Skip to content
Home » நிகோலா டெஸ்லா #19 – கனவின் ஒளி

நிகோலா டெஸ்லா #19 – கனவின் ஒளி

கனவின் ஒளி

இதுவரை…

நிகோலா டெஸ்லா, ஆன் மார்கனுக்கு இடையேயான அன்பு தினசரி வளர்ந்து கொண்டிருந்தது. பத்திரிகைகள் இவர்களைப் பற்றி, பக்கம்பக்கமாக எழுதின. மார்கன் சீனியர், தன் மகளை மீண்டும் ஒரு முறை கேட்டார்.

‘என்ன ஆன், நான் கூறியதுபோல டெஸ்லாவைத்தான் திருமணம் செய்யப்போகிறாயா?’

‘அப்பா, அவர் சொல்லும் அறிவியல் கூற்றுகளைக் கேட்டு, பலமுறை ஆச்சர்யத்தில் வாய்மூடாது அமர்ந்திருந்த என்னைப் பார்த்து யாரேனும் இஷ்டத்துக்குக் கட்டுக்கதைகளைச் சொல்வார்கள். நீங்கள் அறிமுகம் செய்திருக்காவிட்டாலும்கூட, நாங்கள் பழகியிருப்போம். அது உங்களுக்கே தெரியும். நாங்கள் இருவரும் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் நெருங்கிய நண்பர்கள். அதனைத் தாண்டிய ஒரு முடிவை, அவரும் எடுக்கவில்லை, நானும் வற்புறுத்தவில்லை அப்பா’ என மகள் பதில் தந்தார்.

‘அவரது திறமை பற்றி எனக்குத் தெரியும். ஏற்கெனவே அவரை ஒருமுறை மறைமுகமாகத் தடுத்தமைக்குப் பிராயச்சித்தமாக ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்றுதான் சிந்தித்து வருகிறேன். உன்னைப் பெண் கேட்டிருந்தால்கூட, புதிதாகச் சில அறிவியல் சார்ந்த தொழில்களுக்குப் பொறுப்பு ஏற்கச் சொல்லி, சரியென்றும் சொல்லியிருப்பேன்’ தன் எண்ணங்களை வெளிப்படுத்தினார் மார்கன் சீனியர்.

அவர் இவ்வாறு தன் மகளுடன் பேசியதை, தன் நண்பர்களுடன் பகிர்ந்ததாக, 1975ஆம் வருடம், சிகாகோ பல்கலைக்கழகத்தில், ‘விஞ்ஞானிகளின் சொல்லப்படாத வாழ்க்கைச் சம்பவங்கள்’ என்கிற பகுப்பாய்வுக் கட்டுரைத் தொகுப்பில் செய்தியாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மார்கன் சீனியருக்கு அவரது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு 1901ஆம் ஆண்டுக் கிடைத்தது.

1901ஆம் ஆண்டு, டெஸ்லாவின் வாழ்வில் பல முக்கிய சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்த ஆண்டு. அவற்றைப் பார்க்கும்முன், நிகோலா டெஸ்லாவின் இன்னொரு முக்கிய அறிவியல் கொள்கையைப் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

‘வலதுசாரி, இடதுசாரி, கம்யூனிசம், தமிழ்த் தேசியம், திராவிடம், சமூக நீதி, நடுநிலைவாதம், சோஷியலிசம், ஃபாசிசம், தேர்தல் ஜனநாயகம், மன்னராட்சி, கொடுங்கோல் ஆட்சி’ – தமிழ்நாடு, இந்தியா, உலக நாடுகளில் உள்ள அரசியல் கொள்கைகள், ஆட்சி முறைகளைப் பட்டியல் போட்டால் அவை மேற்கூறிய பிரிவுகளில் ஏதாவது ஒன்றுக்குள் அடங்கி விடும்.

ஆனால், இவை அனைத்தையும் கடந்ததொரு கொள்கையை, அறிவியலும் அறவியலும் சேர்ந்த கொள்கையை 1890களிலேயே தனது கனவுக் கொள்கையாக நிகோலா டெஸ்லா முன்வைத்தார் .

அது, திடீரெனத் தோன்றியதல்ல. சிறுவயதில் இருந்தே உருவாகி வந்த கனவு. தன் அண்ணனுக்குக் குதிரையேற்றத்தில் அடிபட்டு, அவன் இறப்பதற்கு முன், இருள் சூழ்ந்த ஓர் அறையில் வைத்தியம் செய்தபோது, சிறுவயதுப் பையனாக நின்று கொண்டிருந்த அவரின் எண்ணத்தில் உதித்த, உலகுக்கே ஒளியூட்டும் கனவு.

எல்லா வகை அரசியல் கோட்பாடுகள் கொண்டவர்களுக்கும், எந்த வகை அரசு முறை கொண்ட நாடாக இருந்தாலும் பெருங்கோபத்தை ஏற்படுத்திய கொள்கையது. அவரவர் கோபத்துக்கு ஆயிரம் காரணங்கள். நிகோலா டெஸ்லா அப்படி என்ன கொள்கையைச் சொன்னார்? அறிவியல் கொள்கையில் இவ்வளவு அரசியல் சர்ச்சைகள் ஏன்?

அது தான், இன்றும் அவரது பெயரை ஓங்கி ஒலிக்கச் செய்யும் கொள்கையான, ‘இலவச சக்தி’ எனும் கொள்கை.

Free Energy என்ற ஆங்கிலப் பதத்தில் அதிகம் குறிப்பிடப்படும் இந்தக் கொள்கையைப் பற்றி, முன்பு நாம் சுருக்கமாகப் பார்த்தோம். இப்போது விரிவாகப் பார்க்க வேண்டிய நேரம்.

இந்த ‘இலவச சக்தி’ எனும் கொள்கையின் ஒரு பகுதிதான் ‘இலவச மின்சாரம்’. அது ஒரு நகருக்கு மட்டுமல்ல, ஒரு மாநிலத்துக்கு மட்டுமல்ல, ஒரு நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் நிகோலா டெஸ்லாவின் பெருங்கனவாக இருந்தது.

மின்சாரத்தை இன்று வியாபாரப் பொருளாக்கி, இயற்கையாகக் கிடைக்கும் மின்சாரம், கனிமவளச் சக்திகளைக்கூட சந்தைப்படுத்திப் பார்க்கும் கார்ப்பரேட் நிறுவனங்களும், அவை சார்ந்த அரசாங்கங்களும், தங்கள் மக்களிடம் பேசும் கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, முழுமூச்சாக டெஸ்லாவின் ‘இலவச சக்தி’ கொள்கையை எதிர்த்தன என்பதே உண்மை.

ஆம், அவர்களின் செல்வம் கொழிக்கும் பல வியாபாரங்களைக் காலி செய்யும் விதமாக அவரது கொள்கை இருந்தது. மின்சாரம், ரேடியோ அலைகள், தொலைத்தொடர்பு அலைகள், சாதனங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், பல்வேறு மெஷின்கள், மரணக் கதிர்கள் என்று இவர்கள் பெயரிட்ட அந்தக் கதிர்வீச்சை டெஸ்லா இலவசமாகக் கடைக்கோடி மனிதனுக்குக்கூடக் கொடுக்க நினைத்தால் இந்த உலக அரசாங்கங்கள் அவரை எதிர்க்காமல் வேறு என்ன செய்யும்?

‘எந்த வகையில் நான் அவருக்கு உதவி செய்ய?’ என்று மார்கன் யோசித்தபோது, அவரிடம் டெஸ்லா, இந்தக் கொள்கையைக் பற்றி விளக்கிக்கூறி, தனது டெஸ்லா டவர் என்னும் வார்டன்ஃகிளிப் டவரின் வரைபடத்தைக் காட்டினார்.

1914ஆம் ஆண்டு, அமெரிக்கக் காப்புரிமைக் கூட்டமைப்பு இறுதி செய்த வார்டன்ஃக்ளிப் டவருக்கான வரைபடம்.
1914ஆம் ஆண்டு, அமெரிக்கக் காப்புரிமைக் கூட்டமைப்பு இறுதி செய்த வார்டன்ஃக்ளிப் டவருக்கான வரைபடம்.

அதைக் கண்ட மார்கன் அசந்துபோனார். உடனே, அவர் அதனை வேறுவிதமாகவும் அணுகினார். டெஸ்லாவின் இந்த முயற்சி வெற்றிப்பெற்றால், அதன்மூலம் தானும், இப்போது இருப்பதைவிட நிறைய பணம் சேர்க்கலாம் என்று திட்டமிட்டார். அவருக்கு உதவி செய்வது ஒரு புறம் நிறைவாக இருந்தாலும், மறுபுறம், எதையுமே தொழிலாகவும் ஆதாரமாகவும் பார்த்தார்.

டெஸ்லா, ஆன் மார்கன் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தாலும், அது எவ்வளவு தூரம் சென்று முடியும்? குறிப்பாக திருமணத்தில் முடியுமா? என்ற சந்தேகம் மார்கனுக்கு எப்போதும் இருந்தது.

அதனால்தான், அவர் ஒரே கல்லில் பல மாங்காய்களுக்குக் குறிவைத்தார்.

ஆன்னின் மூலம் டெஸ்லாவின் நம்பிக்கையைப் பெற்ற மார்கன், இன்னொன்றையும் நினைவில் கொண்டார். ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸைத் தவிர, டெஸ்லாவைச் சரியாகச் செயல்பட வைத்தோர் யாருமில்லை. அதனால் டெஸ்லா வெற்றிப்பெற்றாலும் தன் பணம் திரும்ப வர வேண்டும், தோற்றாலும் திரும்ப வர வேண்டும் என்ற புத்திசாலித் தனமான வகையில் ஓர் ஒப்பந்தம் புரிந்தார்.

அந்த ஒப்பந்தம் போடுவதற்கு முன், ஒரு நிகழ்ச்சியில் எதேச்சையாக எடிசனையும் சந்தித்திருக்கிறார். அப்போது அவர், ‘நான் டெஸ்லாவை எதிர்க்கும் மனநிலையில் இல்லை மார்கன். ஆனால் அவர் மிகப்பெரிய இலட்சியங்களைக் கொண்டவர். நிஜத்தில் அவை எவ்வளவு தூரம் சாத்தியம் என்ற கணக்கீட்டைச் செய்துவிட்டுக் களமிறங்குங்கள். ஒப்பந்தம் உங்களுக்குச் சாதகமானதாக இருக்கட்டும். ஏனெனில், அவருக்குப் பல முதலீட்டாளர்கள் கிடைப்பார்கள். ஆனால் உங்கள் பணத்துக்குப் பாதுகாப்பு வேண்டும். இன்னொன்று, அவருடன் ஒப்பந்தம் செய்வது மூலம் உலக நாடுகள், ஏன், அமெரிக்காவின் உள்ளேயே கூட பல கேள்விகளை எழுப்பும் எதிரிகளைச் சந்திக்க நேரிடும். அதனையும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தரமான ஆலோசனையை வழங்கினார். இதனை ‘தி நியூயார்க் சைன்டிஃபிக் ரிஸர்ச்சர்’ பத்திரிகையின் தரவுகள் கூறுகின்றன.

மார்ச் 1, 1901 அன்று, நிகோலா டெஸ்லா, ஜே.பி. மார்கன் சீனியர் இடையே தொழில் ஒப்பந்தம் வெகு விமரிசையாகக் கையெழுத்து ஆனது.

தன்னுடைய காப்புரிமைகள், கண்டுபிடிப்புகளில் 51 சதவிகிதப் பங்குகளை, டெஸ்லா மார்கனுக்கு எழுதி வைத்தார். ஆனால், அவரோ அப்போதைய தன்னுடைய சந்தை நிலையை விட, குறைவாகவே காசு வாங்கினார். அவர் வாங்கியது 1,50,000 அமெரிக்க டாலர்கள். இருப்பினும், இந்தப் பணமே வார்டன்க்ஃளிப் டவர் கட்டுவதற்குப் போதுமானதாக இருக்கும் என எண்ணினார்.

மார்கனுக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது என்னவென்றால், டெஸ்லாவின் டவர் டிஸைன் தான். இது வெற்றிபெற்றால், உலக வரலாற்றில் தன் பெயர் இடம்பெற்றுவிடும் என்று அவருக்குக் கண்கூடாகத் தெரிந்தது.

ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், அமெரிக்காவின் நியூயார்க் அருகில் உள்ள ஸ்டேடன் ஐலேண்ட் எனும் பகுதிக்கு அருகில், லாங் ஐலேண்ட் வரம்பிற்குள் இந்த டவர் கட்டப்படும் எனப் பேசினார் டெஸ்லா.

‘இந்த டவரின் பெயரைச் சிலர் ‘டெஸ்லா டவர்’ என்று என் பெயரில் சொல்கிறார்கள். நான் ஒரு டவரைக் கட்டுவதால் அதனுடன் எளிதில் என் பெயர் ஒட்டிக் கொண்டது. ஆனால் அதன் பெயர் வார்டன்க்ஃளிப் டவர். இதன்மூலம் நான் உருவாக்கப்போகும் தொழில்நுட்பம்தான் ‘இலவச சக்தி’ எனும் எனது கனவுக் கோட்பாட்டின் அடிப்படையிலான ‘The Worldwide Wireless System’’ என்று மயிர்கூச்செறிய வைக்கும் அறிவிப்பை வெளியிட்டார்..

உலக விஞ்ஞானிகள் இதனைக் கேட்டு மிரண்டு போயினர். உலக நாடுகள் இதனைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்காக நியூயார்க் முழுவதும் சுற்றித் திரிந்தனர். மார்கன் தனது பாதுகாப்புக்கு ஒரு அணியையே பணம் கொடுத்து அமர்த்த வேண்டிய நிலை உருவானது.

ஐரோப்பிய தேசங்களும், அமெரிக்காவில் உள்ள அவரது எதிரிகளும் சேர்ந்து இந்தத் திட்டத்தினை உடைக்க ஒரு சரியான ஆளைப் பயன்படுத்தினர்.

அவர்தான் ரேடியோ அலைகளைக் கண்டுபிடித்ததாக நாமெல்லாம் இன்றும் அறிந்திருக்கும், ‘மார்சீஸ் கிக்லெமோ மார்கோனி’. சுருக்கமாக மார்கோனி எனப்படும் இத்தாலிய விஞ்ஞானி. இப்போது இந்தப் பிரச்சனையை சற்று விரிவாகப் பார்ப்போம். கூர்ந்து கவனித்தால், இதன் உள்ளடி வேலைகள் புரியும்.

மார்கோனி நல்லவர்தான். ஆனால், டெஸ்லா கண்டுபிடித்து உரிமம் பெற்று வைத்திருந்த, தொலைத்தொடர்பு அலைகளை வைத்து ரேடியோ சிக்னல்களை உள்வாங்கும் ஒரு சாதாரண சோதனையை, ‘மார்ஸ் கோடை’ (Morse Code) வைத்துச் செய்துவிட்டார். உடனே, பொறியாளர்கள் கழகம், அவருக்கு ரேடியோவைக் கண்டுபிடித்ததற்கான காப்புரிமையை வழங்க விண்ணப்பம் செய்துவிட்டது. அவருக்குச் செலவு வைக்காமல், இவர்களே இலட்சக்கணக்கில் செலவு செய்தனர்.

இங்கிலாந்து நாட்டில் கார்ன்வால் மாகாணத்தில் உள்ள போல்து என்னும் இடத்தில் இருந்து, இரண்டாயிரம் மைல்கள் தொலைவில், அடலாண்டிக் கடலைக் கடந்து, கனடா நாட்டில் உள்ள நியூஃபவுண்ட்லேண்ட் எனும் இடத்திற்கு, ‘S’ (எஸ்) என்கிற ஆங்கில எழுத்துருவை, மார்ஸ் கோட் சிக்னல் மூலம், ரேடியோ அலைகளாக அனுப்பி, பெறச் செய்தார். இது டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கி, 12ஆம் தேதி முடிந்த ஒரு சோதனையாகும். இதன் அடிப்படையில், அவருக்கு உடனே காப்புரிமை விண்ணப்பம் செய்யப்பட்டது. ஏற்கெனவே 1897இல், டெஸ்லாவின் ஆராய்ச்சியையொட்டி மார்கோனியும் ஒரு ஆராய்ச்சி செய்து, முதல் நிலை உரிமத்தை அதே ஆண்டில் பெற்றிருந்தார்.

தான் கண்டுபிடித்த ரேடியோ அலைகளை வைத்து, ஒருவன் ஒரு ரிசீவர் சாதனைத்தையே உருவாக்கி, அதன் வெற்றியைக் கேட்கிறான் என்றதும் டெஸ்லாவுக்குக் கோபம் வந்தது. அது மார்கோனியின் மீதான தனிப்பட்ட கோபம் அல்ல. அவருக்கு ஆதரவாக இருந்த தன்னுடைய எதிரிகளின் மீதான கோபம். அப்போது மார்கோனியை விட்டு வைத்த டெஸ்லா, இப்போது 1901இல் விடவில்லை. அவரது காப்புரிமையை எதிர்த்து, அமெரிக்கக் காப்புரிமை அலுவலகத்தில் கடிதம் மூலம் மேல் முறையீடு செய்தார். இதற்கு மார்கனும் துணை நின்றார்.

இந்த முறையீடு ஒரு புறம் இருக்க, வழக்கம் போல, சற்றும் மனம் தளராத டெஸ்லா, தனது டவரின் கட்டமைப்பை, மார்கோனியின் சோதனை முடிந்த டிசம்பர் 12, 1901க்கு ஒரு நாள் முன்னதாகவே, டிசம்பர் 11, 1901 அன்று இனிதே தொடங்கினார்.

(தொடரும்)

பகிர:
ராம் குமார் சுந்தரம்

ராம் குமார் சுந்தரம்

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதுபவர். மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார். ஒரு கவிதைத் தொகுப்பு, ஓர் அறிவியல் புனை கதை தொகுப்பு ஆகியவற்றை ஆங்கிலத்திலும் தமிழில் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். இவருடைய பிரதிலிபி பக்கம் : https://pratilipi.page.link/8Hga6Dwpr4kdmqy99 தொடர்புக்கு : rksthewriter@gmail.comView Author posts

2 thoughts on “நிகோலா டெஸ்லா #19 – கனவின் ஒளி”

    1. Ram Kumar Sundaram

      Thank you very much Vijayalakshmi Madam, for your kind and positive review of this chapter. We look forward to have your valuable support. 😊🙏🏼

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *