Skip to content
Home » நிகோலா டெஸ்லா #16 – உலகெங்கும் ஒளி

நிகோலா டெஸ்லா #16 – உலகெங்கும் ஒளி

சிகாகோ உலகக் கண்காட்சி

சமீபத்தில் நிகோலா டெஸ்லாவைப் பற்றி அமெரிக்க அரசாங்கம் பல ஆவணங்களை ரகசியப் பெட்டகத்திலிருந்து பொதுப் பார்வைக்குக் கொண்டுவந்தது. இந்தத் தரவுக் குவியல்கள் அனைத்தும் மூன்று தொகுப்புகளாக 2018, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வெளிவந்துள்ளன.

அவற்றிலுள்ள விஷயங்களை நாம் படித்துப் பார்த்தால் தலை சுற்றி விடும். உதாரணத்திற்கு, டெஸ்லா பூமியைச் சேர்ந்தவரே அல்ல என்றும் அவர் வீனஸ் கிரகத்தில் பிறந்து, பூமியில் தனது வளர்ப்புப் பெற்றோரான மிலுட்டின் மற்றும் ஜீகாவிடம் தற்போதைய யூகோஸ்லாவியாவின் மலைப்பகுதிகளில் வைத்து வேற்றுக்கிரகவாசிகளால் ஒப்படைக்கப்பட்டார் என்றும் இதிலுள்ள சில தரவுகள் கூறுகின்றனவாம். நல்லவேளையாக, எஃப்பிஐ இதைப் பெரிதாகக் கொண்டுகொள்ளவில்லை.

ஆனால், உறுதி செய்யப்பட்ட உண்மையாகவே படிப்போரைத் திடுக்கிடச் செய்யும் நிகழ்வுகள் அவரது வாழ்வில் புதைந்துள்ளன. அவை அவர் இறந்த பிறகும் தொடர்கின்றன. அவற்றுள் முக்கியமானது மரணக் கதிர்கள் பற்றிய அவரது ஆராய்ச்சிதான். அந்த ஆய்வுக்கு அவர் முதன்முதலில் வித்திட்டது இப்போது அவரது வாழ்விலிருந்து நாம் பார்க்கப்போகும் 1893 மற்றும் 1894ஆம் ஆண்டுகள்தாம்.

‘ஒளி மற்றும் அது சார்ந்த அதிக அதிர்வெண்கள் கொண்ட தோற்றப்பாடுகள்’ என்ற தலைப்பில், பிலடெல்பியாவிலுள்ள ஃபிராங்க்ளின் இனஸ்டிட்யூட்டிலும் மிசௌரியில் உள்ள தேசிய மின்னொளிக் கூட்டமைப்பிலும் பிப்ரவரி, மார்ச் 1893ஆம் ஆண்டில் உரையாற்றினார் டெஸ்லா.

அவரது AIEE துணைத் தலைவர் பதவியினைப் பறிக்க, எடிசன் பல்வேறு நாடகங்களை நடத்தினார். அவையனைத்தும் வெற்றிபெறாமலே போயின. அதற்கு உதாரணம், அவர் செய்த அரசியல் நடவடிக்கைகள். துணைத் தலைவர் பொறுப்புக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகோலா டெஸ்லாவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவருமாறு அப்போதைய தலைவர் ஃபிராங்க் ஜூலியன் ஸ்ப்ராக்கை மறைமுகமாக மிரட்டினார். இவர் புகழ்பெற்ற மின்சார ரயில் என்ஜினியர், மத்திய நிலைத் தொழிலதிபர்.

ஃபிராங்க் ஜூலியன் ஸ்ப்ராக் அதனை ஏற்காத நிலையில், அவரது பதவிக்காலம் டெஸ்லா பதவியேற்ற சில மாதங்களிலேயே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. யாராக இருந்தாலும் இரண்டு ஆண்டுகள், இல்லை அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் மட்டுமே தலைமைப் பொறுப்புகளில் இருந்திட வேண்டும் என்ற AIEE விதியைச் சாதகமாக வைத்து, அவரை பதவிக்காலம் முடிவதற்கு சற்று முன்பாகவே, புதிய தலைவர் தேர்தலை அறிவிக்கச் சொல்லி குடைச்சல் கொடுத்ததால், ஸ்ப்ராக் உடல்நிலை மற்றும் உள்ளரசியல் காரணங்களைக் காட்டி மரியாதையுடன் விலகி நின்று கொண்டார்.

பிறகு 1893ஆம் ஆண்டில் டெஸ்லாவின் பதவிக்காலத்தின் போதே புதிய தலைவராகப் பதவியேற்ற எட்வின். ஜே. ஹூஸ்டன் என்ற மற்றோரு புகழ்பெற்ற விஞ்ஞானப் பேராசிரியருக்கும் அதே மாதிரியான தொல்லையைத்தான் எடிசனின் நண்பர்கள் கொடுத்தனர். இருப்பினும், புதிய தலைவர் இரண்டு பக்கமும் ஒத்து ஊதினார்.

டெஸ்லாவைப் பதவி விலகச் செய்யும் தீர்மானம், நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு வருமுன்னரே அவருக்கு இயற்கையாகவே பெருகியிருந்த ஆதரவாளர்கள் ஹூஸ்டனிடம் அவர் செய்யும் தவறைச் சுட்டிக்காட்டினர்.

‘நீங்கள் ஓட்டெடுப்பு நடத்தினாலும் அது எளிதாகத் தோற்டிக்கப்படும். உங்கள் பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம். ஒருவேளை டெஸ்லா பதவி விலகும் நிலை வந்தால்… அவரோடு சேர்ந்து நாங்களும் கூண்டோடு விலகிவிட்டால்… அந்தக் கெட்ட பெயர் உங்கள் பதவிக்காலத்திற்குத்தான் பழிச்சொல்லாய் வந்து சேரும்!’ என்று எடுத்துரைத்தனர்.

அதனைக் கேட்ட அவர் தீர்மானத்தை வரைவு நிலையிலேயே ரத்து செய்து டெஸ்லாவின் துணைதலைவர் பதவி தொடர்வதை உறுதி செய்தார்.

‘எனக்குப் பதவி, பட்டம், பெயர், புகழ் இவற்றைவிட வெற்றிகரமான ஆராய்ச்சிகள்தான் அதிக போதையைத் தந்தன. ஆயினும், என் கனவான இலவச சக்தி உலகத்தை உருவாக்க வேண்டி, சமூகத்தில் உள்ள மற்ற விஞ்ஞானிகள் மற்றும் தொழிலதிபர்களின் ஆதரவு தேவைப்பட்டதாலேயே நான் பல கூட்டமைப்பு அரசியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு என் நண்பர்களுடன் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டியிருந்தது’ என்று தன் நிலையை தன்னுடைய சுயசரிதையில் டெஸ்லா தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட நிகழ்வுகள் பற்றிய குறிப்புகளையும் செய்திகளையும் ஊடகங்கள் மறைத்துவிட்டன. சில அரசு ஆவணங்களிலும் அக்கூட்டமைப்பு சார்ந்த விஞ்ஞானிகளின் மற்ற பேட்டிகளிலும் சில குறிப்பிட்ட அறிவியல் பத்திரிக்கைகளிலும்தான் இவை பற்றிய தகவல்கள் நமக்குக் காணகிடைக்கின்றன.

1 மே 1893. ‘தி கொலம்பியன் எக்ஸ்போஸிஷன்’ என்று அழைக்கப்பட்ட ‘உலகக் கண்காட்சி’ ஒன்று அமெரிக்காவின் இல்லினாய் மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற சிகாகோ நகரில் தொடங்கியது. இது மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அப்படியென்ன சிறப்பு? அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிரிஸ்டோஃபர் கொலம்பஸ், அங்கே வந்திறங்கி 400 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் கொண்டாடும் மாபெரும் விழா நிகழ்வுதான் அது.

இந்நிகழ்வை நடத்த, நியூ யார்க், வாஷிங்டன் டி.சி மற்றும் செயின்ட் லூயிஸ் ஆகிய மூன்று நகரங்களும் சிகாகோவுடன் கடும்போட்டி போட்டன. இறுதியாக, சிகாகோவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

டெஸ்லாவும், ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸும் இணைந்து, 1893 ஆம் ஆண்டு சிகாகோ கண்காட்சியில் வைத்த மிகப்பெரிய அறிவியல் காட்சிக்கூடத்தின் முகப்பு மற்றும் உள் வடிவங்கள்.

அந்த நகரத்தின் நிர்வாக அமைப்பினர் 1892ஆம் ஆண்டிலேயே இந்நிகழ்வுக்கான மின்சார ஒப்பந்தத்தை வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் கம்பெனிக்கு வழங்கியிருந்தனர்.

எடிசனின் டிசிக்குப் பெருத்த பின்னடைவாகப் பார்க்கப்பட்ட இந்த ஒப்பந்த வெற்றி ஏசியை உலக அளவில் கொண்டு சென்றுவிடும் என்று அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. தனது தோல்வி, இங்கிருந்துதான் துவங்கப் போகிறது என்பதை உணர்ந்த எடிசன் போர்க்கால அடிப்படையில் வேலை செய்து பொய்களைப் பரப்பினார்.

‘நான் பலமுறை பொதுவெளியில் செய்து காட்டியதைப் போல, இவர்கள் இருவரும் ஏசியின் மூலம் சிகாகோ மக்கள் மற்றும் உலகக் கண்காட்சியின் பார்வையாளர்கள் மத்தியில், அழிவைத் தான் ஏற்படுத்துவார்கள்’ என்று கூறி அது போன்ற பல வந்தந்திகளையும் மீண்டும் பரப்பி அனைவரையும் பீதி கொள்ளச் செய்தார்.

ஆனால், இதற்கு எதிர்வினையாற்ற டெஸ்லாவே நேரடியாகக் களத்தில் இறங்கினார். அவரும் ஓர் அதிரடிப் பேட்டியளித்தார்.

‘ஏசியின் பாதுகாப்பை உறுதிசெய்ய எனது உடலிலேயே 25,000 மின்சார வோல்ட் மின்சாரத்தைப் பாய்ச்சி, ஒரு சோதனையை மிகவும் பாதுகாப்பான முறையில் செய்தேன். அதைப் பற்றி எழுதவும் சொல்லவும் பல ஊடகங்களையும் விஞ்ஞான சமூகத்தைச் சார்ந்தவர்களையும் மக்களையும்கூட அழைத்தேன். ஆனால், அதற்குக் குறைந்த அளவிலேயே கூட்டம் கூடியது. சர்க்கஸ் யானை, தெரு நாய், பூனைகள், இவற்றுக்கும் மேலாக, ஒரு கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட மனிதன் என ஏசியை முற்றிலும் தவறாகப் பயன்படுத்தி, அதனைக் கொலைக் கருவியாய் மாற்றி செய்த தெருக்கூத்து நிகழ்வுகளுக்கு மட்டும் பெருங்கூட்டம் கூடியது.

‘அப்படிப்பட்ட ஒரு கூத்தின் நிகழ்வல்ல இது. பல நூறு ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வரும் பாரம்பரியமிக்க விழா. விஞ்ஞானத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை அமெரிக்கா கண்கூடாகப் பார்க்க வேண்டுமென்றால் ஏசி மாற்று மின்னோட்டத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுத்துத்தான் ஆக வேண்டும். அந்த வாய்ப்பு தான் இந்தக் கண்காட்சி!’ என்று கூறினார்.

இந்தப் பேட்டிக்குப் பிறகு, சிகாகோ நகர நிர்வாகம் விழித்துக்கொண்டது. தாங்கள் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டே வெஸ்டிங்ஹவுஸ் கம்பெனிக்கு ஒப்பந்தம் வழங்கினோம் என்ற உண்மையை அவர்களே வெளியில் பலமுறை தெளிவாக எடுத்துக் கூறினர்.

பதிலுக்கு எடிசன் சளைக்காமல் அவர்கள் மீதே மறைமுக ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்தார். ‘சிகாகோ நகர மேயரும், நிர்வாகிகளும், அடிக்கடி ஜார்ஜின் பார்ட்டிகளில் கடந்த ஒரு வருடமாகத் தென்படுகின்றனர். உண்மைதான், அந்த ஒப்பந்தம் முன்னேற்றத்திற்கானதுதான்! ஆனால் அது யாருடைய முன்னேற்றம் என்பதுதான் கேள்விக்குறி!’ என்று கூறி சர்ச்சையைக் கிளப்பினார்.

டென்னிஸ் பந்தை இரு தரப்பும் கீழே விழ வைக்காமல் வலையின் இரு புறங்களிலும் அடித்து ஆடுவதைப் போல ஆடிக்கொண்டிருந்தனர். இதனை உடைக்க, டெஸ்லா ஒருபுறம் ஏசிக்கு ஆதரவாக தன்னுடைய அனைத்து விஞ்ஞான நண்பர்களையும் கண்காட்சி துவங்குமுன்பும் துவங்கிய பின்னும் பேசச் செய்தார்.

பாரிஸில் அவர் கண்ட ஈஃபிள் டவர் திறப்பு விழா நிகழ்ச்சியை ஒட்டி நடந்த கண்காட்சியில் ஒட்டுமொத்தமாக 3.2 கோடி மக்கள் கலந்துகொண்டனர். அதனை முறியடிக்கும் விதமாக இந்நிகழ்வு இருக்க வேண்டும் என்று சிகாகோ நகர நிர்வாகத்தார் விரும்பியதற்கு அவர் உறுதுணையாக இருந்தார். அமெரிக்காவின் அப்போதைய ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 40% வரும் வகையில் மொத்தம் 2.72 கோடி மக்கள் இந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர் என்று பதிவேடுகள் கணக்கிடுகின்றன.

அதில் ஒரு பகுதியாக டெஸ்லா காயிலை அந்தக் கண்காட்சியின் மத்தியப் பகுதியில் ஒரு ஸ்டாலில் வைத்து விளம்பரம் செய்தனர்.

‘1891 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட சாதனம். குறைந்த அளவு மின்சாரம் ஆனால் அதிக அளவு வால்டேஜ். இதுவே நிகோலா டெஸ்லாவின் காயில். இதிலிருந்து வெளிவரும் ஒளி 30 அடிகளைத் தொடும் பத்து மைல்கள் தொலைவில் இருந்தும் இதனைக் காணலாம்’ என்று விளக்கம் சொல்லி, அதனை செயல்பாட்டில் வைத்தனர். பொதுமக்கள் அதனைக் கண்டு வியந்தனர்.

கார்களோ விமானங்களோ அல்லது தரமான தேசிய நெடுஞ்சாலைகளோ இல்லாத அந்தக் காலகட்டத்தில் இவ்விரு கண்காட்சிகளையும் ஐரோப்பாவும் அமெரிக்காவும் இத்தனை மக்கள் கூட்டத்துடன் நடத்திக் காட்டியது அறிவியல் உலகம் செய்த மாபெரும் சாதனையாகும்.

உலகின் முதல் ‘ஃபெர்ரிஸ் வீல்’ என்று அழைக்கப்படும் மிகப்பெரிய ‘ஜெய்ண்ட் வீல்’, இந்தக் கண்காட்சியில்தான் சிகாகோ நகரில் வைக்கப்பட்டது. அதற்கு ‘சிகாகோ வீல்ஸ்’ என்ற பெயர் கொடுக்கப்பட்டது. நகரம் முழுவதுமே ஏசி கரண்டின் மின்னொளியில் மிதந்தது.

ஹென்றி ஆடம்ஸ் என்ற ஆய்வாளர் இதனைப் பற்றி எழுதிய கட்டுரையில், ‘உலக மக்களின் ஒற்றுமையையும், பல்வேறு கலாச்சாரங்களையும் ‘உடோபியா’ என்ற எதிர்கால உலகின் நிஜமானதொரு வடிவமைப்பையும், இந்தக் கண்காட்சி கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது’ என்று தனது நண்பர் லூஸி பேக்ஸ்டர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் டெஸ்லா மற்றும் ஜார்ஜின் இவ்வளவு கடின உழைப்பையும் எடிசன் மற்றும் பல தொழில் எதிரிகள் அமெரிக்க அரசாங்கத்தின் சில முக்கியப் புள்ளிகள் மற்றும் ஊடகங்கள் ஆகியன முற்றிலும் மறைத்தே விட்டன. இவை பற்றிய குறிப்புகள் மற்றும் தரவுகள் அனைத்தையும் தேடியெடுத்து 1896ஆம் ஆண்டில் ஒருமுறையும் 1945 ஆம் ஆண்டில் இன்னொருமுறையும் இருட்டடிப்பு வேலைகள் நடந்தன. இவை மட்டுமா? இன்னும் பல மறைப்பு வேலைகள் நிகோலா டெஸ்லாவுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டன. அவற்றில் முக்கியமானவற்றை போகப்போக பார்க்கலாம்.

ஃபிரெடெரிக் ஒல்ம்ஸ்டட் என்பவரின் 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஜாக்சன் பார்க் என்னும் பகுதியில்தான் இந்த சிகாகோ கண்காட்சி பரந்து விரிந்த நிலப்பரப்பில் நடத்தப்பட்டது.

அந்நகருக்கு ‘வெள்ளை நகரம்’ என்று பெயரிடப்பட்டது. ஒளிரும் வண்ண விளக்குகளைக் கொண்டு உருவாக்கியதால் பெருமையோடு அளிக்கப்பட்ட பெயர் இது. இதற்குப் பின்னாலிருந்தவர்கள் நிகோலா டெஸ்லாவும் ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸும்.

நிகழ்வு நடந்த ஆறு மாதங்களில், ஒவ்வொரு நாளும் 1,50,000 பேர், கண்காட்சியை ரசிக்கக் கூடினர். ‘எல் லைன்’ என்ற மிகப்பெரிய ரயில்வே தடத்தை மக்கள் முன்பே பல பொறியியலாளர்கள் வடிவமைத்துக்கொண்டிருந்ததை அதிசயம் போல் பலரும் பார்த்துச் சென்றனர்.

‘பன்றி இறைச்சி உற்பத்தி செய்யும் நகரம்’ என்ற பொருள் வரும் ‘போர்க்கோபொலிஸ்’ என்ற கீழ்த்தரப் பெயர் பெற்ற சிகாகோ நகரம் ‘வெள்ளை நகரமாக’ பெயர் மாற்றம் பெற்றது. ‘ஆர்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் சிகாகோ’ என்ற புதிய கலை நிறுவனம் கட்டப்பட்டு அதில் சிறந்த கலைநயம் மிக்க ஓவியங்கள், பொருட்கள், உலக மதிப்புமிக்க பொக்கிஷங்கள் சேகரிக்கப்பட்டன. மக்கள் இவற்றால் கவரப்பட்டனர். ‘மியூசியம் ஆஃப் சயின்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி’ என்ற அமைப்பும் சிகாகோவில் உருவாக்கப்பட்டது.

உலகில் முதன்முறையாக, செயற்கை நீர்வீழ்ச்சிகளில் மின்சாரம் பொழியப்பட்டு ஒரு நகரம் அழகுபடுத்தப்பட்டதும் இந்த நிகழ்வில்தான் நடந்தது. ‘சிட்டி பியூட்டிஃபுல்’ என்ற நகரங்களை அழகுபடுத்தும் திட்டம் சிகாகோவின் அழகு நிறைந்த பாரம்பரியக் கட்டடங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது. அமெரிக்காவின் மற்ற நகரங்கள் மற்றும் லண்டன் உட்பட பல உலக நகரங்கள் பிற்காலத்தில் அழகுபடுத்தப்பட இத்திட்டம் அடிப்படையாகத் திகழ்ந்தது.

1871ஆம் ஆண்டு சிகாகோ நகரில் மிகப்பெரிய காட்டுத்தீ நகருக்குள் பரவி அதன் அழகியலையும் பொருளாதாரத்தையும் பலத்த சேதத்திற்கு உள்ளாக்கியிருந்தது. அதன் பின்பு அந்நகரை மீட்ட பெருமையும் இந்தக் கண்காட்சிக்குத்தான் சாரும். இவையனைத்திற்கும் மின்சாரம் வழங்கியவர் நம் நாயகன் நிகோலா டெஸ்லா.

வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் கம்பெனி டெஸ்லாவின் வழிகாட்டுதலுடன் உருவாக்கிய மின்சாரம் ஜாக்சன் பார்க் பகுதி இயங்கத் தயாரித்த தினசரி மின்சாரம், சிகாகோ நகரம் முழுமையும் விரிவுபடுத்தப்பட்டது. அது நகரின் தினசரி தேவையைவிட, மூன்று மடங்கு தினமும் அதிக உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக விளங்கியது.

வயர்கள் இல்லாத பாஸ்பாரெசன்ட் ஒளி விளக்குகள் (இன்றைய பிளாரசண்ட் ஒளி விளக்குகளின் முன்னோடி), டெஸ்லாவின் ‘எக் ஆஃப் கொலம்பஸ்’ சாதனம் மூலம் உருவாக்கப்பட்டு, மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. டெஸ்லாவின் பாலிஃபேஸ் மோட்டார்களின் பேடன்ட் பெற்ற ஜார்ஜின் நிறுவனம், அதனை 100% செயல்பாட்டிற்கு, இங்கு வைத்து தான் கொண்டுவந்தனர்.

‘மெக்கானிக்கல் மற்றும் மின்சார ஊசலாட்டிகள்’ என்ற தலைப்பில், ஆகஸ்ட் 25, 1893 அன்று, இந்நிகழ்வில், டெஸ்லா ஒரு மாபெரும் சிறப்புரை ஒன்றையும் நிகழ்த்தினார்.

இந்த மாபெரும் கண்காட்சி முடியும் தருவாயில், அக்டோபர் 24, 1893 அன்று, நயாகரா நீர்வீழ்ச்சியின் மின்சார அமைப்பு ஒப்பந்தம், வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த மாபெரும் வெற்றியின் மூலம், மின்சாரப் போரில், எடிசனின் தோல்வி, இனிதாகத் தொடங்கப்பட்டது.

ஏப்ரல் 30, 1894 ஆம் ஆண்டு அன்று, டெஸ்லாவிற்கு, ‘செர்பியன் ராயல் அகாடெமி ஆஃப் பெல்கிரேட்’ அமைப்பில், கவுரவ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

அதே ஆண்டின் துவக்கத்தில், தனது AIEE அமைப்பின் இரண்டாண்டு காலப் பதவியை, பெரும் புகழோடு நிறைவு செய்தார் நிகோலா டெஸ்லா.

அவருக்குப் பிறகு அப்பதவியினை ஏற்ற தாமஸ் மார்ட்டின் என்னும் அறிவியல் அறிஞர், ‘எலக்ட்ரிக் வேர்ல்ட்’ என்ற பத்திரிகையின் எடிட்டராகவும் இருந்தார். அவருடைய தொடர் முயற்சிக்குப் பின், நிகோலா டெஸ்லாவைப் பற்றிய முதல் புத்தகத்தை, AIEE அமைப்பே தன் சொந்த செலவில் வெளியிட்டது. ‘நிகோலா டெஸ்லாவின் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் மற்றும் எழுத்துகள்’ என்ற அந்தப் புத்தகம் அறிவியல் உலகையே ஒரு கலக்கு கலக்கியது என்று சொன்னால் அது மிகையல்ல.

மரணக் கதிர்களின் வீச்சு அளவினை, எவ்வளவு உயரத்திற்கு வேண்டுமானாலும் செலுத்த முடியும் என்ற உண்மையினை டெஸ்லா இந்த இரு ஆண்டுகளின் மூலம் செய்த ஆய்வுகள் மற்றும் நிகழ்வுகளின் மூலம் புரிந்து கொண்டார். அதற்கான வரைபடங்கள் மற்றும் டெஸ்லா டவரின் வடிவமைப்புகளை அவர் உருவாக்கத் தொடங்கினார்.

எதிர்காலத்தைக் கண்முன் காணும் திறன் பெற்ற அவருக்கு, எடிசன் மட்டுமா எதிரி? இன்னும் பற்பல எதிரிகள் முளைத்தனர். அவரது ஆய்வுகளின் பலன்களை மனித குலத்தின் அழிவுக்குப் பயன்படுத்தத் துடித்தனர்.

ஆனால் கற்பனைகளையும் விஞ்சும் வகையில் பல்வேறு ஆபத்துகளுடன் டெஸ்லாவின் அதிரடி வாழ்க்கை, தொடர்ந்து வானவேடிக்கைகளோடு சென்று கொண்டுதான் இருந்தது.

(தொடரும்)

படம்: 1893 ஆம் ஆண்டின் சிகாகோ உலகக் கண்காட்சியின் போது, டெஸ்லாவின் ஒளிவிளக்குகளால், இரவு நேரத்தில் ஜொலிக்கும் சிகாகோ நகரம்.

பகிர:
ராம் குமார் சுந்தரம்

ராம் குமார் சுந்தரம்

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதுபவர். மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார். ஒரு கவிதைத் தொகுப்பு, ஓர் அறிவியல் புனை கதை தொகுப்பு ஆகியவற்றை ஆங்கிலத்திலும் தமிழில் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். இவருடைய பிரதிலிபி பக்கம் : https://pratilipi.page.link/8Hga6Dwpr4kdmqy99 தொடர்புக்கு : rksthewriter@gmail.comView Author posts

2 thoughts on “நிகோலா டெஸ்லா #16 – உலகெங்கும் ஒளி”

  1. Vijayalakshmi Elumalai

    படிக்க படிக்க ஆர்வம் கூடுகிறது…மிக அருமையான பதிவு….

    1. Ram Kumar Sundaram

      Thank you very much Vijayalakshmi Madam, for your kind and appreciative review. We are looking forward to have your continuous support. 😊🙏

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *