்தி. சம்பரண் விவசாயிகள் தங்கள் நிலக்கிழாருக்கு எதிரான போராட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு காந்தியைக் கேட்டுக்கொண்டனர். சொந்தமாக நிலமில்லாத ஒப்பந்தத் தொழிலாளிகள், முதலாளிகளின் அனுகூலத்திற்காக குத்தகை நிலத்தின் ஒவ்வொரு இருபது ஏக்கரிலும் தலா ஒரு ஏக்கரில் அவுரி பயிர் சாகுபடி செய்யவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

காந்தி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, சூழலைத் தெரிந்துகொண்டார். நூற்றுக்கணக்கான விவசாயிகளின் கோரிக்கைகளைக் காதில் வாங்கிக்கொண்டு, அரசுத் தரப்புக்கு விரிவாகக் கடிதம் எழுதினார். இறுதியில் அரசு தலையீட்டால் இப்பிரச்சனைக்கு முடிவு எட்டியது. பின்னர் சம்பரண் விவசாயிகளுடன் கல்வி சார்ந்த தன் பரிசோதனைகளை மேற்கொண்டார் காந்தி.

இதனையடுத்து பொருளாதாரம் மற்றும் பிற இன்னல்களை முன்வைத்து அடுக்கடுக்கான சத்தியாகிரகப் போராட்டங்கள் தொடங்கப்பட்டன. ஒருசில போராட்டங்கள் முழு வெற்றியடைந்ததையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் எந்தச் சூழலையும் காந்தி தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. இந்திய சுயாட்சியை பிரிட்டன் தேசத்தின் அனுமதியாலும் ஒத்துழைப்பாலும் மட்டும் வென்றெடுக்க வேண்டும் என விரும்பினார்.

இதன்பொருட்டு அவர் பின்பற்றி வந்த அகிம்சைக் கொள்கையின்மீது நம்பமுடியாத சமரசங்கள் செய்துகொண்டார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஏற்ப, தில்லியில் நடைபெற்ற யுத்த மாநாட்டில் கலந்துகொண்டார்‌. அதோடு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் படைபலத்தை அதிகரிப்பதற்காக ஆட்சேர்ப்பு பிரசாரத்திலும் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேரும்படி, துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கும் அளவுக்குச் சென்றுள்ளார். என்னிடம் அத்துண்டுப் பிரசுரங்கள் கைவசம் இல்லாததால், காந்தி யுத்தத்தை நியாயப்படுத்தி பேசிய அவ்வார்த்தைகளைச் சொல்வது அரிது. எனினும் அவர் சுயசரிதையில் பதிவுசெய்த ஒரு பத்தியை இங்கு மேற்கோள் காட்டுகிறேன்:

‘இந்தியாவில் பிரிட்டிஷார் செய்த மிகக் கொடிய செயல்களில் ஒன்று, அவர்களிடம் இருந்த ஆயுதங்களை அபகரித்தது. நாம் அந்தச் சட்டத்தை திருத்தி எழுதவும், ஆயுதம் பிரயோகிக்கக் கற்றுக்கொள்ளவும் ஓர் அரிய வாய்ப்புக் கிட்டியுள்ளது. நடுத்தர மக்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு உதவி செய்தால், நம்மேல் அவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் தோன்றும். அதனால் மீண்டும் நாம் ஆயுதங்களைக் கைப்பற்றலாம்.’

பட்டாளத்திற்கு ஆட்சேர்ப்புப் பணிகள் எந்தக் கதியில் நடைப்பெற்றது என்பதை மகாத்மா காந்தியின் வார்த்தைகளாலே கேட்போம்:

ராணுவப் பிரசாரத்தின்போது மக்கள் தம் வாகனங்களை இலவசமாக வழங்கினர். ஒரு நபர் வேண்டிய இடத்தில், இருவர் முன்வந்தனர். ஆனால் இப்போது, தன்னார்வலர்கள் கிடைப்பதே அருகிவிட்டது . . . சென்ற இடமெல்லாம் கூட்டம் நிகழ்த்தினோம். மக்களும் கலந்துகொண்டனர். ஆனால் ஒருவர் அல்லது இருவர் பணியில் சேர்வதே பெரும்பாடு. ‘நீங்கள் அகிம்சைவாதியாக இருந்துகொண்டு, ஆயுதமேந்தச் சொல்லி எங்களை மட்டும் எங்ஙனம் அழைக்கிறீர்கள்?’

இப்பிரசாரத்திற்கான வரவேற்பு மிகவும் அற்பமாக இருந்ததால், காந்தி அதைக் கைவிட்டார். அவரின் உடல்நிலை மேலும் மோசமாகி, கிட்டத்தட்ட மரணத் தருவாய்க்குச் சென்றதும் இதற்கொரு காரணம்.

பொதுத்தளத்தில் ஈடுபடும் வேறெந்த தலைவரும் இதற்குப்பின் மக்களிடையே செல்வாக்கு இழந்திருக்கக் கூடும். ஆனால் காந்திக்கு அப்படி நிகழவில்லை. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக அவர் மற்றொரு சத்தியாகிரகத்திற்கு அழைப்பு விடுத்தபோது, குறிப்பாக ரெளலட் சட்டம் அமலான பிறகு பொதுமக்களோடு நவீன தாராளவாதிகளும் அவருக்கு ஆதரவு அளித்தனர்.

1919ஆம் ஆண்டு, மூன்றாண்டுகளுக்குச் செல்லுபடியாகும் விதமாக ரெளலட் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் எந்தவொரு கேட்பார் கேள்வியும் இல்லாமல், எவரையும் கைது செய்யலாம். இந்தியா முழுவதும் பலத்த எதிர்பலை கிளம்பியது. காந்தி சத்தியாகிரகச் சபையை நிறுவியதும், அதில் இணைந்து கொண்டவர்கள் ரெளலட் சட்டத்திற்கு எதிராகப் போராட உறுதி எடுத்தனர். எதிர்வரும் காலத்தில் இதுபோல் உருவாகும் அனைத்துச் சட்டங்களையும் மீறுவோம் என்று வாக்குக் கொடுத்தனர். இதன்மூலம் இந்தியர்களின் ஒப்புதல் இல்லாமல் இயற்றப்படும் சட்டங்களை அவர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்பது வெளிப்படையானது. இந்தவொரு புது அம்சம் இந்தியச் சூழலில் மிக நூதனமாகப் பார்க்கப்பட்டது.

சத்தியாகிரகப் போராட்டத்துடன் தொடர்புடைய வரலாற்றை எழுதுவது, பெரும் துன்பியலாகவும் தொடர் உரையாடலாகவும் நீளும் என்பதால் நான் இங்குக் குறிப்பிடவில்லை. இருப்பினும் இந்து சோசலிச செயற்பாட்டாளரும், தேசியவாதியுமான கமலாதேவி சட்டோபாத்யாயின் வாழ்க்கையில் இருந்து அதனொரு பகுதியைத் தெரிந்துகொள்வது ஆர்வமூட்டலாம். அவர் நீண்ட காலம் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார். அதில் சில காலம் தனிமையில் பூட்டி வைத்தும் தொல்லை தந்திருக்கின்றனர். இந்தியப் பெண்களும் இளைஞர்களும் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்ட பான்மையை இங்கு அவர் விவரிக்கிறார். 1930ஆம் ஆண்டு உப்பு வரி நீக்குவதற்காக காந்தி மேற்கொண்ட உப்புச் சத்தியாகிரகத்தின் நேரடிச் சாட்சியங்களை அவர் பின்வருமாறு பகிர்ந்து கொண்டார்:

‘ஏழைகள் பயன்படுத்தும் உப்பின் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதற்காக காந்தி சத்தியாகிரகம் மேற்கொண்டபோது, நாங்கள் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வது இயற்கையின் தேவையெனப் புரிந்து கொண்டிருந்தோம். எங்களைப் போன்ற பெண்களுக்கு, அதுவொரு பெருமைமிக்க தருணமாக இருந்தது. திடுதிப்பென்று பழமைவாய்ந்த பாரம்பரியக் கட்டுமானங்கள், மாயக் கரங்கள் தீண்டியதுபோல சுக்குநூறாகின. நீண்ட மரபுகள் உடைபட்டன, பழங்கலாசாரக் கதைகள் நிர்மூலம் ஆகின. நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த பெண்கள், முதல்முறையாக தேச விடுதலையின் பொருட்டு போராட்டக் களத்தில் முன்னணி வகித்தனர். மகளிர் முன்னேற்றப் போராட்டங்கள் தொய்வு அடைந்த விரக்தியில், அக்களம் எழுச்சியூட்டுவதாய் இருந்ததென எல்லோரும் சொன்னார்கள். பெண்கள் கதாநாயகப் பிம்பத்திற்கு உரிய பங்களிப்பினை வழங்கும் வாய்ப்பு கிட்டியதே, ஒத்துழையாமை இயக்கத்தின் குறிப்பிடத்தகுந்த அம்சமாகக் கருதுகிறேன். அதில் என் பங்களிப்பை நினைத்து பெரிதும் மகிழ்கிறேன்.

‘தொடங்கிய சிலநாட்களிலேயே மாபெரும் மக்கள் போராட்டமாக உருவெடுத்தது. நூறு, ஆயிரமென்று பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் ஆண்களும் பெண்களுமாகக் கடலில் இருந்து நீரெடுத்து உப்பைப் பிரித்தெடுத்தனர். பெண்கள் வீட்டிலிருந்து கடல்வரை வரிசையாகத் தலையில் குடம் சுமந்து கொண்டுவரும் காட்சியை அங்குப் பார்க்க முடிந்தது. ஊர் விசேஷம் போல, பாட்டிசைத்துக் கொண்டு விமர்சையாக நடந்துச் சென்றனர். பம்பாயில் உப்பு விளைச்சல் செய்யாத வீட்டைக் காண்பதே அரிதாகிப் போனது. ‘நாங்கள் உப்புச் சட்டத்தை மீறி விட்டோம்’ என்ற குரல் காற்றிலிருந்து பெயர்க்கமுடியாத பலத்துடன் அப்பகுதியை நிறைத்தது. காங்கிரஸ் அலுவலகத்தின் மாடியில் உப்பு வயல் அமைத்திருந்தோம். ஆனால் அவற்றை போலீசார் விரைவில் அழித்துவிட்டனர். ஒவ்வொருமுறையும் நாங்கள் அதை நிர்மாணிக்கும்போது, அரசாங்கத்தின் இரும்புக் கரங்கள் அதைச் சூரையாடின. நாங்கள் அந்த வயலைச் சுற்றி, தடுப்பு அரண்கள் அமைத்தோம். ஆனால் அதை அடித்து நொறுக்குவதில் போலீசாருக்கு பெரிய சிரமங்கள் ஏற்படவில்லை.

‘களேபரமான சூழலில் எனக்கேற்பட்ட முதல் அனுபவத்தை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். போலீஸாரின் தொடர் தாக்குதலுக்கு மத்தியில், மிகச் சமீபத்திலிருந்து எனக்கொரு குரல் கேட்டது. ‘அம்மா, என்னை அடிக்கிறாங்க,’ என்று அந்தச் சிறுவன் அலறினான். திரும்பிப் பார்த்தால், வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பதினான்கு வயது மதிப்புடைய சிறுவன் ஒருவன் தலையில் காயங்களுடன் சுருண்டு விழுந்தான். அவன் அலறல் சத்தம், இன்னும் என் காதோரம் ஒலிக்கிறது. அதிலிருந்து மீண்டுவரவே பல நாட்கள் ஆனது. மோதலும் தாக்குதலும் எனக்கு அப்போது புதிது. பின்னர் அதுவே வாடிக்கையானது. போலீஸ் தாக்குதல் நடத்தும் வளையத்திற்குள், பெண்கள் வரவேண்டாம் என காந்தி கேட்டுக் கொண்டார். இறுதியில் போராட்டம் சூடிபிடித்தபோது, எல்லாவிதமான சலுகைகளும் தூக்கியெறிப்பட்டு, ரத்தமும் சதையுமாகப் பெண்கள் போராடினர். பெரும்பாலும் பெண்களே போராட்டங்களை முன்னின்று நிகழ்த்தினர். அவ்வாறு பெண்கள் அணிவகுத்துச் செல்லும்போது போலீஸார் தாக்குதல் நிகழ்த்த மறுத்தால், முன்னேறிச் செல்லாமல் அதே இடத்தில் நின்றார்கள். அதுமாதிரியான சூழலில் சாலையோரங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கவேண்டி வரும். சில சமயம் இரவுப் பொழுதையும் தாண்டி மறுநாள் காலைவரை ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பார்கள்.

‘கையில் குழந்தை ஏந்திருக்கும் பெண்கள் கூட, நகராமல் அதே அழுத்தத்துடன் உட்கார்ந்திருப்பார்கள். போலீஸாரோ ராணுவமோ அவர்களைக் கண்டுகொள்ளமாட்டார்கள். தேசியக் கொடி ஏற்றுவதற்கு அரசு தடை விதித்திருந்தது. அதை மீறியும் மக்கள் கொடி ஏற்றினார்கள். அநேகம் முறை பெண்களும் சிறுமிகளும்தான் போலீஸாரின் அடி உதைகளைத் தாங்கிக் கொண்டு விடாப்பிடியாகக் கொடி ஏற்றினர்.’

‘தினந்தோறும் விளைச்சலான உப்பைப் பொட்டலங்களில் போட்டு விற்பனைச் செய்து வருவோம். அவை சிறிய பொட்டலங்கள். இரண்டு, மூன்று கரண்டிகள் தேறும். மக்கள் தம் சட்டைப் பையிலிருந்து நாணயங்களைக் கொடுத்து உப்புப் பொட்டலங்களை நெற்றியில் வைத்து மரியாதைச் செலுத்தி வாங்கிச் செல்வார்கள். ஏழை இரவலர்களின் நாணயங்களில் இருந்து, செல்வந்தர்கள் அளிக்கும் ஆயிரம் ரெண்டாயிரம் வரை உப்பு விளைச்சல் அமோகமான வருவாய் உண்டாக்கியது.

‘குழந்தைகள் இயக்கம் இக்காலத்தில் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சி நிலையை எட்டியிருந்தது. பத்து, பதினாறு வயதுக்கு உட்பட்ட சிறுவர் – சிறுமியர்கள் ‘வானர சேனை’ என்ற குழுவில் உறுப்பினராய் இருந்தனர். காரண காரியத் தேவையின்றி தெருவில் கண்டபடி கத்தி உற்சாகமிழக்கும் குழந்தைகளை, நெறிப்படுத்தி இக்குழுவில் ஒருங்கிணைத்தோம். தனிப்பட்ட வாழ்வில் பங்கம் ஏற்படாமல், படிப்புக்கும் குந்தகம் விளையாமல் சமூகத்திற்குப் பயனாற்ற இவ்வழி சரியெனப்பட்டது. இப்போராட்டத்தின் உயிரோட்டத்தைத் தக்கவைத்ததிலும் பெற்றோர்களை உள்ளிழுத்து வந்ததிலும் அவர்களுக்குப் பெரிய பங்குண்டு.

‘ஒருநாள் நாங்கள் மூன்று பெண்கள் அமைதியான முறையில் உயர்நீதிமன்றம் சென்றோம். அங்கிருந்தவர்கள் சுதாரிப்பதற்குள் பார் வளாகத்திற்குள் நுழைந்துவிட்டோம். சட்டத்தை நிலைநிறுத்தும் வழக்கறிஞர்களிடம், சட்டத்துக்குப் புறம்பான ‘உப்பை’ வாங்கும்படி சமாதானம் பேசினோம். அவர்களும் சிரித்த முகத்துடன் வாங்கிக் கொண்டார்கள். மொடமொடப்பான பணத் தாள்களையும் வெள்ளி நாணயங்களையும் கைமாற்றிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினோம். ‘அனுமதி இல்லாமல் இங்கெல்லாம் வரக்கூடாது,’ என்று வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் மெலிதான குரலில் கலகம் செய்தார். ‘அனுமதியா? சட்டத்தை மீறி செயலாற்றுபவர்கள் அனுமதி கேட்பார்கள் என்றும் நினைக்கிறீர்களா?’ என நான் உற்சாகமாகப் பதில் சொன்னேன்.

‘பெண்கள் அந்நிய நாட்டுத் துணிக்கடைகளை முற்றுகையிட்டு, அதிகளவில் போராட்டம் செய்தனர். நாளடைவில் ஒட்டுமொத்த பிரிட்டிஷ் பண்டத்திற்கு எதிரான போராட்டமாக அது உருவெடுத்தது. பிரிட்டிஷ் அரசாங்கம், முற்றுகைப் போராட்டத்தையும் அது தொடர்பான காங்கிரஸ் அமைப்புகள் மற்றும் மகளிர், மாணவர் குழுக்களையும் தடை செய்தது. ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா பெண்களை வண்டியில் ஏற்றி அழைத்துச் சென்றனர் போலீஸார். இவ்வெண்ணிக்கை வளர்ந்து கொண்டே போனதால், அரசு தரப்பினர் செய்வதறியாது விழி பிதுங்கினர். புதிய சிறைச்சாலைகள், வதைமுகாம்கள் கட்டியெழுப்பியும் பிரயோசனம் இல்லை. எனவே பெண்களை அச்சுறுத்தும் நோக்கத்துடன், வண்டியில் ஏற்றிச் சென்று நாள் இறுதியில் தொலைக்கோடி கிராமத்தில் இறக்கிவிட்டுச் சென்றுவிடுவர். அங்கிருந்து அவர்கள் வீட்டுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடித்துத் திரும்ப வேண்டும் . . . .

‘ஓரிடத்திலிருந்து மற்றோர் இடம்; ஒரு போராட்டத்தில் இருந்து மற்றொரு போராட்டம் எனத் தொடர்ச்சியாக அலைந்து கொண்டிருந்தோம். சிலர் சிறைச்சாலைக்குள் நாட்களைக் கழித்தனர். உடல் ரீதியாக வெவ்வேறு இடத்தில் இருந்தாலும், உணர்வு ரீதியில் ஒன்றுபட்டிருந்தோம். . . ’

சத்தியாகிரகப் போராட்டத்திற்குப் பிறகு இந்திய வரலாறு புதிய கட்டம் நோக்கி நகர ஆரம்பித்தது. அதன் முக்கிய அம்சங்கள்:

1. காங்கிரஸ் பிரதிநிதுத்துவ அமைப்பாக மாற்றம் பெற்றது. அதன் உறுப்பினர்கள் மக்களின் மனத்தை உருகுலைக்கும் சிக்கல்களையும் பொருளாதார ஏற்றங்களையும் செவிமடுக்கச் சொல்லி வற்புறுத்தப்பட்டனர்.
2. இந்திய – பிரிட்டிஷ் உறவில் பெரும் மாற்றம் உண்டானது. இந்தியர்கள் திருப்தியடையாவிட்டாலும் இந்நாட்டிற்கென்று பிரத்தியேகமான அரசியலமைப்புச் சட்டம் நடப்பில் இருந்தது. அதில் இப்போது இந்தியர்களின் ஆலோசனையும் பகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் எனச் சலுகை வழங்கினார்கள்.
3. மகாத்மா காந்தி 1934ஆம் ஆண்டு சத்தியாகிரகப் போராட்டத்தைக் கலைத்தார். அப்போதிருந்து சட்டமறுப்புப் போராட்டம் என்ற பெயரில் அது குறிக்கப்பெற்றது. அமைதியான முறையில், சத்தியாகிரக வழியில் அரசுக்கு எதிராகக் கலகம் செய்வதை சட்டமறுப்பு அல்லது ஒத்துழையாமைப் போராட்டம் என்று வழங்கினர். இந்தியாவில் சத்தியாகிரகத்தைப் பரிசோதிக்கும்போது பெரும் சோகமும் துன்பமும் குடிகொண்டிருக்கிறது. ரத்தக் களேபரமும் வன்முறை வெடிப்புகளும் நிகழ்ந்துள்ளன. ஆனால் காந்தி இப்போராட்டத்தை நிறுத்தியதற்கு இதுவல்ல காரணம். மகாத்மா காந்தியும் அவரது சீடர்களும் வேறு சில நுட்பமான காரணங்கள் சொல்கின்றனர். மக்கள் பெருமளவில் சோர்வடைந்து, கூட்டத்தில் இருந்து உடைந்து போகத் தொடங்கினார்கள். காந்திக்கு அணுக்கமானவர்கள்கூட அவர் சொல்லும் உண்மை, அகிம்சை போன்ற தத்துவங்களுக்குக் கட்டுப்படவில்லை. சத்தியாகிரகத்தைக் கடைப்பிடிக்க அளவுகடந்த சுயக் கட்டுப்பாட்டுப் பயிற்சியும் பயமின்மையும் வேண்டுமென காந்தி நம்பினார். எனவே மக்கள் இதன் பயிற்சிகளில் வெற்றிபெற வெகுகாலம் பிடிக்கும் எனக் கருதினார்.

‘ஒருவர் சட்ட மறுப்புப் போராட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமானால், அதற்குமுன் அந்நாட்டுச் சட்டங்களை சரிவர பின்பற்றியிருக்க வேண்டும் . . . . சட்டத் திட்டங்களை மதித்து நடப்பது தனக்குண்டான தெய்வீகக் கடமைபோல் ஒரு சத்தியாகிரகி நினைக்கிறான். இதுபோல் கட்டுக்கோப்பாக சட்டங்களைப் பின்பற்றிய ஒருவரால்தான் எது நியாயம், எது அநியாயம் எனத் தரம்பிரித்துப் புரிந்துகொள்ள முடியும்.’

மேற்கண்ட வாக்கியங்களை வெகுநாட்களுக்கு முன்பே காந்தி எழுதியிருந்தாலும், ஆண்டுக்கணக்கான பயிற்சிக்குப் பிறகும் சத்தியாகிரகப் போராட்ட முறைக்கு அவர் நினைத்தது போல இந்தியர்கள் ஒத்துழைக்கவில்லை எனத் தெரிகிறது. இந்தியர்கள் அலுத்துப் போனதாகவும், சத்தியாகிரகத்தில் ஆர்வம் குன்றியதாகவும் பலர் சொல்கின்றனர். 1934இல் சத்தியாகிரக முறையைக் கைவிட்டது குறித்து பல பிரிவினர்கள் இடையே விமர்சனம் எழுந்திருக்கிறது. இந்தியாவில் இருந்தபோது அதில் பல குற்றச்சாட்டுக்களை நான் நேரடியாகக் கேட்டேன். இந்தியச் சூழலும் மனநிலையும் புரிந்துகொள்ள இவை பெரிதும் உதவுகின்றன.

‘இந்துக்கள் சார்பில் பண்டித ஜவாஹர்லால் நேருவின் விமர்சனம் தீவிரமானது. சத்தியாகிரகப் போராட்டங்களை காந்தி இடைநிறுத்தியது சரி என ஒப்புக் கொண்டாலும், அதற்கு அவர் சொன்ன காரணங்கள் மிகச் சாதாரணமானவை மற்றும் விசித்திரமானவை என்று நேரு நம்பினார். காந்திமீது கம்யூனிஸ்ட்கள் வைத்த விமர்சனம் தீவிரமாக இருந்தது. சட்ட மறுப்புத் தீர்மானம், பிரிட்டன் தேசத்தில் அதிர்வலை உண்டாக்கியதென்றும், அதனைச் சமாளித்து முதலாளித்துவ வகுப்பினரை திருப்திப்படுத்தும் பொருட்டே காந்தி இப்போராட்டத்தை மட்டுப்படுத்தினார் எனச் சொன்னார்கள்.’

சத்தியாகிரகத்தின் பின்னால் ஓடியலைந்து வாழ்க்கையைத் தொலைத்த இளைஞர்கள், அதிருப்தி அடைந்து, ‘சத்தியாகிரகம் மட்டும் முடிவுக்கு வராமல் இருந்திருந்தால், பிரிட்டன் தேசத்தை சுயாட்சி வழங்கும்படி நிர்பந்தித்திருப்போம்’ எனச் சொன்னார்கள்.

இந்துமத வகுப்புவாதிகள் இப்போக்கை ஆதரிப்பதாகச் சிலர் என்னிடம் சொன்னார்கள். அதில் சரிபாதியினர் முதாலளித்துவ வகுப்பைச் சார்ந்தவர்கள். மறுபாதியினர், சத்தியாகிரகப் போராட்டம் வெற்றிப்பெற்று இந்தியாவிற்கு சுயாட்சி அங்கீகாரம் கிடைத்துவிட்டால் முஸ்லிம்களின் ஆதிக்கம் பெருகிவிடும் எனப் பயந்தார்கள். ஏனெனில் இந்துக்கள் அப்போது அதிகாரத் தோரணைக்குத் தயாராகவில்லை.

சத்தியாகிரகம் முறிந்து போனதை எண்ணி வருத்தமடைந்த முஸ்லிம்களின் நிலைமை, இந்துக்களைக் காட்டிலும் பரிதாபமாக இருந்தது. சரியோ, தவறோ இப்போராட்டம் மட்டும் நீடித்து வெற்றிப் பெற்றிருந்தால், இந்தியாவில் முஸ்லிம்களின் ஆதிக்கம் தலைதூக்கியிருக்கும். இந்தியாவின் அனைத்து மதங்களைச் சார்ந்த சராசரி குடிமகன்களும் இதே காரணத்தை ஒட்டித்தான் சத்தியாகிரகம் பற்றிய ஆதரவான கருத்து கொண்டிருக்கின்றனர்.

‘அதனால் பல தொழில்கள் இழுத்துமூடப்பட்டன. ஒருவேளை அப்போராட்டம் வெற்றி பெற்றால் மக்களுக்குள் வகுப்புவாதச் சண்டை எழும் சூழல் நிலவியது. மறுபுறம், சத்தியாகிரகப் போராட்டம் நலிந்து கொண்டிருந்தது. இந்தியாவின் பெயரை உலக அரங்கில் காப்பாற்றுவதற்காக, காந்தி இதனைக் கைவிட வேண்டிய முக்கியப் பொறுப்பை மேற்கொண்டார்.’

மகாத்மா காந்தி முதலாளித்துவத்தின் எந்திரமாகச் செயல்படுகிறார் எனும் போலியான தகவலைத் தவிர்த்து, மேற்சொன்ன விமர்சனங்களில் உண்மை இருக்கலாம். எது எப்படியோ, இத்தேசம் மனத்தளவில் பல கூறுகளாகப் பிரிந்து கிடக்கிறது. இன்னும் தேசிய அளவில் ஒருங்கிணையத் தயாராகவில்லை.

சத்தியாகிரக முறை பின்பற்றப்படுகிறதோ இல்லையோ, காங்கிரஸ் அமைப்பிற்குள் காந்திக்கு அசைக்க முடியாத செல்வாக்கு இருந்தது. அரசியல் மீறிய விவகாரங்களை காங்கிரஸின் பார்வைக்குள் கொண்டு வந்ததில், அவருக்குப் பெரும் பங்கு உண்டு. இந்து முஸ்லிம் சமூகத்தினரிடையே அவர் விரும்பியது போலான சுமூக உறவு ஏற்படவில்லை என்றபோதும், அவரவர் சமூகத்தில் உள்ள பொதுப் பிரச்சனைகளைத் தீர்க்கும் உபாயத்தைக் கண்டறிந்து சொன்னார். தான் பிரதிநிதித்துவப் படுத்தும் பொதுச் சமூகத்தின் அங்கத்தினர் அல்லல்படும் துன்பங்களை, தன் உறுப்பினர்கள் செவிமடுத்துச் சீர்செய்ய வேண்டும் எனக் காங்கிரஸ் புரிந்துகொண்டது.

1934ஆம் ஆண்டு தீவிர அரசியல் வாழ்க்கையில் இருந்து காந்தி விலகிக் கொண்டார். அதன்பிறகு அவர் ஒட்டுமொத்த ஆற்றலும் மக்களுக்கு அறிவூட்டப் பயன்பட்டது. குறிப்பாக உழவர் இனத்தின் அறிவுச் செயல்பாட்டுக்காக அதிக நேரம் ஒதுக்கினார்.

(தொடரும்)

__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.

பகிர:
nv-author-image

இஸ்க்ரா

இயற்பெயர், சதீஸ்குமார். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தமிழ் இலக்கிய ஆய்வு மாணவர். தொடர்புக்கு : iskrathewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *