11, 12-ம் நூற்றாண்டுகளில் நாலந்தா பற்றிய தரவுகள் நமக்குக் கிடைக்கவில்லை. 1928-30 வாக்கில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கல்வெட்டில் நாகரி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அகழ்வாராய்ச்சி அறிக்கையில் மடாலயத்தின் ஏழாவது அரங்கமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட அந்தக் கல்வெட்டு கொஞ்சம் ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது. அதில் காலம் குறிப்பிடப்படவில்லை. எனினும் என்.ஜி.மஜூம்தார் சொல்லியிருப்பதுபோல், கி.பி. 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
விபுலாஸ்ரீயின் மித்ர விஹார்
இந்தக் கல்வெட்டு, வித்யாவம்சாவைச் சேர்ந்த விபுலாஸ்ரீ மித்ரா என்ற துறவியைப் பற்றியும் அவர் நிர்மாணித்த புனித மையங்கள் குறித்தும் குறிப்பிடுகிறது. நாலந்தாவைப் பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை. எனினும் அங்கு இந்தத் துறவி மித்திரர்களுக்கு நிர்மாணித்த புதிய மடாலயம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறது. அவர் அந்த மித்ர துறவியர் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்: ’இந்த விஹார் விபுலாஸ்ரீமித்ராவால் நிர்மாணிக்கப்பட்டது; மித்திரர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தப் பூவுலகின் அற்புத அணிகலனாக இந்திரனுடைய அரண்மனையைவிட ஜொலிக்கிறது’ என்ற தெளிவான கல்வெட்டு வாசகத்தை அன்று நடந்த நிகழ்வுக்கான தெளிவான வலுவான ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாம்.
நூலகம்
சதீஷ் சந்திர வித்யாபூஷன் எழுதிய ’நாலந்தாவின் பல்கலைக்கழகமும் நூலகமும்’ என்ற நூல் மிகவும் முக்கியமானது. திபெத்திய ஆவணங்களைப் பொறுத்தவரையில், நாலந்தா பல்கலைக்கழகமும் அதன் பிரமாண்ட நூலகமும் அமைந்திருக்கும் பகுதி தர்ம கஞ்ச என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ரத்னச் சாகரம், ரத்னோததி, ரத்னரஞ்சகா என மூன்று பிரமாண்டக் கட்டடங்கள் இங்கு இருந்திருக்கின்றன. ரத்னோததியில் ஒன்பது அடுக்கு மாடிகள் இருந்திருக்கின்றன. ப்ரக்ஞானபாரமிதா சூத்திரம், சமாஜகுஹ்யா போன்ற தாந்த்ரிகப் படைப்புகள் முதலான புனித நூல்கள் இங்கு இருந்திருக்கின்றன.
அழித்தொழிப்பு
பனிரண்டாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இஸ்லாமியப் படைகள் பிஹாரைச் சூறையாடியபோது நாலந்தாவுக்கு நேர்ந்த கொடூர அழிவு போல் வேறு எங்கும் நடந்திருக்கவில்லை என்றே சொல்லலாம். வரலாற்றில் இஸ்லாம், பௌத்தத்துக்கும் மத்திய ஆசியாவின் மையப் பகுதியில் தொடங்கி தென் கடல் தீவுகள் வரையிலும் இருந்த பௌத்த அமைப்புகளுக்கும் துளியும் கருணையே காட்டாத, மிகப் பெரிய எதிரியாகவே இருந்திருக்கிறது. ஒரு முன்னணி இஸ்லாமிய வரலாற்று ஆசிரியரின் வார்த்தைகள் (தபகாத் ஏ நிசாரி) பிஹாரில் என்ன நடந்தது என்பதை மிகத் தெளிவாக விவரிக்கிறது:
முகம்மது இ பக்த-யார் இந்தப் பகுதிகளில் மிகப் பெரிய அளவிலான கொள்ளையடிப்பு மற்றும் அழித்தொழிப்புகளில் ஈடுபட்டார். கடைசியில் கோட்டையால் சூழப்பட்ட பிஹாரைத் தாக்கினார். பிஹார் கோட்டையை நோக்கி 200 குதிரைப்படை வீரர்களுடன் தற்காப்பு கவசங்களுடன் முன்னேறிச் சென்றார். திடீரென்று தாக்கத் தொடங்கினார். முகம்மது இ பக்த-யாரின் பக்கம் நிஜம் உத் தின் மற்றும் சமசாம் உத் தின் என்ற இரு அறிஞர்கள்-சகோதரர்கள் இருந்தனர். நான் ஹிஜ்ரி வருடம் 641-ல் லக்னாவதியில் சமசாம் உத் தீனைச் சந்தித்தேன். அவர் சொன்னதை இங்கு தருகிறேன்:
‘ஃபர்கானாவைச் சேர்ந்த இரு அறிஞர்களும் ஜிஹாத் புனிதப் போரில் ஈடுபட்டிருந்த படையில் வீரர்களாக இருந்தனர். கோட்டை வாசலை அடைந்ததும் அவர்கள் தாக்குதலை ஆரம்பித்திருக்கிறார்கள். அப்போது முகம்மது இ பக்த யார் கோட்டையின் பின்பக்க வழியாக நுழைந்து தாக்கினார். அவர்கள் கோட்டையைக் கைப்பற்றி பெரும் செல்வத்தைக் கொள்ளையடித்தனர்.
கோட்டைக்குள் இருந்தவர்கள் பிராமணர்கள். தலையை மழித்திருந்த அந்த பிராமணர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். ஏராளமான நூல்கள் அங்கு இருந்தன. முசல்மான்கள் அந்தப் புத்தகங்களைப் பார்த்ததும் இந்துக்களை அழைத்து அவை என்ன என்று கேட்கலாம் என்று நினைத்தனர். ஆனால் தாக்குதலில் கோட்டைக்குள் இருந்த இந்துக்கள் அனைவருமே கொல்லப்பட்டிருந்தனர். அந்த நூல்களில் என்ன எழுதப்பட்டிருந்தன என்பதைத் தெரிந்துகொண்டபோது அந்தக் கோட்டைக்குள் இருந்தது ஒரு கல்லூரி என்பதும் ஹிந்தி மொழியில் அதை விஹார் (மதரஸா) என்று அழைத்தனர் என்பதும் தெரியவந்தது’.
திபெத்திய ஆவணங்கள் சொல்வது என்ன?
வித்யாபூஷன், திபெத்தியத் தரப்பில் இதுபற்றிச் சொல்லப்பட்டிருப்பவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்: துருக்கிய கொள்ளையர்கள் நாலந்தாவை அழித்துவிட்டுச் சென்றபின்னர், முதித பத்ரா என்ற துறவி ஆலயங்களையும் வழிபாட்டு மையங்களையும் சீரமைத்தார். மகத மன்னரின் அமைச்சர் குகுதாசித்தா நாலந்தாவில் ஒரு கோவிலை எழுப்பினார். மதச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டு முக்கியமான தீர்த்தக துறவிகள் வந்தனர். சில புதிய இளம் குறும்புக்காரத் துறவிகள் அவர்கள் மீது உடல் கழுவும் தண்ணீரை ஊற்றினர். அது மூத்த துறவிகளுக்கு கோபத்தைக் கொடுத்தது. 12 வருடங்கள் சூரியனைத் துதித்தபின் ஒரு யாகம் (தீ வளர்த்து பலி கொடுத்தல்) செய்து மரச் சுள்ளிகளைப் போட்டு எரித்தனர். அதையும் புனித யாக குண்டத்தில் இருந்து பஸ்மத்தையும் எடுத்து பௌத்த ஆலயங்களில் தூவினர். இது பெரிய தீயாகப் பற்றி எரிந்தது. ரத்னோததி அதில் தீக்கிரையானது. பல பௌத்தப் புனித நூல்கள் புனிதமான ப்ரஞான பாரமிதா சூத்திரம் மற்றும் தந்த்ர நூல்களில் இருந்து கசிந்த நீரினால் தீயிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டன.
நாலந்தாவின் எழுச்சி
ஆயிரம் ஆண்டுகளான நாலந்தா மடாலயத்தின் சுருக்கமான வரலாறு இதுதான். அது தொடங்கிய விதம், அங்கிருந்த பல்கலைக்கழகம், அதன் புகழ் பெற்ற ஆசிரியர்கள், அங்கு வந்து போன முக்கிய பிரமுகர்கள் இவை பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்பாக ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும்: நாலந்தாவின் பெரும் புகழுக்கும் மேன்மைக்கும் எது காரணம்?
மன்னர்களின் தானங்கள், நல்கைகள், நில மானியங்கள், சலுகைகள் பெரிதும் உதவிகரமாக இருந்திருக்கின்றன. உயர்ந்த இலக்குக்கு வாழ்கையை அர்ப்பணித்த துறவியர் குழுக்களுக்கு மன்னர்கள், செல்வந்தர்கள் செய்து தந்த வசதி வாய்ப்புகள் மிகவும் அதிகம். அவையே அந்தத் துறவியர்கள் தர்மத்தின் சத்திய ஞானத்தைக் கொழுந்துவிட்டு எரியவைக்கவும் உலகம் முழுவதும் அந்தப் பேரொளியைப் பரப்பி அறியாமை, பிழையான அறிவு ஆகிய இருள்களைப் போக்கவும் வழிவகுத்திருக்கின்றன. துறவிகள் போர்கள், வறட்சி, நோய்கள் முதலான பேரிடர்களைத் தவிர்க்கவும் அவையே உதவியிருக்கின்றன.
ஆனால், புத்தரின் காலகட்டத்து நிகழ்வுகள் எதிலும் நாலந்தா பெரிதாகத் தொடர்புப்படுத்தப்பட்டிருக்கவில்லை. புத்த கயா, சாரநாத், சிராஸ்வதி ஆகியவை எல்லாம் இந்தியாவில் இருந்த பிற சங்காராமாக்களைவிட மிகப் பெரிய புகழைப் பெற்றுவிட்டிருக்கின்றன. நாலந்தாவுக்கு புத்தரின் வாழ்வுடன் அப்படியான எந்தவொரு சாதகமான தொடர்பு எதுவும் இல்லை. இருந்தும் நாலந்தா இவ்வளவு பெரிய புகழை எப்படி அடைந்தது?
இந்தக் கேள்விக்கு நம்மிடம் திருப்திகரமான பதில் எதுவும் இல்லை. நாலந்தாவின் பூகோள அமைவிடம் அதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடும். ஐ சிங் இது பற்றிச் சில விஷயங்கள் குறிப்பிட்டிருக்கிறார். அவர் சொல்கிறார்:
‘இந்த நாலந்தா மடாலயத்தின் தெற்கே 30 காத தொலைவில் குஷாகாரபுர ராஜ நகரம் அமைந்திருக்கிறது. கருடாதகூடமும் வேணு வனமும் (மூங்கில் காடும்) இந்த நகரின் இருமருங்கில் அமைந்திருக்கின்றன. தென் மேற்கில் மஹா போதி ஆலயம் அமைந்திருக்கிறது. தெற்கே பூஜ்ய காலடி மலை (குருபாத மலை) அமைந்திருக்கிறது. இந்த இரண்டும் ஏழு யோஜனை தொலைவில் அமைந்திருக்கின்றன. வடக்கே 25 யோஜனை தொலைவில் வைசாலி நகரம் அமைந்திருக்கிறது. மேற்கே மிருக தாவ 22 யோஜனை தொலைவில் அமைந்திருக்கிறது. கிழக்கே அறுபது-எழுபது யோஜனை தொலைவில் தாம்ரலிப்தி அமைந்திருக்கிறது. சீனாவிலிருந்து வரும் நாம் வந்திறங்கும் துறைமுகம் இங்குதான் இருக்கிறது’.
இந்தக் குறிப்புகளின்படிப் பார்த்தால், சீனா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து புத்தர் பிறந்த பூமிக்கு புனித யாத்திரை வரும்போது தாம்ரலிப்தியில் இருந்து நாலந்தாவுக்குச் செல்வது எளிதாக இருந்திருக்கும்; அங்கிருந்து வேறு இடங்களுக்குச் செல்வதைத் திட்டமிடவும் உதவியாக இருந்திருக்கும் என்பது தெரியவருகிறது. ஐ சிங்கும் இதே போல் பயணம் செய்தவர்தான்.
நில வழியில் வந்திருந்தால் அந்தக் கடினமான சோர்வூட்டும் பயணத்துக்குப் பின் நாலந்தாவில் நிலவிய இதமான அமைதியான சூழலும் தட்பவெப்பநிலையும் பெரும் ஆசுவாசத்தைத் தந்திருக்கும். சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் முன் நிம்மதியாக, விரும்பிய நாட்கள் வரை தங்குவதற்கு நாலந்தா வசதியாக இருந்திருக்கும்.
நாலந்தாவில் புனிதப் பயணிகள் பலரைச் சந்திக்கமுடியும். இந்தியா, சீனா என இரு நாடுகளின் பல்வேறு புதிய பொருட்கள், புராதனப் பொருட்கள், புனித நூல்கள் ஆகியவற்றின் வணிகம் செழித்து வளர்ந்திருக்கும். சொந்த நாட்டிலிருந்து மிகக் கடினமான பயணத்தை மேற்கொண்டு புனித யாத்திரை வருபவர்களுக்கு இந்தப் பொருட்களை வாங்கிச் செல்வது மிகவும் மகிழ்ச்சிக்குரிய முக்கியமான விஷயமாக இருந்திருக்கும்.
பத்து ஆண்டுகள் நாலந்தாவில் தங்கியிருந்த ஐ சிங் கூடத் திரும்பிச் செல்லும்போது 400 புனித நூல்கள், உரைகள், சூத்திரங்கள், வினய சாஸ்திர நூல்கள், சமஸ்கிருதச் சாஸ்திரங்கள், ஐந்து லட்சம் ஸ்லோகங்கள், முந்நூறு பழம் பெருமை வாய்ந்த புனிதப் பொருட்கள், போதி மந்தனாவில் இருந்த திரு உருவ சிலையின் மாதிரி உருவம் ஆகியவற்றை சீனாவுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.
நாலந்தா, பௌத்த மதக் கல்விக்கு மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளின் உயர் கல்விக்கான மையமாகவும் திகழ்ந்திருக்கிறது. பழங்காலத்தில் தட்ச சீலம் இப்படியான புகழுடன் திகழ்ந்தது. ஜாதகக் கதைகளிலும் ஆரம்ப கால சமஸ்கிருதப் படைப்புகளிலும் அதன் பெயரைப் பல இடங்களில் பார்க்க முடிகிறது. ஆனால் அந்த எல்லைப் பகுதியானது அந்நிய சக்திகளின் தொடர் படையெடுப்புக்கு ஆளாகிவந்தது. மெளரியப் பேரரசு வீழ்ந்து குஷாணப் பேரரசு நிலைபெறும் வரையான காலகட்டத்தில் நிலவிய குழப்பங்களினால் தட்ச சீலம் உட்படப் பல சங்காராமக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகின.
இந்த நெருக்கடிகள் மகதம் வரை பாதிப்பை ஏற்படுத்தின. பிரச்னைகள் மிகுந்த எல்லைப் பகுதியிலிருந்து நாலந்தா வெகு தொலைவில் இருந்ததால் பெரிய பாதிப்புக்கு ஆளாகவில்லை. கிழக்குப் பகுதியில் கடல் மார்க்கமாக வந்து சேரும் சீனப் பயணிகளுக்கு தாம்ரலிப்தி துறைமுகத்துக்கு அருகில் அது இருந்ததும் ஒருவகையில் சாதகமாகவே இருந்தது. புத்த மதத்தின் பல்வேறு கிளைகளுக்கு மட்டுமல்ல; பிராமணிய நடைமுறைகள், தத்துவப் பிரிவுகள் ஆகியவற்றுக்கும் நாலந்தா புகழ் பெற்ற மையமாகத் திகழ்ந்தது. பலி, கரு போன்றவை வேதப் பெயர்கள். பாலபுத்ர விஹாரத்துக்குத் தரப்பட்ட தானங்களில் இவற்றுக்காகத் தனித் தொகையும் குறிப்பிடப்பட்டுள்ளன. யுவன் சுவாங் நாலந்தாவில் இருந்தபோது அவரே பிராமணப் புனித நூல்களை இங்கு கற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
(தொடரும்)
__________
கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய “நாலந்தா” நூலின் தமிழாக்கம்.