Skip to content
Home » நிகோலா டெஸ்லா #11 – கண்களின் ஒளி

நிகோலா டெஸ்லா #11 – கண்களின் ஒளி

எக் ஆஃப் கொலம்பஸ்

டெஸ்லாவின் கம்பெனியில் முதலீடு செய்ய பெரிய மனிதர்கள் இருவரும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தன் பணிகளைக் கவனமாகத் தொடங்கினார் டெஸ்லா. தன்னுடைய காப்புரிமங்கள் தொடர்பாக ஓர் ஒப்பந்தத்தைப் போட்டுக்கொள்ள அவர் முடிவெடுத்தார். அதன்படி காப்புரிமங்கள் யாவும் ஐம்பது-ஐம்பது சதவிகிதம் எனும் முறையில் தனக்கும் மற்ற இருவருக்கும் இடையில் பிரித்துக்கொள்ளப்படும். இருவரும் முதலீடு செய்யப் பணம் வழங்குவார்கள். இந்த யோசனை ஏற்கப்பட, ஒப்பந்தமும் தயாரானது.

இதற்காக ஏற்கெனவே தனது ஏசி கரெண்டின் சில காப்புரிமங்களைக் கைவசம் வைத்திருந்த ஜார்ஜின் உதவியை நாடினார் டெஸ்லா. எதிர்பார்த்தபடியே ஜார்ஜ் உதவிக்கரம் நீட்டினார். தனக்கு டெஸ்லா எழுதிக் கொடுத்திருந்த சில காப்புரிமங்களை, பணம் பெற்றுக்கொள்ளாமல் திருப்பிக் கொடுத்தார் ஜார்ஜ்.

‘இந்த மின்சாரப் போரில் உங்கள் பங்கு அளப்பரியது. என்னோடு சேர்ந்தும் தற்போது தனித்தும் களத்தில் நின்று போராடி வரும் உங்களுக்கு நான் இந்த உதவியை ஓர் அறிவியல் கடமையாகக் கருதி செய்கிறேன். இதன் பலன், வெகுஜன மக்களுக்குப் போய்ச் சேரட்டும்’ என்று பெருந்தன்மையோடு சொன்னார் ஜார்ஜ்.

முதலீட்டாளர்கள் ப்ரவுன், பெக் இருவரும் தூண் போல் நின்று உதவி செய்தனர். ப்ரவுன் நியூ யார்க்கின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான லிபர்டி தெருவில் 89ஆம் எண் கொண்ட கட்டடத்தில் டெஸ்லாவின் இரண்டாவது நிறுவனமான ‘டெஸ்லா எலெக்ட்ரிக் கம்பெனி’ என்னும் நிறுவனத்தைப் பதிவு செய்தார். அவரது முதல் நிறுவனத்தின் பெயர், ‘டெஸ்லா எலக்ட்ரிக் லைட் கம்பெனி’ என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம்.

ஏப்ரல் 1887ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் டெஸ்லாவின் அபரிமிதமான உழைப்பின் காரணமாக அம்மாத இறுதிக்குள்ளாகவே தனது முதல் காப்புரிமத்துக்குப் பதிவு செய்து சாதனை படைத்தது.

பிரவுன், பெக்கின் அறிவுரைப்படி தனக்கு மிகவும் நம்பிக்கையான நபர்களை மட்டும் அருகில் வைத்துக்கொள்ளும் பொருட்டு, தனது ஆத்ம நண்பரான அந்தோணி ஜிகெட்டியை மே மாதம் 10ஆம் தேதி ஐரோப்பாவில் இருந்து வரவழைத்தார் டெஸ்லா. டெஸ்லாவின் அலுவலகம், ஆய்வுக்கூடம் இரண்டும் ஒருசேர அமைந்திருந்த லிபர்டி தெரு கட்டடத்தில் உதவியாளர் பதவியில் அவ்வார இறுதிக்குளாகவே இணைந்து பணியாற்றத் தொடங்கிவிட்டார் ஜிகெட்டி.

தனது உருவத்தை சற்றே வயதான தோற்றம் கொண்ட ஒரு மனிதர் போல் உருமாற்றிக்கொண்டார் டெஸ்லா. ஏன் இப்படி என்பதற்கான விளக்கத்தை டெஸ்லாவே தருகிறார்.

‘ஒரு மனிதனைப் பற்றிய கதைகளும் புகழுரைகளும் அவன் செல்லும் இடத்திற்கு, அவனது பூத உடல் சென்றடையும் முன்பே சென்று சேர்ந்து விடுகின்றன. எடிசன் செல்லாத பல ஐரோப்பிய நாடுகளிலும் அவரைப் பற்றிய தகவல்கள் கதைகளாக உருமாறி சென்று சேர்ந்துள்ளன. 17ஆம் நூற்றாண்டில், நியூட்டனுக்கும் அப்படித்தான் நடந்தது. இப்போது 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் ஐன்ஸ்டைன், எடிசன், நான், மேரி க்யூரி என விஞ்ஞானிகள் அனைவருக்குமே அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

‘எனது இரண்டாவது நிறுவனம் துவங்கப்பட்ட பின்னர், நானும் என்னுடைய கொள்கைகளை இன்னும் சிரமேற்கொண்டு மக்களுக்குத் தெரியவைக்க வேண்டி முயற்சி மேற்கொண்டேன். அப்போது எனக்கு வெறும் 31 வயதுதான். ஆனால் அதற்கு ஒன்றிரண்டு ஆண்டுகள் முன்பிருந்தே நான் மீசை வைக்கப் பழகிக்கொண்டேன். இரு வருடங்கள் நான் பட்ட கஷ்டமும் ஒரு காரணம். முகச்சவரம் செய்யக்கூடப் பணமின்றித் திரிந்த நாள்கள் அவை. இருப்பினும், சுத்தத்தை விரும்பும் நான் அப்போதும் சுயமாக முழுச்சவரம் செய்துக்கொள்வதை நிறுத்தவில்லை.

‘ஆயினும், பிறகு என் மீசையைச் சற்று அடர்த்தியாக வைத்துக்கொண்டு, தலை வாரும் அமைப்பை, வகிடு எடுத்து ஒழுங்குபடுத்திக்கொண்டேன். அப்போது என்னுடைய தோழி ஒருத்தியும் என் நண்பர்கள் சிலரும் அந்த உருவ அமைப்பைப் பாராட்டினர்.

‘என்னைப் பற்றிய அசாத்தியக் கதைகள் பல அமெரிக்காவில் உலவிக் கொண்டிருந்தன. என்னை ஒரு மந்திரவாதி போலவும், மர்ம மனிதன் போலவும் சித்திரித்தனர்.

‘சில வருடங்களாக அவற்றையெல்லாம் மறுத்து வந்தேன். பிறகு கண்டுகொள்ள நேரம் கிடைக்கவில்லை. என் நிலை அப்படி. ஆனால் இத்தகைய கதைகள், 1890க்குள் பெருவலிமை பெற்று, இறக்கைகள் முளைத்துப் பறக்கத் தொடங்கிவிட்டன.

‘மின்னியல் துறையில், என் அறிவியல் ஆய்வுகள் சற்றுக் கடினமானவை, யாரும் செய்திடாதவை. சற்றே அபாயகரமானவை. அதிகப்படியான ஒளி அலைகள் மற்றும் ஒளி அலைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவையெல்லாமே உண்மைதான். ஆயினும், இவற்றை விஞ்சும் விதத்தில் வெளிவந்த சில கட்டுக்கதைகள் என் பெயரை எனக்கே தெரியாமல் பல இடங்களில் பரப்பிவிட்டிருந்தன.

‘நான் தெருக்களில் சுற்றித்திரிந்த நாட்களிலும், கஷ்ட காலங்களில் நண்பர்களைச் சந்திக்கச் சென்ற நாட்களிலும் என்னைப் பற்றி நான் யாரென்று அடையாளம் தெரியாமல் என்னிடமே கதை சொன்ன நபர்களும் உண்டு.

‘அதன்பின் என்னை நான் ஒழுங்குப்படுத்திக் கொண்டு, இத்தகைய கதைகளுக்குப் பொருந்தும் உருவமாய் என்னை மாற்றிக்கொண்டேன். வதந்திகளை என்னால் நிறுத்த முடியாது. எனவே, அவர்களுடைய எண்ணங்களுடன் சற்றே விளையாடினேன். அந்த விளையாட்டில் உண்மையும் உண்டு; நான் வாய்திறந்து சொல்லாத வதந்தி போன்ற பொய்களும் உண்டு.’

தன் பேச்சு முறையிலும் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார் டெஸ்லா. பள்ளி, கல்லூரி நாள்களில் எவ்வாறு ஆசிரியர்களை ஆதாரத்துடன் எதிர்கொண்டு நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்டாரோ அதே போன்ற பாணியைத் தன் எதிராளிகளிடத்திலும் கடைபிடிக்கத் தொடங்கினார்.

தன்னைப் பேட்டி எடுக்க வரும் பத்திரிக்கையாளர், தன்னைச் சந்திக்க வரும் விஞ்ஞானிகள், நண்பர்கள், அலுவல் சார்ந்த கூட்டங்கள் என்று அனைத்து இடங்களிலும் மனிதர்களை நேருக்கு நேராக அவர்கள் கண்களைப் பார்த்து பதில் சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். இந்த உத்தி கை மேல் பலன் அளித்தது. அவரைப் பார்த்துப் பேசிய பலரும் அவரது கண்களில் தெரிந்த அதீத ஒளியைக் கண்டு சற்றே தடுமாற்றம் அடைந்ததாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

அவரது அமைதியான, சிரித்த, மகிழ்ச்சியான முகம் ஜார்ஜ், அந்தோணி, சில நெருங்கிய தோழிகள் ஆகியோரிடத்தில் மட்டும் வெளிப்பட்டது. இத்தகைய மாற்றங்கள் முதலீட்டாளர்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. அவரது கம்பெனி ஏசி மோட்டார்களைத் தயாரிக்கும் பணியில் வேகம் காணத் தொடங்கியது.

1887ஆம் ஆண்டில் மட்டும் 30 காப்புரிமங்கள் பதிவு செய்தார் நிகோலா டெஸ்லா. ஏசி கரெண்டை பாலிஃபேஸ் மோட்டார்கள், டைனமோக்கள், டிரான்ஸ்பார்மர்களின் உதவியுடன் கொண்டு வரும் வகையில் ஒரு முழுமையான திட்டத்தை வடிவமைத்து விரிவுபடுத்தினார்.

ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் டெஸ்லாவின் ஏசி கரெண்ட் முறையில் தனது மிகப்பெரிய முதலீட்டை 1887ஆம் ஆண்டில்தான் செய்தார் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் டெஸ்லா வேலையைவிட்ட 1885ஆம் ஆண்டிலிருந்தே அவர்கள் இருவரும் இணைந்து செயல்பட ஆரம்பித்துவிட்டனர் என்பது வேறு சில தகவல்களின் வழி உறுதியாகிறது. அது அறிவியல் உலகிற்கும் தெரிந்துதான் இருந்தது என்பதை டெஸ்லாவின் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன.

1885 முதல் 87 வரை ஜார்ஜும் நிறையவே சிரமப்பட்டார். எனவே, இவர்கள் இருவரும், இரண்டாண்டுகள் கழித்து, 1887இல் மறுபடியும் மிகப்பெரிய அளவிலான முதலீட்டின்மூலம் ஒன்றிணைந்தனர் என்பதே உண்மை. ஆனால் அதற்குமுன், டெஸ்லா வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சொற்பொழிவை அமெரிக்க விஞ்ஞானிகள் மத்தியில் வழங்கினார்.

‘ஏசி கரெண்ட் மற்றும் டிரான்ஸ்பார்மர்களின் புதிய முறை மின்சார வடிவமைப்பு’ என்ற பெயரில் அவர் ‘அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எலக்ட்ரிக்கல் என்ஜினீயர்ஸ்’ அமைப்பில் உரையாற்றினார். இந்த உரை, அமெரிக்க மின்சார வரலாற்றில் மிக முக்கியமானதொன்றாகப் பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 82 நிமிடங்கள் உரையாற்றிய டெஸ்லா தனது படைப்புகளையும், ஆராய்ச்சிகளையும் விரிவாக விளக்கியதைக் கண்டு அறிவியல் உலகம் அதிசயித்தது.

இங்கு நாம் ‘எக் ஆஃப் கொலம்பஸ்’ செய்முறையைப் பார்ப்போம். இசைத்தட்டு போன்ற வட்டமான, சுற்றிக்கொண்டிருக்கும் ஓர் உருளை வடிவ காந்தப் புலன் வட்டத்தின் நடுப்பகுதியில் இன்டக்ஷன் மோட்டார்களின் உதவியுடன் தாமிரத்தில் செய்யப்பட்ட முட்டை ஒன்றை அதன் கூர் முனை கீழே வருமாறு, ஏசி கரெண்ட் செலுத்தி, நேராக நிற்க வைப்பதுதான் இதன் அடிப்படை.

இதனைச் செயல்முறையில் காட்டிதான் டெஸ்லா தனது இரண்டாவது நிறுவனத்துக்கான முதலீட்டைப் பெற்றார் என்பதை நாம் ஏற்கெனவே பார்த்தோம். இந்தச் சாதனம் தற்போதும் நியூ யார்க் நகரின் அறிவியல் அருங்காட்சியகத்தில் டெஸ்லாவுக்கென உருவாக்கப்பட்ட தனிப்பிரிவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

அந்த உரையை முடித்த அடுத்த நான்கைந்து மாதங்களில் நிகோலா டெஸ்லா அசுர வேகம் எடுத்தார். தனது லிபர்டி தெருவில் இருந்த ஆய்வகத்தில் அதிக அதிர்வெண்கள் பற்றிய ஆராய்ச்சிகள் மற்றும் சாதனங்களை இன்னும் ஆழமாகச் செய்யத் தொடங்கினார். 1887ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில், மேலும் பத்து காப்புரிமங்கள் பதிவு செய்து அவ்வருடத்தின் தனது கணக்கை, நாற்பதாக உயர்த்திக் காட்டினார் டெஸ்லா.

‘என் கடுமையான உழைப்பே எனக்குக் கைகொடுத்தது. நானும், ஜார்ஜும் மீண்டும் ஒன்றிணைய நேரம் வந்துவிட்டது’ என்கிறார் டெஸ்லா. அவருடைய புதிய காப்புரிமங்கள், ஆராய்ச்சிகள் மற்றும் உரைகளைக் கண்ட ஜார்ஜ், இம்முறை டெஸ்லாவை முழு அளவில் நம்பி இறங்கினால் ஏசியைக் கொண்டு வந்து டிசியை ஓரங்கட்டி எடிசனைத் தோற்கடித்து விடலாம் என்பதை உறுதியாகக் கண்டார்.

தன்னிடம் நேரடியாக வேலை செய்ய டெஸ்லாவுக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பை வழங்கினார் ஜார்ஜ். அப்போது அவரும் தனது பணப் பிரச்னைகளை முழுவதுமாகத் தீர்த்திருந்தார்.

அவரது ஏசி கரெண்டின் பாலிஃபேஸ் மோட்டாரின் காப்புரிமத்தை டெஸ்லா ஜார்ஜிடம் விற்றார். $25,000 ரொக்கமாகவும் $50,000 பணப் பத்திரங்களாகவும் அவர்கள் முன்பு போட்ட ஒப்பந்தப்படி அதே $2.50 ராயல்டியும் முடிவு செய்யப்பட்டன. இதன் பிறகுதான், டிசி கரெண்ட் முறைக்கு மிகப் பெரிய அடியைக் கொடுத்தது இந்தக் கூட்டணி.

வயர்களின் வழியே அதிக வோல்டேஜ் மின்சாரத்தைக் கடத்தும் முறையில் உள்ள குறைபாடுகளை, வயர்கள், மின்சாரத் தடங்கள், பிரத்தியேக ஏசி டிரான்ஸ்பார்மர்கள் ஆகியவற்றின் உதவியுடன் வெற்றிகரமாகச் சரி செய்தார் டெஸ்லா.

அதன் விளைவாக, தனது டிரான்ஸ்பார்மர்களின் மூலம் விநியோகிக்கப்படும் மின்சாரத்தின் அளவைக் கூட்டவும் குறைக்கவும் ஒரு வடிவமைப்பை அதில் சேர்த்தார். இந்த வசதி, எடிசனின் டிசி டிரான்ஸ்பார்மர்களில் இல்லாத ஒன்று. இந்தக் கண்டுபிடிப்புதான் இன்று வரை நமது மின்சாரப் பொது விநியோக டிரான்ஸ்பார்மர்களின் அடிப்படையாக உள்ளது.

இதற்குப் பிறகுதான் இன்னும் ஆழமான, உயரிய வடிவமைப்பான வார்டன்கிளிஃப் டவரின் வடிவமைப்பு டெஸ்லாவின் மூளையில் உதித்தது. இவர்களது எதிர்பாராத வளர்ச்சியைக் கண்டு ஆடிபோனார் எடிசன்.

(தொடரும்)

படம் : வேலை செய்யாத நிலையில் டெஸ்லாவின் ‘எக் ஆஃப் கொலம்பஸ்’ சாதனம்.

பகிர:
ராம் குமார் சுந்தரம்

ராம் குமார் சுந்தரம்

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதுபவர். மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார். ஒரு கவிதைத் தொகுப்பு, ஓர் அறிவியல் புனை கதை தொகுப்பு ஆகியவற்றை ஆங்கிலத்திலும் தமிழில் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். இவருடைய பிரதிலிபி பக்கம் : https://pratilipi.page.link/8Hga6Dwpr4kdmqy99 தொடர்புக்கு : rksthewriter@gmail.comView Author posts

2 thoughts on “நிகோலா டெஸ்லா #11 – கண்களின் ஒளி”

  1. Vijayalakshmi Elumalai

    அற்புதம்… டெஸ்லா வின் வாழ்கை பயணத்தில் நானும் பயணித்தது போன்று ஒரு மகிழ்ச்சி… டெஸ்லாவுக்கு ஒரு Royal Salute வைக்க வேண்டும்…அருமையான அத்தியாயம்…

    1. Ram Kumar Sundaram

      தங்களைப் போன்ற அறிவியல் ஆர்வம் கொண்ட வாசகர்களை, நிகோலா டெஸ்லாவின் வாழ்வியலோடு பயணிக்க வைப்பதே, எங்கள் தொடரின் நோக்கம். அதனை நீங்கள் உணர்ந்து, ஆதரவு தெரிவித்து, பின்னூட்டம் இட்டமைக்கு, என்னுடைய பணிவான நன்றிகள் விஜி மேடம்! 😊🙏🏼

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *