Skip to content
Home » நிகோலா டெஸ்லா #20 – தன்னம்பிக்கையின் ஒளி

நிகோலா டெஸ்லா #20 – தன்னம்பிக்கையின் ஒளி

நிகோலா டெஸ்லா

1900ஆம் ஆண்டு முதல் டெஸ்லாவின் வாழ்க்கையில் வார்டன்ஃக்ளிப் டவரையொட்டி மட்டும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றன. டெஸ்லா டவர் அமைந்திருந்த பகுதியின் பெயர் ஷோர்ஹாம். இது லாங் ஐலேண்ட் பகுதியில் உள்ள சிறிய கிராமம். நியூயார்க் நகரில் இருந்து கிட்டத்தட்ட நூறு மைல்கள் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த இடத்தில்தான் மார்கன் கொடுத்த பணத்தில் வார்டன்ஃக்ளிப் டவரின் கட்டுமானத்தைத் டெஸ்லா தொடங்கி இருந்தார்.

ஸ்டான்ஃபோர்ட் ஒயிட் என்கிற புகழ்பெற்ற கட்டட பொறியாளர்தான் வார்டன்ஃக்ளிப் டவரை வடிவமைக்கும் தலைமைக் கட்டுமான பொறியாளராக இருந்தார். அவரது ஆலோசனைகளைப் பெற்றுத்தான் டெஸ்லா தனது டவரை உருவாக்கினார். 1906ஆம் ஆண்டு ஒரு பெண் விவகாரத்தில் தியேட்டரில் வைத்து ஒயிட் படுகொலை செய்யப்படும்வரை, ஒயிட்டின் கடைசி வடிவமைப்பாக டெஸ்லாவின் டவர் பணிகள்தான் இருந்தன.

மார்கனுக்கு முன்பாக டவர் வடிவமைப்புக்காக டெஸ்லா பலரிடமும் உதவி கேட்டிருந்தார். அதில் அவரது ஆத்ம நண்பர் ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸீம் அடக்கம். டெஸ்லாவுக்குக் கடனாக 6000 டாலர்களை வழங்கிய ஜார்ஜ், வேறு சில பணக்காரர்களிடமும் நிதியுதவி கேட்குமாறு அறிவுறுத்தினார். டெஸ்லாவைப் பற்றி அறிந்த, ஜார்ஜ் தங்கியிருந்த வால்டோர்ஃப்-அஸ்டோரியா விடுதியின் பங்குதாரர்களில் ஒருவரான நான்காம் ஜான் ஜேக்கப் அஸ்டோர், டெஸ்லாவின் கம்பெனியில் 500 பங்குகளை வாங்கி உதவி செய்தார். இவரின் சிபாரிசின் மூலம்தான், டெஸ்லா அந்த விடுதியில் நிரந்தரமாக அறையெடுத்துத் தங்கினார் என்பதை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். இந்த நான்காம் ஜான் ஜேக்கப் அஸ்டோர், டைட்டானிக் கப்பலில் மனைவியுடன் பயணம் செய்தபோது அந்தக் கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்தில் சிக்கியது. அதில் அவர் இறந்தும்போனார். அதற்குப் பின், டெஸ்லாவின் கதை வேறு மாதிரி மாறிப்போனது. அதிலும் இந்த டவர் சம்பந்தப்பட்டிருக்கிறது. அதனைப் பற்றிப் பின்பு பார்ப்போம்.

ஜார்ஜின் உதவியுடன் முதலீட்டாளர்களைத் தேடி அலைந்தார் டெஸ்லா. தாமஸ் ரையன் , ஹென்றி. ஓ. ஹெவ்மையர் ஆகியோரிடமும் உதவி கேட்டார். முதலீட்டைப் பெறுவதற்காக ஜார்ஜின் ஆலோசனைப்படி, ஹெவ்மையருக்கு அரிய வகை நீலமணி மோதிரம் ஒன்றையும் பரிசாக அனுப்பி வைத்தார். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த முதலீடும் வரவில்லை. இந்தச் சம்பவங்கள் எல்லாம் முடிந்த பிறகுதான், இதனைக் குறித்துக் கேள்விப்பட்ட ஜே.பி மார்கன் டெஸ்லாவுக்கு உதவி செய்ய உள்ளே வந்தார். பிறகு இருவரும் ஒப்பந்தம் போட்டு டிசம்பரில் வார்டன்ஃக்ளிப் டவரின் கட்டுமான பணிகளைத் தொடங்கினார்.

இந்த ஒப்பந்தம் போடப்படுவதற்கு முன்பாக நடந்த பேச்சு வார்த்தையில் மார்கன் டெஸ்லாவிடம், ‘உங்கள் டிஸைன் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. எனினும், மார்கோனியை வைத்து 1899ஆம் ஆண்டு அவர்கள் ‘அமெரிக்காவின் கப் யாக்ட்’ போட்டியைப் பற்றிய தகவல்களை ரேடியோ அலைவரிசை மூலம் வயர்லெஸ் தகவல்களாக அனுப்பியுள்ளனர். அதனை நீங்கள் எவ்வாறு முறியடிக்கப் போகிறீர்கள்?’ என்று கேட்டார்..

அதற்குப் பதிலளித்த டெஸ்லா, ‘அவர்களது ட்ரான்ஸ்-அட்லாண்ட்டிக் தொலைத்தொடர்புத் திட்டத்தைவிட எனது டவரின் மூலம் வரப்போகும் வேர்ல்ட்வைட் வயர்லெஸ் சிஸ்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்’ என்பதை விளக்கிக் கூறினார். இதன்பிறகு மார்கன் தனது மகள் ஆன், வேறு சில நெருங்கிய நண்பர்களுடன் கலந்து பேசிவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும். மேலே உள்ள மார்கனின் கூற்றில், ‘அவர்கள்’ என்று குறிப்பிடப்படுவது யார்? அவர்கள்தான் டெஸ்லாவின் வாழ்க்கையில் குறுக்கிட்ட, இன்னொரு பலம் வாய்ந்த எதிரிக்கூட்டம். அவர்கள்தான் இன்றைய உலகின் நிதி நிலைகளைக் கட்டுப்படுத்தும் சக்திக் கொண்ட, நியூயார்க்கில் உள்ள வால் ஸ்ட்ரீட் முதலாளிகள். உலகத்தின் எந்த மூலையில் உள்ள பங்குச் சந்தையையும் இங்குள்ளவர்கள்தான் கட்டுப்படுத்தினர். இவர்களில் முக்கியமான ஒருவர்தான் ஜே.பி. மார்கனும். ஆனால் அவரையும் எதிர்த்து அந்த முதலாளிகள் ஒன்று கூடி இருந்தனர். நீங்கள் நன்கு கவனிக்க வேண்டும், டெஸ்லாவைப் பொறுத்தவரை ஜே.பி. மார்கன் ஒருவர்தான் டவரின் முதலீட்டாளர். ஆனால் வால் ஸ்ட்ரீட்டில், பண முதலைகளின் பெரிய பட்டாளமே இருந்தது.

ஒரு நிறுவனத்தின் பங்கு எவ்வளவு விலைக்கு விற்க வேண்டும்? கூட வேண்டுமா, குறைய வேண்டுமா? ஒரு நிறுவனம் உச்சிக்கு செல்ல வேண்டுமா? இல்லை திவாலாக வேண்டுமா? என அனைத்தையும் இன்றும் முடிவு செய்வது வால்ஸ்ட்ரீட் தான். அமெரிக்க டாலர்களை வைத்து உலகில் சந்தை மதிப்பை நிர்ணயம் செய்து, அதைப் பண்டமாற்று நாணயமுறையாக வலுப்பெற வைத்ததில் இந்த வால் ஸ்ட்ரீட்டின் பங்கு அதிகம். பெயருக்கு ஏற்றாற்போல், இங்கு வால்தனம் செய்பவர்களும் அதிகம்.

2008இல் லேமன் பிரதர்ஸ் நிறுவனம் வீழ்ந்தவுடன், உலகெங்கிலும் பரவிய பொருளாதார மந்தநிலைக்கு இங்கே உள்ளவர்கள் எடுத்த ‘பங்குகள் பதுக்குதல்’ நடவடிக்கைதான் காரணம். அதேபோல இப்போது நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் ‘ஹிண்டன்பெர்க்’ நிறுவனம், இங்குள்ள ‘ஷார்ட் செல்லர்’ என்று அழைக்கப்படும், பங்குகளைக் கஷ்ட காலத்தில், குறைந்த விலைக்கு விற்றுத் தள்ளி நெருக்கடி நிலை ஏற்படுத்தும் ஒரு ஏஜென்ட் நிறுவனம்தான். இப்படிப்பட்ட வால் ஸ்ட்ரீட்தான், டெஸ்லாவுக்கு எதிராகவும், மார்கோனிக்கு ஆதரவாகவும் வந்து சேர்ந்தது.

மேலே கூறியுள்ள சம்பவங்கள் அனைத்தும் பத்திரிக்கைகள், டெஸ்லாவின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் எனப் பல தரவுகளில் இருந்து எடுக்கப்பட்டவை. மார்கோனிக்கு முதலீடு செய்த அனைவரும் ஐரோப்பிய பங்குச்சந்தை, வால்ஸ்ட்ரீட்டில் உள்ள அனுபவம் வாய்ந்த முக்கியஸ்தர்கள். ஜே.பி. மார்கன் என்ற முதலை டெஸ்லாவின் பக்கம் இருந்தாலும், அவர் ஒருவர்தான் இருக்கிறார் என்பதால், இவர்கள் அணி சேர்ந்து டெஸ்லாவை எதிர்த்தனர்.

‘உள்நாட்டிலேயே நீங்கள் பல எதிரிகளைச் சம்பாதிக்கக் கூடும்’ என்று எடிசன் மார்கனிடம் எச்சரித்தது இவர்களைப் பற்றித்தான். டெஸ்லாவை நேரடியாக எதிர்க்க விரும்பாத கொள்கை முரண்பாடு கொண்ட நாடுகள் இணைந்து, தங்கள் பணத்தை வால் ஸ்ட்ரீட் முதலாளிகள் வழியாக மார்கோனிக்கு ஆதரவாக, இலட்சம் இலட்சமாக இறக்கினர்.

இதன் விளைவு பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக மார்கோனியைப் புகழ்ந்தும், டெஸ்லாவை இகழ்ந்தும் எழுதின.

‘டெஸ்லா முதுகெலும்பு இல்லாதவர்’, ‘மார்கோனியுடன் அவரால் போட்டி போட இயலவில்லை’ போன்ற தலைப்புகளில், தலையங்கங்கள் வெளிவந்ததாகத் தரவுகள் கூறுகின்றன.

டெஸ்லாவோ எதையும் பொருட்படுத்தாமல் டவர் கட்டுமான பணிகளில் தீவிரமாக இருந்தார். எப்போதெல்லாம் பணம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் டவரின் கட்டுமான இடத்திலேயே தங்கிக்கொண்டு மார்கனுக்குக் கடிதம் அனுப்பி வந்தார். அவர் ஆறு கடிங்களை அனுப்பியதாகச் சிலரும், பத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பியதாக சிலரும், ஐம்பதுக்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பினார் என்று சிலரும் கூறுகின்றனர்.

இந்தக் கட்டத்தில்தான் மார்கோனியைச் சிறிது காலம் அமெரிக்காவுக்கு வரவழைத்த அவரது ஆதரவுக் கூட்டம், டெஸ்லாவுக்கு எதிராக வேலை செய்ய அவரை நேரடியாகப் பயன்படுத்தியது. ஜூன் 1901ஆம் ஆண்டு, டெஸ்லாவின் எதிரிகள் ‘எலக்ட்ரிக்கல் ரிவ்யூ’ என்ற அறிவியல் பத்திரிக்கையில் மார்கோனியை வைத்து, ‘சின்டோனிக் வயர்லெஸ் டெலிஃக்ராப்’ என்ற கட்டுரையைப் பதிப்பித்தனர். அது எதிர்ப்பார்த்த எதிர்விளைவைக் கொடுத்தது. டெஸ்லாவுக்கு எதிராக எடிசன் செய்த அதே வேலைகளையைத்தான் இன்னும் தீவிரமாக மூன்று மடங்கு யானை பலத்துடன் இப்போதும் அவரது எதிரிகள் செய்துகொண்டிருந்தனர்.

கட்டடத்தின் பூர்வாங்க வேலை நடந்துகொண்டிருக்கும்போது டெஸ்லா மார்கனைச் சந்தித்தார்.

‘நீங்கள் இன்னும் கொஞ்சம் கூடுதலாகப் பணம் கொடுத்தால், டவரை பிரம்மாண்டமாக உருவாக்கி மார்கோனிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் சரியானதொரு பாடத்தைப் புகட்டுவேன்’ என்று கோரிக்கை விடுத்தார்.

கூடுதல் பணம் கேட்டதற்கான அறிவியல் காரணத்தை மார்கன் கேட்டார்.

‘இப்போது முன்பைக் காட்டிலும் பெரிய திட்டத்தை வடிவமைத்துள்ளேன். அதன் மூலம் இந்த வேர்ல்ட்வைட் வயர்லெஸ் சிஸ்டத்தை, இன்னும் விரிவாக்கி, உலகம் முழுமைக்கும், மிகப்பெரிய விதத்தில், டெலிகிராப், ரேடியோ, ஏன் பேப்பர் மூலமும்கூட அலைச் செய்திகளைக் செலுத்தலாம்’ என்று ஆர்வம் பொங்கச் சொன்னார்.

அவர் பேப்பர் மூலம் அலை செய்தி அனுப்பலாம் என்று சொன்னதுதான், நாம் பயன்படுத்தி வந்த ஃபேக்ஸ் தொழில்நுட்பம். மின்சார பிரிண்டிங் டெலிஃக்ராப் மெஷின் என்ற கண்டுபிடிப்பின் மூலம் அலெக்சாண்டர் பெயின் என்பவர்தான் ஃபேக்ஸ் தொழில்நுட்பத்தின் முன்னோடியாக விளங்குகிறார். இதனைப் பயன்படுத்தி 1964ஆம் ஆண்டு ஜெராக்ஸ் கம்பெனி புதிய மெஷிங்களின் மூலம் ஃபேக்ஸ், போட்டோ காப்பியர் (நகலெடுத்தல்) சேவைகளை முன்னெடுத்தது. ஜெராக்ஸ் கம்பெனியின் டிஸைனைவிட முன்னேறிய வடிவத்தை அந்தக் காலத்திலேயே நிகோலா டெஸ்லா இந்த டவரின் மூலம் கொண்டுவரத் திட்டமிட்டார் என்ற வரலாறு வழக்கம்போல் மறைக்கப்பட்டது.

முதலீடு கேட்டு வந்த டெஸ்லாவிடம், தற்போதைய பணிகளில் கவனம் செலுத்தும்படியும், சில நாட்களில் அடுத்தக் கட்டமாக தான் முதலீடுகளை அதிகரிப்பதாகவும் மார்கன் வாக்குக் கொடுத்தார். அதனை நம்பிய டெஸ்லா, டவரை வெற்றிகரமாக முடித்துவிடுவோம் என உறுதிக்கொண்டார். மார்கன் செய்கின்ற உதவிகளுக்குப் பிரதிபலனாக, தனது நன்றியினைப் பலமுறைக் காட்டியுள்ள டெஸ்லா, அவரைச் ‘சிறந்த மனிதன்’ என்று புகழ்ந்ததற்கான பல தரவுகள் நமக்குக் கிடைக்கின்றன.

ஆனால் இதனைத் திரித்த பத்திரிக்கைகள், டெஸ்லாவுக்கும் மார்கனுக்கும் டவர் கட்டத் தொடங்கிய ஆண்டுக்கு முன்பாகவே பெரிய சண்டை நடந்ததுபோல் குறிப்பிடுகின்றன.

‘டவரை இன்னும் கட்டாமல் மார்கனிடம் பணம் கேட்டதற்கு இதுவரை செலவு செய்த பணத்திற்கான கணக்கைக் கேட்டு மார்கன் டெஸ்லாவுக்குப் பதிலடி கொடுத்தார்’ என்று எழுதி பெருங்குழப்பத்தை விளைவித்தன.

இதற்குப் பதிலடியாக டெஸ்லாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 07, 1901ஆம் ஆண்டு ‘டெஸ்லா வியாபாரத்திற்குத் தயார்’ என்று ‘நியூயார்க் ட்ரிபியூன்’ பத்திரிக்கை ஒரு கட்டுரையை வெளியிட்டது. இதற்கு மார்கனும் துணை நின்றார்.

அதன் பிறகுதான், மார்கோனியை வைத்து ரேடியோ சோதனையைத் துரிதப்படுத்தி, ஆறே மாதங்களில் அவரை முடிக்க வைத்தனர். அதுவும் டெஸ்லாவின் டவர் கட்டுமானம் தொடங்கும் முன்பாகவே!

வால்ஸ்ட்ரீட் முதலாளிகள் சக முதலாளியான ஜே.பி. மார்கனை ஏன் பழி வாங்க வேண்டும்? அதற்கு வலுவான காரணம் ஒன்று இருந்தது. ஜேபி மார்கன் அதே ஆண்டு உருவாக்கிய பங்குக் கவிழ்த்தல் நடவடிக்கைதான் அதற்குக் காரணம். பங்குச்சந்தை கவிழ்ப்பால் பணத்தை இழந்த பெரும் பணக்காரர்கள், பழிவாங்குவதற்காக மார்கோனியை ஆதரித்த கூட்டத்துடன் இணைந்துகொண்டு மேலும் பல குடைச்சல்களைக் கொடுத்தனர். இதற்கு இணையாக, இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது மே 01, 2023 அன்று, அமெரிக்கப் பங்குச் சந்தையில் ‘பேனிக்’ என்றழைக்கப்படும் பயசூழ்நிலையின் விளைவாக, ‘முதல் குடியரசு பேங்க்’ திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் சொத்துகளைக் கைப்பற்றியது யார் தெரியுமா? ஜே.பி. மார்கன் நிறுவனம்தான். 2000ஆம் ஆண்டுக்குப் பிறகான அமெரிக்கப் பங்குச்சந்தை வரலாற்றின் இரண்டாம் பெரிய வங்கி திவால் நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. 2023இல் மூடப்படும், அல்லது கைமாறப்படும் மூன்றாவது வங்கியாகவும், இது இருக்கிறது.

சரி, நாம் டெஸ்லாவுக்குத் திரும்புவோம். 300 சிறிய டவர்களாகக் கட்டி, பூமியின் நேரடித் தொடர்பு மூலம் தனது அலைவரிசையை விஸ்தாரமாக மாற்றலாமா என்று ஸ்டான்ஃபோர்ட் ஒயிட்டிடம் ஆலோசனைக் கேட்டார் டெஸ்லா. அந்தப் புதிய திட்டம் முடிவதற்கு 450,000 டாலர்கள் வரை செலவாகும் என்பதால் மறுத்துவிட்டார் ஒயிட். இவ்வாறு பல இடையூறுகளைத் தாண்டி வார்டன்ஃக்ளிப் டவரின் கட்டுமான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதற்கு அடுத்த ஆண்டும் டெஸ்லாவுக்குப் பல புதிய சோதனைகள் வந்தன. அனைத்தையும் தாண்டி, ஒற்றை ஆளுமையாய், நம்பிக்கையுடன் போராடி வந்தார் டெஸ்லா. பல அறிவியல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கும், வார்டன்ஃக்ளிப் டவரின் ஆழ்ந்த செயல்பாட்டு விளக்கங்களை, நாம் இனி தொடர்ந்து காண்போம்.

(தொடரும்)

 

படம்: பாதி கட்டி முடிக்கப்பட்ட நிலையில், 1902 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வார்டன்ஃக்க்ளிப் டவரின் புகைப்படம். மேலே உள்ள கூம்பு வடிவங்கள் பொருத்தப்படாத நிலையில் உள்ளன. இடதுபுறம், நிலக்கரி சுமந்து வந்த ஒரு வண்டியையும் படத்தில் காணலாம்.

பகிர:
ராம் குமார் சுந்தரம்

ராம் குமார் சுந்தரம்

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதுபவர். மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார். ஒரு கவிதைத் தொகுப்பு, ஓர் அறிவியல் புனை கதை தொகுப்பு ஆகியவற்றை ஆங்கிலத்திலும் தமிழில் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். இவருடைய பிரதிலிபி பக்கம் : https://pratilipi.page.link/8Hga6Dwpr4kdmqy99 தொடர்புக்கு : rksthewriter@gmail.comView Author posts

2 thoughts on “நிகோலா டெஸ்லா #20 – தன்னம்பிக்கையின் ஒளி”

  1. Vijayalakshmi Elumalai

    வார்டன்கிளிப் டவர் பற்றி அறிந்துகொள்ள கண்டிப்பாக தொடர்ந்து படிப்பேன்… அடுத்த பதிவிற்கு ஆவலாக இருக்கிறேன்…அருமையான பதிவு…

    1. Ram Kumar Sundaram

      தங்கள் கருத்துக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி விஜயலக்ஷ்மி அவர்களே! வார்டன்ஃக்ளிப் டவரைப் பற்றிய விரிவான பல செயல்முறை விளக்கங்கள், 21ஆம் அத்தியாயத்திலேயே வரவுள்ளன. தங்கள் தொடர் ஆதரவினைத் தருவீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் ஒரு முறை, மிக்க நன்றி! 😊🙏🏼

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *