மனிதக் குலத்துக்குப் பயனளிக்கும், அதன் நாகரீகத்தை முன்னேற்றி அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் இலவச ஆற்றலின் உலகளாவிய அமைப்பை உருவாக்கும் ஒரு பார்வையைத்தான் நிகோலா டெஸ்லாக் கொண்டிருந்தார். 1903, 1904, 1905 ஆகிய ஆண்டுகளில் அவர் தனது லட்சிய திட்டத்தில் மிகவும் ஈடுபாட்டோடு பணிபுரிந்தார்.
டெஸ்லா தனது வார்டன்ஃக்ளிப் டவரின் வயர்லெஸ் சிஸ்டம் மூலம் தந்தி, டெலிபோனி, ஒளிபரப்பு, பவர் டிரான்ஸ்மிஷன் ஆகியவற்றை நிரூபிக்க, அந்தக் கூம்பு வடிவ கோபுரைத்தைப் பல்வேறு கட்டப் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தத் திட்டமிட்டார். அயனிமண்டலத்தை (Ionosphere) ஆய்வு செய்தல், செயற்கை மின்னலைக் கடத்துதல் போன்ற அறிவியல் சோதனைகளுக்குப் பயன்படுத்தவும் செய்தார். இருப்பினும் பல சவால்களையும் பின்னடைவுகளையும் அவர் சந்திக்க வேண்டியதாக இருந்தது. டவரின் கட்டுமான செலவுகள் அவரது எதிர்பார்த்த நிதியைவிட அதிகமாகக் கோரியது. நிதி திரட்டுவதற்காக அவர் தனது சொத்தை அடமானம் வைத்து, சில காப்புரிமைகளையும் விற்க வேண்டியிருந்தது.
மற்ற வானொலி நிலையங்களின் குறுக்கீடு, வளிமண்டல இடையூறுகள் போன்ற தொழில்நுட்ப சிக்கல்களையும் அவர் சந்தித்தார். இதைத்தவிர அவரது போட்டியாளரான மார்கோனியிடம் இருந்து எதிர்கொண்ட குறிப்பிடத்தக்கச் சவால் என்னவெனில், மார்கோனியால் எளிமையான, குறைந்த விலை உபகரணங்கள் குறைந்த அழுத்தம் கொண்ட அதிர்வெண்களைப் பயன்படுத்த முடிந்தது. இதனை டெஸ்லாவால் செய்ய முடியாமல்போனது.
டெஸ்லா, மார்கனிடம் தனது அமைப்பு மார்கோனியின் கண்டுபிடிப்பைவிட உயர்ந்தது என்றும், தனது கோபுரத்தைக் கட்டி முடிக்கவும், காப்புரிமம் பெறவும் அதிகமான நிதி தேவை என்றும் புரிய வைக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். செய்திகளை மட்டுமல்ல, குரல், இசை, படங்கள் ஆகியவற்றையும் கம்பிகள் இல்லாமல் அனுப்ப முடியும் என்று கூறினார். உலகையே புரட்டிப் போடக்கூடிய புதிய ஆற்றல் மூலத்தைக் கண்டுபிடித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இருப்பினும் அவருக்குக் கூடுதல் நிதியைக் கொடுக்க மார்கன் மறுத்துவிட்டார். இது, மார்கன் டெஸ்லாவை நம்பாமல் செய்தது அல்ல. முழுக்க முழுக்க தனது பணத்தைப் பாதுகாக்கும் எண்ணத்திலும், வால் ஸ்ட்ரீட்டில் இழந்திருந்த செல்வாக்கைத் திரும்பப் பெறவும்தான் அவர் அப்படி செய்தார் என்ற உண்மையைப் பல தரவுகள் நமக்கு உறுதிப்படுத்துகின்றன.
டெஸ்லாவை ஆதரிப்பதில் இருந்து மற்ற முதலீட்டாளர்களையும் அவர் தள்ளி நிற்கச் சொன்னார். ஆனால் இம்முறை அவர் கூறியதிலும் பல நியாயங்கள் இருந்தன. முதல்முறை அவர் டெஸ்லாவை வேண்டுமென்றே தடுத்தார். ஆனால் இந்த முறை மற்றவர்கள் பணத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக இதனைச் செய்தார். இந்தக் கூற்றை டெஸ்லாவின் வாழ்வியலை ஆய்வு செய்து எழுதிய ஜான் ஒநீல், பெர்னார்ட் கார்ல்சன், கிறிஸ்டோபர் கூப்பர் ஆகியோர் உறுதிபடக் கூறுகின்றனர். மார்க் ஜே சீஃபர், க்ளிஃபோர்ட் பிக்கோவர் ஆகியோரின் புத்தகங்களும், பல பத்திரிகைக் குறிப்புகளும், மார்கனின் தெளிவான முடிவையும், அதற்குப் பின்புலமாக இருந்த அவரது எண்ணங்களையும் நமக்கு விளக்குகின்றன.
டெஸ்லா தனது கோபுரத்தை முடித்து வயர்லெஸ் அமைப்பை உலகுக்கு நிரூபிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பணம் இல்லாதபோதும், அவர் தனது விசுவாசமான உதவியாளர்களுடன் திட்டத்தில் தொடர்ந்து பணியாற்றினார். நேர்காணல்கள், விரிவுரைகளை வழங்குவதன் மூலமும், தனது கண்டுபிடிப்புகளை நிரூபிப்பதன் மூலமும் பொது ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் உருவாக்க முயன்றார். ஜூலை 1903இல், நியூ யார்க் சன் பத்திரிகையின் கட்டுரை வெளியான இரு தினங்களுக்கு முன்பு, அவர் வார்டன்ஃக்ளிப் டவரில் தனது சோதனைகளைக் காண நிருபர்களை அழைத்தார். 135 அடி நீளமுள்ள செயற்கை மின்னல்களை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதையும், பூமியைக் கடத்தியாகப் பயன்படுத்தி வயர்லெஸ் விளக்குகளை எவ்வாறு ஒளிரச் செய்வது என்பதையும் அவர்களுக்குக் காட்டினார். தனது கண்டுபிடிப்பின் மூலம் பாரிஸுக்கும் செவ்வாய் கிரகத்துக்கும்கூட சமிக்ஞைகளை அனுப்ப முடியும் என்று கூறினார். இப்படி அவர் கூறிய பின்புதான், அவரைப் பற்றிய பல கதைகள் உருவாகத் தொடங்கின.
இதன் பிறகுதான், நாம் சென்ற அத்தியாயத்தில் பார்த்த ‘நியூ யார்க் சன்’ பத்திரிக்கையின் கட்டுரை வெளியாகி, மக்களிடையே டெஸ்லாவின் ஆராய்ச்சி பற்றிய ஆர்வத்தை அதிகரித்தது.
டெஸ்லாவின் வாழ்க்கையில் 1903ஆம் ஆண்டு நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு:
1. டெஸ்லா வயர்லெஸ் பவர் டிரான்ஸ்மிஷனில் தனது பணியைத் தொடர்ந்தார். பல வகையான மின்காந்தக் கதிர்வீச்சைப் பரிசோதிக்கத் தொடங்கினார்.
2. தனது டவரின் புதிய ஆய்வகத்தில் வயர்லெஸ் தகவல் தொடர்பு, மின்பரிமாற்ற அமைப்பின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினார்.
3. பிப்ரவரி 5, 1903 அன்று ஃபிலடெல்ஃபியாவில் உள்ள பிராங்க்ளின் இன்ஸ்டிட்யூட்டில் விரிவுரை ஒன்றை நிகழ்த்தினார். அதில் அவர் வயர்லெஸ் பவர் டிரான்ஸ்மிஷன் பற்றிய தனது பணியை விவாதித்தார்.
4. செப்டம்பர் 2, 1903 அன்று ‘மின்சக்தியை கடத்துவதற்கான கருவி’க்கான (U.S. காப்புரிமை எண். 1,119,732) காப்புரிமை விண்ணப்பத்தைத் தாக்கல் செய்தார்.
டெஸ்லாவின் வாழ்வில் 1904ஆம் ஆண்டு நடந்த முக்கிய நிகழ்வுகளின் ஒரு தொகுப்பு:
1. வயர்லெஸ் பவர் டிரான்ஸ்மிஷனில் தனது பணியைத் தொடர்ந்தார். அளவுக்கு அதிகமான அழுத்தம் கொண்ட உயர் அதிர்வெண் மின்னோட்டங்களைப் பரிசோதிக்கத் தொடங்கினார்.
2. தனது ஆய்வகத்தில் ‘டெஸ்லா ஆஸிலேட்டர்’, ‘டெஸ்லா உருப்பெருக்கி டிரான்ஸ்மிட்டர்’ சாதனத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்திச் சோதனைகளை நடத்தினார். இது முன்பு அந்தோணி ஜிகெட்டி அவரிடம் கொடுத்திருந்த வடிவத்தைவிட முன்னேறிய வடிவம் கொண்டது.
3. 1903ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்துக்குச் சமிக்ஞைகள் அனுப்ப முடியும் என்று கூறியிருந்த டெஸ்லா, 1904ஆம் ஆண்டில், இன்னும் ஒருபடி மேலேபோய், செவ்வாய் கிரகத்தின் மின்காந்த சமிக்ஞைகளைக் கண்டறிந்ததாகக் கூறினார். இது அந்தக் கிரகத்தில் இருந்து, தனது டவரை வந்தடைந்த தகவல்தொடர்பு முயற்சிகள் என்று நம்பினார்.
4. டிசம்பர் 1, 1904இல் ‘எலக்ட்ரிகல் டிரான்ஸ்ஃபார்மருக்கு’ (யு.எஸ். காப்புரிமை எண். 1,119,732) காப்புரிமையைப் பெற்றார். இது மின்மாற்றிகளுக்கான மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பை விவரித்தது. இந்த ட்ரான்ஸ்ஃபார்மர் டிசைன்தான், அவரது டவரை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட மிகப்பெரிய சாதனை என்று கூறலாம். இன்றைய டிரான்ஸ்ஃபார்மர்களுக்கு அடிப்படையே, டெஸ்லாவின் வடிவமைப்புதான். ஆனால் அறிவியல் உலகம், அவரது உண்மை வடிவத்தைப் பயன்படுத்தாமல், இன்று நீங்கள் காணும் வடிவத்தைப் பயன்படுத்துகின்றது.
5. பிப்ரவரி 24, 1904 அன்று நியூயார்க்கில் உள்ள அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர்ஸ் (AIEE) அமைப்பின் முன் ‘மிக அதிக அதிர்வெண்களின் மாற்று மின்னோட்டத்துடன் கூடிய சோதனைகள் மற்றும் செயற்கை வெளிச்சத்தின் முறைகளுக்கு அவற்றின் பயன்பாடு’ என்ற தலைப்பில் விரிவுரை வழங்கினார்.
6. 1904 இல், டெஸ்லா மோர்கனிடமிருந்து நிதியைப் பெற மற்றொரு முயற்சியை மேற்கொண்டார். அவர் தனது வயர்லெஸ் சிஸ்டத்தை மேம்படுத்தியிருப்பதாகவும், அதை முடிக்க இன்னும் $100,000 மட்டுமே தேவை என்றும் விளக்கமாக ஒரு கடிதம் எழுதினார். மார்கனின் தேசபக்திக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். அவரது அமைப்பு அமெரிக்காவுக்குத் தகவல் தொடர்பு, வர்த்தகத்தில் மற்ற நாடுகளை விட ஒரு நன்மையை அளிக்கும் என்று கூறினார். இருப்பினும், மார்கன் அவரது கடிதத்துக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. அவர் டெஸ்லாவின் திட்டத்தில் ஆர்வத்தை இழந்து மற்ற முயற்சிகளில் தனது கவனத்தைத் திருப்பினார்.
7. ரேடியோ தொழில்நுட்பத்திற்கான குக்லீல்மோ மார்கோனியின் காப்புரிமைக்கு எதிராக நிகோலா டெஸ்லா மேல்முறையீடு செய்திருந்ததையும், அதற்கு மார்கன் துணை நின்றதையும் நாம் ஏற்கெனவே பார்த்தோம். ரேடியோ தொழில்நுட்பத்தை மார்கோனிக்கு முன்பே கண்டுபிடித்து நிரூபித்ததாகச் சொன்ன டெஸ்லாவின் கூற்றின் அடிப்படையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும், ரேடியோ காப்புரிமம் தொடர்பாக டெஸ்லா, மார்கோனி இடையேயான சட்டப் போராட்டம் சிக்கலானது. மேல்முறையீடு என்பது பல ஆண்டுக் கால வழக்கு, காப்புரிமைச் சர்ச்சைகளை உள்ளடக்கியதாக இருந்தது. இறுதியில், 1904ஆம் ஆண்டில், அமெரிக்கக் காப்புரிமை அலுவலகம் தனது முந்தைய முடிவை மாற்றியது. நிகோலா டெஸ்லாவுக்கு வானொலி ஒலிபரப்புக்கான காப்புரிமையை வழங்கியது. இந்தத் தீர்ப்பு டெஸ்லாவின் முந்தைய பணி, ரேடியோ தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு ஆகியவற்றை ஒப்புக்கொண்டது. ஆனால், 1897ஆம் ஆண்டில் மார்கோனி டெஸ்லாவின் உழைப்பை அடிப்படையாகக் கொண்டு பெற்ற முதல் நிலை காப்புரிமத்தை அடிப்படையாக வைத்து, இன்றும் ரேடியோ அலைகள் என்றால் மார்கோனி என்று அறிவியல் உலகம் நமக்குக் கற்றுத் தருவது டெஸ்லாவுக்குச் செய்து வரும் மிகப்பெரிய துரோகமும், இருட்டடிப்புமே ஆகும். பாடல்கள், செய்திகள் கேட்கும் வெகுஜன ரேடியோ ட்ரான்ஸிஸ்டர்களை 1956ஆம் ஆண்டு பெல் லாபோராட்டரீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று அறிவியல் நிபுணர்கள்தான் டெஸ்லாவின் ஆராய்ச்சி முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கினர் என்பது கூடுதல் குறிப்பு. அவர்கள் ஜான் பார்டீன், வால்டர் ப்ராட்டைன், வில்லியம் ஷாக்லி ஆகிய மூன்று பொறியாளர்கள் ஆவர்.
இதன்பின், மார்கனின் நிராகரிப்பால் டெஸ்லா பெரும் இழப்புக்கு ஆளானார். நிதி ஆதரவு இல்லாமல் தனது கோபுரத்தைக் கட்டி முடிப்பதில் நம்பிக்கை இல்லாமல் போனார். கடன் வழங்கியவர்களும் ஒப்பந்தத்தாரர்களும் செலுத்தப்படாத கடன்களுக்காக அவர் மீது வழக்குத் தொடர்ந்ததால், சட்டச் சிக்கல்களையும் எதிர்கொண்டார். இதனால் டவர் வேலைகளையும் அவர் நிறுத்த வேண்டியிருந்தது. அவரது ஆய்வகத்தையும் மூடினார். 1905இல் லாங் தீவை விட்டு அவர் வெளியேறவும் நேர்ந்தது. இதனைப் பற்றியும், இதன் பின்னணியில் நடந்த சம்பவங்கள் பற்றியும் நாம் விரிவாகக் காண்போம்.
இதனால் உலகளாவிய வயர்லெஸ் அமைப்பை உருவாக்கும் டெஸ்லாவின் கனவு சிதைந்துபோனது. பாதுகாப்புப் காரணங்களுக்காக அரசாங்கத்தால் இடிக்கப்படும் வரை, அவரது கோபுரம் பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல், பயன்படுத்தப்படாமல் இருந்தது. 1943இல் டெஸ்லா மறைந்த பிறகுதான், அவரது காப்புரிமை சார்ந்த ஆவணங்கள் மீட்டெடுக்கப்பட்டன. அவரது கண்டுபிடிப்புகள், விஞ்ஞான சமூகம், பொதுமக்கள் ஆகியோரால் மறக்கப்பட்டன, புறக்கணிக்கப்பட்டன.
டெஸ்லா தனது வாழ்நாள் முழுவதையும், பல்வேறு வியப்பூட்டும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக அர்ப்பணித்தார். ஆனால் அவை எதுவும், அவரது வார்டன்க்ளிஃப் கோபுரத்தின் அளவுக்குப் பெருமையைப் பெறவில்லை. அதற்கான காரணிகள் என்ன? அந்த டவருக்கும், தமிழகத்தின் கோவில் கோபுரங்களுக்கும் உள்ள ஒற்றுமைகள் என்ன? கட்டுரையாசிரியர் நேரில் ஆய்வு செய்த தகவல்களைக் காண்போம்.
(தொடரும்)
இவ்வளவு முயற்சிகள் செய்தும் டெஸ்லா டவர் வெற்றி அடையவில்லை என்ற செய்தி வருத்தமளிக்கிறது…
.அதை இடித்தும் விட்டார்களா… என்ன ஒரு செயல்….இந்த உண்மைகளும் மறைந்து போகாமல் வாசகர்களுக்கு இந்த தொடரில் , தெரிவித்தது அருமை…நல்ல முயற்சி… என் பாராட்டுக்கள்….