Skip to content
Home » பாலஸ்தீனம் #1 – ரத்த வெள்ளம்

பாலஸ்தீனம் #1 – ரத்த வெள்ளம்

பாலஸ்தீனம்

‘சிம்சாத் தோரா’ என்பது யூதர்களின் பண்டிகை நாள். தங்கள் புனித நூலான தோராவின் வாசிப்பை நிறைவு செய்யும் நாளைக் கணக்கிட்டு ஒவ்வோர் ஆண்டும் இதைக் கொண்டாடுவர். அந்த நாளில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு இனிப்புகளைப் பரிமாறிக்கொள்வர். பிறகு உறவினர்களுடன், நண்பர்களுடன் பெரும் விருந்துகளை உண்டு கழித்து, ஆட்டம், பாட்டம் என ஆடி மகிழ்வர். ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை நாளில்தான் அந்தத் தாக்குதல் தொடங்கியது.

அக்டோபர் 7 அன்று விடியற்காலையிலேயே எழுந்து தயாராகிக் கொண்டிருந்த இஸ்ரேலியர்களுக்கு இன்னும் சில நிமிடங்களில் மிகப்பெரிய தாக்குதலை நாம் எதிர்கொள்ளவேண்டி இருக்கும் என்று தெரியாது. சரியாகக் காலை 6.30 மணிக்கு எங்கிருந்தோ பறந்து வந்த ராக்கெட் குண்டுகள் டெல் அவிவ்மீது பொழிந்தன. அடுத்த சில நிமிடங்களில் ஜெருசேலம் நகரின்மீதும் குண்டுகள் மழை. குண்டுகள் என்றால் ஒன்றல்ல இரண்டல்ல, மொத்தம் 2500 குண்டுகள் என்று இஸ்ரேலிய ராணுவம் சொல்கிறது. இல்லை, 5000 குண்டுகள் என்று ஏவிய ஹமாஸ் அமைப்பு சத்தியம் செய்கிறது. குண்டுகளின் எண்ணிக்கையில் குழப்பங்கள் இருக்கலாம். ஆனால் பலியான உயிர்களின் எண்ணிக்கையில் குழப்பம் கிடையாது. படுகாயம் அடைந்த அப்பாவிகளின் எண்ணிக்கையில் சந்தேகம் கிடையாது.

ராக்கெட் தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸ் இயக்கத்தினர் சரசரவென்று இஸ்ரேலுக்குள் நுழைகின்றனர். மோட்டார் பைக்குகள், டிரக்குகள், பாரா கிளைடர்கள், அதிவேகப் படகுகள் என்று சாத்தியமான அனைத்தையும் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் நுழைக்கின்றனர். மொத்தம் 22 இடங்களில் தாக்குதல் நடத்தப்படுகிறது. மக்கள் என்னவென்று சுதாரிப்பதற்குள் பல இடங்கள் ரத்தக் காடாகின்றன. திட்டமிட்ட தாக்குதல். துல்லியமான தாக்குதல். உயிர்களைப் பலி கேட்கும் அதேவேளையில் பிணைக் கைதிகளையும் ஹமாஸ் இயக்கத்தினர் பிடித்துச் செல்கின்றனர்.

எல்லாம் நடந்து முடிந்த பிறகுதான் இஸ்ரேல் சுதாரித்துக்கொண்டது. ஆனால் உடனேயே பதில் தாக்குதல்களை ஹமாஸ் ஆதிக்கம் செலுத்தும் காஸாவின் சுற்றுப்பகுதிகளில் தொடங்குகிறது. போர் விமானங்கள் காஸா பகுதியைச் சுற்றி வட்டமிடுகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் பாதுகாப்பான இடம் என்றால் எதுவென்று யாரும் சொல்லவில்லை. காஸாவின் அனைத்துப் பகுதிகளும் தாக்கப்படுகின்றன. 23 லட்சம் மக்கள் தொகை கொண்ட காஸா பகுதியை இஸ்ரேல் ராணுவம் நிலம், நீர் ஆகாயம் என மூன்று பக்கங்களிலும் சுற்றி வளைத்துத் தாக்குகிறது. ஹமாஸ் தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர்.

விமானப்படை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பல இருப்பிடங்கள் தரை மட்டமாகின. 14 மாடிக் கட்டடம் ஒன்று சீட்டுக்கட்டு சரிவதுபோல் நொறுங்கி விழுகிறது. காஸா பகுதி முழுவதும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அங்கே வாழும் மக்களுக்குச் செல்லும் உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. அவ்வாறு செய்வது போர் குற்றம் என்று சர்வதேச சட்டம் வரையறுத்தாலும் இஸ்ரேல் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளும் நிலையிலேயே இல்லை.

காஸாவில் உள்ள மருத்துவமனைகளில் உயிர்காக்கும் கருவிகள் இயங்குவதற்கு தேவையான எரிபொருள் இன்னும் இரண்டு வாரத்திற்கு மட்டுமே கையிருப்பில் உள்ளதாக அதன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தத் தாக்குதலில் அந்நகரத்தில் இருந்து 1 லட்சத்திற்கும் மேலான பாலஸ்தீனியர்கள் வெளியேறியுள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஐநாவின் பள்ளிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். வீடுகள், அலுவலகங்கள், வழிபாட்டுத்தளங்கள் என்று ஒன்றுவிடாமல் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி அழித்து வருகிறது.

தாக்குதல் தொடங்கப்பட்ட மாலை இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திரையில் தோன்றி உரையாற்றுகிறார். ‘நடந்துகொண்டிருப்பது போர். இந்தப் போர் நீண்ட நாள் நீடிக்கும். கடினமானதாக இருக்கும். ஆனால் நாம் வெற்றி பெறுவோம்’ என்கிறார். அந்த உரைக்கு அர்த்தம் பாலஸ்தீனியர்கள் ஒருவரை விடாமல் அழித்தொழிப்போம் என்று கேட்கிறது.

ஒருபக்கம் ஹமாஸ் எனும் தீவிரவாத இயக்கத்தின் தாக்குதல். இன்னொரு பக்கம் இஸ்ரேலிய அரசின் தாக்குதல். ஆனால் அழிந்தொழிவதோ அப்பாவிப் பொதுமக்கள்.

இந்தச் சண்டையில் இஸ்ரேலின் கை வழக்கம்போல ஓங்கியிருந்தாலும், ஹமாஸின் தாக்குதல் மொஸாட், ஷின் பெட் என உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த உளவு அமைப்புகளை வைத்திருப்பதாக மார் தட்டிக்கொள்ளும் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய தோல்வியாகக் கருதப்படுகிறது. இஸ்ரேலிய உளவு அமைப்புகள் இத்தனை துல்லியமான தாக்குதலை ஏன் முன்னமே கணிக்கவில்லை எனக் கேள்வி எழுகிறது.

இஸ்ரேல்மீது தாக்குதல் என்றவுடன் அமெரிக்கா பாய்ந்து உதவிக்கு வருகிறது. அதன் பின்னாலேயே பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் வரிசை கட்டுகின்றன. மற்றொருபுறம் இரான், கத்தார், லெபனான் போன்ற நாடுகள் ஹமாஸிற்கு ஆதரவுக் குரலைக் கொடுக்கின்றனர்.

ஹமாஸ் தாக்குதல் நடத்தியவுடனேயே இஸ்ரேலின் வட எல்லையான லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினரும் தன் பங்குக்குத் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 830 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஹமாஸின் தாக்குதலில் 900 உயிர்கள் பலியாகியுள்ளனர். இரு தரப்பும் தங்களுடைய நியாயங்களை வரிந்து கட்டி கூறினாலும் அப்பாவி உயிர்கள் பலியாவதற்கு யாரும் பொறுப்பேற்கத் தயாராக இல்லை. வரும் நாட்களில் உயிர் பலி எண்ணிக்கை இன்னும் உயரப்போகிறது என்ற அச்சம்தான் பொது மக்களிடையே நிலவுகிறது.

உண்மையில் இந்தத் தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது? இந்தத் தாக்குதலுக்கு ஹமாஸ் இயக்கத்தினர் ‘அல்அக்ஸா புயல், அல்-அக்ஸா வெள்ளம்’ என்றெல்லாம் பெயர் சூட்டி அழைக்கின்றனர். அல்-அக்ஸா என்பது ஜெருசலேமில் அமைந்துள்ள மசூதி. இந்த மசூதி பாலஸ்தீனிய இஸ்லாமியர்களின் புனித வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. யூதர்களும் அந்த மசூதியின் சுற்றுப்புறத்தில் தங்களுடைய இடிக்கப்பட்ட பாரம்பரிய கோயில் இருந்ததாகக் கருதுகின்றனர். அதனால் எப்போதுமே அங்கே பஞ்சாயத்துதான்.

ஆனால் இப்போதைய பிரச்னை அதுவல்ல. அந்த மசூதி இஸ்ரேலின் பாதுகாப்பில் இருக்கிறது. அதன் வளாகத்தில் கடந்த சில மாதங்களாக ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் புகுந்து பாலஸ்தீனியர்கள்மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு கலவரச் சூழல் உருவாகி அப்பாவி பாலஸ்தீனர்கள் கைது செய்யப்படுகின்றனர். இதேபோல பிற பகுதிகளிலும் பாலஸ்தீனர்கள்மீது நடக்கும் அடக்குமுறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவற்றுக்குப் பதிலடி கொடுப்பதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் குழுவின் துணைத் தலைவர் சலேஹ் அல்-அரோரி கூறுகிறார்.

ஆனால் அமெரிக்காவோ தற்போது இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கும் நல்லுறவு ஏற்பட்டு வருவதைத் தடுக்க ஹமாஸ் மேற்கொள்ளும் முயற்சி எனக் குற்றம்சாட்டுகிறது. உண்மையில் என்ன நடக்கிறது? ஏன் இந்த கொடூரப் போர்? இது இரு மதங்களுக்கு இடையேயான போரா? இரு நாடுகளுக்கு இடையேயான போரா?

இரு நாடுகளுக்கு இடையேயான போர் என்றால் சமபலத்துடன் இருக்கும் இரு நாடுகள் அல்லவா மோதவேண்டும்? வரைபடத்தில் கண்ணுக்குத் தெரியாத அளவில் இருக்கும் பாலஸ்தீனுடன் ஏன் இஸ்ரேல் மோதவேண்டும்? அப்படியே மோதினாலும் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் என்ற தீவிரவாத இயக்கம் ஏன் தாக்குதல் நடத்த வேண்டும்? பாலஸ்தீன ராணுவம் எங்கே போனது? அந்த நாட்டிற்கு ராணுவம் என்ற ஒன்று இருக்கிறதா? உண்மையில் பாலஸ்தீன் என்ற ஒன்றே இருக்கிறதா? இப்படிப் பல கேள்விகள் இருக்கின்றன.

அல் அக்ஸா புயல், அல் அக்ஸா வெள்ளம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் இந்தத் தாக்குதலுக்கான மூலகாரணம் இன்றைக்கு நேற்றைக்கு உருவானது அல்ல. ஒரு நூற்றாண்டுக்கு முந்தையது. 1917ஆம் ஆண்டு அப்போதைய பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபர் எழுதிய கடிதத்தின் முடிவில் இந்தப் பிரச்னைக்கான தொடக்கம் அமைகிறது. வெறும் 67 வார்த்தைகள் மட்டுமே கொண்ட அந்தக் கடிதத்தின் வார்த்தைகள்தான் இன்றுவரை ரத்த வெள்ளமாக பாலஸ்தீனில் பாய்ந்துகொண்டிருக்கிறது. தொடக்கப்புள்ளியைக் காணவேண்டுமானால் சில ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பு நாம் சென்றாகவேண்டும்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

2 thoughts on “பாலஸ்தீனம் #1 – ரத்த வெள்ளம்”

  1. That BALFOUR DECLARATION could be traced to origin of current conflict is partly true. But not fully. The land of Judea and Israel which was known as Palestine during this Balfour declaration was continued to be populated by Jews since biblical times till date albeit their number dwindled after every other assault on this people…it shall be noted, irrespective of numbers, Jews continued to live in that land for thousands of years. And yearned to reclaim it even after having been driven out of their homeland. The Arabs now you identify as Palestinians were the last race to have forcefully occupied this land. Hope your narration of Israel to start from Balfour declaration covering this aspect would be honest depiction of facts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *