கலையில் சிறந்தவன் கலைஞன், கவியில் சிறந்தவன் கவிஞன் என்பதுபோல் அலையில் சிறந்த டெஸ்லாவை ‘அலைஞன்’ என்னும் புதிய சொல்கொண்டு அழைக்கமுடியும்.
டெஸ்லாவைப் பொறுத்தவரை, அலை என்று சொன்னால் அது அலை அறிவியலைத்தான் குறிக்கும். கடல் அலை, காற்றில் அலைவது, இலக்கின்றி பயணப்படுவது என அனைத்துமே ‘அலை’ தான். அதுவே ஒரு பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் விளங்குகிறது.
டெஸ்லாவின் வாழ்வில், அவர் செய்த முக்கியமான ஆராய்ச்சிகள் அனைத்தும் மின் காந்த அலை அறிவியல் சக்தியை அடிப்படையாகக் கொண்டவைதான். நாம் தற்போது பார்த்துவரும் அவரது வாழ்க்கை நிகழ்வுகளில், இவை சார்ந்த ஆராய்ச்சிகள்தான் பிரம்மாண்டமாகவும், இன்றைய புதிய மின்சார சக்தி உலகை நிறுவியதற்கு அடிப்படையாகவும் உள்ளன.
இந்தப் பகுதியிலிருந்து, அதாவது இப்போது நாம் பார்க்கப் போகும் 1891 ஆம் ஆண்டு முதல், அவரது வாழ்வின் இறுதி நாட்கள்வரை, அவரது அறிவியல் ஆராய்ச்சியில், மின்சார அலை அறிவியல் சார்ந்த தகவல்களே அதிகம் இடம்பெற்றுள்ளன.
1891ஆம் ஆண்டு, நிகோலா டெஸ்லாவின் வாழ்வில், பல்வேறு திருப்பங்களைக் கொண்டுவந்த ஆண்டு. அவ்வாண்டில்தான் அதிசயிக்கத்தக்க, முக்கியமான சம்பவங்கள் சில நடந்தேறின.
1889ஆம் ஆண்டு, ஈபிள் டவர் திறப்புவிழாவில் அவர் சந்தித்த விஞ்ஞானிகளும், அவர் பார்த்த செயல்முறைகளும் 1891ஆம் ஆண்டு அவர் செய்த சாதனைகளுக்குப் பெரிதும் உதவின. அவற்றை வரிசையாகப் பார்ப்போம்.
மே 20, 1891: ‘அதிக அதிர்வெண்கள் கொண்ட மாற்று மின்னோட்டத்தின் பரிசோதனைகளும் மற்றும் அவற்றைக் கொண்டு செயற்கையாக ஒளியூட்டும் முறைகளும்!’ என்ற தலைப்பில், இரண்டாம் முறையாக, அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர்ஸ் (AIEE) அமைப்பைச் சார்ந்தோர் முன், நியூ யார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகக் கட்டடத்தில் மிகப்பெரிய நிகழ்வொன்றில், உரையாற்றினார்.
இம்முறை கிட்டத்தட்ட 75 நிமிட உரை, பிறகு 30 நிமிடங்கள் அவை சார்ந்த விளக்கங்கள் என ஓர் அறிவியல் விளக்கக்கண்காட்சியே நடத்திக் காட்டிவிட்டார். பல வயர்லெஸ் சாதனங்களை அங்கேயே கொண்டு வந்து அவர் செயல்முறைப்படுத்திக் காட்டிய விதம் எடிசன் மட்டுமல்லாமல் அவருடைய பல சமகால விஞ்ஞானிகளையும் வாயடைக்கச் செய்தது.
அப்போது அப்பல்கலையில் படித்த மாணவர்கள் சிலர் தாங்கள் இது போன்றதொரு உரையைக் கேட்க நேர்ந்ததையே ஓர் அதிசயம் போல் பேசிக்கொண்டதாகப் பல்வேறு பத்திரிகை செய்திகள் பதிவு செய்கின்றன.
வயர்லெஸ் தகவல் தொடர்புப் பரிமாற்றம் மற்றும் மின் அலைகளின் வழியே செய்தி மற்றும் டேட்டாவைக் கொண்டு சேர்க்கும் ஆராய்ச்சிகளுக்கு நிகோலா டெஸ்லாவின் இந்த உரை ஒரு மைல்கல்லாக அமைந்தது.
ஜூன் 21, 1891: அமெரிக்காவின் கொலோராடோ மாகாணத்தில் உள்ள ‘ஏமஸ் பவர் பிளாண்ட்’ (மின்சக்தி உற்பத்தி நிலையம்) செயல்பாட்டிற்கு வந்த தினம். அப்படி அதற்கு என்ன சிறப்பு?
ஒன்றா, இரண்டா? அதன் சிறப்புகளை விவரிக்கத் தனி கட்டுரைகளையே எழுதலாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் தண்ணீரைப் பயன்படுத்தி, சக்தி வடிவங்களை உருவாக்கி வருகின்றனர். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் கோதுமையை மாவாக அரைக்க நீர் சக்கரங்களைப் பயன்படுத்தினர்.
அதே நேரத்தில், எகிப்தியர்கள் கிமு மூன்றாம் நூற்றாண்டில் நீர்ப்பாசனத்திற்காக, ஆர்க்கிமிடிஸ் தயாரித்த நீர்த் திருகுகளைப் பயன்படுத்தினர். நவீன நீர்மின் விசையாழியின் பரிணாமம் 1700களின் நடுப்பகுதியில், பிரெஞ்சு ஹைட்ராலிக் மற்றும் ராணுவப் பொறியாளர் பெர்னார்ட் ஃபாரஸ்ட் டி பெலிடோர் என்பவர் அற்புதமான ஹைட்ராலிக் சக்தியைப் பற்றி விரிவாக எழுதினார்.
1880ஆம் ஆண்டில், மிச்சிகனில் உள்ள கிராண்ட் ரேபிட்ஸில் உள்ள ஒரு தியேட்டர் மற்றும் கடை முகப்பில், இரண்டு கடத்திகள் இடையே காற்றில் ஒரு மின்சார தீப்பொறி ஒளியை உருவாக்கும் ஒரு நுட்பத்தை வழங்குவதற்கு நீர் விசையாழியால் இயக்கப்படும் டைனமோ பயன்படுத்தப்பட்டது.
1881 ஆம் ஆண்டில் ஒரு மாவு ஆலையில் விசையாழியுடன் இணைக்கப்பட்ட டைனமோ நியூயார்க்கின் நயாகரா நீர்வீழ்ச்சியில் தெரு விளக்குகளை வழங்கியது. இவை இரண்டும் நேரடி மின்னோட்டம் (எடிசனின் டிசி கரண்ட்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது.
ஏசி எனப்படும் மாற்று மின்னோட்டத்தின் முன்னேற்றம் இன்று பயன்படுத்தப்படும் முறையில் மின்சாரத்தை அதிக தூரத்திற்கு கடத்த அனுமதிக்கப்பட்டு 1893 இல் கலிபோர்னியாவில் உள்ள ரெட்லேண்ட்ஸ் பவர் பிளாண்டில் ஒரு மாற்று மின்னோட்ட நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டது என்று தரவுகள் கூறுகின்றன.
ஆனால், இங்குதான் வரலாறு சற்றே மறைக்கப்பட்டுள்ளது. ரெட்லேண்ட்ஸ் மின் நிலையத்திற்கு முன்பாகவே, வெஸ்டிங்ஹவுஸ் எலெக்ட்ரிக் கம்பெனி, நிகோலா டெஸ்லாவின் உதவியுடன், ஏசி கரண்டில் இயங்கும் முதல் நீரலை மின்சார உற்பத்தி நிலையத்தை நிறுவி, சாதனை படைத்தது.
ஏசியில் இயங்கும் ஏமஸ் நீர்மின் உற்பத்தி நிலையத்தை, ஜார்ஜின் கம்பெனி ஏற்றுக்கொண்டது. அதனை நிறுவுவதற்காக, டெஸ்லா இரவுபகல் பாராது வேலை செய்தார்.
கொலராடோவின் ஓஃபிர் அருகே அமைந்துள்ள அமெஸ் நீர்மின்சார உற்பத்தி ஆலை, தொழில்துறை பயன்பாட்டிற்காக மாற்று மின்னோட்ட (ஏசி) மின்சாரத்தை உற்பத்தி செய்து அனுப்பிய, உலகின் முதல் வணிக அமைப்பாகும். இது இப்போது IEEE சாதனைகளின் பட்டியலில் உள்ளது. AIEE என்ற அமெரிக்க எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயர்களின் கூட்டமைப்புதான், IRE (Institute of Radio Engineers) என்ற அமைப்புடன் ஒன்றிணைந்து, இன்று நம் அனைவருக்கும் அறிந்த IEEE என்ற அமைப்பாக 1963இல் உருமாற்றம் பெற்றது.
1890 கோடையில் வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிலையத்தின் ஜெனரேட்டர் மற்றும் மோட்டார்களை, இந்த மின்நிலையத்தை நிறுவ வழங்கியது. அவை குளிர்காலத்தில் நிறுவப்பட்டன. மேலும் 1891 வசந்த காலத்தில் இருந்து, கோல்ட் கிங் சுரங்கத்தில் மோட்டார் மூலம் இயக்கப்படும் முத்திரை ஆலைக்கு 2.6 மைல்கள் (4.2 கிமீ) கடத்தப்பட்ட மாற்று மின்னோட்ட மின்சாரம் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் ஆலை, அதன் தற்போதைய நீராவி ஆலைக்கு வரக்கூடிய மர எரிபொருளின் பற்றாக்குறையால் மூடப்படும் அபாயத்தில் இருந்தது. ஏசி மின் உற்பத்தி நிலைய முயற்சிக்கு எல்.எல். நன் என்ற வழக்கறிஞர்தான் நிதியளித்தார். அவர்தான் கோல்ட் கிங் சுரங்கத்தின் நிர்வாகியுமாவார்.
அதன் ஜெனரேட்டர் 320-அடி (98 மீ) தலையின் கீழ் ஆறடி பெல்டன் சக்கரத்தால் இயக்கப்படுகிறது. அதில் 100 குதிரைத்திறன் கொண்ட (75 kW) வெஸ்டிங்ஹவுஸ் சிங்கிள்-பேஸ் ஜெனரேட்டரான அது, 3000 வோல்ட், 133 ஹெர்ட்ஸ், சிங்கிள்-பேஸ் ஏசியில் மின்சாரம் உற்பத்தி செய்தது.
வோல்ட்மீட்டர்கள் மற்றும் அத்தகைய மீட்டர்கள் கொண்டு சோலனாய்டு மற்றும் ஈர்ப்பு சமநிலை வகைபடுத்தி இம்முறை செயல்படுத்தப்பட்டது. டிரான்ஸ்மிஷன் லைன் எனப்படும் மின் கடத்தி வழியானது, இரண்டு வெற்று செப்பு கம்பிகளைச் சுமந்து செல்லும் இன்சுலேட்டர்களுடன் கட்டப்பட்டது.
5 சதவிகிதத்துக்கும் குறைவான சக்தி இழப்பில், இரண்டு மைல்கள் மின்சாரம் (3 கிமீ) கடத்தப்பட்டதால் ஏசி மாற்று மின்னோட்டம் பயனுள்ளதாக இருக்கும் என ஆதாரப்பூர்வமாக டெஸ்லா மற்றும் ஜார்ஜால் நிரூபிக்கப்பட்டது.
மின்சாரப் போரின் இந்தக் காலகட்டத்தில் எடிசன் செய்த பொய்ப் பிரசாரங்களை முறியடிக்கவே, ஏசி மாற்று மின்னோட்டத்தின் திறனை செயலில் காட்ட இந்த நிலையம் கட்டப்பட்டது. மேலும் இதன் வெற்றிதான், நயாகரா நீர்வீழ்ச்சியில் ஆடம்ஸ் பவர் பிளாண்ட் மூலம், மிகப் பெரிய ஆலைகளில் மாற்று மின்னோட்டத்தை ஏற்றுக்கொள்ள வழிவகுத்தது. 1895 மற்றும் அதன் இறுதியில், ஏசி உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது.
மாற்று மின்னோட்டத்திற்கான வணிகப் பரிமாற்ற அமைப்பை வழங்கும் மிகப் பழமையான நீர்மின் நிலையமானது, சுவிட்சர்லாந்தில் உள்ள லூசெர்னுக்கு அருகிலுள்ள தோரன்பெர்க் மின் உற்பத்தி நிலையமாகும். ஆலை மே 1886 இல் செயல்படத் தொடங்கியது. 1,800 வோல்ட் மின்னழுத்தத்துடன் கிட்டத்தட்ட 3 மைல் (4.8 கிமீ) நீளமான டிரான்ஸ்மிஷன் லைனுக்குப் பயன்பட்டது. நகரின் டவுன்டவுன் பகுதியில் உள்ள சில ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் மின் வெளிச்சத்திற்கு பயன்படுத்த மின்னழுத்தம் 100 வோல்ட்டாக மாற்றப்பட்டது.
தோரன்பெர்க் ஆலைக்கு சில மாதங்களுக்கு முன்பு, இரண்டு மின்னழுத்த நிலைகளைக் கொண்ட முதல் மாற்று மின்னோட்ட விநியோக வலையமைப்பு 20 மார்ச் 1886 அன்று கிரேட் பாரிங்டன், மாசசூசெட்ஸில் செயல்படத் தொடங்கியது.
ஆனால், பொதுப் பயன்பாட்டிற்காக சிறிய அளவு மின்சாரத் தயாரிப்பாக அல்லாமல், நீரலைகளைப் பயன்படுத்தி, தொழில்முறைப் பயன்பாட்டிற்காக ஒரு மிகப்பெரிய நிறுவனத்திற்காக நீரலை மின் உற்பத்தி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது இதுதான் முதன்முறை. இதனைத் தான் ஜூன் 21, 1891 அன்று டெஸ்லாவும் ஜார்ஜும் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தனர்.
1895இல் நயாகரா நீர்வீழ்ச்சி மின்சார ஒப்பந்தத்தை ஜார்ஜின் நிறுவனம் வெல்வதற்கு, இந்த ஏமஸ் ஆலையின் வெற்றிதான் வழிவகை செய்தது. இவையனைத்திற்கும் பின்னால் டெஸ்லாவின் கடின உழைப்பும், அவர் ஜார்ஜுடன் போட்ட ஒப்பந்தங்களும்தான் உதவி புரிந்தன.
ஜூலை 30, 1891: இந்தத் தேதியில்தான், இயற்கையாக முறைப்படுத்தப்பட்ட வகைமையின் மூலம், நிகோலா டெஸ்லா ஓர் அதிகாரப்பூர்வ அமெரிக்கக் குடிமகன் ஆனார். இதனைப் பற்றி அவர் கூறுகையில், ‘நான் பெற்ற அனைத்து அறிவியல் பட்டங்களுக்கும், விருதுகளுக்கும் மேலாக, அமெரிக்கக் குடியுரிமைப் பத்திரத்தைத் தான் பெருமையாகக் கருதினேன்’ என்று சிலாகித்துச் சொன்னார்.
அமெரிக்க ஜனநாயகம் அவரைப் முறைமைப்படுத்தும் என்ற அவருடைய ஆசிரியரின் கூற்று உண்மையானதையும் அவர் இக்கணம் நினைவுகூர்ந்தார். அவரது தாய் ஜீகா மெண்டிச் இச்செய்தியைக் கேட்டு, மட்டற்ற மகிழ்ச்சியடைந்ததாகவும் தரவுகள் கூறுகின்றன.
ஆகஸ்ட் 26, 1891: நிகோலா டெஸ்லாதான் முதன்முதலில், இயற்பியலில் வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்திய எலக்ட்ரான்களைக் கண்டுபிடித்தார் என்று கூறலாம். ஜே.ஜே. தாம்சன் என்ற விஞ்ஞானி, இதனைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, டெஸ்லா அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அவர் ஏற்கெனவே அனுப்பிய அறிவியல் குறிப்பிற்கான பதில் கடிதம் தான் அது.
அதில் அவர், ‘என்னுடைய பிரத்தியேக ஆராய்ச்சியில், மின் சக்தி ஏற்றப்பட்ட, மிகச் சிறிய அளவிலான பந்து போன்ற வடிவங்களை, நான் கண்டுபிடித்தேன்’ என்று எழுதியுள்ளார். இக்கூற்றை, தாம்சன் வெகுவாக மறுத்தார். ஆனால் அவரே ஐந்து வருடங்கள் கழித்து வேறோர் ஆராய்ச்சியின் மூலம் எலக்ட்ரான் அணுக்களின் இருப்பை உறுதி செய்து, அதற்கான பேடன்ட்டையும் பெற்றுக்கொண்டார்.
அப்பாவி டெஸ்லா, இந்தக் கண்டுபிடிப்பை முறைப்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. ஆனால், இக்கடிதப் போக்குவரத்தை, ஆதாரப்பூர்வமாக, ‘எலக்ட்ரிக்கல் என்ஜினீயர் நியூ யார்க்’ என்ற நகரப் பத்திரிகை பதிவு செய்ததன் மூலமாக நமக்கு இந்தப் பேருண்மை தெரிய வருகிறது.
தாம்சனின் மறுப்பிற்கும் அதன் பிறகு அவர் செய்த ஆராய்ச்சிக்கும் பின்னால் எடிசன் மட்டுமின்றி அப்போதைய பல பிரபல விஞ்ஞானிகள் செயல்பட்டு டெஸ்லாவிற்கு அப்புகழ் கிடைக்காமல் பார்த்துக்கொண்டனர் என்று பல ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
1891 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி: நிகோலா டெஸ்லாவின் இன்னொரு புகழ்பெற்ற கண்டுபிடிப்பான, ‘டெஸ்லா காயில்’ அமைப்பும் இவ்வாண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டது. வயர்லெஸ் மூலம் ஒளியைக் கடத்தக் கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சாதனம், பிற்காலத்தில் ஒலி அலைகளையும் சேர்த்துக் கடத்தியதுதான், ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.
இதற்குப் பிறகு தான், டெஸ்லாவிற்கு ‘வேர்ல்டுவைட் வயர்லெஸ் சிஸ்டம்’ எனப்படும் உலக அளவிலான வயர்லெஸ் தொழில்நுட்பம் அமைப்பதற்கான யோசனை பிறந்தது. இந்த யோசனைதான் வார்டன்கிளிஃப் டவர் உருவாக அடிநாதமாக அமைந்தது.
(தொடரும்)
படம்: ஏமஸ் மின் உற்பத்தி நிலையத்தின் உட்புறம்.