Skip to content
Home » நாலந்தா #5 – ஐ சிங்கின் குறிப்புகள்

நாலந்தா #5 – ஐ சிங்கின் குறிப்புகள்

நாலந்தா

நாலந்தாவில் ஐ சிங் சுமார் பத்து ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். அந்த மடாலய வளாகத்தில் இருந்த கட்டடங்கள், அவை அமைந்திருந்த வரிசை, எந்த திசையை நோக்கி அமைந்திருந்தன, கட்டுமான நுட்பங்கள், பெளத்த துறவிகள் தங்கியிருந்த அறைகளின் அளவுகள், அங்கு இருந்த பொருட்கள் பற்றியெல்லாம் மிக விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த அறைகள் எப்போதும், முற்றிலும் திறந்தவையாக இருந்திருக்கின்றன. எந்த ஒளிவு மறைவுக்கும் இடமில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

யுவான் சுவாங் உணர்ச்சியற்ற நடையில் குறிப்பிட்டிருப்பவற்றுடன் இவர் கலை அழகுடன் துல்லியமாகக் குறிப்பிட்டிருப்பவை முழுமையாக ஒத்துப்போகின்றன. யுவான் சுவாங்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரும் யசோவர்மனின் கல்வெட்டுகள் பற்றிக் குறிப்பிட்டிருப்பவருமான இவர் நாலந்தா பற்றிக் குறிப்பிட்டிருப்பவைபற்றி இங்கு பார்ப்போம்:

நாலந்தா மடாலயம் சதுர வடிவில் அமைந்திருக்கிறது. நான்கு பக்கங்களில் நேரான, நீண்ட முனைகள் கொண்ட கூரைகள் அனைத்து அரங்கங்களின் மேலும் அமைந்திருக்கின்றன. மைய வளகத்தைச் சுற்றி இவை வட்டவடிவில் அமைந்திருக்கின்றன. அனைத்து கட்டடங்களும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன. மூன்று அடுக்கு கொண்ட இந்த மடாலயத்தின் ஒவ்வொரு அடுக்கும் பத்து அடி உயரம் கொண்டது. குறுக்குச் சட்டங்கள் எல்லாம் தகடுகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன. மடாலய அரங்கங்களைச் சுற்றிய நடைபாதைப் பகுதிகளில் மர சட்டங்களோ கற் பாளங்களோ பயன்படுத்தவில்லை. செங்கற்களையே தரைத் தளமாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அனைத்து ஆலயங்களும் மிக அருமையாக வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுக்குள் போய்வருவது மிகவும் எளிதாகவே இருக்கின்றது. இறுதி ஆலயத்தின் சுவரானது வெளிப்புற மதில் சுவராக அமைந்திருக்கிறது. செங்கல் கட்டுமானத் தளங்கள் முப்பதிலிருந்து நாற்பது அடி உயரத்துக்கு அமைந்திருக்கின்றன. உச்சியில் மனிதத் தலைகள் இயல்பான அளவில் செதுக்கப்பட்டிருக்கின்றன.

துறவிகளின் வசிப்பிடங்களைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு அடுக்கிலும் ஒன்பது அறைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் சுமார் 24 சதுர அடி சுற்றளவு கொண்டவை. வெளி மூலையில் நுழைவுக் கதவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கதவுகள் மேல் கூரை வரை உயர்ந்து காணப்படுகின்றன. தொலைவில் இருந்து பார்த்தாலே தெரியும்படியாகக் கதவுகள் மிகவும் உயரமாக இருக்கின்றன. எந்தவொரு மறைப்பும் அங்கு இருக்கவில்லை. வெளியில் இருந்து சாதாரணமாகப் பார்க்கும் ஒருவருக்கு நான்கு பக்கங்களையும் நன்கு தெளிவாகப் பார்க்க முடியும் படியாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு அறையில் இருக்கும் துறவியையும் இன்னொரு அறையில் இருக்கும் துறவிகளைக் கண்காணிக்க வழி உருவாகியிருக்கிறது. எந்தவொன்றையும் ரகசியமாகச் செய்துவிடவே முடியாது.

மேலே ஒரு மூலையில் தனியான நடை பாதைபோல் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதனூடாக மடாலயத்துக்கு மேலே ஒருவர் எளிதில் போய்வர முடியும். நான்கு முனைகளில் செங்கலால் கட்டப்பட்ட அரங்கங்கள் இருக்கின்றன. ஞானத்தில் சிறந்த, மரியாதைக்குரிய துறவிகள் அங்கு வசித்துவந்தனர்.

மடாலயத்தின் வாசல், மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது. அதன் மேல் தளமானது தலையைக் கிறுகிறுக்க வைக்கும்வகையில் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து செல்கிறது. அலங்கார வேலைப்பாடுகள் அதன் உச்சத்தை எட்டி நிற்கின்றன. இந்தக் கதவானது பிரதான கட்டடத்துடன் இணைக்கப் பட்டிருக்கிறது. அந்தக் கட்டடத்துக்கு தனியான வாசல் என்று வேறு எதுவும் இல்லை. அதற்கு சற்று முன்பாக நான்கு தூண்கள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த வாசல் அதிக உயரமில்லை. ஆனால், இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் மரப் பலகை மிக மிக கனமானதாக இருக்கிறது.

தினமும் உணவு நேரம் வரும்போதெல்லாம் அனைத்து கதவுகளிலும் தாழ்ப்பாள்களை முழுமையாக விலக்கிவிடுவார்கள். எந்தவொரு ரகசியத்தன்மைக்கும் இடம் தரக்கூடாதென்பதுதான் அதன் இலக்கு.

தரைத் தளங்கள்

மடாலயத்தின் உள்ளே, 30 அடிக்கு அதிகமான அகலம் கொண்ட அறைகளில் செங்கல் தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஐந்து முதல் பத்து அடி அகலம் கொண்ட இடங்கள், அறைகள், கூரையில் இருக்கும் இடங்கள், தாழ்வாரத்துக்கு முன்னால் இருக்கும் இடங்கள், வசிப்பிடங்கள் ஆகியவற்றில் பெரிய செங்கற்களை சிறு சிறு துண்டுகளாக உடைத்து அதைச் சாந்துடன் கலந்து பூசி, மட்டக்கோல்கள் கொண்டு சமப்படுத்தி சமதளமாக்கி தரைத் தளம் அமைத்திருக்கிறார்கள். சுற்றுச் சுவர்களில் சுண்ணாம்புக் கலவை பூசியிருக்கிறார்கள். சணல் நார்களை எண்ணெய் கலந்து தோல் கிடங்கில் ஊறவைக்கிறார்கள். பல நாட்கள் அதை ஊற வைத்தபின் செங்கல்லுடன் சேர்த்து தரைகளில் தளமாகப் பாவுகிறார்கள். பச்சை இலை கொண்டு மூடி வைக்கிறார்கள். மூன்று நாட்கள் காய விடுகிறார்கள்.

பளபளப்பாக்கும் கருவிகள் கொண்டு தரைத் தளத்தை சமதளப்படுத்தி பளபளப்பாக்குகிறார்கள். செம்மண் துகள் தூவி கொண்டு மேல் பூச்சு பூசியிருக்கிறார்கள். அதன் பின்னர் எண்ணெய் போன்ற நன்கு மசித்த சாந்து தடவி கண்ணாடி போல் பளபளப்பாக்குகிறார்கள். அனைத்து அறைகள், அரங்குகள், மாடிப்படிகள் எல்லாமே இதுபோல் பளபளபாக்கப்பட்டுள்ளன. இப்படியான தரைத் தளங்கள் அமைக்கப்பட்டபின்னர் பத்து இருபது வருடங்கள் ஆனாலும் இவை துளியும் உடைவதோ சிதைவதோ இல்லை. சுண்ணாம்புப் பாளங்கள் இப்படி இருப்பதில்லை. அவற்றின் மேல் நீர் ஊற்றினால் உரிந்து, உதிர்ந்து வந்துவிடும்.

மடாலயங்களின் வரைபடம்

இதுவரையிலும் எட்டு கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. அனைத்து கோவில்களுக்கும் பிரகாரங்கள் இருக்கின்றன. அதில் நாம் எளிதில் நடந்து செல்ல முடியும். இவை அனைத்தின் நீள, அகலங்கள் ஏகதேசம் ஒரே அளவில் இருக்கின்றன. ஒவ்வொரு கோவிலின் கிழக்குப் பக்கத்தில் சில நேரங்களில் எளிமையான சில நேரங்களில் சற்று ஆடம்பரமான கட்டடத்தில் புனிதத் திருவுருவங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. அல்லது அதே கிழக்கு திசையில், ஒரு மண்டபத்தைக் கட்டியிருக்கிறார்கள். அது புத்தரின் மண்டபமாக (புத்தர் சிலை இருக்கும் மண்டபமாக) அது இருக்கிறது.

கோவில்களின் மேற்குப் பக்கத்தில் பெரிய மண்டபத்தின் வெளியில் பெரிய ஸ்தூபிகள் எழுப்பியிருக்கிறார்கள். ஏராளமான சைத்தியங்களும் (வழிபாட்டு மண்டபங்களும்) இருக்கின்றன. இந்த இரண்டில் ஸ்தூபிகளின் உயரம் சற்று அதிகமாக இருக்கும். சைத்தியங்களில் புத்தருடைய வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள் சித்திரிக்கப்பட்டிருக்கும். இவை சுமார் 100க்கு மேல் இருக்கும். இந்தப் புனிதச் சின்னங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று அருகில் இருக்கின்றன. எனவே வேறுபடுத்தி, எண்ணிச் சொல்வது கடினம். தங்கம் மற்றும் நவரத்னக் கற்கள் கொண்டு அற்புதமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வளவு முழுமையான அற்புதமான கலை அழகுடன் உருவாக்கப்பட்டவை வேறு எங்கும் இல்லை என்றே சொல்லலாம்’’.

0

இப்படியான அருமையான நுட்பமான விவரிப்புகளோடு நின்றுவிடாமல் ஐ சிங் நாலந்தா மடாலயத்தின் வரைபடம் ஒன்றையும் தெளிவாக வரைந்திருக்கிறார். ஆனால், துரதிஷ்டவசமாக அது நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அது பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன. நாலந்தா மடாலயத்தின் வரைபடத்துக்கான அறிமுக உரையில் அதன் அவசியம் பற்றியும் சீனாவில் இதுபோல் ஒரு மடாலயம் ஒன்றை அமைக்கவேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்:

’’நான் இந்தக் கோவிலின் வடிவம் பற்றி மீண்டும் இங்கு குறிப்பிடுகிறேன். ஆனால், அதில் ஏதோ ஒரு குழப்பம் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. எனவே நான் இந்த வரைபடத்தை உருவாக்கியிருக்கிறேன். இதைப் பார்ப்பார்களுக்கு இந்த மடாயலத்தின் அமைப்பு மிகவும் எளிதில் புரியும் என்று நம்புகிறேன். இந்த நாலந்தா மடாலயம் போலவே ஒன்றைக் கட்டித் தரும்படி நம் மன்னரிடம் கோரிக்கை வைத்து அது நிறைவேற்றப்பட்டால் நம் மன்னரின் அரண்மனைக்கு இணையான அழகு கொண்டதாக அந்த மடாலயம் திகழும்.

மிகுந்த ஏக்கத்துடன் சொல்கிறேன்: முன்பு செய்யப்பட்ட ஏராளமான சாதனைகள் எல்லாம் இன்று நிலை குலைந்துவிட்டன. மாபெரும் ஞானிகள் எல்லாம் முதுமை அடைந்துவிட்டனர். உயிருள்ளவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் இடையில் மிகப் பெரியதோர் இடைவெளி இருக்கிறது. இதையெல்லாம் பார்த்தால் மனம் கலங்காமல் எப்படி இருக்கும்?’’

காணாமல் போன வரைபடத்துடன் ஐ சிங் குறிப்பிட்டிருக்கும் தகவல்களை மீண்டும் ஒருமுறை இங்கு பட்டியலிடுகிறேன். பாலாதித்யர் காலத்து ஸ்தூபி ஒன்றை அவர் பார்த்திருக்கிறார். அதில் இருந்த வேலைப்பாடுகள், சிற்பங்கள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த கோவில்களில் ஒன்றைப் பார்த்தாலே போதும் மற்ற ஏழையும் பார்த்ததுபோல்தான். மக்கள் நடந்து செல்ல முடியும்படியான நடைபாதை மேலே அமைந்திருக்கிறது.

இந்த மடாலயத்தின் அமைப்பை ஆராய்ந்து பார்க்கும்போது, மேற்கு முகப்பில் இருந்து பார்ப்பது நல்லது. நுழை வாயிலுக்கு வெளியே மேற்குப் பக்கமாகப் போகும்போதுதான் மடாலயத்தின் முழுமையான வடிவத்தைப் பார்க்க முடியும்.

கதவுக்குத் தெற்கே இரு அடி தொலைவில் சாலையின் விளிம்பில் ஒரு ஸ்தூபி இருக்கிறது. அது 100 அடிக்கு மேல் உயரமானது. லோக ஜேஸ்டர் (உலகின் உத்தமர் – புத்தர்) மழைக்காலத்தில் இங்கு தங்கியிருந்திருக்கிறார். இந்த புனித சின்னத்துக்கு சமஸ்கிருதத்தில் மூல கந்த கோடி என்று பெயர். இதன் அர்த்தம் மூலாதார சக்தியினால் மணம் (புகழ்) பெற்றது.

வாசல் பகுதியில் இருந்து ஐம்பது அடி வடக்கில் இன்னொரு ஸ்தூபி இருக்கிறது. அது முதலாவதை விடவும் பெரியது. பாலாதித்யர் கட்டியது. இரண்டுமே செங்கற்களால் கட்டப்பட்டவை. இரண்டின் கலை வேலைப்பாடுகளும் அபாரமாக இருக்கின்றன. நவ ரத்னங்கள் பதித்த தங்கப் படுக்கைகள் இங்கு இருக்கின்றன.

மையத்தில் தர்ம சக்கரத்தை சுழலச் செய்யும் ததாகதரின் திரு உருவம் இருக்கிறது. தென் மேற்கில் பத்தடி உயரத்தில் சிறிய சைத்தியம் இருக்கிறது. கையில் ஒரு பறவையை (குருவி) வைத்திருக்கும் பிராமணன் சில கேள்விகளை புத்தரிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொண்டார். இதைச் சீன மொழியில் குருவியின் ஆலயம் என்று குறிப்பிடுகிறார்கள். யுவான் சுவாங், மத நம்பிக்கையற்ற ஒருவர் (கையில் குருவியை வைத்திருந்தவர்) புத்தரிடம் பிறப்பு இறப்பு பற்றிக் கேள்விகள் கேட்டுத் தெரிந்துகொண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

மூல கந்த கோடியின் வடக்கில் புத்தர் பல் துலக்கப் பயன்படுத்தச் சொன்ன ஆல மரம் இருக்கிறது.

அதற்கும் மேற்கே, சாலையின் விளிம்பில், சத்தியம் ஏற்கும் பீடம் அமைந்திருக்கிறது. இங்குதான் பத்து விரதங்களை ஏற்றுக் கொண்டு துறவர அமைப்புக்குள் ஒருவர் முழுமையாக இடம்பெறுவார். நான்கு பக்கங்களிலும் பத்து அடி நீள அகலம் கொண்டது. இரண்டு அடிக்கு மேலாக செங்கல் சுவரும் அதில் உண்டு. உள்ளே சுற்றுப்புறத்தைவிட ஐந்து அங்குலம் உயரமான பீடம் இருக்கிறது. மையத்தில் ஒரு சைத்தியம் இருக்கிறது.

பீடத்தின் கிழக்குப் பக்கத்தில் புத்தரின் காலடித்தடம் இருக்கிறது. அது செங்கல்களால் கட்டப்பட்டிருக்கிறது. இரண்டு முழ அகலமும் 14 அல்லது 15 முழ நீளமும் இரண்டு முழ உயரமும் கொண்டது. பிரகாரத்தில் சுண்ணாம்புப் பூச்சுடன் வெண் தாமரை மலர் வடிவச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இரண்டு முழ உயரமும் ஒரு அடி அகலமும் கொண்டிருக்கின்றன. சுமார் 15 தாமரை சின்னங்கள் காணப்படுகின்றன. அவையெல்லாம் புத்தரின் காலடித் தடங்களைக் குறிக்கின்றன.

இதுபோன்ற காலடித் தடங்கள் கிர்தாரகூடம், ராஜக்ரஹபுரம், ம்ருகதாவம் போன்ற இடங்களிலும் காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இந்த தாமரை மலர்கள் எல்லாம் புத்தரின் காலடி பதிந்த இடங்கள் என்றே புத்த நூல்கள் கூறுகின்றன. இவை இரண்டு அங்குல நீளமும் இரண்டு முழ உயரமும் கொண்டவை என்றே சொல்லப்பட்டிருக்கின்றன. எனவே ஐ சிங் குறிப்பிடுவது தவறு என்றே தோன்றுகிறது.

(தொடரும்)

__________

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய “நாலந்தா” நூலின் தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *