மகாத்மா காந்தியின் போதனைச் சத்துவங்கள், அவர் தொடர்ச்சியாக அறிவுறுத்தும் பதினொரு சூளுரைகளில் பொதிந்திருக்கின்றன. இந்தியர்பாலும், உலகெங்கலும் உள்ள பலதரப்பட்ட மக்களின் நம்பிக்கையாலும் இச்சூளுரைகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. பல தேசங்களில் வியாபித்துள்ள அறிவுஜீவிகளின் மனவோட்டங்களுடன் இச்சித்தாந்தக் கருத்துக்கள் ஒத்துப்போகின்றன.
மேலோட்டமாகப் பார்த்தால் இவையெல்லாம் கீழைத் தேயத்தில் வாழும் ஒரு சாமியாரின் போதனைகள் போலத் தோன்றும். பண்டையக் காலத்தில் அதுபோன்ற சாமியார்களுக்குத் தெளிந்த பார்வையிருந்தாலும், சமூகத்துடனான தொடர்பை அவர்கள் முற்றிலும் நிராகரித்து வாழ்ந்துள்ளனர். சமூகம் ஒன்றும் உதிர்ந்துபோன பரவெளி கிடையாது. ஆசைகளும் நிராசைகளும் இறையியல் சிந்தனைகளும் ஒன்றுகலந்த மயக்கமே நாகரிக உலகம். ஆனால் பொருள்முதல்வாதிகள் கருத்துமுதல்வாதப் பிம்பங்களை ஒவ்வொன்றாக உடைப்பதுபோல், அந்தப் பழங்கால சாமியார்கள் இறையியல்வாதத்திற்கு ஆதரவு பெருகும்படி ஏனையச் சித்தாந்தங்கள் அனைத்தையும் மட்டுப்படுத்தினர்.
ஆனால் நான் பார்த்த அளவில், மகாத்மா காந்தி என்பவர் இறையியல்பூர்வமான இலட்சிய உலகை நிர்மாணிக்கும் ஏக்கம் கொண்டவர் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏற்றுக்கொள்ளவும் பின்பற்றவும் கடினமானச் சூளுரைகளைச் சுமந்துகொண்டு, இயங்கக்கூடிய இந்து சமுதாயம் ஒன்றை உருவாக்கும் நபராகத் தெரிகிறார். இச்சூளுரைகளுக்கும் இந்து சமயத்திற்கும் இடையிலான ஒற்றுமையை நூல்பிடித்துப் பார்த்தால், அதன் நேரடி அம்சங்கள் முகத்திற்கு நேரே வெளிப்படும்.
இனி அச்சூளுரைகளை ஒவ்வொன்றாக மதிப்பிட்டுப் பார்க்கலாம். நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களாக மகாத்மா காந்தி எவற்றைக் குறிப்பிடுகின்றார் என்று இதன் மூலம் தெரியவரும்.
நாவடக்கம் என்பது ஒருபோதும் மதச் சம்பிரதாயம் கிடையாது. ஆரோக்கியமிக்க நல்ல பழக்கமென்று சொல்லப்பட்டிருக்கிறது. மனிதன் தான் உண்ணும் உயிரினங்களின் குணாதிசயங்களைப் பெறுகிறான் என முதலில் சொன்னது இந்து மதமாக இருக்கலாம். ஆனால் இன்றைக்கு அதுகுறித்து அறிவியல் பூர்வமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மேற்கில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் தரவுகளைக் காந்தி பயன்படுத்திக் கொள்கிறார்.
எல்லோரும் துறவறம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் இந்து சமூகத்தைச் சீர்திருத்தி, மேம்படுத்த நினைப்பவர்கள் எவ்வித இச்சைகளுக்கும் இடமளிக்கக் கூடாது. எனவே சுயக்கட்டுப்பாடு மற்றும் கருத்தடை முறைமைகளின் வாயிலாக இதனை அடைய நினைத்தனர். சரீரம் தொடர்பான பாலியல் தேவைகள், குழந்தைப் பிறப்புக்காக மட்டுமே வரையறுக்கப்பட்டன. இந்து சமயத்தில் பாலியல் வாழ்க்கை இளமையிலேயே தொடங்கிவிடுகிறது. ஆகவே அதை மட்டுப்படுத்துவதன் விளைவுகளில் மகாத்மா காந்திக்கு அனுபவம் உண்டு. சுயக் கட்டுப்பாட்டினால் உண்டாகக் கூடிய தீய விளைவுகளைக் காட்டிலும், அதனை அடக்கி ஆள்வதால் ஏற்படும் நஷ்டங்கள் மேலானது என்று அவர் நினைத்தார்.
கள்ளாமை என்பது பிறர் பொருட்களின் மீது களவுப் பார்வை செல்லாமல் தடுக்கும் உபாயம். இந்து சமூகத்தில் இப்பழக்கம் பெரிதும் மலிந்திருந்தது. காந்தி இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார். சுரண்டலுக்கு எதிராகவும் ஆதரவாகவும் சிந்தையுள்ளவர்கள் காந்தி முன்னிறுத்தும் எளிமையான ஒரு சூளுரையை எதிர்கொள்ள நேரிடும் – உடைமைத் துறத்தல். சொத்துரிமையில் காந்திக்கு இருந்த மதிப்பும் மரியாதையும், இச்சூளுரைமேல் முரண்பாட்டைத் தோற்றுவிக்கலாம். ஆனால் அவரைப் பொறுத்தவரை இது முரண்பாடு அல்ல. பூமியில் உள்ள உடமைகள் எல்லாம் மரபுவழிப்பட்டதாக மனிதர்களுக்குச் சொந்தமானது என்பது அவர் கொள்கை. மிகச் சிலர்தான் மூலப் பொருட்களில் இருந்து அவற்றைப் பிரித்தெடுக்கின்றனர். இன்னும் அரிதாக, கூலியாட்கள் வைத்துச் சுரண்டி சிலர் அதன் உரிமையத் தனதாக்கிக் கொள்கின்றனர். 1935ஆம் ஆண்டில் செல்வம் சேர்ப்பவர்களைக் காந்தி கொண்டாடினார். எனினும் அவர்களை உரிமையாளர் எனச் சொல்லாமல், அறங்காவலர் எனச் சொல்வதே சரியென வாதிட்டார். செல்வந்தர்கள் எல்லோரும் அறங்காவலர் போல் விளங்கி தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஏனெனில் உடைமை எல்லாம் கூட்டுரிமைக்கு உட்பட்டது. இதனால் உடைமையைத் துறப்பதில் உள்ள மற்றொரு முக்கியத்துவத்தை என்னால் காண முடிகிறது. நோய்த்தடுப்புக் காரணங்களுக்காக, கிருமிகளை எதிர்த்துப் போரிடும் வல்லமை கொண்ட தடுப்பூசி மருந்துகளைத் தம் மதச் சம்பிரதாயத்தில் இந்து மதம் உட்செறித்துக் கொள்கிறது. அந்த அசகாய சக்தி கொண்ட தடுப்பூசியின் பெயர் கம்யூனிசம். இந்துப் பேராயத்தில் ‘உடைமைத் துறத்தல்’ என்ற பெயரால் அது அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள தனி நபர் அல்லது கூட்டு நிறுவனங்களுக்கு ‘உடைமைத் துறத்தல்’ ஒன்றும் அந்நியமானது அல்ல. அநாதி காலந்தொட்டே, கிராமச் சமுதாயங்களாக ஒன்றிணைந்து வாழப் பழகிப்போனவர்கள். எல்லையோர மாகாணங்களோடு இவை பொருந்திப்போகும் பாங்கை முன்பே விவரித்துள்ளேன். அவை இஸ்லாமியர்களின் வாழ்க்கையோடு தொடர்புடையது. அதேபோல் இங்கு இந்துகளுக்களும் ஒருங்கிணைந்து வாழ்கின்றனர்.
மேற்சொன்ன இந்து சமூகத்தில் சிறியதும் பெரியதுமான குடும்பங்கள் இன்றும் பெருநிலத்தில் தங்களுக்கு உரித்தான சிறு பகுதியைப் பிரதானமாகக் கொண்டு வாழ்கின்றன. விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த வேலைகளே இவர்களுக்கு வாழ்வாதாரம். வேலைப்பிரிவுமுறை இங்கு கண்டிப்பாகப் பின்பற்றப்படுகிறது. புது சமூகம் உருவாகும்போது அவர்களுக்கான வேலைப் பிரிவுகளும் உடனடியாக உருவாக்கப்படுகின்றன. நூறு முதல் ஆயிரக்கணக்கான ஏக்கர் வரை பரவிக் கிடக்கும் நிலத்தை சிறிது சிறிதாகப் பங்கிட்டு, தேவையான அனைத்துப் பண்டங்களையும் அதில் உற்பத்தி செய்வர். விளைச்சலின் பெரும்பாண்மையும் உள்ளூர் மக்களின் பயன்பாட்டிற்குத்தான். இதுவரையிலும் ‘பண்டம்’ என்ற பேச்சே கிடையாது. வேலைப்பிரிவு முறையினால் சமூகச் சமநிலையும் தவறுவது இல்லை. மக்கள் எல்லோரும் பண்டமாற்று முறையைப் பின்பற்றுவதால் உண்டாகும் பயன் இது. மிஞ்சுவதே பண்டமாகும். அதில் ஒரு பங்கை மட்டும் அரசாங்கத்திற்கு அளிப்பர். நிலவரி போல் அவர்கள் அதை வரவு வைத்துக் கொள்வர்.
இம்மக்கள் இந்தியா முழுவதும் விரவியுள்ளனர். சில பகுதிகளில் ஒட்டுமொத்த நிலத்தையும் ஒரேயடியாகச் சீர் செய்து ஏர் உழுகின்றனர். எனவே நிலத்தில் கிடைக்கும் மகசூல் பொதுவில் வைத்துப் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. அதே சமயம் நூல் நூற்றலும், தறி ஓட்டுவதும் துணைமைத் தொழில்களாக ஒவ்வொரு வீட்டிலும் மேற்கொள்கின்றனர். இவர்களுக்கு மத்தியில் ‘ஊர் பெரியவர்’ என்று ஒருவர் இருப்பார். நீதிநாயகம், காவல், வரி வசூல் முதலான அனைத்து வேலைகளும் அவர் வசம். உழவு முதலான பிற வேளாண் செலவுகளை ‘கணக்கர்’ பார்த்துக் கொள்வார். குற்றவாளிகளைத் தண்டிப்பதும், அந்நியர்களைப் பாதுகாத்து வழியனுப்புவதும் மற்றொரு அலுவலருக்கு விதிக்கப்பட்ட வேலை. வேற்றுச் சமூகத்து ஆட்கள் உள்ளே வராதபடி ஊர் எல்லையில் நிற்கும் அதிகாரி காவல் காப்பார். தண்ணீர் மேற்பார்வையாளர் பொதுத் தொட்டியில் இருந்து ஒவ்வொருவர்க்கும் நீர் திறந்துவிடுவார். பிராமணர்கள் மதச் சடங்குகள் செய்வர். உபாத்தியாயர்கள் மணல்மேல் அமர்ந்து எழுதப் படிக்கக் கற்றுக்கொடுப்பர். ஜோசியக்காரர்கள் விதை நடுவதற்கும் அறுப்பு தொடங்குவதற்கும் நேரம் குறித்துத் தருவார்கள். கொல்லரும் தச்சரும் வேளாண் உபகரணங்களை உற்பத்தி செய்தும், பழுது பார்த்தும் கொடுப்பார்கள். கிராமத்திற்குத் தேவையான அனைத்துப் பாத்திரங்களையும் செய்வது குயவரின் வேலை. நாவிதர்கள், டோபிகள், பொற்கொல்லர் முதலானோர் ஊர் மொத்தத்திற்கும் பொதுவானவர்கள். கவிராயர்கள் சிலர் அங்கும் இங்கும் என்று ஏதாவது ஓர் ஊரில் இருப்பது உண்டு. இங்ஙனம் மேற்சொன்ன அனைவரும் ஒன்றுகூடி சமுதாயமாக வாழ்கின்றனர். ஒருவேளை மக்கட்தொகை அதிகரித்தால், வெற்றிடத்தில் இதுபோல் மற்றொரு அமைப்பை நிறுவிக்கொள்கின்றனர் . . . . தன்னிறைவான ஆசியச் சமூகங்கள் தம்மளவில் எளிய முறையில் தொடர்ச்சியாக உருப்பெறுகின்றன. எதிர்பாராத விபத்துக்கள் ஏற்பட்டாலும், மீண்டும் முன்பிருந்த அதே நிலைக்கு முகிழ்க்கின்றன. எளிய முறையில் கட்டமைக்கப்படுவதே இவற்றின் மீளுருவாக்கப் பின்னணியில் உள்ள ரகசியம். ஆளும் அரச மரபில் தொடர்ச்சியாக மாற்றம் ஏற்பட்டாலும், கிராமிய அளவில் மாற்றம் ஏற்படாததற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். அரசியல் வானில் ஏற்படும் எத்தனைப் பெரிய இடிமுழக்கங்களும், கிராமியப் பொருளாதாரத்தில் சிறு அசைவும் உண்டாக்காமல் வலுவிழந்து போயின. (Karl Marx, Capital, vol, 1, pp. 391-4, Kerr edition)
தனிமனிதனின் தற்சார்பை மையமிட்ட மேலை நாடுகளின் நாகரிக வளர்ச்சி இந்தியாவுக்குள் நுழையும்போது, உள்ளூர் பொருளாதாரம் நொறுங்கிப்போனது. நன்மைகளைக் காட்டிலும் அதனால் ஏற்பட்ட கேடுகளே அதிகம். நகரங்களை மையமிட்ட வளர்ச்சியினால் 90% கிராம வாழ் மக்கள் ஏழ்மை நிலைக்கு உந்தப்பட்டனர். இந்திய கிராமங்களைச் சீரமைக்க விரும்பிய மகாத்மா காந்திக்கு மேற்கின் முதாளித்துவக் கொள்கையும், ரஷ்யாவின் கம்யூனிசக் கொள்கையும் (மேலை நாட்டின் மாறுதலுக்கு உட்பட்ட கம்யூனிசமும்) உவப்பளிக்கவில்லை. எனினும் மேலை நாடுகளின் ‘தனியார் சொத்துடைமையா’, ரஷ்ய நாட்டின் ‘உடைமைத் துறத்தலா’ எனக் கேட்டால், அறங்காவலர் முறையில் சொத்துச் சேர்வதைக் காட்டிலும், இந்தியக் கிராமப்புற மக்களுக்கு பழகிப்போன ‘உடைமைத் துறத்தல்’ கொள்கையே சரியெனச் சொன்னார். ஆனால் கிராம மறுசீரமைப்பின் அடிப்படைக் கட்டுமானங்களாக காந்தி கண்ட கனவில் இன்னும் இரண்டு சூளுரைகள் மீதமிருந்தன: உடல் உழைப்பு மற்றும் சுதேசி (உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்கள்).
இவ்விரண்டு சூளுரைகளும் ரஸ்கின் எழுதிய ‘உழைப்பவனுக்கும் உற்சாகம்’ என்ற நூலால் உந்தப்பட்டவை. ‘ரஸ்கின் எழுதிய இப்புத்தகத்தில், எனது நம்பிக்கைகள் சில ஆழமாகப் பிரதிபலிக்கின்றன. அதனால்தான் என் வாழ்க்கையை வசீகரித்ததோடு மட்டுமல்லாமல் ஒரேயடியாகப் புரட்டிப்போட்டன’ என்று மகாத்மா காந்தி கூறுகிறார். இதில் அவர் குறிப்பிடும் மையக் கொள்கைகள் மூன்று:
(1) தனி மனிதரின் சந்தோஷம், ஒட்டுமொத்த மனிதக்குலத்தின் சந்தோஷத்தில் அடங்கியுள்ளது.
(2) நம்மெல்லோருக்கும் வாழ்வாதாரம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் சமமாக வழங்கப்பட்டுள்ளதால், வக்கீல் தொழிலும் நாவிதர் தொழிலும் ஒரே அளவிலான மதிப்பு உடையன.
(3) நிலத்தில் உழவு செய்பவரும், கைவினைப் பொருட்கள் செய்பவரும் வாழும் வாழ்க்கைதான் உயர்வானது.
முதல் கொள்கை தார்மீக அறத்துடன், பொருளாதாரம் மற்றும் மதவியல் போதனைகளுக்கு பொருந்தும். இரண்டாம் கொள்கை, இஸ்லாமிய மதத்துடன் தொடர்புடையதுபோல் எனக்குத் தோன்றுகிறது. இந்து மதத்தின் செய்தொழில் குறித்த அடுக்குநிலைக்கு, முற்றிலும் மாறான கொள்கையை காந்தி ஏற்றுக்கொண்டிருந்தார். ஒருவேளை இது இஸ்லாமிய – இந்துமத ஒருங்கிணைவில் உதித்த எண்ணமாக இருக்கக்கூடும். மூன்றாவது கொள்கைக்கு விசேஷ முக்கியத்துவம் உண்டு. இந்தியர்களுக்குப் படைப்பாக்கல் உள்ளுணர்வு அதிகம். இக்கொள்கையினால் கைவினைக் கலைஞர்களின் வாழ்க்கைப் பாதுகாக்கப்படுகிறது. நிலத்தில் உழவு ஓட்டும் தொழிலாளர்கள் இயற்கை விதிகளுடன் தொடர்ச்சியாக உறவு வைத்துக்கொள்ள இவை உதவுகின்றன. இயற்கையிடமிருந்து விலகி வாழ்வதால், மனித வாழ்க்கையில் ஆரோக்கியமற்றுப்போய் செயற்கைத்தனம் மிஞ்சும்.
இந்திய விவசாயிகள் உற்பத்தி செய்யும் கைவினைப் பொருட்களுக்குச் சந்தை மதிப்புக் குறைவதால், அவர்களின் வாழ்வாதாரமும் வேலையும் கேள்விக்குறியாகின்றன. வருடத்தின் சில மாதங்கள் மட்டுமே அவர் நிலத்தில் பாடுபடுகிறார். அதை வைத்துக்கொண்டு வருடம் முழுக்க வாழ்க்கையை நகர்த்துவது எளிய காரியமல்ல. இதை முன்பே சொல்லியிருக்கிறேன். ஆகவே இதுபோன்ற வேலைகளை மீண்டும் சீர்தூக்கி மீட்டுருவாக்குவது, பொருளாதாரத் தேவையென்று கவனப்படுத்த விரும்புகிறேன். முதலில், இயந்திரங்களால் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை விவசாயிகள் வாங்க முடியாது என்பதை உணர்வோம். தாமே சுழற்றி, நூல் நூற்று ஆடை நெய்ய வேண்டும். இதன்மூலமாக இதைச் சார்ந்துள்ள துணைமைத் தொழில்களுக்கு அவர் உயிரூட்ட வேண்டும். இவ்வாறு கைவினைப் பொருட்களாய் உற்பத்திச் செய்யப்படும் பண்டங்களுக்குச் சந்தை மதிப்பு உண்டாக, ஒரே வழிதான் இருக்கிறது: சுதந்திர எண்ணம் கொண்ட இந்தியர்கள் சுதேசிய பண்டங்களை மட்டுமே வாங்க வேண்டும், அவற்றை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அந்நியப் பொருட்களை எதிர்த்து, சுதேசியப் பண்டங்களை ஊக்குவிக்கும் திட்டத்தை நாடு தழுவிய அளவில் வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர், மகாத்மா காந்தி. இதையொரு தேசியத் திருவிழாவாகவும், மத நம்பிக்கையாகவும் கட்டமைத்தார். இத்திட்டம் மீண்டும் மக்களைப் பழங்காலத்திற்கு அழைத்துச் செல்கிறது, இயந்திர வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக விளங்குகிறது எனத் தீவிரமாக எதிர்த்தவர்கள் கூட, கிராமப்புற மக்களின் பொருளாதார மேன்மையைக் கண்கூடாகப் பார்த்தனர். விவசாயக்குடிகளின் வாழ்க்கைத்தரம் மெல்ல மேலெழுந்தது.
அனைத்து மதத்தாரையும் சமமாக மதித்தல்.
இச்சூளுரை இந்துக்களோடு பிற சமயத்தாரின் வேண்டுதலையும் நேரடியாகக் கேட்டுக்கொண்டது. குறிப்பாக இஸ்லாமியர்களிடம் இதை அதிகளவில் கொண்டுசென்றனர். இந்து – முஸ்லிம்களிடையே நம்பிக்கை ரீதியிலான வேற்றுமைகளைக் காட்டிலும் இனம், பண்பாடு மற்றும் மொழி ரீதியிலான வேற்றுமைகள் மிகவும் குறைவு. குறைந்தபட்சம் இந்தியாவிலேனும் இந்நிலை நீடிக்கிறது என்று சொல்லலாம். சமத்துவப் பார்வை குறித்த உரிமைக் கோரல்கள், பிரம்ம – சமாஜ்ஜிய காலத்தில் தோற்றம் பெற்றன. காந்தி அதைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டார். என்னதான் இக்கொள்கையில் காந்தி விடாப்பிடியாக இருந்தாலும், காந்தியைப் பின்தொடர்பவர்கள் அகிம்சைக் கொள்கையைப் பற்றுக்கோடாகப் பிடித்திருந்தாலும், பல சச்சரவுகளைச் சுமூகமாகத் தீர்த்து வைத்திருந்தாலும், இரு சமூகத்திற்கிடையே நிலவும் வேறுபாட்டை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. இவ்வேறுபாடுகளை ஆழ்ந்துப் படித்து, நேர்பட எதிர்கொண்டு, மாற்றுக் கோணங்களில் சீர்செய்ய வேண்டும்.
இந்து மதச் சக்கரத்தில் தீண்டாமை குறித்து பேசப்படுகிறது. நான்கு கோடி மக்கள் இந்து மதத்திற்கு அப்பால் உள்ளனர். இஸ்லாமியத்தில் சாதிய வேற்றுமைகள் இல்லாததால், அவர்கள் எல்லோரும் இஸ்லாமியச் சமயத்திற்கு மதம் மாறிப்போவார்களோ என்று இந்துக்கள் அஞ்சுகின்றனர். மேற்கொண்டு ஆங்கில அரசாங்கத்தின் உதவியால் இஸ்லாமியர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையும், நிகரான அரசியல் உரிமையும், கல்வித் தரத்தில் போதிய வளர்ச்சியும் கிடைத்திருக்கிறது. எனவே அந்நியர் ஆட்சிக்கு அவர்கள் ஆதரவாகச் செயல்பட இவை தூண்டுதலாக இருக்கலாம்.
ஆனால் காந்தி இதையெல்லாம் கணக்கிட்டதாகத் தெரியவில்லை. தீண்டாமைக்கு எதிராக அவர் மேற்கொள்ளும் போராட்டம் மனிதநேயமிக்கச் செயல். ஒருவேளை காந்தி இந்துவே இல்லை என்றாலும் தீண்டாமைக்கு எதிராகப் போராடிக் கொண்டுதான் இருப்பார் என்று கருதுகிறேன். இந்துவாக இருப்பதால் மதம் சார்ந்தும் யோசிக்கவேண்டி இருக்கிறது. நூற்றாண்டுகால கொடுஞ்செயல்களால் தம் சக உயிர்களுக்கு பாவம் இழைத்த இந்துக்கள் கடுந்தவம் புரிந்து பாவத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார். தீண்டாமை நீடிக்கத்தான் வேண்டுமென்று இந்துமதம் சொன்னால், அப்பேற்பட்ட மதம் இல்லாமல் போவதே மேல் என்கிறார். இதனால் பழமைவாத இந்துசமய அரசியல் கட்சி உறுப்பினர்கள், கணிசமான அளவில் இயக்கத்திற்கு ஆதரவளித்தனர். தீண்டத்தகாதோர் என ஒதுக்கிவைத்த நான்கு கோடி பேரும் இஸ்லாமியர்கள் பக்கம் சாய்ந்துவிட்டால், இந்து பெரும்பான்மை அறுபட்டுப் போய்விடும் என்ற அசூயை இந்துக்களிடையே நிலவுகிறது. அவ்வாறு நிகழாமலிருக்க, இந்துக்கள் அவர்களோடு இணங்கிச் செல்லவேண்டும்.
‘தவம்’ பூணும் திட்டம், இக்காரியத்தை இந்து சமயத்தோடு ஐக்கியப்படுத்தி பிரத்தியேகப்படுத்துகிறது. ஆகவே தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்தில் இந்து – முஸ்லிம்களுக்கிடையே விரும்பத்தகாத சில நீச சந்தர்ப்பங்கள் உருவாகியுள்ளன. மகாத்மா காந்திக்கும் இதனால் தனிப்பட்ட முறையில் வருத்தம் உண்டு. சக இஸ்லாமியன், சமூகத்தில் உள்ள தீண்டத்தகாதவர்களைத் தன் சமயத்தின்பால் வசீகரித்துவிடுவான் என்று இந்துக்கள் சந்தேகிக்கின்றனர்; மதம் சார்ந்த இனவியல் அரசு உருவாக்கத்தில் இந்துக்கள் எப்போதும் முனைப்புடன் இருப்பதாய், இஸ்லாமியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். என்னைப் பொறுத்தவரை இரு தரப்பினரும், இந்த விஷயத்தில் தேவையில்லாத பதட்டத்தை வளர்த்துக்கொண்டுள்ளனர். தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்தை நாடு தழுவிய அளவில், மத அடையாளங்களுக்கு உட்படுத்தாமல் கொண்டுசேர்த்தால், இதற்கொரு நல்ல முடிவை எட்டலாம். மதத் தளங்களில் இருந்து ஒழிப்புப் பிரச்சாரங்கள் நழுவாதவரை, இந்து – இஸ்லாமியர்களிடையே சச்சரவுகள் ஓயாது.
(தொடரும்)
__________
ஹாலித் எடிப் எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம்.