சக்ராதித்யரின் காலகட்டம் என்று ‘புத்தர் இறந்ததைத் தொடர்ந்து’ வந்த காலகட்டத்தை யுவான் சுவாங் குறிப்பிடுகிறார். யுவான் சுவாங்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் இந்த விஷயத்தை இத்தனை தெளிவுடன் குறிப்பிடவில்லை. சக்ராதித்யா என்று அழைக்கப்பட்ட முதிய அரசர் ஒருவர், ‘புத்தர் பரிநிப்பாண நிலை அடைந்த பின்னர்’ இந்த மடாலயத்தை எழுப்பினார் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதோடு, இந்த நூலை அவர் எழுதியது கி.பி.688-ல். அப்போதே ‘எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பே கல்விமையமான நாலந்தா மடாலயம் எழுப்பப்பட்டிருந்தது’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
சாமுவேல் பீல் இதுபற்றி இரண்டு விஷயங்கள் சொல்லியிருக்கிறார். முதலாவதாக மன்னர் சக்ராதித்யா கி.மு.முதல் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கவேண்டும்; இரண்டாவதாக ‘புத்தர் நிர்வாணமடைந்தபின்னர்’ என்று யுவான் சுவாங் குறிப்பிட்டிருப்பதை தோராயமானதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். புத்தர் இறந்ததற்கு சில காலம் கழித்து என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிறார். வேறு தெளிவான ஆதாரம் எதுவும் கிடைக்காமல் சக்ராதித்யரின் காலகட்டமாக இதை எடுத்துக்கொள்ளமுடியாது. ஆனால், ஒரு விஷயம் மட்டும் உண்மை. யுவான் சுவாங்கும் அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவரும் நாலந்தா கல்வி மையம் முதலாம் குமார குப்தரின் காலகட்டத்துக்கு வெகு முந்தையது என்று புரிந்துகொண்டிருப்பதாக நாம் நிச்சயம் எடுத்துக்கொள்ளலாம்.
தாரநாதரும் இதுபோலவே நாலந்தாவின் காலகட்டத்தை அசோகருடைய காலகட்டத்துக்கு வெகு முந்தையது என்றே குறிப்பிட்டிருக்கிறார். அசோகர் எழுப்பிய கட்டுமானங்கள், ராகுலர், நாகார்ஜுனர், ஆர்யவேதம் தொடர்பான செயல்பாடுகள் பற்றியும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இவையெல்லாம் தெளிவான வரலாறு என்று எடுத்துக்கொள்ளமுடியாதவையே. எனினும் நாலந்தாவின் தொன்மை தொடர்பாக நிலவிய மரபான நம்பிக்கைகளுக்குச் சான்றளிப்பவையாகவே இருக்கின்றன.
மன்னர்களின் பட்டப்பெயர்களைப் பிரித்து அடையாளம் காணும்போது சக்ர என்பது மகேந்திர என்பது போன்ற ஒரு தனி பெயர் என்று சொல்வதையும் ஏற்றுக்கொள்வது சற்று கடினமே. அதுபோல் வசுபந்துவுக்கும் குப்தர்களுக்குமான தொடர்பு குறித்தும் நிறைய கேள்விகள், சந்தேகங்கள் இருக்கின்றன. வாமன தனது காவ்யாலங்கார நூலில் சந்திர குப்த மன்னரின் அமைச்சர்களில் ஒருவருடைய மகன் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். வரலாற்றாய்வாளர் வித்யாபூஷன் இந்தக் குறிப்பை ஏற்றுக்கொள்கிறார். பாலாதித்யர் பற்றிய குறிப்பையும் வசுபந்து இவருடைய ஆட்சி காலத்தில் எண்பது வயதில் இறந்ததாகச் சொல்லப்படும் பரமார்த்தாவின் குறிப்பையும் ஏற்றுக்கொள்கிறார். இதிலிருந்து என்ன தெரியவருமென்றால் முதலாம் குமார குப்தர், ஸ்கந்த குப்தர், புரு குப்தர், நரசிம்ம குப்தர் ஆகிய நான்கு மன்னர்களின் காலகட்டத்தைச் சேர்ந்தவராக கி.பி.410லிருந்து கி.பி. 490 வரை வசுபந்து வாழ்ந்திருக்கவேண்டும்.
முதலாம் குமார குப்தர்தான் நாலந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியிருப்பார் என்ற தனது கணிப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஹீராஸ் பாதிரியார் அவரைப் புகழ்ந்து சில விஷயங்களையும் சொல்கிறார். ஆனால் வாமன சொல்பவை அவர் காலகட்டத்தில் நம்பப்பட்ட ஒரு விஷயத்தின் அடிப்படையில்தான் சொல்லப்பட்டிருக்கவேண்டும்.
வசுபந்து, கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த சமுத்ரகுப்தரின் காலத்தைச் சேர்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது. புரு குப்தரையே யுவான் சுவாங் ததாகதகுப்தர் என்று குறிப்பிட்டிருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுபோல் ஸ்கந்த குபதர் எதனால் புத்த குப்தர் என்று அழைக்கப்பட்டார் என்பதையும் புரிந்துகொள்ளமுடியவில்லை.
இந்த இடத்தில்தான் ஹெச்.சி.ராய் செளத்ரி சொல்வதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிவருகிறது. அவர் புத்தகுப்தர் என்பவர் முதலாம் குமார குப்தரின் (மகேந்திர, சக்ர) இளைய மகன் என்று சொல்கிறார். அப்படியாக குப்த வம்சவளியில் புதிய கிளை ஒன்றை முன்வைக்கிறார். இந்தக் கணிப்பை வரலாற்றாய்வாளரும் கல்வெட்டியலாளருமான ஜான் ஃப்ளீட், தான் முன்வைத்த ஒப்புமைக் கணிப்புகளில் கேள்விக்குட்படுத்தியிருக்கிறார். இவருடைய கணிப்புகளையும் ஏற்றுக்கொள்ள என்னால் முடியவில்லை. இரண்டாம் பாலாதித்யரை நரசிம்ம குப்தர் இல்லை என்று சொல்லி அது பானு குப்தரையே குறிக்கக்கூடும் என்றும் சொல்கிறார்.
கல்வெட்டுகளில் கிடைத்திருக்கும் மன்னர்களின் பெயர்களை யுவான் சுவாங் குறிப்பிட்டிருக்கும் பெயர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இப்படியான குழப்பங்கள் எழுகின்றன. இன்னொரு விஷயம். புரு குப்தருக்கு ததாதகதபுத்தர் என்ற பெயரை யுவான் சுவாங் ஏன் கொடுத்தார் என்பது தொடர்பாக ஹீராஸ் பாதிரியார் சொன்னதை ஏற்றுக்கொண்டால், அவர் ஏன் ததாதககுப்தரின் மகன் தான் பாலாதித்ய குப்தர் என்று ஏன் குறிப்பிடவில்லை என்ற கேள்வி எழுகிறது.
நாலந்தாவின் தொடக்க காலம் பற்றிய நம் தீர்மானம்
யுவான் சுவாங் என்ன குறிப்பிட்டிருக்கிறாரோ அவை சொல்வதைத் தாண்டிய வரலாற்றுக் கணிப்புகளை அவர் எழுத்துகளில் இருந்து நாம் உருவாக்கிக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை. பாலதித்யா என்பது ஒரு தெளிவான உண்மையான பெயர். ஹுனர்களின் படையெடுப்பு தொடர்பாகப் பேசும்போதும் பாலாதித்யர் பற்றி மேலும் பல தகவல்களை சீனப் பயணி குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் குறிப்புகளும் நாலந்தாவின் வளர்ச்சியில் பலாதித்யரின் பங்கு பற்றியும் இவர் குறிப்பிட்டிருப்பவையெல்லாம் கல்வெட்டுகளிலும் உறுதிப்படுகின்றன. இதைத்தாண்டிய கணிப்புகள் எல்லாம் இட்டுக் கட்டுச் சொல்லப்படுபவையாகவே இருக்கும். சக்ராதித்யா, ததாகதகுப்தர், புத்தகுப்தர் இந்தப் பெயர்கள் எல்லாம் பழம் பெருமை வாய்ந்தவை. ஆழ்ந்த பெளத்த ஈடுபாடு கொண்ட யுவான் சுவாங் பெளத்தம் தொடர்பாகச் சொல்லப்பட்டவை அனைத்தையும் வெள்ளந்தியாக நம்பவே செய்திருக்கிறார்.
யுவான் சுவாங் குறிப்பிட்டிருப்பவற்றில் வஜ்ரா என்ற மன்னரை ஹீராஸ் பாதிரியார் இரண்டாம் குமார குப்தருடன் அடையாளப்படுத்தியிருக்கிறார். வஜ்ரா என்ற பெயர்க் காரணத்தை விளக்கமுடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். மத்திய ராஜ்ஜியத்தைச் சேர்ந்த அரசர் என்று குறிப்பிட்டிருப்பது ஹர்ஷவர்த்தனர்தான் என்றும் சொல்லியிருக்கிறார்.
ஆனால், யுவான் சுவாங் இந்த மத்திய ராஜ்ஜியத்து அரசர் பற்றிச் சொல்லும்போது கடந்த கால மன்னர்களின் பட்டியலில்தான் இவரைச் சொல்கிறார். மேலும் யுவான் சுவாங் இந்தியாவில் இருந்த காலகட்டத்தில்தான் சிலாதித்யர் மற்றும் ஹர்ஷரின் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இவற்றிலிருந்து நமக்குத் தெரிய வருவது என்னவென்றால், நாலந்தாவை முதலில் எழுப்பியவர் பாலதித்யர் தான். வரலாற்று ஆதாரங்கள் மூலம் கிடைத்திருக்கும் நம்பகமான பெயர் இவருடையதுதான். இவருக்கு அடுத்ததாக ஆட்சிக்கு வந்த வஜ்ரா பற்றியும் மத்திய ராஜ்ஜிய மன்னர் பற்றியும் தெளிவான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் நம்மிடம் இல்லை. முந்தைய காலகட்ட வரலாறானது மிகைக் கூற்றுகள் சேர்க்கப்பட்டு பாரம்பரிய கதையாடலாக ஆக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் பிற இடங்களில் நடப்பதுபோலவேதான் இங்கும் நடந்திருக்கிறது.
ஆனால், நவீன காலகட்டத்தில் நாலந்தா பற்றி பல புதிய கதைகள் சொல்லப்படுகின்றன. எ நோட் ஆன் தி எஸ்கவேஷன்ஸ் ஆஃப் நாலந்தா அண்ட் இட்ஸ் ஹிஸ்டரி (என்.எஸ்.ஜிப்ராஸ், பக் 214-216) நூலிலும் தி ராயல் பேட்ரன்ஸ் ஆஃப் நாலந்தா என்று முன்பே நாம் குறிப்பிட்டிருக்கும் கட்டுரையிலும் ஹீராஸ் பாதிரியார் புதிய கண்டுபிடிப்புகளை முன்வைத்திருக்கிறார். நாலந்தாவில் பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்ட கட்டுமானங்கள் இருக்கின்றன. நாலந்தா தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி இடித்து இடித்து மீண்டும் கட்டப்பட்டிருக்கிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.
முதலில் மிகிராகுலன் நாலந்தாவை இடித்தார். பாலாதித்யர் அதை மீண்டும் கட்டி எழுப்பினார். அந்த புனர் நிர்மாணம் தொடர்பாக மிகப் பெரிய விழா ஒன்றை நடத்தினார் என்று ஹீராஸ் குறிப்பிடுகிறார்.
சாணக்கியர் மூலம் இரண்டாவதுமுறையாக நாலந்தா தாக்குதலுக்கு உள்ளானது. ஹர்ஷர் அதை மீண்டும் புதுப்பித்தார். மூன்றாவது தாக்குதல் ஆதித்யசேன ஈசானவர்மன் எடுத்த படைபெடுப்பு காலத்தில் நடந்திருக்கும். என்றெல்லாம் அவர் சொல்கிறார்.
இந்த யூகங்களுக்கு இந்தக் காலகட்டம் பற்றிய மிக விரிவான ஆவணமாக இருக்கும் யுவான் சுவாங்கின் குறிப்புகளிலும் ஆதாரங்களில்லை. அகழ்வாராய்ச்சித் தரவுகளும் இதற்கு ஆதரவாக இல்லை. வளர்ந்து வரும் கல்வி மையத்தில் புதிது புதிதாகக் கட்டுமானங்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கும். போரில் தாக்குதலுக்கு ஆளாக வேண்டிய அவசியமெல்லாம் இல்லாமல் பல ஸ்தூபிகள் மேலும் மேலும் புதுப்பிக்கப்பட்டுத்தான் வந்திருக்கின்றன. மேலும் உண்மையான அழித்தொழிப்பு நடந்தது தொடர்பான தெளிவான வரலாற்று ஆதாரங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அவை பற்றிப் பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.
நமக்குக் கிடைத்திருக்கும் வரலாற்றுத் தரவுகளின்படிப் பார்த்தால் ஃபாஹியான் காலத்துக்கு வெகு முன்பிருந்தே நாலந்தா கல்வி மையம் இயங்கி வந்திருக்கிறது. அது அவருக்குத் தெரிந்தும் இருக்கவேண்டும். என்ன காரணத்தினாலோ அவர் அது பற்றி விரிவாகக் குறிப்பிடாமல் விட்டிருக்கிறார். நாலந்தாவுக்குப் பின்னாளில் கிடைத்த பேரும் புகழும் ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிடைத்திருக்காமல் இருந்திருக்கலாம். குப்தர்கள் இந்த மையத்துக்கு நல்கைகள் வழங்கியிருக்கிறார்கள் என்ற முடிவுக்கு நாம் தெளிவாக வரமுடியும். அவர்களுடைய ஆதரவினால்தான் நாலந்தா செழித்து வளர்ந்து விரிவடைந்திருக்கும். யுவான் சுவாங் இந்த குப்த மன்னர்களின் பெயர்களைப் குறிப்பிட்டிருப்பதென்பது இந்த உண்மைக்கு தரும் சான்று போலவே இருக்கிறது.
குப்தர் காலத்தில் புகழ் பெற்றுஇருந்த மன்னர்களின் பெயர்களின் சாயலிலும் அன்று நிலவிய பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையிலும் இந்தப் பெயர்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம். எதுவானாலும் நாலந்தா மடாயலம் மற்றும் கல்வி மையத்தின் வரலாறு என்பது பாலாதித்யர் காலத்தில் இருந்துதான் தெளிவாக நமக்குத் தெரியவந்திருக்கிறது. அதற்கு முந்தைய நாலந்தாவின் வரலாறு என்பது நமக்கு ஆதாரபூர்வமாக இதுவரை தெரியவில்லை.
(தொடரும்)
__________
கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய “நாலந்தா” நூலின் தமிழாக்கம்.