ஜான் பியர்பான்ட் மார்கன் சீனியர். இன்றைய ஜே.பி. மார்கன் நிறுவனத்தை உருவாக்கியவர் இவர். அன்றைய உலகளவிலான நிதிச்சந்தையை, தன் கைகளுக்குள் வைத்திருந்தவர். இப்போதும் அவரது வாரிசுகள் இந்நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். இன்றும் ஜே.பி. மார்கன் நிறுவனம் உலகளவில் ஒரு சக்திவாய்ந்த கார்ப்பரேட் நிதிச் சேவை நிறுவனமாகக் கொடிகட்டிப் பறக்கிறது. மார்கன் பரம்பரைக்கு அமெரிக்க வரலாற்றில் சிறப்பிடம் உண்டு. உழைப்பின்மூலம் பெருவெற்றி பெற்றவர்கள் அவர்கள்.
அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த பாரம்பரியம் கொண்ட ஜே.பி. மார்கன் சீனியர், எடிசனுக்கு ஆதரவாக டெஸ்லாவின் கம்பெனியைக் கவிழ்க்க மறைமுகமாக உதவியதை அவருடன் நெருக்கமாக இருந்த சிலரே ரசிக்கவில்லை.
அவர்கள் டெஸ்லாவின் திறமையை மார்கனுக்கு எடுத்துக்கூறிப் புரிய வைத்ததாக பதிவுகள் கூறுகின்றன. அதன்பின் சற்றே வருத்தப்பட்டிருக்கிறார் மார்கன். ‘என்ன செய்ய, நடந்தது நடந்துவிட்டது! அதை மாற்ற இயலாது. என்னுடைய தவறான கணிப்பையும் நிலைப்பாட்டையும் சரி செய்ய எதிர்காலம் எனக்கொரு வாய்ப்பளித்தால், அதனை நிச்சயம் பயன்படுத்துவேன்.’
இதன் தொடர்ச்சியாக, டெஸ்லாவை ஒடுக்குவதில் இருந்து அவர் சற்றே பின்வாங்கினார். தவிரவும், தனது தவறுக்குப் பரிகாரம் செய்வது போல, பிற்காலத்தில், டெஸ்லா டவர் எனப்படும் வார்டன்க்ளிஃப் டவரின் உருவாக்கத்தில் அவர் ஆற்றிய பங்கு, வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக மாறிப் போனது. மின்சாரப் போரின் தொடர்ச்சியாக, 1901ஆம் ஆண்டு இது நடந்தது. இதனைப் பற்றி, அக்காலகட்டம் வரும்போது, இன்னும் விரிவாகக் காணலாம்.
ஆனால் அவர் ஏற்கெனவே செய்து வைத்திருந்த வேலைகள், குறிப்பாக, முதலீட்டாளர்களை அவர் தயார்படுத்தி வைத்திருந்த விதம் எடிசனுக்கு மிகவும் சாதகமாக மாறிப்போனது. யார் தன்னுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிகோலா டெஸ்லா, ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் இருவரையும் நிர்மூலமாக்கியே தீருவது என்ற தீவிரமான முனைப்புடன் வேலை பார்த்தார் எடிசன். அவ்வப்போது கை மேல் பலன் கிடைத்துக்கொண்டே இருந்தது.
தனியாக விடப்பட்ட டெஸ்லாவுக்கு ஜார்ஜால் உதவ முடியவில்லை. ஏனெனில், எடிசனுக்கு எதிராகச் செய்த பல முதலீடுகளால், அவருக்கும் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. வட்டிகூடச் சரியாகக் கட்ட முடியாமல் தடுமாறி வந்தார் ஜார்ஜ். பின்னர் சற்றே சுதாரித்துக்கொண்டார். டெஸ்லாவை, தக்க காலம் வரும்வரை, பொறுமை காக்கச் சொன்னார்.
எடிசனிடமிருந்து விலகிய 1885ஆம் ஆண்டுக்குப் பிறகான இரு ஆண்டுகள் டெஸ்லாவின் வாழ்வில் மோசமானவை. அப்போது எதிர்கொண்ட துயரங்களை ‘மாஸ்டர் ஆஃப் எலக்ட்ரிசிட்டி’ என்ற புத்தகத்தில் சிந்தியா ஏ. பார்க்கர் பின்வருமாறு பதிவு செய்கிறார்.
‘முதலீட்டாளர்களான ராபர்ட் லேன், பெஞ்சமின் வேல் இருவரையும் பயன்படுத்தி டெஸ்லாவின் முதல் நிறுவனமான ‘டெஸ்லா எலக்ட்ரிக் லைட் கம்பெனி’ கையகப்படுத்தப்பட்டது. எடிசனின் டிசி சார்ந்த தொழில்நுட்பத்தில் தன் திறன்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்கிற உண்மை கண்கூடாகத் தெரிந்த பின்னும், அது மக்களுக்குப் பயன் தருவதால் இருந்துவிட்டுப் போகட்டும் என்று பெருந்தன்மையுடன் அமைதியாக இருந்தார் டெஸ்லா. அவரது ஏசி மோட்டாரை, முழு வடிவில் தயாரிப்பதைப் பற்றி, அவர்கள் இருவரும் மற்ற முதலீட்டாளர்களும் கண்டுகொள்ளவேயில்லை. கம்பெனியில் இருந்து விரட்டப்பட்ட நிகோலா டெஸ்லாவுக்கு ஒரு சிறிய வேலைகூட கிடைக்கவில்லை.
‘பிறகு அவர், ஒரு நாளைக்கு இரண்டு டாலர்கள் வாங்கிக்கொண்டு, சாக்கடைகளைத் தோண்டும் பணியை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார். 1886 மற்றும் 1887ஆம் ஆண்டுகளை, ‘தீவிரமான தலைவலிகளையும் கசப்பான கண்ணீர்களையும் உள்ளடக்கிய நாட்கள்’ என்று அவரே குறிப்பிடுகிறார். தன் படிப்பு மற்றும் திறமையின் மீதே நம்பியற்றுப் போய், சுயகேள்விகள் கேட்டுக்கொண்டு திரியும் நிலைக்கு ஆளாக்கப்பட்டார் நிகோலா டெஸ்லா.’
ஆம், நியூ யார்க் நகரில், மிகக் கீழான ஒரு வாழ்நிலைக்கு டெஸ்லா தள்ளப்பட்டார். ஆயினும், நண்பர்களின் உதவியால், ஏதோ ஒரு பாடாவதி ஹோட்டல் அறைக்கும் உணவுக்கும் அவருக்கு பணம் கிடைத்து வந்தது. இன்னும் கொஞ்சம் தடுமாறியிருந்தால், அந்நகருக்கே ஒளியூட்டிய மனிதன், அதே தெருக்களில், பிச்சைக்காரன் போல் மாறிய அவலம் நிகழ்ந்திருக்கும்.
ஆனால் அந்த நிலையையும் தாண்டி வந்தார் டெஸ்லா. சாக்கடை தோண்டி வாழ்ந்த நிலையிலும் அவரது ஒரே குறி எப்படியேனும் ஏசி மோட்டார்களை உருவாக்கிவிட வேண்டும் என்பதாகவே இருந்தது. முதலீட்டாளர்களிடம் சென்று, ஒரு செய்முறை வடிவத்தை உருவாக்கிக் காட்டவேண்டும். அதற்காகவாவது கொஞ்சம் காசு சேர்த்துத் தன்னைத் தயார் செய்து கொள்ளவேண்டும் என்றுதான் அவர் எண்ணினார். வாழ்வின் மிக மோசமான ஒரு தருணத்தில்கூட அறிவியல் ஆய்வுதான் அவர் மனதை ஆக்கிரமித்திருந்தது. அது ஒன்றுதான் அவரை உயிர்ப்போடு வைத்திருந்தது என்றும் சொல்லலாம். அவர் வாழ்வில் இருள் நிரம்பியிருந்தபோதும், மக்களுக்கு எவ்வாறு மின்சார ஒளியூட்டலாம் என்பதில்தான் அவர் சிந்தனை கழிந்தது.
இன்று, அதி தொலைவில் இருந்து டவர்களின் மூலம் கொண்டு வரப்படும் மின்சாரம் என்பது அடிப்படைச் சேவையாக மாறிவிட்டது. குறைந்த கட்டணத்தில் நமக்கு மின்சாரம் கிடைக்கிறது. இந்நிலைக்கு டெஸ்லாவின் ஏசி கரண்ட் முறைதான் காரணம். இன்று நம்மில் பெரும்பாலோர் சார்ந்திருக்கும் டிவி ரிமோட் அவர் படைப்புதான்.
அவருடன் இருந்த நண்பர்கள் ஒன்று நொடித்துப் போய் இருந்தனர் அல்லது அவருக்கு எதிரானவர்களாக மாற்றப்பட்டிருந்தனர். இரண்டு வருடங்கள் மிகக் கடுமையான சூழலில் சிக்கியிருந்தார் டெஸ்லா. அந்நிலையிலும் தொடர்ந்து கைக்குக் கிடைத்த பொருள்களை வைத்து தனது ஆய்வுப் பணிகளை அவர் முன்னெடுத்து வந்தார்.
குப்பை பொறுக்குபவர் போல உடைந்த, பயன்படுத்தப்பட்ட சாதனங்களைச் சேகரித்து வைத்துக்கொண்டார். சில நண்பர்களுடைய இருப்பிடங்களிலோ அவர்களது வீடுகளுக்குப் பின்புறங்களிலோ ஆள் அரவம் இல்லாத ஒதுக்குப்புறங்களிலோ அல்லது தனது சிறிய ஹோட்டல் அறையிலோ இருந்தபடி பரிசோதனைகளை அவர் தொடர்ந்து வந்தார்.
‘நான் பட்ட கஷ்டங்கள் எனக்கு மிகப்பெரிய படிப்பினையைத் தந்தது. அனைவரையும் நம்பக் கூடாது, நம் செயலின் வளமே நமக்குச் சிறப்பு தரும் என்பன போன்ற பாடங்களைக் கற்றுக் கொண்டேன். சில நாட்களில் ஒரு வேளை உணவு மட்டுமே உண்டாலும் பணத்தைச் சேர்த்து புத்தகங்கள் வாங்கிப் படித்தேன். பழைய பொருட்கள் வாங்கி சேகரித்தேன். அவற்றிலேயே சிறுசிறு சாதனங்கள் செய்து குறைந்த விலைக்கு விற்றேன். என் ஏசி மோட்டாருக்கான ஆராய்ச்சியை நான் ஒருபோதும் கைவிடவேயில்லை.’
இவற்றையெல்லாம் கண்டும் காணாதது போல இருந்த எடிசன், டெஸ்லாவை அப்போதைக்கு விட்டுவிட்டு, ஜார்ஜின் மேலதிக முயற்சிகளை மேலும் முடமாக்கும் பணிகளில் கவனம் செலுத்தினார். டெஸ்லாவால் இனி எழவே முடியாது என்றும் அவருக்குப் பலத்த அடி விழுந்துவிட்டது என்றும் அவர் எண்ணினார். உண்மையில் அவர் டெஸ்லாவின் திறனையும் தன்னைம்பிக்கையையும் குறைத்து மதிப்பிட்டுவிட்டார்.
டெஸ்லாவின் கடின உழைப்பிற்குப் பலன் கிடைத்தது. வீதிகளில் உள்ள புதிய ‘ஆர்க் லாம்ப்’ ஒளியை மின் கடத்திகள்மூலம் வெகு தொலைவில் இருந்து கொண்டுவரும் மின் தொகுப்பு நிலையங்களை அமைக்க ஒரு திட்டம் தீட்டிவைத்தார். மின் காந்த அலை அறிவியலின் அடுத்தக் கட்டத்தை அவர் உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன் மூலம் இரு முதலீட்டாளர்களை அவரால் ஈர்க்கமுடிந்தது.
அந்த இருவரும் எடிசனின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சுயமாகச் செயல்படுபவர்களாக இருந்தனர். ஒருவர், ஆல்ஃபிரட் எஸ். பிரவுன். வெஸ்டர்ன் யூனியன் நிறுவனத்தை உருவாக்கிய தொழிலதிபர். இன்னொருவர், சார்லஸ் எஃப். பெக். நியூ யார்க் நகரின் ஆளுமைமிக்க மனிதர்களுள் ஒருவர். தொழில்முறை வழக்கறிஞரும்கூட.
இவர்களுக்கு முன்பு, தனது ‘எக் ஆஃப் கொலம்பஸ்’ என்ற மின்காந்த அலை அறிவியல் சார்ந்த ஒரு செய்முறை ஆராச்சியை நிகழ்த்திக் காட்டினார் டெஸ்லா. அதன்மூலம் ஏசி கரண்ட்டையும் உருவாக்கிக் காட்டினார். பிற்காலத்தில், இந்த முறை சார்ந்து அவர் உருவாக்கிய சாதனம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. எடிசனின் செயல்முறை அற்புதத்தைக் கண்ட இருவரும் ஆச்சர்யத்தில் உறைந்து போய்விட்டனர். ஏசியும் காந்த முறை மின்சாரமும் தான் இனி வருங்காலம் என்பதை அவர்களால் இப்போது புரிந்துகொள்ளமுடிந்தது.
‘ஏசி மோட்டார் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை உருவாக்க நாங்கள் உதவி புரிகிறோம். ஆனால் நீங்கள் இனி மிகக் கவனமாக இருக்க வேண்டும். அனைவருக்கும் நல்லவனாக யாராலும் இருக்க முடியாது. தொழில்முறை வெற்றித் தோல்விகளை நீங்கள் பிரதானப்படுத்த வேண்டும். உங்களுக்கு நம்பிக்கையான நபர்களை மட்டும் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். முதலீடுகளுக்கும் முயற்சிகளுக்குமான திட்டமிடுவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்’ என்று டெஸ்லாவுக்கு அவர்கள் அறிவுரை வழங்கினர். டெஸ்லா அவர்களுடைய சொற்களை ஏற்றுக்கொண்டார்.
அதன் பிறகு எடிசனுக்கு எதிராக எழுந்து நிற்க ஆரம்பித்தார் நிகோலா டெஸ்லா. டெஸ்லாவின் இரண்டாவது கம்பெனி உருவாகத் தொடங்கியது.
(தொடரும்)
நிகோலா டெஸ்லாவின் ரிமோட் கண்ட்ரோல் படகு. நியூ யார்க் நகரிலுள்ள ஹால் ஒப்பி அறிவியல் அருங்காட்சியகத்தில் ‘டெஸ்லாவின் மின்சார உலகம்’ என்னும் பிரத்தியேகப் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள படம்.