பாலஸ்தீனத்தில் இஸ்லாமிய அரசு அமைந்ததற்கும் அது நீடித்ததற்கும் இரண்டு முக்கிய நிகழ்வுகள் அடித்தளம் அமைத்துத் தந்தன. ஒன்று அரபுமயமாக்கல். இன்னொன்று முகமது நபியின் எழுச்சி. பொதுவாக பாலஸ்தீன வரலாற்றைப் படிப்பவர்கள் அரேபியர்களின் எழுச்சியையும் முகமதுவின் எழுச்சியையும் ஒன்றாகவே பாவிக்கின்றனர். ஆனால் இரண்டும் வெவ்வேறு நிகழ்வுகள். இரண்டும் பாலஸ்தீனத்தில் ஒன்றிணைந்தன.
அன்றைய அண்மைக் கிழக்கில் இரண்டு பேரரசுகள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி இருந்தன. ஒன்று, பைசாந்தியப் பேரரசு. மற்றொன்று பெர்சியர்களின் வழி வந்த சாசானிய பேரரசு. சாசானிய பேரரசு இன்றைய ஈரான், ஈராக், ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான்வரை நீண்டிருந்தது. பைசாந்தியப் பேரரசு மத்தியக் கிழக்குப் பகுதிகளில் விரவி இருந்தது. இரண்டுக்கும் இடையே அரேபிய தீபகற்பம் இருந்தது. அங்கேதான் அரேபிய இனக்குழுக்கள் வாழ்ந்து வந்தனர்.
அரேபிய தீபகற்பத்தில் பெரும்பான்மையாக பாலைநிலங்களே இருந்தன. அதையொட்டியே அங்கே இருந்த மக்களின் வாழ்க்கையும் அமைந்திருந்தது. அங்கிருந்த இனக்குழுவினரும் செமிடிக் மக்கள் வழி வந்தவர்கள்தாம். ஆனால் இவர்கள் வாழ்ந்த புவியியல் பரப்பு இவர்களை வளர்ச்சியடையாத சமூகமாகவே வைத்திருந்தது.
பாலைவனங்களில் வாழ்ந்த மக்கள் இருவகை வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுத்தனர். குறிப்பிட்ட சில இனக்குழுக்கள் அருகே இருந்த வளமான நிலங்களைக் கண்டறிந்து அங்கு குடியேறி விவசாயம் செய்யத் தொடங்கினர். வணிகம் மேற்கொண்டனர். இவர்களது வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாகச் செழிப்புறத் தொடங்கியது. இவர்கள் தங்கள் இனக்குழுக்களுக்குள் சில உடன்படிக்கைகளை அமைத்துக்கொண்டு ஒன்றாக இணைந்து சிறிய அரசுகளை உருவாக்கினர். இப்படியாகச் சில பண்டைய அரபு அரசுகள் அப்பகுதிகளில் உருவாகின.
வாசனைத் திரவியங்களும் ஆபரணக் கற்களும் இன்றைய கச்சா எண்ணெய்க்கு இணையான செல்வத்தை அவர்களுக்கு ஈட்டித் தந்தன. இதனால் அவர்கள் பேரரசர்களைச் சந்திப்பதிலும், அவர்களின் ஆதரவில் தங்கள் வாழ்க்கையை ஓட்டுவதிலும் செலவழித்து வந்தனர். அரேபியர்கள் பொயுமு 835 வாக்கிலேயே வணிகம் மேற்கொண்டதற்கான தரவுகள் கிடைக்கின்றன. மேலும் அசிரிய காலத்தில் இருந்தே இந்தச் அரேபிய சிற்றரசுகள் தாக்குதலுக்கு உள்ளாகி வந்தன.
இவ்வாறு அமைந்திருந்த அரேபிய அரசுகளிலேயே பெயர் சொல்லும் அளவுக்கு உயர்ந்த ஓரிரு அரசுகளில் ஒன்று ஹிம்யாரிய அரசு (Himyarite Kindom). இன்றைய ஏமன் பகுதியில் இந்த ராஜ்ஜியம் தோன்றியது. இவற்றைப் போலவே வேறு சில ராஜ்ஜியங்களும் இருந்தன. இவர்கள் போர், வறட்சி, வணிகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகத் தங்கள் நிலத்தில் இருந்து வெளியேறி லெவெண்ட் பகுதியில் குடியேறத் தொடங்கினர். இதில் பாலஸ்தீனப் பகுதியில் குடியேறியவர்கள்தான் கசந்திய அரேபியர்கள் (Ghassanids Arabs).
0
அந்தக் காலகட்டத்தில் பாலஸ்தீனத்தில் எக்கசக்கமான குடியேற்றங்கள் நிகழ்ந்தன. அரேபியர்களைத் தவிர பெர்சியர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்த மக்களும்கூட அங்கே குடியேறினர். இதற்குக் காரணம் பாலஸ்தீன நிலம் செழுமை மிக்கதாக இருந்ததுதான். காற்றும் சுத்தமானதாக இருந்தது.
இதனால் பாலஸ்தீன மக்கள் தொகை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது. இவ்வாறு குடியேறிய அரேபியர்களுக்கு அன்றைக்கு ஒற்றை மொழியோ கலாசாரமோ கிடையாது. அதனால் அவர்கள் பல்வேறு இடங்களில் தங்கி அந்த நிலப்பகுதிகளில் பின்பற்றப்பட்டு வந்த மக்களுடன் கலக்கத் தொடங்கினர்.
அங்கே இருந்த பெலஸ்தியர்களுடனும் மற்ற செமிட்டிக் இன மக்களுடனும் கலந்தனர். அவர்களுக்குள் திருமணம் மற்றும் கலாசாரப் பரிமாற்றங்கள் அதிக அளவில் நடைபெறத் தொடங்கின. இதனால் மக்கள் குடியேற்றம் கடற்கரை ஊர்களுக்கும் சுற்றுப்புறக் கிராமங்களுக்கும் பரவத் தொடங்கியது.
பாலஸ்தீனத்தில் பைசாந்திய காலத்தில் நகரமயமாக்கல் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. பைசாந்திய பேரரசு மக்களைக் கொண்டு புதிய நிலங்களை சீரமைத்து விவசாயம் செய்ய ஊக்குவித்தது. காசா, நாப்லஸ் (Nablus), ஜெருசுலேம், அன்றைய பாலஸ்தீனத்தின் தலைநகரான சிசேரியா மரிதிமா (Caesarea Maritima) போன்ற நகரங்கள் வளர்ச்சியடைந்து வந்தன. பாலஸ்தீனத்தில் அந்தக் காலகட்டத்தில் சுமார் 15 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் அங்கே வாழ்ந்ததாக தரவுகள் கிடைக்கின்றன.
0
பாலஸ்தீனம் கலவையான மக்களைக் கொண்ட நகரமாக இருந்தது. அங்கே கிரேக்க மொழி பேசும் மக்கள் இருந்தனர். அராமிக் மொழி பேசுபவர்கள் இருந்தனர். அரபி மொழி பேசுபவர்கள் இருந்தனர்.
இந்தக் குடியேற்றம் மத்தியக் கிழக்கில் கிறிஸ்தவத்தின் வளர்ச்சியோடு சேர்ந்து இருந்தது. ரோமானியர்களுக்கும் தங்கள் மதத்தைப் பின்பற்றுபவர்கள் அதிகம் தேவைப்பட்டதால் அவர்கள் அரேபியர்களைத் தங்கள் எல்லைக்குள் எந்தச் சிக்கலும் இல்லாமல் அனுமதித்தனர்.
ஐந்தாம் நூற்றாண்டில் இவ்வாறு பைசாந்திய எல்லைக்குள் நுழைந்த அரேபியர்களை மதம்மாற்றும் வழக்கம் இருந்தது. அப்போது காசாவில் இருந்த திருச்சபையில் சோசோமென் எனும் பாதிரியார் இருந்தார். தீவிர கிறிஸ்தவரான அவர், மக்கள் அனைவரையும் ரட்சிக்க வேண்டும் என விரும்பினார். அதனால் அவர் அரேபியர்களிடம் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதில் பல முன்னெடுப்புகளைத் தொடங்கினார். பல்வேறு இனக் குழுக்களாக பிரிந்து கிடந்த அரேபியர்களை எல்லாம் ஒன்றிணைத்து அவர்களை இஸ்மாயில் வழிவந்தவர்கள் என அழைத்தார். அவர்களின் மூதாதையர்கள் ஆபிரஹாம் என்றும், கிறிஸ்தவர்கள் அவர்களுடைய நெருங்கிய சொந்தங்கள் என்றும் பரப்புரைச் செய்தார். இப்படியாக அரேபியர்கள் கொத்துக் கொத்தாக வந்து கிறிஸ்தவ மதத்தைத் தழுவினர். சிலர் யூத மதத்திற்கும் மாறத் தொடங்கி இருந்தனர்.
இப்படியான ஒரு சூழலில் அங்கே கசந்திய அரேபியர்கள் குடியேறி இருந்தார்கள். கசந்தியர்கள் பாலஸ்தீனத்தில் நுழைந்த உடனேயே அவர்களின் ஆதிக்கம் அந்த நிலப்பகுதியில் வளரத் தொடங்கியது. கசந்தியர்கள் மிகப்பெரிய ஒருங்கிணைந்த குழுவாக இருந்தனர். மேலும் அவர்கள் வந்தவுடனேயே சற்றும் யோசிக்காமல் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறினர். அது மட்டுமில்லாமல் அப்போதிருந்த திருச்சபைகளுடன் நேரடித் தொடர்பையும் ஏற்படுத்திக்கொண்டனர். இதுவே அவர்கள் சமூகத்தில் அடுத்தடுத்த கட்டத்துக்கு உயர பெரும் உதவி செய்தது.
4-6ஆம் நூற்றாண்டுகளில் பாலஸ்தீனத்தின் மூன்று மாகாணங்களிலும் அரேபிய, அராமிக் மொழி பேசும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. இவர்களிடையில் கசந்திய அரேபியர்கள் வலுவானவர்களாகவும் எண்ணிக்கையிலும் அதிகம் இருந்ததால் அவர்கள் மதிப்பும் உயர்ந்தது.
அவர்களுடைய வலிமையைப் புரிந்துகொண்ட பைசாந்திய அரசு அவர்களை நிலக்கிழார்களாகப் பணியமர்த்தியது. அவர்களது பகுதி பைசாந்திய அரசுக்கு கட்டுபட்ட பகுதியாக இருக்கும். ஆனால் அவர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட மக்களை ஆட்சி செய்துகொள்ளலாம் என்றது. மக்களிடம் வரி வசூலித்து தரவும், போர் வந்தால் பாதுகாப்புக்கு படைகளை அனுப்பவும் கசந்தியர்களிடம் அது ஒப்பந்தம் போட்டுக்கொண்டது.
இவ்வாறாக பாலஸ்தீன பிரைமா, செகன்டா, சலுதாரிஸ் என்ற மூன்று பகுதிகளிலும் கசந்திய அரபியர்களின் சிற்றரசுகள் உருவாகத் தொடங்கின. கசந்திய சிற்றரசுகளின் ஆதிக்கம் ஆறாம் நூற்றாண்டு வரை பாலஸ்தீனத்தில் விரவி இருந்தது. இவர்கள் பைசாந்திய அரசுக்கு உதவியாக ஈரானிய நிலப்பகுதியில் இருந்த சாசானியப் பேரரசையும் மற்ற அரேபிய குழுவினரையும் எதிர்த்துச் சண்டையிட்டு வந்தனர்.
0
4ஆம் நூற்றாண்டுக்குப் பின் பைசாந்திய அரசு ஒருவித பரஸ்பர நலன் பயக்கும் சமூக ஒப்பந்த அமைப்புக்கு (Patron-Client) மாறியது. இதன்பின் தங்களுக்கு சாதகமாக இருந்த அரேபியக் குழுக்களின் தலைவர்களுக்கு பைலார்ச் (phylarch) எனும் பட்டத்தையும் வழங்கியது. பைலார்ச் என்பது ஒரு பழங்குடி அல்லது இனக்குழுவின் தலைவனுக்கு வழங்கப்படும் உயரிய மதிப்பு. இது குறிப்பாக கசந்தியர்கள் குழுவின் இளவரசர்கள் பலருக்கு வழங்கப்பட்டது.
இந்தப் பட்டம் பெற்ற இனக்குழு தலைவர்கள் பைசாந்திய அரசுக்கு கட்டுப்பட்டவர்கள். ரோமானியப் பேரரசுக்கு ஏதாவது பிரச்னை வந்தால் இவர்கள் முதலில் வந்து நிற்க வேண்டும். அதேபோல இந்த இனக்குழுக்களுக்கு ஏதாவது பிரச்னை வந்தால் ரோமானியர்கள் உதவிக்கு வருவார்கள். இதுதான் உடன்படிக்கை. ஆனால் இந்த இனக்குழுத் தலைவர்களுக்கு ரோமானியக் குடியுரிமை வழங்கப்படாது. அதேபோல இவர்கள் வாழும் பகுதிகளுக்கு ரோமானியார்களுக்கு வழங்கப்படும் சலுகையும் கிடையாது.
இந்தப் பதவிக்கு உரியவர்களை பைசாந்திய அரசு ஏனோதானோ எனத் தேர்ந்தெடுக்கவில்லை. அதிகாரிகள்மூலம் முறையான வாக்கெடுப்புகள் வைத்தே அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பட்டம் பெற்றவர்கள் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டனர்.
530-585 ஆண்டுகளில் பல கசந்தியர்களுக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டன. இதன்பின் இவர்களுக்கு எல்லாம் தலைமை தாங்கும் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு Amorkesos எனும் பட்டத்தையும் பைசாந்திய அரசு வழங்கியது. இந்தப் பட்டம் பெற்றவர்கள் மூன்று பாலஸ்தீனத்திற்கும் உரிய அரேபிய அரசர்களாக பைசாந்திய பேரரசர்களலேயே நேரடியாக நியமனம் செய்யப்பட்டனர்.
கசந்திய அரேபியர்களை அரசர்கள் எனும் நிலைக்கு உயர்த்தியது இஸ்லாமியப் படையெடுப்புக்கு முன்பே பாலஸ்தீனம் அரேபியர்களின் ஆளுமைக்குக் கீழ் வருவதில் பெரும் பங்காற்றியது. இவர்கள் பாலஸ்தீன அரசியலில் முக்கியப் புள்ளிகளாகத் திகழத் தொடங்கினர்.
கசந்திய அரசர்களுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையேயான தொடர்பு எவ்வாறு இருந்தது என்பது குறித்த ஆதாரம் நபாத்திய (Nabataean) கல்லறைகளில் காணக்கிடைக்கிறது. அந்தக் கல்லறைகளில் உள்ள வாசகங்களில் பைசாந்தியர்கள் கசந்திய அரசரை ‘அரேபியர்கள் அனைவருக்குமான அரசர்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர்கள் பைசாந்திய அரசுக்கு சேவையாற்றி வீர மரணம் அடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கசந்தியர்களுக்கும் பைசாந்தியர்களுக்கும் இடையேயான உறவு இருந்துள்ளது.
0
கசந்திய அரசர்களில் ஒருவர்தான் இம்ரு அல்கைஸ். அரேபிய அரசராகவும் கவிஞராகவும் அறியப்பட்ட இவர் பாலஸ்தீன மாகாணத்தின் பெரும் பகுதியைத் தன் கட்டுப்பட்டில் வைத்திருந்தார். மேலும் ரோமானியக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த அரேபியப் பகுதிகளும் இவரது ஆளுகைக்கே உட்பட்டு இருந்தன.
இம்ரு அல்கைஸ் முதலில் சாசானியப் பெர்சிய ஆட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். சில காரணங்களுக்காக அங்கிருந்து விரட்டப்பட்ட அவர் பைசாந்தியப் பேரரசிடம் தஞ்சம் அடைந்து அவர்களின் அரசியலில் பங்குகொண்டார். கான்ஸ்டண்டிநோபிலுக்குச் சென்ற அவர் அப்போது இருந்த பேரரசர் முதலாம் லியோவிடம் இணக்கமாகச் சென்று மூன்றாம் பாலஸ்தீனம் முழுமைக்கும் ஆட்சியாளரானார்.
கசந்திய அரேபியத் தலைவர்கள் பைசாந்திய ஆட்சியில் செல்வச் செழிப்பில் மட்டும் வாழவில்லை. அதிகாரத்துக்கு உரியவர்களாகவும் இருந்தனர் என்பதை இது குறிக்கிறது. இதனாலேயே அவர்கள் பாலஸ்தீனத்தின் கலாசார, சமூக முன்னெடுப்புகளைத் தீர்மானிப்பவர்களாகவும் இருந்தனர்.
0
ஐந்தாம் நூற்றாண்டின் இறுதிவாக்கில் பாலஸ்தீனத்தின் இரண்டு மாகாணங்களும் முழுமையாக அரேபிய ராஜ்ஜியங்களாக மாற்றி இருந்தன.
பெயரளவுக்கு பைசாந்திய ஆளுமைக்கு உட்பட்டதாக இருந்தாலும் கசந்திய ராணுவமும் அரசியலும்தான் அங்கே ஆதிக்கம் செய்தன. கசந்தியர்களுக்கு என்று தனித்த ராணுவம் இருந்தது. தனிச் சட்டதிட்டங்கள் எழுதப்பட்டு அமலில் இருந்தன. அவர்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வணிகம் ஊக்குவிக்கப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து வணிகர்களை வரவழைப்பதன்மூலம் பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டிருந்தது.
இந்தச் சமயத்தில் சாசானிய பெர்சிய ராணுவம் பைசாந்தியப் பகுதிகளில் படையெடுத்தது. அப்போது கசந்தியர்களின் அரசராக இருந்தவர் ஐந்தாம் இப்னு ஜபலாவில் அல்-ஹாரித். அவர் தமது படைகளை அனுப்பி பெர்சிய ராணுவத்தை விரட்டியடித்தார். இதனால் அவருக்கு ‘பெரும் புகழ் கொண்ட அரசன்’எனும் பட்டத்தை பைசாந்திய அரசு வழங்கியது. அத்துடன் வேறு இரண்டு முக்கிய அதிகாரங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
ஒன்று, அவர்களுக்கு பாலஸ்தீனத்தில் இருந்த புண்ணியத் தலங்கள் அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. இரண்டாவது பைசாந்திய அரசு வெளிநாடுகளுக்கான பொருளாதார, அரசியல் தூதுவர்களாக கசந்தியர்களையே அனுப்பி வைத்தது.
கசந்திய அரேபியர்களின் வரலாற்றில் இரண்டும் முக்கியமான அதிகாரங்கள். புண்ணியத் தலங்கள் அப்போது திருச்சபைகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. திருச்சபைகள்தான் அப்போது மன்னர்களையே கட்டுப்படுத்திக்கொண்டிருந்தன. இதனால் கசந்தியர்கள் நேரடியாக திருச்சபைகளின் ஆதிக்கத்துக்குக் கீழ் வருவது பெரும் அதிகாரத் தாவலாகப் பார்க்கப்பட்டது. இரண்டாவது வெளியுறவுக் கொள்கை முழுவதும் இப்போது கசந்தியர்களின் கட்டுப்பாடுகளுக்குள் வந்தது. சில முடிவுகளை பைசாந்திய அரசின் சார்பாக அவர்களே எடுக்கவும் தொடங்கினர்.
ஐந்தாம் ஹரித்துக்கு திருச்சபைகளில் முக்கிய அந்தஸ்தும் வழங்கப்பட்டது. பேரரசர் ஜஸ்டினியன் பைசாந்திய செனட் சபையில் அவருக்கு உயரிய பட்டத்தை வழங்கி கவுரவித்தார். இதே நேரத்தில் அவரது சகோதரர் அபு கரிப் என்பவரும் பைசாந்தியர்களால் கவுரவிக்கப்பட்டார். இருவரையும் தங்கள் நாட்டு அரசு தூதர்களாக நியமித்தது பைசாந்திய அரசு.
அபு கரிப் மத்தியக் கிழக்கு நாடுகளின் தூதுவர் குழுவின் முக்கிய உறுப்பினராக ஆனார். அல் ஹரித்தின் அரசவையின்கீழ் பல அரேபிய இனக்குழுக்கள் சிற்றசர்களாக உயர்த்தப்பட்டனர்.
இதைவிட முக்கியமாக அல் ஹரித் பாலஸ்தினா செகன்டாவுக்கும் அபு கரிப் பாலஸ்தீன சலுதாரிஸுக்கும் அரசர்களாக நியமிக்கப்பட்டனர். இதன்பின் கசந்திய அரசர்கள் தங்களுக்கென்று தனி வெளியுறவுக் கொள்கைகளையும் வகுத்துக்கொள்ள தொடங்கினர். கசானியர்களின் படை எண்ணிக்கையில் அதிகமாகவும் பைசாந்தியர்களின் ராணுவத்தில் முக்கியப் பங்கும் வகித்ததால் பைசாந்தியப் பேரரசர்கள் இவர்களுடைய கொள்கைகளில் தலையிட விரும்பவில்லை. இத்துடன் இவர்கள் திருச்சபைகளின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதால் அவர்களுடைய தனிப்பட்ட சட்டத் திட்டங்களிலும் பைசாந்தியப் பேரரசால் தலையிட முடியாத நிலை ஏற்பட்டது.
அப்போதைய பாலஸ்தீனத்தின் பொருளாதார அடித்தளமாகப் புண்ணியத் தலங்களே இருந்தன. அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கசந்திய அரசர்களும் ஆதிக்கம் மிக்கவர்களாக இருந்தனர்.
கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் திருச்சபைகளுக்கும் தேவாலயங்களுக்கும் நிதி ஆதரவு தருபவர்களாக வளர்ந்தனர். கலாசார, சமயச் செயல்பாடுகளில் இவர்களுடைய பங்கு முக்கியமானதாக மாறியது.
இவர்கள் தங்கள் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயத்தை ஊக்குவித்தனர். கால்நடை வளர்ப்பு அதிகரித்தது. பாலஸ்தீன நிலங்களில் சுரங்கம் அமைத்து தங்கம், வெள்ளி, தாமிரம் போன்றவற்றை எடுக்கும் பணிகளும் தொடங்கின. குதிரைகளை அதிக அளவு போர்களுக்குப் பழக்கினர்.
இரண்டு பாலஸ்தீனப் பகுதியில் நடைபெறும் உள்நாட்டு, வெளிநாட்டு வணிகங்கள் எல்லாவற்றுக்கும் சுங்க அதிகாரிகாரமும் அவர்களிடையே இருந்தது. கிட்டத்தட்ட கிறிஸ்தவத் தலைமையகத்தின் ராணுவப் பிரிவு என்பதுபோலவே கசந்திய படை செயல்பட்டது.
மதரீதியான நிர்வாகங்களில் இவர்கள் தலையிடத் தொடங்கியதில்தான் மற்ற அரேபிய சமூகங்களுக்கும் விடிவுகாலம் ஆரம்பமானது. அவர்களுக்குப் படிப்பறிவு கிடைப்பதும் உறுதி செய்யப்பட்டது.
கசந்தியர்கள் ஒருபக்கத்தில் வளர்ந்து வந்தாலும் மற்ற அரேபியச் சமூகங்கள் பலகடவுள் வழிபாட்டையே அப்போதும் பின்பற்றி வந்தன. இவர்கள் கல்வியில் பின் தங்கியவர்களாக இருந்தனர். இவர்களது பாரம்பரியங்கள் பெரும்பாலும் வாய்வழிக் கதைகளாக மட்டுமே நீடித்து வந்தன. ஆனால் இவர்களுக்கென்று ஒரு சிறப்பு இருந்தது. அது, அரேபியப் பழங்குடிகள் கவிதைகள் பாடுவதில் விற்பன்னர்களாக இருந்தனர். குறிப்பாகக் கவிதைகளுக்கு பரிசு வழங்கும் விழாக்கள் எல்லாம் மெக்கா பகுதிகளில் நடைபெற்று வந்தன.
நாடோடி வாழ்க்கையில் கவிதையே அவர்களது கலையாக இருந்தது. அரேபியர்கள் கவிதைகளை எதிலும் எழுதி வைத்துக்கொள்வது கிடையாது. அவர்கள் காதால் கேட்பதோடு சரி. ஆழ்மனதில் அது எழுதப்பட்டுவிடும்.
நூறு வரிகளில் வெவ்வேறு ஏற்ற இறக்கங்கள் கொண்ட கவிதைகள் (Odes) கூட அவர்களுக்கு அத்துப்படி. இந்தக் கவிதைகளில் அவர்களது நாடோடி வாழ்க்கை, காதல், களவு, யுத்தங்கள் ஆகியவற்றைப் பற்றிய கதைகள் வெளிப்பட்டன. இவற்றின் மூலமே அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கும் பயிற்றுவித்து வந்தனர்.
இஸ்லாமுக்கு முந்தைய நூற்றாண்டுகளில் அரேபியச் சமூகம் கவிதைகளை, செவ்வியல் கதைகளை, இதிகாசங்களை மனப்பாடம் செய்து கதைகளாக மக்களிடையே கொண்டு சென்றது. மெக்காவில் நடைபெறும் கவிதை நிகழ்வுகளில் விவாதங்கள் நடைபெற்றன. அரசியல் விவாதிக்கப்பட்டது. இவ்வாறு கவிதைகள், கதைகளின் வழியாகத்தான் வரலாறு, சமூக விமர்சனங்கள், அரசியல் சொற்பொழிவுகள் போன்ற அறிவுசார்ந்த செயல்பாடுகள் நடைபெற்றன.
இப்படியாகத்தான் லெவெண்ட், ஈராக் பகுதிகளில் அரேபிய மொழி வளர்ந்து வந்தது. ஒரே குறை தனித்த எழுத்துக்கள் இல்லாதது. எழுத்தறிவு கிடையாததால் படிப்பறிவும் கிடையாது. இதனாலேயே அவர்கள் ஒன்றிணைக்கப்படாமல் இருந்தனர். இவர்களுக்கு எழுத்தறிவை வழங்க உதவியதில்தான் கசந்திய அரேபியர்களின் பங்கு இருக்கிறது.
கல்வியறிவற்ற அரேபியர்களுக்கு எழுத்தறிவைப் புகட்டியதில் பாலஸ்தீனத்தில் கிறிஸ்தவ அரேபிய அரசவைகள் பெரும் பங்காற்றின. இந்த அவைகள் நேரடியாக கசந்திய கட்டுப்பாட்டில் இருந்தன. இந்த அரசவைகள் அரேபிய கவிதைகள் இயற்றுபவர்களுக்கும் கலை செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கும் நிதி வழங்கி ஊக்குவித்தன. கவிஞர்களுக்குச் சிறப்பு ஊதியங்கள் வழங்கப்பட்டன. இந்த அவைகளின் அடிப்படை நோக்கம் கிறிஸ்தவத்தைப் பரப்புவதாகவே இருந்தாலும் பின்னாளில் இஸ்லாமின் வளர்ச்சிக்குப் பெரிதளவில் உதவியது இந்தக் கட்டமைப்பே.
அரேபிய மக்கள் கவிதைகளையும் இதிகாசங்களையும் வாசித்து மனனம் செய்யும் வழக்கமே பின்னாளில் இஸ்லாமிய குரானை வாசிக்கவும், மனனம் செய்யவும் பெரிதும் உதவியது. இதுவே அவர்கள் அரபு மொழியைச் சீரமைக்கச் செய்யவும் உதவியது. அரபு மொழியே அவர்களை ஒன்றிணைத்தது செய்தது. இப்படியாகத்தான் அரேபியர்களிடம் வளர்ச்சி ஏற்பட்டது. இந்த அரசவைகளின் செயல்பாடுகளைத்தான் பின்னால் வந்த இஸ்லாமிய கலீஃபாக்கள் முன்மாதிரிகளாக எடுத்துக்கொண்டனர்.
அதேபோல பலகடவுள் வழிபாடுகளில் இருந்த அரேபியர்களை ஒற்றைக் கடவுள் எனும் தத்துவத்துக்கு மாற்றிய பங்கும் கசந்திய அரசர்களுக்கே உரியது. அவர்கள் எளிமையாகவும் ஆழமாகவும் ஒற்றைக் கடவுள் என்ற தத்துவத்தை மக்களிடம் கொண்டு சென்றனர். இதுவும் இஸ்லாமின் வளர்ச்சிக்கும் அடிதளமாக அமைந்தது.
கசந்தியர்களின் இந்த முன்னெடுப்புகளின் பலனாக சில அரேபிய அரசர்கள் பாலஸ்தீன பிரைமாவின் மதக் குருக்களாகவும்கூட நியமிக்கப்பட்டனர். இத்தகைய பின்னணியில்தான் பாலஸ்தீனத்தில்தான் முதன் முதலில் இஸ்லாம் நுழைந்தது.
0
அரேபியர்களின் வளர்ச்சி நாம் பார்த்ததுபோல் ஒரே நேரத்தில் நடைபெற்றது அல்ல. வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வழிகளில் அவர்களின் வளர்ச்சிப் போக்கு இருந்தது. அந்த வகையில் சில அரேபியப் பழங்குடியினர் நாடோடிகளாகவே இருந்தனர். அவர்கள் வாழ்க்கை ஒட்டகங்களை நம்பியே இருந்தது.
ஒட்டகங்கள் அரேபிய இனக்குழுக்களுக்கு உற்ற நண்பனாக விளங்கின. அதன் உடல் அமைப்பும் கோடையில் ஐந்து நாட்களுக்கு ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் பயணிக்கும் பண்பும் அவர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றிக்கொண்டிருந்தன.
இந்த ஒட்டகங்களின் வழியாகத்தான் அவர்கள் பாலைவனங்களை அறியத் தொடங்கினர். அங்கேயுள்ள சோலைகளை கண்டரிந்தனர். இவர்கள் பயணிக்கும்போது பேரீட்சை பழங்களையும், ஒட்டகத்தின் பாலையும், ஆட்டு இறைச்சிகளையும் மூட்டைக் கட்டிக்கொண்டு கூடவே எடுத்துச் செல்வர். அடுத்த சோலைகள் வரும்வரை அவர்களுக்கு அதுவே உயிர் காக்கும் உணவாக இருக்கும்.
இவர்களின் கடவுள்களாகச் சிறு தெய்வங்களும் ஜின் போன்ற அமானுஷ்ய தேவதைகளுமே இருந்தன. அவற்றையே இந்தப் பாலைவன மக்கள் வணங்கி வந்தனர். இவர்களுக்குத் தெரிந்த மற்றொரு விஷயம் சண்டையிடுவது. எந்நேரமும் அடிதடி, சண்டை என்றே சிறுவயதில் இருந்து இவர்களுடைய வாழ்க்கை முறை பழகி இருந்தது.
இதனை அறிந்திருந்த ரோமானிய, பெர்சிய, எத்தியோப்பியப் பேரரசர்கள் அரேபியர்களை யுத்தங்களுக்குப் பயன்படுத்தி வந்தனர். அவர்களுக்கு கணிசமான தொகையைக் கொடுத்து தங்கள் ராணுவத்துக்கு உதவியாகக் போரிட வைத்தனர். இப்படியாக யுத்தங்களிலும் போர்களங்களிலுமே அவர்களுடைய வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது. இதைத்தவிர இந்தக் குழுக்கள் தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் அடித்துக்கொள்ளும் நிலையும் இருந்தது. இந்தச் சமூக-அரசியல் பின்னணியில்தான் முகமது நபியின் பிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
0
570ஆம் ஆண்டு ஆண்டு. அரேபியாவின் மேற்கு கரையோரம் அமைந்துள்ள நகரமான மெக்காவில் உள்ள சிறிய ஊரில் முகமது நபிகள் பிறந்தார். தந்தையை சிறுவயதிலேயே இழந்துவிட்டார். தாத்தா அப்துல் முதாலிப்பிதான் முகமதை அரவணைத்துக்கொண்டார்.
அப்துல் முதாலிப் குறைஷி பழங்குடியினரின் ஒரு பிரிவாகிய ஹஷிம் என்கிற பிரிவுக்கு தலைவராக இருந்தார். அப்போதைய அரபுப் பழங்குடி மக்களின் வழக்கப்படி ஆண் குழந்தைகளைச் சிறுவயதிலேயே பாலைவனத்தில் பயணம் மேற்கொள்ள அனுப்பிவிடுவர். இது அவர்கள் அந்த நிலபரப்பை புரிந்துகொள்ள உதவும் என்பது கருத்து. இதனால் முகமதின் தாயாரும் அவரைப் பாலைவனத்திற்கு அனுப்பிவிட்டார். பாலைவனத்தில் தனிமையிலேயே தன் சிறுவயதைக் கழித்தார் முகமது. தாயார் முகமதுவின் ஆறாவது வயதில் மறைந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் தாத்தாவும் இறந்துவிட்டார். இந்த இழப்புகள் பேரடியாக முகமதுவின் வாழ்வில் இறங்கியது.
இப்போது முகமதைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அவரது பெரியப்பாவான அபூதாலிப்புக்கு வந்தது. தாத்தாவின் இறப்பிற்குப் பிறகு அபூதாலிப்தான் ஹாஷிம் குலத்தின் தலைவராகவும் ஆனார். அபூதாலிப் ஒரு வணிகர். அவர் பயணம் செய்யும்போது முகமதுவையும் தன்னுடன் அழைத்துச் செல்வார். அவருக்கு வணிகத்தின் சூட்சமங்களைப் பயிற்றுவிக்க முயற்சித்தார். முகமதுவும் ஆர்வத்துடன் வணிகக் கலையைப் பயின்றார். ஆனால் அவரால் வியாபாரத்தில் பெரிதாகச் சோபிக்க முடியவில்லை. சம்பாதிக்கும் காசு சாப்பிடுவதற்கும் தங்குவதற்கும் மட்டுமே போதுமானதாக இருந்தது.
இந்தச் சமயத்தில்தான் அவரது வாழ்க்கையில் ஒரு பெண்மணி நுழைந்தார். அவரது பெயர் கதிஜா. ஒரு வியாபாரத்தின்போது கதிஜாவை முகமது சந்திக்க நேர்ந்தது. பார்த்த கணத்திலேயே இருவருக்கும் பிடித்துவிட்டது. கதிஜாவுக்கு முகமத்தைவிடப் பதினைந்து வயது அதிகம். முகமதுவின் நேர்மையும் திறமையும் கதிஜாவை ஈர்த்தது. இருவரும் திருமணம் செய்துகொண்டனர். முகமதுவுக்கும் கதிஜாவுக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனர். நான்கு மகள்கள். மூன்று மகன்கள். ஆனால் மூன்று மகன்களும் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர்.
கதிஜா வசதி படைத்தவர் என்பதால் முகமதுவுக்கு வாழ்க்கை குறித்த கவலைகள் மறைந்தன. அவருக்கு வேண்டிய அன்பான குடும்பம், பணம் இரண்டுமே கிடைத்தது. ஆனாலும் அவரது மனம் திருப்தி அடையாமலேயே இருந்தது. இதற்குக் காரணம் அவர் பிறந்த சமூகம்.
அரேபியப் பழங்குடிகள் இடையே இருந்த ஏற்ற இறக்கங்கள், பிரிவினைகள், சண்டை சச்சரவுகள் முகமதின் மனதை வருத்தின. அரேபிய மக்கள் ஒற்றுமையின்றி ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு மாண்டு போவதும். வேறு யாரோ ஓர் அரசருக்காகப் போரிட்டுச் சாவதும் அவருக்குத் துன்பத்தை தந்தது. இதனை மாற்ற வேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால் எப்படி மாற்றுவது என்று தெரியாத நிலை.
இதனால் பெரிதும் வேதனையுற்ற முகமது தனிமையில் அங்கே இருந்த மலையடிவாரக் குகை ஒன்றில் தியானம் செய்ய தொடங்கினார். தொடர்ந்து பல நாட்கள் தியானம் செய்த நிலையில் 610 ஆண்டு வாக்கில் அவருக்குள் ஒரு வினோத உணர்வு எழுந்தது. திடீரென்று வானவர் ஒருவரின் குரல் அவருக்குள் கேட்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.‘இறைவனின் பெயரால் ஓதுவீராக’ இதுதான் முகம்மதுவின் மனதில் கேட்ட குரல். அவருக்கு இறைவன் அளித்ததாகச் சொல்லப்படும் முதல் கட்டளை.
இத்தகைய நிகழ்வினால் முதலில் அதிர்ச்சியுற்ற முகமது தனது மனைவி கதிஜாவிடம் விஷயத்தைக் கூறினார். அவர் தன்னுடைய உறவினர்களிடம் நடந்ததைக் கூற, அவர்கள் முகமதை நம்பினர். இது நிச்சயம் மனப் பிரம்மை அல்ல, இறைவனின் கட்டளை எனப் புரிந்துகொண்டனர்.
இதன்பின் அவர் வானவர் ஜிப்ரீலின் கட்டளைகளைப் பெறத் தொடங்கினார். பிறகு 613ஆம் ஆண்டு வாக்கில் பொதுமக்களிடம் தான் கேட்ட வாசகங்களை பரப்புரை செய்யத் தொடங்கினார். இந்தச் சமயத்தில் அவரைச் சுற்றி சிறு ஆதரவாளர்கள் குழு ஒன்று உருவாகி இருந்தது. அவரைப் பின் தொடர்பவர்கள் பெரும்பாலும் இருபது, முன்பது வயதுடைய இளைஞர்களாகவே இருந்தனர். நாட்களாக ஆக அவரைச் சுற்றியிருந்த கூட்டம் அதிகரிக்கத் தொங்கியது.
தங்கள் பின்னால் நின்ற மக்கள் இப்போது முகமதுவின் பின்னால் சூழ்வதை பார்த்து அப்போது சமூக அந்தஸ்தில் உயர்வில் இருந்த குரேஷியர்களுக்கு முகமதுவின்மீது பொறாமையும் குரோதமும் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் அவர்களுக்கும் முகம்மதுவைப் பின்தொடர்பவர்களுக்கும் இடையே மோதல் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் இருந்தது. ஒருகட்டத்தில் முகமது மெக்காவில் இருப்பதே ஆபத்து என்ற நிலை உருவானது. இதே தருணத்தில் முகமதுவின் மனைவி கதிஜாவின் மரணமும் அவரது மாமா அபூதாலிப்பின் மரணமும் நிகழ்ந்தது. தனக்கு முதுகெலும்பாக இருந்து வந்த இருவரின் இறப்பு முகமதுவை நிலைகுலைய வைத்தது. அவர்களின் ஆதரவு இல்லாமல் முகமதுவுக்கு அந்த நகரத்தில் இருப்பது பிடிக்காமல் போனது. அவர் மெக்காவை விட்டு வெளியேற விரும்பினார்.
இந்தச் சமயத்தில் வழிபாட்டுக்காக அவர் மெக்காவிற்கு அருகே இருந்த தாயிஃப் எனும் இடத்திற்குச் சென்றார். அங்கே அவர் பரப்புரை செய்துகொண்டிருந்த சமயத்தில்தான் யத்ரிப் (அன்றைய மதினா) நகரத்தில் இருந்து சில பெரியவர்கள் முகமதை வந்து சந்தித்தனர். முகமதுவுக்குத் தனது ஆதாரவையும், நம்பிக்கையையும் வழங்குவதாக தெரிவித்த அவர்கள், அவரை யத்ரிப் நகரத்துக்கு அழைத்தனர்.
இதனையடுத்து செப்டெம்பர் 24, 622 அன்று முகமது தன்னை பின் தொடரும் 70 தோழர்களுடன் யத்ரிப்புக்கு பயணம் மேற்கொண்டார். இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரத் என அழைப்படும் இந்தப் பயணம்தான் மாபெரும் சகாப்தத்தின் தொடக்கமாக அறியப்படுகிறது.
0
முகமது யத்ரிபில் தங்கியபின் அந்நகரம் மதினா எனப் பெயர் மாற்றம் பெற்றது. அப்பகுதியில் முதல் இஸ்லாமிய அரசு உருவானது.
மதினாவிலும் முகமதுவுக்குச் சில சிரமங்கள் இருந்தன. அங்கே இருந்த இனக்குழுக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு ஒற்றுமையில்லாமல் இருந்தனர். இவர்களை ஒற்றிணைப்பதில் முகமது முக்கியப் பங்காற்றினார். சிறுசிறு சண்டைகளுக்கு எல்லாம் யுத்தம் எழும் நிலை இருந்த சூழலில் அங்கே அமைதியை நிலைநிறுத்தினார். அவரது அரசியல் திறமையும் நேர்மையும் கண்டு மக்கள் அவர் பின் அணிதிரளத் தொடங்கினர்.
மதினா நகரத்தில் மொத்தம் 11 இனக்குழுக்கள் இருந்தன. இந்தக் குழுக்களுக்கு இடையேயான அமைதி தூதுவராகவே முகமது இருந்தார். மதினா இஸ்லாமிய நகரமாக அறியப்பட்டாலும் எல்லா மதங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. இதில் யூதர்களும் அடங்குவர். அவர்களிடம் இருந்துதான் பிரச்னை தொடங்கியது.
மதினாவில் இருந்த 11 குலங்களில் மூன்று குலங்கள் யூதர்களுடையவை. அவர்கள் தனியாக யூத மத சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றுபவர்களாக இருந்தனர். அது பிரச்னை இல்லை. ஆனால் இவர்களுக்கு முகமது முன்மொழியும் புதிய மதக்கொள்கைகள் பிடிக்காமல் போனதுதான் பிரச்னையானது.
முகமது யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் தம் மக்கள் என்றே கருதினார். அவர்களும் புனித நூலின் வழி வந்தவர்களே என்றார். அபிரஹாம், மூசா, இயேசு ஆகியவர்களின் வழி வந்தவராக தன்னைக் கருதிய முகமது, யூதர்கள் தனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நம்பினார். ஆனால் அவரது நம்பிக்கை பொய்த்துபோனது.
அப்போது அங்கிருந்த இனக்குழுக்களில் யூதர்களிடம் மட்டும் ஒரு பழக்கம் இருந்தது. அவர்கள் யோம் கிப்பூர் எனும் விரத நாட்களைக் கடைபிடிப்பவர்களாக இருந்தார்கள். அதேபோல அவர்கள் தொழுகை செய்யும் திசை ஜெருசுலேமை நோக்கி இருந்தது. முகமது தமது மக்களையும் அவர்களைப் பின்பற்றியே தொழுகை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
ஆனால் யூதர்கள் முகமதுவைத் தங்களில் ஒருவராக ஏற்க மறுத்தனர். அவரை ஓர் இறைதூதர் என நம்பாமல் ஏமாற்றுக்காரர் என்பதைப்போல நடத்தினர். அவர் உண்மையிலேயே இறைதூதர்தானா எனச் சோதிக்க சில சோதனைகளை நடத்தினர். அவை அனைத்திலும் முகமது தேர்ச்சி பெற்றும்கூட அவர்கள் முகமதை ஏற்பதாக இல்லை. அவரது போதனைகளின் மேல் குறைகூறினர். இறைவாசகங்களைக் கிண்டல் செய்தனர். பொறுத்துப் பார்த்த முகமது ஒருகட்டத்தில் யூதர்களுடனான தனது உறவைத் துண்டித்துக்கொண்டார்.
அவர் தன் மக்களை மெக்கா இருக்கும் திசையை நோக்கித் தொழும்படி மாற்றி அமைத்தார். அதேபோல யோம் கிப்பூருக்கு மாற்றாக ஒரு மாதக் கால ரமலான் நோம்பினை மேற்கொள்ள பரிந்துரைத்தார். யூதர்களின் அவதூறுகளை வெளிப்படையாகவே எதிர்த்துக் கேள்வி எழுப்பத் தொடங்கினார். உண்மையான ஆபிரஹாமின் வழி வந்தவர்கள் ஒரே இறைவன் எனும் நியதியை மறுக்கமாட்டார்கள் என விமர்சித்தார்.
இப்படியே இரு தரப்புக்கும் மோதல் உண்டாகவே, ஒருசமயத்தில் யூத இனக்குழுக்கள் மூவரையும் மதினாவில் இருந்து வெளியேறும்படி முகமது கேட்டுக்கொண்டார். உடனேயே யூதர்கள் முகமதுவின் எதிரிகளுக்கு தங்கள் ஆதரவு கரங்களை நீட்டினர். அவர்கள் ஒன்றிணைந்து இஸ்லாமியர்களுக்கு எதிராகப் போரிடத் தொடங்கினர். ஆனால் பாதிப்பு அவர்கள் பக்கமே விளைந்தது. யுத்தத்தின் முடிவில் யூதர்கள் இஸ்லாமிய ராணுவத்தால் அடக்கி ஒடுக்கப்பட்டனர்.
இங்கே ஒன்றை நாம் குறிப்பிட்டாக வேண்டும். சில யூத வரலாற்றாய்வாளர்கள் இந்த யுத்தத்தைக் குறிப்பிட்டு இதில் இருந்துதான் அரேபிய யூத பகை தொடங்குவதாகக் குறிப்பிடுகின்றனர். இது முற்றிலும் தவறு. ஏழாம் நூற்றாண்டு அரேபிய நிலத்தில் பழங்குடிகள், இனக்குழுக்களிடையே யுத்தம் என்பது மிகவும் சாதாரணமானது. தோற்கடிக்கப்பட்டவர்கள் கருணை காட்டப்படுவதாகக் கூறப்பட்டு கொல்லப்பட்டனர். இந்தச் சூழலில்தான் நாம் இந்த யுத்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மேற்கூறிய யுத்தமும் நிலைமை கையிலடங்காமல் சென்றதால் நடந்ததுதான்.
முதலில் யுத்தத்தைத் தவிர்க்கவே முகமது நினைத்தார். ஆனால் இஸ்லாமியர்கள் தொடர்ந்து பாதிக்கப்படவே யுத்தம் நடத்தப்பட்டது. முகமதின் நோக்கமே அரேபிய மக்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதும், காட்டுமிராண்டிகளாக இருந்த அவரது வாழ்வில் முன்னேற்றத்தை அளிப்பதும்தான். அதனால் இந்த யுத்தமே யூத அரேபிய மக்களின் பிரச்னைக்கு அடித்தளம் எனக் கருதுவது சரியானது அல்ல.
கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. 628ஆம் ஆண்டு மார்ச் மாதம் முகமது 1500 பேருடன் மெக்கா நகரம் நோக்கி ஒரு தொழுகைக்காக நகர்ந்தார். அவர்கள் மெக்காவிற்கு வடக்கே ஹூதைபிய்யா எனும் இடத்திற்கு வந்தபோது முகமதின் எதிரிகளான குறைஷிகள் படை வகுத்து நின்றனர். முகமதுவையும் அவரது தோழர்களையும் உடனேயே மதினாவுக்குத் திரும்புபடியும், மறுத்தால் ரத்தக் கறைபடியும் எனவும் எச்சரித்தனர்.
ஆனால் முகமது பின்வாங்கவில்லை. அவர் தான் சண்டையிட வரவில்லை என்பதையும், தொழுகைக்காக வந்திருப்பதாகவும் கூறி சமாதான உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டனர். இதன்படி அங்கே எந்த ரத்தமும் சிந்தப்படாமல் வழிபாடு நடத்தப்பட்டது.
ஆனால் அதற்கு அடுத்த வருடம் குறைஷிகள் அமைதியாகச் செல்லவில்லை. அவர்கள் சமதான உடன்படிக்கையைத் தகர்த்து எரிந்துவிட்டு முகமதுவை எதிர்க்கத் துணிந்தனர். ஆனால் அவர்கள் நினைத்தது தவறானது. இந்த முறை முகமது மெக்கா வந்திருந்தபோது அவருடன் 10,000 பேர் கொண்ட பெரும் படையும் வந்திருந்தது. இந்தப் படையைப் பார்த்து குரேஷிகள் கதிகலங்கி நின்றனர். குரேஷிகளின் படை எந்த எதிர்ப்பும் காட்டாமல் பணிந்தது. இந்தமுறையும் ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் முகமது மெக்காவிற்கு நுழைந்தார். எந்தச் சண்டையும் நடைபெறாமல் அந்நகரம் முகமதின் ஆளுகைக்கு கீழ் வந்தது.
அந்த நொடியில் மெக்கா நகரத்து மக்கள் தங்களை இஸ்லாமியர்களாக அறிவித்தனர். முகமதின் பெருமை அப்பகுதி முழுவதும் வளர்ந்தது. 630ஆம் ஆண்டில் அரேபியாவின் மிகச் சக்தி வாய்ந்த ராணுவப் படையை முகமது வைத்திருந்தார். அவரது இஸ்லாமிய ஆட்சிக்கு மதினா தலைநகரமானது.
முகமதின் ஆட்சியில் பல்வேறு சமூக, மத சீர்திருத்தங்கள் நடைபெற்றன. ஆனால் மதநல்லிணக்கத்தைப் போற்றும் தலைவராகவே அவர் இருந்தார். முன்பு யூதர்களுக்கு எதிராகப் போரிட்டு இருந்தாலும் தமது எல்லைக்கு உட்பட்ட நிலத்தில் அவர்களைச் சம உரிமை படைத்தவர்களாகவே கருதினார். அவர்கள் தங்களது மத வழக்கங்களைப் பின்பற்றி வாழ எந்தத் தடையையும் விதிக்கவில்லை. இஸ்லாத்தின் எளிமை அரேபியர்களை கவர்ந்து இழுத்தது. அவர்கள் அலையலையாக வந்து அம்மதத்தில் இணைந்தனர்.
மெக்காவின் வெற்றிக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து 632இல் முகமது உயிரிழந்தார். தனது கடைசி விருப்பமாக அந்த ஆண்டு மெக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொண்டு வந்திருந்தார். அதுவே அவர் பூமியில் இருந்து விடைபெறும் இறுதிப் பயணமானது.
அவரது மறைவிற்கு பின் இஸ்லாமியர்கள் தங்களது அடுத்த மன்னர் யார் என்று தேர்வு செய்வதில் குழம்பி நின்றனர். முகமதுவின் வாரிசுகள் யாரும் அப்போது உயிரோடு இல்லை. தனக்கு பின் யார் இந்த மக்களை வழிநடத்தப்போகிறார்கள் என்பதையும் அவர் சொல்லியிருக்கவில்லை. இந்தக் குழப்பம் நிர்வாகத்திலும், சமூக நிறுவனங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியது. முகமதுவுக்கு அடுத்ததாக அவருக்கு இணையான ஒருவர் நிச்சயம் அந்த இடத்தை நிரப்பும் தேவை இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்பட்டது.
அப்போதுதான் முகமதின் உற்றத் தோழராகிய அபூபக்ர் இஸ்லாமிய மன்னராக, முதல் கலீஃபாவாக பதவியேற்றார். புதிய கலீஃபா இறைதூதர் அல்ல. அவருக்கு எந்த வாசகங்களையும் கடவுள் வழங்கவில்லை. அவர் அந்த சமுதாயத்தின் தலைவர் என்ற அளவில்தான் பொறுப்பேற்றார். ஆனால் இஸ்லாமிய புகழ் அனைத்துத் திசைகளிலும் பரவுவதில் பெரும் பங்காற்றினார். இந்தக் காலத்தில்தான் குரான் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டது.
அபூபக்ரின் ஆட்சி இரண்டு ஆண்டுகள் மட்டுமே நடைபெற்றது. அவரது இறப்புக்குப் பின் உமர் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் பேரரசரானார். இவரது ஆட்சியில்தான் படையெடுப்புகள் மூலம் சாம்ராஜ்ஜியங்கள் விரிவு செய்யப்பட்டன.
முகமதின் மறைவுக்குப் பிறகு அரேபியர்களிடையேயான ஒற்றுமை குன்றத் தொடங்கி இருந்தது. அவர்களை மீண்டும் ஒன்றிணைக்க ஓர் இலக்குத் தேவைப்பட்டது. சிதறிக்கிடக்கும் இனத்தை ஒன்றிணைக்கும் நோக்கத்திற்காகவே வெளி படையெடுப்புகளில் உமர் கவனம் செலுத்தினார். ஆனால் அதுவே இஸ்லாத்தை எல்லா இடங்களுக்கும் கொண்டு போய் சேர்த்தது.
அவர் வடக்கே சென்று பைசாந்திய, பெர்சிய பேரரசுகளிடம் போரிட்டார். இதன் ஒருபகுதியாகத்தான் அவர் பாலஸ்தீனத்துக்குள்ளும் நுழைய நேர்ந்தது.
(தொடரும்)