அன்றைய காலகட்டத்தில் வாத பிரதிவாதங்கள், தர்க்கங்கள் எல்லாம் கல்வியில் மிக பெரிய பங்கு வகித்தன. உலகம் முழுவதுமிருந்த புகழ் பெற்ற ஞானிகள், அறிஞர் பெருமக்கள், ஞானமும் புகழும் பெற விரும்பிய இளைய தலைமுறையினர் என எல்லாரும் நாலந்தாவில் நடக்கும் வாதப் போட்டிகளில் பங்கு பெறவும், குறைந்தபட்சம் அதில் பார்வையாளராகப் பங்குபெறவும், விரும்பி சாரை சாரையாக வந்தனர். சர்ச்சைக்குரிய விஷயங்கள் நியாயப்படுத்தப்படும் அல்லது எதிர்க்கப்படும். சிலர் வெல்வார்கள். சிலர் தோற்பார்கள். வாதில் வெல்வதென்பது ஒரு அறிஞரின் வாழ்வில் மிகவும் மகத்தான நாளாக இருக்கும். அவருக்குப் புதிய பட்டங்கள் கிடைக்கும். கல்விப் புலத்தில் பெருமைகள், புகழ் கூடும். ஐ சிங் குறிப்பிட்டிருப்பதுபோல் மக்கள் மத்தியில் அவருடைய அந்தஸ்து வெகுவாக உயரும். அரசாங்கப்பணிகள் கிடைத்து பொருளதார நன்மைகளும் கிடைக்கும்.
கற்றறிந்த ஞானிகள், மத தலைவர்கள், துறவிகள் இவர்களின் பொருளாதாரத் தேவைகள் எல்லாம் மன்னர்களின் ஆதரவினால் பூர்த்தியாகின. யசோவர்மனுடைய கல்வெட்டிலும் தேவபாலரின் காலத்து செப்பேட்டிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் தானங்கள், நிதி நல்கைகள் எல்லாம் அந்நாளில் வெகுவாக வழக்கில் இருந்த நல்கைகளின் துல்லிய எடுத்துக்காட்டுமட்டுமே. இவை எந்த அளவுக்குப் பெரிய அளவில் இருந்தன என்பது சீன யாத்ரிகர்களின் குறிப்புகளில் இருந்து நமக்கு நன்கு தெரியவருகிறது. இந்த தான தர்மங்கள், நல்கைகள் பெற்ற அறிஞர்கள், அமைப்புகள் எல்லாம் அதற்குத் தகுதியானவைதான் என்பதைத் தமது ஞானத் தேடல், அறிவார்ந்த சாதனைகள் மூலம் மட்டுமல்ல; எளிமை, தியாகம், ஒழுக்கம், நெறிப்படுத்தப்பட்ட நன்னடத்தை மூலமும் நிரூபிக்கவும் செய்திருக்கின்றன. ஹுவாய் லீ இது பற்றிச் சொல்பவை:
இங்கு (நாலந்தா மடாலயத்தில்) வாழும் துறவிகள் ஒரு குழுவாக கண்ணியமும் ஒழுக்கமும் நிறைந்தவர்கள். தீவிரப் பிடிப்பு கொண்டவர்கள். இந்த மடாலயம் நிர்மாணிக்கப்பட்டு 700 ஆண்டுகள் ஆன பின்னரும் இந்த விதிமுறைகளுக்கு எதிராக ஒரு சிறு கலகம் கூட எழுந்ததில்லை.
இந்த தேசத்தின் மன்னர் இந்தத் துறவிகளை மதித்துப் போற்றுகிறார். இந்த மடாலயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய 100 கிராமங்களின் வருவாயை தானமாகத் தந்திருக்கிறார். இந்த கிராமங்களில் வாழும் சுமார் 200 குடும்பத்தினர், ஒவ்வொரு நாளும் சில நூறு பிக்கல் (60 கிலோ) அரிசி தானம் தருகிறார்கள். சில நூறு கிலோ வெண்ணெய் மற்றும் பால் தருகிறார்கள். இதனால் மடாலயத்தில் வசிக்கும் ஆசிரியர், மாணவர்களுக்கு தாராளமாக அனைத்தும் கிடைக்கின்றன. ஏதேனும் வேண்டும் என்று வாய்விட்டுக் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. இந்தக் கல்வி மையத்தில் படிப்பவர்களின் ஞான முழுமை மற்றும் அறிவு நேர்த்திக்கு இந்த தானங்களே ஆதாரமாக இருக்கின்றன. அந்த ஞான முழுமையைத்தான் உலகெங்கும் இருப்பவர்கள் தேடி இங்கு வந்து சேருகிறார்கள்.
ஐ சிங் இந்தமடாலயத்துக்கு தானமாக அளிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 200 என்று ஒரு இடத்திலும் 201 என்று இன்னொரு இடத்திலும் குறிப்பிட்டிருக்கிறார். ஒரு பதிவில் அவர் சொல்கிறார்:
நாலந்தா மடாலயத்தின் விதிமுறைகள் மிகவும் கறாரானவை. இங்கு வசிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். சுமார் 3000க்கு மேலிருக்கும். இந்தமடாலத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் கிராமங்களின் எண்ணிக்கை 200க்கு மேலிருக்கும். பல தலைமுறைகளைச் சேர்ந்த மன்னர்கள் இந்த மடாலயத்துக்கு அவற்றை தானமாகத் தந்திருக்கிறார்கள். அப்படியாக பெளத்த மதம் தொடர்ந்து நிலை பெற்று வருகிறது. இந்த மடாலயத்தில் மிகக் கறாராகப் பின்பற்றப்படும் ஒழுங்குகள் தான் அதற்கு முழு காரணம்.
வேறொரு இடத்தில் அவர் சொல்கிறார்:
இந்த மடாலயத்தின் கீழ் மொத்தம் 201 கிராமங்கள் இருக்கின்றன. தலைமுறை தலைமுறையாக வந்த மன்னர்கள் இவர்களுக்கு இந்த நிலங்களையும் இதற்கான பணியாளர்களையும் தந்துவந்திருக்கிறார்கள்.
நிதி நிர்வாகம்
பெளத்த விஹார்களின் நிதிநிர்வாகம் பற்றி ஐசிங் சில விவரங்கள் குறிப்பிட்டிருக்கிறார். வருமானம் எவ்வளவு என்பது தொடர்பாக போதிய தகவல்கள் கிடைக்கவில்லை. அது பற்றித் துறவிகள் பொதுவாக அதிக அக்கறை காட்டுவதில்லையே. ஆனால் செலவுகளை நெறிப்படுத்துதல், அது தொடர்பான கட்டுப்பாடுகள் பற்றியெல்லாம் சில சுவாரசியமான விவரங்கள் அறியக் கிடைத்துள்ளன.
நிலங்களை மேற்பார்வையிடுபவர்கள் சேமிப்பு கிடங்குகளை காவல் காப்பவர்கள் அவற்றை நிர்வகிக்க ஒரு நபரை மடாலயத்துக்கு அனுப்பிவைக்கவேண்டும். இந்தப் பணியாளர், தன் கைகளைக் கூப்பிக் கொண்டு செலவுகள் தொடர்பான தனது விண்ணப்பத்தை முன் வைக்கவேண்டும். அனைத்து துறவிகளும் ஏற்றுக்கொண்டால் அந்தச் செலவைச் செய்யலாம். செலவுகளைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில் யாருக்கும் எதையும் செலவழிக்க உரிமை கிடையாது. யாராவது ஒருவர் அனைவரிடமும் அனுமதி பெறாமல் ஏதாவது செலவு செய்தால் அது ஒரு கால் வீசம் தானியமாக இருந்தாலும் அவர் நீக்கப்பட்டுவிடுவார். ஒரு சிலர் தங்களை அதிகாரம் மிகுந்தவர்களாக நினைத்துக் கொள்வார்கள். தம்மைப் பற்றிய முக்கியமான முடிவுகளை தானாகவே எடுப்பார்கள். சங்கத்தில் பொதுவில் எதையும் தெரிவித்து அனுமதி பெற முயற்சி செய்யமாட்டார்கள். இவர்களை குலபதி (தவறுகள் செய்யும் துறவிக்கு வழங்கப்படும் இந்தப் பெயர் முற்காலத்தில் கெளரவப் பெயராக இருந்ததுபோல் இன்றைக்கு இருந்திருக்கவில்லை என்று தெரிகிறது) அழைக்கிறார்கள். இது புத்தருடைய விதிமுறைகளுக்கு மாறானது. தெய்வங்களும் உயர்ந்த மனிதர்களும் இதைத்தான் வெறுக்கிறார்கள். இந்த நபர் மடாலயத்துக்கு எவ்வளவு முக்கியமானவராக இருந்தாலும் இவர் செய்வது மிகவும் தவறு. ஞானம் மிகுந்தவர்கள் இப்படி நிச்சயம் நடந்துகொள்ளமாட்டார்கள்.
விருந்தோம்பல்
நாலந்தா மடாலயத்தின் லெளகிக விஷயங்கள் மிகவும் உயர் தரத்தில் வசதி வாய்ப்புகளுடன் இருந்தன. உலகம் முழுவதிலும் இன்று ஜேசூயிட்கள் மூலம் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள் போல் செல்வச் செழிப்புடன் திகழ்ந்தன. யுவான் சுவாங்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஹுவாய் லி தனது ஆசான், இந்த மடாலயத்தில் தங்கியிருந்த காலகட்டத்தில் அவருக்குத் தரப்பட்ட விருந்தோம்பல் குறித்த அதி அற்புதமான விவரணையை வழங்கியிருக்கிறார். சீலபத்ரர் ஒருகனவு கண்டதாகவும் அதில் சீனாவில் இருந்து ஒரு துறவி அவரைச் சந்திக்க வருவார் என்றும் அவரை சீடராக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் யுவான் சுவாங் வருவதற்கு முன்பாக எல்லா ஏற்பாடுகளும் நடந்துவிட்டதாக ஐ சிங் குறிப்பிட்டிருக்கிறார். ஹுவாய் லி யின் வார்த்தைகளை எந்த மாற்றமும் இன்றி அப்படியே அறியத் தருகிறேன்:
யுவான் சுவாங்குக்குத் தரப்பட்ட வரவேற்பு
பத்தாம் நாள் அவர் (யுவான் சுவாங்) நாலந்தா ஆலயத்துக்குச் சென்றார். அந்த ஆலயத்தினர் அவர்களுடைய மரியாதைக்குரிய, உயர் பொறுப்பில் இருந்த நான்கு துறவிகளை அனுப்பி அவரை வரவேற்றனர். ஏழு யோஜனை தூரம் அவர்களுடன் பயணம் செய்தவர், ஆலயத்தின் பண்ணை வீட்டை அடைந்தனர். மெளதகல்யாணர் பிறந்த கிராமத்தில் அந்த விருந்தினர் விடுதி அமைந்திருக்கிறது. சிறிது நேரம் அங்கு தங்கி சிரம பரிகாரம் செய்துவிட்டு இரு நூறு துறவிகளும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுமாக ஊர்வலமாக அவரைச் சூழ்ந்துகொண்டு அழைத்துச் சென்றனர். அவரைப் புகழ்ந்து பேசியபடியும் குடைகள், கொடிகள், மலர்கள், வாசனத்திரவியங்கள் ஏந்திக்கொண்டும் நாலந்தாவுக்குள் அழைத்துச் சென்றனர்.
ஒட்டுமொத்த மடாலயத்தினரும் அவரைப் பார்க்க குழுமியிருந்தனர். ஆசானை (யுவான் சுவாங்கை) நட்பார்ந்த வாழ்த்துகள் கூறி வரவேற்றனர். ஸ்தாவீராவுக்கு (தலைமைத் துறவிக்கு) அருகில் ஒரு ஆசனம் இட்டு, ஆசானை அமரும்படி அன்புடன் கேட்டுக் கொண்டனர். அவர் அமர்ந்த பின்னரே அனைவரும் அமர்ந்தனர்.
ஒரு தீர்மானம் அறிவிக்கப்பட்டது
இதன் பின்னர் காண்டா மணியை ஒலிக்கும்படி கர்மதானாவுக்கு உத்தரவிடப்பட்டது. அதன் பின் ‘நீதி நெறிகள் அறிந்தவர் (யுவான் சுவாங்) மடாலயத்தில் இருக்கும் காலத்தில் இந்த மடாலயத்தின் துறவிகள் உபயோகிக்கும் பொருட்கள் அனைத்தும் மதம் தொடர்பானவை அனைத்தும் அவருடைய சேவைக்கு அவராலும் அனைவரையும்போல் பயன்படுத்தப்படலாம்’ என்று அறிவிக்கப்பட்டது.
சீலபத்ரரைச் சென்று சந்தித்தல்
அதன் பின்னர் மத்திய வயதைச் சேர்ந்தவர்களும் மத நூல்களில் தேர்ச்சி பெற்றவர்களுமான இருபது பேரைத் தேர்ந்தெடுத்து, ஆசானை அழைத்துக்கொண்டு சிங் ஃபா சாங் (தலைமை மடாதிபதி) சந்திக்க கெளரவமாக அழைத்துச் சென்றனர். அவர் தான் சீலபத்ரர்.
மடாலயத்தினர் அவர் மீதான அதீத மரியாதையினால் அவர் பெயரைச் சொல்லி அழைப்பதே இல்லை. தர்மநிதி, மடாதிபதி என்று மதித்துப் போற்றுகின்றனர்.
யுவான் சுவாங் சீலபத்ரதைச் சந்தித்தல்
அதன் பின்னர் மற்றவர் பின்னால் வர அந்த மா மனிதரைச் சந்திக்க ஆசான் சென்றார். அவரை தரிசித்ததும், தலைமை மடாதிபதி அனைத்து உபசாரங்களும் முறையே செய்தார். சம்பிரதாயமான முறையில் மரியாதைகள் செய்தார். மண்டியிட்டுச் சென்று பாதங்களை முத்தமிட்டு தலை தாழ்த்தி தரையில் படும்படி ஆசான் வணங்கி நின்றார். இந்த மரபான மரியாதைகள் முடிந்ததும் மடாதிபதி ஆசனங்கள், பாய்கள் கொண்டுவரச் சொன்னார். அவற்றை விரிக்கச் சொன்னவர் (ஆசானை) அமரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். பின்னர் அனைவரையும் அமரச் சொன்னார். ஆசான் அமர்ந்ததும் எங்கிருந்து அவர் வந்திருப்பதாக மடாதிபதி கேட்டார். சீன தேசத்தில் இருந்து வந்திருக்கிறேன். உங்களிடமிருந்து யோக சாஸ்திரங்களைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று ஆசான் சொன்னார்.
(தொடரும்)
__________
கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய “நாலந்தா” நூலின் தமிழாக்கம்.