Skip to content
Home » நாலந்தா #12 – துறவிகள்

நாலந்தா #12 – துறவிகள்

நாலந்தா

நாலந்தாவில் முத்திரைகள்

நாலந்தா மடாலயத்தின் கதவுகளில் இரவில் பூட்டப்பட்ட பூட்டுகளில் என்ன முத்திரை மாட்டப்பட்டது என்பது குறித்து ஐ சிங் குறிப்பிட்டிருக்கிறார். நாலந்தாவில் அகழ்வாராய்ச்சி செய்தபோது கிடைத்த முத்திரையில் ‘ஸ்ரீ நாலந்தா மஹாவிஹார ஆர்ய பிஷு சங்கஸ்ய’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. அதன் கீழே ஒரு தர்ம சக்கரமும் அதன் இரு பக்கங்களில் அதைத் தலை உயர்த்திப் பார்க்கும் இரண்டு மான்களின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளன.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த தர்ம சக்கரமும் மானும் உள்ள முத்திரை சாரநாத்தைச் சேர்ந்தது. அங்கு புத்தர், மான்கள் வாழும் பகுதியில் நிகழ்த்திய முதல் ஆன்மிகச் சொற்பொழிவை நினைவுகூரும் வகையில் இந்த முத்திரை பயன்படுத்தப்பட்டது. அது எப்படி நாலந்தாவில் கிடைத்தது என்ற கேள்வி இங்கு எழுகிறது.

இதற்கான ஒரு விளக்கம் என்னவென்றால், நாலந்தா மடாலயத்தில் பலவகையான முத்திரைகள் பல்வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும். அவை ஒவ்வொன்றையும் வித்தியாசப்படுத்திக்காட்ட பல்வேறு புனித உருவங்கள் அதில் பொறிக்கப்பட்டிருக்கும். அதே நேரம் அதில் பொறிக்கப்பட்ட வாசகங்கள் ஒரு விஹாரின் அனைத்து முத்திரைகளிலும் ஒரே மாதிரி இருந்திருக்கும். இந்த யூகத்தை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இன்னும் கூடுதல் அகழ்வாராய்ச்சிகள் செய்தால்தான் முடியும். இதே உருவம் பாலா அரசின் முத்திரையிலும் இடம்பெற்றிருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

ஹிரானந்த சாஸ்திரி என்ன சொல்கிறாரென்றால், சாரநாத்தில் புத்தரின் பிரசங்கத்துக்கும் நாலந்தாவில் நூற்றுக்கணக்கான பெளத்த துறவிகள் போதிப்பதற்கும் இடையில் ஒரு தொடர்பைக் காட்டும் நோக்கில் அப்படிச் செய்யப்பட்டிருக்கும் என்கிறார். போஸ்ச் இதை மிகைக் கூற்றாகச் சொல்கிறார். அவர் மேலும் சொல்கையில் நாலந்தாவில் இருக்கும் புத்தரின் உருவங்கள் பூமிஸ்பர்ஸ முத்திரையில் இருக்கின்றன. இவை சாரநாத்தைவிட புத்த கயாவையே சுட்டிக்காட்டுகின்றன என்கிறார்.

நான்கு அடி உயர புத்தர் சிலை பிரசங்கம் செய்வதுபோல் இருப்பதாகவும் அந்த பிரசங்கத்தை போதிசத்வ மைத்ரேயநாதரும் வசுமித்ரரும் அருகில் இருந்து கேடபதுபோலவும் மேலே சாரிபுத்ரரும் மெளதகல்யாணரும் கேட்பது போலவும் இருப்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

துறவி நிலைச் சடங்கு

நாலந்தாவில் துறவறம் ஏற்பு, மடாலயப் பணி வகைகள் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்கள் குறித்து ஐ சிங் இரண்டு படைப்புகளில் குறிப்பிட்டிருக்கிறார். விஹாரின் மூத்த துறவிப் பதவி, திறமைகளின் அடிப்படையில் அல்லாமல் வயதின் அடிப்படையிலேயே தரப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார்:

‘துறவிகள் தொடர்பான மற்றும் மடாலயம் தொடர்பான விதிகள், உலக இன்பங்களைத் துறப்பது தொடர்பான விதிகள், மடாயலத்தில் சேர்த்துக் கொள்ளப்படுதல் இவையெல்லாம் தோசங்-ஃபங்-லோ என்ற நூல் மற்றும் கி கோய் டோசன் ஆகிய நூல்களில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன (தோசங்-ஃபங்-லோ என்றால் “மத்திய தேசம் பற்றி எழுதப்பட்டது’ என்று அர்த்தம். அதாவது இந்தியா பற்றி எழுதப்பட்டது என்று அர்த்தம். ஆனால், எந்த நூல் என்பது புரியவில்லை. கி கோய் டோசன் என்பது ”தென் கடல் பகுதியில் இருந்து உள் முக தத்துவம் தொடர்பான நூல் (பெளத்தம் தொடர்பான நூல்) என்று பொருள். இந்த நூலை ஐ சிங், ஸ்ரீ விஜயத்தில் இருந்தபோது எழுதியிருக்கவேண்டும். அவரை அங்கு அனுப்பியவர் தா சின் என்ற சீன துறவி. அவர் தென் கடல் பகுதியிலிருந்து குவாங்செள கண்டோனுக்குப் பயணம் செய்து திரும்பியிருந்தார். உள் முக தத்துவம் தொடர்பான நூலானது சர்வாஸ்திவாத பிரிவு பற்றிப் பேசுகிறது. நான்கு அத்தியாயங்கள், நாற்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிக்கின்றன. முழு படைப்பும் ’எ ரெக்கார்ட் ஆஃப் புத்திஸ்ட் ரிலீஜியன்’ என்ற தொகுப்பாக தகாகசு மொழிபெயர்ப்பில் ஆக்ஸ்ஃபோர்ட் வெளியீடாக 1896-ல் வெளியிடப்பட்டுள்ளது- நீலகண்ட சாஸ்த்ரி). மடாலய உள் விவகாரங்களில் மிகவும் வயது முதிர்ந்த துறவிக்கு தலைமைப் பதவியைத் தந்திருக்கிறார்கள். அவரை ஸ்தாவிரா – மரியாதைக்குரிய தலைமை குரு என்ற வகையில் மதிக்கிறார்கள். அவருடைய பிற திறமைகள் பற்றிப் பொருட்படுத்துவதில்லை. வயதும் அனுபவமுமே பிரதானம்’.

நாலந்தாவில் பதவி நியமனம் தொடர்பாக ஐ சிங் குறிப்பிட்டிருக்கும் முக்கிய குறிப்பையும் இங்கு பார்ப்போம்:

‘நாலந்தாவில் துறவிகளின் உபசம்பதா சடங்கு (முழு துறவி அங்கீகாரம்) அதிகாலையில் நடக்கும். சித்திரை முதல் நாளில் பொழுது புலரும் தருணத்தில் நடக்கும். அதுபோல் துறவு நிலை பெற்றவர்களிடையே அவர் உயர் நிலையில் வைக்கப்படுவார்’.

மூப்பு நிலை

துறவிகளிடையே மூப்பு நிலை சார்ந்த அங்கீகாரம் முறையாக வரையறுக்கப்பட்டுள்ளது. உரிய பொறுப்பும் அதிகாரமும் கொண்டது. துறவிகளுக்கான அங்கீகரம் மற்றும் தங்குமிடம் போன்றவற்றை சபை முன் வருடந்தோறும் பரிசீலித்து நிர்ணயிக்கும் அதிகாரம் இவருக்கு உண்டு. பிற முக்கிய பொறுப்புகளும் இவருக்கு உண்டு. ஆண்டுதோறும் நடக்கும் இந்தச் சடங்கு பற்றி ஐ சிங் குறிப்பிட்டிருப்பவை:

‘மழைக்காலத்துக்கு முன்பாக துறவிகளுக்கான அறைகள், கடமைகள் தீர்மானிக்கப்படும். முதிய துறவிகளுக்கு வசதியான அறைகள் தரப்படும். வயதுக்கு ஏற்ப படிநிலை குறைந்துகொண்டு செல்லும். நாலந்ந்தா மடாலயத்தில் தற்போது இந்த விதிகளே பின்பற்றப்படுகின்றன. மிகப் பெரிய சபை கூடி ஒவ்வொரு ஆண்டும் துறவிகளுடைய இடங்கள் தீர்மானிக்கப்படும். இதுவே உலகம் போற்றிய உத்தமர் நமக்கு போதித்த வழிமுறை. இது மிகவும் நன்மை தரக்கூடியது. சுய நல சிந்தனைகளை, சலுகைகளை இது அகற்றிவிடுகிறது. துறவிகளின் அறைகளும் குண நலன்களும் முறையாக இதனால் பராமரிக்கவும்படுகிறது’.

சபை – சங்க கூட்டங்கள்

துறவிகளை அழைத்து சங்கம் நடத்துவது, அவர்களை அழைக்கும் விதம், சங்க கூட்டத்தின் நடைமுறைகள் இவையெல்லாம் பற்றி ஐ சிங் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். சங்கத்தில் வெறும் வாக்கெடுப்பு நடத்தி எதுவும் தீர்மனிக்கப்படுவதில்லை. எந்தவொரு தீர்மானமாக இருந்தாலும் அறுதிப் பெரும்பான்மையினரின் ஏகோபித்த ஆதரவு கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சில துறவிகள் ஒரு விஷயம் பற்றிப் பேச/முடிவெடுக்க வேண்டும் என்று தீர்மானித்தால் ஒரு சங்க கூட்டத்துக்கு அழைப்புவிடுப்பார்கள். விஹாரபாலர்கள் (மடாலயக் காவலர்கள்) ஒவ்வொரு துறவியையும் சென்று அவர்களுடைய அறையில் சந்தித்து தகவலைத் தெரிவிப்பார்கள். சங்க கூட்டத்தில் அனைவரும் கைகளைக் குவித்து தமது கருத்துகளைத் தெரிவிக்கவேண்டும். யாரேனும் ஒருவர் மறுப்பு தெரிவித்தாலும் தீர்மானம் எட்டப்படாது. யாரேனும் ஒருவர் சம்மதிக்கவில்லையென்றால் அவருக்கு விஷயங்களை எடுத்துச் சொல்லி, வாதிட்டு அவருடைய சம்மதத்தைப் பெற முயற்சி எடுப்பார்கள். மிரட்டல், வன்முறை என வேறு எந்தப் பிழையான வழியையும் பயன்படுத்தி ஆதரவு தரச் சொல்லக்கூடாது.

துறவிகளுக்கான சுதந்தரம்

மடாலயத்தில் வசிக்கும் துறவிகளுக்கு தமக்கான விதிமுறைகளைத் தாமே உருவாக்கிக் கொள்ளும் சுதந்தரம் உண்டு. அரசு எந்தவகையிலும் அதில் தலையிடாது.

இந்த மடாலயத்தின் விதிமுறைகள் மிகவும் கடுமையானவை உயர்வானவை. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை கர்மதானா அதாவது ஒவ்வொருவருடைய பணிகளைப் பகிர்ந்து தருபவரும் அவருடைய உதவியாளரும் மடாயலம் முழுவதும் சென்று விதிமுறைகளை உரத்த குரலில் படிப்பார்கள்.

மடாலயத் துறவிகளின் பெயர்கள் அரசவைப் பட்டியலில் (குடிமகன்கள் என்ற வகையில்) இடம்பெறாது. துறவிகளில் யாரேனும் தவறு செய்தால் சங்கமே அவர்களைத் தண்டிக்கும். அந்தவகையில் மடாலயத்தினர் அனைவருமே பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் உத்வேகம் தந்து நல்வழியில் செல்பவர்களாகவும் கட்டுப்படுத்தி தண்டிப்பவர்களாகவும் இருந்தனர்.

வழிபாடு

மடாயலத்தில் வழிபாடு, சடங்குகள் எப்படி இருந்தன என்பதை ஐ சிங்கின் கீழ்க்காணும் குறிப்பில் இருந்து தெரிந்துகொள்ளலாம்:

‘நாலந்தா மடாலயத்தில் துறவிகளின் எண்ணிக்கை மிக அதிகம். மூவாயிரத்துக்கும் மேல் இருக்கும். இவர்கள் அனைவரையும் ஒரே இடத்துக்கு ஒரே நேரத்தில் வழிபாட்டுக்கு வரச் சொல்வது கடினம். மடாலயத்தில் எட்டு அரங்கங்களும் 300 வசிப்பிடங்களும் இருக்கின்றன. ஒவ்வொருவரும் தமக்கு வசதியான இடத்தில் நடக்கும் இந்த வழிபாட்டில் பங்கெடுக்கலாம். தினமும் ஒரு துறவி மந்திரங்கள் சொல்லியபடி மடாலயத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வலம் வருவார். அவருக்கு முன்பாக மடாலயத்தின் கடைநிலை ஊழியர்கள், சிறுவர்கள் எல்லாரும் பூக்கள், ஊதுபத்திகள் போன்றவற்றை ஏந்திச் செல்வார்கள்.

ஒவ்வொரு அரங்குக்கும் செல்லும் இந்தத் துறவி ஒவ்வொன்றிலும் மூன்று அல்லது ஐந்து ஸ்லோகங்களை உரத்த குரலில் ஜெபிப்பார். இந்த ஒலி, அரங்கம் முழுவதும் கேட்கும். பின்மாலை நேரத்தில் இந்த மந்திரங்களைச் சொல்லி முடிப்பார். இப்படி ஜெபித்தபடி வரும் துறவிக்கு அனைவரும் வணங்கி மரியாதை செலுத்துவார்கள்.’

இவை தவிர சில துறவிகள் தமது அறையில் தனியாக அமர்ந்துகொண்டு கந்தகுடி மடாலயத்தைப் பார்த்தபடி, மனதுக்குள் புத்தரை தியானிப்பார்கள். வேறு சில துறவிகள் சிறிய குழுவாகச் சென்று அருகருகே மண்டியிட்டு நிமிர்ந்து அமர்ந்துகொண்டு பின் கைகளைக் கூப்பிக் கொண்டு நெற்றி தரையில் படும்படியாக குனிந்து மூன்று முறை விழுந்து வணங்குவார்கள்.

இவையே மேற்கு நாட்டில் (இந்தியாவில்) பின்பற்றப்படும் வழிபாட்டு முறை. முதிய மற்றும் உடல் நலம் இல்லாத துறவிகள் வழிபாட்டு நேரத்தில் பாய் பயன்படுத்திக் கொள்ளலாம். சீனாவிலும் புத்தரைப் புகழ்ந்து பாடும் ஸ்லோகங்கள் உண்டு என்றாலும் பிரம்ம ராஷ்டிரத்தில் (இந்தியாவில்) வழிபாட்டுக்குப் பயன்படுத்துபவற்றில் இருந்து வேறுபடுகிறது.

புத்தரின் சூட்சும வழிகாட்டலுக்கு வணக்கம் என்ற பொருளில் ஆரம்பிக்கும் அந்த ஸ்லோகம் சீனாவில் வழிபாட்டு நேரத்தில் நீண்ட ஒரே மாதிரியான தொனியில் சொல்லப்படும். ஒரு நேர வழிபாட்டில் பத்து அல்லது இருபது ஸ்லோகங்கள் சொல்லவேண்டும். மேலும், ‘ஓ… ததாகதா’ என்பது போன்று சொல்லப்படும் காதாஸ் எல்லாம் புத்தரைப் புகழ்ந்து பாடப்படும் துதிகள்.

(தொடரும்)

__________

கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய “நாலந்தா” நூலின் தமிழாக்கம்.

பகிர:
B.R. மகாதேவன்

B.R. மகாதேவன்

சுசீந்திரத்தையடுத்த ஆஸ்ரமம் கிராமத்தில் வளர்ந்தவர். இலக்கியப் பயணத்தை ஒரு கவிஞராக ஆரம்பித்தவர். மொழிபெயர்ப்பு, திரைப்பட விமர்சனம் என இயங்கிவருகிறார். அழகிய மரம், தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் உட்படப் பல நூல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் வந்திருக்கிறார். சுமார் 25 புத்தகங்கள் மொழிபெயர்த்து இருக்கிறார். writer.mahadevan@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *