Skip to content
Home » நிகோலா டெஸ்லா #2 – மாயமும் நிஜமும்

நிகோலா டெஸ்லா #2 – மாயமும் நிஜமும்

டெஸ்லாவின் வீடு

இன்றைய கல்வி உலகில், நிகோலா டெஸ்லாவின் ஆராய்ச்சிகள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன என்று பார்ப்போம். அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இந்தியப் பாடத்திட்டங்களில், கடந்த பத்துப் பதினைந்து வருடங்களாகதான் டெஸ்லா இடம்பெற்று வருகிறார். அறிவியல் பட்டப்படிப்புப் படிப்பவர்களுக்கும், விரிவாக மேற்கொண்டு ஆய்வுகள் செய்பவர்களுக்கும் கூட, டெஸ்லா முழுமையாக அறிமுகப்படுத்தப்பட்டது போல் தெரியவில்லை.

இன்றைய கணக்கீட்டு முறைத் தரவுகளின் அடிப்படையில், உலகிலேயே மிக அதிக விஞ்ஞானிகளை உருவாக்கும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருக்கும் பாசடீனா என்னும் நகரத்தில் அமைந்துள்ள கால்டெக் பல்கலைக்கழகத்தில்தான் விளக்கமுறை இயற்பியல் (தியரிடிகல் பிசிக்ஸ்) உள்ளிட்ட நிகோலா டெஸ்லாவின் பல்வேறு ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட பட்டப்படிப்புகளை ஒருவர் படிக்கமுடியும்.

நிகோலா டெஸ்லாவை அடிப்படையாகக் கொண்டு, எண்ணற்ற நிஜ மற்றும் கற்பனைப் படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனின் ‘தி பிரஸ்டீஜ்’ திரைப்படம் குறிப்பிடத்தக்க ஒன்று.

புகழ்பெற்ற பாடகரான டேவிட் போவி கற்பனை டெஸ்லா பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தக் கதையில், ஏற்கனவே இருக்கும் மனிதனைப் பிரதியெடுத்து, அவனைப் போலவே ஒரு புதிய மனிதனை உருவாக்கும் ஓர் அதிசய இயந்திரம் இடம்பெறுகிறது.

இது நோலனின் கற்பனைதான் என்றாலும், டெஸ்லா என்னும் நிஜ வாழ்க்கை விஞ்ஞானியை ஏன் அவர் இந்தக் கதைக்குத் தேர்ந்தெடுக்கவேண்டும்? ஏதேனும் ஒரு கற்பனை பாத்திரத்தை அவர் உருவாக்கியிருக்கலாமே? அவ்வாறு ஓர் கற்பனைப் பாத்திரத்தை உருவாக்காமல் விட்டதற்குக் காரணம், டெஸ்லா நிஜமாகவே அப்படி ஓர் ஆய்வை மேற்கொண்டிருக்கிறார் என்றொரு வதந்தி இருப்பதால்தான்.

இன்றைய உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க்கை நமக்குத் தெரியும். அவரது எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் பெயர் டெஸ்லா. ஆக மொத்தம், உச்சகட்ட கற்பனைக்கும் டெஸ்லா தேவைப்படுகிறார். நிஜ வாழ்க்கையில் உத்வேகமூட்டும் உதாரணம் என்றாலும், டெஸ்லாதான் உதவிக்கு வருகிறார்.

திரைப்படம் என்பது விளக்கமுறை அறிவியல் (தியரிடிகல் பிசிக்ஸ்) என்றால் யதார்த்தத்துக்கு (பிராக்டிகல் பிசிக்ஸ்) செய்முறை அறிவியல்.

டெஸ்லாவின் கற்பனைகளுக்கு நோலன் திரையில் ஒரு வடிவம் கொடுத்தார் என்றால், டெஸ்லாவின் அசலான ஆய்வுகளுக்கு தனது கார் கம்பெனியின் மூலம் வடிவம் கொடுத்திருக்கிறார் எலான் மஸ்க். கற்பனை, நிஜம் என்று இரு உலகையும் டெஸ்லா ஆள்கிறார்.

சூப்பர்ஹீரோ என்ற பட்டம், மார்வெல் கற்பனைக் கதாபாத்திரங்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, நிகோலா டெஸ்லாவுக்கு நிச்சயம் பொருந்தும்.

செர்பியர்கள் குளிர்ப் பிரதேசத்திலேயே வாழ்பவர்கள். குளிர் 15 டிகிரி செல்ஷியஸுக்குக் கீழ்வரை போகக்கூடியது. இப்படி உயிரை உருக்கும் பனியை எதிர்கொண்டதாலோ என்னவோ இரும்பு இதயம் கொண்ட பலரை அங்கே பார்க்கமுடிகிறது. டெஸ்லாவிடமும் இந்த உறுதி வெளிப்படுவதைக் காணலாம். இத்தனைக்கும் டெஸ்லாவின் குடும்பம் ஆஸ்திரியப் பேரரசுப் பகுதிக்கு வந்த பிறகு, சற்றே குறைந்த அளவு குளிரையே அவர்கள் எதிர்கொண்டனர்.

அம்மாவிற்கு அடுத்து டெஸ்லாமீது அன்பைப் பொழிந்தவர் என்று பார்த்தால் அண்ணன் டேன்தான். நிகோலா டெஸ்லா பிறக்கும்போது, அவரது அண்ணன் டேன் டெஸ்லாவிற்கு ஏழு வயது. குட்டித் தம்பியான நிகோலாவின் மீது டேன் பாசத்தைக் கொட்டினார்.

அம்மா வேலையாக இருந்தால் டேன் அந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டு விடுவார். நிகோலாவிற்குப் புட்டிப்பால் ஊட்டுவது, தம்பியைத் தூக்கிக் கொண்டுபோய் பறவைகளையும், மரங்களையும், விலங்குகளையும், பனிப்பொழிவையும் காட்டி விளையாடுவது, தனக்குத் தெரிந்த கதைகள் சொல்வது என்று அத்தனை வேலைகளையும் டேன் பார்த்துக்கொண்டார்.

பள்ளி வாழ்வில் டெஸ்லா படிப்பதைவிடவும் பொருட்களை உருவாக்குவதிலேயே குறியாக இருந்தார்.

டெஸ்லா செய்த சிறுவயதுக் குறும்புகள்கூட, அறிவியல் சார்ந்தவையாகவே இருந்தன. எடுத்துக்காட்டுக்கு, இரண்டு குடுவைகளை வைத்து, ஒன்றில் நீர் நிரப்பி அதனை இன்னொன்றுக்கு நேரடித் தொடர்பு மூலமாகவும் கண்டன்சேஷன் எனப்படும் உறைய வைத்தல் மூலமாகவும் நீரை மாற்றி விளையாடுவதைக் குடும்பத்தினர் ஆச்சரியமாகப் பார்த்தனர்.

பெஞ்சமின் ஃபிராங்க்ளின் 1752 ஆம் ஆண்டு பரிசோதனை செய்து உருவாக்கிய மின்சாரம், ஓர் ஆற்றலாக மாற்றப்பட்டு ஐரோப்பாவின் முக்கியப் பயன்பாட்டுக்கு வந்து சேர்ந்தது 1870களில்தான்.

அப்போதும்கூட அது முக்கியத்துவம் பெறவில்லை.

மின்சாரம் வெகு குறைவாகப் பயன்படுத்தப்பட்ட அக்காலகட்டத்தில், டெஸ்லா தனது விளையாட்டுத்தனமான ஆராய்ச்சிகளுக்கு நெருப்பைப் பயன்படுத்திக்கொண்டார். ஆனால் அதனை மிகவும் கவனமாகக் கையாண்டார். அக்காக்களும் அண்ணனும் அவருக்கு உதவினர்.

அப்போது விளக்குகள் குழாய் வடிவத்தில் இருந்தன. அவற்றிலிருந்து கிடைக்கும் ஒளி போதாது, அதிகப்படுத்தவேண்டும் என்னும் தீரா ஆசை டெஸ்லாவுக்குச் சிறு வயதிலேயே இருந்தது. அவரது அறிவியல் ஆர்வத்துக்கு ஒளி அப்போதே தீனி போட்டது.

பொதுவாக, விஞ்ஞானிகள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பார்கள். ஆனால் டெஸ்லா, 50 வயது வரை, தினமும் இயேசுநாதரிடம் மண்டியிட்டு வணங்கியவர். அவரே ஒரு பேட்டியில் இதனைக் கூறியுள்ளார்.‘ஐம்பது வயதுக்குப் பிறகு, மூட்டுவலி காரணமாக மண்டியிடுவதை நிறுத்திவிட்டாலும், என் வாழ்நாளில் தினமும் கடவுளைத் தொழ நான் மறந்ததில்லை.‘

அவருடைய குடும்பச் சூழல்தான் இதற்குக் காரணம். டெஸ்லாவின் பெற்றோர் தங்கள் ஐந்து குழந்தைகளோடு தினமும் பிரார்த்தனை செய்வதை ஒரு வழக்கமாக வைத்திருந்தனர். கண்டிப்பான வாழ்க்கை முறை மற்றும் ஒழுக்கத்தை, எப்போதும் அவர்கள் வலியுறுத்துவது வழக்கம். இளம் வயதிலேயே பைபிளோடு நல்லுறவு வளர்ந்துவிட்டது டெஸ்லாவுக்கு. எந்த அளவுக்கு என்றால் பாதிரியாரான தன் தந்தைக்கே பைபிள் சார்ந்த அறிவியல் விளக்கங்களை எடுத்துக்கூறி, அவரை வாயடைக்க வைத்திருக்கிறார். கற்றதை உள்வாங்கி செயலிலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

டெஸ்லாவுக்கும் அவர் அம்மாவுக்கும் புகைப்பட நினைவாற்றல் என்று பார்த்தோம். இருவரும் பேசத் தொடங்கிவிட்டால், அது சில சமயம் வாதப்போராக நீண்டுவிடுவதுண்டு. அது அப்படியல்ல, இது இப்படியல்ல, அது அப்போது நடந்ததல்ல, இந்த நாள் இந்த நேரம், இந்த நொடிதான் நடந்தது; என்றெல்லாம் சண்டையிட ஆரம்பித்துவிடுவார்கள். அனல் பறக்கத் தொடங்கிவிடும். இறுதியில் இருவரும் சமாதானம் ஆகிவிடுவார்கள் என்றாலும்; சுற்றியிருப்போர் தலையைப் பிய்த்துக் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

டெஸ்லா எல்லோரிடமும் இப்படிப் பேசுபவரல்லர். அதிகம் பேசமாட்டார். ஆனால் தன்மீது யாராவது தவறாகக் குற்றம்சாட்டிவிட்டால், பேசிப் போராடி தன்னை நிரூபிக்கும் வரை ஓயமாட்டார்.

டெஸ்லாவின் வீடு
புதுபிக்கப்பட்ட டெஸ்லாவின் வீடு, நிகோலா டெஸ்லா நினைவு மையம், ஸ்மில்யான்

டெஸ்லாவின் தொடக்கநிலை பள்ளிப்படிப்பு ஸ்மில்யானில் 1861ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது அவருடைய வயது ஐந்து. அடுத்த வருடமே, அவருடைய குடும்பம், அன்றைய ஆஸ்திரியப் பேரரசாகவும், இன்றைய குரோஷியாவாகவும் விளங்கும் பகுதியில், லிகா எனும் மாகாணத்தில், காஸ்பிக் எனும் ஊருக்குக் குடிபெயர்ந்தது. காஸ்பிக் பகுதியை கார்லோவாக் பகுதி என்ற நிலப் பெயரிலும் அழைப்பர்.

அங்கு காஸ்பிக் நடுநிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார் டெஸ்லா.

எட்டு வயதில் ஸ்மில்யான் கிராமத்திற்கே திரும்பி வந்துவிட்டார். 9 வயது ஆனபோது ஐரோப்பாவை வாட்டி வதைத்த காலரா தொற்று அவரையும் பிடித்துக்கொண்டது. இது நடந்தது 1865ஆம் ஆண்டில். காலராவிலிருந்து அவர் மீண்டெழுந்ததே ஓர் அதிசயம்தான். அவர் இறந்துவிடுவார் என்றே பலரும் அஞ்சிக்கொண்டிருந்தனர். அவர் காதுபடவே பலர் இப்படிப் பேசிக்கொண்டதும் உண்டு.

அவர்களைக் குறை சொல்ல முடியாது. அன்றைய ஆஸ்திரியப் பேரரசின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக காலரா நோய் இருந்தது. வயிற்றுப்போக்கும் வாந்தி பேதியும் வந்து மனிதர்களும் கால் நடைகளும் போட்டிப்போட்டுக்கொண்டு இறந்துகொண்டிருந்தனர். அப்போது காலராவுக்கு மருந்தும் இல்லை. எப்படிப் பரவுகிறது, ஏன் என, எதுவும் யாருக்கும் தெரியவில்லை. மிகவும் மர்மமான நோயாகவே அது பார்க்கப்பட்டது. அந்நோய் வந்து பலர் குணமடைந்தது உண்மை என்றாலும் இறப்பு சதவிகிதம் 7.11 சதவிகிதத்துக்கு மேல் இருந்தது.

நோய் வாய்ப்பட்டிருந்தாலும், அக்காக்களோடு பேசுவதிலும், அறிவியல் கோட்பாடுகளை எழுதி வைத்துக் கொள்வதிலும், புத்தகம் படிப்பதிலும், பிரார்த்தனை செய்வதிலும் தன் பெரும்பாலான நேரத்தைச் செலவு செய்தார் டெஸ்லா. குணமடைந்து பள்ளி சென்றதும், தன் ஆசிரியர்களை முன்பைவிட அதிகமாகக் கேள்விகள் கேட்டுத் தொந்தரவு செய்ய ஆரம்பித்துவிட்டார்.

இவரது அறிவுத் தேடலையும், ஆர்வத்தையும், பலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தன் கேள்விகளுக்கு, விடைகளைவிட எதிர்ப்புகளையே அவர் அதிகம் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. பள்ளி, கல்லூரி, விஞ்ஞானத் துறை, ஆராய்ச்சித் துறை, மெஷின் துறை, அரசுத்துறை என்று அனைத்திலும் இதே விதமான எதிர்ப்புகளைத்தான் டெஸ்லா சந்திக்கவேண்டியிருந்தது.

இத்தனைக்கும் அவர் சாந்தமான சுபாவம் கொண்டவர்தான். அவரால் தாங்கிக்கொள்ளமுடியாதவர்கள் என்றும், சிலர் இருக்கவே செய்தனர். அரசியல் செய்வோர், அரைகுறை ஆர்வம் கொண்டவர்கள், ஆர்வக்கோளாறு கொண்டவர்கள் ஆகியோரை அவருக்குச் சுத்தமாகப் பிடிக்காது.

டெஸ்லாவின் வாழ்வில், அவருடைய ஐந்து வயதில், அவரைப் பாதித்த வேறொரு முக்கிய சம்பவமும் நடந்தது. அது என்ன?

1875 ஆம் ஆண்டு தன்னுடைய 19ஆவது வயதில் மிலிட்டரி ஸ்காலர்ஷிப் மூலம், ஒரு அறிவியல் பாலிடெக்னிக்கில் சேர்ந்தார் டெஸ்லா. அங்கு என்ன நடந்தது?

(தொடரும்)

 

பகிர:
ராம் குமார் சுந்தரம்

ராம் குமார் சுந்தரம்

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதுபவர். மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார். ஒரு கவிதைத் தொகுப்பு, ஓர் அறிவியல் புனை கதை தொகுப்பு ஆகியவற்றை ஆங்கிலத்திலும் தமிழில் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். இவருடைய பிரதிலிபி பக்கம் : https://pratilipi.page.link/8Hga6Dwpr4kdmqy99 தொடர்புக்கு : rksthewriter@gmail.comView Author posts

13 thoughts on “நிகோலா டெஸ்லா #2 – மாயமும் நிஜமும்”

 1. டெஸ்லாவின் வாழ்வு பற்றிய தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன. இதுவரை அறியாத பல சம்பவங்கள் கோர்வையாக சொல்லப்பட்டுவரும் விதம் படிக்க எளிதாக இருக்கிறது. தொடருங்கள். வாழ்த்துக்கள்.💐💐

  1. Ram Kumar Sundaram

   Thank you very much Nandhini Subburaj Ji, for your kind and positive comment. உங்களுக்கு இத்தொடர் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து படித்து, தங்கள் மேலான ஆதரவினை வழங்குமாறு வேண்டுகிறேன். நன்றி! 😊🙏🏼

  1. Ram Kumar Sundaram

   Thank you Tiru Ji, for your kind and positive review. தங்களுக்கு இப்படைப்பு பிடித்தில் மிக்க மகிழ்ச்சி. 😊🙏🏼

 2. டெஸ்லாவின் சிறுவயது வாழ்க்கை பற்றிய நிறைய தகவல்கள் தெரிந்துக்கொள்ள முடிந்தது. அது மட்டுமில்லாமல் படிக்கும் போது மிகவும் சுவாரசியமாகவும் , சில இடங்களில் ரசிக்கும்படியாகவும் இருந்தது. ✍🏻👏

  1. Ram Kumar Sundaram

   Thank you very much Suba Ji, for your detailed and positive review of the series. தங்களின் மேலான ஆதரவிற்கு, என்னுடைய பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 😊🙏🏼

 3. Koodi jebikkum kudumbam kulaiyaadhu. Andathirkum ariviyalukkum melaanadhu iraivan. Arindhavan gnaani mattumalla vingnaaniyum kooda. Arumai

  1. Ram Kumar Sundaram

   Thank you very much Shyamala Gopu Madam, for your kind and positive review of the series. தங்களின் மேலான ஆதரவை வழங்கியமைக்கு மிக்க நன்றி. 😊🙏🏼

  1. Ram Kumar Sundaram

   Thank you very much Hemalatha ji, for your useful review of the series. தங்களுக்கு இந்தத் தொடர் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. தங்கள் ஆதரவுக்கு என் நன்றிகள் பல! 😊🙏🏼

 4. டெஸ்லா அவர்களின் வாழ்க்கை மிகவும் சுவையாக சுவாரஸ்யமாக இருக்கிறது அவரைப் பற்றியும் அவரின் சாதனைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது. அவரைப் பற்றி தெரிந்து கொள்ள உதவிய உங்களுக்கு மிக்க நன்றி ராம்குமார்ஜி.

  1. Ram Kumar Sundaram

   Thank you Charu Ji, for your kind and positive comment. தங்கள் மேலான ஆதரவுக்கு, என் பணிவான நன்றிகள். 😊🙏🏼

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *