நாம் கடந்த அத்தியாயத்தில் பார்த்த நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள நியூ யார்க், சுற்றுவட்டாரப் பகுதிகளான நியூ ஜெர்சி, மன்ஹாட்டன், சுற்றியிருந்த மாகாணங்கள் ஆகியவற்றுக்கு டெஸ்லா சென்று வந்தார். மாநிலங்கள் என்று நாம் அழைப்பதைத்தான் அமெரிக்க ஒன்றியத்தில் மாகாணங்கள் என்று அழைப்பர். மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன.
இதில் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள தொழில் நகரான பிட்ஸ்பர்க் நகருக்கு ஜார்ஜின் அழைப்பை ஏற்று, அவருக்காக பாலிஃபேஸ் மோட்டாரை மெருகேற்றித் தயாரிக்கச் சென்றார் டெஸ்லா. அதற்காக, அங்கேயே சுமார் ஒரு வருட காலம் தங்கினார். அதாவது கிட்டதட்ட 1889 ஆம் ஆண்டின் மத்தியப் பகுதி வரை. இந்த இடைப்பட்ட காலத்தில், மின்சாரப் போர் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்றது. அது காலமே தன்னை மெருகேற்றிக்கொள்வது போலிருந்தது என்று அலெக்ஸ் லீச் எனும் மின்னியல் ஆய்வாளர் 1970களில் குறிப்பிடுகிறார்.
விளக்குகள், மோட்டார்கள் போன்றவை பயன்படுத்தும் அதே மின்னழுத்தத்தில் எடிசனின் நேரடி மின்னோட்ட அமைப்பு மின்சார சக்தியை விநியோகித்தது. விநியோகத்திற்குப் பெரிய, விலையுயர்ந்த கம்பிகள், உற்பத்தி ஆலைகள் ஆகியவற்றை டெஸ்லாவும் ஜார்ஜும் அமைத்தனர்.
இதற்கிடையில் டெஸ்லாவின் நடைமுறையால் மின்மாற்றியின் வளர்ச்சியுடன் மாற்று மின்னோட்ட சக்தியை, சிறிய கம்பிகளில் இருந்து, நீண்ட தூரத்திற்கு அனுப்ப முடியும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
பாலிஃபேஸ் முறையில், மின்னழுத்தம் குறைக்கப்பட்டு, நுகர்வோரால் பயன்படுத்தப்படலாம் என்பதைக் கண்களால் கண்ட ஜார்ஜ் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏசி உற்பத்தி நிலையங்கள் பெரியதாகவும், செயல்பட மலிவானதாகவும், மின்சாரம் குறைந்த செலவாகவும் இருந்தது. ஏசி, டிசி ஆகிய இரண்டு அமைப்புகளும் காப்புரிமைகளால் பாதுகாக்கப்பட்டன.
டெஸ்லாவுக்கு உதவி செய்து வந்தாலும் தனது சொந்த கம்பெனியான வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் கம்பெனியை ஜார்ஜ் இன்னமும் முழுதாக மூடவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
மிக விரைவாக, இது வெஸ்டிங்ஹவுஸ்-டெஸ்லா மற்றும் எடிசன் இடையேயான வணிகப் போட்டியாக மாறத் துவங்கியது. ஆனால், வெஸ்டிங்ஹவுஸ், டெஸ்லா இருவரும் நல்ல விதமான போட்டி மனப்பான்மையுடன் தொழில் செய்தனரே தவிர, எடிசனைப் போல், ஒருவரை வீழ்த்திவிட்டு வாழ விரும்பவில்லை.
சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால், டெஸ்லா தனது கம்பெனிக்காகவும் உழைத்தார், நண்பர் ஜார்ஜின் நிறுவனத்திற்காகவும் உழைத்தார். தனது முதலீட்டாளர்களுடன் கையெழுத்திட்ட வெவ்வேறு வர்த்தக ஒப்பந்தங்களுக்குத் தகுந்தவாறு அவரும் அந்தோணியும் மின்னியல் விஞ்ஞான சேவைகளையும் புதிய சாதனங்களையும் கட்டடங்கள், ரயில் பாதைகள், அரசாங்க அலுவலகங்கள், ராணுவம் ஆகிய துறைகளின் மின்கடத்தி ஒப்பந்தங்கள் மற்றும் பழுது பார்க்கும் ஒப்பந்தங்கள் ஆகியவற்றையும் பெறத் துவங்கினர்.
இது போல் டெஸ்லாவால் பலன் பெறுவதற்காகவே உறுமீன் வருவதைப் போல் காத்திருந்த ஜார்ஜ், இதனை வைத்து சமுதாயத்தில் இன்னும் பலம், பெயர், புகழ், பணம் ஆகியவற்றைப் பெறத் துவங்கினார். அதற்கு டெஸ்லாவையே தான் போட்டிருந்த ஒப்பந்தப்படி வேலை செய்ய வைத்தார். ஆனால், மிகவும் சமயோசிதமாக அனைத்து லாபத்தையும், தன் கம்பெனியின் வளர்ச்சிக்குத் திருப்பிவிட்டார் ஜார்ஜ். அவர் டெஸ்லாவை ஏமாற்றினார் என்பதல்ல இதன் பொருள். மாறாக, இருவரையுமே தனித்தனியாக பலம் கொள்ள வைக்கும் வகையில்தான், அவரது இந்நடவடிக்கை அமைந்திருந்தது.
இவையெல்லாம் 1888 மற்றும் 1889 ஆம் ஆண்டுகளில் நடந்தன. 1889ஆம் ஆண்டில் நடந்த, மேலும் ஐந்து முக்கிய சம்பவங்களைப் பார்ப்போம்.
முதலாவதாக, ‘யூனிவெர்சல் எக்ஸ்போசிஷன்’ என்று, இன்றைய துபாய் எக்ஸ்போவுக்கு இணையாக அன்று ஐரோப்பாவில் ஓர் அறிவியல் சந்திப்பு நடந்தது. அதே சந்திப்பின் நீட்சியாகத்தான் பாரிஸ் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற, ஐபிஃள் டவரின் (Eiffel Tower) திறப்புவிழா நடந்தது. தேதி, மார்ச் 31, 1889. டெஸ்லாவின் பெயர் உலகெங்கிலும் ஒலிக்கத் தொடங்கியது இவ்விரு நிகழ்வுகளில் இருந்துதான்.
இரண்டாவதாக, பேராசிரியர் வில்லியம் பெர்கென்ஸ் என்கிற இயற்பியல் ஆய்வாளரை டெஸ்லா சந்தித்தார். ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் உள்ள புகழ்பெற்ற ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் பெர்கென்ஸ் அப்போது பணியாற்றி வந்தார். ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்ற ஹெர்ட்ஸ் அளவீட்டைக் கொண்டு வந்தவரின் ஆய்வுகள்மீது அவர் கவனம் இருந்தது. தனது பணியை டெஸ்லாவை விட்டுப் பார்வையிடச் செய்தார் பெர்கென்ஸ். காற்றையும் அதிர்வெண்களையும் மாற்றி மாற்றி வரச் செய்யும் ஆசிலேட்டர் எனப்படும் ஊசலாட்டியையும் அவர் டெஸ்லாவுக்குக் காண்பித்து, அவர் கருத்துகளைக் கேட்டுக்கொண்டார்.
மூன்றாவதாக, டெஸ்லா தன்னுடைய சொந்த ஆஸ்திரியப் பேரரசுப் பகுதிகளுக்கு மீண்டும் சென்று வந்தார். தனது அம்மா ஜீகா, அக்காக்கள், தங்கை, மாமன்கள், பால்ய நண்பர்கள், ஆசிரியர்கள், தந்தைக்கு வேண்டப்பட்டோர் என அனைவரையும் சந்தித்தார். புகழ்பெற்ற விஞ்ஞானியாக டெஸ்லா திரும்பி வந்தது அவர்கள் நாட்டையே பெருமைக்குள்ளாக்கியது. தன் பால்ய காலத்திலும், இளமையிலும் ஓடியாடிய அனைத்துப் பகுதிகளையும் 33ஆம் வயதில் மீண்டும் ஒருமுறை கண்டு களித்தார். அதன் பின்னரே நியூ யார்க் திரும்பினார்.
நான்காவதாக, லிபெர்டி தெருவுக்குப் பக்கத்திலுள்ள கிராண்ட் அவென்யூவின் கதவெண் 175 இல் இன்னொரு சிறிய ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவினார். இதனைப் பற்றிய உள்ளார்ந்த தகவல்களில் அவர் அதிகம் ரகசியங்கள் காத்தார். அவரையும் அந்தோணியையும் தவிர, வேறு யாருக்கும் அந்தப் புதிய பரிசோதனைக்கூடம் பற்றிய தகவல்கள் தெரியாவண்ணம் பார்த்துக்கொண்டார்.
இங்குதான் அவர் உயர் அதிர்வெண் உருவாக்கும் கருவி, வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பம் மற்றும் மின்காந்த கதிர்வீச்சு, ஒளிக்குவியல் இடையேயான தொடர்பு ஆகிய முக்கிய அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடத் துவங்கினார்.
ஐந்தாவதாக, நியூ யார்க் திரும்ப வந்ததும், தனது செல்வத்தையும் செல்வாக்கையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாக, ‘அஸ்டோர் ஹவுஸ்’ என்ற ஐந்தடுக்கு சொகுசு ஓட்டல் ஒன்றில் சகல வசதிகள் கொண்ட அறைக்குக் குடிபெயர்ந்தார் டெஸ்லா. நியூ யார்க் நகரின் இதயப்பகுதியில் மிகப் பெரும் செல்வந்தர்கள் வாழும் பகுதியில், ‘ட்ராலி லைன்’ என்று அழைக்கப்படும் ட்ராம் வண்டிகளின் போக்குவரத்துடன் 1889லேயே அப்பகுதி ஜொலித்தது. இதே ட்ராம் தொழில்நுட்பம்தான், பின்னர் ஆசியாவில் முதன்முறையாக 1902ஆம் ஆண்டு கொல்கத்தா நகரில் துவங்கப்பட்டது.
டெஸ்லாவின் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி, வெஸ்டிங்ஹவுஸ் எடிசனுக்கு எதிராக முழு அளவிலான தொழில்துறை போரைத் தொடங்கினார். அப்போது, நிதித்துறையின் சீரிய கண் கொண்டு பார்த்தால், அமெரிக்காவின் தொழில்துறை வளர்ச்சியின் எதிர்காலம், சற்றே ஆபத்தில் இருந்தது.
இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு, சர்வ வல்லமை வாய்ந்த எடிசன் சும்மாயிருப்பாரா? குத்துச்சண்டையின் மூன்றாம் சுற்றைப் போல, 1890ஆம் ஆண்டில் இருந்து தனது அடுத்தகட்ட அதிரடித் தாக்குதலைத் துவங்கினார். அவற்றை விரிவாகப் பார்க்கும் முன்னர், அதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் காண்போம்.
மார்க்கெட்டிங்கில் நிபுணராக இருந்தவர் எடிசன் என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம். அதே உத்தியை, இம்முறை வடிவம் மாற்றிக் கையில் எடுத்தார். தனது டிசி பவர்தான் நாட்டுக்குச் சிறந்தது என்றும், ஏசி அல்லது வேறு புதிய மாற்று மின்னோட்டங்கள் மிகவும் ஆபத்தானவை என்றும் நிரூபிக்க ஒரு விளம்பரப் பிரசாரத்தைத் தொடங்கினார்.
எடிசன் ஒரு மரண தண்டனைக் கைதியை ஏசி மின்சார நாற்காலியில் மரண தண்டனை அளிக்க ஏற்பாடு செய்தார். எடிசனின் கூட்டாளிகள் அருகிலுள்ள பூனைகள் மற்றும் நாய்களைக் கடத்தி டெஸ்லாவின் ஏசி மாற்று மின்னோட்டத்தைப் பயன்படுத்தி அவற்றைப் பொதுவெளியில் மின்சாரம் தாக்கச் செய்து, அவை மரணமடைவதை ஒரு தெருக்கூத்து போல் காட்டி, மக்களைப் பீதி கொள்ளச் செய்தனர்.
உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசனா இப்படிச் செய்தார் என்று இதனைப் படிப்போருக்குத் தோன்றலாம். இவையெல்லாம் விரிவாகப் பலரால் பதிவு செய்யப்பட்ட செய்திகள்தான். 2011இல் மார்கரெட் செனி என்பவர் எழுதிய ‘டெஸ்லா: மேன் அவுட் ஆஃப் டைம்’ என்கிற புத்தகத்திலும் 2013இல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக பெர்னார்ட் கார்ல்சன் என்கிற ஆய்வாளர் எழுதிய ‘டெஸ்லா: இன்வெண்டர் ஆஃப் எலக்ட்ரிக்கல் ஏஜ்’ என்கிற புத்தகத்திலும் இந்நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன. மேலும், 1885 முதல் 1891 வரையிலான பல்வேறு பத்திரிகை செய்திகளிலும் 25க்கும் மேற்பட்ட இணையதள அறிவியல் கட்டுரைக் குறிப்புகளிலும்கூட இவை இடம்பெற்றுள்ளன.
1889இல் ஐபிஃள் டவர் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் 1890இல் நடந்த எடிசனின் கொடூர பொதுவெளிச் சோதனைகளைப் பற்றி, அடுத்த அத்தியாயத்தில், இன்னும் விரிவாகக் காணலாம்.
(தொடரும்)
படம்: ஐபிஃள் டவரின் திறப்புவிழாவை ஒட்டி நடந்த, ‘யுனிவெர்சல் எக்ஸ்போசிஷன்’ கண்காட்சி நடந்த இடம். 1889 ஆண்டு மார்ச் 31ஆம் தேதி.