Skip to content
Home » நாலந்தா #7 – மடாலய அமைப்பும் கலைகளும்

நாலந்தா #7 – மடாலய அமைப்பும் கலைகளும்

மடாலய அமைப்பு

நாலந்தா மடாலய அமைப்பு

புதிதாகக் கட்டப்பட்ட மடாலய வளாகம் தற்சார்பு கொண்டதாகத் திகழ்ந்தது. வழிபாடு, கல்வி, செளகரியமான தங்குமிடம், ஒழுக்கமான வாழ்க்கைமுறை ஆகிய அனைத்துக்குமான நிதி வசதி முழுவதும் தனியாக அதன் வசம் இருந்தது. இது முழுக்கவும் அயல் நாட்டு அரசு, நாலந்தாவில் தங்கிக் கல்வி பெற வரும் தமது நாட்டு மக்களுக்கு உதவும் வகையில் செய்துகொடுக்கப்பட்டிருக்கலாம். ஸ்வர்ண த்வீப வளாகம் என்று இது அழைக்கப்பட்டிருக்கிறது. இதை வைத்துக் கொண்டு இந்த மடாலய வளாகங்கள் எல்லாமே தனித்தனி நிர்வாக அமைப்புகளாக ஒவ்வொன்றும் தனித்தனி அம்சங்களுடன் இருந்து வந்தது என்ற முடிவுக்கு நாம் வந்துவிட முடியாது. இருந்தும் இந்த மடாயலங்களில் வழிபாட்டு மையங்கள் காலப்போக்கில் பெருகி வந்திருப்பதைப் பார்க்கும்போது எல்லா காலகட்டங்களில் இல்லையென்றாலும் பல்வேறு தலைமுறைகளில் தனித்தனியான நிர்வாக அமைப்புகள் உருவாகியிருக்கலாம் என்று முடிவுக்கு நாம் வரமுடியும்.

பால புத்திரர், தான் எழுப்பிய விஹாரம் தொடர்பாக வெளியிட்டிருக்கும் அரசாணையில் தானங்கள், விதிமுறைகள், நிதி ஒதுக்கீடுகள் பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். இவை எல்லாமே அதற்கு முன்பாகவே இருந்த முன்னுதாரணங்களின் அடிப்படையில்தான் செய்யப்பட்டிருக்கும் என்று நம்ப இடமுண்டு. நாலந்தாவின் நிர்வாக விதிமுறைகளைப் பார்க்கும்போது, நவீன காலகட்டத்தில் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல்வேறு உடனுறைக் கல்லூரிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்பட்டு ஒரு மைய பல்கலைக்கழகத்தால் நிர்வகிக்கப்படுவதுபோலவே இருந்திருப்பதாகத் தெரியவருகிறது.

சர்வ தேச விஹாரங்கள்

தூர தேசத்துக்கு வந்து ஞானத்திலும் மதத்திலும் தேர்ச்சி பெற விரும்பும் நபர்களுக்காக நாலந்தாவில் ஒரு நிலையான விஹார் ஒன்றை அமைக்கவேண்டும் என்று பாலபுத்திரர் தீர்மானித்திருக்கிறார். இந்தியாவில் அதற்கு முன் பல்வேறு பகுதிகளில் அப்படியாக இயங்கிவந்த அமைப்புகளைக் கேள்விப்பட்டே அதை அமைத்திருக்கவேண்டும். அதேநேரம் தென்னிந்தியாவில் ஒரு நூற்றாண்டு கழித்து அவருடைய வம்சாவழியினரால் இப்படியான பலகலைக்கழகங்கள் அமைக்கப்பட முன்னுதாரணமாகவும் இது விளங்கியது.

கிறிஸ்தவ சகாப்தத்தின் முதல் நூற்றாண்டுகளில் நாகார்ஜுனகுண்டாவில் அமைக்கப்பட்ட சிங்கள விஹாரா, சிங்களத் துறவிகளுக்காக அமைக்கப்பட்டது. அங்கு தங்கியிருந்து சிங்கள பெளத்த துறவிகள் இந்தியா முழுவதும் சத்திய ஞானத்தைப் போதித்தனர். ஆனால், இந்தப் பகுதியை ஆண்டு வந்த இக்‌ஷ்வாகு குல அரசரின் தானத்தினால் இது இயங்கிவந்தது. நாகர்ஜுனகுண்டாவுக்கு வரும் சிங்களர்களுக்கு சிங்கள அரசர் கட்டிய மடாலயம் அல்ல. புத்த கயாவில் மேகவர்ணர் எழுப்பிய விஹார், சமுத்திர குப்தரின் அனுமதி பெற்று சிங்கள அரசரால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. புத்தர் பிறந்த புனித பூமிக்கு யாத்திரை வரும் சிங்களர்களுக்காகக் கட்டப்பட்ட அந்த மடாலயம் யுவான் சுவாங் வந்து பார்த்த ஏழாம் நூற்றாண்டிலும் மிகச் சிறப்புடன் செயல்பட்டு வந்திருக்கிறது.

ஐ சிங் வேறு சில பல்கலைக்கழகங்கள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். தென்னிந்தியாவில் இருக்கும் குல்கை அரசர் (அநேகமாக பாண்டியர்களின் கொற்கை அரசராக இருக்கும் என்று எட்மண்ட் சாவனஸ் குறிப்பிட்டிருக்கிறார்) போதி தரிசனத்துக்கு வரும் தன் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு மடாலயத்தை புத்த கயாவில் மஹா போதி கோவிலின் வட கிழக்கே இரண்டு யோஜனை தொலைவில் எழுப்பியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். வடக்கிலிருக்கும் கபீஸா மற்றும் துகாரா தேசத்தினருக்கான வேறு மடாலயங்களும் இங்கு அமைந்திருக்கின்றன.

மிர்கசீஷவன பகுதியில் சீனர்களுக்காக ஒரு மடாலயம் நாலந்தாவுக்குக் கிழக்கே 40 ஜோஜனை தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த மடாலயம் ஸ்ரீகுப்தரால் நிர்மாணிக்கப்பட்டது. இதன் பராமரிப்புக்கு 24 கிராமங்கள் தானமாகத் தரப்பட்டன. ஆனால், ஐ.சிங் இந்தியாவுக்கு வந்தபோது, இந்த மடாலயம் நலிவடைந்திருந்தது. புனித பூமியில் தங்கி வழிபடுவதற்கான பிற அனைத்து தேசத்தினருக்கான மடாலயங்களும் நல்ல நிலையில் இருக்கும்போது சீனர்களுக்கான மடாலயம் மட்டும் நலிவடைந்து இருப்பது குறித்து ஐ.சிங் தன் வேதனையைத் தெரிவித்திருக்கிறார்.

பல்வேறு அரசுகள் இப்படியான மடாலயங்களைப் பராமரித்துவந்திருப்பதைப் பார்க்கும் போஸ்ச், ’இதையெல்லாம் புனித யாத்திரைகள் மேற்கொள்பவர்களின் மதம் சார்ந்த தேவைகளைப் பூர்த்திசெய்யும் நோக்கில் மட்டுமே நிர்மாணித்திருப்பார்கள் என்று சொல்லமுடியாது. அரசாங்க தூதுவர்கள், வணிகர்கள் ஆகியோரின் நலன்கள், பயன்பாடுகள் சார்ந்தும் இவற்றை எழுப்பியிருப்பார்கள். இவற்றின் மூலம் வணிக நலன்கள், அரசாங்க நலன்கள், பல்வேறு தேசங்களின் மதம் சாரா விஷயங்களின் நலன்களும் பாதுகாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டிருக்கும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பாலபுத்திரர் செய்ததுபோலவே 11-ம் நூற்றாண்டிலும் சூடாமணி வர்மரும் அவருடைய மகன் மாறவிஜயதுங்கவர்மரும் நாகப்பட்டினத்தில் சைலேந்திர ராஜ்ஜியத்திலிருந்து வரும் பெளத்த துறவிகளுக்காக அற்புதமான விஹார் கட்டி அதன் பராமரிப்புக்கு தானங்கள் அளித்திருக்கிறார்கள். சீனா மற்றும் ஸ்ரீ விஜயத்திலிருந்து தென்னிந்தியாவுக்கு கடல் வழியாக வரும் புனித யாத்ரிகர்கள் வந்திறங்கும் முதல் துறைமுகமாக நாகபட்டினம்தான் அப்போது இருந்தது. அந்த நூற்றாண்டின் இறுதியில் ஆட்சிபுரிந்த முதலாம் குலோத்துங்கரின் கல்வெட்டுகளிலும் இந்த விஹார் பற்றிய குறிப்புகளை நாம் பார்க்க முடிகிறது.

நாலந்தாவில் இருக்கும் பாலபுத்ர விஹார் போலவே, நாகபட்டனத்தில் இருக்கும் சுடாமணி விஹாரிலும் பல்வேறு வடிவங்களில் ஏராளமான பெளத்த வெண்கலப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன. இவை பற்றிய விவரங்கள் விரிவாக இன்னும் நூலாக அச்சிடப்படவில்லை.

நாலந்தா கலைகள்

பாலபுத்திர மடாலயம், அங்கிருக்கும் வெண்கலச் சிலைகள் எல்லாம் நாலந்தா கலைக்கும் ஹிந்து-ஜாவா கலைக்கும் இடையிலான தொடர்பை முன்வைக்கின்றன.1925-ல் போஸ்ச், நாலந்தாவில் கிடைத்தவற்றுக்கும் ஜாவா கலைநுட்பங்களுக்கும் இடையிலான ஒற்றுமையைக் கண்டு வியந்தார். குறிப்பாக, பாலபுத்திர விஹாரில் இருந்து கிடைத்த அக்சோபயா வெண்கலச் சிலைகள் (இந்திய அகழ்வாராய்ச்சித்துறை, 1917-18, P1.1. XIVa ), 1921-ல் கண்டுபிடிக்கப்பட்ட தேவபாலச் செப்பேடு ஆகியவை இந்த ஒற்றுமையை மிக அதிக அளவில் வெளிப்படுத்தின.

இதற்கு போஸ்ச் இரண்டு காரணங்கள் இருக்கக்கூடும் என்று கூறுகிறார். ஒன்று ஹிந்து-ஜாவா கலையும் நாலந்தா கலைகளும் இரண்டுக்கும் பொதுவான பெளத்த கலையில் இருந்து கிளைபிரிந்திருக்கவேண்டும். ஜாவா மற்றும் ஸ்ரீ விஜயம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் கிடைப்பதற்கு முன்பே இந்த மூலக் கலைவடிவம் உருவாகியிருக்கவேண்டும். அல்லது ஜாவாவில் இருந்து நாலந்தாவில் வந்து தங்கியவர்களால் உருவாக்கப்பட்டதாக அல்லது ஜாவாவில் இருந்து உற்பத்தி செய்து கொண்டுவரப்பட்டதாக இந்த கலைப் பொருட்கள் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், வேறொரு மடாலயத்தில் இருந்து கிடைத்திருக்கும் ஆறு கரங்கள் கொண்ட யமாந்தகர் சிலையானது பின்னாளில் திபெத்திய புத்த கலையில் இடம்பெறும் க்ரோத பாணி வடிவங்களின் முன்னோடி வடிவமாக இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

பெர்னட்-கெம்பெர்ஸ் ஆகியோர் நாலந்தா வெண்கலப் பிரதிமைகள் பற்றி மிக விரிவாக ஆராய்ந்து நூல் எழுதியுள்ளனர். நாலந்தாவுக்கும் ஜாவா தீவுக்கும் இடையில் நீண்ட கால, இடைவெளியற்ற பந்தம் நீடித்து வந்திருக்கிறது. சுமத்ரா தீவில் நாலந்தாவின் யோகாசார பெளத்தத்தின் வஜ்ராயன பிரிவுச் சான்றுகள் 7-ம் நூற்றாண்டின் பின் பாதியில் காணக்கிடைக்கின்றன. இதற்குச் சில காலம் கழித்து ஜாவா தீவில் நாகரி எழுத்துக்கு முந்தைய எழுத்தின் வடிவங்கள் கிடைத்திருக்கின்றன. இதே வழியில் இந்தியாவில் உருவான எழுத்துக்கு இணையான வளர்ச்சியை அது அங்கு பெற்றிருக்கிறது.

எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வங்காள கவி பட்ட நாராயணா எழுதிய வேணி சம்ஹாரம் என்ற நூலில் இடம்பெறும் பாடல் பழங்கால ஜாவா இலக்கியத்தில் ஆதி பர்வத்தில் இடம் பெற்றிருக்கிறது. கெளடாவில் இருந்து ஒரு பெளத்த துறவி ஜாவா தீவில் சென்று தங்கியது குறித்து கேலுராக் கல்வெட்டின் குமாரகோஷத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், சுமத்ரா, ஜாவா தீவுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து தங்கியவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பாலபுத்திர விஹார் வளர்ச்சியைப் பார்க்கும்போது இது புலனாகிறது.

1915-ல் இந்த விஹார் அகழ்ந்தெடுக்கப்பட்டது. அற்புதமான சிலைகள் உட்பட சுமார் 200க்கு மேற்பட்ட உலோகப் பொருட்கள் தோண்டிஎடுக்கப்பட்டன. நாலந்தாவின் பிற மடாலயங்களில் இதுபோல் வெண்கலப் பொருட்கள் மிகக் குறைவாகவே கிடைத்துள்ளன. இங்கு இப்படி மிக அதிக அளவில் வெண்கலப் பொருட்கள் கிடைத்ததற்கு இங்கு ஒரு தீ விபத்து நடந்ததாகவும், இங்கு இருந்தவர்களுக்கு உள்ளே இருந்த வெண்கலப் பொருட்களை அப்புறப்படுத்த நேரம் கிடைக்காமல் போனதாகவும் சொல்லப்படுகிறது. 11-ம் நூற்றாண்டு வாக்கில் இப்படி நடந்திருக்க வாய்ப்பு உண்டு. மஹிபாலரின் ஆட்சியின் 11-ம் ஆண்டில் அக்னி ததோதாரா காலகட்டத்தில் கோசம்பியைச் சேர்ந்த பாலாதித்யர் என்பவர் கதவு ஒன்றைச் சீரமைக்க தானம் கொடுத்த விவரம் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

இங்கு கிடைத்திருக்கும் வெண்கலப் பொருட்களில் சில தேவபாலருடைய காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை பால வம்ச கலையைச் சேர்ந்தவை. இவையெல்லாம் ஒரே தத்துவ பிரிவைச் சேர்ந்தவை. இவற்றுக்கான தானங்கள் தொடர்ந்து கிடைத்துள்ளன. ஆனால் நீண்ட காலத்துக்கு அல்ல என்பது தெரியவருகிறது. இந்தக் காலகட்டத்துக்கு சற்று நெருக்கமான காலகட்டத்தில் ஜாவாவில் கிடைத்த வெண்கலப் பொருட்களை இவை பெரிதும் ஒத்திருக்கின்றன. இவற்றின் மீதான ஜாவா கலை நுட்பத்தின் தாக்கம்பற்றி விரிவாக ஆய்வுகள் நடந்துவருகின்றன. என்.ஜே.க்ரோம் போன்ற மாபெரும் கல்வெட்டியல் மற்றும் அகழ்வாராய்ச்சி அறிஞர், ’இந்த வெண்கலப் பொருட்கள் எங்கிருந்து கிடைத்தவை என்ற தகவலை மறைத்துவிட்டுக் காட்டினால் சொற்பமானவைதான் ஹிந்து-ஜாவா கலை பந்தத்தை வெளிப்படுத்துவதாகச் சொல்லியிருப்பேன்’ என்று கூறியிருக்கிறார்.

பெர்னெட்-கெம்பர்ஸ் இதுபற்றிச் சொல்லியிருப்பது சரியாக இருக்கிறது:

’ஜாவா கலை நுட்பத்தின் செல்வாக்கின் கீழ் நாலந்தா கலைகள் செழித்துள்ளன. இருந்தும் ஜாவாவில் இல்லாத அல்லது பிரபலமாக இல்லாத பல பாணி சிலைகளையும் உருவாக்கியிருக்கிறது. நாலந்தாவிலிருந்து இந்த மற்றும் இவை போன்ற சிலைகள் பர்மா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கும் ஜாவாவுக்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. ஜாவாவில் இருக்கும் வெண்கலச் சிலைகள் பால வம்சத்து கலை நுட்பங்களுடன் இருப்பதில் இருந்து இது தெரியவந்திருக்கிறது’.

அவர் மேலும் சொல்கையில், ’ஜம்பாலா பிரதிமை மற்றும் வஜ்ராசனத்தில் அமர்ந்திருக்கும் புத்தர் சிலை போன்றவையெல்லாம் நாலந்தா கலைகளில் இருந்து ஜாவா கலைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கும். ஆனால், எட்டாம் நூற்றாண்டுக்கு முன்பே ஜாவா தீவினர் வெண்கல வார்ப்புத் தொழில்நுட்பத்தில் உச்சத்தை எட்டிவிட்டிருந்தனர். ஆனால் நாலந்தா வெண்கலச் சிலைகள் பெரிதும் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையே. இந்த வெண்கலச் சிலைகள் இந்தியாவில் கிடைத்த முதல் வெண்கலச் சிலைகள் அல்ல. அதுபோல் ஜாவா கலைநுட்பங்களில் செல்வாக்கு செலுத்திய இந்தியக் கலை நுட்பங்களில் பாலா கலைவடிவம் மட்டுமே இருந்தன என்றும் சொல்லமுடியாது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நாலந்தாவின் கலைகள் தொடர்பான 1925-26 காலகட்டத்தில் கிடைத்திருக்கும் சுவர்/சிதை உருவங்கள் பற்றியும் அதிகம் ஆய்வுகள் நடத்தப்படவில்லை. மடாலய அமைப்புகளின் ஆரம்பகட்டத்தைச் சேர்ந்தவை அவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பிற்காலச் செங்கல் கட்டுமானம் ஒன்றுக்குள் முழுவதுமாக மூடப்பட்டிருந்த ஆரம்ப கால கூம்பு மாடம் ஒன்றில் இந்தவகை சிற்பங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. களிமண் பீடத்தின் மேல் வரிசையாக இந்த சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

இந்த புத்தர் சிற்பங்கள் மரபான பல்வேறு நிலைகளில் உருவாக்கப்பட்டுளன. இவற்றின் மிகவும் எளிமையான திறமையான பாணியைப் பார்க்கும்போது இவை நிச்சயம் வெகு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கும் என்பது உறுதியாகிறது. இவற்றை உலகின் பார்வைக்குக் கொண்டுவந்த திரு பேஜ், இவை ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அதற்கும் வெகு முந்தையதாகவே இருக்கும்.

1933-34-ல் ஒரு வழிபாட்டு மண்டபத்தின் (எண்: 12) சிறிய அறையில் மிக பத்திரமாக பாதுகாப்பட்ட போதிசத்வ அவலோகிதேஸ்வரரின் அற்புதமான சிலை அகழ்ந்தெடுக்கப்பட்டது. ”குப்தர் காலத்து மாபெரும் சிற்பிகள் நமக்குக் கைமாற்றித் தரப்பட்டிருக்கும் மகத்தான கலைப் பொக்கிஷங்களில் ஒன்று’ என்று இது போற்றப்படுகிறது. பல ஆண்டுகளாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் சில மடாலயங்களின் துறவியர் மாடங்கள் சிறிதும் குலையாமல் அப்படியே மீட்டெடுக்கப்பட்டுள்ளன என்பதையும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும். தான் பார்த்த விஹார்கள் பற்றி ஐ சிங் குறிப்பிட்டிருப்பவற்றுடன் இவை பெரிதும் ஒத்துப்போகின்றன.

சில துறவியர் அறைகளின் நுழைவாயில் வளைவுகள் மிகவும் துல்லியமாகத் தெரியும்படியாக அமைந்திருக்கின்றன. இந்தியக் கலைகளின் வரலாறு தொடர்பான ஆய்வுகளில் ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வாக்கில் பிஹாரில் இவையெல்லாம் நல்ல நிலையில் இருந்திருப்பதைத் தெரிந்துகொள்வதென்பது மிகவும் ஆர்வத்தைத் தூண்டுவதாகவே இருக்கிறது.

(தொடரும்)

__________

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய “நாலந்தா” நூலின் தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *