Skip to content
Home » பாலஸ்தீனம் #2 – பண்டைய பாலஸ்தீனம்

பாலஸ்தீனம் #2 – பண்டைய பாலஸ்தீனம்

பாலஸ்தீனம்

உலகில் 700 கோடிக்கும் மேலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பாலஸ்தீனத்தைப் புனிதத் தலமாகக் கருதுகின்றனர். உலகில் வேறு எந்த ஓர் இடமும் இத்தனைக் கோடி மக்களால் வணங்கப்பட்டதில்லை. பாலஸ்தீனத்துக்கு மட்டும் ஏன் இத்தனைச் சிறப்பு? காரணம், அபிரகாமிய மதங்கள் என அறியப்படும் யூத மதம், கிறிஸ்தவம், இஸ்லாம் மூன்றின் பிறப்பிடமும் பாலஸ்தீனம்தான். அதுமட்டுமில்லாமல் அப்பெரும் மதங்களையொட்டி எழுந்த வேறு சில பிரிவுகளுக்கும்கூட பாலஸ்தீனம்தான் புனிதத் தலம்.

யூதர்களைப் பொறுத்தவரை பாலஸ்தீனம் என்பது அவர்களது மூதாதையாரான இறைத்தூதர் யாக்கோபு வாழ்ந்த இடம். யூத இனம் யாகோப்பிடம் இருந்துதான் தொடங்குகிறது. மேலும் யூதர்கள் எகிப்தில் இருந்து தப்பி மூசா நபியின் வழிகாட்டலுடன் வந்து சேர்ந்த இடமும் பாலஸ்தீனம்தான். இந்த இடம் இறைதூதர் தாவிதன், அவரது மகன் சாலமன் ஆகியோரின் நல்லாட்சியின்கீழ் யூதர்கள் வாழ்ந்த இடம். இந்த நிலத்தில்தான் அவர்கள் ராஜ்ஜியங்களை உருவாக்கினர். இஸ்ரேலை உருவாக்கினர். யூதாவை உருவாக்கினர்.

கிறிஸ்தவர்களுக்கு பாலஸ்தீனம் என்பது அவர்களது இறைத்தூதரான இயேசு பிறந்த இடம். அவர் தனது போதனைகளை உலகுக்குச் சொன்ன இடம். மனித குலத்தின் நன்மைக்காகச் சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த இடம். மீண்டும் உயிர்த்தெழுந்த இடம்.

இஸ்லாமியர்களுக்கும் பாலஸ்தீனம்தான் தங்களுடைய இறைதூதர்கள் அனைவரும் பிறந்த இடம். யூத மற்றும் கிறிஸ்தவத்தின் வழிவந்த மதமாகவே இஸ்லாம் கருதப்படுகிறது. அவ்விரு மதங்களின் இறைத்தூதர்களும் இஸ்லாமிலும் இறைத்தூதர்களாகவே வணங்கப்படுகிறார்கள். யாக்கோபு, யூசுப் (ஜோசப்), தாவூத் (டேவிட்), சுலைமான் (சாலமன்), ஈசா (இயேசு) உள்ளிட்ட இறைத் தூதர்கள் அனைவரும் இந்த உலகில் அவதரித்து தீமைக்கு எதிராகப் போரிட்டவர்கள். அவர்கள் போதித்த கருத்துகளின் இறுதி வடிவமே, முழு வடிவமே இஸ்லாமாகக் கருதப்படுகிறது.

இதனால் மூன்று மதத்தினருக்குமே சொந்தம் கொண்டாடும் நிலமாகவே பாலஸ்தீனம் சிறப்பு பெற்றுள்ளது.

0

14 லட்சம் வருடங்களுக்கு முன்பிருந்து பொயுமு 8500 முன்புவரை பழைய கற்காலம் என அறியப்படுகிறது. மனிதர்கள் முதன்முதலில் கற்கருவிகளைப் பயன்படுத்திய காலம் அது. அப்போதைய மனிதர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து கிளம்பி உலகம் முழுவதும் பயணித்தனர். அதில் ஒரு சாரார் வந்தடைந்த இடம்தான் பாலஸ்தீனம். (அப்போது அந்நிலத்திற்கு அந்தப் பெயர் கிடையாது).

பாலஸ்தீனத்திற்கு வந்தடைந்த மக்கள் அவர்களுக்கென்று தனிக் கலாசாரத்தை உருவாக்கிக்கொண்டனர். பின் கிராமங்களை அமைத்து விவசாயம் செய்யத் தொடங்கினர். பொயுமு 4300 வாக்கில் கிராமங்கள் மேலும் விரிவடைந்தன. செம்பினாலான கருவிகள் பயன்பாட்டுக்கு வந்தன. இந்தக் காலகட்டம் வெண்கலக் காலகட்டம் என அறியப்பட்டது.

வெண்கலக் காலகட்டத்தின் தொடக்கத்தில் பாலஸ்தீன நிலப்பகுதி அசுர வளர்ச்சி கண்டது. கோட்டை, கொத்தளங்கள் எழுப்பப்பட்டு நகரங்கள் உருவாயின. இந்த நகரமயமாக்கலின் விளைவாகச் சமூக அமைப்பிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன.

அங்கிருந்த மக்கள் புதிய கலாசாரத்தை நிறுவத் தொடங்கினர். அந்தக் கலாசாரம் கானானிய கலாசாரம் (Canaanite Culture) என அறியப்பட்டது. அந்த நிலமும் கானான் நாடு என அறியப்பட்டது. (கானான் என்பது இன்றைய பாலஸ்தீன நிலப்பகுதியில் தொடங்கி லெபனான், தெற்கு சிரியா, மேற்கு ஜோர்டன், சினாய் தீபகற்பம் ஆகிய நிலப்பகுதிகளை உள்ளடக்கியது).

கானான் நாட்டில் வாழ்ந்த மக்கள் செமிட்டிய மொழிகளைப் பேசி வந்தனர். அவர்களின் மதம் பலதரப்பட்ட கடவுகளை வழங்கும் மதமாக இருந்தது. அவர்களின் மூத்த கடவுள் எல் (El) என அறியப்பட்டார். இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் கானானியர்கள் என அறியப்பட்டனர். அதற்காக அங்கே கானானியர்கள் மட்டுமே வாழவில்லை.

கானான் நாடு அண்மைக் கிழக்குப் பகுதியினர் வந்து செல்லும் பாதையாக இருந்தது. இதனால் மக்கள் தொடர்ந்து அந்த நிலத்திற்கு வந்த வண்ணமும் சென்ற வண்ணமும் இருந்தனர்.

பலதரப்பட்ட மக்கள் கானனியத்திற்கு வந்ததில் முக்கியமானவர்கள் சிரியாவில் இருந்து வந்த எமோரியர்கள் (Amorites). எமோரியர்கள் கானானிய மக்களுடன் இணைந்து புதிய பாரம்பரியங்களை உருவாக்கினர். புதிய கட்டடக் கலைகள் தோன்றின. கானனிய கலாசாரத்திலும் மாறுபாடுகள் நிகழ்ந்தன.

அந்தக் காலத்தில் கானானியத்திற்கும் எகிப்துக்கும் இடையேயான மக்களின் இடம்பெயர்வு சாதாரணமாக இருந்தது. எமோரியர்களின் வருகையால் பஞ்சம் உள்ளிட்ட மாற்றங்கள் கானானியப் பகுதிகளில் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிலர் நைல் நதியையொட்டியுள்ள எகிப்து பகுதிக்குள் இடம்பெயர்ந்தனர். அங்கே குடிகள் அமைத்து, நிலங்களை உழுது வாழத் தொடங்குகின்றனர். அடுத்த நூறு ஆண்டுகளில் அங்கே ஓர் மன்னர் வம்சமே உருவாகிறது. அவர்கள் ஐக்சோஸ் (Hyksos) அல்லது அந்நிய வம்சம் என அறியப்படுகின்றனர்.

ஐக்சோஸிய வம்சம் கொஞ்சம் கொஞ்சமாக எகிப்து நிலபரப்பிலும் கானனிய நிலபரப்பிலும் தன் ஆதிக்கத்தை நிறுவத் தொடங்கியது. அங்குள்ள பகுதிகளில் சிறிய போர்களின் மூலம் ஆக்கிரமிப்புகள் நடைபெறத் தொடங்கின. முதலில் யாரோ ஒரு சிறிய மக்கள் கூட்டம் வாழ வழிதேடிச் சண்டையிடுகிறது எனக் கருதிய எகிப்து பேரரசு ஒரு கட்டத்தில் அவர்கள் தங்கள் நிலங்களைக் கைப்பற்றுவதை அறிந்து, நைல் நதியின் எல்லைகளில் இருந்து அடித்துத் துரத்தியது. அதோடு நிறுத்தவில்லை, அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை அறிந்து கானானியப் பகுதிகள் வரை பின் தொடர்ந்துவந்து அவற்றையும் ஆக்கிரமித்து முழுமையாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

எகிப்து கானான் நாட்டைக் கைப்பற்றியவுடன் அங்கிருந்த ஒவ்வொரு பெரும் நகரத்திலும் ஆளுநர்களை நியமித்தது. அவர்களுக்கு அந்நிலத்தின் மீதான முழு அதிகாரமும் வழங்கப்பட்டது. அந்த ஆளுநர்கள் எடுப்பதே முடிவு. அவர்கள் சொல்லே சாசனம். எகிப்தியப் பேரரசு ஆளுநர்களின் உதவிக்கு சிறிய படைகளையும் வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது.

அங்கிருந்த சில கானானியர்களுக்கு எகிப்தின் ஆளுகை பிடிக்கவில்லை. அவர்கள் எகிப்திய அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாமல் கலகம் செய்தனர். தோற்கடிக்கப்பட்டு அங்கிருந்து துரத்தப்பட்டனர். இவர்களைக் கொள்ளையர்கள்/ குற்றவாளிகள் என எகிப்திய அரசு அடையாளப்படுத்தியது. கொள்ளையர்கள் என்கிற வார்த்தையை எகிப்திய மொழியில் சொல்ல வேண்டும் என்றால் ஹபிரு (Hapiru) என வரும். இந்த ஹபிருதான் பின்னாளில் ஹீப்ரு என்றாகி, எபிரேயு என்று பைபிளில் இடம்பெற்றதாகக் கருதப்படுகிறது.

இதனால் எகிப்தியப் பேரரசுக்கு எதிராகக் கலகம் செய்து துரத்தப்பட்டவர்களே யூதர்களானார்கள் என ஒரு வாதம் உண்டு. ஆனால் இதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை. ஆனால் அந்த ஒரு வார்த்தை யூதர்களின் தோற்றுவாயைத் தெரிந்துகொள்ளும் தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

இங்கே இன்னொன்றையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். இந்த ஹபிரு என்கிற வார்த்தை கானானியத்தில் கலகம் செய்த ஓர் இனத்தை மட்டும் குறிப்பதற்கு வழங்கப்படவில்லை. பல இடங்களில் பல்வேறு சூழல்களில் கலகம் செய்த மக்களை குறிக்க ஹபிரு என்கிற வார்த்தையை எகிப்தியர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் யூதர்கள் இந்த ஹபிரு இன மக்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கவே வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. ஓரங்கட்டப்பட்டதாலேயே அவர்கள் கானனிய மக்களில் இருந்து தங்களை வேறுபடுத்திக்கொண்டு ஒரு குழுவாக உருவாகி இருக்கலாம் என அறியப்படுகிறது.

இதுமட்டுமல்ல, இதே காலகட்டத்தில் ஷாசு (Shasu) எனும் மக்களும் கானனிய நிலத்தில் தென்கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் எகிப்தில் இருந்து பாலஸ்தீனத்தின் வடக்குப் பகுதிக்குச் செல்லும் பாதைகளில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தவர்கள். ஹபிருவைப் போலவே இவர்களும் கொள்ளையர்கள் என அறியப்படுகின்றனர். இந்த ஷாசு மக்கள் தங்கள் இனத்திற்கு என்று தனிப்பட்ட கடவுள் ஒன்றையும் வழிப்பட்டு வந்தனர். அந்தக் கடவுளின் பெயர் ஜெஹோவா. யூத மக்கள் கோயில் எழுப்பி வழிப்பட்டு வந்த அதே கடவுள்!

ஷாசுக்கள் வாழ்ந்த இடம்தான் பைபிளில் ஈடோம் என்றும், கடவுள் மோசேயிடம் பத்துக் கட்டளைகளை வழங்கியதாகச் சொல்லப்படும் சினாய் மலையைக் கொண்ட பகுதி என்றும் உறுதி செய்யப்படுகிறது.

அதற்காக இவர்கள்தான் யூதர்கள் என்ற முடிவுக்கும் வரலாற்று ஆய்வாளர்கள் வரவில்லை. ஒருவேளை ஷாசு இனமக்கள் கானானிய பகுதிக்குள் தங்கள் வழிபாட்டு முறைகளை கொண்டு வந்திருக்கலாம். அவற்றை அங்கிருந்த மக்கள் பின்பற்றத் தொடங்கி இருக்கலாம். அப்போது அந்தப் பகுதி எகிப்தியர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் இந்த நிகழ்வுகளே யாத்திராகமம் என அறியப்படும் இஸ்ரேலியர்கள் எகிப்தில் இருந்து வெளியேறி பாலஸ்தீனத்தை அடைந்த நிலையைக் குறிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

யூதர்களின் தோற்றம் பற்றிய கடைசி துருப்பு கிட்டத்தட்ட வெண்கல யுகத்தின் இறுதி பகுதியில் கிடைக்கிறது. மெனாப்தா என்பவர் பொமுயு 1237 முதல் 1226 வரை எகிப்தை ஆண்ட அரசராவார். இவர் கானனியப் பகுதிகளில், தான் பிடித்த நகரங்களை எல்லாம் ஒரு கற்பலைகையில் பொறித்து வைத்திருந்தார். அந்த நகரங்களில் ஒன்றாக அவர் குறிப்பிடும் பெயர்தான் இஸ்ரேல். அந்தக் கற்பலகை மெனப்தா கல்வெட்டு என்று அறியப்படுகிறது. இதுதான் இஸ்ரேல் மக்கள் குறித்து நமக்குக் கிடைத்திருக்கும் முதல் வலுவான ஆதாரம். ஆனால் இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அதில் அவர்களுடைய பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறதே ஒழிய அவர்களின் தோற்றுவாய் பற்றிய வேறு எந்தத் தகவலும் இல்லை.

எகிப்தின் சரிவும் இஸ்ரேலின் எழுச்சியும்

பொயுமு 1150-900 காலகட்டத்தில் எகிப்து பயங்கரமான அரசியல், பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக் கொண்டது. இதற்கு மேலும் அதனால் கானானிய பகுதியில் நீடிக்க முடியாத நிலை. இது தொடர்ந்தால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என உணர்ந்த எகிப்து மன்னர் அப்பகுதியில் இருந்து பின்வாங்கினார்.

எகிப்தின் பின்வாங்கல் அப்பகுதியில் புதிய வெற்றிடத்தை உருவாக்கியது. இப்போது கானானியப் பகுதியை ஆட்சி செய்ய யாருமே இல்லை. என்ன செய்யலாம்? வழக்கம்போல அங்கே இருந்த மக்களே அந்த இடத்தை பிடிப்பதற்குத் தங்களுக்குள் அடித்துக்கொள்ளத் தொடங்கினர்.

வரலாற்றில் இந்த இடத்தில்தான் பைபிளில் குறிப்பிட்டப்படும் பல ராஜ்ஜியங்கள் உருவாயின. தங்கள் ஆதிக்கத்தை நிறுவுவதற்காகத் தொடர்ந்து யுத்தங்களில் ஈடுபட்டன. கிழக்கே மோவாப், அம்மோன், ஏதோம் எனும் ராஜ்ஜியங்கள் உருவாயின. தெற்கே கடற்கரையோரம் பெலிஸ்தியர்கள் வந்தனர். வடக்கே போனீசியர்கள் உருவானார்கள். இதேசமயத்தில் கானானிய மலைப்பகுதியில் இஸ்ரேலியர்களின் ராஜ்ஜியம் உருவானது.

இந்த இஸ்ரேலியர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? அவர்களுடைய ராஜ்ஜியம் எப்படி உருவானது? இதற்கு மூன்று வகை விளக்கங்கள் தரப்படுகின்றன. முதல் இரு விளக்கங்கள் பைபிள் பிரதிகளை அடிப்படையாகக் கொண்டே விளக்கப்படுகிறது.

முதல் விளக்கம் இஸ்ரேலியர்கள் பைபிள் கதைகளில் வருவதுபோல யாத்திராகமத்தில் கானனியப் பகுதிகளில் நுழைந்து இருக்கலாம். பிறகு அப்பகுதியில் தன் ராஜ்ஜியத்தை நிறுவி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இன்னொரு விளக்கத்தில் நியாயதிபதிகளில் (History of Judges) வருவதுபோல இஸ்ரேலியர்கள் நாடோடிகளாக இருந்தவர்கள். நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாகக் கானானிய மலைப்பகுதிகளைச் சீர்படுத்தி தங்கள் இருப்பிடங்களை உருவாக்கிக்கொண்டவர்கள். அவர்கள் வந்த காலத்தில் கானான் பிலிஸ்தேனியர்களின் ஆதிகத்தில் இருக்கிறது. அவர்கள் மலைப்பகுதிகளில் அடிக்கடி சண்டையிடவே இதனால் ஒருகட்டத்தில் சுதாரித்துக்கொண்ட அந்தப் பழங்குடி மக்கள் சவுல் எனும் அரசனின் கீழ் பன்னிரண்டு கோத்திரங்களாக ஒன்றிணைந்து தங்கள் நிலத்தைக் காத்தனர். இதன்பிறகு கானானின் மத்திய பகுதிகளில் படையெடுத்து அதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த இரண்டு கதைகளும் சொல்லப்பட்டாலும் இதற்கு பைபிள் பிரதிகளைத் தவிர நம்மிடம் ஆதாரங்கள் இல்லை. இங்கேதான் மூன்றாவது விளக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. இதன்படி இஸ்ரேலிய மக்கள் கானானிய பகுதியிலேயே வாழ்ந்த ஒரு பழங்குடி கூட்டம். அவர்கள் தங்களுக்கென்று ஒரு கடவுளைக் கொண்டவர்கள். ஏதோ ஒரு சமூக மாற்றம் அல்லது மதத்தின் காரணமாக எழுந்த புரட்சியில் அவர்கள் அப்போதிருந்த ஆதிக்கத்தினரை தூக்கி எறிந்துவிட்டு கனானிய நகரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பின் அவற்றை ஒன்றிணைந்து இஸ்ரேலிய ராஜ்ஜியமாக நிறுவினர்.

இன்றைய காலகட்டத்தில் இந்த விளக்கமே ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாக இருக்கிறது. அவர்கள் கானானிய நிலத்திலேயே வாழ்ந்தவர்கள். பல்வேறு கானானிய மக்களின் கலப்புதான் அவர்கள். அப்போது இருந்த சமூகக் கட்டமைப்புக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தவர்கள். இவர்களுக்கு அதிகாரம் கிடைத்தவுடன் தங்களை மற்ற கானானியர்களில் இருந்தும், அவர்களுடைய கலாசாரத்தில் இருந்தும் வேறுபடுத்திக்காட்டிக்கொண்டு கானானிய மலைப்பகுதிகளில் தங்கள் இருப்பிடத்தை நிறுவினார்கள். இந்த நகரம்தான் நாம் மேலே பார்த்த மெனாப்தா கற்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலே சொல்லப்பட்ட ஹரிபு, ஷாசுக்களின் வாரலாற்றுடனும் பொருந்திப்போகிறது. அதனால் அதுவே யூதர்களின் தோற்றமாக இருக்க வேண்டும் என்பதுதான் இப்போதைய யூகம்.

இங்கே நாம் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். யூத மக்கள் ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள் என்பதற்காக அவர்கள் மட்டுமே அந்த நிலத்திற்கு உரிமையானவர்கள், பூர்வக்குடிகள் என்று ஏற்கமுடியாது. அதேபோல அவர்கள் மட்டுமே பண்பட்ட இனத்தினராக இருந்தார்கள் என்பதும் கிடையாது. கானானிய கலாசாரம் என்பது இஸ்ரேலிய எழுச்சிக்குப் பிறகு மறைந்துவிடவில்லை. அதுவும் ஒரு பக்கத்தில் தன்னை ஆதிக்கத்துடன் நிலைநிறுத்தி வைத்திருந்தது. யூத மக்கள் கானானின் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்டபோது, யூதரல்லாத கானானியர்கள் அந்நிலம் முழுவதும் வியாபித்து இருந்தனர். அவர்கள் தங்களுடைய பழம்பெரும் கானானிய சமயத்தை, பழக்கவழக்கங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தனர். இதனைப் பைபிளிலேயே பல இடங்களில் நாம் காணலாம். இவர்களுடன் இஸ்ரேலியர்கள் கலக்கக்கூடாது எனத் தடை இருந்ததும் குறிப்பிடப்படுகிறது.

அதேபோல கானானியர்கள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்கு வெளியே இருந்த பகுதிகளிலும் தனித்தனி ராஜ்ஜியங்களை உருவாக்கி இருந்தனர். அவர்களுடைய வலிமை இஸ்ரேலியர்களுக்கு இணையாக இருந்தது. இவர்கள் ஆதிக்கத்தை நிறுவ தங்களுக்குள் போட்டிப்போட்டுக்கொண்டு அவ்வப்போது யுத்தங்களில் ஈடுபட்டு வந்தனர். இதை நாம் ஏன் குறிப்பிடவேண்டும் என்றால் பைபிளை மட்டுமே நாம் ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருப்பதால் இஸ்ரேலிய மக்கள் மட்டுமே பண்பட்டவர்கள் என்பது போலவும், அவர்கள் மட்டுமே ராஜ்ஜியங்களை நிறுவி சமூக விழுமியங்களில் உயர்ந்த இடத்தில் இருந்தனர் என்பது போலவும் தோற்றம் நிலவுகிறது. அந்த நிலம் அவர்களுக்கே சொந்தமாக இருந்ததாகவும் கருதப்படுகிறது. இது முற்றிலும் தவறு.

இஸ்ரேலிய ராஜ்ஜியத்தின் வீழ்ச்சி

இஸ்ரேலிய ராஜ்ஜியம் என்பது மிகக் குறுகிய காலம் மட்டுமே நீடித்த ஒரு ராஜ்ஜியம். சவுல், தாவீது மற்றும் சாலமன் என மொத்தம் மூன்று அரசர்கள் மட்டுமே அதற்கு உரியவர்களாக இருந்தார்கள். சவுல் என்பவர் நாம் பார்த்த இஸ்ரேலிய நாட்டை உருவாக்கியவர். தாவீது போரிட்டுப் பல நிலங்களைக் கைப்பற்றியவர். சாலமன் சிறந்த நிர்வாகி, கட்டடக் கலைகளில் நிபுணர் என்றும் அறியப்பட்டார். இந்தப் புகழ்பெற்ற சாலமன்தான் யூதர்களின் ஆலயத்தை எழுப்பியவர்.

பொயுமு 925இல் சாலமனின் மறைவு இஸ்ரேல் ராஜ்ஜியத்தை இரண்டாகப் பிளவுப்படுத்தியது. அவற்றில் இருந்து இரண்டு புதிய ராஜ்ஜியங்கள் தோன்றின. அதில் ஒன்று யூதேயா என அறியப்பட்டது. மற்றொன்று இஸ்ரேல். இரண்டு ராஜ்ஜியங்களும் அதற்குப் பின் ஒன்றிணையவே இல்லை. இரு தரப்பினரும் ஒரே பாரம்பரியத்தைக் கொண்டிருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் பிரிந்தே, தனித்தனியாகவே ஆட்சி நடத்தி வந்தனர்.

பொயுமு 900 – 609 காலத்தில் அசிரியப் பேரரசு இப்போதைய ஈராக்கின் நிலபரப்பில் இருந்து பெரும் எழுச்சிக் கண்டது. அந்தப் பேரரசு அடுத்தடுத்த படையெடுப்புகளில் மூலம் இன்றைய துருக்கி, எகிப்து, பாலஸ்தீனம், சிரியா, ஈராக், ஈரான் ஆகிய பெரும் பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. அவர்களுடைய அசுரத்தனமான போர்களில் பழைய கானானிய ராஜ்ஜியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ந்தன. தோற்கடிக்கப்பட்டவர்கள் ஒன்று விரட்டியடிக்கப்பட்டனர். அல்லது அசிரிய ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு அவர்களின் கீழ் வாழ நிர்பந்திக்கப்பட்டனர்.

அசிரியர்கள் பழிபாவத்துக்கு அஞ்சாதவர்களாக இருந்தனர். எதிர்த்தவர்களை அடித்துத் துவம்சம் செய்தனர். என்னை எதிர்த்தால் அழிவு நிச்சயம் என உறுதியிட்டுக் கூறினர். அசிரியர்களின் கொடூரத் தாக்குதலில் இஸ்ரேல் ராஜ்ஜியமும் சின்னாபின்னமாகிப்போனது. அசிரியர்களுக்கு எதிராகப் போரிட்ட இஸ்ரேலியர்களின் தலைநகரம் சமரியா முழுவதுமாகத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது (பொயுமு 720). அசிரியர்கள் சமரியாவில் நுழைந்து அந்நகரைச் சூறையாடினர். பார்க்கும் மக்களை எல்லாம் கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றனர். சரணடைந்தவர்களை இன்றைய ஈரானியப் பகுதிகளுக்கு நாடு கடத்தினர். இந்தச் சமயத்தில் கிட்டத்தட்ட 27,290 யூதர்கள் நாடு கடத்தப்பட்டதாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் நிலபரப்பு அசிரிய ஆதிக்கத்துக்கு உள்ளானபின் அப்பகுதி சமேரினா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்பகுதிக்குள் ஏராளமான இன மக்களை அசிரியர்கள் குடியேற்றினர்.

அடுத்த சில ஆண்டுகளில் யூதேயாவும் அசிரியப் பேரரசுக்கு எதிராகக் கலகத்தில் குதித்தது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் இஸ்ரேல் மக்களைவிடக் குறைந்த சேதாரத்தையே சந்தித்தனர். அசிரியர்கள் யூதேயாவின் தலைநகரான ஜெருசுலத்தை விட்டுவிட்டனர். ஆனால் அங்கிருந்த ஆலயத்தில் இருந்து ஏராளமான பொக்கிஷங்களைப் பிணைத் தொகையாகப் பெற்றுக்கொண்டனர்.

யூதேயாவின் மன்னரான எசேக்கியாவை அரியணையில் இருந்து இறக்கவில்லை. ஆனால் யூதேயாவின் பெரும்பாலான நிலங்கள் பிலிஸ்தேனிய நாடுகளுடன் இணைக்கப்பட்டன. யூதேயாவின் பெரும் நகரமான லாகிஷ் சுக்குநூறாக்கப்பட்டது.

பொமுயு 7ஆம் நூற்றாண்டு முழுவதும் அசிரியப் பேரரசே கானானிய நிலத்தில் ஆதிக்கம் செலுத்தியது. அதிகாரத்தின் மூலம் அவர்கள் அப்பகுதியில் அமைதியை நிலவ வைத்திருந்தனர். ஆனால் அசிரியப் பேரரசு வளர, வளர சுயக்கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கியது.

அசிரியர்களின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த பெரும் நகரமான பாபிலோன்தான் அப்பேரரசின் முடிவுக்குத் தொடக்கப் புள்ளி வைத்தது. வலிமை வாய்ந்த பாபிலோனிய நகரத்து மக்கள் அசிரியர்களுக்கு எதிராக புரட்சியைத் தொடங்கினர். அவர்களுக்கு ஆதரவாக அப்போதிருந்த பல ஒடுக்கப்பட்ட ராஜ்ஜியங்களும் களத்தில் குதித்தன. விளைவு அசிரியர்கள் முழுமையாக வீழ்த்தப்பட்டு பாபிலோனியப் பேரரசு உதயமானது. பாபிலோனியர்கள் ஒரு பெரிய பேரரசை வீழ்த்தியதில் எந்தச் சிரமமும் படவில்லை. அப்போதிருந்த சமூகச் சூழல் அவர்களுக்குச் சாதகமாக இருந்ததால் பெரும் சேதமோ, அழித்தொழிப்போ இல்லாமல் அசிரியப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இந்தச் செய்தி யூதேய மக்களுக்கு எட்டியது. இதனை ஒரு வாய்ப்பாகக் கருதி தான் இழந்த யூதேயாவை மீட்டுவிடலாம் என யூதர்கள் நினைத்தனர். அசிரியர்களை வீழ்த்தி வெற்றிக் களிப்பில் இருக்கும் பாபிலோனியர்களை எதிர்பாராத தருணத்தில் அடித்து வீழ்த்திவிடலாம் என யூதர்கள் திட்டமிட்டனர். தங்களுக்குள் ஒருங்கிணைந்து பாலிலோனிய அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியைத் தொடங்கினர். ஆனால் அவர்கள் நினைத்தது பெரும் தவறாகிப்போனது.

இந்தச் சம்பவம் யூத வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக இன்றும் நினைவுகூரப்படுகிறது. யூதர்கள் தங்களுக்கு எதிராகத் திட்டமிடுவதை அறிந்த பாபிலோனியர்கள் உடனே சுதாரித்துக் கொண்டனர். தங்களை நோக்கி ஒருங்கிணைந்து வரும் யூதர்களை ஒருவர் விடாமல் தீர்த்துக்கட்ட தீர்மானம் கொண்டனர்.

எதிர்த்து வந்த அத்தனை யூதர்களையும் இரக்கமே இல்லாமல் கொன்றொழித்தனர். யூதர்களின் புனித நகரமான ஜெருசுலேமுக்குள் நுழைந்து முழுவதுமாக அழித்தொழித்தனர். அவர்களது மன்னரான சாலமன் எழுப்பிய யூதர்களின் பெருமை வாய்ந்த ஆலயத்தையும் இந்தச் சமயத்தில்தான் அவர்கள் இடித்து நொறுக்கினர். நகரம் முழுவதும் மரண ஓலம் எழும்பியது. சாலைகளில் யூதர்களின் உயிரற்ற உடல் வரிசையாகக் கிடந்தது. அவர்களின் கனவு நகரமான யூதேயா காற்றில் கரைந்து கனவாகிப்போனது.

உயிருடன் எஞ்சிய யூதர்கள் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்தக் காலகட்டம்தான் யூத வெளியேற்றம் (Exodus) என வரலாற்றில் அறியப்படும் இடமாகும். யூதர்கள் முதன்முறையாக நாடற்று இடம்பெயரத் தொடங்கினர். கானானிய நிலங்களில் இருந்து துண்டிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டனர். இப்போது அவர்களுடைய ஒரே சொத்தாக யூத மதம் மட்டுமே இருந்தது. அதனைப் பற்றிக் கொள்வது மட்டுமே அவர்களுக்கு ஒரே ஆறுதலாக இருந்தது. ஆனால் அதுவும் அழிந்துவிடுமோ என அச்சம் எழுந்தது. தங்களுடைய மதத்தைக் காக்கும் விதமாக அதை முறைப்படுத்தத் தொடங்கினர்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

1 thought on “பாலஸ்தீனம் #2 – பண்டைய பாலஸ்தீனம்”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *