Skip to content
Home » நிகோலா டெஸ்லா #21 – மர்ம மனிதன்

நிகோலா டெஸ்லா #21 – மர்ம மனிதன்

நிகோலா டெஸ்லா

பெரும்பாலான அறிவியல் ஆர்வலர்களின் மனதில் இருக்கும் ஒரு கேள்வி, ‘நிகோலா டெஸ்லா தன்னுடைய உழைப்பால் உருவான டவருக்கு ஏன் அவருடைய பெயரை வைக்காமல், வார்டன்ஃக்ளிப் டவர் எனப் பெயர் வைத்தார்?’ என்பதுதான்.

டெஸ்லா அமைத்த டவர் அமைந்திருந்த லாங் ஐலேண்ட் பகுதியில் உள்ள ஷோர்ஹாம் கிராமத்தில் உருளைக்கிழங்கு விவசாயியாக அறியப்பட்டவர்தான் ஜேம்ஸ் வார்டன். அவர் மிகப்பெரிய நிலச்சுவான்தாரும் ஆவார். மார்கனின் முதலீடு கிடைத்தவுடன், ஷோர்ஹாமில் 1800 ஏக்கர் நிலம் கொண்ட அந்த ஜேம்ஸ் வார்டனிடமிருந்துதான் தனது டவருக்காக 200 ஏக்கர் நிலத்தை வாங்கினார் டெஸ்லா. அந்த விவசாய முதலாளிக்கு மரியாதை செய்யும் விதமாகத்தான், அவர்களது குடிப் பெயரிலேயே, ‘வார்டன்ஃக்ளிப் டவர்’ என்று பெயரிட்டார்.

நன்றாக விவசாயம் செய்யக்கூடிய நிலம், அதுவும் நியூயார்க்குக்கு அருகில் லாங் ஐலேண்ட்டை நகருடன் இணைக்கும் சாலைப்பகுதியான ரூட் 25Aவை ஒட்டிய பகுதி எனப் பல சிறப்புகளைக் கொண்ட அந்த இடத்தை சற்றே குறைந்த விலைக்கு தன் அறிவியல் ஆராய்ச்சிக்காக அவர் விற்றதற்கு நன்றிக் கடனை செலுத்தும் விதமாக டெஸ்லா இவ்வாறு செய்தார் என்பதுதான் வரலாறு.

ஆனால், சில ஆய்வாளர்கள், அவர்கள் போட்டுக்கொண்ட ஒப்பந்தமே அப்படித்தான் என்று கூறுகிறார்கள். அதனைச் சரியென்று வைத்துக் கொண்டாலும், அந்த ஷரத்துக்கு ஒப்புக்கொண்டதே டெஸ்லாவுக்கு இருந்த மிகப்பெரிய தாராள உள்ளம்தானே காரணமாக இருக்க முடியும்? டெஸ்லாவின் உயரிய குணத்துக்கு எடுத்துக்காட்டாக இதனையும் கூறலாம்.

சரி, அறிவியல் ஆர்வலர்கள் மனதில் எழும் அடுத்த முக்கியக் கேள்வி, ‘அப்படி என்னதான் இந்த டவரின் சிறப்பு? வேர்ல்ட்வைட் வயர்லெஸ் சிஸ்டத்தால் என்ன சாதித்து விட முடியும்? இந்த டவர் எவ்வாறு வேலை செய்கிறது?’

இன்று ‘ஆர்கானிக் விவசாயம்’ என்ற பெயரில் இயற்கை விளைச்சலை முன்னெடுக்கும் முறையும், டெஸ்லாவின் டவர் டிசைனும் அடிப்படையில் ஒன்றுதான். அது எப்படி என்று பார்ப்போம்.

பூமியுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் அலைகளை, சற்றே அழுத்தம் கொடுத்து, முறைப்படுத்தப்பட்ட அலைவரிசை மூலம் ஒழுங்குபடுத்தினால், ஒளி, ஒலி ஆகிய இரண்டு அலைகளையும் கட்டுப்படுத்தலாம். ஒளி அலை என்பதுதான் ஒலிக்கும் அடிப்படை. ஒரு ஒலி அலையை, ஒளி அலையாகக்கூட நாம் கடத்தி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்பிவிட முடியும். இதுதான் இன்றைய பிராட்பேண்ட், வை-ஃபை தொடர்புகளின் அடிப்படையும் ஆகும்.

இதனைப் பற்றி டெஸ்லாவே விரிவான விளக்கத்தைக் கூறியுள்ளார். பிப்ரவரி 1901ஆம் ஆண்டில், ‘காலியர்’ என்னும் அறிவியல் இதழில் அவர் நீண்ட விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் தனது வேர்ல்ட்வைட் வயர்லெஸ் சிஸ்டத்தை, ‘கம்பிகளைப் பயன்படுத்தாமல் ஆற்றல் பரிமாற்றம் மற்றும் தந்தி அமைப்பு’ என்ற தலைப்பில், கீழ்க்கண்டவாறு வார்டன்ஃக்ளிப் டவரோடு தொடர்புபடுத்தி விளக்குகிறார்.

‘பூமியே மின்சார ஓட்டங்களை நடத்துவதற்கான ஊடகமாக, கம்பிகள், பிற அனைத்து செயற்கை கடத்திகள் மூலம் இணைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்த வார்டன்ஃக்ளிப் டவர் என்பது ஒரு முழுமையான, முன்னேறிய எந்திரம். அதன் செயல்பாட்டை எளிய மொழியில் விளக்க வேண்டுமெனில், அது ஒரு பம்ப்பைப் போன்றது. பூமியிலிருந்து மின்சாரம் எடுத்து அதை இயக்குகிறது. மகத்தான விகிதத்தில் மீண்டும் அதே நிலைக்குத் திரும்புகிறது. இதனால் டவர் சிற்றலைகள், இடையூறுகளை உருவாக்குகிறது. இது ஒரு கம்பி வழியாகப் பூமி முழுவதும் பரவுகிறது.

கவனமாக இணைக்கப்பட்ட ரிசீவிங் சர்க்கியூட்டுகள் (பெறுதல் சுற்றுகள்) மூலம், அதிக தூரத்திலும் கண்டறிந்து, அதனைப் பெற முடியும். இந்த முறையில்தான், நான் அலைகளை தொலைதூரத்துக்கு அனுப்ப முடிந்தது. சிக்னலிங் நோக்கங்களுக்காகப் பலவீனமான விளைவுகளை மட்டுமல்ல, கணிசமான அளவு ஆற்றலையும் நான் உற்பத்தி செய்த பின்னர்தான் எனக்கு நம்பிக்கை பிறந்தது. உயரிய தொழில்துறை நோக்கங்களுக்காகக் கம்பிகள் இல்லாமல் மின்சாரத்தை அனுப்புவதில் நான் வெற்றி பெறுவேன் என்று என்னை நம்பவைத்தது.

எத்தனை தூரம் இருந்தாலும் சரி, எத்தனை உயர் பொருளாதாரத் தேவைகள் இருந்தாலும் சரி, அனைத்து விதமான சூழ்நிலைகளுக்கும், என்னால் மின்சாரச் சப்ளை செய்ய முடியும் என்று இந்த டவர் டிஸைன்தான் என்னை நம்ப வைக்கிறது’ என்கிறார்.

எப்படிப்பட்ட மேன்மையான விளக்கம் இது என்று நீங்கள் படிக்கும்போதே ஆச்சரியப்படலாம். இன்றைய காலகட்டத்தில் பயன்படும் தரவுகள் என்றால் என்ன என்று சிந்தியுங்கள். டேட்டா என்பது ஒளி அலைகள் மூலம் கடத்தப்படும் தகவல்கள்தான்.

அவற்றில் ஒலி அலைகளும் அடங்கும். பல்வேறு தகவல்களை எடுத்துச் செல்லும் அனைத்து வடிவமான சிக்னல்களும், கோட் முறைகளும், ஒளி-ஒலி அலைகளாக மாற்றப்பட்டுத்தான் கடத்தப்படுகின்றன. அலைகள் என்றால் ரேடியோ வேவ் சிக்னல்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதில் ஃப்ரிக்வென்ஸி என்னும் அதிர்வெண்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

எனவே தொலைதூரத் தொடர்பு அலைகள் கடத்தப்பட அடிப்படைத் தேவை என்பது பூமியுடன் நேரடித் தொடர்பில் உள்ள மின்சாரம், அதற்கான கடத்தி சாதனங்கள் ஆகியவைதான்.

வெறும் மின்சாரம் மட்டுமல்ல, ‘போர்ஸ் ஃபீல்ட்’ எனப்படும் அளப்பரிய ஆற்றல் அலைகளையும் கூட, இந்தத் தொடர்பு மூலம் உருவாக்கி, அவற்றையும் ஒளி அலைகளாக மாற்றி, பின்பு பரிமாறிக் கொள்ளவும் இயலும். இத்தகைய ஆற்றல் அலைகளில் ஒன்று தான், நாம் இந்தத் தொடரில் ஏற்கெனவே பார்த்த ‘மரணக் கதிர்கள்’ என்று அழைக்கப்பட்ட டெஸ்லாவின் உயர் சக்தி ஆற்றல் அலைகள்.

இவை தான் டெஸ்லாவின் ‘வேர்ல்ட்வைட் வயர்லெஸ் சிஸ்டம்’ என்ற ‘உலகளாவிய வயர்கள் இல்லாத கடத்தி முறை’யின் அடிப்படை விளக்கங்கள். எனவேதான், இன்றைய வயர்லெஸ் டேட்டா ட்ரான்ஸ்ஃபர் முறையின் முன்னோடியாக டெஸ்லா அறியப்படுகிறார். சயின்ஸ்மீ டாட் காம் (ScienceMe.com) என்ற இணையதளத்தில், ரெபெக்கா காஸல் என்ற கட்டுரையாளர் நவம்பர் 2021இல் எழுதிய ‘நிகோலா டெஸ்லாவின் வாழ்க்கை’ என்ற கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

‘நிகோலா டெஸ்லா நடைமுறையில் 20ஆம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தார் என்றே கூறலாம். அவர் நமக்கு மாற்று மின்னோட்டம், வயர்லெஸ் ரேடியோ, எக்ஸ்ரே, ரேடார், ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் (நீர் மின்சாரம்), டிரான்சிஸ்டர்கள் ஆகியவற்றை வழங்கினார்’ என்று புகழாரம் சூட்டுகிறார். ஆனால் அவர் இவற்றையும் தாண்டிய மிகப்பெரிய விஞ்ஞானி என்பதை வாசகர்கள் ஏற்கனவே உணர்ந்திருப்பீர்கள்.

பலரால் கேட்கப்பட்ட, இன்றைய சூழ்நிலைக்குத் தகுந்த, மூன்றாவது கேள்வி, ‘இன்றைய டெஸ்லா கார் நிறுவனத்துக்கும், அதன் இணை நிறுவனர் எலான் மஸ்குக்கும், அலைஞன் நிகோலா டெஸ்லாவிற்கும் உள்ள தொடர்பு என்ன?’

அதற்கான பதில், எந்த வித நேரடித் தொடர்பும் இல்லை என்பதுதான். நாம் முன்பு கூறியதைப்போல, ‘காந்த உட்பாய்வு அடர்த்தி’ (Magnetic Flux Density) கணக்கீட்டுக்கு, இயற்பியலில் ‘டெஸ்லா’ என்று பெயர். அதனை அவர் நினைவாகத்தான், இயற்பியல் துறை வைத்தது. இது மின்சாரம், காந்த அறிவியலில் அதிகம் பயன்படுத்தப்படும் கணக்கீடாகும்.

டெஸ்லாவின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க், தான் விஞ்ஞானி டெஸ்லாவால் ஈர்க்கப்பட்டதாகவும், உலகுக்கே மின்சார கார்கள், பேட்டரிகளை மக்கள் எளிதில் அணுகுமாறு சந்தைப்படுத்துவதே தனது நோக்கம் என்றும் கூறுகிறார். ஆனால் அவருக்கு டெஸ்லாவைவிட எடிசனைத் தான் மிகவும் பிடிக்கும் என்றும் குறிப்பிடுகிறார். டெஸ்லாவின் நிறுவனர்களான எபர்ஹார்ட், டாபர்னிங், டெஸ்லாவுக்கு சிறப்பு செய்யும் வகையில் அவரது பெயரைத் தங்கள் நிறுவனத்திற்கு வைத்தனர் என்பது அனைவரும் அறிந்த ஒரு தகவல்.

இதில் முரண்பாடு என்னவெனில், ஒரு டெஸ்லா காரின் குறைந்தபட்ச விலையே இன்றைய நிலவரப்படி, சுமார் 43,000 டாலர்கள். அதாவது கிட்டத்தட்ட 35.14 லட்ச ரூபாய். இதில் இறக்குமதி வரி, சாலை வரி என அனைத்தையும் சேர்த்தால் இன்னொரு 28 லட்சங்கள் ஆகும். ஆக, மொத்தம் 63 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான், ஒரு டெஸ்லா காரை வாங்கி நாம் ஓட்ட முடியும். ‘இலவச சக்தி’ என்னும் கொள்கையைக் கூறி, அதற்காகவே வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு உயிர்விட்ட நிகோலா டெஸ்லாவின் பெயரை வைத்துக்கொண்டு, முற்றிலும் லாப நோக்கோடு செயல்படும் உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க், அவரது நிறுவனத்தின் எண்ணத்தை நாம் முரண்பாடு என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல முடியும்?

உண்மையான தியாகிகளின் பெயர்களை எப்படி அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காகவும், ஓட்டுக்காகவும் பயன்படுத்துகிறார்களோ, அதேபோல்தான் இதுவும். இன்னும் ஒரு படி மேலே சென்று கூற வேண்டுமெனில், மாநில அரசுகள் வழங்கும் இலவச மின்சாரத் திட்டங்களுக்கு டெஸ்லாவின் பெயரை வைப்பதே அவருக்குச் செய்யும் பொருத்தமான மரியாதையாக இருக்க முடியும்.

0

1902, 1903 ஆகிய ஆண்டுகள் டெஸ்லாவின் வாழ்வில் பல்வேறு போராட்டங்கள், மர்மங்களை உள்ளடக்கிய ஆண்டுகளாகும்.

அவரது வார்டன்ஃக்ளிப் டவர், 187 அடி உயரத்தைக் கொண்ட ஒரு பிரம்மாண்டக் கட்டடம். அதன் அடியில் நிலத்தில் இருந்து மின்சாரம் எடுத்துக் கடத்தும் ஏசி மாற்று மின்னோட்ட மோட்டார்களை அமைக்கவே, அவருக்கு ஆறு மாதங்கள் தேவைப்பட்டன. 1901ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டவரின் முதற்கட்ட சோதனைகள் முடிய ஒன்றரை ஆண்டுகள் ஆகின. டவரின் முதன்மைப் பணிகள் ஒன்பது மாதங்களில் முடிக்கப்பட்டாலும், அதனையொட்டி, மூன்று தளங்கள் கொண்ட புதிய கட்டடமும் அமைக்கப்பட்டது. இவற்றில் டெஸ்லாவின் புதிய பரிசோதனைக் கூடமும் அடங்கும்.

ஸ்டான்ஃபோர்ட் ஒயிட்டின் மேற்பார்வையில், இக்கட்டடமும், பல்வேறு நவீன வசதிகளுடன், சிறப்பாக கட்டமைக்கப்பட்டது. ஏற்கெனவே 1895ஆம் ஆண்டு நவீன லேப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், அவர் தனது முக்கிய ஆராய்ச்சித் தரவுகளை எவ்வாறு இழந்தார் என்பதை நாம் விரிவாகப் பார்த்தோம். 1902ஆம் ஆண்டு வரை, அவர் நாம் ஏற்கெனவே பார்த்த ஹீஸ்டன் தெருவில் உள்ள 46-48 கதவெண் கொண்ட ஏழு மாடிக் கட்டடத்தில், இரு மேல்தளங்களைத்தான் தனது ஆய்வகமாகப் பயன்படுத்தி வந்தார். இங்கேதான் 500 பக்கங்கள் கொண்ட அறிவியல் குறிப்புகளை எழுதினார். பிற்காலத்தில் அவரது அறிவியல் சுயசரிதைக்கு அடிப்படையாக, இந்தக் குறிப்புகள்தான் அமைந்தன.

பல்வேறு முன்னேறிய சாதனங்கள் கொண்ட இந்த சோதனைக்கூடம், எதிரிகளின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தது. 1900ஆம் ஆண்டு இங்கும் ஒரு தீ விபத்து ஏற்பட்டது. அதில் டெஸ்லாவின் பல முன்னேறிய சாதனங்கள் தீக்கிரையாகின. அவற்றின் உண்மையான மதிப்பை டெஸ்லா மட்டுமே அறிவார். இருப்பினும், மேலும் இரு வருடங்கள் அங்கு வேலை செய்த டெஸ்லா, தனது மிச்சமிருந்த ஆவணங்கள், சாதனங்களை மெது மெதுவாக, தனது டவரின் அருகில் இருக்கும் ஆய்வுக் கூடத்துக்கு மாற்றத் தொடங்கினார்.

1895ஆம் ஆண்டின் தீ விபத்தில் ஆவணங்கள் எரிந்து போனது தான், டெஸ்லாவுக்கு முதல் நிலை ரேடியோ அலைகளின் பேட்டனட் உரிமை கிடைக்கப் பெறாமல் செய்தது. 1900ஆம் ஆண்டின் தீ விபத்து சமயத்தில், அவர் ஆவணங்களைக் காப்பாற்றி விட்டார். ஆனால், சாதனங்களைக் காப்பாற்ற முடியவில்லை. மார்கோனிக்கு எதிராகவும், அவரது ஆதரவாளர்களுக்கு எதிராகவும், டெஸ்லாவின் நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட, இவ்விரு தீ விபத்துகளே முக்கியக் காரணிகள். இதில் வால் ஸ்ட்ரீட் முதலைகள் மட்டுமல்ல, வேறு பல அரசுகளும் கூடப் பங்கெடுத்தன என்பது, அறிவியல் வட்டாரங்களில் இன்றும் பேசப்படும் உறுதி செய்யப்படாத கூற்று.

இதனால்தான், யாரும் எளிதில் அணுக முடியாத வகையில் அமைந்திருக்கும் தனது டவர் உள்ள ஷோர்ஹாம் பகுதிக்கு தனது ஆய்வகத்தை அவர் 1902ஆம் ஆண்டில் மாற்றினார். கொலராடோ ஸ்பிரிங்ஸ் பகுதியில் அவர் செய்த வெற்றிகரமான ஆய்வுகள் டவர் சோதனைகளின்போது டெஸ்லாவுக்கு வெகுவாகக் கைகொடுத்தன.

டவர் கட்டுமான பணிகளுக்குப் பிறகு நியூயார்க் நகருக்குள் தான் தங்கியிருந்த வால்ஃடோர்ப்-அஸ்டோரியா ஓட்டலுக்கு வருவதே அவருக்கு அரிதாகிப் போனது. எந்நேரமும் ஷோர்ஹாமில் டவரின் கட்டுமான பணியிலேயே மூழ்கிக் கிடந்தார். இதனால், ஆன் மார்கனுடன் அவர் கொண்டிருந்த நெருக்கமான நட்பும் பாதிக்கப்பட்டது. டெஸ்லாவைப் பற்றி நன்கு புரிந்து வைத்திருந்த ஆன் மார்கன், முதலில் வருத்தப்பட்டாலும், பின்பு தனது இயல்பான பொது வாழ்க்கைக்குத் திரும்பினார்.

1902ஆம் ஆண்டிலும் மார்கோனியின் அணி, டெஸ்லா மீதான ஊடகத் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்தது. ‘டெஸ்லா தனது வார்டன்ஃக்ளிப் டவரின் மூலம் மிகப்பெரிய மோசடியைச் செய்து, பல பேரை ஏமாற்றத் திட்டமிட்டு வருகிறார்’ என்ற மையக்கருத்துடன் பல கட்டுரைகள் முன்னணி இதழ்களில் வெளிவந்தன. நடுநிலை அறிவியல் ஆய்வாளர்கள் என்ற பெயரில் இருக்கும் பலரையும், மோசமாகப் பேட்டிகளும் கொடுக்கச் செய்தனர். இன்றைய ஊடகங்களில் இத்தகைய செயல்களைக் காணும் நமக்கு, அப்போதே இது எவ்வாறு திட்டமிட்டு செய்யப்படுகிறது, அதுவும் ஒரு விஞ்ஞானிக்கு எதிராக, என்பதை எண்ணும் போது, சற்று மலைப்பாகத்தான் இருக்கிறது.

தனது ஆய்வுக்கூடத்தை அவர் முழுமையாக டவருக்கு அருகில் மாற்றிய பிறகு, அவரை இரவு நேரங்களில் பல மர்ம மனிதர்கள் வந்து சந்திப்பதாகப் புரளிகள் இறக்கை கட்டிப் பறந்தன. அவர்களில் சிலர் பார்ப்பதற்கே பயங்கரத் தோற்றங்களைக் கொண்டிருந்தனர் என்றும், கோட்-சூட்-தொப்பி-கண்ணாடி அணிந்து தங்களை முழுமையாக மறைத்திருந்தனர் என்றும் கதைகள் கூறின.

இன்னும் ஒரு படி மேலே போய், அந்தத் டவரில் இருந்து பல்வேறு விதங்களிலான ஒளிகள் வானத்தில் பாய்ச்சப்பட்டன என்றும், அவை அதித்தீவிர சக்தி வாய்ந்ததாக இருந்தன என்றும், அவரது டவரின் அருகே வானத்தில் விமானம், விண்கலம் வடிவிலான கலங்கள் தென்பட்டதாகவும் கூறினர். இவற்றில் பலவற்றைப் பத்திரிகைகள் வீண் வதந்தி என்று ஒதுக்கினாலும், டெஸ்லா ஒரு மர்ம ஆசாமி என்ற கூற்று இப்படித்தான் மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

‘டைம்-எ-டஜன்’ பத்திரிகைகள் என்று அழைக்கப்படும் கீழ்நிலைப் பத்திரிகைகள், அதாவது புரளிகள், போலிச் செய்திகள், புகைப்படங்களை வெளியிட்டுக் காசு பார்க்கும், ‘அண்டர்கிரவுண்ட் மேகஸின்ஸ்’ என்று அழைக்கப்பட்ட சஞ்சிகைகள், டெஸ்லாவை வைத்து நன்றாகக் கல்லா கட்டின.

அவர் ஏலியன்களுடன் தொடர்பு கொண்டு சிக்னல் அனுப்பி வருகிறார் என்கிற அளவுக்கு அவை போய்விட்டன. ஆனால் நாம் ஏற்கெனவே பார்த்தபடி, 2020க்கு பிறகு அமெரிக்க அரசு நிறுவனங்களான சி.ஐ.ஏ, ஃஎப்.பி.ஐ தரவுகளில் கூறப்பட்ட இது போன்ற சில தரவுகளை பொருத்திப் பார்க்கும்போது, டெஸ்லா ஒரு மிகப்பெரிய மர்ம மனிதராக விளங்கினார் என்பது மட்டும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகிறது.

இப்படியே 1903ஆம் ஆண்டும் டெஸ்லாவின் வாழ்வு தொடங்கிய நிலையில், அவர் இவ்விரு ஆண்டுகளைப் பெரும்பாலும் தன் அறிவியல் ஆராய்ச்சிகளிலேயே செலவழித்து வந்துள்ளார் என்பது புலனாகிறது.

அவ்வப்போது செலவுக்குப் பணம் வேண்டி மார்கனுக்கோ, வெஸ்டிங்ஹவுஸ் போன்ற நண்பர்களுக்கோ கடிதம் எழுதி வந்தார். அவர் எப்போது நியூ யார்க் நகருக்குள் வருகிறார், தனது அறைக்குச் செல்கிறார், வெளியூர்களுக்குப் போகிறார் என்பன போன்ற அனைத்து செயல்பாடுகளும் மர்மமாகவே இருந்தமைக்கான தரவுகள் நமக்குக் கிடைக்கின்றன.

அவற்றில் முக்கியமான ஓர் தரவு, 1903ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், ஜீலை 15ஆம் தேதி, ‘தி நியூ யார்க் சன்’ என்ற முன்னணிப் பத்திரிகையில் வெளிவந்த ஒரு செய்தி.

அதில் டெஸ்லா டவரைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

‘அனைத்து விதமான மர்ம நிகழ்வுகளும் டெஸ்லாவின் டவரில் உள்ள ட்ரான்ஸ்மீட்டரில் இருந்து நிகழ்கின்றன. நிகோலா டெஸ்லா தனது சோதனைகளைத் தொடங்கிய பின்தான் இவ்வாறெல்லாம் நிகழ்கின்றன. அனைத்து விதமான ஒளிகளும், அந்த உயரமான டவர், அதன் துருவங்களில் இருந்து வெளிப்படுகின்றன.

கண்களைக் கூசச் செய்யும் அளவுக்கு ஒளி கொண்ட அதி சக்தி வாய்ந்த மின்சார அலைகள், காற்று வெளியிடையில் வேகமாகப் பாய்ந்து, எங்கோ தூரத்தில், கும்மிருட்டுக்கு நடுவே, மர்மங்கள் நிறைந்த ஆணைகளை நிறைவேற்றச் செல்வதுபோல் சென்று பாய்கின்றன’ என்று கூறியது அந்தக் கட்டுரை.

நிகோலா டெஸ்லாவின் வாழ்வில் போராட்டங்கள், அதற்கு இணையான மர்மங்கள் இரண்டுமே அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்த வண்ணமே இருந்தன.

(தொடரும்)

படம்: ‘தி சயின்ஸ் அண்ட் இன்வென்சன் மேகஸின்’ என்ற பத்திரிகையில், ‘டெஸ்லாவின் டவர் கட்டி முடிக்கப்பட்டால் எப்படியிருக்கும் என்ற கற்பனையை, ஓவியர் ஒருவர் சித்தரிக்கப்பட்ட வரைபடமாக வரைந்தது’ என்ற விளக்கத்துடன் வந்த படம். இப்படம் முதலில் வெளிவந்த ஆண்டு 1901

பகிர:
ராம் குமார் சுந்தரம்

ராம் குமார் சுந்தரம்

தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதுபவர். மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றுகிறார். ஒரு கவிதைத் தொகுப்பு, ஓர் அறிவியல் புனை கதை தொகுப்பு ஆகியவற்றை ஆங்கிலத்திலும் தமிழில் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். இவருடைய பிரதிலிபி பக்கம் : https://pratilipi.page.link/8Hga6Dwpr4kdmqy99 தொடர்புக்கு : rksthewriter@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *