நாலந்தா மடாலயத்து நீர்க் கடிகாரங்கள்
மடாலயத்தின் அன்றாடச் செயல்பாடுகள் அனைத்தும் ஒரு சாமத்துக்கு ஒரு முறை முரசு/மணி அடிக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. காலக் கணக்கானது நீர்க் கடிகாரங்களின் மூலம் கணிக்கப்பட்டது. இது பற்றி ஐ சிங் பல இடங்களில் குறிப்பிடிருக்கிறார்:
இந்தியாவின் மிகப் பெரிய மடாலயங்களில் நீர்க் கடிகாரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றையும் இவற்றைத்தொடர்ந்து கண்காணித்துவந்து மணி அறைந்து நேரத்தை அறிவிக்கும் சிறுவர்களையும் மன்னர்கள் இந்த மடாலயங்களுக்கு, தலைமுறை தலைமுறையாக ஏற்பாடு செய்து தருகிறார்கள். தாமிரக் கலன்களில் நீர் நிரப்பப்பட்டிருக்கும். அதில் தாமிரப் பாத்திரம் ஒன்று மிதந்துகொண்டிருக்கும். அது மிகவும் மெலிதாக இருக்கும். அதில் இரண்டு சங்கு தண்ணீர் மட்டுமே ஊற்ற முடியும். அதன் அடிப்பாகத்தில் சிறிய துளையிடப்பட்டிருக்கும். அதிலிருந்து நீர் ஊற்றுபோல் பீறிட்டு வெளியேறும். ஆண்டின் காலகட்டத்துக்கு ஏற்ப இந்த துவாரமானது சிறிதாகவோ சற்று பெரிதாகவோ அமைக்கப்படும். இவற்றை முறையாக ஏற்பாடு செய்து வைத்து காலம் கணிக்கப்படுகிறது.
காலையில் இந்த பாத்திரம் முதலில் நீரில் மூழ்கும்போது முதல் முரசு/மணி அடிக்கப்படும். இரண்டாவது முறை மூழ்கும்போது இரண்டு முறை முரசு அறையப்படும். மூன்றாவது முறை மூழ்கும்போது மூன்று முறை அறையப்படும். நான்காவது முறை மூழ்கும்போது நான்கு முரசு அறிவிப்போடு இரண்டு முறை சங்கு முழங்கப்படும். கூடவே இன்னொறு முறை முரசும் அறையப்படும். இது ஒரு கால அளவு (சாமம்) முடிவதைக் குறிக்கும். சூரியன் கிழக்கே தொடுவானுக்கும் உச்சி வானுக்கும் நடுவில் தோன்றும் நேரம் இது. இரண்டாவது முறையாக தாமிர கலயம் நான்குமுறை மூழ்கியதும் நான்கு முறை முரசு அறையப்பட்டு இரண்டு முறை சங்கு முழங்கப்பட்டு அதன் பின் இரண்டு முறை முரசு அறையப்படும். இது நண் பகலின் ஆரம்பம் (இரண்டாம் சாமம்).
இந்த இரண்டு முரசுகள் அறையப்பட்டுவிட்டால் துறவிகள் அதன் பின் உணவு உண்ணமாட்டார்கள். யாரேனும் அதன் பின்னும் சாப்பிடுவது தெரிந்தால் அவரை மடாலயத்தில் இருந்து வெளியேற்றிவிடுவார்கள். முன் பகலைப் போலவே பிற்பகலிலும் இரண்டு சாமங்கள் அறிவிக்கப்படும். இரவிலும் நான்கு சாமங்கள் பகலைப் போலவே இருக்கும். அப்படியாக ஒரு நாளின் பகல் மற்றும் இரவு என்பது எட்டு சாமங்கள் கொண்டது. இரவில் முதல் சாமம் முடிந்ததும் கர்மதானா மடாலயத்தின் உச்சியில் ஏறி நின்று முரசறைந்து தெரிவிப்பார்.
இதுவே நீர்க்கடிகாரம் மூலமாக நேர அறிவிப்பு மற்றும் அன்றாடச் செயல்களை ஒழுங்குபடுத்தும் வழிமுறை.
உதயம் மற்றும் அஸ்தமன நேரங்களில் மடாலயத்துக்கு வெளியிலும் ஒருமுறை முரசறையப்படும். இந்த சற்று முக்கியத்துவம் குறைந்த பணிகள் எல்லாம் பணியாளர்களால் செய்விக்கப்படும். அஸ்தமனம் தொடங்கி உதயம் வரையிலும் முரசறையும் பணியில் துறவிகள் ஈடுபடமாட்டார்கள். பணியாளர்களும் செய்யமாட்டார்கள். அந்த நேரத்தில் முரசறைவது கர்மதானர்களின் பொறுப்பு. நான்கு முறை முரசறைவது, ஐந்து முறை முரசறைவது இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடு வேறொரு இடத்தில் விவரிக்கிறேன்.
இந்த தேசத்தில் மாபெரும் ஆலயங்கள் அமைந்துள்ளன. அந்தப் பகுதிகளை ஆளும் மன்னர்கள் அனைவரும் நீர் கடிகாரங்களை அமைத்துப் பராமரித்து வந்திருக்கின்றனர். இந்த காலக் கணிப்பு வழிமுறை இருப்பதன் காரணமாக அன்றாட மடாலயப் பணிகளைத் திறம்படச் செய்து முடிக்க முடிகிறது. இரவானது மூன்றாகப் பகுக்கப்பட்டிருக்கிறது. முதல் மற்றும் மூன்றாம் பகுதியில் ஒருவர் ஸ்தோத்திரங்கள் சொல்லியபடியும் தியானத்தில் ஆழ்ந்தும் வரவேண்டும். இடைப்பட்ட காலத்தில் அவர்கள் பிற பணிகளைச் செய்துகொள்ளலாம். கி கோய் ட்சோன் நூலில் சொல்லப்பட்டிருப்பவற்றுடன் இவை பொருந்திப் போகின்றன.
குளியல்
மணி அல்லது முரசறைதலின் முக்கிய பயன்களில் ஒன்று துறவிகளுக்கு குளிக்க வேண்டிய நேரத்தை இதன் மூலம் தெரிவிக்கமுடியும். ஐ சிங் துறவிகளின் குளியல் பற்றிக் குறிப்பிட்டிருப்பவை :
நாலந்தா மடாலயத்தைச் சுற்றிலும் பத்துக்கு மேற்பட்ட பெரிய குளங்கள் இருக்கின்றன. தினமும் காலையில் மணி ஒலித்து குளிப்பதற்கான நேரத்தை அறிவிப்பார்கள். அனைவரும் குளியலுக்கான தமது பொருட்களை எடுத்துக் கொண்டுவருவார்கள். நூறு அல்லது ஆயிரம் துறவிகள் ஒரே நேரத்தில் மடாலயத்திலிருந்து வெளியேறி பல்வேறு திசைகளில் அமைந்திருக்கும் குளங்களுக்குச் சென்று குளிப்பார்கள்.
அயல் நாட்டுப் பயணிகள்
நாலந்தாவுக்கு வந்த புகழ் பெற்ற இரண்டு அயல் நாட்டுப் பயணிகள் நீங்கலாக ஐ சிங் சிலருடைய பெயரைப் பதிவு செய்திருக்கிறார்.
1. ஸ்ரமண யுவான் சாவோ (ப்ரகாசமதி) – நாலந்தாவில் கி.பி. 660 வாக்கில் மூன்று ஆண்டுகள் தங்கி ஞானபிரபாவின் கீழ் மத்ய மகா சாஸ்திரம் மற்றும் சத சாஸ்திரம் கற்றார். ரத்னசிம்ஹரிடம் யோகக் கலையில் 17 படிகள் (ஆசனங்கள்) கற்றுக்கொண்டார். இந்தியாவில் பல ஊர்களுக்குச் சென்று வந்த பின்னர் ஐ சிங்கை நாலந்தாவில் சந்தித்தார். சுமார் 60 வயது ஆயிருந்தபோது மத்திய இந்தியாவில் உயிர் துறந்தார்.
2. தாவோ ஹி (ஸ்ரீதேவர்) நாலந்தாவில் சில காலம் தங்கியிருந்து மஹாயானம் கற்றார். மஹா போதியில் சீன மொழியில் ஒரு பட்டயம் பொறித்தார். நாலந்தாவில் இருந்தபோது நானூறு அத்தியாயங்கள் எழுதினார் (பிரதி எடுத்தார்?). ஐம்பது வயக்கு மேல் இந்தியாவில் இறந்தார்.
3. நிகோ லி யே போமெள (ஆர்யவர்மன்) : கொரிய தேசத்தைச் சேர்ந்தவர். நாலந்தாவில் இருந்தபோது பல்வேறு சாஸ்திரங்கள் படித்தார். பலவற்றை பிரதியெடுத்தார். 70 வயதில் உயிர் துறந்தார்.
4. ஹோய் யி – கொரியாவைச் சேர்ந்தவர் (கி.பி.638). நீண்ட காலம் நாலந்தாவில் வாழ்ந்தார். ஐ.சிங் இவர் உயிர் பிரிந்த விஷயத்தை மடாலய துறவிகளிடம் இருந்து கேள்விப்பட்டிருக்கிறார். இவர் எழுதிய (நகலெடுத்த) சமஸ்கிருந்த நூல்கள் எல்லாம் இங்கு இருந்தபோது எழுதியவையே.
5. ஃபோ டோ ட மெள (புத்ததர்மர்) தோகரேஸ்தான். நாலந்தாவில் வைத்து ஐ சிங் இவரைச் சந்தித்திருக்கிறார்.
6. டோ செங் : (சந்திர தேவர்) கி.பி. 649 : நாலந்தாவில் படித்தார். இளவரசர் இவரை மிகுந்த மரியாதையுடன் நடத்தினார்.
7. டா சே இங் டெங் (மஹாயான ப்ரதீபா). த்வாராவதியிலும் சிலோனிலும் சில காலம் கழித்தார். தென் இந்தியாவுக்குப் பயணம் செய்து தாம்ரலிப்தியில் சமஸ்கிருதம் கற்றார். அதன் பின் ஐ சிங்குடன் நாலந்தாவுக்கு வந்தார். குஷிநகரத்தில் பரிநிர்வாண ஆலயத்தில் உயிர் துறந்தார். வயது 60க்கு மேலிருக்கும்.
8. தாவோ லின் (சீலப்ரபா) : கடல் மார்க்கமாக நாலந்தா வந்து சேர்ந்தார். மஹாயான சூத்ரங்கள், சாஸ்திரங்கள், கோசங்கள் கற்றார். பல வருடங்கள் இங்கு தங்கியிருந்தார். இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
9. ஐ சிங் : நாலந்தாவில் தங்கியிருந்து மஹாயாணம் கற்றார். சப்த வித்யா சாஸ்திரம் கற்றார். மூல கந்த கோடியில் வழிபாடு செய்தார். க்ருத்ரகூடம் வரை சென்றார். நாலந்தாவில் 10 ஆண்டுகள் வசித்தவர், துறவியரின் வாழ்க்கை பற்றிக் கற்றறிந்தார். ஐந்து லட்சம் சம்ஸ்கிருத ஸ்லோகங்களை தன்னுடன் சீனாவுக்கு எடுத்துச் சென்றார்.
10. லிங் யன் – ப்ரஞானன் தேவர் : நாலந்தாவில் இருக்கும் மைத்ரேய மற்றும் போதி தர்மரின் திரு உருவங்களை ஓவியமாகத் தீட்டினார்.
11. டே செங் – சீன தூதர் வாங் யுவான் சே யின் மருமகன். நாலந்தாவில் தங்கியிருந்து மஹாயாண நூல்களைக் கற்றறிந்தார்.
12. ஓ ஹிங் (ப்ராஞான தேவர் (இவர் வேறொருவர்): நாலந்தாவில் யோகக் கலை கற்றுக் கொண்டார். கோசங்கள், தர்ம சாஸ்திர விதிமுறைகள், விபாசாயனா ஆகியவற்றைக் கற்றுக் கொண்டார். ஐ சிங்கின் நண்பரான இவர் இந்தியாவில் இருந்தபோது உயிர் துறந்தார்.
ஐ சிங் தனது பெயரையும் உள்ளிட்ட 12 வெளி நாட்டுப் பயணிகள் பற்றி எழுதியிருப்பதோடு அல்லாமல் வேறு பல சீன பயணிகளின் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஓ காங் என்ற சீன துறவி நாலந்தாவில் மூன்று ஆண்டுகள் வசித்திருக்கிறார் (கி.பி. 765). இவர் எழுதியிருக்கும் குறிப்புகள் யுவான் சுவாங் எழுதியதைப் போலவோ பாஹியன் எழுதியவற்றைப் போலவோ சுவாரசியமாக இல்லை. எனினும் அவற்றில் சொல்லிருப்பவற்றுக்கு வலு சேர்ப்பவையாக இருக்கின்றன.
கி யீ என்ற சீனர் கி.பி.970-ல் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். அந்நாளில் இந்தியாவில் பெளத்தம் இருந்த நிலையை விவரித்திருக்கிறார். நாலந்தா உட்பட பல மடாலயங்களுக்குச் சென்றிருக்கிறார். இவை அனைத்தின் நுழை வாசலும் மேற்குப் பக்கம் பார்த்து இருப்பதைக் குறிப்பிட்டிருக்கிறார்.
கி.பி.984-987 வரையான காலகட்டத்தில் வெய் பிரிவைச் சேர்ந்த துறவியான சே ஹோன் நாலந்தாவுக்கு வந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. இதில் கொஞ்சம் சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால் இந்த நூலில் குறிப்பிடும் சில பெயர்கள் குழப்பத்தை உருவாக்குவதாக இருக்கின்றன.
அயல் நாடுகளில் நாலந்தாவின் செல்வாக்கு
நாலந்தாவில் இருந்து பலரும் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதிலும் சீனாவுக்கு கொண்டு செல்லப்பட்ட சம்ஸ்கிருத நூல்களை மொழி பெயர்ப்பதில் உதவி செய்ய பலர் சென்றிருக்கிறார்கள். அந்தப் படைப்புகள் பல தலைமுறைகளாக சீனாவுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. அது தொடர்பான விவரங்களைப் பின்னர் பார்க்கலாம். எனினும் அவை பற்றி நமக்கு முழுமையாகத் தெரியவரவும் இல்லை.
சீனப் பயணிகள் எழுதியிருக்கும் குறிப்புகள், அகழ்வாராய்ச்சித் தரவுகள் ஆகியவற்றிலிருந்து நாலந்தா மடாலயம் எவ்வளவு பிரமாண்டமாக இருந்தது; அது எப்படியெல்லாம் உயர்ந்த நிலையை எட்டியது; ஒரு ஈவு இரக்கமற்ற ஆக்கிரமிப்பாளனின் கண் மூடித்தனமான தாக்குதல் எப்படி அதன் மகத்தான ஜோதியை என்றென்றைக்குமாக அழித்தது என்பதெல்லாம் தெரியவந்திருக்கிறது. இதுவரையிலும் நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்கள் முழுமையாக இல்லை. பல யூங்கள், இடைவெளிகள் இருக்கின்றன. தொடர்ந்து நடக்கும் ஆய்வுகளினால் அவையெல்லாம் நன்கு புரியவரும் என்று நம்புவோமாக.
பழங்கால மற்றும் மத்திய கால இந்தியாவில் தேசம் முழுவதும் இருந்துவந்த கல்வி மையங்களில் நாலந்தாவே மிகவும் மகத்தானது. அது பற்றியே மிகுதியான தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அங்கு கிடைத்த உயர் கல்வி, பெளத்தத்தைப் பரப்பிய விதம் ஆகியவற்றுக்காக மட்டுமல்ல; இந்தியாவின் அனைத்து மதம் சார்ந்த, தத்துவங்கள் சார்ந்த கல்வியும் அங்கு கிடைக்கச்ச் செய்ததன் மூலம் அது மாபெரும் கல்வி மையமாக உயர்ந்து நிற்கிறது.
நாலந்தா பல்கலையின் வரலாறென்று ஓர் ஆயிரமாண்டு காலகட்டத்தை உள்ளடக்கியது. கல்வி மற்றும் ஆன்மிக தளத்தில் அற்புதமான, நீடித்த முயற்சி மற்றும் மாபெரும் சாதனையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அது திகழ்கிறது.
(தொடரும்)
__________
கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதிய “நாலந்தா” நூலின் தமிழாக்கம்.