Skip to content
Home » பாலஸ்தீனம் #3 – யூதர்களின் புரட்சி

பாலஸ்தீனம் #3 – யூதர்களின் புரட்சி

The Emblem of Christ Appearing to Constantine

பாபிலோனிய எழுச்சியால் நொடிந்துபோயிருந்த யூதர்களின் துயரம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அதே நூற்றாண்டிலேயே மற்றொரு புரட்சி ஏற்பட்டு சைரஸ் என அறியப்பட்ட பெர்சிய மன்னன் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தான். யூதேயா எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் அவனது ஆட்சியின்கீழ் வந்தது.

யூதர்கள்மீது சைரஸ் பரிவுகொண்டான். அவர்கள் இழந்த நிலத்தை மீட்டு வழங்கினான். அவர்கள் மீண்டும் தாயகம் திரும்ப அனுமதி தந்தான். குறிப்பாக பாபிலோனியர்கள் ஆட்சியில் இடிக்கப்பட்ட ஜெருசுலேம் நகர யூத ஆலயத்தை மீண்டும் கட்டுவதற்கு உதவிபுரிந்தான்.

இந்த சைரஸ் மன்னன்தான் பைபிளில் ‘மகா கோரேசு’என அழைக்கப்பட்டு, யூதர்களை மீட்டுவர கடவுளால் அனுப்பப்பட்ட அரசனாக அறியப்படுகிறான். மேலும் பூமியின் ராஜ்ஜியங்களைத் தனக்குக் கொடுத்தருளிய கடவுள் இடிபட்டுக் கிடக்கும் யூத ஆலயத்தை மீண்டும் கட்டுவிக்கத் தனக்கு ஆணையிட்டதாக சைரஸே குறிப்பிடும் வசனமும் பைபிளில் வருகிறது.

வரலாற்றில் முதல்முறையாக விரட்டியடிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட இன மக்கள், தங்கள் தாய் நிலமான யூதேயாவுக்குத் திரும்பிய பின்னரே அவர்கள் ‘யூதர்கள்’ என்கிற பெயரில் முறையாக அறியப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இத்துடன் இன்னொரு விஷயமும் நடந்தது. அதுவரை யூதேயா என்பது தெளிவற்ற எல்லைகள் கொண்ட ஒரு நிலபரப்பாகவே இருந்தது. ஆனால் சைரஸின் ஆட்சியில்தான் அது நிர்வாகம் செய்வதற்கு ஏற்றவகையில் தெளிந்த எல்லைகளடங்கிய மாகாணமாக மாற்றப்பட்டது. அந்தப் பகுதி தற்போதைய இஸ்ரேல்-பாலஸ்தீனம் முழுவதையும் உள்ளடக்கியதாக இருந்தது.

ஆனால் இங்கேயும் யூதர்களுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது. யூதர்கள் யூதேயாவைவிட்டு வெளியேறி இருந்த காலகட்டத்தில் அந்த நிலத்தில் பல்வேறு இனமக்கள் குடியேறி இருந்தனர். அவர்களில் அதிக அளவில் குடியேறியது ஏதோமியர்கள் என்று அழைக்கப்படும் மக்கள். இவர்கள் தெற்கில் இருந்து யூதேயாவில் குடியேறி இருந்தார்கள். இப்போது சைரஸின் ஆட்சியில் மீண்டும் தங்கள் நிலத்துக்குத் திரும்பிய யூதர்களுக்கு ஏதோமியர்களுடன் இணைந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. விளைவு, மீண்டும் அடிதடிச் சண்டை.

எல்லைகள் பிரிப்பதிலும் வணிகம் மேற்கொள்வதிலும் யூதர்களுக்கும் ஏதோமியர்களுக்கும் தகராறு எழுந்தவாறு இருந்தது. இந்தத் தகராறு யூதேயாவைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவ ஆரம்பித்தது. இதனால் அப்போது ஒடுக்கப்பட்டிருந்த பழைய கானானிய அரசுகள் இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி அந்தப் பகுதியில் பெர்சிய ஆதிக்கத்தை உடைக்கப் பார்த்தன. பெர்சிய பேரரசு ஓரளவுக்குப் பொறுத்திருந்து பார்த்தது. சண்டை சச்சரவுகள் தம் நலன்களைப் பாதிக்கும் என்பதை உணர்ந்து இறுதியாக ஒரு பெரும் படையை அனுப்பி ஒட்டுமொத்த கானானிய, அண்மைக் கிழக்குப் பகுதிகளில் இருந்த அரசுகளையும் அடக்கி ஒடுக்கிவிட்டது. இனி யாருமே மீண்டும் அதிகாரத்துக்கு வராதபடி செய்துவிட்டது. பெர்சியப் பேரரசு ஆண்ட பகுதிகள் முழுவதும் அவர்களின் அடையாளங்கள், பண்பாட்டுக் கூறுகள் திணிக்கப்பட்டன.

கிட்டத்தட்ட பொயுமு 332 வரை இருநூறு ஆண்டுகளுக்கும் மேல் பெர்சிய ஆட்சி நடைபெற்றது. இந்தக் காலகட்டத்தில் கானானியப் பகுதியில் பல நகரங்கள், ராஜ்ஜியங்கள் புதிதாக எழுந்தன, வீழ்ந்தன. ஆனால் அவை அனைத்தும் பெர்சிய ஆதிக்கத்தின் கீழ்தான் இருந்தன. மக்கள் பலரும் இடம்பெயர்ந்து சென்ற நிகழ்வுகளும் நடைபெற்றன. அந்நிலமே தேசிய அடையாளம் இல்லாமல் ஆக்கப்பட்டது. இந்தச் சமயத்தில்தான் கானானிய கலாசாரமும் முழுமையாக அழிந்துபோனது.

கானானியப் பகுதிகளில் அதுவரை நிலவிவந்த மதம், மொழி, கலை, கட்டடக்கலை அனைத்துமே மாற்றம் கண்டது. அவற்றின் தனித்தன்மை முற்றிலுமாக அழிந்து பெர்சிய கலாசாரத்தால் உட்கொள்ளப்பட்டது.

இந்தக் காலத்தில் சிறிதேனும் தப்பிப் பிழைத்தது யூத கலாசாரம் மட்டுமே. அதற்காக அதிலும் மாற்றம் வராமல் இல்லை. யூதர்கள் வழிபாட்டு முறைகளை மாற்றினாலும் தாங்கள் வழிபடும் கடவுளை மாற்றவில்லை. அவர்கள் தங்கள் மதக் கடமைகளை வரையறுக்கும் ‘தோரா’ எனும் புனித நூலைத் தொகுத்திருந்தனர்.

0

அந்த வீரன் படையெடுத்து வந்துகொண்டிருக்கிறான் என்பதைக் கேட்டவுடனேயே பெர்சியப் பேரரசன் டேரியஸ் கலங்கி நின்றான். பழையபடி இருந்திருந்தால் யாராக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிட்டிருக்கலாம். ஆனால், நிலைமை இப்போது மோசமாகிவிட்டது. உள்நாட்டுப் போரினாலும் கலகங்களாலும் பெர்சியப் பேரரசு பலவீனமாகி இருந்தது. டேரியஸிடம் இன்னமும்கூடப் பிரமாண்டமான படை இருந்தது. ஆனால் அவர்களிடம் ஒற்றுமை இல்லை. அதுதான் பிரச்னை. இந்தச் சமயத்தில்தான் அந்த வீரன் பெர்சிய எல்லைக்குள் படையெடுத்து வருவதாக ஒற்றர்கள் கண்டறிந்து சொன்னார்கள்.

வந்தவன் சாதாரணமானவன் அல்ல, அதீத போர்திறன் கொண்ட படையை வழி நடத்தி வந்த மசிடோனிய மன்னன். கிரேக்கம் முதல் எகிப்து வரை பெரும் வெற்றி கண்டவன். இந்தியாவின் எல்லைகள் வரை பிடித்தவன். அப்போதும்கூட வழியில் தென்பட்ட ஆசிய ராஜ்ஜியங்களை வெற்றிகொண்டுதான் வந்திருந்தான். அவன் பெர்சியாவை வீழ்த்துவதற்கும் அதிக நாட்கள் ஆகாது என்றார்கள் ஒற்றர்கள். அவன் பெயர் என்ன என்று வினவிய டேரியஸிடம் அவர்கள் சொன்னது. ‘வருவது மகா அலெக்சாண்டர்.’

அந்தக் காலத்தில் கிரேகத்திற்கும் பெர்சியாவிற்கும் ஆதிகாலத்துப் பகை தொடர்ந்துகொண்டிருந்தது. பெர்சியப் பேரரசு தன் ஆதிக்கத்தை விரிவு செய்ததில் கிரேக்க அரசர்களை ஒவ்வொரு நிமிடமும் அச்சுறுத்தி இருந்தது. அலெக்ஸாண்டரின் தந்தையான பிலிப்பின் லட்சியமே பெர்சியாவை வீழ்த்துவதாகத்தான் இருந்தது. ஆனால் அதற்கு முன்பே அவர் கொலை செய்யப்பட்டார். அதனால் தன் தந்தை விட்டதை தான் பிடிக்க வேண்டி அலெக்ஸாண்டர் படையெடுத்து வந்தார்.

மூன்று ஆண்டுகள் நடைபெற்ற போரின் இறுதியில் டைகிரிஸ் நதிக்கரையில் பெர்சியப் படை வீழ்ந்தது. அன்றைய கானானிய பகுதி அலெக்ஸாண்டரின் ஆதிக்கத்திற்குள் சென்றது. ஆனால் அவருடைய கெட்ட காலம் அடுத்த சில ஆண்டுகளிலேயே அலெக்ஸாண்டர் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார்.

அலெக்ஸாண்டரின் இறப்புக்குப் பின் அவருடைய பேரரசைத் தளபதிகள் நான்குபேரும் நிர்வாக நலன் கருதி பிரித்துகொண்டனர். பிறகு அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்ளத் தொடங்கினர். ஒருவர் மாற்றி ஒருவர் போரெடுக்க ஒரே களேபரம் ஆனது. இன்றைய மத்தியக் கிழக்கு நிலம் அவர்கள் கைகளில் சிக்கிய மாலையாகச் சிதறிக்கொண்டிருந்தது.

அலெக்ஸாண்டரின் தளபதிகளில் ஒருவரான காஸண்டர் கிரேக்கப் பகுதியை எடுத்துக்கொண்டார். ஆண்டிகோனஸ் இன்றைய துருக்கியைக் கையகப்படுத்தினார். தாலமி எகிப்தை வைத்துக்கொண்டார். இறுதியாக யூதேயாவை உள்ளடக்கிய பகுதியாக இருந்த மகா சிரியா, செலூகஸ் (Seleucus) கைகளில் வந்து விழுந்தது. இதன்பின் அப்பகுதியில் செலூக்கியப் பேரரசு நிறுவப்பட்டது.

கிழக்கைப் பங்குபோட்ட மூன்று தளபதிகளுக்கு இடையே பல வேற்றுமைகள், சண்டை சச்சரவுகள் இருந்தாலும் மூவரும் ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருந்தனர். அது தங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திட்டமிட்டு கிரேக்கக் கலாசாரத்தைப் பரப்புவது. செலூக்கிய ஆட்சியில் மிகத் தீவிரமாக கிரேக்கக் கலாசாரம் இன்றைய பாலஸ்தீனப் பகுதியில் பரவியது. அந்நிலத்தின் தத்துவம், மதம், கலாசாரம் அனைத்திலும் அதன் ஆதிக்கம் நிலவியது. யூத மதமும் அதிலிருந்து தப்பவில்லை. கிட்டத்தட்ட யூதமதமும் கிரேக்கக் கலாசாரமும் கலந்து ஹெலனிஸ்டிக் யூத மதம் என்ற ஒரு தனிப் பிரிவே தோன்றியது.

கிரேக்கக் கலாசாரத்தில் சில பிரிவுகள் மக்களால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் பல விஷயங்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டன. அவற்றில் ஒன்று, செலூக்கிய அரசனான நான்காம் ஆண்டியோசஸ் யூத மதத்தின் பல கூறுகளுக்குத் தடை விதித்திருந்தான். குறிப்பாக யூதர்கள் உருவமில்லா கடவுளை வழிப்படுவதை நிறுத்திவிட்டு யூத ஆலயத்தில் ரத்த பலியிட்டு கிரேக்கக் கடவுள்களை வழிபட வேண்டும் என்றான் அவன்.

அத்தனை அடக்குமுறையையும் தாங்கிய யூதர்களால் அரசனின் இந்தக் கட்டளையை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தச் சமூகச்சூழலோடு சேர்ந்து பொருளாதாரச் சூழலும் மோசமாகிக் கொண்டிருந்தது. புதிய, புதிய வரி திட்டங்களால் யூதேயா திணறிக்கொண்டிருந்தது. யூதர்கள் பார்த்தார்கள். இனி பொறுக்க முடியாது என்று மீண்டும் பொங்கி எழுந்தார்கள்.

0

யூதாஸைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. இயேசுவை 30 வெள்ளிக் காசுக்குக் காட்டிக் கொடுத்தவர். ஆனால் யூதர்களின் வரலாற்றில் மற்றொரு யூதாஸ் அதைவிடச் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார். அவருடைய முழுப் பெயர் யூதாஸ் மக்காபியஸ். ஹாஸ்மோனியன் என்று அழைக்கப்பட்ட யூத குலம் ஒன்றின் தலைவரான இவர்தான் செலூக்கியர்களுக்கு எதிரான யூதர்களின் பெரும் புரட்சிக்குத் தலைமைத் தாங்கியவர்.

சுமார் 7 ஆண்டுகளுக்கு மேல் பல கட்டங்களாக நடைபெற்ற இந்தப் போரில் மக்காபியஸின் படை வெற்றிபெற்று பொயுமு 164ஆம் ஆண்டு ஜெருசுலேமை மீண்டும் கைப்பற்றியது. இந்தப் போர் பற்றிய விவரணைகள்தான் மக்கபேயர் அதிகாரம் என பைபிளில் அறியப்படுகிறது.

கிரேக்கர்களிடம் இருந்து ஜெருசுலேமை மீட்டவுடன் மக்காபியஸின் முதல் நடவடிக்கையாக இருந்தது அவர்களுடைய ஆலயத்தில் இருந்த கிரேக்கச் சிலைகளை எல்லாம் இடித்து அகற்றிவிட்டு மீண்டும் பழையபடி அந்த வளாகத்தைத் தங்கள் கடவுளான ஜெஹோவாவின் வழிபாட்டுக்கு என அர்ப்பணித்ததுதான். யூதர்களின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில்தான் ஒவ்வொரு வருடமும் ‘ஹனுக்கா’என்ற பெயரில் எட்டு நாட்கள் பண்டிகை இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

போரில் வெற்றிபெற்ற ஹாஸ்மோனியர்கள், யூதர்களின் விடுதலையை குறிக்கும் விதமாக யூதேயாவைச் சுற்றி ஒரு சுயேச்சை அரசையும் உருவாக்கினர். இப்படியாக அங்கே ஹாஸ்மோனிய ராஜ்ஜியம் எனும் யூத அரசு உருவானது.

இங்கே இன்னொன்றையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். யூதர்கள் தனி நாடு ஒன்றை அமைத்துக்கொண்டு ஹாஸ்மோனிய ஆட்சியை நிறுவியபோதும் அது யூதேயாவின் ஒரு பகுதியில் மட்டுமே இருந்தது. மற்ற பாலஸ்தீன, சிரியாவின் நிலங்கள் அனைத்தும் செலூக்கிய பேரரசுக்கு உட்பட்ட பகுதிகளாகவே இருந்தன.

பொமுயு இரண்டாம் நூற்றாண்டு முழுவதும் ஹாஸ்மோனியப் பகுதியின் அதிகாரம் செலூக்கியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே மாறிக்கொண்டேதான் இருந்தது.

இந்தச் சமயத்தில்தான் பாலஸ்தீனப் பகுதியில் ரோமானியப் படையெடுப்புகள் தொடங்கின. செலூக்கியர்களின் தொந்தரவு தாங்க முடியாத ஹாஸ்மோனியர்கள் ரோமானியர்களுடன் இணைந்து அவர்களை எதிர்க்க முடிவு செய்தனர். இதனால் ரோமானியர்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்தனர். ஆனால் அவர்கள் செய்தது பெரும் தவறு என்று பின்னால்தான் தெரிந்தது. அடுத்த அரை நூற்றாண்டில் செலூக்கியப் பேரரசை வீழ்த்திய ரோமானியர்கள் அவர்கள் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அத்துடன் ஹாஸ்மோனியப் பகுதிகளையும் அவர்கள் கேட்டதுதான் யூதர்களுக்கு இடியாய் வந்து விழுந்தது.

 

0

பொயுமு 67 – 63 ஆண்டுகளில் ரோம ஆட்சியாளரான பாம்பே சிரியாவை ஆளத் தொடங்கினார். செலூக்கியர்களை வீழ்த்திய பாம்பே உடனேயே பாலஸ்தீனத்துக்குள் நுழைந்து பிரச்னை செய்துகொண்டிருந்த ஹாஸ்மோனிய அரசர்களை அடக்கியொடுக்கினார். மேலும் யூதேயா மீது சிறப்புக் கவனம் செலுத்தி தனது எல்லைகளுக்குள் இயங்கும் மாகாணமாக மாற்றினார்.

இதேசமயத்தில் ரோமக் குடியரசைக் கைப்பற்றுவதற்கு தலைநகரில் சில பிரிவுகளுக்குள் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தன. இதில் பாம்பேவுக்கு எதிராக இருந்தவர்களில் முக்கியமான ஒருவர் ஜூலியஸ் சீசர். சீசர் – பாம்பேவுக்கு இடையேயான மோதல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றாலும், இருவருக்கும் இடையேயான கடைசி யுத்தம் (பார்சலஸ் யுத்தம்) ஒரு நாளுக்கு மேல் நீடிக்கவில்லை. சீசரின் படைகள் பாம்பேவின் படைகளைவிடப் பெரும் எண்ணிக்கையில் சுற்றி வளைத்து நின்றன. பாம்பே யுத்த களத்தில் இருந்து எகிப்துக்குத் தப்பியோடினார். ரோமக் குடியரசு சீசரின் கைகளுக்குள் வந்து ரோமப் பேரரசானது.

அலக்சாண்டரைப் போலவே சீசரின் கைகளுக்குள்ளும் பாலஸ்தீனம் நீண்ட நாட்கள் இருக்கவில்லை. ரோமப் பேரரசரான சிறிது காலத்திலேயே சீசர் கொல்லப்பட்டார். சீசருக்குப் பிறகு மற்றொரு மோதல் ரோம ராஜ்ஜியத்துக்குள் தொடங்கியது. இந்தமுறை போட்டி மார்க் ஆண்டனி, ஆக்டேவியன் ஆகிய சீசரின் ஆதரவாளர்கள் இருவருக்குள்ளும் நடைபெற்றது. போராட்டத்தின் முடிவில் ஆக்டேவியன் ரோமப் பேரரசரானாகி அகஸ்டஸ் எனத் தன் பெயரை மாற்றிக்கொண்டார். அவர் பாலஸ்தீனத்தை உள்ளடக்கிய பகுதிகளை ஆளத் தொடங்கினார்.

ஒருபக்கம் ரோம சாம்ராஜ்ஜியத்துக்குள் நடந்த அதகளத்துக்கு மத்தியில் யூதர்களுக்குள் உள்நாட்டுப் போர் தொடங்கியது. யூதர்களின் கைகளில் இருந்து ஜெருசுலேமின் மீதான அரசியல் ஆதீக்கம் கைவிட்டுப் போயிருந்தாலும், மத ரீதியில் அங்கே ஆதிக்கம் செலுத்தும் மத குருமார்களாக ஹாஸ்மோனியக் குலத்தினரே இருந்தனர். இப்போது அவர்களுக்குள்ளேயே அடுத்தத் தலைவர் யார் என்று போட்டி தொடங்கியது. இந்தமுறை பிரச்சனையைத் தீர்த்துவைக்க ஆக்டேவியனே நேரடியாகத் தலையிட்டார்.

யூதர்களை எல்லாம் அழைத்து யூதேயாவை அவர்களுக்கே தந்துவிடுவதாக ஆக்டேவியன் உறுதியளித்தார். ஆனால் அது ரோமானியர்களின் கட்டுக்குள் இருக்கும் பகுதியாக ஆளப்படவேண்டும் என்றார். கூடவே அவர்களுக்கு யூத குலத்தில் இருந்தே ஓர் அரசனையும் நியமிப்பதாகக் கூறினார். இப்படியாகத்தான் பைபிளில் ஏரோது என அழைக்கப்படும் ஹெரோத் மன்னன் யூதேயாவின் மன்னனான்.

ஹெரோத் ரோமப் பேரரசில் அதிகாரியாக இருந்த ஆன்டிபேட்டர் என்பவரது மகன். சீசரின் மறைவுக்குப் பின் முதலில் ஆண்டனிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்து வந்தவர், ஆக்டேவியனிடம் ஆண்டனி பதவியைப் பறிகொடுத்தவுடன் தன் ஆதரவை அவருக்கு மாற்றிக்கொண்டார். ஹெரோதின் ராணுவம், நிர்வாகத் திறமை, யூத மக்களிடம் அவருக்கு இருக்கும் செல்வாக்கு அனைத்தையும் பார்த்துதான் அப்பகுதியில் ரோமானியர்களின் ஆதிக்கத்தைச் செலுத்த ஹெரோதுக்குப் பதவியைக் கொடுத்தார் ஆக்டேவியன்.

ஹேரோத் பிறப்பில் ஏதோமியர்களின் வழிவந்தவர். ஆனால் யூதராக மதம் மாறியவர். தீவிர யூத அரசராகத்தான் அவர் ஆட்சியும் செய்தார். அவருடைய ஆட்சியில் யூதேயா பல்வேறு சீர்திருத்தங்களைக் கண்டது. குறிப்பாக அந்தக் காலகட்டத்தில் அவர் எழுப்பிய பல்வேறு கட்டடங்கள் இன்றும் நமக்குக் காணக் கிடைக்கின்றன. அவருடைய முக்கியப் பங்களிப்புகளில் ஒன்று பெர்சிய ஆட்சியில் சிறிதாகக் கட்டப்பட்ட யூத ஆலயத்தை மீண்டும் பிரமாண்டமாக மறுகட்டமைப்பு செய்தது.

0

ஹெரோத்தின் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீன நிலபரப்பில் பெத்தலஹம் என்ற பகுதியில்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நபர் பிறந்தார். அவருடைய பிறப்பு பாலஸ்தீன மண்ணில் மற்றொரு புரட்சிக்கு வித்திட்டது. ஆனால் இந்தமுறை நடைபெற்றது யுத்தம் அல்ல, சீர்த்திருத்தம். அந்தக் குழந்தையின் பிறப்பு ஹெரோதின் வாழ்க்கையையே புரட்டிப்போடப்போவதாக அறிவிக்கப்பட்டது. அந்தக் குழந்தையைக் கொல்வதற்கு ஹெரோத் தன் அத்தனை வீரர்களையும் ஏவினார் என்கிறது பைபிள். அத்தனைத் தடைகளை மீறியும் அந்தக் குழந்தைத் தப்பிப் பிழைத்தது. வளர்ந்து பெரிதானவுடன் தான் பிறந்த யூத குலத்தையும், அவர்களுடைய மத பராம்பரியத்தையுமே கேள்விக்கேட்டது. அந்தக் குழந்தைதான் தேவகுமாரனாக உலகம் போற்றும் இயேசு கிறிஸ்து.

உண்மையில் இயேசுவைக் கொல்வதற்கு எந்த முயற்சியும் ஹெரோத் மேற்கொள்ளவில்லை என்பதே வரலாற்றாய்வாளர்களின் கருத்து. சொல்லப்போனால் இயேசு என்கிற ஒருவர் பிறந்திருக்கிறார் என்றே ஹெரோதுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே அவர்கள் கூறுகின்றனர். ஹெரோத் சில அரசியல் காரணங்களுக்காகத் தன்னுடைய குழந்தைகளையே கொன்றார். அந்தக் கதையாடல்தான் ‘அப்பாவிகளின் படுகொலை’ என பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.

ஹெரோதின் மரணம் நோய்மையால் நிகழ்ந்தது. அவரது மரணத்துக்குப் பிறகு யூத ராஜ்ஜியம் வாரிசுகளால் பங்குபோடப்பட்டது. பாலஸ்தீனத்தின் பெரும் பகுதி ஹெரோதின் மகனான ஆர்கேலாஸிடம் சென்றது. ஆனால் அங்கு நிர்வாகத்துக்குப் பதில் பங்காளிச் சண்டை நடைபெறுவதை அறிந்த ரோமப் பேரரசு, அவரிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தைப் பிடுங்கியது. மேலும் ஹெரோதுக்குக் வழங்கப்பட்டிருந்த நிலம் அனைத்தையும் யூதேயா உட்பட தானே எடுத்துக்கொண்டது. இதன்பின் யூத குலம் மீண்டும் அதிகாரமற்றுப்போனது. அதன்பின் வரலாற்றில் யூத அரசர்கள் என யாரும் தோன்றவே இல்லை.

இந்தப் பின்புலத்தில்தான் இயேசு அப்பகுதி முழுவதும் தன் பிரசங்கங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தார். உண்மையில் அவர் ஒரு புரட்சியாளராகவே அறியப்பட்டார். அவருடைய போதனைகள், சொற்பொழிவுகள் ரோம ஆட்சிக்கு எதிரானதாக இருந்தது.

அந்த காலகட்டத்தில் ஏற்கெனவே பல குழுக்கள் ரோம ஆதிக்கத்துக்கு எதிராகவும், யூத கலாசாரம் கிரேக்க-ரோம கலாசாரத்தினால் சுவீகரிக்கப்படுவதற்கு எதிராகவும் கலகம் செய்து வந்தன. அவர்களில் ஒருவராகத்தான் இயேசு அறியப்பட்டார். (ஆனால் அவர் யூத அடிப்படைவாதத்தையும் கேள்வி எழுப்பினார்). ஆனால் ஸிலாட், சிகாரி போன்ற பயங்கரவாத யூத அமைப்புகளுக்கு இடையே இயேசுவின் பாதை அகிம்சையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக ரோமானியர்களுக்கு எதிரான எதிர்ப்பு உள்நாட்டில் வலுவடையவே அவர்களுக்கு எதிரான முதல் யூதப் போர் தொடங்கியது (பொயு 66 – 74). இந்த முறை யூதர்களை ஒருங்கிணைத்து போரிட வைத்தது ஸிலாட் அமைப்பினர். இந்தப் போரில் யூத தரப்புக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது. போரிட்ட யூதர்களை எல்லாம் ரோமானியப் படை கொன்று குவித்தது. போரில் பங்கெற்காத யூதர்களையும் தேடிப் பிடித்துப் படுகொலை செய்தது.

யூதர்களின் அப்போதைய வலிமை வாய்ந்த புகலிடமாக இருந்தது மஸாதாவில் ஹெரோத் மன்னன் எழுப்பிய கோட்டை. அதையும் ரொமானியர்களின் படை உடைத்து நொறுக்கியது. சிதறியோடிய யூதர்களின்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. சரணடைந்த யூதர்களையும் ரோமானியர்கள் வெட்டி வீழ்த்தினர். அவர்களின் கைகளில் பிடிபடுவதைவிடத் தாமே உயிரைப் பறித்துக்கொள்வது மேல் எனப் பல யூதர்கள் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்துகொண்டனர்.

ரோமின் பெயரால் ஜெருசுலேம் நகரம் சூறையாடப்பட்டது. கண்ட இடங்களை எல்லாம் ரோமானியர்கள் தீயிட்டு கொளுத்தினர். ரோமானியத் தளபதி யூதர்கள் இனி புரட்சியையே வாழ்நாளில் நினைத்துப் பார்க்காதபடி பதிலடி ஒன்றைக் கொடுக்க முடிவு செய்தார். அது யூதர்கள் கனவில்கூட நினைக்காத மரண அடி. உச்சக்கட்ட துயர நிகழ்வாக அச்சம்பவம் வரலாற்றில் அரங்கேறியது.

யூதர்களின் புனிதத் தலம் சாலமன் கட்டிய ஆலயம். பெர்சிய ஆட்சியில் மீண்டும் கட்டப்பட்டு ஹெரோத் மன்னனால் புதுப்பிக்கப்பட்ட அந்த ஆலயம் ரோமானியர்களால் மீண்டும் இடித்து நொறுக்கப்பட்டது. நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டு மண்ணோடு மண்ணாக்கப்பட்டது.

யூதர்கள் உடைந்து அழுதுகொண்டிருந்தனர். தங்கள் வாழிடம் கண்முன்னே கருகிச் சிதைவதை காணப் பொறுக்காமல் அந்நிலத்தை விட்டே அகன்றுவிட வேகம் கொண்டனர். அந்தக் கோயில்தான் யூத மதத்தின் ஒரே அடையாளமாக இருந்தது. அதுவும் இப்போது சாம்பலாகிவிட்டது. அடுத்தது என்ன? இந்த ஒரு கேள்விதான் அவர்களிடம் மிச்சமிருந்தது. இந்தக் கேள்விக்கான பதில் மீண்டும் ஒரு பிரளயத்தைக் கொண்டு வரும் என அவர்கள் நினைக்கவில்லை.

0

பொயு 130 காலகட்டம் அமைதியாகவே இருந்தது. ஆனால் அதுவும் புயலுக்கு முன் நிலவும் அமைதி என யூதர்களுக்குத் தெரியாமல் இருந்தது.

ரோமப் பேரரசர் ஹாட்ரியன் யூதேயாவுக்கு வருகை புரிந்தார். அவருடைய நோக்கம் அந்த மண்ணில் மீண்டும் அமைதியைக் கொண்டுவருவது. ஹாட்ரியன் உண்மையில் போரை விரும்பாத, சமாதான நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசனாகவே அறியப்பட்டார். யூதேயா மக்களைச் சந்தித்த அவர், அவர்களிடம் சமரசப் பேச்சு வார்த்தைகளைத் தொடங்கினார்.

ஏன் இப்படி இந்த நிலத்தில் அடித்துக்கொண்டு சாகிறீர்கள்? நீங்கள் நன்றாக வாழ வேண்டாமா? யுத்தங்களிலும் ரத்தங்களிலுமே உங்கள் வாழ்க்கையைக் கழிக்கப்போகிறீர்களா? தொடர்ந்து நடைபெறும் சண்டையால் இந்த நிலமே ரத்த வாடை அடிக்கிறது. புனித நகரமாக நீங்கள் போற்றி வணக்கும் ஜெருசுலேம் சாம்பலாகிக் கிடைக்கிறது. எத்தனை நாட்களுக்கு இப்படியே இருப்பது? இதற்கு ஒரு தீர்வு வேண்டாமா? இடிந்து உடைந்த ஜெருசுலேமை மீண்டும் கட்டியெழுப்ப விரும்புகிறேன். அதற்கு எனக்கு உதவுவீர்களா? யூதர்களிடம் அவர் கேட்டார்.

யூதர்களுக்கும் அப்போதைக்கு கொஞ்சம் ஆசுவாசம் தேவைப்பட்டது. புரட்சியால் பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டு அவர்களுடைய வாழ்வாதாரம் சீர்குலைந்து இருந்தது. ஏற்கெனவே பாதி யூதர்கள் கொல்லப்பட்டிருந்தனர். சிலர் வேறு இடங்களுக்குத் தப்பியோடிவிட்டனர். மிச்சம் இருக்கும் நாமும் இப்படி எத்தனை நாட்களுக்கு வாழ வழியில்லாமல் இருப்பது? அதுமட்டுமில்லாமல் இந்த அரசர் ஜெருசுலேமை மீண்டும் கட்டமைக்க விருப்பம் தெரிவிக்கிறார். அவருக்கு ஒத்துழைப்போம் என முன்வந்தனர்.

ஆனால் இங்கேதான் ஹாட்ரியன் தன் சூட்சமத்தை வெளிப்படுத்தினார். ஜெருசுலேமை மீண்டும் கட்டமைக்கத் தொடங்கிய அவர், அந்நகரை முழுக்க முழுக்க கிரேக்க-ரோமானியக் கலாசார மையமாக மாற்றியமைக்கத் தொடங்கினார். இத்துடன் சில கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்தார். அது, இந்த நகரத்தில் இனி யூதர்கள் தங்கள் மதப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றக் கூடாது என்பது. குறிப்பாக யூதர்கள் விருத்தசேதம் (Circumcision) மேற்கொள்வதை நிரந்தரமாகத் தடை விதிப்பதாக அவர் அறிவித்தார்.

யூதர்கள் வெகுண்டு எழுந்துவிட்டார்கள். இனியும் இவர்கள் சொல் பேச்சுக்குக் கட்டுப்பட முடியாது. ரோமானியர்களின் கொடுமையைத் தாங்கிக்கொள்ள முடியாது. மிச்சமிருக்கும் நாமும் போரிடுவோம். வெற்றி பெற்றால் புதிய யூத ராஜ்ஜியத்தை அமைப்போம். தோற்றுவிட்டால் இந்தப் புனித மண்ணிலேயே புழுதியாகிப்போவோம் எனப் போரில் குதித்துவிட்டார்கள். இப்படியாக இரண்டாவதும், கடைசியுமான ரோமானியர்களுக்கு எதிரான மற்றொரு யூத புரட்சி வெடித்தது.

இந்த முறை யூதர்களுக்குத் தலைமைத் தாங்கியவர் மிகச் சிறந்த வீரர். அவர் பெயர் சிமோன் பார் கோச்பா. இதனாலேயே இந்த புரட்சி, பார் கோச்பா புரட்சி என்றே அறியப்படுகிறது.

இந்தப் புரட்சியில் பாலஸ்தீனம் முழுவதும் பங்கெடுத்ததா என்று தெரியாது. ஆனால் யூதேயா அந்தப் போரின் மையமாக இருந்தது. அப்படியொரு தாக்குதலை யூதர்கள் ரோமானியர்களின்மீது நடத்தினர். எதிரிகள் சுதாரிப்பதற்குள் யூதப்படை ஜெருசுலேமில் கூடி இருந்த படையினரை அடித்துத் துவம்சம் செய்தது. இந்த யுத்தம் சுமார் இரண்டு ஆண்டுகள் நடைபெற்றது. ஆனால் போரில் வெற்றி என்னவோ யூதர்களுக்குக் கிட்டவில்லை. ரோமானிய வீரர்கள் புற்றீசலைப்போல் புறப்பட்டு வந்துகொண்டே இருந்தார்கள். அத்தனைப் பெரும் படையின் முன் கோச்பாவின் சிறிய படை செயலிழந்துபோனது. அவரும் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தமுறையும் பெரும் விலையை யூதர்கள் தர வேண்டி இருந்தது.

யூதேயாவில் இருந்த ஜனத்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இந்தப் போரில் அழித்தொழிக்கப்பட்டதாக வரலாற்றாய்வாளர்கள் கணிக்கின்றனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒருவரை விடாமல் கோரத் தாண்டவம் ஆடியது ரோமானியப் படை. போரின் முடிவில் ஜெருசுலேம் முழுவதும் ரோமானியக் கட்டுப்பாட்டில் வந்தது. ஒரு யூதர்கூட அந்நகரத்தில் இருக்கக்கூடாது என்று உத்தரவு பறந்தது. மீறி யாராவது இருந்தால் அவர்களின் தலை உடலில் இருக்கக்கூடாது என உறுதியாகச் சொல்லப்பட்டது. யூதர்கள் இனி எந்தக் காலத்திலும் ஜெருசுலேமுக்குள் காலடி எடுத்து வைக்கவே கூடாது என அரசாணையே வெளியிட்டது ரோமானிய அரசு. ஜெருசுலேமின் பெயரும் ஏலியா கேப்பிடோலினா (Aelia Capitolina) என்று மாற்றப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில்தான் யூதர்கள் வெவ்வேறு நாடுகளுக்கு அகதிகளாகச் சிதறி ஓடினர். ஐரோப்பா, ரஷ்யா என்று தூர தேசங்களுக்கு விரட்டப்பட்டனர். கிடைக்கும் இடங்களில் எல்லாம் தஞ்சம் அடைந்தனர். குறிப்பாக ரோமானிய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அவர்கள் இருக்கக்கூடாது என்பதுதான் சொல்லப்படாத விதியாக இருந்தது. மிகப்பெரிய யூத புலம்பெயர் நிகழ்வு வரலாற்றில் பதிவாகிக்கொண்டிருந்தது.

இத்தனை களேபரத்துக்குப் பிறகும் ரோமானியப் பேரரசர் நிறுத்தவில்லை. இறுதி நடவடிக்கையாக யூதர்களின் ஆலயத்தை முழுமையாக மாற்றியமைத்து ரோமானியர்களின் கடவுளான ஜுபிடருக்கு அங்கே ஒரு வழிபாட்டுத் தலத்தை ஏற்படுத்தினார். மேலும் பொயு 139 வாக்கில் ரோமன் யூதேயா என இருந்த அந்த மாகாணத்தின் பெயரை பாலஸ்தினா என்றும் மாற்றினார். இப்படித்தான் அப்பகுதிக்குப் பாலஸ்தீனம் எனப் பெயர் வந்தது.

இங்கே ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். பாலஸ்தீனம் என்ற பெயர் ரோமானியர்களுக்கு முன்பே பொயுமு 5ஆம் நூற்றாண்டில் கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரோடோடஸ் குறிப்பிட்டதற்கான தரவுகள் கிடைக்கின்றன. ஆனால் அது ‘சிரியாவின் பாலஸ்தீனம்’ என்றே குறிப்பிடப்பட்டு வந்தது. ரோமானியர்கள் ஆட்சியில்தான் அந்த நிலத்திற்கு பாலஸ்தீனா என்று அதிகாரப்பூர்வப் பெயர் வழங்கப்பட்டது.

0

அடுத்த நூறு ஆண்டுகள் யூதர்களின் சீர்த்திருத்தக் காலமாக இருந்தது. இனி போரிட வேண்டாம் என்று யூதர்கள் முடிவு செய்தனர். போர் நமது வாழ்க்கையை விலையாகக் கேட்கிறது. ஏற்கெனவே தேவைக்கும் அதிகமாக கொடுத்தாகிவிட்டது. இனி கொடுப்பதற்கும் எதுவும் இல்லை. இழப்பதற்கும் எதுவும் இல்லை. நமக்கென்று ஒரு வாழ்விடம் வேண்டும் என்றால் நம்முடைய அடையாளங்கள் வலுவாக வேண்டும். நமக்கென்று கல்வி வேண்டும். ரோமானியர்கள் அடைந்திருக்கும் கல்வி நிலையை நம் மக்களும் அடைய வேண்டும். அதற்கான வேலைகளில் முனைப்புக் காட்டலாம் என யூதர்கள் முடிவு செய்தனர். அவர்களின் ஒரே அடையாளமாக இருந்த யூத மதம் முறைப்படுத்தப்பட்டது.

யூதர்கள் அதுவரை தாங்கள் வாய்வழியாகக் கேட்டுவந்த போதனைகளை ஒரு நூலாகத் தொகுத்தனர். யூதர்களின் சட்டதிட்டங்கள் அடங்கிய அந்த நூலே ‘தால்முத்’ என அழைக்கப்படுகிறது. யூதர்களின் புனித நூலான தோராவில் கடவுளால் சொல்லப்பட்ட போதனைகளை விளக்கியே இந்த தால்முத் எழுதப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஒருவரைக் கொலை செய்வது பாவம் என்கிறது தோரா. ஆனால் அந்த விதி எந்தச் சந்தர்ப்பத்தில் மட்டும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது என்று விளக்குகிறது தால்முத். ஒரு போரின் போது எதிரிகளைக் கொல்லாமல் இருக்க முடியுமா? பாதுகாப்புக்காக எதிரிகளைக் கொல்லாமல் இருக்க முடியுமா? இப்படி யூத மத குருக்கள் நடத்திய விவாதங்கள் இந்த தால்முத்தில் இடம்பெற்றுள்ளன.

சொல்லப்போனால் மாறி வரும் காலகட்டத்துக்கு ஏற்ப கடவுளால் அருளப்பட்டதாகச் சொல்லப்படும் வார்த்தைகளுக்கு புதிய அர்த்தம் கொடுப்பதே இந்த தால்முத்.

தோராவும் தால்முத்தும் இணைந்துதான் இன்றைய யூத மதத்தின் அடித்தளம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

0

யூதர்களால் தால்முத் எழுதப்பட்டுக்கொண்டிருந்த அதேகாலத்தில் மற்றொருபுறம் கிறிஸ்தவமும் பரவிக்கொண்டிருந்தது. இயேசுவைப் பின்பற்றி வந்த சிலர் கிறிஸ்தவ மதத்தை உருவாக்கிப் பல்வேறு திசைகளுக்கும் சென்று பரப்பி வந்தனர். அவர்கள் தங்களுடைய சுவேஷங்கள், நிருபங்களை இணைத்து புதிய எற்பாடு எனும் பைபிளை உருவாக்கி இருந்தனர்.

ஆனால் கிறிஸ்துவின் போதனைகளைக் கொண்டு செல்லும் இடமெல்லாம் அவர்களுக்கு வேதனைதான் பலனாகக் கிடைத்தது. அவர்கள் சென்ற பகுதியில் இருந்த உள்ளூர் மதத்தினரும் அரசர்களும் கிறிஸ்தவ மத குருக்களுக்கு அவமானங்களையும் தண்டனைகளையுமே பரிசாக வழங்கினர். சிலர் அடித்தே கொல்லப்பட்டனர். ஐரோப்பாவில்கூட இதே நிலைதான் நிலவியது.

இந்தச் சமயத்தில்தான் ஒரு திடீர் மாற்றம் நிகழ்ந்தது. இருள் சூடியிருந்த கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் ஒளிதீபம் ஏற்றிக்கொடுக்க ஒருவன் வந்தான். அந்த அரசனின் பெயர் கான்ஸ்டன்டைன்.

யூதர்களின் புரட்சிக்குப் பின்னான நாட்களில் ரோமானிய ஆட்சியும் வலுவிழந்துகொண்டிருந்தது. சொல்லப்போனால் சுக்குநூறாக உடைந்து சிதறிக்கொண்டிருந்தது. பொயு 235 முதல் 275 காலகட்டத்தில் மட்டும் ரோமின் பேரரசர்களாக மொத்தம் 37 பேர் மாறி இருந்தனர். அந்த அரசர்களில் ஏதோ ஒரு சில திறமையாளர்கள் இருந்ததால் மட்டுமே ரோம சாம்ராஜ்யம் இன்னமும் நீடித்துக்கொண்டிருந்தது. இப்படியாகச் சிதைந்து துண்டுத் துண்டாகிப்போயிருந்த அந்த ராஜ்ஜியத்தை மீண்டும் எடுத்து ஒட்டி இணைத்து அடியில் இருந்து கட்டியெழுப்ப முடிவு செய்தான் கான்ஸ்டன்டைன்.

அப்போது அண்மைக் கிழக்குப் பகுதிகளே பெரும்பான்மையாக ரோமானியர்களின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தன. அங்கிருந்து ரோமானியர்களின் தலைநகரான ரோம் தொலைதூரத்தில் இருந்தது பெரும் சுமையாக இருந்தது. இதுவே அதன் கீழுள்ள பகுதிகளைக் கட்டியாள்வதற்குத் தடையாக இருப்பதாக கான்ஸ்டன்டைன் கருதினான். உடனேயே அதன் தலைநகரை இப்போது துருக்கி நகரம் இருக்கும் இடமான பைசாந்தியம் எனும் பகுதிக்கு மாற்றினான். அந்நகரமே கான்ஸ்டன்டினோபில் என்று பெயர் மாற்றமும் பெற்றது. அவனுடைய பேரரசு பைசாந்தியப் பேரரசானது.

கான்ஸ்டன்டைனின் சாதனை அழியும் நிலையில் இருந்த ரோம ராஜ்ஜியத்தை மீட்டது மட்டுமல்ல. பாலஸ்தீனப் பகுதிகளில் ஒரு சிலரால் மட்டுமே பின்பற்றப்பட்டு வந்த கிறிஸ்தவ மதத்தை உலக மதமாக்கியதும்கூட. கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவத்தை தன்னுடைய மதமாகக் ஏற்றுக்கொண்டான். மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே என அவனுக்கு கீழ் இருந்தவர்களும் கிறிஸ்தவர்களாகினர்.

கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதற்கு அவனுக்கு வந்த ஒரு கனவே காரணமாகச் சொல்லப்படுகிறது. கான்ஸ்டன்டைனின் போர்வீரர்கள் கிறிஸ்தவர்களின் அடையாளமான புனித சிலுவையை தங்களது கவசத்தில் அணிந்திருந்தால் எல்லாப் போர்களிலும் வெற்றி பெறலாம் என்று அந்தக் கனவில் கூறப்படுகிறது. அவனும் அவ்வாறே செய்கிறான். கனவில் வந்ததுபோல் அவனுக்கு வெற்றி மேல் வெற்றி கிட்டுகிறது. இதனால் அவன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் வரலாற்றாய்வாளர்களோ இந்தக் கூற்றை மறுக்கின்றனர். அப்போதைய சிதறிக் கிடந்த ரோம ராஜ்ஜியத்தை ஒருங்கிணைக்க ஒரு மதம் தேவைப்பட்டதாகவும் அதற்காக அவன் கிறிஸ்தவத்தைத் தழுவினான் என்பதே அவர்களின் முடிவு.

எது எப்படியோ ஒப்பீட்டளவில் புதிதாகத் தோன்றிய ஒரு மதத்தை ஒரு பேரரசரே முழுமையாக ஏற்றுக்கொண்டு அவனது ஆட்சியின்கீழ் உள்ள இடங்களில் அதிகாரப்பூர்வ மதமாகப் பரப்ப முயன்றது எல்லோருக்கும் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது.

இப்போது கிறிஸ்தவம் ரோமானியர்களின் அதிகாரப்பூர்வ மதமாக மாறிப்போனது. அரசு மதமாக உயர்ந்து நின்றது. அதற்கு மேல் அந்த மதம் ஏழைகளின் மதமாக இல்லை. அதைப் பின்பற்றுபவர்கள் அரசு அதிகாரிகளால் துன்புறுத்தப்படவும் இல்லை. இது கிறிஸ்தவர்களுக்கு பெரும் உவப்பாகிப்போனது. அவர்கள் சமூக அந்தஸ்தில் பெரிதாக மதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அரசு வேலை எளிதாகக் கிடைத்தது. உயரிய பதவிகளில் அவர்கள் அமர்த்தப்பட்டு அழகுபார்க்கப்பட்டனர்.

ஆனால் யூதர்களின் வாழ்விலோ இது பெரும் சோதனை காலமாக மாறியது. ரோமானியர்களின் ஆட்சியின் கீழ் வாழ்ந்து வந்த யூதர்கள் இப்போது மேலும் துன்புறுத்தப்பட்டனர். யூதனா? இவன் இயேசுவைக் கொன்றவனாயிற்றே என்று அடித்துத் துரட்டப்பட்டனர். கேட்க யாரும் இல்லை.

பைசாந்திய பேரரசின் கீழ் பாலஸ்தீனம் செழிப்புற்றது. கிறிஸ்தவத்தின் மையமாக ஜெருசுலேம் போற்றப்பட்டது. ரோம் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. ஜெருசுலேம் முழுவதும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள், நினைவுகூடங்கள் புற்றீசலைப்போல முளைக்கத் தொடங்கின.

இதேசமயத்தில்தான் இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடமும், அவர் அறையப்பட்ட சிலுவையின் ஒரு பகுதியும் கான்ஸ்டன்டைனின் தாயார் ஹெலினாவால் கண்டெடுக்கப்பட்டு, அங்கே திருக்கல்லறைத் தேவாலயம் (Holy Sepulchre) கட்டியெழுப்பப்பட்டது. இன்றும் அங்கு வழிபாடு நடைபெறுகிறது.

பைசாந்தியப் பேரரசு அமைதியான ஒன்றாக இருந்தது. அவ்வபோது சிறு சிறு போர்கள் கிழக்கில் இருந்த பெர்சிய பேரரசுடன் மூண்டாலும் பெரிய தாக்கம் மக்கள் வாழ்வில் ஏற்படவில்லை. ஆனால் இந்த நிலையை முற்றிலுமாக புரட்டிப்போடும் ஒரு நிகழ்வு நடந்தேறியது. ஒரு மனிதர் மேற்கொண்ட சிறு பயணம் அப்பகுதியின் வரலாற்றையே மாற்றி அமைத்தது. அந்தப் பயணம் அதுவரை கேட்பாறற்றுக் கிடந்த அரபுப் பழங்குடிகளில் வாழ்வில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. மேலும் அந்தப் பயணம் பெரும் மதம் ஒன்றையும் தோற்றுவித்தது.

அந்தப் பயணத்தை மேற்கொண்ட மனிதரின் பெயர் முகம்மது.

(தொடரும்)

பகிர:
nv-author-image

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *