Skip to content
Home » நாலந்தா #9 – கல்வி

நாலந்தா #9 – கல்வி

கல்வி

நாலந்தாவில் யுவான் சுவாங் கற்றவை

நாலந்தாவில் சுமார் 15 மாதங்கள் தங்கியிருந்தபோது யுவான் சுவாங் கற்றவை பற்றி ஹுவாய் லி விவரித்துள்ளார். நாலந்தா பல்கலைக்கழகத்தில் கற்றுத் தரப்பட்ட பல்வேறு துறைகள் சார்ந்த மற்றும் பல நாட்டுப் பாடங்கள் பற்றி அதிலிருந்து நாம் நன்கு தெரிந்துகொள்ள முடிகிறது:

சட்டக் கல்வியில் நிபுணத்துவம் பெற்றிருந்த யுவான் சுவாங் இங்கு தங்கியிருந்த நாட்களில் யோக சாஸ்திர பத உரையை மூன்று முறை கேட்டார். நியாய அனுசார சாஸ்திரம் ஒரு முறை கேட்டார். ஹின் ஹுவாங் தூய் ஃபா மிங் ஒருமுறை. ஹேது வித்யா சாஸ்திரம் மற்றும் சபா வித்யா மற்றும் தஸ் இயாங் சாஸ்திரங்கள் இரண்டு முறை; பிரான்யமூல சாஸ்த்ர தீகா மற்றும் சாட சாஸ்திரம் மூன்று முறையும் படித்தார். இங்கு கேட்ட கோஸம், விபாஸா, சதபதாபிதர்ம சாஸ்திரங்களின் விளக்க உரைகளை ஏற்கெனவே காஷ்மீரின் பல பகுதிகளிலும் கேட்டிருக்கிறார். ஆனால், இங்கு வந்த போது அவற்றில் அவருக்கு இருந்த சில சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள அவற்றை மீண்டும் படிக்க விரும்பினார். இதை முடித்த பின்னர், எப்போது எழுதப்பட்டவை என்பதும் யாரால் எழுதப்பட்டவை என்பதுமே தெரியாத இந்திய இலக்கியங்களின் வியாகர்ணங்கள் கற்றார்.

நியாய அனுசார சாஸ்திரம் சர்வாஸ்திவாதின்களின் ஹீனயான படைப்பு. மஹாயானத்தின் மாத்யாமிக பிரிவின் முக்கிய படைப்புகளில் ஒன்றான பிரான்யமூல சாஸ்த்ர தீகா. ஆயுர்வேதத்தின் சாடசூத்ரா (சாஸ்த்ரா) யுவான் சுவாங்கினால் பின்னர் சீன மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது.

பொதுவான கல்வி

யுவான் சுவாங்கின் வாழ்க்கை வரலாறை எழுதியவர் உயர் கல்விக்கான மகத்தான மையமாக நாலந்தா இருந்தது பற்றியும் அங்கு கற்றுத் தரப்பட்ட பாட வகைகள் பற்றியும் அங்கிருந்த ஆசிரியர்களின் சாதனைப் படைப்புகள் பற்றியும் அற்புதமாக விவரித்திருக்கிறார்:

இந்தியாவில் இருக்கும் சங்கராமாக்கள் (மடாலயங்கள்) எண்ணிலடங்காதவை. ஆனால், இந்த மடாலயம் அவை அனைத்திலும் பிரமாண்டமானது மிகவும் உயரமானது. ஆலயத்தின் துறவிகள் (ஆசிரியர்கள்) மற்றும் சீடர்கள் (மாணவர்கள்), புனித யாத்திரை மேற்கொண்ட விருந்தினர்களின் எண்ணிக்கை எப்போதும் 10,000க்கு மேலாகவே இருக்கும். அனைவரும் மஹாயானம் மற்றும் பெளத்தத்தின் பிற 18 பிரிவுகளைச் சேர்ந்த நூல்களையும் கற்கிறார்கள். அது மட்டுமல்லாமல், வேதங்கள், ஹேது வித்யா, சப்த வித்யா, சிகித்ஸா வித்யா, தந்த்ரம் (அதர்வ வேதம்), சாங்கயம் முதலான படைப்புகளும் கற்றுக் கொள்கிறார்கள். பிற பல படைப்புகளை ஆராய்ந்து பார்க்கவும் செய்கிறார்கள்.

ஆசிரியர்கள்

20க்கும் மேற்பட்ட சூத்திரங்கள், சாஸ்திரங்களைக் கற்றுத் தரும் ஆயிரம் ஆசிரியர்கள் இருக்கின்றனர். 30 நூல்களைக் கற்றுத் தர முடிந்த 500 ஆசிரியர்கள் இருக்கின்றனர். சட்ட அறிஞர் யுவான் சுவாங் உட்பட பத்து பேர் ஐம்பது நூல்களைக் கற்றுத் தரமுடியும். சீல பத்ரா மட்டுமே இவை அனைத்தையும் படித்துப் புரிந்துகொண்டிருக்கிறார். நல்லொழுக்கமும் கனிந்த வயதும் கொண்டவர் இந்த மடாலயத்தின் தலைமைத்துறவியாக தலைமை ஆசானாக மதிக்கப்படுகிறார். மடாலயத்தினுள் தினமும் நூறுக்கு மேற்பட்ட அரங்குகளில் போதனைகள் நடக்கின்றன. சீடர்கள் அனைவரும் கடிகார முள்ளின் ஒரு நகர்வுகூட விடாமல் முழுமையாக இதில் கலந்துகொள்கிறார்கள்.

யுவன் சுவாங், தான் கற்றுக் கொண்ட நாட்களில் பார்த்த ஆசிரியர்களின் பெயர்கள் அவர்களுடைய பெருமைகள் பற்றிப் பதிவு செய்திருக்கிறார்:

மடாலயத்தில், சில ஆயிரம் துறவிகள் இருக்கிறார்கள். அனைவரும் நல்லொழுக்கமும் சிறந்த ஞானமும் கொண்டவர்கள். அவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் மிக உயர்வாக மதிக்கப்படுகிறார்கள். புகழ் பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள். மடாலயவாசிகள் அனைத்து விதிகளையும் மிகவும் கறாராகக் கடைப்பிடித்தனர். இந்தியா முழுவதிலும் இருப்பவர்கள் இவர்களைத் தமது லட்சிய முன் மாதிரிகளாகப் பார்க்கின்றனர். கல்வி, உரையாடல் என தொடர்ந்து ஈடுபடும் அவர்களுக்கு ஒரு நாள் போதுமானதாக இருப்பதில்லை. இரவும் பகலும் அவர்கள் பரஸ்பரம் கண்காணித்து ஒழுங்குபடுத்திக் கொண்டனர். மூத்தவர்களும் இளையவர்களும் முழுமையை அடைய உதவிக் கொண்டனர்.

திரிபீடகத்தின் பெருமைகள் பற்றிப் பேசாதவர்கள் விலகி வாழ நேர்ந்தது. அயல் நாட்டிலிருந்து வந்த மாணவர்கள் தமது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டதும் நன் மதிப்பு பெற்றனர். நாலந்தாவில் படித்து முடித்ததாகப் பொய்யாகச் சொல்லிக் கொண்டவர்கள்கூட சென்ற இடமெல்லாம் புகழப்பட்டனர். (போலிப் பட்டங்கள் என்பது அந்தக் காலத்திலேயே கூட இருந்திருக்கிறது). வெளி நாடுகளில் இருந்து வந்தவர்களில் பலர் கெடுபிடிகளைச் சமாளிக்க முடியாமல் திரும்பிச் சென்றுவிட்டனர்.

புனித நூல்களைப் போற்றிப் பாதுகாத்து வந்தவர்களின் பங்கு இதில் இருந்திருக்குமா என்பதில் வாட்டர்ஸ் தன் சந்தேகத்தைத் தெரிவிக்கிறார். பல்கலையில் சேர்வதற்கு அல்லது விவாதங்களில் பங்கெடுக்க விரும்புபவர்களைத் தேர்வு செய்யும் வழிமுறைகளே பலரைத் திரும்பிச் செல்லச் செய்திருக்கும் என்று கருதுகிறார். விக்ரமசீலாவில் புனித நூல்கள் எல்லாம் கற்றறிந்த பண்டிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கின்றன என்று வித்யா பூஷன் குறிப்பிட்டிருக்கிறார்.

நவீன நூல்கள் மற்றும் பழங்காலப் படைப்புகளில் நல்ல புலமை பெறவர்களே பல்கலைக்கழகத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பத்து பேரில் மூவருக்கு மட்டுமே இடம் கிடைத்தது.

பல்கலைக்கழகத்தின் கண்ணியத்தைக் காத்து உலகுக்கு வழி காட்டும் பணியைச் செய்து வந்தவர்களாக நாலந்தாவில் மதித்துப் போற்றப்பட்டவர்களில் தர்மபாலர், சந்திர பாலர் ஆகிய இருவரும் மிகவும் முக்கியமானவர்கள். புத்தரின் போதனைகளை அவர்கள் அழகுற விளக்கினர். (தர்மபாலர் தமிழகத்தின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். நாலந்தாவில் முப்பது ஆண்டுகள் போதித்தார். தமது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் ஸ்வர்ண தீபத்துக்குச் சென்றார். கி.பி. 600). குணமதி, ஸ்திரமதி ஆகியோர் சக துறவிகளிடையே பெரும் புகழ் பெற்றிருந்தனர். இவர்கள் (இவர்கள் இருவரும் தர்ம பாலருக்கும் முந்தையவர்கள்). தர்க்கத்தில் சிறந்து விளங்கிய பிரபாமித்ரா, உயர் நிலை உரையாடலில், சொற்பொழிவில் தேர்ந்த ஜினமித்ரா, நல்லொழுக்கத்திலும் அபார ஞானத்திலும் முன் மாதிரியாகத் திகழ்ந்த ஞான சந்திரர் விளக்க முடியாத அளவுக்கு நேர்த்தி மிகு நிபுணத்துவம் கொண்ட சிலாபத்ரர் (யுவான் சுவாங் வந்திருந்த போது இவரே தலைமைத் துறவியாக இருந்தார்) எனப் பலர் சிறந்து விளங்கினர். இவர்கள் ஞானத்தில் சிறந்தவர்கள். புகழ் வாய்ந்த படைப்புகள் பலவற்றை இயற்றியவர்கள். சம காலத்தினரால் வெகுவாகப் போற்றிப் புகழப்பட்டனர்.

நாலந்தா கல்வி பற்றி ஐ சிங்கின் விவரணைகள்

முழுமையாக துறவறம் ஏற்றவர்களின் எண்ணிக்கை சுமார் 3500; ஆரம்ப நிலையில் இருந்த துறவிகளையும் சேர்த்தால் அந்த எண்ணிக்கை 5000க்கும் மேலாக இருக்கும் என்று ஐ சிங் குறிப்பிட்டிருக்கிறார். அங்கு தரப்பட்ட கல்வி பற்றிய இவருடைய குறிப்புகள் சுவாரசியமானவை மட்டுமல்ல; நாலந்தாவில் அன்று நிலைமை எப்படி இருந்தது என்பதை உணர்த்துபவையும் கூட. யுவான் சுவாங் மேலோட்டமாகச் சொல்லியிருப்பவற்றைப் பெருமளவுக்கு உறுதிப்படுத்துவதுபோலவும் இருக்கின்றன.

சித்தம் தொடர்பான ஆரம்பக் கல்வி முடிந்த பின்னர், சூத்ரம், தாது, கிலா முதலான இலக்கண பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. அதன் பின் காசிகாவிருத்தி கற்றுத் தரப்படுகிறது. அதன் பின் கற்றுத் தரப்பட்டவை பற்றி அவர் சொல்லியிருப்பவை:

வ்ருத்தி சூத்ரம் என்பது ஜெயாதித்யருடைய படைப்பு. அவர் மிகச் சிறந்த அறிஞர். அவருடைய ஞானம், இலக்கிய ஆளுமை, கிரஹிக்கும் திறமை எல்லாம் அபாரமானவை. எந்தவொன்றையும் ஒரே ஒரு முறை கேட்டாலும் போதும். நன்கு புரிந்துகொண்டுவிடுவார். இரண்டாம் முறை கேட்க வேண்டிய அவசியமே இல்லை. திரி ரத்னங்களை அவர் உயர்வாக மதித்துப் போற்றினார். மெச்சத் தகுந்த செயல்களைச் செய்தார். அவர் இறந்து முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டது (கி.பி. 661-662).

இவருடைய படைப்பைப் படித்து முடித்ததும் உரை நடை, செய்யுள் ஆகியவற்றைப் படிக்கிறார்கள். ஹேது வித்யா (தர்க்கம்) அபிதர்மகோசம் (மீ மெய்யியல்) ஆகியவற்றை அதன் பின் படிக்கிறார்கள். நியாயத்வாரதாரகா சாஸ்திரக் கல்வி பெறும்போது மிகச் சரியான அனுமானங்களைச் செய்கிறார்கள். ஜாதக மாலா படித்து முடிக்கும்போது அவர்களுடைய புரிதல் திறன் மேம்பட்டுவிடுகிறது.

குருவிடம் கற்றுக் கொண்டும் மற்றவர்களுக்குப் பயிற்றுவித்தும் மத்திய இந்தியாவில் இருக்கும் நாலந்தாவில் அல்லது இந்தியாவின் மேற்குப் பகுதியில் இருக்கும் வாலாபியில் இரண்டு மூன்று வருடங்களைக் கழிக்கிறார்கள். இந்த இரண்டு இடங்களும் சீனாவில் இருக்கும் சின் மா, ஷி சூ, லங்மென், சூ யூ லி முதலான கல்வி மையங்கள் போன்றவை. இங்கெல்லாம் கற்றறிந்த அறிஞர்கள் குழுவாகக் கூடி புனித நூல்கள், விதிகள் பற்றிக் கலந்துரையாடுவார்கள். கற்றறிந்த ஞானிகள் மூலம் குழப்பங்கள், சந்தேகங்கள் எல்லாம் தெளிவு பெற்ற பின்னர் தமது ஞானத்தின் அடிப்படையில் புகழ் பெறத் தொடங்குவார்கள். வாளைப் போல் கூர்மையான தமது அறிவுத் திறமையைப் பரிசோதிக்க மன்னரின் அரணனைக்குச் சென்று தமது ஞானத்தை, திறமைகளை வெளிப்படுத்துவார்கள். தமது அரசியல் திறமையை வெளிப்படுத்தி அரசு நிர்வாகப் பணியில் இடம் பெறுவார்கள்.

விவாத அரங்குகளில் தீவிர இறுக்கமான மனநிலையுடன் ஆசனங்களில் அமர்ந்திருப்பார்கள். தமது மேதமையை நிரூபிக்க முயற்சிகள் மேற்கொள்வார்கள்.

பெளத்தத்துக்கு எதிரான தத்துவ மரபுகளின் கருத்துகளை மறுதலித்து இவர்கள் பேசும்போது எதிர் தரப்பினர் தமது தோல்வியை ஒப்புக்கொண்டு பேச்சு மூச்சின்றி ஒடுங்கிக் கிடப்பார்கள். வெற்றிக் கொடி நாட்டும் இவர்களின் (பெளத்த துறவிகளின்) புகழ் இந்தியாவின் ஐந்து மலைகளிலும் எதிரொலிக்கும். இவர்களின் பெருமைகள் நான்கு எல்லைகளைக் கடந்து பாயும். இவர்களுக்கு நிலங்கள் தானமாகத் தரப்படும். உயர் பதவிக்கு நியமனம் பெறுவார்கள். பெளத்த தத்துவம் தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பார்கள். இவர்கள் விரும்பும் எந்தவொரு தொழிலையும் இவர்களால் முன்னெடுக்க முடியும். (இது ஒருவகையான திக் விஜய வெற்றி போன்றது. இப்படி வாதில் வெற்றி பெறும் நபர்களின் பெயர்கள் பிரமாண்ட வாயில் கதவுகளில் பொறிக்கப்படும்).

(தொடரும்)

__________

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய “நாலந்தா” நூலின் தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *