Skip to content
Home » நாலந்தா #6 – முத்திரைகள் – கல்வெட்டுகள்

நாலந்தா #6 – முத்திரைகள் – கல்வெட்டுகள்

நாலந்தா முத்திரைகள்

நாலந்தாவில் கிடைத்த முத்திரைகள்

பாரா காவ் கிராமத்தில் இருக்கும் நினைவுச் சின்னங்கள், மேடுகள் எல்லாம் நவீன காலத்தில், 19-ம் நூற்றாண்டு வாக்கில் இங்கு பயணம் மேற்கொண்ட புக்கனன் – ஹேமில்டன் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டன. யுவான் சுவாங்கின் பயணக்குறிப்புகள், இந்தப் பகுதியில் கிடைத்த சில பழங்காலப் பொருட்கள் ஆகியவற்றின் அடிப்படையில் கன்னிங்ஹாம் தான் முதன் முதலில் இந்தச் சிதிலங்களை, பழங்கால நாலந்தாவுடன் தொடர்புபடுத்திச் சொன்னார்.

அவர் இந்த இடம் தொடர்பாக வெளியிட்ட முதல் அறிக்கையானது மிகவும் சுவாரசியமானது. ஆய்வு நோக்கில் மிகவும் முக்கியமானது. அதற்குச் சில வருடங்கள் பின்னதாக, பிராட்லி, மேலோட்டமான சில இடங்களில் குழி தோண்டி ஆராய்ச்சிகள் செய்துவிட்டு 1872-ல் ஒரு ஆவணப் புத்தகம் வெளியிட்டார். அந்தத் துறையில் அவருக்குப் பின் வந்தவர்கள் அவருடைய பணியை அங்கீகரிக்கவில்லை.

1915க்குப் பின்னரே நாலந்தாவில் முறையான அகழ்வாராய்ச்சிகள் நடந்தன. முன்பே சொன்னதுபோல், சுவாரசியமான சிறிய பழங்காலப் பொருட்கள் கிடைத்தன. சீன யாத்ரிகர்கள் எழுதியவற்றில் குறிப்பிடப்பட்டிருப்பவற்றுக்கான ஆணித்தரமான ஆதாரங்களாக இவை அமைந்தன. இங்கு கிடைத்த மிகச் சிறிய பழங்காலப் பொருட்களில் முக்கியமானவை களிமண் முத்திரைகள். இவற்றில் வெகு முந்தைய காலத்து முத்திரை பற்றி முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த மூன்று முத்திரைகள் இருக்கின்றன. கன்னெளஜ் பகுதியைச் சேர்ந்த மெளகரிகள் காலகட்டத்தைச் சேர்ந்தவை இவை. இதுவரை வெளியாகாத முத்திரைகள் பலவும் நாலந்தா அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. வெளியான மூன்று முத்திரைகள் ஹர்ஷ வர்த்தனர் (கி.பி. 475-500), ஈசானவர்மன் (கி.பி. 550-576) சர்வவரன் (கி.பி.576-579) காலகட்டத்தைச் சேர்ந்தவை.

மெளகரி அரசின் தொடர்ச்சியான நல்கையை இந்த மகத்தான பல்கலைக்கழகம் பெற்றிருக்கிறதென்பது மிகத் தெளிவாகத் தெரியவந்திருக்கிறது. வஜ்ர மன்னருக்கு அடுத்ததாக நாலந்தாவில் ஒரு மடாலயத்தை எழுப்பிய மத்திய இந்தியாவைச் சேர்ந்த மன்னர் என்று யுவான் சுவாங் குறிப்பிட்டிருக்கும் மன்னர் இந்த மெளகரி குலத்தைச் சேர்ந்தவர்தான்.

இன்னொரு முத்திரையானது, பொதுவாக பெளத்த மதத்துக்கும் குறிப்பாக நாலந்தாவுக்கும் மிக அதிக நல்கை நல்கிய ஹர்ஷவர்த்தனருக்கும் நாலந்தாவுக்கும் இடையிலான தொடர்பை மிக உறுதியாக எடுத்துக் காட்டுகிறது.

இன்னொரு முத்திரையானது, ஹர்ஷரின் நண்பரான அஸ்ஸாமின் பாஸ்கரவர்மரும் இந்த மாபெரும் விகாரின் வளர்ச்சிக்கு உதவியவர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

யசோவர்மன்

இன்னொரு மெளகரி ஆட்சியாளரான யசோவர்மனின் (கி.பி.729-43) காலகட்டத்துக் கல்வெட்டு பற்றியும் பார்க்கவேண்டும். இந்தக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்படுவதுவரை அவரைப் பற்றி எழுத்துவடிவக் குறிப்புகள் மட்டுமே கிடைத்திருந்தன. மாலாதா (நாலந்தா) பகுதியில் அமைந்திருக்கும் விகாருக்கு யசோவர்மனின் அமைச்சரின் மகனும் வட எல்லையின் காப்பாளருமானவர் வழங்கிய நல்கை பற்றியே இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. பாலாதித்யர் எழுப்பிய மடாலயத்தில் இருக்கும் புத்தர் சிலை பராமரிப்புக்கும் சங்கத்தைச் சேர்ந்த பிக்குகளுக்கும் இந்த நல்கை தரப்பட்டுள்ளது.

நாலந்தா விகார் பற்றிய பொதுவான விவரணைகள், பாலாதித்யர் எழுப்பிய மடாலயம் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றை இங்கு விரிவாகக் குறிப்பிடவிரும்புகிறேன். சீன யாத்ரிகர்கள் சொன்னவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்க இது பெரிதும் உதவிகரமாக இருக்கும்:

புனித நூல்கள், கலைகள் ஆகியவற்றில் மிகுந்த ஞானம் கொண்டிருந்த பிக்குகள், அறிஞர்கள் ஆகியோருக்காகவும் பிரகாசமாக ஒளிரும் வெண்ணிற மேகங்கள் போல் ஒளிக் கதிரை உமிழும் சைத்யங்கள் ஆகியவற்றுக்காகவும் நாலந்தா மிகவும் புகழ்பெற்றது. கொடுமையான போர்க்களங்களில் போரிட்டு எதிரிகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தைக் கொண்டு புகழ் பெற்ற மன்னர்களின் நகரங்களைப் பார்த்து இந்த உன்னத நகரமான நாலந்தா எள்ளி நகையாடுவதுபோல் இருக்கிறது. நாலந்தாவின் வரிசையான விகார்களும் விண்ணை முட்டும் ஸ்தூபிகளும் உலகைப் படைத்த இறைவன் பூமிக்குக் கட்டியிருக்கும் அற்புத தோரணம் போல் திகழ்கின்றன. நவரத்தனங்கள் பதிக்கப்பட்டு மின்னும் பிரமாண்ட கோவில்கள் நல்லொழுக்கம் மிகுந்த வித்யாதரர்களின் வசிப்பிடமான சுமேரு மலைபோல் ஒளிர்கின்றன. இங்குதான் வெல்வதற்கு அரிய பாலாதித்ய மன்னர் தன் எதிரிகள் அனைவரையும் வீழ்த்தி உலகம் முழுவதையும் தன் காலடியில் விழ வைத்தபின்னர், பகவான் புத்தருக்கு மிகப் பெரிய அதி அற்புதமான வெண்ணிற ஆலயம் (ப்ராசாத்) ஒன்றை எழுப்பியிருக்கிறார். கைலாசத்தையும் விஞ்சும் வண்ணம் அதை அவர் கட்டி எழுப்பியிருக்கிறார். நிலவொளியை விஞ்சும் அதி வெண்மை, இமயச் சிகரங்களின் அழகிய வரிசையை விஞ்சும் விகார வரிசை, விண்ணுலகில் பாயும் கங்கையைப் பின்னுக்குத் தள்ளும்படியான பேரழகு, பிற பூலோக நதிகளையெல்லாம் ஓரங்கட்டும் கம்பீரம் ஆகியவற்றைக் கொண்ட இந்த ஆலயம், உலகம் முழுவதும் தேடியலைந்து இனிமேல் வெல்வதற்கு ராஜ்ஜியமே இல்லை என்னும்வகையில் முழு வெற்றி பெற்றபின் இந்த இடத்தில் வந்து குடிகொண்டிருக்கிறது.

சங்கத்தின் வேண்டுகோளின் பெயரில் நாலந்தாவைச் சேர்ந்த இரண்டு துறவிகளினால் இந்த ப்ரசாஸ்தி எழுதப்பட்டுள்ளது. சீலசந்திரர், ஸ்வாமிதத்தா ஆகிய இருவர், தமக்கு இடப்பட்ட பணியை நிறைவேற்றும் சக்தி தமக்கு இல்லை என்பதை நன்கு உணர்ந்துகொண்டு, தன்னிலை விளக்கமாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அது காளிதாஸர் சொன்னதை நினைவுபடுத்துவதாக இருக்கிறது:

வானசேதாம் கிம் ந சீலசரி தாருபலாவாப்திமுச்சத் கரேன |

0

பால வம்சம்

எட்டாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து ஆரம்பித்து இஸ்லாமியர்களின் அழித்தொழிப்பு காலம் வரையிலும் நாலந்தா, வலிமை மிகு பால வம்சம் மன்னர்களின் இடைவிடாத பேராதரவைப் பெற்றுவந்தது. இது தொடர்பான சந்தேகத்துக்கு இடமில்லாத ஆதாரங்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ளன. தர்ம சக்கரத்துக்குக் கீழே தர்மபாலதேவ என்ற பெயர் பொறிக்கப்பட்ட செப்பேடு, பால வம்சத்தின் இரண்டாவது மன்னரான தர்மபாலதேவர் காலம் தொடர்பான ஆவணமாகத் திகழ்கிறது. இது தொடர்பாகக் கிடைத்திருக்கும் பல ஆவணங்களில் இது முதலாவது. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவபாலதேவரின் ஆட்சி காலம் பற்றி நாலந்தாவில் இருந்தே நமக்கு இரண்டு ஆவணங்கள் கிடைத்துள்ளன. வளர்ச்சி நிலையில் இருந்த புத்த மதம் பற்றி கோஸ்ராவன் பகுதியில் கிடைத்த வேறொரு ஆவணமும் இருக்கிறது.

மடாதிபதி விரதேவர்

கோஸ்ராவா கல்வெட்டில் காலம் குறிப்பிடப்படவில்லை. ஆனால் மடாதிபதி விரதேவரின் போஷகராக தேவபாலதேவர் இருந்தார் என்ற குறிப்பு காணப்படுகிறது. சத்யபோதர் முதலில் நாலந்தா மடாலயத்தின் அதிபதியாக இருந்திருக்கிறார். அவருடைய நண்பரும் வலதுகையுமாக இருந்த விரதேவர் சிறிது காலம் கழித்து மடாதிபதியானார் என்று தெரிவிக்கிறது.

பிக்ஷோர் திமாசமாஹ் சுஹ்ருத்பூஜ இவா ஸ்ரீ சத்யபோதர் நிஜோ |
நாலந்த பர்பாலந்தய நியத சங்கஸ்திதர் யாஸ் ஸ்தித ||

ஜலாலாபாத் பள்ளத்தாக்கைச் சேர்ந்த நகரஹாரத்தைச் சேர்ந்தவர் விரதேவர். பெஷாவரில் இருந்த கனிஷ்க விஹாரத்தில் சர்வஞானசாந்தி என்ற துறவியின் சீடராக இருந்து பெளத்த புனித நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். அதற்கு முன்பாக பிஹாருக்குச் சென்று தேவ பாலர் மற்றும் நாலந்தாவில் இருந்த பெளத்த துறவிகளிடமும் கல்வி பயின்றிருக்கிறார்.

தேவபாலருடைய காலம் பற்றி நாலந்தாவில் கிடைத்திருக்கும் இரண்டு ஆவணங்களில் ஒன்றான மன்னர் அளித்த தானமாக அளித்த உலோகச் சிலையின் பீடத்தில் சிறிய குறிப்பு பொறிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு ஆவணம் மிகவும் புகழ் வாய்ந்த செப்பேடு. இதுவரை கிடைத்திருப்பதிலேயே மிகப் பெரிய செப்பேடு இதுதான். இதுவரை கிடைத்திருப்பதிலேயே மிகப் பெரிய செப்பேடு இதுதான். 2’ x 2.5’ அளவிலான இந்தச் செப்பேட்டின் இரு பக்கங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன. முன் பக்கத்தில் 42 வரிகளும் பின் பக்கத்தில் 24 வரிகளும் நாகரி மொழிக்கு முந்தைய வரிவடிவிலும் சமஸ்கிருத மொழியிலும் பொறிக்கப்பட்டுள்ளன. 21-43 வரிகளில் தானம் பற்றிய விவரங்கள் உரைநடையிலும் எஞ்சியவை செய்யுள் வடிவிலும் இருக்கின்றன. ஸ்ரீ தேவபால தேவஸ்ய என்று செப்பேட்டின் மேலே பொறிக்கப்பட்டுள்ளது. தேவபாலரின் ஆட்சியின் 39வது ஆண்டில் அதாவது கி.பி.860-ல் பொறிக்கப்பட்டுள்ளது. தேவபாலர் பெளத்தத்துக்கு ஆதரவு தந்தவர் மட்டுமல்ல; பெளத்தரும் கூட. அவருடைய ஆட்சி காலத்தின் 33வது ஆண்டில் வெளியிடப்பட்டிருக்கும் செப்பேட்டில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

பரமசெளகத பரமேஸ்வர பரமபத்தாரகோ
மஹாராஜாதிராஜா ஸ்ரீமான் தேவபாலதேவ

பாலபுத்ரரின் விஹாரம்

தேவபாலர் வெளியிட்ட செப்பேட்டில் இருக்கும் முக்கியமான விஷயம் நாலந்தாவில் பாலபுத்ர தேவர் எழுப்பிய புதிய விஹாரம் பற்றி இடம்பெற்றிருக்கும் தகவல்தான். தேவ பாலரின் அனுமதியுடன் ஸ்வர்ணத்வீப (சுமத்ரா) அரசரான சைலேந்திரர் இந்த புதிய பிஹாருக்கு தானமாக அளித்த ஐந்து கிராமங்கள் பற்றி அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வணக்கத்துக்குரிய புத்த தேவரின் ஆலய நிர்வாகத்துக்கான வருவாய்க்காகவும் பிரஞானபாரமிதம் தொடங்கி தர்ம நூல்கள் அனைத்தையும் கற்றுத் தரவும், பிக்குகளுக்கான தங்குமிடத் தேவைகள், உடைகள், உணவு, படுக்கைகள், இருக்கைகள், நோயுறுபவர்களுக்கான மருந்துகள் ஆகியவற்றுக்கும் சங்கத்தின் மரியாதைக்குரிய நால்வகை பிக்குகள் சங்கத்துக்கும், அஷ்ட மஹாபுருஷர்களின் அவதார வடிவமான தாந்த்ரிக போதிசத்வர் குழுவுக்கும் தர்ம ரத்ன புனித நூல்களைப் பிரதியெடுக்கவும் புத்த விகாரம் பழுதடையும்போது அதைப் புனரமைக்கவும்…

முதலான காரணங்களுக்காக இந்த தானம் வழங்கப்பட்டிருக்கிறது.

(தொடரும்)

__________

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய “நாலந்தா” நூலின் தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *