Skip to content
Home » நிகோலா டெஸ்லா #4 – முறிவுகளும் முரண்களும்

நிகோலா டெஸ்லா #4 – முறிவுகளும் முரண்களும்

நிகோலா டெஸ்லா

ஐசக் நியூட்டனின் தலையில் விழுந்த ஆப்பிளின் கதையைக் கேள்விப்பட்டிராதவர்கள் இருக்கமுடியாது. ஒரு நாள் அவர் மரத்தடியில் அமர்ந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத ஒரு கணத்தில் ஆப்பிள் வந்து அவர் தலையில் விழுகிறது. உடனே ‘ஆஹா!’ என்று அவர் துள்ளிக் குதித்து புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இந்த உலகப் புகழ்பெற்ற கதையை மேற்கத்திய உலகம் சமீப காலம் வரை நமக்குக் கூறி வந்துள்ளது.

உண்மையில் நடந்தது என்ன? ஒரு நாள் நண்பரும் எழுத்தாளருமான வில்லியம் ஸ்டக்லி என்பரோடு இரவு உணவு முடித்துவிட்டு, தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்தார் நியூட்டன். புவியீர்ப்பு விசை ஆய்வு குறித்து இருவரும் பேசிக்கொண்டே செல்கின்றனர். அப்போது நியூட்டன் ஒரு சம்பவத்தை நண்பரிடம் பகிர்ந்துகொள்கிறார். ஒரு நாள் தோட்டத்தில் தனியாக நியூட்டன் அமர்ந்துகொண்டிருந்தபோது தற்செயலாக ஓர் ஆப்பிள் பழம் வந்து விழுந்திருக்கிறது. அது ஏன் நேராகத் தரையில் வந்து விழுந்தது என்று அவர் சிந்திக்கத் தொடங்கிவிட்டார். இதுதான் அந்தச் சம்பவம். இவ்வளவுதான்.

இதைக் கேட்டுப் புளங்காகிதம் அடைந்த நண்பர் நிறைய வர்ணனைகள் சேர்த்து அந்நிகழ்வைப் பதிவு செய்துவிட்டார். எங்கோ விழுந்த ஆப்பிளை நியூட்டனின் தலைமீது விழ வைத்தவர் அந்த நண்பர்தான். அவருடைய கதை எல்லோருக்கும் பிடித்துவிட, வழிவழியாகப் பலர் அதை அப்படியே எடுத்தாளத் தொடங்கிவிட்டார்கள். இந்தப் பின்னணியை 2010ஆம் ஆண்டு ‘நியூ சயின்டிஸ்ட்’ எனும் தளம், ஆய்வு செய்து, ஆதாரபூர்வமாக ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.

டெஸ்லாவின் வரலாற்றில் இந்நிகழ்வைக் கூறவேண்டிய அவசியம் நேர்ந்ததற்குக் காரணம் ஒன்றுதான். மேற்கத்திய உலகம், ஒருவரைத் தூக்கி நிறுத்த வேண்டுமென்று முடிவு செய்தால் எப்படியாவது அதைச் சாதித்துவிடும். அதே சமயம், வரலாற்றின் பக்கங்களிலிருந்து ஒருவரை மறைக்கவேண்டும் என்று தீர்மானித்துவிட்டால் அதையும் செய்து விடுவார்கள். அதற்கான எடுத்துக்காட்டுதான் டெஸ்லா. அவரைப் பற்றிய மோசமான, தவறான தகவல்கள் அதிகம் கிடைக்கின்றன. உண்மையான குறிப்புகள், உண்மையான சாதனைகளோ இருட்டடிப்புச் செய்யப்பட்டுவிட்டன.

டெஸ்லாவின் பேட்டிகளைப் படித்தால் வலி நிறைந்த பல உண்மைகள் நமக்குப் புரிகின்றது. எடுத்துக்காட்டுக்கு, அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி இது. ‘மார்கோனி உங்களுக்குப் பிறகுதான் ரேடியோ அலைகளைக் கண்டுபிடித்தார். நீங்கள் ஏன் அவருக்கு முன்பாக, அதற்கான உரிமத்தைப் பெறவில்லை?’

டெஸ்லாவின் பதில் இது. ‘மார்கோனி ஒரு நல்ல அறிவியல் ஆய்வாளர். தனது சொந்த நாடான இத்தாலியை விட்டுச் சென்று, இங்கிலாந்து நாட்டின் எலக்ட்ரிகல் இன்ஜினீயர்கள் கூட்டமைப்பின் உதவியுடன், பல மாதப் போராட்டத்திற்குப் பிறகு ரேடியோ அலைகளின் பேடன்ட் உரிமத்திற்குப் பதிவு செய்தார். 1897ஆம் ஆண்டு உரிமம் கிடைத்தது. என்னைப் போலவே அவரும் அறிவியலை நம்பி, வேறு ஒரு ஜனநாயக சமுதாயத்தைத் தேடி, நெடியதொரு பயணத்தை மேற்கொண்டவர். அவரை நான் மதிக்கிறேன். ஆனால், நான் அவருக்கு முன்பாகவே, ரேடியோ அலைகள் பற்றிய ஆய்வினை நடத்தி முடித்துவிட்டேன். எனது நியூ யார்க் ஆய்வுக்கூடம், மார்ச் 13, 1895 அன்று தீயினால் முற்றிலும் எரிந்து போனது. அப்போது பிரபல நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை, என்னிடம் கருத்துக் கேட்டபோது, நான் கடுங்கோபத்திலும், வருத்தத்திலும் இருந்தேன். அவர்களிடம், ‘நான் பேச முடியாத அளவுக்கு வருத்தத்தில் இருக்கிறேன். மேற்கொண்டு என்ன சொல்ல முடியும்? ஏறக்குறைய என் வாழ்நாளின் பாதிப் பணி, எனது இயந்திரக் கருவிகள், மற்றும் அறிவியல் சாதனங்கள் என அனைத்தும் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத் தீயில் சேதமடைந்து போயின. எல்லாம் போய்விட்டது. நான் மீண்டும் தொடங்க வேண்டும். ரேடியோ அலைகள் பற்றிய ஆராய்ச்சி மட்டுமின்றி, பல முக்கிய ஆராய்ச்சிகளின் தரவுகள், ஆவணங்கள், முடிவுகள் அழிந்துவிட்டன.’

டெஸ்லாவின் ஆய்வகம் தீயில் அழிந்ததற்குச் சில நாள்களுக்கு முன்பாக அதனைப் பார்வையிட்ட ‘சைன்டிஃபிக் அமெரிக்கன் சப்ளிமெண்ட்’ என்ற அறிவியல் இதழின் நிருபர் வால்டர் டி. ஸ்டீஃபன்சன் என்பவர், சம்பவம் நடந்த 17 நாட்களுக்குப் பிறகு, மார்ச் 30, 1895இல் பதிப்பித்த தனது கட்டுரையில், பின்வருமாறு கூறுகிறார்.

‘டெஸ்லாவின் ஆய்வகம் என்பது ஆச்சரியங்களால் நிரம்பி வழிந்த ஓரிடம். தற்கால விஞ்ஞானிகள், ஏன் எதிர்கால விஞ்ஞானிகள்கூட இது போன்ற வளர்ச்சிபெற்ற ஓர் ஆய்வகத்தை அமைக்க முடியுமா என்பது ஐயம்தான். அவர் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் பெரிதாகவும், பிரமாண்டமாகவும் மர்மமாகவும் இருந்தன. அங்கிருந்த இயந்திர உபகரணங்களைக் காணும்போது அவற்றை விளக்கமாகத் தெரிந்துகொள்ளவேண்டும் எனும் ஆர்வம் ஏற்படும். எண்ணற்ற கம்பிகள், சிறிய அளவில் இருந்து முக்கால் அங்குலம் வரை, தடிமன் கொண்ட கேபிள்கள், இரு நிலைகளில் பிளாஸ்டர் கொண்டு தடித்த நிலையில் ஒட்டிப் பூசப்பட்ட சுவர்கள், கூரையிலும் தரையிலும் ஓடிய மேலும் பல ஒயர் கூட்டங்கள் ஆகியவவை இருந்தன.

‘மையத்தில் ஒரு பெரிய வட்ட மேஜையில் கருப்புக் கம்பளி துணியால் ஒரு மின் சாதனம் மூடப்பட்டிருந்தது. பாம்பு போன்ற கேபிள்கள் கீழ்நோக்கி இயங்கும் மறுமுனையில் அருகிலுள்ள ஒரு டைனமோ இணைக்கப்பட்டு, அதன் மூலம் எலக்ட்ரோ-டைனமிக் அதிர்வுக்கான சாத்தியமான மையம் நிறுவப்படுகிறது.

‘மேஜைக்கும் ஜன்னல்களுக்கும் இடையில் 18 அங்குல விட்டம் கொண்ட இரண்டு பெரிய பழுப்பு நிற உருண்டைகள் கயிறுகளால் உச்ச வரம்பிலிருந்து தொங்கியிருந்தன. இந்தப் பந்துகள் பித்தளையால் ஆனவை, இரண்டு அங்குல மெழுகு பூசப்பட்டவை, அவை பாதிப்பில்லாதவை. மின்னியல் புலத்தை பரப்பும் நோக்கத்திற்காக உதவியவை. இவை தவிர மேலும் பல கருவிகளும், பரிசோதனை செய்வதற்குத் தேவையான இயந்திரங்களும் தளவாடங்களும் இருந்தன. இவையனைத்தையும், டெஸ்லா தன் கைப்பட உருவாக்கியிருக்கிறார். இந்த ஆய்வகம் தான், நிகோலா டெஸ்லா AC எனப்படும் மாற்று மின்னோட்டத்தையும், தற்போது வரை பேடன்ட் உரிமம் பெறப்படாத டெலிக்ராப் ரேடியோ அலைகளையும், மேலும் பல ஆராய்ச்சிகளையும், அவர் செய்து வந்த இடம்!’.

ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை அனைத்தையும் மீறி மேற்கத்திய நாடுகள் ஒரு விஞ்ஞானிக்கு எப்படியெல்லாம் தொந்தரவு கொடுத்தன என்பதை டெஸ்லாவின் வாழ்வில் நடந்த இந்த அசம்பாவிதம் நமக்கு உணர்த்திவிடுகிறது. ஆனால் இவற்றையெல்லாம் கண்டு அவர் கலங்கவே இல்லை. வருத்தப்பட்டுக்கொண்டு வாடி வதங்கவும் இல்லை. அடுத்த நிலையை நோக்கி தன்னை நகர்த்திக்கொண்டே இருந்தார்.

நிகோலா டெஸ்லா அபார வல்லமைகள் பொருந்திய ஒரு நபர் என்பது, பல வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. அதற்கு உதாரணமாக, அவரது ‘மரணக் கதிர்கள்’ பற்றிய ஆய்வைக் குறிப்பிடலாம். அவரது கண்டுபிடிப்புகளில், இன்றைய இளைஞர்களை ஆச்சரியம் கொள்ளச் செய்வது இதுதான். மரணக் கதிர்கள் பற்றிய விளக்கத்தை நாம் பிறகு விரிவாகக் காண்போம்.

0

ஓர் அசாதாரண மனிதராக மாறுவதற்கு முன்பு அவரும் ஒரு சாதாரணர்தான். டெஸ்லா மூன்று வருடங்கள் மட்டுமே பாலிடெக்னிக்கில் படித்தார். நான்காம் வருடம், அவரால் பணம் கட்ட முடியவில்லை. ராணுவ ஸ்காலர்ஷிப் தொடரவில்லை. சராசரி இளைஞர்களைப் போல டெஸ்லாவும் தன்னுடைய கல்லூரிக் காலத்தில் பொறுப்பின்றித் திரிந்ததும் ஒரு காரணம்.

சீட்டு விளையாட்டு மூலம் சூதாட்டத்தில் ஆர்வத்தோடு ஈடுபட்டார். ஸ்காலர்ஷிப்பில் வந்த பணத்தையும் எடுத்துச் சென்று சூதாடியிருக்கிறார். போக்கர் விளையாட்டில் கைதேர்ந்த கெட்டிக்காரர் அவர். ஆனால் அதில் நிறையப் பணத்தை இழந்திருக்கிறார்.

மது பானத்திலும் நாட்டம் கொண்டவர். அதிகமான விஸ்கி குடிக்கும் பழக்கம் அவருக்கு இருந்தது. அவர் சுவைக்காத விஸ்கி, ஸ்காட்ச் வகைகளே இல்லையென்று சொல்லிவிடலாம். புகை பிடிக்கும் பழக்கமும் இருந்தது. நீண்ட கருப்பு நிற சுருட்டுகளை விரும்பிப் புகைப்பார். பெண் பித்தரும்கூட.

வயது ஏற ஏற, மதுவையும் புகையையும் சற்றே குறைத்துக்கொண்டார், இருப்பினும் முழுமையாக நிறுத்தவில்லை. ஆல்கஹாலுக்குப் பதிலாக, கஃபேன் அளவை அதிகரித்துக்கொண்டார். காப்பியை அதிகமாகப் பருகும் அமெரிக்க வழக்கம் அவருக்கும் ஒட்டிக்கொண்டிருக்கலாம்.

சைவ உணவு வகைகளைத்தான் அதிகம் விரும்பிச் சாப்பிட்டார். இதனை அவர் பல பேட்டிகளிலும் கூறியுள்ளார். பல வரலாற்று ஆய்வாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நான்காமாண்டு எழுத வேண்டிய பாலிடெக்னிக் தேர்வை, மூன்றாமாண்டே தனக்கு வைக்கச் சொல்லி நிர்வாகத்தைத் தொந்தரவு செய்திருக்கிறார் டெஸ்லா. அடுத்த வருடம் தனக்கு வரும் ஸ்காலர்ஷிப் வருவாய் போய்விடும் என்று தெரிந்தேதான் இச்செயலில் அவர் ஈடுபட்டார்.

அவரது தந்தைதான் உதவித்தொகை சலுகையை வாங்கித் தந்தார் என்று பார்த்தோம். அவர் எதை எப்படி வாங்கித் தந்தார் தெரியுமா? ‘நிகோலா, என்னோடு வா. உறுதியளித்தபடி, உனக்கு சீட்டு வாங்கித் தருகிறேன்!’ என்று காலராவில் இருந்து குணமான மகனை அழைத்துச் சென்று, ராணுவச் சேவைப் படிவங்களைக் கையில் கொடுத்து அவற்றை நிரப்பச் சொன்னார்.

இந்த உதவித்தொகை நிபந்தனையற்றது அல்ல. எதிர்காலத்தில் கட்டாய ராணுவச் சேவை செய்ய ஒத்துக்கொள்பவர்களுக்குதான் கல்வி உதவித்தொகை கிடைக்கும். ஆனால் டெஸ்லாவிடம் அவர் அதைப் பற்றி முன்கூட்டியே சொன்னதுபோல் தெரியவில்லை. இதன் பொருள் அவர் தன் மகனை ஏமாற்றிவிட்டார் என்பதல்ல. மாறாக, ராணுவம் டெஸ்லாவை ஒழுங்குபடுத்தும் என்று அவர் நம்பினார்.

1875ல் கிராட்ஸில் உள்ள இம்பீரியல்-ராயல் தொழில்நுட்பப் பாலிடெக்னிக் கல்லூரியில் ராணுவ எல்லைப்புற உதவித்தொகையில் சேர்ந்தார் என்று பார்த்தோம். இங்கு சேர்ந்த முதல் இரண்டரை ஆண்டுகளில் கடினமாக உழைத்து, அதிக மதிப்பெண்களைப் பெற்றதாகவும், ஒன்பது தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதாகவும் மற்றும் தொழில்நுட்ப பீடத்தின் டீனிடமிருந்து தனது தந்தைக்கு ஒரு பாராட்டுக் கடிதத்தைப் பெற்றுத் தந்ததாகவும் தனது சுயசரிதையில் டெஸ்லா குறிப்பிடுகிறார். ‘முதல் மதிப்பெண் எடுக்கும் உங்கள் மகன் ஓர் ஒளிவீசும் நட்சத்திரம் போன்றவன்‘ என்கிறது அந்தப் பாராட்டுக் கடிதம்.

கிராட்ஸில் பேராசிரியர் ஜேக்கப் போஷல் வழங்கிய மின்சாரம் பற்றிய விரிவான விரிவுரைகளில் தான் ஈர்க்கப்பட்டதையும் டெஸ்லா குறிப்பிட்டுள்ளார். அந்தப் பேராசிரியர் உருவாக்கிய மின்சார மோட்டாரின் வடிவமைப்பை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை டெஸ்லா வழங்கியிருக்கிறார்.

இவ்வளவு திறமை இருந்தும் பட்டம் பெறாமலேயே டிசம்பர் 1878 இல் அவர் கிராட்ஸை விட்டு வெளியேறினார். டெஸ்லா அந்த ஆண்டு சரியாகப் படிக்கவில்லை என்றும் சூதாட்டம் மற்றும் பெண் தொடர்புகளுக்காக அவர் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்றும் அவருடைய வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஒருவர் கூறுகிறார். ராணுவ உதவித்தொகையும் இதே காரணங்களுக்காகப் பறிக்கப்பட்டிருக்கலாம்.

வெளியே வந்த டெஸ்லா சத்தம் போடாமல் கிளம்பி ஸ்லோவேனியா நாட்டு எல்லைக்கருகில் வெறும் 60 ஃபுளோரின் சம்பளம் வாங்கிக்கொண்டு ஓரிடத்தில் வேலை பார்த்திருக்கிறார். டெஸ்லா நதியில் விழுந்து மாண்டுபோய்விட்டதாக ஒரு வதந்தி கொஞ்ச காலம் நிலவிவந்தது. அதைக் கிளப்பிவிட்டவரே அவர்தான். கிடைத்த கொஞ்சம் பணத்தையும் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி அவர் செலவழித்து வந்திருக்கிறார். பின்னர் நண்பரொருவர் அவரைக் கண்டுபிடித்து குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். பிறகு, தந்தையின் வற்புறுத்தலால் காஸ்பிக் பகுதிக்குத் திரும்பினார்.

அதற்கடுத்த வருடம், ஏப்ரல் 1879ல் அவரது தந்தை மிலுட்டின் டெஸ்லா, அடையாளம் காணமுடியாத நோய் ஒன்றின் காரணமாக, தனது அறுபதாம் வயதில் இறந்து போனார். தான் படித்த பழைய பள்ளியில் சேர்ந்து மாணவர்களுக்குப் பாடம் எடுத்து, நேரம் கழித்து வந்தார் டெஸ்லா. இதுவும் சிறிது காலம்தான்.

வருமானமின்றித் தவித்த குடும்பத்திற்குத் தானும் பாரமாக இருக்க வேண்டாம் என்றெண்ணி இரு மாமன்களின் உதவியுடன் செக் குடியரசின் பிராக் நகருக்குச் சென்று சேர்ந்தார் டெஸ்லா.

1880இல் பகுதி நேர ஆடிட்டர் பணி கிடைத்தது. அதைப் பார்த்துக்கொண்டே அங்கிருந்த சார்லஸ்-ஃபெர்டினான்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பிரிவில் சேர்ந்து கொணடார். கிரேக்கமும் செக் மொழியும் கட்டாயப் பாடங்களாக இருந்தன. ஆனால் அவற்றைக் கற்கமாட்டேன் என்று அடம் பிடித்தார். உலகத் தத்துவவாதிகளின் கோட்பாடுகளைக் கரைத்துக் குடித்தார். இருந்தும் தத்துவப் படிப்பிலும் அவர் பட்டம் பெறவில்லை.

அதன்பின் புடாபெஸ்டில் உள்ள சென்ட்ரல் டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் 1881இல் பணியில் சேர்ந்தார். அங்கு துறை சார்ந்த பொறியியல் சவால்களை தீர்த்து வைத்தார். அவை என்ன? அவர் பார்த்த பிற வேலைகள் என்னென்ன? எப்படி அவர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார்? கட்டாய ராணுவச் சேவை என்னானது?

(தொடரும்)

– 23 வயது டெஸ்லா, 1879இல் எடுக்கப்பட்டது.
– நியூட்டன் பற்றிய கட்டுரை : newscientist.com

 

பகிர:
nv-author-image

ராம் குமார் சுந்தரம்

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதுபவர். மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார். ஒரு கவிதைத் தொகுப்பு, ஓர் அறிவியல் புனை கதை தொகுப்பு ஆகியவற்றை ஆங்கிலத்திலும் தமிழில் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். இவருடைய பிரதிலிபி பக்கம் : https://pratilipi.page.link/8Hga6Dwpr4kdmqy99 தொடர்புக்கு : rksthewriter@gmail.comView Author posts

6 thoughts on “நிகோலா டெஸ்லா #4 – முறிவுகளும் முரண்களும்”

 1. Super Writer Sir.Tesla’s life is very interesting. Neenga atha sollara vidham romba different ah, ungaloda thani ezhuthu nadaila irukku.avaroda life ah neega step by step ah sollarathu, references neraya kodukkarathu eallame sirappaga irukkirathu.
  Thodarungal, Valthukkal 💐💐💐

  1. Ram Kumar Sundaram

   Thank you Nandhini Madam, for your detailed review and appreciation. இந்தத் தொடர், உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். அதற்காகத் தான் பல தரவுகளை மேற்கோள் காட்டி எழுதி வருகிறேன். என்னை ஊக்கப்படுத்தியதற்கு, மீண்டும் ஒரு முறை, என் பணிவான நன்றிகள். 😊🙏🏼

 2. நிச்சயமாக வானில் ஒளி வீசும் நட்சத்திரமாக டெஸ்லா மின்னுவார்…
  ஏன் மின்னுகிறாள்…பல பேரின்
  வாழ்வில் ஒளி வீசி சென்றிருக்கிறார்…அவரை பற்றிய தகவல்கள் மேலும் அறிய ஆவல் கொள்கிறது மனது…. wait and read…

  1. Ram Kumar Sundaram

   மிக்க நன்றி ஹேமா ஜி! ஆம், அந்த ஒளியூட்டும் நட்சத்திரத்தின் கதிர்கள், நம் தமிழ் வாசகர்களின் மீதும் விழட்டும் என்ற எண்ணத்தில் தான் இத்தொடரை எழுதி வருகிறேன். தங்கள் ஆதரவிற்கு, என் பணிவான நன்றிகள்! 😊🙏🏼

 3. அ௫மை. ரொம்ப விறுவிறுப்பாக உள்ளது. நிறைய மறைக்கபட்ட உண்மைகள் இ௫க்கும் போல. அதை நீங்கள் உங்கள் எழுத்தின்மூலம் கூறுவது அ௫மை.

  1. Ram Kumar Sundaram

   ஆம் ரத்னா மேடம்! நிகோலா டெஸ்லாவின் வாழ்வில் பல்வேறு உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. அவற்றை மக்களுக்கு நாம் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் துவங்கப்பட்ட தொடர் தான் இது. அதனை உங்களைப் போன்ற அறிவார்ந்த வாசகர்கள் கோடடிட்டுக் காட்டுவதே, எங்கள் நோக்கத்திற்கு தற்காலிக வெற்றி என்று கூறலாம். தங்கள் ஆதரவிற்கு, என்னுடைய மனமார்ந்த நன்றிகள்! 😊🙏🏼

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *