Skip to content
Home » நிகோலா டெஸ்லா #8 – மின்சாரப் போரின் தொடக்கம்

நிகோலா டெஸ்லா #8 – மின்சாரப் போரின் தொடக்கம்

மின்சாரப் போரின் தொடக்கம்

இறக்கும்வரை சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் ஒவ்வொரு நிமிடத்தையும் வாழ்ந்து கழித்தவர் நிகோலா டெஸ்லா. இயல்பிலேயே வேகமாக இயங்குபவரும்கூட. உடல் உபாதைகளால் சில சமயம் வேகம் சற்று மட்டுப்படுமே தவிர, எடுத்துக்கொண்ட பணி ஒருபோதும் நிற்காது.

தனிமையில் வாழ்ந்தவர்தான். ஒரு ஹோட்டல் அறையில் தன்னந்தனியே உயிரை விட்டவர்தான். அவர் இறுதியாக வாழ்ந்த அறையைக் கண்டு, டெஸ்லா வருத்தத்தில் இறந்துபோனார், பணமின்றி இறந்தார், வாழ்வே சுமையாக மாறிவிட்டது; அந்தக் கசப்போடே இறந்தார் என்றெல்லாம் உண்மைக்கு மாறான பல தகவல்கள் உலா வந்தன. அவரது நற்பெயருக்கு அவமானம் தேடித்தரும் வகையிலான இத்தகைய வதந்திகள் அனைத்தும் பொய்யென்பது கொஞ்சம் கொஞ்சமாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன.

டெஸ்லா வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அவர் அக்காலத்தில் செய்யாத காதல் சேட்டைகளே இல்லையெனலாம். எவ்வளவு ஆடினாலும், அறிவியல் என்று வந்துவிட்டால், யாருக்கும் விளங்க முடியாத மர்ம மனிதராக மாறிவிடுவார். இதனாலேயே அவரைத் தவறாகப் புரிந்து கொண்டு, அவரைப் பார்த்துப் பலரும் பயந்தனர்.

‘எனக்குத் திருமணத்தைவிட அறிவியலிலும் புத்தகங்கள் படிப்பதிலும்தான் நாட்டமும் காதலும் அதிகம். ஏனெனில், எனது மின்சார ஆராய்ச்சிகளின் பலன்கள், வெகுஜன மக்களுக்கு, இடைத்தரகர்கள் இன்றி, குறைந்த விலையில், சாதனங்களாகவும் அரசாங்கச் சேவைகளாகவும், அதையும் தாண்டி, ஒரு கட்டத்தில் இலவசமாகவும் சென்று சேர வேண்டும்.

‘எனக்குப் பெண்கள் மீது இருந்த ஆர்வம் என்பது ஊரறிந்த கதை. ஆயினும், நான் அனைத்து ஆண்களோடும் பெண்களோடும் சகஜமாகப் பேசிவிடமாட்டேன். ஆனால் ஒருவரிடம் பழகிவிட்டால், அவர்களுடைய உற்ற நண்பனாக, வருடங்கள் கடந்த நீண்ட தொடர்பில் இருப்பதுதான் என் பழக்கம்.

‘எனது மேன்மையான அறிவியல் லட்சியத்துக்கு, மிக மென்மையான சாதாரண சமூக வாழ்க்கை சற்றும் பொருந்தாது என்பதாலேயே, நான் திருமணம் செய்துகொள்ளவில்லை. என்னை நானே பார்த்துக்கொள்வதிலேயே எனக்குப் பல சிக்கல்கள் எழுகின்றன. இதில் இன்னொரு பெண்ணின் வாழ்வை எனது துரிதமான வாழ்வுடன் இணைத்து, அவளுக்குத் தொல்லை தர நான் விரும்பவில்லை!’

இவை டெஸ்லாவின் சொற்கள். அவரது நல்லெண்ணங்களின் வெளிப்பாடாக இந்த வாக்குமூலத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம்.

0

டெஸ்லாவின் வாழ்வில், நாம் இப்போது பார்க்கத் தொடங்கியிருக்கும் 1884 முதல் இனி வரப்போகும் 1915 வரையிலான அத்தியாயங்கள் மிகவும் முக்கியமானவை. அவரது 28 வயது முதல் 59 வயது வரையிலான அவரது அறிவியல் வாழ்வியல் வரலாறு இந்தக் காலகட்டத்துக்குள் அடங்கியிருக்கிறது. பல நாடுகளும் பல போர்களும் அவர் வாழ்வில் குறுக்கிடுகின்றன. அப்படிப்பட்ட ஒரு போரைத்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

நாடுகளுக்கு இடையிலான போர் அல்ல, அது. மின்சாரப் போர். மின் அறிவியல் மற்றும் அது சார்ந்த தொழிலின் போர் என்று இதை அழைக்கலாம். 1880களின் மத்தியில் ஆரம்பித்து, 1890களின் மத்தியில் இந்தப் போர் முடிந்ததாகக் கூறப்பட்டாலும் உண்மையில் அது 1915ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் நிறைவடைந்தது. அதன் தாக்கத்தைக் காலம் கடந்து இன்றும் நம்மால் உணரமுடிகிறது.

இதில் டெஸ்லாவின் பங்கு என்ன என்றால் போரின் உண்மையான கதாநாயகனே அவர்தான். அவரும் அவருடைய ஏசி கரண்ட் மின்சாரமும் அமெரிக்கர்களைப் புரட்டிப் போட்டதுதான் போரின் மையம்.

ஆனால் இந்த வரலாற்றின் பதிவேடுகளில் நிகோலா டெஸ்லாவை மேற்குலகம் கதாநாயகனாக முன்னிறுத்தவில்லை. அவர்கள் முன்னிலைப்படுத்துவது இருவரை. ஒருவர் கதாநாயகன். இன்னொருவர், உலகத்தையே தன் சுட்டு விரலால் ஆட்டுவித்த வில்லன்.

கதாநாயகனின் பெயர் ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ். வில்லன் வேறு யாருமல்ல, தாமஸ் ஆல்வா எடிசன். இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்தவர் நிகோலா டெஸ்லா. இது தான் மின்சாரப் போர் பற்றி மேற்குலகம் அளிக்கும் கதைச்சுருக்கம். இப்போரில் இன்னும் பல துணைப் பாத்திரங்களும் அடக்கம் என்றாலும் அடிப்படைச் சித்திரம் இதுதான்.

எடிசனின் டிசி எனப்படும் டைரக்ட் கரண்ட் மின்சார முறைக்கும் டெஸ்லா காப்புரிமம் வாங்கிய ஏசி எனப்படும் ஆல்டர்னேட் கரண்ட் முறைக்கும் இருந்த தொழில்போட்டி தான் மின்சாரப் போராக வெடித்தது.

ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் என்பவர் மிகப்பெரிய பணக்காரர், கண்டுபிடிப்பாளர். அமெரிக்க ரயில் என்ஜின்களில், கம்ப்ரெஸ்ட் ஏர் மூலம் செயல்படும் பிரேக்கிங் சிஸ்டத்தைப் பயன்படுத்தும் சாதனைத்தை வடிவமைத்து சாதனை படைத்தவர். பிற்காலத்தில் இரு சக்கர வாகனங்களிலும் இந்த முறையியல் பயன்படுத்தப்பட்டது.

தொழிலதிபர், பொறியலாளர், முதலீட்டாளர் என்று பல்வேறு முகங்களைக் கொண்ட வெஸ்டிங்ஹவுஸ் எடிசனுக்கு எதிராக இயங்கி வந்தார். இந்தப் போர் முடிவடையும் தருவாயில் இவர் பெற்ற வெற்றி மிகப் பெரியது.

ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸுக்கு அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிக்கல் என்ஜினியர்கள் என்னும் அமைப்பு 1911ஆம் ஆண்டு, எடிசனின் பெயர் கொண்ட விருதை வழங்கி, பெருமிதம் சேர்த்தது. நன்றாகக் கவனியுங்கள், போரில் அவர் யாரை வெற்றிக்கொண்டாரோ அவருடைய பெயரில் அமைந்திருக்கும் விருது அது. அப்படியானால்

எடிசனின் வீச்சு எத்தகையது என்பதைப் புரிந்துகொள்ளலாம். அமெரிக்க ஜனநாயகத்தின் அனைத்து அரசு அமைப்புகளும் எடிசனின் கைவிரல் அசைவுக்குக் கட்டுப்படும். அமெரிக்கா மட்டுமல்ல, ஐரோப்பாவும்தான். ஒரே விதிவிலக்கு, ரஷ்யா.

0

விளக்குகளில் இரு வகை உண்டு. ஒன்று, டங்ஸ்டன் காயிலை அடிப்படையாகக் கொண்டு இயங்கும். இவற்றை இன்கேன்டசண்ட் லாம்ப் அதாவது ஒளிரும் விளக்குகள் என்று அழைப்பார்கள்.

இன்னொன்று, ஆர்க் லாம்ப் என்று அழைக்கப்படும், அதி சக்தி வாய்ந்த கார்பன் எலக்ட்ரோடுகளை இரு முனைகளின்மூலம் உருவாக்கும் முறை கொண்ட, சக்தி வாய்ந்த விளக்குகள் ஆகும். தேடுதல் விளக்குகள் (சர்ச் லைட்ஸ்) மற்றும் சினிமா ப்ரொஜெக்டர் விளக்குகள் ஆகியவை இந்தப் பிரிவில் வரும். இப்போது, ஆர்க் லாம்ப் என்ற பெயர் வாயுவைச் செயற்கையாக உருவாக்கி ஒளி கொடுக்கும் விளக்குகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ப்ளோரோசென்ட் விளக்குகள் என்று இன்று அழைக்கப்படும் டியூப் லைட்டுகள் மற்றும் அவற்றின் முன்னேறிய வடிவங்கள் ஆர்க் லாம்ப் பிரிவில் இருந்து பிரிந்து வந்தவைதான்.

இதன் மிகவும் முன்னேறிய இன்னொரு வடிவம், ‘ஜெனான் ஆர்க் லாம்ப்’ என்று அழைக்கப்படுகிறது. இது ஐமாக்ஸ் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்து கேமராக்கள், விளக்குகள், டிஜிட்டல் ப்ரொஜெக்டர்கள், தொடு திரைகள் உள்ளிட்ட சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஹம்ப்ரி டேவி என்ற மின்சாரக் கண்டுபிடிப்பாளர் 1800-1810 காலத்தில் இந்த ஆர்க் லாம்ப் விளக்குகளை முதன் முதலாக உருவாக்கினார்.

நிகோலா டெஸ்லா எடிசனின் டிசி கரண்ட் சாதனங்களில் இந்த இரு வகை விளக்குகளாலும் ஏற்பட்ட பிரச்னைகளைப் படிப்படியாகச் சரி செய்தார். பிறகு டிசி ஜெனரேட்டர்களை மாற்று முறையில் மறு அமைப்பு செய்து சீர் படுத்தினார். அதன் பிறகு, எடிசன் கம்பெனி தயாரித்து வந்த டிசி மெஷின்களில் எடிசன் டிசைன் செய்து வைத்திருந்த 24 சாதனங்களின் வடிவமைப்பை முற்றிலும் நிரந்தரமாக மாற்றியமைத்து, தொல்லைகளை முழுமையாக நீக்கி, டிசியிலும் பெருவெற்றி கண்டார்.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, ஒரேகான் சொகுசுக் கப்பலையும் தாண்டி, எடிசனின் டிசி டைனமோக்களின் அடிப்படை உருவாக்கத்தையே மாற்றி, அந்த டைனமோக்களை, முன்பைவிட வலிமையானதாக்கி, செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தார்.

மூன்று முதல் நான்கு மாத காலத்துக்குள் இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டினார் நிகோலா டெஸ்லா. இதனைக் கண்டு, விஞ்ஞான உலகமே வியந்தது. எடிசனுடன் சேர்ந்து அவரது பரம வைரியான ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸும் வியப்பில் மூழ்கிப் போயினர். ‘ஏசியின் காவலர், டிசியையும் காப்பாற்றி விட்டாரே! எதிர்க்கருத்து என்று ஈகோ பார்க்காமல், அடித்து துவம்சம் செய்து விட்டாரே!’ என்று ஒரு விஞ்ஞான மாநாட்டில் டெஸ்லாவை ஜார்ஜ் புகழ்ந்து தள்ளிவிட்டார். அவர் மட்டுமல்ல, அந்த மாநாட்டில் பங்குகொண்ட பெரும்பான்மையோர், டெஸ்லாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள். ஆனால் இந்த விழாவுக்கே போகவில்லை டெஸ்லா.

‘எனக்கு அவர்களுடைய டிசி வெற்றியில் பங்கு வேண்டியிருக்கவில்லை. நான் அதனை அறிவியல் உலகுக்கு ஒரு சேவை போன்று எண்ணிதான் செய்து கொடுத்தேன். எடிசன் உறுதியளித்தபடி 50,000 டாலர் தந்ததும் ஏசியில் நான் நினைத்தது போல மின் சாதனங்களை உருவாக்கி, எடிசனுடன் சேர்ந்து அதனை வெகுஜன மக்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்று நினைத்தென். என் ஆராய்ச்சிக்கு அந்தப் பணம் பயன்படும் என்று நினைத்தேன். ஆனால் இது எதுவும் நடக்கவில்லை. எடிசனால் வஞ்சகமாக முதுகில் குத்தப்பட்டதைப் போல் உணர்ந்தேன்’ என்கிறார் டெஸ்லா.

இவ்வளவு பெரிய வெற்றியைத் தன் காலடியில் வந்து கொட்டிய டெஸ்லாவை, எடிசன் எளிதாக ஏமாற்றினார். ‘டெஸ்லா, நீ அமெரிக்க நகைச்சுவையின் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் போய்விட்டாயே!’ என்று கூறி எள்ளி நகையாடினார். அதாவது, அமெரிக்கர்களாகிய நாங்கள் சன்மானம் கொடுப்பதாகக் கூறுவோம், ஆனால் காரியம் முடிந்தபின் அந்த வாக்குறுதியைக் கொடுத்தவனும் கடைப்பிடிப்பதில்லை; வாக்குறுதியைப் பெற்றவனும் மேலதிகம் கேட்பதில்லை. உனக்கு மட்டும் இது தெரியாமல் போய்விட்டதே என்பதுதான் எடிசனின் ஏளனத்துக்கான பொருள்.

டெஸ்லா அதிர்ச்சியடைந்தார். அவரால் இதைச் சுலபமாகக் கடந்து செல்லமுடியவில்லை. எடிசனோடு வாதிட்டார். ‘டெஸ்லா, வருத்தம் கொள்ளாதே. வேண்டுமென்றால், மாதச் சம்பளத்தில் பத்து டாலர் அதிகம் தருகிறேன். நீ தனியாள் தானே, சுகமாகப் பிழைத்துக்கொள்!’ என்று எடிசனிடமிருந்து பதில் வந்தது.

இந்த அனுபவம் ஒரு நிரந்தர வடுவாக டெஸ்லாவின் உள்ளத்தில் பதிந்து போய்விட்து. தான் போற்றி வணங்கிய எடிசனா இப்படி நடந்துகொண்டார் என்று நினைத்து, நினைத்து வருந்தினார்.

வெஸ்டிங்ஹவுஸுக்கு ஏசி கரண்டின் மீது எப்போதும் தீவிர ஆர்வம் இருந்து வந்தது. அந்த ஏசியின் பிதாமகரான, அறிவியல் மேதையான நிகோலா டெஸ்லாவை எடிசன் வளைத்து வைத்திருக்கிறார் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இந்நிலையில் எடிசனால் டெஸ்லா ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் அதை ஒரு வாய்ப்பாகவே அவர் பார்த்தார். அவர் எதிர்பார்த்தது போலவே டெஸ்லா அடுத்த சில நாட்களில் தன் பணியை ராஜினாமா செய்தார்.

உடனே அவரைச் சென்று பார்த்த வெஸ்டிங்ஹவுஸ், ‘நீங்கள் என்னுடன் இருக்கவேண்டியவர். நீங்கள் ஒரு ஒளிக்கடவுள். என்னுடன் வாருங்கள், இந்தப் போரில் நானா எடிசனா என்று பார்த்துவிடலாம்’ என்று அறைகூவல் விடுத்தார். மின்சாரப் போருக்கான முதல் அடியாக இது அமைந்துவிட்டது.

(தொடரும்)

 

படம் : இடப்புறம் ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ், நடுவே தாமஸ் ஆல்வா எடிசன், வலப்புறம் நிகோலா டெஸ்லா

பகிர:
ராம் குமார் சுந்தரம்

ராம் குமார் சுந்தரம்

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதுபவர். மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார். ஒரு கவிதைத் தொகுப்பு, ஓர் அறிவியல் புனை கதை தொகுப்பு ஆகியவற்றை ஆங்கிலத்திலும் தமிழில் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். இவருடைய பிரதிலிபி பக்கம் : https://pratilipi.page.link/8Hga6Dwpr4kdmqy99 தொடர்புக்கு : rksthewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *