Skip to content
Home » நிகோலா டெஸ்லா #18 – மர்மங்களின் ஒளி

நிகோலா டெஸ்லா #18 – மர்மங்களின் ஒளி

கொலராடோ ஸ்பிரிங்ஸ் ஆராய்ச்சி நிலையம்

நிகோலா டெஸ்லாவின் ஆராய்ச்சிகள் எப்போதும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்பவை. அவற்றோடு சேர்த்து, அவரது தனிப்பட்ட வாழ்வின் தன்மைகளைப் பற்றியும் நாம் சற்று உற்று நோக்க வேண்டியுள்ளது.

அவருடன் தொடர்பு கொண்டிருந்த மனிதர்களில் பெரும்பாலானோர், நண்பர்களாக இருந்தாலும் சரி, எதிரிகளாக இருந்தாலும் சரி; உலக சமூகத்தின் மிக உயரிய வட்டத்திலிருந்து வந்தவர்கள். காந்தப் புலன் தன்னை நோக்கி இரும்பினை இழுப்பது போல், அவர் எப்போதும் தன்னை நோக்கி மனிதர்களை ஈர்த்து வந்தார்.

அவரது வேலையை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு பெற்ற அனைவரும், அவர்கள் தொழிலாளர்களாக இருந்தாலும் சரி, பொது மக்களாக இருந்தாலும் சரி; தன்னைப் போற்றி வணங்கும் பற்றாளர்களாக மாற்றி விடும் வீரியத்தை டெஸ்லா பெற்றிருந்தார்.

ஜில் ஜோன்ஸ் என்ற எழுத்தாளர் 2004ஆம் ஆண்டு எழுதிய Empires of Light: Edison, Tesla, Westinghouse, and the Race to Electrify the World என்ற புத்தகத்தில் டெஸ்லாவின் இந்த வசீகரிக்கும் தன்மையைப் பற்றி வேறொரு வித்தியாசமான விளக்கத்தைக் கொடுக்க முயற்சிக்கிறார். அதன் சாராம்சம் இதோ:

‘டெஸ்லாவின் தன்மை என்பது, இயற்கையிலேயே பலரையும் கவர்ந்திழுக்கும் தன்மையாக இருந்தது. இதை அவருக்கு இருந்த பெண் நண்பர்களின் எண்ணிக்கையை வைத்தே அறிந்து கொள்ளலாம். ஆனால் அவரைப் பற்றி பதிவு செய்யப்பட்ட தரவுகளில், ஒரு சில குறிப்பிட்ட பெண்களைத் தவிர, வேறு பெண்களைக் காணமுடிவதில்லை. அவர் தன் வாழ்வில் காதலித்த ஒரே ஒரு பெண், ஒரு பெண் புறாதான் என்றும் அதற்குத் தினமும் தீனி போட்டு வளர்த்து வந்ததாகவும் அது காணாமல் போன பிறகு தன் ஆன்மாவின் ஒரு பகுதியைக் காணவில்லையோ என்று நினைத்ததாகவும் கூறுகிறார்’.

இது வேறொரு ஐயத்தை எழுப்புவதைத் தவிர்க்கமுடிவதில்லை. ஒருவேளை நிகோலா டெஸ்லா தன்பாலின ஆர்வலராக இருந்தாரோ?

சில ஆய்வாளர்கள் டெஸ்லாவின் வாழ்வில் முக்கியப் பங்கு வகித்த, அவரது குடும்பம் சாராத ஐந்தாறு பெண்களை வரிசைப்படுத்துகின்றனர். அவற்றுள், விவேகானந்தரையும் டெஸ்லாவையும் சந்திக்க வைத்த நடிகை சாரா பெர்ன்ஹார்ட், ஜே.பி. மார்கனின் மகள் அன் மார்கன் என பல முக்கியமானவர்கள் இடம்பெறுகின்றனர். இந்த இரு பெண்களைப் பற்றியும் சற்று விரிவாக, நாம் பின்வரும் பகுதிகளில் காணவுள்ளோம்.

டெஸ்லாவைப் பல பெண்கள் காதலித்தாலும், அவர் எந்தப் பெண்ணையும் நெருக்கமாகக் காதலிக்கவில்லை என்பதைத் தரவுகளின் அடிப்படையில் நம்மால் உறுதியாகக் கூற இயலும். ஆயினும், அவர் பெண்களுடன் கல்லூரிக் காலத்தில் இருந்தே உடல் ரீதியான நெருக்கமான உறவில் இருந்ததையும் உறுதிப்படுத்த முடிகிறது. பிற்காலத்தில், அதாவது, 2015க்குப் பிறகுதான், டெஸ்லாவின் தன்பாலின ஈர்ப்பைப் பற்றிய கேள்விகள் தீவிரம் அடைந்தன.

இதில் ஐயத்தோடு குறிப்பிடப்படுபவர், டெஸ்லாவின் நண்பர் அந்தோணி ஜிகெட்டி. இவர் டெஸ்லாவுடன் 1891ஆம் ஆண்டு வரை இருந்ததாகவும், பிறகு காணாமலோ அல்லது இறந்தோ போயிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், நாம் ஏற்கெனவே பார்த்ததைப் போல, 1895ஆம் ஆண்டு தீ விபத்திற்குப் பிறகும் அவர் டெஸ்லாவுடன் இருந்ததற்கான ஆதாரங்கள் அகப்படுகின்றன.

லான்ஸ் ஹென்றிச் என்பவர் எழுதிய அறிவியல் கட்டுரை ஒன்றில், ‘1891 முதல் 1895 ஆம் ஆண்டு வரையிலான ஜிகெட்டியின் வாழ்வின் குறிப்புகள் சற்றே மர்மம் வாய்ந்தவை. டெஸ்லாவும், அவரும் மிகவும் நெருக்கமாக இருந்தனர். அவரைப் பற்றியும், அவரது உதவிகளைப் பற்றியும், 1893 ஆம் ஆண்டு ஏழு முறையும், 1895 ஆம் ஆண்டு ஐந்து முறையும் டெஸ்லா குறிப்பிட்டுள்ளார். ஆனால், இவற்றிற்குப் பிறகான அந்தோணியைப் பற்றிய டெஸ்லாவின் பேச்சுகள் மற்றும் குறிப்புகள் அனைத்தும், இறந்த காலத்தில் இருப்பது, மர்மத்தை அதிகரிக்கின்றது.’

ஜூரிச் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட டெஸ்லாவின் வாழ்வியல் சம்பந்தமான ஆய்வுக்கட்டுரையின் ஒரு பகுதியில், ஜிகெட்டி டெஸ்லாவுடன் சண்டை போட்டுவிட்டு, தென் அமெரிக்காவிற்குச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகமும் கிளப்பப்படுகின்றது. எனவேதான் அவர் 1895 வாக்கில், டெஸ்லாவின் முக்கியமான சில ஆராய்ச்சிகளின்போது திரும்பி வந்து துணை புரிந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இவற்றிலும் அதற்குப் பிறகான ஆண்டுகளின் குறிப்புகள் இல்லை.

இந்த ஐயங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால், டெஸ்லா ஜிகெட்டியை, ‘கிரேக்க இலக்கியத்தின் புனைகதைகளில் வரும் கடவுள்களைப் போன்ற, சிறந்த உடலமைப்பு கொண்டவன் என் நண்பன்’ என்றும், ‘சிறுவயது முதல் ஐரோப்பாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி, நான் அழைத்தவுடன் வந்து, எனக்கு உறுதுணையாக இருப்பவன் என் பால்ய நண்பன் ஜிகெட்டி! ஏசி மோட்டாரை நான் கண்டுபிடிக்கும்போது கூட என்னருகில் துணையாகத் தூண் போல் நின்றவன்’ என்றும் கூறியுள்ளார்.

இப்படி நெருக்கமாக இருந்த அவர்கள், பிரிந்ததற்கான காரணம் என்ன? 1891-92 வாக்கில், கடலில் கப்பல் பயணம் செய்யும்போது, மிகவும் துல்லியமாகத் திசை காட்டக்கூடிய ‘நாட்டிக்கல் காம்பஸ்’ என்ற திசைகாட்டி சாதனத்தை அந்தோணி ஜிகெட்டி கண்டுபிடித்து உருவாக்கி, டெஸ்லாவிடம் காண்பித்ததாகவும், அதனை ஆய்வு செய்த டெஸ்லா, அதனை ஏற்கெனவே வில்லியம் தாமஸ் என்ற மற்றொரு ஆய்வாளர் கண்டுபிடித்துவிட்டதாகவும், இது ஒன்றும் புதிதல்ல என்கிற ரீதியில் கூறியதாகவும் சில தரவுகள் பதிவு செய்கின்றன.

இதன் பிறகு ஜிகெட்டி கோபித்துக் கொண்டு சென்றுவிட்டதாகவும், சில சமயங்களில் திரும்பி வந்ததற்கான தரவுகள் இருப்பினும் ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, அதாவது, 1895-1896க்குப் பிறகு எந்த ஆதாரத்தையும் காணமுடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஒருவேளை ஜிகெட்டி மர்மமான முறையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் சந்தேகிக்கின்றனர்.

அடுத்ததாக, ரிச்சர்ட் பியர்சன் ஹாப்சன் என்கிற ஸ்பானிஷ்-அமெரிக்கச் சண்டையில் முக்கியப்பங்கு வகித்த ராணுவ வீரரும் டெஸ்லாவும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். டெஸ்லா ஐம்பது வயதைக் கடந்த பிறகும் இருவரும் இதே நெருக்கத்தோடு இருந்துள்ளனர். ஹாப்சனின் மனைவியே பொறாமைப்படும் அளவிற்கு இந்த நெருக்கம் இருந்திருக்கிறது.

டெஸ்லாவின் வாழ்வைப் பதிவு செய்த முதல் வாழ்க்கை வரலாற்றாசிரியர் என்கிற பெயர் பெற்ற ஜான் ஓ நீல் என்னும் ஆய்வாளர், ‘பெண்கள் என்றால், டெஸ்லாவுக்கு எப்போதும் ஆர்வம் குறைவுதான். அவரது காதல், பெரும்பாலான நேரங்களில், அறிவியலின் மீதே இருந்தது. 35 வயதுக்கு மேல், அவருக்கு சில குறிப்பிட்ட பெண்களைத் தவிர, அதிகமான அளவில் ஆண் நண்பர்கள் இருந்தனர்’ என்று கூறுகிறார்.

இது போன்ற பல கூற்றுகளைக் குழப்பியும் திரித்தும் இன்றைய ஆய்வாளர்கள் டெஸ்லா தன்பாலின ஈர்ப்பைக் கொண்டிருந்ததாக ஒரு சந்தேகத்தைக் கிளப்பியிருக்கின்றனர். சிலரோ, ஒரு படி மேலே போய் 35-36 வயதுக்குப் பிறகு, டெஸ்லா முழுவதும் அஃறிணைப் பாலுணர்வு கொண்டவராக மாறிவிட்டார், அதாவது, உடலுறவு மீது முழு அளவில் ஈர்ப்பு இல்லாத ஒரு ஜடம் போல் மாறிவிட்டார் என்று கூறுகின்றனர்.

தன்னுடைய அறுபதாவது வயதுக்குப் பிறகு, முழு பிரம்மச்சரிய வாழ்க்கையை டெஸ்லா வாழ்ந்ததாக கென்னத் ஸ்வீஸி என்கிற 19 வயது அறிவியல் பத்திரிக்கையாளர் ஒருவர் 1925ஆம் ஆண்டு வாக்கில் பதிவு செய்திருக்கிறார். ‘நான் டெஸ்லாவைச் சந்திக்கச் சென்றால், கதவைத் திறக்கும்போது, முழு நிர்வாணமாகத் திறப்பார். அவர் அதைப்பற்றிக் கண்டுகொள்ளவே மாட்டார். அவர் அனைத்தையும் தாண்டியவராக இருந்தார். வெட்கமற்ற, உடலுறவின்மீது ஆர்வமற்ற ‘பற்றற்ற’ நிலைக்குச் சென்று விட்டார்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

இந்தக் கூற்றுகளெல்லாம் உண்மையல்ல என்றும் ஒரு சிலர் வாதிடுகின்றனர். பீட்டர் ஈவிச் என்கிற ஆய்வாளர் ‘பாசார்’ என்னும் இதழுக்கு 1974 ஆம் ஆண்டு எழுதிய ஒரு கட்டுரையில், டெஸ்லாவுடன் நெருக்கமாக இருந்த பெண்களைப் பற்றியும் டெஸ்லாவை நெருக்கமாகக் காதலித்த பெண்களைப் பற்றியும், தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பின்புலத்தில்தான், ஜே.பி. மார்கனின் மகளான அன் மார்கன் மற்றும் நடிகை சாரா பெர்ன்ஹார்ட் ஆகிய இருவரும் டெஸ்லாவுடன் கொண்டிருந்த உறவை நாம் அணுகவேண்டியுள்ளது. இதனைப் பற்றி வரும் அத்தியாயங்களில், தேவைப்படும்போது, இன்னும் சில தகவல்களுடன் சேர்த்துக் காண்போம்.

0

இனி, நாம் காலவரிசைப்படி 1899 மற்றும் 1900ஆம் ஆண்டுகளில் கவனம் செலுத்துவோம்.

டெஸ்லாவின் நயாகரா மின் நிலைய வெற்றிக்குப் பிறகு, ஜே.பி. மார்கனுக்கு டெஸ்லாவின்மீது அதிக மரியாதை ஏற்பட்டது. தான் முதலில் அவரைப் பற்றி எடிசனுடன் சேர்ந்து போட்ட தப்புக் கணக்கிற்குப் பிராயச்சித்தம் தேட வாய்ப்பினை எதிர்பார்த்திருந்த அவர் தனது மகளான அன் மார்கனிடம், ‘உனக்கு டெஸ்லாவுடன் காதல் செய்ய விருப்பம் இருக்கிறதா?’ என்று தன் உள்ளாக் கிடக்கையைக் கேட்டே விட்டார். அந்த அளவிற்கு, டெஸ்லா அவரைத் தன் பெருவெற்றிகளின் மூலம் வசீகரித்து விட்டார்.

‘முயற்சி செய்து பார்க்கிறேன் தந்தையே! அவர் அறிவியலில் உச்சம் தொட்ட மாமனிதர்! பெண்கள் போன்ற சாதாரண போதைக்கு மயங்குபவர் போல் தெரியவில்லை. இருப்பினும் நான் அவருடன் பழகிப் பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார் மகள்.

சில அத்தியாயங்களுக்கு முன், டெஸ்லா தான் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கூறிய பேட்டியையும், மேலே ஜான் ஓ’நீல் கூறிய ‘அறிவியலே டெஸ்லாவின் முதல் காதல்’ என்ற கூற்றையும் சேர்த்துப் பார்த்தால், அன் மார்கனின் கணிப்பு முற்றிலும் சரி என்பது புரியும். அவர் டெஸ்லாவுடன் இணைந்து, நெருக்கமாகப் பழகத் தொடங்கினார்.

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள ‘கொலராடோ ஸ்பிரிங்ஸ்’ என்னும் இடத்திற்குச் செல்லும் வழியில், மறுபடியும் இல்லினாய் மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற சிகாகோ நகருக்கு விஜயம் செய்த டெஸ்லா, ஒரு ஹீரோவுக்கான வரவேற்பைப் பெற்றார். அங்குள்ள கமர்ஷியல் கிளப்பின் பிரதிநிதிகள் முன்னிலையில், ‘டெலி ஆட்டோமேட்டிக்ஸ்’ என்ற தலைப்பில், மே 13, 1899 அன்று ஒரு சிறப்பு வாய்ந்த உரையினை நிகழ்த்தினார்.

‘டெலி ஆட்டோமேட்டிக்ஸ்’ என்றால் என்ன? ஒளி அலைகளின் மூலம், தானியங்கி முறையில், நேரடி அலைவரிசையில், செய்திகளைப் பரிமாறும் முறை. வெகுஜன மக்களுக்குப் புரியும்படி கூற வேண்டுமென்றால், தொலைக்காட்சிப் பெட்டி என்று ஒன்று இல்லாத காலத்திலேயே, ‘நேரடி ஒளிபரப்பு’ முறையைப் பற்றி, டெஸ்லா இந்த உரையில் ஆய்வு செய்து பேசியிருக்கிறார்.

டெஸ்லாவின்ஆராய்ச்சி உண்மையில் ஆழமானது. ஒளி மற்றும் ஒலி அலைகளை நினைத்த மாத்திரத்தில் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு ஒரு சாதனம் மூலம் கடத்தவேண்டும் என்று அவர் கனவு கண்டார். தகவலை வாங்குபவர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள், ‘ரிசீவர்’ சாதனத்துடன் இருக்க வேண்டுமென்பது விதி. இதனை உலகின் அனைத்து மூலைகளுக்கும் அவர் விரிவுபடுத்த நினைத்தார். தொலைவு என்பது இங்கே எவ்வகையிலும் குறுக்கிடக்கூடாது என்பது அந்த அலைஞனின் ஆசையாக இருந்தது.

பிறகு மே 17, 1899 அன்று கொலராடோ ஸ்பிரிங்ஸ் பகுதிக்குச் சென்ற டெஸ்லா அங்கு ஒரு சோதனை நிலையத்தை உருவாக்கினார். அதிக வால்டேஜ் மற்றும் அதிக அதிர்வெண்கள் கொண்ட ஒளி-ஒலி அலைகள் சார்ந்த சோதனைகளை நியூ யார்க்கில் உள்ள தனது புதிய கூடத்தில் பரிசோதிக்கமுடியாது என்பதால் இந்த ஏற்பாடு. கொலராடோவில் உள்ள புகழ்பெற்ற அல்டா விஸ்டா ஓட்டலில் அறை எண் 207இல் தங்கினார்.

புதிய சோதனைச் சாலையில், 15 ஜூன் 1899 அன்று ஐந்து அங்குலம் நீளம் கொண்ட, மிகவும் தடிமனான ஒளி அலைகளை, மிகவும் இரைச்சலான ஒலி அலைகளோடு சேர்த்தே உருவாக்கி அனைவரையும் ஆச்சர்யம் கொள்ளச் செய்தார்.

3 ஜூலை 1899 அன்று புவி-மின்சாரவியலில், புதியதொரு நூதன சகாப்தத்தைப் படைத்து விட்டதாக அறிவித்தார் டெஸ்லா. இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், ஓரிடத்திலிருந்து, உலகம் முழுவதும் மின்சாரம் விநியோகிக்க முடியும் என்று அகமகிழ்ந்தார். அந்தக் கண்டுபிடிப்பின் பெயர், ‘நிலப்பரப்பில் நிலைகொள்ளும் மின்சாரப் பதிவேற்றம் மற்றும் பரப்புதல் முறை’. இன்றைய வயர்லெஸ் டேட்டா டிரான்ஸ்பர் மற்றும் வயர்லெஸ் தொலைத்தொடர்பு முறைகளுக்கு அடிப்படை இதுதான்.

நியூ யார்க் திரும்பிய பின்னர் பெரும் பணக்காரரும் ஓட்டல் அதிபருமான ஜான் ஜேக்கப் அஸ்டார் என்பவர் டெஸ்லாவைச் சந்திக்க அழைத்தார். டெஸ்லாவை வெகுவாகப் பாராட்டிய அஸ்டார், ஒரு லட்சம் அமெரிக்க டாலரை டெஸ்லாவின் ஆராய்ச்சிகளுக்கு முதலீடாக வழங்கினார். அவர் அப்போது தங்கியிருந்த கெர்லாச் ஓட்டலில் இருந்து அஸ்டாருக்குச் சொந்தமான ‘வால்டோஃர்ப் – அஸ்டோரியா’ ஓட்டலுக்குக் குடிபெயர்ந்தார். கெர்லாச் ஓட்டலுக்கு முன்பாக டெஸ்லா தங்கியிருந்த ‘அஸ்டோர் ஹவுஸ்’ சொகுசு ஓட்டலுக்கும் இந்த அஸ்டார்தான் சொந்தக்காரர்.

1899ஆம் ஆண்டுவரை கணக்கு வைத்துக்கொண்டால் அப்போதைய உலகின் மிக உயரமான கட்டடம் இந்த வால்டோஃர்ப்-அஸ்டோரியா ஓட்டல். அதன் பிறகு, ஓர் இரவு தனது நியூ யார்க் ஆய்வகத்தில் வெகு அதிக சக்தி வாய்ந்த, அதிக அலை உணர்திறன் கொண்ட ரேடியோ அலைகள் ரிசீவர் சாதனத்தில் நிகோலா டெஸ்லா கூர்நோக்கோடு ஆய்வு செய்து வந்தார். அப்போது விநோதமான தாளலயம் கொண்ட துடிப்புகளின் சிக்னல்களை அவர் பெற்றார்.

இது பூமியில் உள்ள மனிதர்களால் அனுப்பப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று உறுதியாகக் கூறினார் டெஸ்லா. வேற்றுலகவாசிகள் சிலர் பூமிக்கு அனுப்பிய அலைகள் என்று அவர் உறுதியோடு நம்பவும் தொடங்கினார். ஆனால் இதனை அவர் அறிவியல் உலகில் சொன்னபோது அவரது அறிவையும் ஆற்றலையும் மதித்த பலரும்கூட அவரைக் கடுமையாகக் கண்டித்தனர்.

1900 ஆம் ஆண்டில், அவர் தனது கொலராடோ சோதனைகளின்போது கிடைக்கப்பட்ட ஒளி-ஒலி அலைகள் நூறு அடி வரை பாயும் தன்மை கொண்டன என்பதை மேலும் சில ஆய்வுகளின் மூலம் உறுதி செய்தார். அவை அவருக்கு மட்டில்லாத மகிழ்ச்சியைத் தந்ததாக தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.

இதே ஆண்டில், தான் ஏற்கெனவே கண்டுபிடித்து வைத்திருந்த சுழலும் காந்தப்புலன் அலைகளோடு, மேற்கண்ட கொலராடோ சோதனையில் கிடைத்த மின் சப்ளை செய்யும் அலைகளை, எப்படி இணைத்து மின்கடத்தல் செய்யலாம் என்பதற்கான திட்டத்தையும் வடிவமைப்பும் உருவாக்கினார்.

அமெரிக்க ராணுவத்தில் ரியர் அட்மிரல் பதவியில் 1900 ஆம் ஆண்டு இருந்த ஆர்.பி.பிராட்ஃபோர்ட் என்பவரைச் சந்தித்த டெஸ்லா, தன்னுடைய ‘வயர்லெஸ் டெலிகிராஃபி’ முறையை ராணுவத்திற்குச் சமர்ப்பிக்க விண்ணப்பம் செய்தார். அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, சோதனைகள் செய்து காண்பிக்க அமெரிக்க ராணுவம் அழைத்தது. சோதனை முடிந்தபின், சில விஷயங்களைச் சரி பார்த்து வரச்சொல்லி அவருக்கு நம்பிக்கை அளித்தது.

ஓசோன் கதிர்களை உருவாக்கி, சுத்திகரிப்பும் செய்யும் ஊசலாட்டி

இதே ஆண்டில்தான் ‘ஓசோன் கதிர்களை உருவாக்கி, சுத்தம் செய்யும் ஆக்சிலேட்டர் (ஊசலாட்டி) மெஷின்’ ஒன்றை நிகோலா டெஸ்லா கண்டுபிடித்தார். கேட்கவே படு விசித்திரமாக இருக்கும் இந்த ஆராய்ச்சி குறித்து மேலும் பார்க்கலாம்.

(தொடரும்)

பிரத்தியேக ஒளி-ஒலி அலை ஆராய்ச்சிகளுக்காக டெஸ்லா கொலராடோ ஸ்பிரிங்ஸ் பகுதியில் கட்டிய ஆராய்ச்சி நிலையம். 1899ஆம் ஆண்டு. ஆராய்ச்சி நிலையத்தில், அதிக அளவு மின்சாரம் வெளிப்படும் ஒரு நிகழ்வின்போது எடுத்த படம். இந்த ஊசலாட்டியின் மூலம் 65 அடிகளுக்கு 500 வோல்ட் மின்சாரத்தைக் கடத்தினார் டெஸ்லா.

பகிர:
ராம் குமார் சுந்தரம்

ராம் குமார் சுந்தரம்

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதுபவர். மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார். ஒரு கவிதைத் தொகுப்பு, ஓர் அறிவியல் புனை கதை தொகுப்பு ஆகியவற்றை ஆங்கிலத்திலும் தமிழில் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். இவருடைய பிரதிலிபி பக்கம் : https://pratilipi.page.link/8Hga6Dwpr4kdmqy99 தொடர்புக்கு : rksthewriter@gmail.comView Author posts

2 thoughts on “நிகோலா டெஸ்லா #18 – மர்மங்களின் ஒளி”

  1. Vijayalakshmi Elumalai

    ஒவ்வொரு வரியும் படிக்க படிக்க ஆர்வம் அதிகரிக்கிறது….உயரிய கொள்கையோடு வாழ்ந்த டெஸ்லா அதை சாதித்தும் காட்டினார்… மனதிற்கு புத்துணர்ச்சி ஊட்டும் ஒரு அலைஞனின் வாழ்கையை படிக்கும் படி செய்தமைக்கு நன்றி திரு. ராம் அவர்களே..

  2. Ram Kumar Sundaram

    ‘அலைஞன்’ என்று நிகோலா டெஸ்லாவை நான் விளித்த புதிய சொல்லினை, நீங்களும் பயன்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி விஜயலக்ஷ்மி அவர்களே! தங்களின் அறிவியல் தேடலின் ஆர்வத்திற்குத் தீனி போடும் விதமாக, எங்களின் தொடர் அமைந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. இனியும் அவ்வாறே இருக்குமென்று நம்புகிறேன். தங்களின் விரிவான விமர்சனத்திற்கு, என் பணிவான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! 😊🙏🏼

Comments are closed.