நாலந்தா தொடர்பான கல்வெட்டு ஆதாரங்கள்
குப்தர்களுடைய ஆட்சியின் ஆரம்ப காலங்களில் நாலந்தாவுக்கு இருந்த முக்கியத்துவம் அந்நாளைய நாணயங்கள், முத்திரைகளில் இருந்து நமக்குத் தெரியவருகின்றன. அங்கு கிடைத்த ஐந்தாம் நூற்றாண்டு முத்திரை ஒன்றில், ‘குமாராமாத்யாதிகரனா’ என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. (அமாத்யாயர் என்றால் அமைச்சர். குமார என்றால் இளவரசர். குமார அமாத்யாயர் என்றால் இளவரசரைப் போல் மதிக்கப்படவேண்டிய அமைச்சர்.) நாலந்தாவில் குமார அமாத்யாயருடைய முத்திரை கிடைத்திருப்பதில் இருந்து நாலந்தா பிராந்தியத் தலை நகரமாக இருந்திருக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும் அப்படி முக்கியத்துவம் பெற்ற நகருக்கும் நாலந்தாவுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். குமார குப்தர் (கி.பி. 413-455) கால நாணயம், அவற்றின் களிமண் வார்ப்புகள் ஆகியவையும் இங்கு கிடைத்துள்ளன. சமுத்ர குப்தருடைய காலகட்டத்துச் செப்பேடுகளில் நாலந்தா தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் நம்பகத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. நாலந்தா கிராமத்தின் கோபஸ்வாமி மற்றும் அக்ஷபாதாதிகாரா பற்றியும் மஹாபிதூபதி மற்றும் மஹாபலாதிக்ரதா பற்றியும் குறிப்பிட்டிருக்கிறது.
நாலந்தாவின் வளர்ச்சி
யுவான் சுவாங், ஐ சிங் ஆகியோருடைய குறிப்புகளைப் பார்ப்போம்.
யுவான் சுவான் ஆறு விஹார்கள் பற்றி மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார். ஐ சிங் எட்டு விஹார்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
மடாலயங்கள் மற்றும் கோவில்களில் இருக்கும் சிற்பங்கள் பற்றியும் சில விஹார்கள் பற்றியும் யுவான் சுவாங் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்:
இந்த நாலந்தா மடாலயத்தில் தொடர்ந்து வந்த மன்னர்களின் அக்கறையினால், இங்கிருக்கும் சிற்பங்கள் எல்லாம் முழுமை பெற்றவையாகவும் பேரழகுடனும் திகழ்கின்றன. சக்ராதித்யர் கட்டிய மடாலயத்தில், இப்போது புத்தருடைய சிலை இருக்கிறது. தினமும் நாற்பது துறவிகள் அங்கு சென்று, அதை நிர்மாணித்தவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரார்த்தனை செய்து உணவருந்திவிட்டு வருவது வழக்கம்.
திரு வாட்டர்ஸ் இதுபற்றிச் சொல்லியிருப்பவை:
யுவான் சுவாங் இங்கு வந்த போது நாலந்தா மடாலயம் சிதைவுற்றிருக்கவேண்டும். வேறு மடாலயத்தில் இருந்து நாற்பது துறவிகளை இங்கு அனுப்பி காலை உணவை உண்ணச் சொல்லியிருப்பதென்பது அந்த விஹாரையை நிர்மாணித்தவரின் நினைவைப் போற்றும் ஒரு செயல்பாடாகவே இருந்திருக்கும். ஐ சிங்கின் காலத்தில் இந்த மடாலயத்தின் அஸ்திவாரக் கட்டுமானங்களை மட்டுமே பார்க்க முடிந்திருந்தது.
இந்தக் கூற்றுகளுக்கு எந்த மேற்கோளையும் ஆதாரமாக திரு. வாட்டர்ஸ் குறிப்பிட்டிருக்கவில்லை. நானும் அவற்றை வேறு எங்கும் பார்த்திருக்கவும் இல்லை.
புனிதச் சின்னங்கள்
மிகவும் புனிதமாக மதிக்கப்பட்ட பகுதியில் நாலந்தா மடாலயம் இருந்தது என்பது இந்த இடத்தைச் சுற்றிலும் இருந்த புனித சின்னங்கள் பற்றியும் இங்கு நடந்த சில அற்புதங்கள் பற்றியும் யுவான் சுவாங் குறிப்பிட்டிருப்பதிலிருந்து உறுதிப்படுகிறது:
நாலந்தா மடாலயத்தைச் சுற்றிலும் சுமார் நூறுக்கு மேற்பட்ட புனிதச் சின்னங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு சிலவற்றைப் பற்றிச் சொல்லியாகவேண்டும். இதன் மேற்கில் ஒரு ஆலயம் இருக்கிறது. அங்கு புத்தர் மூன்று மாதங்கள் தங்கியிருந்து தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் போதனைகள் செய்தார். இந்த மடாலயத்தின் தெற்கில் 100 அடி தொலையில் ஒரு ஸ்தூபி இருக்கிறது. இங்கு புத்தர் இருந்தபோது அவரை ஓர் அயல் நாட்டுத் துறவி வந்து சந்தித்திருக்கிறார். புத்தரைப் பார்த்ததும் அவர் காலில் விழுந்து வணங்கி, தனக்கு உலகையே ஆளும் மாபெரும் அரசனாக மறு பிறப்பு வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். உங்களுடைய புண்ணியக் கணக்குகளின்படியும், உங்களுடைய திடமான பக்தியையும் அர்ப்பண உணர்வையும் பார்த்தால் போதிசத்வ பதவியே, விரும்பியிருந்தால் கிடைத்திருக்க்கும். ஆனால், இப்போது இப்படியான ஒரு கோரிக்கையை விடுத்திருப்பதால், நீங்கள் விழுந்து வணங்கிய இடத்தில் இருந்து ’தர்ம சக்கரம்’ இருக்கும் இடம் வரையிலும் இருக்கும் மணல் துகளின் எண்ணிக்கை அளவுக்கு மன்னராகப் பல பிறவிகள் எடுத்தாக வேண்டிவரும். லெளகிக இன்பங்களில் மனதைப் பதித்துவிட்டதால் மோட்சக் கனி தொலைதூரத்துக்குச் சென்றுவிட்டது. பல ஆயிரம் பிறப்புகள் எடுத்த பின்னரே அதை அடைய முடியும் என்று புத்தர் வேதனையுடன் கூறினார்.
இந்த ஸ்தூபிக்கு தெற்கில் கன் து சை புசா வின் (அவலோகிதேஸ்வராவின்) நிற்கும் நிலையிலான சிலை இருக்கிறது. புத்த ஆலயத்தை கைகளில் தூபக்கால் ஒன்றை ஏந்தியபடி வலம் வருவதுபோல் இவருடைய சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. இதன் தெற்கில் இருக்கும் ஸ்தூபியில் புத்தர் இங்கு மூன்று மாதங்கள் இருந்தபோது மழித்த சிகையும், வெட்டிய நகங்களும் இருந்தன. இந்த ஸ்தூபியை வலம் வரும் பக்தர்களின் துயரங்கள், நோய்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன.
நாலந்தாவின் வடக்கு வாசலுக்கு வெளியே இருக்கும் குளத்தின் கரையில் ஒரு ஸ்தூபி இருக்கிறது. அங்கு ஒரு தீர்த்தகர் கையில் சிறிய பறவை ஒன்றைப் பிடித்தபடி புத்தரிடம் பிறப்பு இறப்பு பற்றிய ரகசியத்தைக் கேட்டறிந்துகொண்டார். இதற்கு தென் கிழக்கில் ஐம்பது காத தொலையில் மதில் சுவருக்கு உள்ளே ஒரு பிரமாண்டமான மரம் இருக்கிறது. சில புனித நூல்களின்படி இந்த மரம் 80-90 அடி உயரம் கொண்டது. வேறு சில நூல்களின் அடிப்படையில் 8-9 அடி உயரம் கொண்டது. புத்தர் வீசி எறிந்த பல் குத்தும் குச்சியிலிருந்தே, என்றும் மாறாத உயரமுடைய இந்த மரம் முளைத்ததாகச் சொல்லப்படுகிறது. பல் குச்சி மரத்தின் கிழக்கில் 200 அடி உயரம் கொண்ட கோவில் ஒன்று இருந்தது. புத்தர் அங்கு இருந்தும் சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கிறார். இதன் வடக்கில் 100 அடி தொலைவில் கன் து சை பூசாவின் சிலையிருக்கும் கோவில் இருக்கிறது. பல்வேறு தருணங்களில் பல்வேறு நிலைகளில் அந்த சிலை இருந்ததாக பக்தர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பிந்தைய சேர்க்கைகள்
பாலாதித்யர் எழுப்பிய ஆலயம், ஹர்ஷர் காலத்தில் புதிதாகக் கட்டப்பட்டவை, அவருடைய கால கட்டத்தைச் சேர்ந்த பிற மன்னர்கள் கட்டியவை பற்றியெல்லாம் யுவான் சுவாங்கின் குறிப்புகளிலிருந்து கூடுதல் தகவல்களை நாம் பார்க்க முடிகிறது.
இந்த மடாலயத்தின் வடக்கில் பாலாதித்யரால் கட்டப்பட்ட 300 அடிகளுக்கும் மேலான கோவில் ஒன்று இருக்கிறது. போதி மர ஆலயத்தில் இருப்பதுபோலவே புத்தரின் சிலையும் கோவிலும் இங்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாலாதித்யர் எழுப்பிய கோவிலின் வட கிழக்கில் ஒரு ஸ்தூபி அமைந்திருக்கிறது. புத்தர் போதனைகள் செய்த இடம் இது. இதன் வட கிழக்கில் முற்பிறவிகளைச் சேர்ந்த நான்கு புத்தர்கள் அமர்ந்திருக்கும் சிலைகள் அமைந்திருக்கின்றன. இதன் தெற்கில் மன்னர் சிலாதித்யர் வெண்கலக் கோவில் ஒன்றை எழுப்பிவருகிறார். கிழக்கில் 200 அடி தொலைவில் மதில் சுவருக்கு வெளியே பூர்ணவர்மர் எழுப்பிய புத்தரின் செம்புச் சிலை இருக்கிறது. 80 அடி உயரம் கொண்ட இந்தச் சிலை ஆறு அடுக்கு மாளிகையில் நிறுவப்பட்டுள்ளது. இதற்கு சற்று தொலைவில், செங்கல் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இதில் தாரா பூசாவின் பிரமாண்ட சிலை இருக்கிறது. தெற்கு வாசல் மதிலுக்குள்ளே மிகப் பெரிய கிணறு இருக்கிறது. இது புத்தரின் காலத்தில் அவருடைய மந்திர சக்தியால் தோற்றுவிக்கப்பட்டது.
யுவான் சுவாங் இந்தியாவில் இருந்த காலகட்டத்துக்குள் ஹர்ஷர் எழுப்பிய வெண்கலக் கோவில் பணிகள் முடிவடைந்திருக்கவில்லை. அசோகரின் இறுதி வாரிசு பூர்ணவர்மன் என்று யுவான் சுவாங் வேறொரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறார். கெளட ராஜ்ஜிய அரசரான சஷாங்கனுடைய கொடூரமான தாக்குதலினால் சிதைந்த போதி மரத்தைப் புத்துயிர் கொடுத்து மீட்டது இந்த பூர்ணவர்மன் தான் என்றும் யுவான் சுவாங் குறிப்பிட்டிருக்கிறார்.
வேறு விவரணைகள்
ஹுவாய் லீ
யுவான் சுவாங்கின் வாழ்க்கை வரலாறை எழுதிய அவருடைய சீடரான ஹுவாய் லீ எழுதியிருப்பவையும் தமது குருவின் கூற்றுக்களுக்கு வலுச் சேர்க்கின்றன:
ஒட்டு மொத்த நாலந்தா மடாலயத்தைச் சுற்றிலும் செங்கல் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே நுழைய ஒரே ஒரு வாசல் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கிறது. உள்ளே எட்டு வளாகங்கள் பிரிந்து செல்கின்றன. இவற்றின் நடுவில் சங்காராமா மடாலயம் அமைந்திருக்கிறது. சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த ஸ்தூபிகள், காவல் – மணிக் கோபுரங்கள், கூர்மையான மலை உச்சி போன்ற கட்டுமானங்கள் எல பலவும் அமைந்துள்ளன. அதிகாலை பனி மூட்டத்தினூடே இந்த காவல் மாடங்கள் மங்கலாகத் தெரிகின்றன. கோபுர மாடங்கள் மேகத்தை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்கின்றன.
உச்சி அறைகளின் சாளரங்கள் வழியே வெளியே பார்க்கும்போது காற்றின் திசை மாறலும் மேகக்கூட்டத்தின் புதுப்புது வடிவ மாற்றங்களையும் நன்கு பார்க்கமுடியும். உச்சி மாடங்களில் இருந்து சூரிய சந்திரர்களின் உதயாதி அஸ்தமனங்களைப் பார்க்க முடியும்.
மேலிருந்து பார்க்கும்போது கீழே ஆழமான குளங்களையும் ஸ்படிகம் போலிருக்கும் நீரின் மேலே நீலத் தாமரைகளும் செம் பொன் தாமரைகளும் மெல்லிய அலைகளில் மிதந்துகொண்டிருப்பதைப் பார்க்க முடியும். கண்ணுக்கெட்டும் தூரம் வரை சுற்றிலும் நிழல் மிகுந்த மா மரத் தோப்புகள் செழித்து வளர்ந்து நிற்பதையும் பார்க்கமுடியும்.
துறவியர் மடங்கள் நான்கு அடுக்குகளைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு அடுக்கிலும் டிராகன்கள் (பிரமாண்ட நாகங்கள்) போன்ற நீட்சிகளும் கூரை விளிம்பு இறவாரங்களும் அமைந்திருக்கின்றன. செதுக்கல் வேலைப்பாடுகள் மிகுந்த செம் பவழ நிறத்திலான தூண்கள், கலை அழகு மிகுந்த கந்தணிகள் (சிறு தூண் வரிசை), இருக்கின்றன. மேல் கூரையில் பதிக்கப்பட்டிருக்கும் பாளங்கள் ஒளியைப் பல நூறு விதங்களில் பிரதிபலிக்கின்றன. இவை அனைத்தும் இந்த அறைகள் மற்றும் அரங்குகளின் அழகை மேலும் மெருகூட்டுகின்றன.
(தொடரும்)
__________
கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய “நாலந்தா” நூலின் தமிழாக்கம்.