Skip to content
Home » நிகோலா டெஸ்லா #9 – வீதியெங்கும் ஒளி

நிகோலா டெஸ்லா #9 – வீதியெங்கும் ஒளி

வீதியெங்கும் ஒளி

1885ஆம் ஆண்டின் முற்பகுதியில்தான் நிகோலா டெஸ்லா எடிசன் மெஷின் ஒர்க்ஸ் பதவியை ராஜினாமா செய்தார் என்றும்; இல்லை, அவர் 1884ஆம் ஆண்டே பதவியை விட்டு விலகிவிட்டார் என்றும் இருவேறு தரப்பினர் சொல்கின்றனர்.

பெரும்பான்மைத் தரவுகளின்படி பார்த்தால் 1884ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலேயே, டெஸ்லாவுக்கும் எடிசனுக்குமான உறவில் மிகப் பெரும் விரிசல்கள் ஏற்பட்டுவிட்டன. எடிசன் ஏமாற்றிய பின்பும்கூட, தனது கையிலிருந்த பணிகளை முடித்துக்கொடுத்து விட்டுதான், டெஸ்லா ராஜினாமா செய்திருக்கிறார்.

ஆனால், ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் பல பொதுவிடங்களிலும், விஞ்ஞானக் கூட்டங்களிலும், டெஸ்லாவைப் புகழ்ந்து பேசி, 1884ஆம் ஆண்டின் நவம்பர்-டிசம்பர் மாதங்களிலேயே இதற்கான விதையை விதைத்துவிட்டார். 1885ஆம் ஆண்டு முதல், இந்த மின்சாரப் போர், வேகம் பிடிக்கத் தொடங்கிவிட்டது.

டெஸ்லாவுக்கும் எடிசனுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. இருவரும் பல மணி நேரம் சளைக்காமல் வேலை செய்யக் கூடியவர்கள். இருவரும் இரவில் குறைந்த நேரமே தூங்கக் கூடியவர்கள். தேவைப்பட்டால், அதையும் தியாகம் செய்து விடுபவர்கள். இருவரும் தங்கள் அறிவியல் கொள்கைகளில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள்.

இதேபோல், ஜார்ஜுக்கும் டெஸ்லாவுக்கும்கூடப் பல ஒற்றுமைகள் உள்ளன. இருவருக்குமே தங்களைத் தேவையில்லாமல் புகைப்படம் எடுப்பவர்களைக் கண்டால் பிடிக்காது. டெஸ்லா தன்னைவிட, தனது அறிவியல் கண்டுபிடிப்புகளை, தான் வேலை செய்ய வைத்துப் புகைப்படம் எடுத்துக்கொள்வதில், சற்றே ஆர்வம் காட்டினார்.

தன் வாழ்வின் பிற்பகுதியில், சுயசரிதை, பேட்டிகள் என்று டெஸ்லா கொஞ்சம் கொஞ்சமாக, பொதுமக்களிடம் தன் கருத்துகளைக் கொண்டு செல்லும் வகையில் நடந்து கொண்டார். அதையும், அவர் ஓர் ஆவணப் பதிவு செய்யும் நோக்கோடுதான் செய்தாரே தவிர, புகழ் வெளிச்சம் பெறுவதற்கு அல்ல.

ஜார்ஜின் கொள்கை, பணி சார்ந்தது. அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர். வருமானமின்றிச் செலவு செய்வதற்குக்கூட அஞ்சமாட்டார். ஆனால், புகைப்படங்கள் எடுப்பதையோ பேட்டிகள் கொடுப்பதையோ, அவர் வேண்டாவெறுப்பாகத்தான் செய்து வந்தார்.

இவர்கள் இருவரைக் காட்டிலும், எடிசன் மாறுபட்டவர். தன் அறிவியல் கொள்கைகளையும் தன் சாதனங்களின் வணிகத்தைம் அக்காலத்திலேயே பல்வேறு விளம்பர உத்திகளைப் பயன்படுத்தி, ஊடகங்களின் உதவியோடு, தன்னைப் பிரபலப்படுத்திக் கொண்டவர் எடிசன். மிகப்பெரிய விளம்பரப் பிரியர்.

இந்தப் போரின் இறுதிக்கட்டத்தில், ஜார்ஜுக்கு 1911இல் கிடைத்த அதே எடிசன் மெடல், அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எலக்ட்ரிக்கல் என்ஜினீயர்ஸ் அமைப்பால், 1917ஆம் ஆண்டு நிகோலா டெஸ்லாவுக்கும் வழங்கப்பட்டது. ஆனால், தனது 68ஆம் வயதில், ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ், 1914ஆம் ஆண்டில், மறைந்து போனது, ஒரு சோக நிகழ்வு.

டெஸ்லாவுக்கும் ஜார்ஜுக்கும் பத்து வயது வித்தியாசம் இருந்தது. அதேபோல், அவருக்கும் எடிசனுக்கும், ஒன்பது வயது வித்தியாசம். ஜார்ஜின் பிறப்பு 1846 ஆம் ஆண்டு, எடிசன் 1847ஆம் ஆண்டு, டெஸ்லா 1856ஆம் ஆண்டு. இவர்கள் மூவரும் சமகாலத்தில் இயங்கியது அறிவியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாக அமைந்துவிட்டது.

டெஸ்லா அமெரிக்கா வந்த 1884ஆம் ஆண்டுக்கு மூன்று வருடங்கள் முன்பாக, அதாவது 1881ஆம் ஆண்டில்தான், ஜார்ஜ் தனது நிறுவனமான வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிகல் கம்பெனியைத் தொடங்கியிருந்தார். அவர் எடிசனுக்குக் கடும் போட்டியைக் கொடுத்தாலும், டிசிக்கு இணையான அறிவியல் ரீதியிலான மின்சார அமைப்பை அவரால் போட்டிப் போட்டு உருவாக்க முடியவில்லை.

இன்னும் குறிப்பாக, டிசியின் அனைத்துத் துறைகளிலும் ஏகாதிபத்தியம் செய்து வந்த எடிசனோடு, அவரால் போட்டிப் போட்டு வெல்ல முடியவில்லை என்பதே உண்மை. அதற்கும் சளைக்காமல், யூனியன் ஸ்விட்ச் அண்ட் சிக்னல் கம்பெனி என்ற கூட்டு நிறுவனத்தையும், இரண்டாவதாக உருவாக்கி, எடிசனுக்குக் கடும் சவால் கொடுத்து வந்தார் வெஸ்டிங்ஹவுஸ்.

அதற்காகத்தான் அவர் ஏசியைக் கையில் எடுத்தார். ஆனால் ஜார்ஜுக்கு, அங்கும் வெற்றி கிட்டவில்லை. இந்த நிலையனைத்தும், நிகோலா டெஸ்லாவின் ராஜினாமாவிற்குப் பின் மாறியது.

தனது டிசியின் அடிப்படையையே சரி செய்த டெஸ்லாவைப் பார்த்து, பயம், போட்டி, பொறாமை என அனைத்து எதிர்ப்புணர்வுகளும் கொண்டார் எடிசன். அவருக்கு ஜார்ஜின் ஆதரவும் கிடைத்துவிட்டதால், இருவரையும் முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் என்பதில் முனைப்புக் காட்டினார் எடிசன். ஏசி என்றாவது ஒருநாள் அறிவியல் மற்றும் பொருளாதார ரீதியிலும்கூட, டிசியை வீழ்த்திவிடும் என்ற உண்மையை அவர் உணர்ந்து வைத்திருந்தார்.

அரசும் அரசியல்வாதிகளும் பலம் படைத்த செல்வந்தர்களும் ஊடகங்களைத் தங்கள் சுயலாபத்துக்குப் பயன்படுத்தி, பொது மக்களைத் திசைதிருப்பும் உத்தி சமீபத்தியது என்று நாம் நினைக்கலாம். தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கடந்த 20 ஆண்டுகளில்தான் நடைபெற்றது என்பதால் இப்படியொரு எண்ணம் நமக்கு ஏற்படுவது இயற்கையே. எடிசனோ 1885ஆம் ஆண்டே இதையெல்லாம் சாதித்துவிட்டார்.

1885ஆண்டின் முற்பகுதியில் டெஸ்லாவும் ஜார்ஜும் கைகோத்த பிறகு எடிசன் அளித்த பேட்டிகளிலிருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.

‘ஏசி கரண்ட் என்பது மக்களுக்கு உதவாத மின்சாரமுறை. இதனால், அவர்களுக்கு ஆபத்துதான் ஏற்படும்.’

‘குறைந்த விலை என்று கூறுவார்கள். ஆனால் மின்சாரத்தின் தரத்தை முழுவதுமாகக் குறைத்துவிடுவார்கள்.’

‘ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸுக்கு என்னை வெல்லமுடியவில்லையே என்று எப்போதும் வருத்தமும் கோபமும் உண்டு. எனவேதான், எனக்கு எதிரானவர்களை வளர்த்துவிட எப்போதும் துடிக்கிறார்.’

‘டெஸ்லா நன்றாக வேலை செய்தவர்தான். நல்ல உழைப்பாளிதான். ஆனால் பெரிய திறமைசாலி அல்ல. அதற்கும் மேலாக, பணத்தின்மீது ஆசை கொண்டவர். நான் அதிகப்படியான பணம் தரமாட்டேன் என்று கூறியதும் அடம்பிடித்துக் கொண்டு சென்றுவிட்டார். நானோ என் நண்பர் சார்லஸ் பாச்சலரோ இல்லாவிட்டால், அவரால் இந்த நியூ யார்க் நகருக்கு வந்திருக்கவே முடியாது. இப்போது அவர் ஜார்ஜுடன் சேரப்போவதாகச் செய்திகள் வருகின்றன. இதற்கு முன்பு இவ்வாறு பல முயற்சிகளைச் செய்தவர்களின் நிலை என்ன என்பதை நான் கூறவேண்டியதில்லை. டெஸ்லாவுடன் இருக்கும் ஜார்ஜுக்கும் அது தெரியும். இவர்களைப் பற்றிப் பேசி, என் நேரத்தை விரயம் செய்ய விரும்பவில்லை’.

தான் ஏமாற்றியதைச் சாமர்த்தியமாக மறைத்து, ஊடங்கங்களின் உதவியுடன் இவ்வாறான செய்திகளைப் பரப்பினார் எடிசன்.

ஏசி கரண்ட் பற்றியும், டெஸ்லா மற்றும் ஜார்ஜைப் பற்றியும் குறைத்துக்கூறி பல கட்டுரைகள் எழுதுமாறு விஞ்ஞானிகளையும் ஊடகத்தினரையும் அணுகினார். பணம் மற்றும் அதிகாரத்தின்மூலம் அவர்களை வளைத்தார்.

ஜார்ஜுக்கும் டெஸ்லாவுக்கும் வரும் முதலீடுகளைத் தன் பக்கம் ஈர்க்க, முதலீட்டாளர்களிடம் கவர்ச்சி சலுகைகளைக் காட்டியும், தேவைப்பட்டால் சற்று மிரட்டியும் பேச்சுவார்த்தைக்கு வரவழைத்தார். ஜார்ஜும் பெரிய பணக்காரர்; சற்று செல்வாக்கு மிகுந்தவர் என்பதால் எடிசனின் பன்முனைத் தாக்குதலை அவரால் சமாளிக்க முடிந்தது.

இதையெல்லாம் கண்ட ஜார்ஜ், டெஸ்லாவிடம், ‘பார்த்தீர்களா இன்றைய நிலையை! இருந்தாலும் ஊடகத்திலும் பிற துறைகளிலும் சில நடுநிலை ஆதரவாளர்கள் நமக்காக இருக்கத்தான் செய்கின்றனர். அவர்கள் நம்மைப் பற்றி அறிந்துகொள்ள, நாம் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு முதற்கட்டமாக, தங்களின் ஏசி காப்புரிமங்களை எனக்கு விற்றுவிடுங்கள். நீங்கள் எடிசனிடம் கேட்டது $50,000. நான் உங்களுக்கு $60,000 தருகிறேன். ஒவ்வொரு ஹார்ஸ் பவர் மின்சார விற்பனைக்கு $2.50 தருகிறேன்’ என்ற ஒரு சிறப்பான ஒப்பந்தத்தை முன்வைத்தார்.

ஆனால், பிற்காலத்தில் விற்பனை அந்த அளவு நடக்காததால், அவர் டெஸ்லாவுக்கு அந்த $2.50 வழங்க முடியாமல், குறைந்த அளவு பணமே வழங்கியது தனிக்கதை. ஆனால், அதனைப் பற்றியெல்லாம் டெஸ்லா கவலைப்படவேயில்லை. தனக்கு உதவி செய்து கை தூக்கிவிட்ட ஜார்ஜை அவர் பெரிதும் மதித்தார்.

இந்த ஒரே ஒப்பந்தத்தின் மூலம், நிகோலா டெஸ்லா அன்றைய உலகின் பெரும்பணக்காரர் ஆகியிருக்கக்கூடும், இன்றைய எலான் மஸ்க்கைப் போல. ஆனால் அங்குதான் இந்த மின்சாரப் போர் வேறு ஒரு வடிவம் எடுத்தது.

அறுபதாயிரம் டாலர் வாங்கிக்கொண்டு, டெஸ்லா ஏசி மோட்டார்களைத் தயாரித்து விற்க கடுமையான முனைப்போடு தீவிர உழைப்பில் இறங்கினார். மார்ச் 1885ஆம் ஆண்டு, ஜார்ஜ் கைகாட்டிய பல முதலீட்டார்களின் துணையோடு டெஸ்லா எலக்ட்ரிக் லைட் கம்பெனி என்ற நிறுவனத்தை, நியூ யார்க்கின் அருகிலுள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் ராலே எனும் நகரில் அமைத்தார்.

இந்நிலையில் தான், இந்தப் போரின் இன்னொரு வில்லனான ஜே.பி. மார்கன் என்ற பெரும் பணக்கார முதலீட்டாளரும் உள்ளே வருகிறார். ஆம், இன்று நம் அனைவருக்கும் தெரிந்த உலகளாவிய நிதி நிறுவனமான ஜே.பி. மார்கன் கம்பெனியின் நிறுவனர்தான் அவர்.

மார்கன் எடிசனுக்கு ஆதரவாக, மறைமுகமாக, டெஸ்லாவின் கம்பெனியில் முதலீடு செய்த நபர்களிடம் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தினார். வெளியே, நடுநிலையாகவும், சற்றே டெஸ்லாவுக்கு ஆதரவாகவும் இருப்பதைப் போல் காட்டிக்கொண்டாலும், மார்கன் எடிசனின் ஆசைகளைப் பூர்த்தி செய்வதில் மட்டுமே குறியாக இருந்தார். வஞ்சகம், துரோகம் என்ற இரு பெரிய ஆயுதங்களை டெஸ்லாவுக்கு எதிராக எடிசனும் மார்கனும் பயன்படுத்தினர்.

சந்தையில், ஏசி மோட்டாரின் அடிப்படைச் செய்பொருள்களையும் மூலப்பொருள்களையும் இவர்கள் இருவரும் சகட்டுமேனிக்கு விலையேற்றி வைத்தனர். இதன்மூலம் ஜார்ஜ் மற்றும் டெஸ்லாவுக்கு மோட்டார்களை உருவாக்கும் பணியில் மிகப்பெரிய தொய்வு ஏற்பட்டது. போட்ட முதலீடுகளைக்கூட வெளியே எடுக்க முடியாத நிலையும் வந்தது.

தனது கம்பெனியின் மூலம் டிசியின் பயன்பாட்டைக் குறைத்து ஏசியின் மூலக்கூற்றின் மூலம் வேலை செய்யும் ஓர் அழதிய, அதி திறன் படைத்த ஆர்க் லாம்ப்பை உருவாக்கும் பணியில் டெஸ்லா ஈடுபட்டிருந்தார். அப்போதுதான் அனைத்து முதலீட்டாளர்களும் சேர்ந்து மீண்டுமொரு முறை டெஸ்லாவுக்கு மிகப்பெரிய அடியைக் கொடுத்தனர்.

அந்த விளக்கு உருவாகி முடியும் வரைகாத்திருந்த அவர்கள், அது தயாராகி பரிசோதித்து முடிக்கப்பட்ட சில நாட்களிலேயே டெஸ்லாவின் கம்பெனியைக் கையகப்படுத்திக் கொண்டனர். ஸ்டாக் சான்றிதழ் எனப்படும் உபயோகம் இல்லாத பங்குகளை மட்டும் டெஸ்லாவின் கையில் கொடுத்து அவரை விரட்டிவிடாத குறையாக கம்பெனியில் இருந்து வெளியேற்றினர்.

இதைப்பற்றி டெஸ்லா கூறுகையில், ‘என் வாழ்க்கையில் எனக்கு விழுந்த மிகக் கனமான அடி, இதுவாகத்தான் இருக்கும்’ என்று மிகவும் வருத்தப்பட்டு சொல்கிறார்.

எடிசனும் மார்கனும் தங்களது தாற்காலிக வெற்றியை சந்தோஷமாகக் கொண்டாடினர். இருப்பினும், மனம் தளராமல் டெஸ்லாவும் ஜார்ஜும் தங்கள் பணிகளைத் தொடர்ந்தனர். ஏசியின் பலத்தை அமெரிக்காவுக்குச் செயல்முறையில் காட்ட அவர்கள் உறுதி பூண்டனர்.

அதற்காக, நியூ யார்க் நகரின் மாநகர் அலுவலர்களோடும் அப்போதைய மேயரோடும் ஜார்ஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் விளைவாக, ஏசி விளக்குகளை, நியூ யார்க்கின் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள தெருக்கள் முழுக்க, நஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இலவசமாகப் பொருத்தும் பணியில் இருவரும் ஈடுபட்டனர்.

விளக்குகள் மாலை நேரத்தில் ஒளி கொடுத்து, நகரை ஒளிவீசச் செய்ததை மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று அதிசயம் போல் பார்த்து மகிழ்ந்தனர். அவற்றின் வெளிச்சத்தில் ஆடிப்பாடிய நிகழ்வுகளையும் அன்றைய பத்திரிகைச் செய்திகள் பதிவு செய்தன.

அப்போதுதான், முன்பு சொன்னதைப் போல ‘ஒரு நகரத்தையே, தன் ஒளியால் ஆடிப்பாடிக் கொண்டாடச் செய்த கடவுள் போன்று, நிகோலா டெஸ்லா தெரிகிறார்’ என்று ஒரு செய்தி அறிக்கை புகழ்ந்தது.

இதன் விளைவாக, டெஸ்லாவின் புகழ், அமெரிக்கா முழுக்கப் பரவியது. பல நகரங்களும் அவரைப் போட்டி போட்டுக் கொண்டு அழைத்தன. மறுபடியும் முதலீட்டாளர்களின் கவனத்தைத் தன் திறமையின்மூலமாக மட்டுமே தன் பக்கம் ஈர்த்தார் டெஸ்லா.

‘வஞ்சகமும், துரோகமும் அவருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டபோது, அவர் எதிர்வினையாக கடின உழைப்பையும் அறிவியல் திறமையையும் பயன்படுத்தினார்’ என்கிறார் டெஸ்லாவின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்த ஜான் ஓ நீல் (‘பிராடிகல் ஜீனியஸ்’).

இதற்கு எதிர்வினையாற்றத் துடித்தார் எடிசன். அதற்கும் பெரிய பலன் கிட்டியது. இப்போரில் எத்தனை முறை அழிந்தாலும், மறுபிறவி எடுத்து எழுந்து வரும் ஃபீனிக்ஸ் பறவையாக டெஸ்லா திகழ்ந்தார்.

(தொடரும்)

படம் 1: டெஸ்லா நியூ யார்க் நகரை ஒளிவீசச் செய்த நிகழ்வை ஓர் ஓவியர் நேரில் கண்டு வரைந்து பத்திரிகையில் வெளியிட்ட படம். காப்புரிமை: டெஸ்லா யூனிவர்ஸ் நிறுவனம்.

பகிர:
nv-author-image

ராம் குமார் சுந்தரம்

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதுபவர். மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார். ஒரு கவிதைத் தொகுப்பு, ஓர் அறிவியல் புனை கதை தொகுப்பு ஆகியவற்றை ஆங்கிலத்திலும் தமிழில் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். இவருடைய பிரதிலிபி பக்கம் : https://pratilipi.page.link/8Hga6Dwpr4kdmqy99 தொடர்புக்கு : rksthewriter@gmail.comView Author posts

2 thoughts on “நிகோலா டெஸ்லா #9 – வீதியெங்கும் ஒளி”

  1. Vijayalakshmi Elumalai

    இந்த அத்தியாயம் படித்து நான் மிக வருந்தினேன்…டெஸ்லா வின் வாழ்க்கை எங்களுக்கு எல்லாம் ஒரு வழிகாட்டியாக உள்ளது…விட முயற்சி என்றும் பலன் தரும் என்று கற்றுக்கொண்டேன்…மிக அருமை…

    1. Ram Kumar Sundaram

      தாங்கள் உள்ளார்ந்து படித்து உணர்ந்ததை, தெளிவாகக் கூறியமைக்கு, என் பணிவான நன்றிகள் விஜயலக்ஷ்மி மேடம்! ஆம், அவரது வாழ்வியல், நமக்கெல்லாம் நிச்சயமாக ஒரு வழிகாட்டி தான் என்பதில் ஐயமில்லை. 😊🙏🏼

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *