டெஸ்லாவுக்குப் ஓயாமல் எதிரிகள் முளைத்துக்கொண்டேயிருந்தனர். முடிந்த அளவு அவர்கள் அனைவருடனும் மோதிப்பார்த்த அவர், ஒரு சில கட்டங்களில், ‘போகட்டும், இவர்களால் என்னை என்ன செய்து விட முடியும். இறைவன் எனக்கு வழிகாட்டுவான்’ என்று விட்டேத்தியாக இருந்துவிட்டார்.
இப்போது நாம் அவருடைய வாழ்வில், 1895 முதல் 1898ஆம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளைக் காணப்போகிறோம். இந்த நான்கு ஆண்டு நிகழ்வுகளில், இரண்டு முக்கிய நிகழ்வுகளை, அவற்றின் வரலாற்றுச் சிறப்புமிக்க தன்மைகள் காரணமாக முன்பே பார்த்திருப்பீர்கள்.
1. அவரது ஆய்வுக்கூடம் அமைந்திருந்த தெற்கு அவென்யூ ஆறு மாடிக் கட்டடம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இது 13 மார்ச் 1895 அன்று நடந்தது. இதனைப் பற்றி விரிவாக நீங்கள் இத்தொடரின் நான்காம் அத்தியாயத்தில் படித்திருப்பீர்கள்.
2. 1896ஆம் ஆண்டு நிகோலா டெஸ்லா விவேகானந்தரைச் சந்தித்தார் என்று பார்த்தோம்.
மார்ச் 13, 1895 அன்று ஆய்வுக்கூடம் எரிந்து போனதும் பலர்மீது சந்தேகம் எழுந்தது. நயாகரா ஒப்பந்தம் வெஸ்டிங்ஹவுஸ் கம்பெனிக்குக் கிடைத்த பிறகு, எடிசன் தன் தோல்வியினைப் பொதுவெளியில் கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டே விட்டார் என்றும் கூறலாம். ஒருவேளை அவர்தான் இந்நிகழ்வை நடத்தியிருப்பாரோ என்று ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸும் அந்தோணி ஜிகெட்டியும் சந்தேகித்தனர்.
இங்குதான் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பம் நிகழ்ந்தது. டெஸ்லா AIEEயின் புகழ்பெற்ற ஓர் உறுப்பினர், துணைத்தலைவர் என்று பார்த்தோம். அந்த அமைப்பை முழுமையாகப் பின்னிருந்து ஆட்டுவித்த எடிசனுக்கு தீ விபத்து காரணமாக நெருக்கடிகள் அதிகமாயின. அவருடைய நண்பர்கள், நம்பிக்கைக்குரியோர் அனைவருமே எடிசன்தான் இந்தக் காரியத்தைச் செய்திருப்பார் என்று உறுதியாக நம்பினர்.
பொதுமக்களும் பத்திரிக்கையாளர்களும்கூட இதே கருத்தைக் கிசுகிசுத்து வந்தனர். இவ்வளவு ஏன், அமெரிக்க அரசும் உலக நாடுகளும் நியூ யார்க் நகரில் அப்போது பெருகியிருந்த பிரபல விஞ்ஞானிகளை உளவு பார்க்கவெனவே வைத்திருந்த பல ஒற்றர்களும்கூட எடிசனின் மீது தான் தங்கள் சந்தேகப் பார்வையை முழுமையாகத் திருப்பி வைத்திருந்தனர்.
இவற்றையெல்லாம் உடைக்க வேண்டிய கட்டாயம் எடிசனுக்கு ஏற்பட்டது. நியூ யார்க் நகரின் மிக அருகில் அமைந்திருந்த நியூ ஜெர்ஸி நகரில், ‘லெவெலின் பார்க்’ என்ற பகுதியில், ‘எடிசன் ஓர்க் ஷாப்’ என்று அழைக்கப்பட்ட ஒரு மிகப் பெரிய தொழிலாய்வுக்கூடத்தை அவர் வைத்திருந்தார்.
தீ விபத்தின் கோரத்தைப் பற்றியும் அது ஏற்படுத்திய 95% சேதாரத்தைப் பற்றியும் டெஸ்லாவும் எடிசனும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போது டெஸ்லாவின் இழப்புக்கு வருத்தம் தெரிவித்த எடிசன், தனது ஒர்க் ஷாப்பை அவர் பயன்படுத்திக்கொள்ளாம் என்று சம்பிரதாயமாகத் தெரிவித்தார்.
பரவாயில்லை, வேண்டாம் என்று டெஸ்லா மறுத்துவிடுவார் என்று எடிசன் எண்ணியிருக்கக்கூடும். ஆனால், மறைமுகமாக வந்த வாய்ப்பைக்கூடக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட டெஸ்லா புதிய ஆய்வுக்கூடம் அமைக்க இடம் கிடைக்கும் வரை ஒரு சில வாரங்கள் அங்கேயே சோதனை செய்ய அனுமதியளிக்குமாறு கேட்டு எடிசனைப் பொறியில் சிக்க வைத்துவிட்டார்.
‘சரி, சிக்கியாகிவிட்டது, இனி வேறு வழியில்லை. கொடுத்தாலும் குற்ற உணர்வில்தான் எடிசன் கொடுத்தான் என்று பேசப்போகிறார்கள். இடம் கொடுக்காவிட்டாலோ திமிர் பிடித்தவன், சேதத்தை ஏற்படுத்திவிட்டு, இப்போது இடமும் கொடுக்கவில்லை என்று ஏசத்தான் போகிறார்கள். எனவே, கொடுத்துவிட்டுத் திட்டு வாங்குதலே குறைந்தபட்ச நன்மை!’ என்று எண்ணிக்கொண்டு டெஸ்லாவுக்கு உதவ முன்வந்தார் எடிசன். இந்த எண்ணத்தை, சில பத்திரிகை நண்பர்களிடம் உரையாடும் போது அவர் பதிவு செய்திருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
அவர் மீது குற்றம் சொன்ன ஜார்ஜும் அந்தோணியும் வாயடைத்துப் போயினர். எடிசனின் ஒர்க் ஷாப்பிற்கு தாற்காலிகமாக ஆய்வுக்கூடத்தை மாற்ற டெஸ்லாவிற்கு அனைத்து உதவிகளையும் செய்தனர்.
ஆனால் டெஸ்லாவோ வேறு மாதிரி சிந்தித்தார். ‘என்னை எப்போதும் பல ஒற்றர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கண்காணித்து வந்தனர். அவர்களின் பார்வையில் படாதவாறுதான் நான்காம் தளத்தில் நன்றாக வெளிச்சம் புகமுடியாத வண்ணம் ஜன்னல்களின் பின்புறம் ‘டின்ட்’ அடித்து (டின்ட் என்றால் சூரிய ஒளி பட்டு, இயற்கையாகவே கண்ணாடிகள் கறுப்பாவதை, மேலும் அதிகப்படுத்தும் வேதியியல் கோட்டிங்) வைத்திருந்தேன். அவர்கள் எதிர்க்கட்டடங்களில் இருந்து தொலைநோக்கிமூலம் பார்த்தாலும்கூட உள்ளே ஒன்றும் தெளிவாகத் தெரியாது’ என்றார் டெஸ்லா.
எடிசன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டதாகவே டெஸ்லா நினைத்தார். எடிசன் நினைத்தால் தன்னைக் கொல்ல முடியும். ஆனால் அப்படிச் செய்தால் அது அவருக்குத்தான் அவப்பெயரை ஏற்படுத்தும். தன் பெயரைக் கெடுத்துக்கொள்ளும்படி அவர் எதுவும் செய்யமாட்டார் என்று டெஸ்லா நம்பினார். தனது கூடத்தை எடிசன் விட்டுக்கொடுத்ததற்குக் காரணம் அதன்மூலம் கிடைக்கும் நல்ல பெயர்தான் என்பதை டெஸ்லா அறியாமல் இல்லை.
எடிசனின் ஆய்வுக்கூடம் டெஸ்லாவின் ஆய்வுக்கூடத்தைக் காட்டிலும் அதிகமான வசதிகளைக் கொண்டிருந்தது. டெஸ்லாவின் ஆய்வுக்கூடத்தை எரிப்பதன்மூலம் எடிசனுக்கு என்ன ஆதாயம்? ஒன்றுமில்லை.
இந்நிலையில் தீ விபத்து இருவரையும் பிரிப்பதற்குப் பதில் சேர்த்து வைத்திருப்பதையே நாம் பார்க்கிறோம். ஒரு காலத்தில் தன்னிடம்தான் டெஸ்லா வேலை பார்த்தார் என்பதை எடிசனும் மறக்கவில்லை டெஸ்லாவும் மறக்கவில்லை என்பதையே இந்நிகழ்வு காட்டுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
தற்போதைய நியூ யார்க் மாகாணத்தில் உள்ள ‘சைனாடவுன்’ பகுதிக்கு அருகிலுள்ள ‘கிரீன்விச் வில்லேஜ்’ என்ற பெயர் கொண்ட பகுதியில் ஹூஸ்டன் தெருவில் 46 மற்றும் 48ஆம் கதவெண்களில் தனது புதிய ஆய்வுக்கூடத்தின் இருப்பை டெஸ்லா உறுதிசெய்தார். அடுத்த சில வாரங்களில் எடிசன் அளித்த இடத்தைவிட்டு வெளியேறினார்.
தனது புதிய ஆய்வுக்கூடத்தை முந்தையதைவிடப் பாதுகாப்பாகவும், வசதி கொண்டதாகவும் உருவாக்க முனைப்புக் காட்டினார் டெஸ்லா. இங்குதான் அவரது பல புகழ்பெற்ற வயர்லெஸ் ஆராய்ச்சிகளும் அலை அறிவியல் ஆராய்ச்சிகளும் மின்சார ஆராய்ச்சிகளும் பின்வந்த ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டன.
0
எனில், உண்மையில் டெஸ்லாவின் ஆய்வகத்தை எரித்தது யார்? ஏற்கெனவே பார்த்தது போல மார்கோனியின் ரேடியோ அலைகள் ஆராய்ச்சிக்குப் பின்னால் இருந்தவர்களின் செயலாக அது இருந்திருக்கலாம். ஏனெனில் ரேடியோ அலைகளை முதலில் கண்டுபிடித்தவர் நிகோலா டெஸ்லாதான். ஆனால் அவரால் முதலில் காப்புரிமம் பெறமுடியாமல் போய்விட்டதற்குக் காரணம் தீ விபத்து. அதற்காக நேரடியாக மார்கோனியை நாம் குற்றம்சாட்டிவிடவும் முடியாது.
இந்தக் காலகட்டத்தில் அவர் அமெரிக்கா வந்து சென்றிருந்தாலும் அவருடைய நிரந்தர ஜாகை அப்போது லண்டன் நகரில் இருந்தது. எனவே அவர் ஆய்வுகளில் முதலீடு செய்த பெரிய மனிதர்களில் யாரோ ஒருவர் லாபம் கருதி இந்தக் காரியத்தைச் செய்திருக்கலாம் என்று எண்ணுவதற்கு இடமிருக்கிறது. மார்கோனியின் கடின உழைப்பிற்கு ஆதரவாகவே டெஸ்லா பேட்டியளித்தார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
மார்கோனியின் ஆய்வுகளையும் ஆவணங்களையும் திருட அவருக்குக் குடியரிமை வழங்கி, இறுதிவரை இடம் அளித்து கவுரவித்தது அமெரிக்கா. ஜெர்மனி, ரஷ்யா, இங்கிலாந்து, அவரது பூர்விகப் பகுதியான ஆஸ்திரியப் பேரரசு போன்ற நாடுகளும் இதில் முனைப்புக் காட்டின. அவர்களுள் ஒருவர் செய்த வேலையாகவும் இது இருக்கலாம்.
இல்லையெனில் டெஸ்லாவுக்கு முளைத்த தனிப்பட்ட அறிவியல் எதிரிகளில் ஒருவர் செய்த வேலையாகக் கூட இருக்கலாம். ஏற்கெனவே கூறியதுபோல எடிசன் ஒருவர் மட்டுமே அவரது எதிரியல்ல. எடிசன் பலம் மற்றும் புகழ் வாய்ந்தவர் என்பதால் அவர்கள் இருவரும் மோதிக்கொண்ட தகவல்கள் நமக்கு அதிகம் கிடைக்கின்றன. வேறு சிலருடனும் டெஸ்லாவுக்கு மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன.
ஏப்ரல் 15, 1895 : டெஸ்லாவின் பெயரையும் காப்புரிம எண்களையும் தாங்கிய மின்சார ஜெனரேட்டர் வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் கம்பெனியால் நயாகரா நீர்வீழ்ச்சியில் பிரத்தியேகமாக அமைக்கப்பெற்ற மிகப்பெரிய மின்நிலையத்தில், பிரம்மாண்டமான முறையில் பொருத்தப்பட்டு, செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. ஒரு நிமிடத்திற்கு 250 சுழற்சிகள் செல்லும் திறன் கொண்ட அந்தச் சாதனம், வெற்றிகரமாக இயங்கி, திருப்திகரமான அளவில் மின்சார உற்பத்தி செய்யத் தொடங்கியது.
சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்தவாறு, டெஸ்லாவுக்குப் பிறகு AIEE துணைத்தலைவராகப் பொறுப்பேற்ற தாமஸ் மார்ட்டின், அவரின் புகழைப் பரப்ப பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். டெஸ்லாவை இன்னும் அதிகமாக, பத்திரிக்கைகள் முலம் வெகுஜன மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும் என்ற அவரின் எடிட்டர் மூளை, சிந்தித்துக் கொண்டே இருந்தது.
1894ஆம் ஆண்டு புத்தகம் வெளியிட்ட அவர், 1895 ஏப்ரல் மாதக் கடைசியில், புகழ்பெற்ற ‘தி செஞ்சுரி மேகசின்’ என்னும் இதழில் ‘டெஸ்லாவின் ஊசலாட்டி மற்றும் பல கண்டுபிடிப்புகள்’ என்ற ஒரு கட்டுரையை, தானே எழுதி வெளியிட்டு, அவரின் புகழை மேலும் நாடறியப் பரப்பச்செய்தார்.
டிசம்பர் 28, 1895: டெஸ்லாவுக்கு முளைத்த புதிய பல மறைமுக எதிரிகளில் சற்றே பலம் வாய்ந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஓர் அறிவியல் எதிரிதான் வில்ஹெம் கோன்ராட் ராண்ட்ஜன்.
எங்கோ கேள்விப்பட்ட பெயராக உள்ளதல்லவா? ஆம், இவர்தான் எக்ஸ்ரேக்களைக் கண்டுபிடித்ததற்காகக் காப்புரிமம் பெற்ற, புகழ்பெற்ற விஞ்ஞானி.
டெஸ்லா ஆய்வு செய்து உரிமம் பெறாத பல கண்டுபிடிப்புகளுள் எக்ஸ்ரேவும் ஒன்று என்று ஏற்கெனவே பார்த்தோம். அதன் பின்புலம் என்னவென்பதை விரிவாக இப்போது பார்க்கலாம். சவுத் அவென்யூ லேப் சேதாரம் அடையும் முன்பு, டெஸ்லா தனது ‘கார்பன்-பட்டன்’ விளக்குகளின் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே ஒருமுறை உருவாகியிருந்த ‘மிகவும் சிறப்பான கதிர்வீச்சு’ ஒன்றை மீண்டும் ஒரு முறை நேரடியாகக் கண்டார்.
‘ஷேடோகிராஃப்’ என்ற புகைப்பட முறையின் மூலம் பல படங்கள் எடுத்து வைத்திருந்த டெஸ்லா, தீ விபத்தில் ஒரு சில தரவுகளைத் தவிர அனைத்து ஆராய்ச்சிக் குறிப்புகளையும் இழந்தார். ஆனால், ராண்ட்ஜனின் ‘எக்ஸ்ரே’ அறிவிப்பினைக் கண்ட பிறகு தன்னுடைய ஆராய்ச்சியைப் பற்றி விரிவாகக் கடிதம் ஒன்றினை அவருக்கு எழுதினார். தீயிலியிருந்து மீட்ட சில புகைப்படங்களையும் ஆதாரமாக அனுப்பி வைத்தார்.
அவருக்குப் பதிலளித்த ராண்ட்ஜன் எக்ஸ்ரே கதிர்களின் வீச்சை டெஸ்லா எவ்வாறு உருவாக்கினார் என்ற முறையை, விளக்கமாகத் தரவுகளுடன் தனக்கு அனுப்பிடுமாறு கேட்டுக்கொண்டார். டெஸ்லா அதைச் செய்யவில்லை. அவர் இயல்பு அப்படி. தீ விபத்துக்குப் பின்னால் ராண்ட்ஜென்னின் பெயரும் சந்தேகப் பட்டியலில் இடம் பிடித்தற்கு இதுவே ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
இவையெல்லாம், 1895ஆம் ஆண்டு நடந்த முக்கிய நிகழ்வுகள். இனி, 1896ஆம் ஆண்டுக்கு வருவோம். இந்த ஆண்டு முழுவதும் டெஸ்லாவும் ஜார்ஜும் நயாகரா மின்சார ப்ராஜெக்ட்டின் வெற்றியிலேயே குறியாக இருந்தனர்.
அந்தத் திட்டத்திற்கு நிதியுதவி அளித்தவர்களில் அதிகளவு நிதி வழங்கி, ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸையும் நிகோலா டெஸ்லாவையும் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றவர் எட்வர்ட் டீன் ஆடம்ஸ் என்ற முதலீட்டாளர்.
எனவே அவரது பெயரில்தான் ‘எட்வர்ட் ஆடம்ஸ் மின்சார உற்பத்தி நிலையம்’ என்று நயாகரா நீர்வீழ்ச்சி மின் நிலையத்திற்கு இவர்கள் இருவரும் பெயர் வைத்தனர். ஜூன் 19, 1896 அன்று மூவரும் அங்கு சுற்றுப்பயணம் செய்து, பணிகளை ஆய்வுசெய்து, ஏற்கெனவே வெற்றிகரமாக நிறுவப்பட்டு இயங்கி வந்த மோட்டார்களை மேம்படுத்தி, பணிகளைத் துரிதப்படுத்தினர்.
நவம்பர் 16, 1896: இந்நாளில்தான் இந்த நயாகரா ப்ராஜெக்டின் வெற்றி, அடுத்த ஆச்சரிய நிலையினை அடைந்தது. 1000 குதிரைத்திறன் கொண்ட மின்சாரம் டெஸ்லாவின் ஏசி மின்சாரம் மாற்று மின்னோட்ட மோட்டார் என்ஜின்களின் மூலம் உருவாக்கப்பட்டு, நயாகராவின் ஆடம்ஸ் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 22 மைல்கள் தொலைவில் உள்ள நியூ யார்க்கின் ‘பஃபல்லோ’ பகுதிக்கு டிரான்ஸ்மீட்டர்கள் மற்றும் டிரான்ஸ்ஃபார்மர்கள் மூலம், வெற்றிகரமாகக் கடத்திச் செல்லப்பட்டு, பிறகு நியூ யார்க் நகருக்குள்ளும் விநியோகம் செய்யப்பட்டது.
முதலில் பஃபல்லோ ரயில்வே கம்பெனிக்கு வந்த அந்த மின்சாரம், வெஸ்டிங்ஹவுஸ் பவர் கம்பெனிக்கு சரியாக இரவு 12:00 மணி அடிக்கும் போது மாறியது. இந்நிகழ்வினை நகருக்குள் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்த கம்பெனியின் ஊழியர்கள் பீரங்கியினை வெடிக்க வைத்தும் ரயில்வே புகை விசில்களை மிகவும் சப்தமாக ஊத வைத்தும் மணிகளை அதிக ஒலியுடன் தொடர்ந்து அடித்தும் சிறப்பு சேர்த்தனர். அனைத்தும் டெஸ்லாவின் வடிவமைப்பு, ஜார்ஜின் ஊழியர்கள் மற்றும் ஆடம்ஸின் முதலீட்டால் சாத்தியமானவை.
டிசம்பர் 17, 1896: ஜாக்ரெப் நகரில் அமையப்பெற்ற ‘அகாடெமி ஆஃப் சயின்ஸஸ் அண்ட் ஆர்ட்ஸ்’ கூட்டமைப்பில் டெஸ்லாவுக்குக் கௌரவ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
ஜனவரி 12, 1897 : நயாகரா நீர்வீழ்ச்சி திட்டத்தின் வெற்றிகரமான மின்சார சப்ளை முறையை விளக்கி பஃபல்லோ பகுதியில் உள்ள எல்லிகாட் கிளப்பில் பெருங்கூட்டத்திற்கு நடுவே உரையாற்றினார் டெஸ்லா.
ஏப்ரல் 06, 1897: லெனார்ட், ராண்ட்ஜன் இருவரும் எப்படித் தங்கள் கண்டுபிடிப்புகளை தனது ஆராய்ச்சிகள், தரவுகள் மற்றும் சாதனைகளின் மூலம் தகவமைத்துக் கொண்டனர் என்பதை மறைமுகமாக இடித்துரைக்கும் வகையில் நியூ யார்க்கின் அறிவியல் அகாடெமியின் முன்பு, ‘அமெரிக்கன் மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி’ கட்டடத்தில் வைத்து, நிகோலா டெஸ்லா உரையாற்றி விளக்கினார். (The streams of Lenard and Roentgen and Novel Apparatus for their Production எனும் தலைப்பில் அமைந்த உரை அது).
செப்டெம்பர் 13, 1898: ‘மின்சார தெரபி மற்றும் பல தேவைகளுக்குப் பயன்படும் அதிக அதிர்வெண்கள் கொண்ட ஊசலாட்டிகள்’ என்ற தலைப்பில், பஃபல்லோ சொசைட்டி ஆஃப் நேச்சுரல் சயின்ஸஸ் அமைப்பினரின் முன்பு உரையாற்றினார் நிகோலா டெஸ்லா.
டிசம்பர் 08, 1898: பொதுவெளியில் முதன்முறையாகத் தனது ‘ஆட்டோமேட்டான்’ என்று அழைக்கப்பட்ட தானியங்கித் தொழில்நுட்பத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் சிறிய படகின் மாதிரி வடிவத்தின்மூலம், நியூ யார்க்கின் மாடிசன் ஸ்கொயர் கார்டனில் அப்போது நடந்த எலக்ட்ரிக்கல் கண்காட்சியின்போது செய்முறைப்படுத்திக் காட்டினார் டெஸ்லா.
அப்போது ஸ்பானிஷ்-அமெரிக்கப் போர் உச்சத்தில் சென்று கொண்டிருந்ததால் பலரும் இவரின் கண்டுபிடிப்புகளின் மூலம் ஆதாயம் கிடைத்துவிடாதா என்ற எண்ணத்தில் டெஸ்லாவின் விளக்கங்களைப் பார்க்கப் பெருங்கூட்டமாய்த் தொடர்ந்து கூடினர்.
(தொடரும்)