Skip to content
Home » நாலந்தா #1 – தோற்றம்

நாலந்தா #1 – தோற்றம்

நாலந்தா

உலகின் முதல் சர்வ தேச பல்கலைக்கழகம் என்று புகழப்படும் நாலந்தாவின் பெயர்க் காரணம், தோற்றம், செயல்பாடு, வளர்ச்சி, அழிவு அனைத்தையும் ஆதாரபூர்வமாக விவரிக்கும் தொடர். தமிழகத்தின் மகத்தான வரலாற்று ஆசிரியரான திரு கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி எழுதிய அற்புதமான ஆய்வு நூல்.

0

‘பெரு மதிப்புக்குரிய நாலந்தா, ஒரு கல்விச் சுரங்கம்.’ – தாரநாத்

நவீன கால படகாவ் (வட கிராமம், ஆலமர கிராமம்) ஆரம்ப கால சமண, பௌத்த நூல்களில் மிகுதியாக இடம்பெறும் பகுதி. ராஜகிருஹ நகரத்தின் வளம் கொழிக்கும் புறநகர்ப் பகுதி நாலந்தா. மஹாவீரர் 14 சதுர்மாஸ்யங்களை (பயணங்களில் இருந்து ஓய்வு எடுக்கும் மழைக்காலங்களை) இங்குதான் கழித்தார் என்று சமண நூல்களில் இருந்து தெரியவருகிறது. ராஜகிருஹத்தில் இருந்து 14 மைல் தொலைவில் நாலந்தா இருக்கிறது. பௌத்த நூல்கள் இவற்றை இரண்டு தனி பகுதிகளாகவே குறிப்பிடுகின்றன. இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியை அந்தரா ச ராஜக்ருஹம், அந்தரா ச நாலந்தம் என்றே குறிப்பிடுகின்றன.

புத்தரும் மஹாவீரரும் இந்தப் பகுதிக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் வந்திருப்பதாக இந்த நூல்கள் குறிப்பிடுகின்றன. புத்தர் இங்கு வரும்போதெல்லாம் பவாரிகா என்ற மாந்தோப்பில் தான் தங்குவது வழக்கம். புத்தர், அவருடைய ஏராளமான சீடர்கள் பின் தொடர, தனது இறுதி யாத்திரையை நாலந்தாவை நோக்கியே மேற்கொண்டதாக மஹாபரிநிர்வாணசூக்தம் தெரிவிக்கிறது.

புத்தரின் பிரதான சிஷ்யர் ஒருவர் பிறந்ததும் இறந்ததுமான நல கிராமம், இந்த நாலந்தாவாகத்தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மௌதகல்யாயண என்ற இன்னொரு புகழ் பெற்ற சீடரும் இதன் அருகில் தான் பிறந்தார்.

பெயர்க்காரணம்

நாலந்தா என்ற பெயருக்கான காரணம் மற்றும் புத்தர் இங்கு வந்தபோதெல்லாம் தங்கிய மாந்தோப்பு பற்றி யுவான் சுவாங் ஒரு செவிவழிக் கதையைக் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு மடாலயத்துக்கு (நாலந்தாவுக்கு) தெற்கில் இருக்கும் இந்த மாந்தோப்பில், நாலந்தா என்ற டிராகனின் (பிரமாண்ட நாகத்தின்) குளம் இருந்தது. எனவே இதற்கு இந்தப் பெயர் வந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த மாந்தோப்பானது, இங்கு அமையவிருந்த மடாலய பல்கலைக்கழகத்துக்காக 500 வணிகர்களால் பத்து கோடி தங்க நாணயங்கள் கொடுத்து வாங்கப்பட்டு புத்தருக்கு தானமாக வழங்கப்பட்டது. அப்படியாக புத்தர் வந்து தங்கியபோதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மாங்காடு வெட்டி சமப்படுத்தப்பட்டு நாலந்தா மடாலயம் பின்னாளில் உருவாகியிருக்கிறது என்று யுவான் சுவாங் குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்.

இந்த மாங்காட்டில் இருந்த குளத்தில் வசித்த டிராகன் அல்லது நாகத்தின் பெயரில் இருந்தே இந்த நாலந்தா என்ற பெயர் இந்த மடாலயத்துக்கு வந்தது என்பதை யுவான் சுவாங் மறுதலிக்கவும் செய்கிறார். பு ஸாவான (போதிசத்துவரான) ஜு லாய் (புத்தர்) மன்னராக இருந்தபோது கொடுத்த ‘எல்லையற்ற தானத்தை’ இது குறிக்கிறது என்று சொல்கிறார். ‘நா அலம் தா’ என்றால் ‘எல்லையற்று, சோர்வின்றி தானம் வழங்குதல்’ அல்லது ‘கொடுத்துக் கொடுத்துத் தீராத’ என்று அர்த்தம் என்று சில சீன அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஐந்து இளவரசர்களிடமிருந்து கிடைத்த எல்லையற்ற தானங்களின் மூலம் உருவான மடாலயம் பல்கலைக்கழகம் என்றும் இதற்கு அர்த்தம் கொடுத்திருக்கிறார்கள்.

யுவான் சுவாங்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர், இந்த செவி வழிக் கதைகள் அனைத்தையும் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இந்தப் பகுதியின் பூர்வ உரிமையாளராக வேறொருவரைப் பற்றிய செவி வழிக் கதையைக் குறிப்பிடுகிறார். அதாவது, ‘இந்தப் பகுதி ஆரம்பத்தில் மாந்தோப்பாக இருந்திருக்கவில்லை. அமரன் என்ற ஸ்ரேஸ்தினின் (பெரு வணிகரின்) தோட்டம். புத்தருக்கு இந்தத் தோட்டத்தை வாங்கிக் கொடுத்த 500வணிகர்கள் அந்த நற்செயலின் மூலம் அர்ஹத்கள் (பிக்குகள்) ஆனார்கள். நாலந்தா மடாலயமானது ‘தடையற்ற தானம் பெற்ற’ மடாலயம் போன்றது. இந்த மடாலயத்தின் தெற்கே ஆம்ர தோட்டத்தின் நடுவே ஒரு குளம் இருக்கிறது. அந்தக் குளத்தில் நாலந்தா என்ற நாகம் வசித்துவந்தது. அதைச் சுற்றிக் கட்டப்பட்டதால் இந்த மடாலயத்துக்கு நாலந்தா மடாலயம் என்ற பெயர் வந்தது. ததாகதர் மாபெரும் மன்னராக இருந்தபோது இந்த இடத்தில் தன் தேசத்தின் தலைநகரை நிர்மாணித்தார். அநாதைகள் மற்றும் கைவிடப்பட்டவர்கள் மீது மிகுந்த கருணையுடன் இருந்தார். தன்னிடம் இருந்த அனைத்தையும் அவர்களுடைய நன்மைக்காக தானமாகக் கொடுத்துவிட்டார். ‘எல்லையற்ற தானம் வழங்கியதால்’ அதன் நினைவாக இந்த இடத்துக்கு நாலந்தா என்ற பெயர் வந்தது.’

அந்த வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் குறிப்பிட்டிருப்பதைப் பார்ப்போம்:

‘ஆம்ரா அல்லது அமர என்ற ஸ்ரேஸ்தினின் தோட்டமாக இருந்தது. ஐநூறு வணிகர்கள் இந்த இடத்தை பத்து லட்சம் தங்கக் கட்டிகள் கொடுத்து விலைக்கு வாங்கி புத்தருக்கு தானமாகத் தந்தனர். இங்கு தங்கியிருந்து புத்தர் மூன்று மாத காலம் மக்களுக்கு தனது கொள்கைகளை போதித்தார். அந்த வணிகர்கள் தாம் கொடுத்த தானத்தின் பலனாக அர்ஹத் (பௌத்த பிக்கு) கௌரவத்தை அடைந்தார்கள்.’

சீன பயணி ஐ சிங் (ஐ (ட்)சிங் (I tsing) நாகம் பற்றிய கதையைச் சொல்வதோடு, சே லி நா லன் தோ ம ஹோ பி ஹாலோ (ஸ்ரீ நாலந்தா மஹா விஹார்) இதிலிருந்துதான் உருவானது என்கிறார். இது சீன மொழியில், ‘புனித நாகத்தின் மகத்தான வசிப்பிடம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

‘மேற்குலகில் (அதாவது, சீனாவுக்கு மேற்குப் பகுதியில்) ராஜா அல்லது புகழ் பெற்றவர்கள், அல்லது கோவில்கள் போன்றவற்றைக் குறிப்பிடும்போது சே லி (ஸ்ரீ) என்ற முன்னொட்டைப் பயன்படுத்துவார்கள். அதற்கு உயர்வான, அதிர்ஷ்டமான, மகிழ்ச்சியான என்று அர்த்தம். ந லன் தோ (நாலந்தா) என்பது ஒரு நாகத்தின் பெயர். இந்தப் பகுதிக்கு அருகில் அந்த நாகம் வசித்துவந்தது. அதிலிருந்துதான் இந்த இடத்துக்கு இந்தப் பெயர் வந்தது. பி ஹா லோ (விஹார்) என்பது கோவிலைக் குறிக்கவில்லை. ஓர் வசிப்பிடம் என்பதையே குறிக்கிறது.’

விஹாரின் ஆரம்ப காலம்

இந்த நாலந்தா விஹாரம் எப்போது கட்டப்பட்டது என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. ஃபாஹியான் இது பற்றி எதுவுமே குறிப்பிட்டிருக்கவில்லை. எனவே அவர் இந்தியாவுக்கு வந்து சென்ற பின்னர்தான் இது கட்டப்பட்டிருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் யுவான் சுவாங்கும் ஐ சிங்கும் இந்த விஹர் மிக மிகப் பழங்காலத்தைச் சேர்ந்தது என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள். பிந்தைய காலத்தைச் சேர்ந்த மற்றும் உறுதியாக நம்ப முடியாத தாரநாத்தின் குறிப்புகளும் அதையே சுட்டிக்காட்டுகின்றன. அவை பற்றி விரைவில் பார்க்கவிருக்கிறோம்.

ஃபாஹியான் இது பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பதிலிருந்து அல்லது அவர் இது பற்றிக் குறிப்பிட்ட எதுவும் நமக்குக் கிடைக்காததில் இருந்து அவர் வந்தபோது இந்த இடம் புகழ் பெற்ற கல்வி மையமாக இருக்கவில்லை என்றே நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். யுவான் சுவாங், ஐ சிங் போன்றோர் வருவதற்கு வெகு காலத்துக்கு முன்பே எழுதப்பட்ட பௌத்த புனித நூல்கள் பலவற்றில் புத்தரும் அவருடைய சீடர்களும் வாழ்ந்தும் போதனைகள் செய்தும் வந்த இந்த மடாலயம் பற்றியும் இங்கு இருக்கும் பல மண்டபங்கள் பற்றியும் நிறையவே குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த கந்தகுடிகள் (புத்தர் வந்து தங்கிய மடாலயம்) எல்லாம் ஏரளமான புத்த புனித யாத்திரைப் பயணிகளினால் பல தடவை வந்து தரிசிக்கப்பட்டிருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். புகழ் பெற்ற சீனப் பயணிகள் (யுவான் சுவாங், ஐசிங்) குறிப்பிட்டிருக்கும் தகவல்களில் இருந்து இது உறுதிப்படவே செய்கின்றன.

ஃபாஹியான் நாலந்தா பற்றிக் குறிப்பிடவில்லை என்று பலரைப் போலவே என்று தாமஸ் வாட்டர்ஸும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், ஃபாஹியானின் பயணம் தொடர்பான கில்லின் மொழிபெயர்ப்பில் இது பற்றி 49ம் பக்கத்தில் இடம்பெற்றிருக்கிறது: ‘ஸ்ரீபுத்ரர் நாலந்தா கிராமத்தில் பிறந்தார். தன் இறுதி நாட்களைக் கழிக்க இங்குதான் வரவும் செய்தார். இந்த இடத்தில் ஒருமடாலயம் எழுப்பப்பட்டது. அது இப்போதும் செயல்பாட்டில் இருக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜேம்ஸ் லெக்கி இது சரியானதாக இருக்கும் என்கிறார். போஸ்ச், ‘ஃபாஹியானின் நாலவும் நாலந்தாவும் ஒரே இடம் அல்ல; இதிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் இடம்’ என்கிறார். ஃபாஹியான் இதைக் குறிப்பிடாததற்கான காரணமாக, ‘அவர் வந்த ஐந்தாம் நுற்றாண்டில் குபதப் பேரரசின் மூலமான ஹிந்து எழுச்சியினால் இந்த பௌத்த மடாலயம் செல்வாக்கிழந்து விட்டிருக்கலாம்’ என்கிறார். ஐந்தாம் நூற்றாண்டில் பௌத்தம் இந்தப் பகுதியில் செல்வாக்கிழந்துவிட்டிருக்கும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனால்,ஏழாம் நூற்றாண்டு வாக்கில் பிரதான மடாலயமாகவும் பல அரங்கங்கள் கொண்ட பல்கலைக்கழகமாகவும் இருந்ததுபோல் எப்போது உருவானது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடமுடியவில்லை.மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டில் அல்லது அதற்குமுன்பே ஆரம்பிக்கப்பட்டு பௌத்த பகுதிகளில் மட்டுமல்ல; இந்தியா முழுவதிலும் மட்டுமல்ல; உலகம் முழுவதிலும் மகத்தான கல்வி மையமாக பௌத்த புனித மடாலயமாக செல்வாக்கு பெறத் தொடங்கியிருக்கும் என்றே தோன்றுகிறது.

நாலந்தா பகுதியில் கிடைத்திருக்கும் அகழ்வாராய்ச்சித் தரவுகள் இந்த மடாலயம் மிக மிகப் பழங்காலத்தில் இருந்தே இருந்திருக்கக்கூடும் என்ற முடிவுக்கு சாதகமாக இல்லை. இங்கிருக்கும் பிரதான ஸ்தூபம் முதன் முதலில் நிறுவப்பட்டதில் இருந்து ஆறு முறை புனரமைக்கப்பட்டுள்ளது. ‘மிகவும் வசீகரமாக மிகவும் சிறப்பாக பாதுகாக்கப்பட்டிருக்கும்’ நான்காவது புனரமைப்பில் கட்டப்பட்ட நான்கு மூலை கோபுர மாடங்களில் மூன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் அற்புதமான புத்தர் மற்றும் போதிசத்துவர்களின் திரு உருவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.பௌத்த புனித நூல்களின் வாக்கியங்கள் செங்கல்களில் பொறிக்கப்பட்டுள்ளன.இவை கி.பி.ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது.

ஐந்தாவது ஸ்தூபம் அமைந்திருக்கும் பகுதியைப் பார்க்கும்போது மூல முதல் ஸ்தூபத்தின் அஸ்திவாரம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாகப் போடப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. இதுவுமே தோராயமான கணிப்புதான். உண்மையில் அதற்கும் முன்பே அந்த மூல ஸ்தூபம் அமைக்கப்பட்டிருக்கலாம். வெகு முந்தைய காலத்தைச் சேர்ந்த மூல முதல் கட்டுமானங்கள் கூட அகற்றப்பட்டு இப்போதைய மையக் கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம். நமக்கு இவை பற்றி உறுதியாக எதுவும் தெரியவில்லை.

(தொடரும்)

__________

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய “நாலந்தா” நூலின் தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *