ஆசான் (யுவான் சுவாங்) எங்கிருந்து வந்திருப்பதாக மடாதிபதி சீலபத்ரர் கேட்டார்.
சீன தேசத்தில் இருந்து வந்திருக்கிறேன். உங்களிடமிருந்து யோக சாஸ்திரங்களைக் கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று ஆசான் சொன்னார்.
இதைக் கேட்டதும் சீலபத்ரர், கண்களில் கண்ணீர் வழிய தன் சீடர் புத்தபத்ரரை அழைத்தார். அவர் சீலபத்ரரின் உறவினரும் கூட. எழுபது வயதுக்கு மேலிருக்கும். சூத்ரங்கள்,சாஸ்திரங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர். அற்புதமாக சொற்பொழிவுகள் ஆற்றுவார். அவரைப் பார்த்து மடாதிபதி சொன்னார்: வந்திருக்கும் விருந்தினரிடம் எனது மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய நோய் மற்றும் துன்பங்கள் பற்றிக் கொஞ்சம் பகிர்ந்துகொள்கிறாயா’?
குருவின் இந்த வேண்டுகோளைக் கேட்டதும் புத்தபத்ரரும் வாய்விட்டு அழுத் தொடங்கினார். சிறிது நேரம் கழித்துத் தன்னைத் தானே தேற்றிக்கொண்டு முன்பு நடந்ததை விவரிக்கலானார்:
என் உபாத்யாயர் (குரு) சில வருடங்களுக்கு முன்பாக மிக மோசமான வயிற்று வலி வந்து அடிக்கடித் தவித்தார். ஒருமுறை அந்த வலி ஏற்பட்டபோது கை கால் எல்லாம் தீயால் சுட்டதுபோல், கத்தியால் குத்தியதுபோல் துடி துடித்தார். அந்த வலி திடீரென்று வரும். அப்படியே திடீரென்று மறைந்தும் போகும். ஆனால் இப்படியாக சுமார் 20 ஆண்டுகள் தவித்து வந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் அந்த நோய் தாக்கியபோது அவரால் அந்த வலியைத் தாங்கவே முடியவில்லை. வாழ்க்கையையே வெறுத்து பட்டினி கிடந்து உயிரைப் போக்கிக் கொள்ள முடிவெடுத்தார். அப்போது ஒரு நாள் நள்ளிரவில் ஒரு கனவு கண்டார். அதில் மூன்று தேவர்கள் தோன்றினர். ஒருவர் ஸ்வர்ண நிறத்திலும் இன்னொருவர் பிரகாசமான ஸ்படிகம் போலவும் இன்னொருவர் வெள்ளி போல் தூய வெள்ளை நிறத்திலும் இருந்தனர். கண்ணியமும் கம்பீரமும் மிகுந்த தோற்றம் கொண்டவர்கள் பிரகாசமான உடைகள் அணிந்திருந்தனர்.
குருவின் அருகில் வந்து, இந்த உடம்பில் இருந்து விடுதலை அடைய விரும்புகிறாயா என்று மென்மையாகக் கேட்டனர். இந்த உடல் துன்பங்களை அனுபவிக்கவே பிறவி எடுக்கிறது. இந்த உடம்பை வெறுக்கவோ அதை விட்டொழிக்கவோ முயற்சி செய்யக்கூடாது என்று புனித நூல்கள் சொல்கின்றன. உன்னுடைய முன் பிறவிகள் ஒன்றில் நீ ஒரு தேசத்தின் அரசனாக இருந்தாய். அப்போது பல உயிர்களுக்கு மிகுதியான துன்பத்தை விளைவித்தாய். அதன் விளைவாகவே இந்தப் பிறவியில் இந்தத் துன்பங்களை நீ அனுபவிக்க வேண்டியிருக்கிறது. எனவே உன்னுடைய கடந்த ஜென்ம தவறுகளை அலசி ஆராய்ந்து அவற்றுக்கு அர்ப்பண உணர்வுடன் பிராச்சித்தம் செய். உன்னுடைய வலியை அமைதியாக, பொறுமையாக சகித்துக்கொள். சூத்ரங்கள், சாஸ்திரங்களை அனைவருக்கும் போதனை செய்து வா. இதன் மூலமாகவே உன்னுடைய வலி, துன்பங்களில் இருந்து விடுதலை பெறுவாய். உன் உடம்பை வெறுத்தால் உன் துன்பங்களுக்கு முடிவே கிடைக்காது’.
இதையெல்லாம் கேட்ட குரு, அவர்களைப் பணிந்து வணங்கினார்.
ஸ்வர்ண நிற தேவர், ஸ்படிகம் போலிருந்த தேவரைச் சுட்டிக்கட்டியபடியே குருவிடம் சொன்னார்: ’உனக்கு இவர்தான் அவலோகிதேஷ்வர போதிசத்வர் என்பது தெரியுமா தெரியாதா?’ வெள்ளி நிற தேவரைச் சுட்டிக்காட்டி இவர்தான் மைத்ரேய போதிசத்வர் என்பது தெரியுமா தெரியாதா? என்று கேட்டார்.
குரு உடனே அவர்களை வணங்கிவிட்டு, மைத்ரேய போதிசத்வரிடம் பணிவுடன் கேட்டார்: ’உங்கள் சேவகன் சீலபத்ரன் உங்களுடைய உன்னதமான அரண்மனையில் இடம்பெற அனுதினமும் பிரார்த்தனை செய்து வந்திருக்கிறேன். ஆனால், அந்த ஆசை பூர்த்தியாகுமா ஆகாதா என்பது தெரியவில்லையே’.
அதற்கு மைத்ரேய போதிசத்வர் சொன்னார்: ’சத்ய தர்மத்தை நீ முழுமையாக உணர்ந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் பிறவித்தளைகளில் இருந்து விடுதலை பெறுவாய்’ என்றார்.
ஸ்வர்ண நிற தேவர் சொன்னார்: நான் தான் மஞ்சுஸ்ரீ போதிசத்வர். உனது பிறவித்தளையிலிருந்து விடுதலை பெற நீ விரும்புகிறாய். நாங்கள் உன் விருப்பத்துக்கு நேர் மாறான ஒன்றை நிறைவேற்றவே வந்திருக்கிறோம். எங்கள் வார்த்தைகளை நீ நம்பவேண்டும். சத்திய தர்மம், யோக சாஸ்திரம் மற்றும் பிற சாஸ்திரங்களையெல்லாம் அதைக் கேள்விப்பட்டிருக்காத பிற நாடுகளுக்கும் பரவச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால்தான் உன் உடம்பின் வலி இனிமேல் வராது. சீன தேசத்தில் இருந்து சத்திய தர்மத்தை கற்றுக் கொள்ள வரும் சீன துறவியைக் கவனிக்கத் தவறிவிடாதே. அவருக்கு மிகுந்த அக்கறையுடன் சாஸ்திரங்களைக் கற்றுக் கொடு’.
இதைக் கேட்ட குரு போதிசத்வர்களைப் பணிந்து வணங்கிச் சொன்னார்: நான் நீங்கள் சொல்வதன்படியே உங்களுடைய மதிப்புக்குரிய வழிகாட்டுதலின் படியே நடந்துகொள்கிறேன்’.
அதன் பின் போதிசத்வர்கள் மறைந்துவிட்டனர். அன்றிலிருந்து குருவின் வலியும் ஒரு முடிவுக்கு வந்தது.
இந்த சம்பவத்தைக் கேட்டவர்கள் அனைவரும் அந்த அற்புதத்தை நினைத்து மெய்மறந்து நின்றனர்.
யுவான் சுவாங் மீது அந்தக் கனவு ஏற்படுத்திய தாக்கம்
சீனத் துறவி இதைக் கேட்டதும் தனது உணர்வுகளை, மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தமுடியாமல் உணர்ச்சிப் பெருக்கில் ஆழ்ந்தார். மடாதிபதிக்கு மீண்டும் வணக்கம் தெரிவித்துவிட்டுச் சொன்னார்: நீங்கள் சொல்வதை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். இந்த யுவான் சுவாங் முழு ஆர்வத்துடன் உத்வேகத்துடன் உங்கள் போதனைகளைக் கேட்டு அதன் படி நடப்பேன். மதிப்புக்குரிய மடாதிபதியே, தயை கூர்ந்து கருணையுடன் என்னை உங்கள் மாணவராக ஏற்றுக்கொள்ளுங்கள்’.
சீடராக ஏற்றுக் கொள்ளுதல்
மடாதிபதி யுவான் சுவாங்கிடம் கேட்டார்: உங்கள் பயணத்துக்கு எத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொண்டன?
அவர் சொன்னார்: மூன்று வருடங்கள்.
அப்படியாக சீலபத்ரருக்குக் கனவில் கிடைத்த வழிகாட்டலுடன் இது பொருந்திப் போகவே யுவான் சுவாங்கைத் தனது சீடராக முழுமனதுடன் ஏற்றுக்கொண்டார்.
யுவான் சுவாங்கின் தங்குமிடம்
அதன் பின் யுவான் சுவாங் பாலாதித்ய ராஜா கட்டிய கல்லூரிக்குச் சென்று அங்கிருந்த புத்தபத்ரரின் வசிப்பிடத்தில் தங்கினார். அது நான்கு அடுக்கு மாளிகை. அங்கு ஒரு வாரம் யுவான் சுவாங் தங்கியிருந்தார். அதன் பின்னர் வடக்குப் பக்கம் இருந்த தர்மபால போதிசத்வரின் ஆலயத்தில் தங்கினார். அங்கு அவருக்கு அனைத்துவகையான தானங்களும் வழங்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் அவருக்கு 120 திராட்சைகள், 20 பாக்குகள், 20 ஜாதிக்காய்கள், ஒரு அவுன்ஸ் கற்பூரம், மகாசாலி அரிசி ஆகியவை தரப்பட்டன. இந்த அரிசி தானியம் காராமணிபோல் பெரிதாக இருக்கும். சமைக்கும்போது இதன் வாசனையும் பளபளப்பும் மிகவும் பிரமாதமாக இருக்கும். இது மகதத்தில் மட்டுமே விளையும். அரசர்களுக்கும் உயர்நிலை மத தலைவர்களுக்கும் மட்டுமே தரப்படும். இதன் பெயர் குங் தா ஜின் மாய் அதாவது மகத்தான மனிதருக்குத் தரப்படும் அரிசி.
மாதந்தோறும் மூன்று கிண்ணம் அளவு எண்ணெய், தினமும் வெண்ணெய், மற்றும் தேவையானவை எல்லாம் வழங்கப்படும்.
ஒரு சிறந்த உபாசகர் (மாணவர்) மற்றும் பிராமணர் ஆகிய இருவரும் தமது பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு யுவான் சுவாங்குடனேயே இருந்தனர். ஊருக்குள் வலம் வர ஒரு யானையும் தரப்பட்டிருந்தது.
விருந்தினர்கள்
ஹுவாய் லி இந்த விவரணைகளை யுவான் சுவாங்குக்குத் தரப்பட்ட விருந்தோம்பல் தகவல்களுடன் நிறைவு செய்கிறார். நாலந்தாவில் இருந்த நாட்களில் யுவான் சுவாங்குக்குக் கிடைத்த மரியாதைகள், கவனிப்புகள் எல்லாம் பொதுவாகவே அந்த மஹா விஹாரில் தங்கும் அனைத்து விருந்தினருக்கும் தரப்பட்டதாகவே தெரியவருகிறது:
‘நாலந்தாவில் ஏராளமான துறவிகள் தங்கியிருக்கிறார்கள். யுவான் சுவாங் போலவே அனைத்து நாடுகளையும் சேர்ந்த கணக்கற்ற விருந்தினர் அங்கு தங்கியிருக்கிறார்கள். உலகம் முழுவதிலுமான அவர்களுடைய நீண்ட நெடிய பயணங்களில் இப்படியான ஒரு மடாலயத்தையும் நல்லுபசாரத்தையும் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. வெவ்வேறு மன்னர்களால் கட்டப்பட்ட ஆறு இறகு போன்ற வளாகங்களும், மிகப் பெரிய வலுவான செங்கல் கோட்டையும் கொண்ட நாலந்தா மடாலயத்தில் விருந்தினராகத் தங்கிக்கொள்ள யார்தான் மறுப்புத் தெரிவிப்பார்கள் என்று ஒரு ஒருவர் கேட்பதில் ஆச்சரியம் இருக்கமுடியாது.
அன்றாடப் பணிகள்
மடாலயத்தின் நிர்வாக விஷயங்கள், அன்றாட வாழ்க்கை, விதிமுறைகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டால் ஐ சிங் சில முக்கியமான சுவாரசியமான தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார். அங்கு இருந்த அதிகரிகள் பற்றியும் அவர்களுடைய பணிகள் பற்றியும் கீழ்க்காணும் பத்தியில் பார்க்கலாம். துரதிஷ்டவசமாக நாம் விரும்பும் அளவுக்கு அது முழுமையாக இல்லை
அதிகாரிகள்
மடாலயத்தின் வாசல்களைக் காவல் காப்பவர்கள் தினமும் இரவில் அதைப் பெரிய பூட்டினால் பூட்டுவார்கள். மறு நாள் காலையில் பூட்டையும் சாவியையும் அவர்களுடைய மேலதிகாரியிடம் கொடுத்துவிடுவார்கள். அந்த பூட்டையும் சாவியையும் ஒருநாளும் விஹார ஸ்வாமின் (மடாலய தலைவர்) அல்லது கர்மதானா (நிர்வாகிகள்) என வேறு யாரிடமும் கொடுக்மாட்டார்கள். மடாலயத்தின் துறவிகள் மட்டுமே ஆலய அதிபதிகளாக அழைக்கப்பட்டனர். அவர்களுடைய சமஸ்கிருதப் பெயர் விஹார ஸ்வாமின் (பி ஹோ லோ சுவோ). விதிமுறைகளை நடைமுறைப்படுத்துபவர்கள், மடாலய வாசல்களைக் காவல் காப்பவர்கள், துறவியர் சங்கத்தில் சென்று நிர்வாக விஷயங்களை அறிவித்து அனுமதிபெறுபவர்கள் எல்லாம் பி ஹோ லோ போ லா – விஹாரபாலர்கள் என்று அழைக்கப்பட்டனர். காண்டா மணியை ஒலிப்பவர்கள், உணவு விஷயங்களை மேற்பார்வை இடுபவர் கை மோ தா ந (கர்மதானர்) என்று அழைக்கப்பட்டனர். இதற்கு, பணிகளைப் பிரித்துக் கொடுப்பவர்கள் என்று பொருள். வேய் நா என்று இவர்கள் அழைத்தவர்கள் நீதி போதனைக் கதைகளை உவமை நடையில் முன்வைத்தனர்.
(தொடரும்)
__________
கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய “நாலந்தா” நூலின் தமிழாக்கம்.