மகாத்மா காந்தியின் அன்றாட வாழ்க்கை முறையினையும் அவர் செயல்பாடுகளையும் அறிந்துகொள்ளும் பொருட்டு, அவரின் தினசரி அலுவல் குறித்த சித்திரம் ஒன்றை 1935ஆம் ஆண்டு நான் பார்த்த அளவில் சுருக்கமாகப் பதிவு செய்கிறேன்.
காந்தியின் சராசரி நாள் பின்வருமாறு தொடங்குகிறது:
வார்தாவில் அப்போது அதிகாலை நான்கு மணி. இருள் கவ்விய பின்புலத்தில் மங்கலாகச் சில நட்சத்திரங்கள் பூத்தன. நெடிய தோட்டத்திற்கு நடுவே உள்ள செவ்வக வீட்டின் முற்றத்தில் இந்தக் காட்சி அன்றாடம் அரங்கேறும். மின் விளக்கு வெளிச்சம், அறைகளின் கண்ணாடி ஜன்னல்கள் வழியே எட்டிப்பார்த்தது. அந்த வெளிச்சத்தில், தூண்கள் தாங்கிய முகப்பு மண்டபம் பிரகாசமாகத் தெரிந்தது. வெண்ணிறத் தூய ஆடை அணிந்த சிலர் பரபரப்புடன் விரைந்து கொண்டிருந்தார்கள்.
முன்பு நான் தில்லியில் விவரித்த அறையின் அசல் பிரதிபோல் இந்த அறை தோற்றமளித்தது. இருபாலர்களும் தங்கள் கால் முட்டியில் கையைப் புதைத்து, பவ்வியமாகச் சிரம் தாழ்த்தி தரையில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு மத்தியில் மகாத்மா காந்தி வீற்றிருந்தார். அவரின் தனித்துவ இருப்பு குறித்து அங்கிருந்தவர்கள் அறியாமல் இல்லை. என்றாலும் எவ்வித விசேஷ கவனிப்பும் இன்றி சராசரி மனிதர்போல் இருந்தார். விளக்குகள் அணைக்கப்பட்டன.
அறையின் நடுவே உயரம் குறைந்த பழங்காலத்திலான முக்காலி ஒன்று இருந்தது. அதன்மேல் ஒரு மண்விளக்கு திரியில்லாமல் ஒளிரத் தொடங்கியது. திரவம் தீப்பற்றி எரிவதுபோல், விளக்கிலிருந்த எண்ணெய் விடாமல் ஒளிர்ந்தது. இதற்குப் பின்னால் மார்பளவுச் சிலை போல ஒரு பெண்ணின் உருவம் தோற்றம் கண்டது. வெண்ணிறத் துணியால் அவர் முக்காடிட்டு முகம் மறைத்திருப்பதைப் பார்த்தால் கன்னியாஸ்திரி எனத் தோன்றும். அவர்தான் சகோதரி மீராபென். காலைநேர பிரார்த்தனை சடங்குகளை முறையாகத் தொடங்கி வைத்தார். திரவம் தீப்பற்றி எரியும் சன்னமான வெளிச்சத்தில் மீராபென் உருவம் மட்டுமே தெளிவாகத் தெரிந்தது. மற்றெல்லோரும் மங்கலாகத் தெரிந்தனர்.
மீராபென்னின் இருள் கவிழ்ந்த முகம்போல, அந்த அறை நெடுகவும் ஆழமான அமைதி பரவியிருந்தது. தில்லியில் கண்ட வழிபாட்டுக் கூடத்திற்கும் இதற்கும் வானளவு வித்தியாசம். அங்கு உளப்பூர்வமான ஆன்மத் தேடலில் மனத்தை மென்மையாக கையாண்டனர். ஆனால் இங்கு இறுக்கமான உள்ளழுத்தம் நீடித்து வழிந்தது. உயரம் தாண்டும் போட்டியில், தசைகளை இறுகப்பிடித்து தயாராகும் ஓட்டப்பந்தய வீரனோடு இந்த மனோநிலையை ஒப்பிடலாம்.
மீராபென்னின் வசீகரமுடைய குரலில், இந்து மதப் புனிதத்துவம் பெற்ற சம்ஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டன. சில தொடர்களைக் கூட்டத்திலிருந்தவர்களும் சேர்ந்து உச்சரித்தனர். பூமிக்கு அடியிலிருந்து கத்துவது போலவும், மூடிய கல்லறையிலிருந்து முனகுவதுபோலவும் அச்சத்தம் எதிரொலித்தது. ‘ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்’ என்ற அதிர்வலை தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டிருந்தது.
அன்றாடப் பணிகளைத் துவங்குவதற்கு முன்பு, தம்மைத் தாமே அசுத்த நிலையிலிருந்து மீட்கும் முகமாக இச்சடங்கு நிகழ்த்தப்படுவதாய்ச் சொன்னார்கள். எனவே அதிகாலை வழிபாடு அழுத்தமாகவும் தளர்வின்றியும் நடைபெறுகிறது; மாலைநேர வழிபாடு ஆன்மத் தேடலை அதிகரித்து, மகிழ்வுடன் அந்நாளுக்கான பணிகள் நிறைவுறுவதைச் சுட்டிக்காட்டுகிறது.
அவர்கள் ஜெபிக்கும் சம்ஸ்கிருந்த வார்த்தைகள் சன்னமாக, தொய்வின்றி, இடைவிடாது ஒலிர்கின்றன. அந்தத் தொனியில் ஏதோவொரு மாயவிசை மறைந்திருக்கிறது. இரத்தமும் சதையும் பிணைந்துள்ள மனித உடலை ஊடுருவி, உடலியல் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட உணர்வை அவை தூண்டின.
‘ஆன்மாவின் சாரமாய் என் இதயத்தில் துடிக்கும் அவனை இந்த அதிகாலை வேளையில் நினைத்துப் பார்க்கிறேன். துறவிகள் வேண்டித் துடிக்கும் ஞானம், கல்வி, உண்மை, அருள் முதலானவற்றை வழங்கி, உறக்கத்திலும் விழிப்பிலும் எம்மைப் பாதுகாத்து வழிநடத்துவோனே! உயிர்த்திரளின் உருவம் அல்ல, அரூபத்தின் அங்கம் நான்.’
‘இருளை அகற்றவல்ல, நித்ய சூரியனாம் அவனை இந்த விடிகாலை ஜாமத்தில் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன். இப்பூமியை பாம்புப் படுக்கையாய்ச் சுற்றிச் சயந்திருக்கும், எல்லாம் வல்ல சர்வ வல்லமைகளும் படைத்தோனே.’
‘சிந்தைக்கும் பேச்சுக்கும் அப்பாற்பட்ட அவனை அன்றாடம் இவ்விடியலில் வணங்குகிறேன். வார்த்தைகளுக்குப் பொருளானவன், புனித நூல்களின் விளக்கங்களுக்கு மேலானவன், தேவாதி தேவன், பிறப்பற்றவன், முன்னைப் பழமைக்கும் பழமையானவன், மாறாத் தன்மையுடைய மாசற்றவன்.’**
** அரபி மொழியில் இதே பொருளை உணர்த்தும் இஸ்லாமிய வசனம் ஒன்று உண்டு: ‘குல்லா-மா-ஹத்தாரா பை-பலிக்; ஃபல்லாஹூ-சிவ-ஜாலிக்.’ இதன் பொருளாவது: ‘இறைவன் குறித்து உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகின்றதோ, அது எதுவாகவும் அவன் இல்லை.’ குர்-ஆனில் கூட, ‘அல்லாஹூஸ்மத். லெம்-யெலிட், வெ-லெம்-யுலெட்’ என்றொரு வசனம் உண்டு. அதன் பொருளாவது, ‘அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.’
‘நாளும் உன்னையே நினைந்து, உன்னையே வணங்கி, உனக்கே சரணாகிறோம். அண்ட நிகழ்வுகளின் சாட்சி நீதான், உண்மையின் ஒரே நம்பிக்கை நீதான், சார்பின்றி தனித்தியங்கும் உன்னையே சரணாகதியென்று நாடி வந்தோம் நாங்கள். பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரையேற, தெப்பமாய் வந்து எம்மை இரட்சிப்போனே!’
‘நீயே அடைக்கலம், நீ ஒருவனே தெய்வம், எந்நாளும் மாறாத மாண்புடையவன். பாதுகாப்பாய், தண்ணென்று ஒளிர்வாய். படைத்தல், காத்தல், அழித்தலென்று முத்தொழில்களையும் மேற்கொள்பவன் நீதான். நீயன்றி யாருண்டு, அசைவில்லா அதிசயமே!’
‘நடுக்குறும் அச்சங்களுக்கெல்லாம் அச்சமூட்டுபவனே, பயங்களைத் தூர விரட்டுபவனே, மாசு தூசுகளை செம்மைப்படுத்தும் தூயனே.’
ஒப்பில்லாத இவ்வாழ்த்துரைகளுக்குப் பின்னால், வார்த்தைக்குள் அடங்காமல் சிந்தைக்கு அப்பாற்பட்ட பரம் பொருள் ஞானம் பொதிந்திருக்கிறது. இவற்றுள் சமய பேதம் தாண்டிய, கடவுள் குறித்த மிக உயர்ந்த புரிதலை நான் காண்கிறேன். எனினும் சில மந்திரங்கள், குறியீட்டுத்தனம் தொடங்கும் புள்ளியை வட்டமிட்டு காண்பிக்கின்றன. புத்திக்கு எட்டாத ஒற்றை மகோன்னத ஞானத்தை அவை உருவகப்படுத்துகின்றன. அதுதான் இந்து மதத்தின் தனித்துவப் பண்பெனச் சொல்வேன். யானைக் கடவுளுக்கான வழிபாடு தொடங்குகிறது:
‘திரிந்த முகம், பருத்த உடல், லட்சம் சூரியன்களை அள்ளித் தெளித்த பிரகாசம் …’
பூமித்தாயை நோக்கி பின்வரும் வரிகள் உச்சரிக்கப்படுகின்றன:
‘பெருங்கடல்களை ஆடையாக உடுத்தி, மலைக் குன்றுகளை மார்பெனக் கொண்டவள்…’
ஒவ்வொருவரின் நுகர்திறனுக்கு ஏற்ப, கடத்தப்படும் ஒற்றை ஞானத்தின் பொருள் வேறுபட்டுக்கொண்டே போகிறது. எனக்கு வாரணாசி நினைவுகள் பீறிடுகின்றன. முன்பு சொன்னதுபோல் இது இந்துமதத்தின் தனித்துவப் பண்பு. அருவமான உயரியக் கருத்துக்களை, உலகியல் அறிவில் நாம் அனுபவித்தறிந்த உணர்ச்சிப் பிழம்பினோடு ஒருங்கே பொருத்திக்காட்டும் பணியை இந்துமதம் மேற்கொள்கிறது.
ஓம் என்று ஒலித்த கூட்டுச் சத்தம் மேலும் வலுத்துக் கடுமையானது. கூட்டத்திலிருந்து ஒவ்வொரு வார்த்தைகளாகக் கரகரப்புடன் உதிர்ந்தன. ஒவ்வொரு நாளும் பதினொரு சூளுரைகளை உரக்கச் சொல்லி புதிதாகப் பூத்த காலை வேளையை வரவேற்கின்றனர்.
(1) அஹிம்சை (2) சத்தியம் (3) அஸ்தேயம் (4) பிரம்மச்சரியம் (5) அசங்கிரகம் (6) சரீரஸரமம் (7) அஸ்வதம் (8) ஸர்வத்ர-பயவர்ஜனம் (9) ஸர்வதர் மிசமானத்வா (10) ஸ்வதேசி (11) ஸ்பர்ஷ்-பவன
ஹே ஏக்தேஸ சேவாவி நாம்ரத்வே வ்ரட்டினிஸ்செய்யெ.
மொழிபெயர்ப்பு :
(1) கொல்லாமை (2) உண்மை (3) கள்ளாமை (4) துறவறம் (5) உடைமை துறத்தல் (6) உடல் உழைப்பு (7) நாவடக்கம் (8) அஞ்சாமை (9) சமய நல்லிணக்கம் (10) சுதேசி (11) தீண்டாமை ஒழிப்பு.
இப்பதினோரு சூளுரைகளையும் தன்னடக்கத்தோடு ஒருவன் பயின்றுவரவேண்டும்.
காலை எட்டு மணியளவில், சூரிய ஒளி சுள்ளென்று வீசும் முற்றத்தில் கொதிகொதிப்புடன் ஒரு சம்பவம் அரங்கேறியது. தோளில் மண்வெட்டி மற்றும் அள்ளுவாளியை ஏந்திக்கொண்டு ஆடவர்கள் சிலர் கதவை நோக்கி விரைந்தனர். அவர்களுக்குப் பின்னால் பக்கெட்டுகளோடு மேலும் சிலர் பின்தொடர்ந்தனர். கதவு வளைவுக்கு அப்பாலிருந்த வார்தா கிராமத்தைச் சுத்தம் செய்யும் சுகாதாரப் பணியின் பொருட்டு அவர்கள் எல்லோரும் கிளம்பினார்கள். மேற்கத்திய வாசகர்களுக்கு நான் ஒன்றைச் சுருக்கமாக விவரிப்பது அவசியமாகிறது.
கிழக்கின் பின்தங்கிய கிராமங்களில், இன்னும் குறிப்பாக இந்தியாவின் எந்தவொரு கிராமத்துக் குடிசையிலும் கழிப்பறை வசதி கிடையாது. இதை நான் முன்பே சொல்லியிருக்கிறேன். ஆண்களும் பெண்களும் வயல்வெளிக்குச் சென்று ஆகவேண்டியதை முடித்துவிட்டுத் திரும்புவார்கள். ஒரு சராசரி காலைப் பொழுதில் பயன்பாடற்ற தோட்டத்திலோ, ஆளில்லா சந்துகளிலோ கூட்டம் கூட்டமாக அங்குமிங்கும் விரவிக் கிடக்கும் இந்தியர்களைச் சுலபத்தில் பார்க்கலாம். அப்பகுதிக்குள் யாரும் வந்தால் பெண்கள் எழுந்து, அவர்கள் கடந்து சென்றபின் மீண்டும் தொடங்குவார்கள். ஆனால் ஆண்கள் வெட்கமற்று அப்படியே உட்கார்ந்திருப்பார்கள். இந்த மலக்குப்பையால் உண்டாகும் உபாதைகளைச் சொல்லி மாளாது. நாற்றம் நோய் உண்டாக்கும், மல மேட்டில் மொய்க்கும் பூச்சிகள் எல்லாவிதமான நோய்த்தொற்றுக்கும் அடிப்படை ஆதாரமாக விளங்கும். நூற்றாண்டுகால பழக்கமாதலால், கிராமத்துவாசிகளுக்கு இதன் கோரமுகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கழிப்பறையைப் பயன்படுத்தச் சொல்லி வற்புறுத்தியும், இயலாமை அல்லது போதாமைக் காரணங்களால் இன்னும் இத்திட்டம் இங்கு நிறைவேறிய பாடில்லை. நிலக்கிழார்கள் சொந்தமாக கழிப்பறை வைத்திருக்கிறார்கள். ஆனால் பழக்க வழக்கத்தையும் பண்பாட்டையும் மீறி, அவ்வூர் மக்களுக்கு எதுவும் பயிற்றுவிக்க துணியமாட்டார்கள்.
தொடக்கத்தில் எளிய சுகாதார விதிகளை அறிமுகப்படுத்திய காந்தி, 1935ஆம் ஆண்டில் தாமே ஒரு துப்புரவுப் பிரசாரத்தைத் தொடங்கி வைத்தார். கிராமத்தினரை ஊக்கப்படுத்தி ஒன்றிணைக்க இதுவொன்றுதான் வழியாக இருந்தது. இத்துப்புரவுப் பிரசாரம், தூய்மை செய்வதோடு வளமிக்க பயனொன்றைக் கனியாக அறுவடை செய்யும் நோக்கத்தைப் பிரதானமாகக் கொண்டிருந்தது. அதன் சிறப்பம்சங்கள் சில பின்வருமாறு:
1) மனிதக் கழிவுகளை மண்மூடி புதைத்து மணல்மேடுகளாக்க வேண்டும். பின் அவற்றை வீட்டுத் தோட்டத்திற்கோ, வயல்வெளிக்கோ உரமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
2) இருபாலர்களுக்கும் பிரத்தியேக இடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். ஓர் அடி ஆழமும் ஆறு அங்குல அகலமும் உள்ள பல குழிகளைச் சீரான இடைவெளியில் தோண்டி, அவற்றுள் மண்புதைத்த கழிவுகளைக் கொட்டி மூடவேண்டும். இத்திட்டத்தின்படி வாராவாரம் ஒவ்வொரு இடத்தைச் சுத்தம் செய்தல் வேண்டும்.
3) பொது கழிப்பிடங்கள் நிர்மாணிக்கவும், ஏழை நடுத்தர மக்கள் தங்கள் குடிசையில் கழிப்பிடம் கட்டிக்கொள்ளவும் உதவி செய்தல் அவசியம்.
1935ஆம் ஆண்டின் மார்ச் மாத மத்தியில் தொடங்கப்பெற்ற இப்பிரசாரம் தொடர்ந்து சில மாதங்கள் வெற்றிகரமாக நடைபெற்றது. சாலையோரம், வயல்வெளி, கால்வாய் என்று மனித மலம் கொட்டிக்கிடக்கும் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் காந்தியின் சீடர்கள் சல்லடையிட்டு சலித்தார்போல சுத்தம் செய்வதைக் கிராம மக்கள் அன்றாடம் பார்த்தனர். அத்தோடு ஊர் மக்களிடம் உரையாடல் வளர்த்து சுகாதாரம் பேணுவதன் அவசியத்தைச் சொல்லி பிரசாரத்திற்கு ஆள் சேர்த்தனர். ஹரிஜன் எனும் தன் வாராந்திரப் பத்திரிக்கையில் இப்பிரசார நடவடிக்கையையும், அதன் முன்னேற்றத்தையும், அதன் அவசியத்தையும் அறிவியல்பூர்வச் சான்றுகளுடன் வெளியிட்டார், காந்தி. தம்மால் எழுத இயலாதபோது, களப்பணியாளர்களைக் கொண்டு கட்டுரைகள் வெளியிட்டார். கிராமந் தழுவிய செயல்பாடாக இத்திட்டம் வளர்ச்சிப் பெற்றது. இதனால் மக்களிடையே கண்ணியமும் சுகாதார மனப்பாண்மையும் ஒப்பீட்டளவில் உயர்ந்தன. செய்யும் தொழிலைப் புனிதமாகக் கருத்துருவாக்குதில் இத்திட்டத்திற்கு முக்கியப் பங்கு உள்ளதை யாரும் மறக்க முடியாது. இன்றும் இப்பிரச்சாரம் வெற்றிகரமாக நடைப்பெற்று வருகிறது.
0
காலை பத்து மணிக்கு முதல் வேளை உணவு. வெப்பமண்டலச் சூரியனின் தகிக்கும் வெள்ளை நிற வெளிச்சம் முற்றத்தை முழுவதுமாக நனைத்திருந்தது. தூண்கள் அலங்கரித்த வராண்டா முகப்பின் இடப்பக்கம், விரிப்புகளைப் பரப்பி வைத்தனர். மகாத்மா காந்தியின் ஆசிரமத்தில் வாழும் குழுந்தை முதல் முதியோர் வரை, அனைவரும் வரிசையாக அவ்விரிப்பின்மேல் அமர்ந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒரு செப்புத்தட்டு வைக்கப்பட்டது. பெரிய பானைகளிலிருந்து உணவும் சப்பாத்தியும் பரிமாறிக் கொண்டு வந்தனர் இருவர். உணவைப் பொறுத்தமட்டில் பாலிஷ் செய்யப்படாத அரிசிச் சோற்றோடு, காய்கறியும் பழங்களும் பரிமாறப்பட்டன. உணவு பரிமாறும்வரை நீடித்திருந்த அமைதி, ஒருகணம் கூட்டாகக் கலைந்தது:
‘ஓம் ஸஹ நாவவது; ஸஹ நெள புனக்து; ஸஹ வீர்யம் கரவாவஹை; தேஜஸ்வி நாவதீதமஸ்து; மா வித்ஷாவஹை; ஓம், சாந்தி, சாந்தி, சாந்தி!’
மொழிபெயர்ப்பு: ‘நம்மை காப்பாராக; நாம் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக; நாம் அனைவரும் ஈடுபாடுமிக்க ஆற்றலுடன் உழைப்போமாக; கற்றது நமக்கு பயனுள்ளதாக விளங்கட்டும்; எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக. அமைதி, அமைதி, அமைதி!’
அங்கு ஊக்கமும் சகோதர உணர்வும் நிலவியது. தம் உடல் உழைப்பினால் பெற்ற உணவு ஆகையால், எல்லோரும் மகிழ்ச்சியாக அருந்தி முடித்தனர். கொஞ்ச நேரம் இளைப்பாற, மனம்விட்டு அரட்டை அடித்தனர். மகாத்மா காந்தி ஒவ்வொரு நகைச்சுவைத் துணுக்காக இறக்கிக் கொண்டிருந்தார். குறிப்பாக அருகிலிருந்த சின்னப் பையனிடம். அவரோடு அவன் அணுக்கமாக ஒட்டிக்கொண்டான். எல்லோரும் அதிகாலை நான்கு மணியில் இருந்து வேலை செய்யத் தொடங்கினவர்கள். ஆகவே மேஜையைச் சுத்தப்படுத்திவிட்டு சிறிய உறக்கத்திற்குத் தயாரானார்கள்.
(தொடரும்)
__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.