Skip to content
Home » பாலஸ்தீனம் #6 – இஸ்லாமிய ஆட்சி

பாலஸ்தீனம் #6 – இஸ்லாமிய ஆட்சி

பாலஸ்தீனம்

வரலாற்றில் சில சிறிய நிகழ்வுகள் ஒட்டுமொத்த சரித்திரப் போக்கையும் மாற்றி அமைத்துவிடும். அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் யார்முக் யுத்தம் (Battle of the Yarmouk). அண்மைக் கிழக்கை ஆண்டு வந்த பலமிகுந்த பைசாந்தியப் பேரரசை அந்த மண்ணை விட்டே துரத்தியடித்த யுத்தம் அது. வெறும் ஆறு நாட்களில் அந்தப் பேரரசை அகற்றிவிட்டு இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவதற்கான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அந்த யுத்தம்.

பொயு 636இல் அண்மைக் கிழக்கின் இணையில்லாப் பேரரசு என்றால் அது ரோமானியர்களின் பைசாந்திய பேரரசுசுதான். அதற்குப் போட்டியாக இருந்தது சாசானியப் பேரரசு. இரு பேரரசுகளின் கதையும் எலியும் பூனையும் போன்றதுதான். ஒரு முறை இருமுறை அல்ல 26 ஆண்டுகள் இருவருக்கும் இடைவிடாத யுத்தம் நடைபெற்றிருக்கிறது.

எல்லையை விஸ்தரிக்கும் சண்டைகள்தான். ஆனால் இடைவெளியே இல்லாமல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒருமுறை பைசாந்தியம் வென்றால் அடுத்தமுறை சாசானியர்கள் வெல்வார்கள். கொஞ்ச நாட்களுக்கு சமாதானம் நீடிக்கும். மீண்டும் யுத்தம் தொடங்கிவிடும். இதுதான் வழக்கம்.

அப்போது சாசானியர்களின் கை ஓங்கி இருந்தது. இரண்டாம் கோஸ்ரோ (Khosrow 2) அவர்களது பேரரசராக இருந்தார். அவரது படைகள் பைசாந்தியர்களின் எல்லைக்குள் நுழைந்து எகிப்து, லெவெண்ட், ஆசியா மைனர் பகுதிகளைக் கைப்பற்றின. குறிப்பாக ஜெருசலேமும் சாசானியர்களின் கைகளுக்குள் சென்றது. இது பைசாந்தியர்களுக்குப் பெரும் அவமானமாக மாறிவிட்டது. கிறிஸ்தவர்களின் புனித பூமி ஜெருசலேம், இயேசு கிறிஸ்து உயிர் துறந்த திருக்கல்லறைத் தேவாலயம் அமைந்திருக்கும் ஜெருசலேம். இப்போது பெர்சிய ஆதிக்கத்தில் இருந்ததை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இந்தச் சமயத்தில்தான் பைசாந்தியர்களின் பேரரரசனாக ஹெராக்ளியஸ் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தார். எப்படியாவது ஜெருசுலேமை மீட்டுவிட வேண்டும் என்பதே அவரது முதல் நோக்கமாக இருந்தது. அவர் பார்த்துப் பார்த்து தனது படைகளை உருவாக்கினார். அசாதாரண உத்திகளைப் பயிற்றுவித்தார். அப்போது கிழக்கில் பல்வேறு அரேபிய நாடோடி இனங்கள் இருந்தன. துருக்கியக் குழுக்கள் இருந்தன. அவர்களுடன் எல்லாம் ஒப்பந்தம் செய்துகொண்ட ஹெராக்ளியஸ், சாசானியர்களுக்கு எதிராகப் படையெடுத்தார். இப்போது பைசாந்தியர்கள் இழந்த பகுதிகள் ஒவ்வொன்றாக மீண்டும் அவர்கள் கைகளுக்குள் வந்தன. அவற்றில் ஒன்றாக 628ஆம் ஆண்டில் ஜெருசலேம் மீண்டும் பைசானியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இது மிகப்பெரிய வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. நீண்ட நாட்கள் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த சாசானியர்களின் கொட்டத்தை அடக்கியாயிற்று. அதேபோல இழந்த புண்ணிய பூமியையும் மீட்டாயிற்று. மீண்டும் இந்தப் பகுதியில் கிறிஸ்துவின் நல்லாட்சி தொடரப்போகிறது என்று பைசாந்தியர்கள் நினைத்தனர்.

உண்மை என்னவென்றால் இந்த யுத்தத்தால் அன்மைக் கிழக்கே கந்தலாகி கிடந்தது. அதன் பொருளாதாரம் அதள பாதாளத்தில் விழுந்தது. வாழ வழியில்லாமல் ஏராளமானார் அந்தப் பகுதிகளை விட்டு புலம் பெயர்ந்திருந்தனர். வறுமையால் மக்கள் நல்ல உணவுகூட கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருந்தனர்.

இரு பேரரசர்களும் யோசித்தனர். இனி நமக்குள் அடித்துக்கொள்ளக்கூடாது. ஒரே அணியில் இல்லாவிட்டாலும் ஒற்றுமையாக இருக்கலாம். இதுவரை நீ கைப்பற்றியது உன்னுடையது. என் கட்டுப்பாட்டில் இருப்பது என்னுடையது. இதற்கு மேலும் சண்டை வேண்டாம். சமாதானமாகச் சென்றுவிடலாம் என ஒப்பந்தம் நிறைவேற்றினர். மக்களும் பெருமூச்சு விட்டனர்.

சொல்லப்போனால் அத்தனை ஆண்டுகள் நடைபெற்ற யுத்தத்தில் இரு சாம்ராஜ்யங்களும் பெரும் இழப்புகளைச் சந்தித்து இருந்தன. இரு தரப்பிலும் ஏராளமான உயிர்கள் பறிபோயிருந்தன. நாட்டைப் பாதுகாப்பதற்குக்கூட போதுமான வீரர்கள் இல்லாமல் இரு பேரரசுகளும் திண்டாடிக்கொண்டிருந்தன. இதற்காகத்தான் அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சமயத்தில்தான் இஸ்லாமிய வீரர்கள் அவர்கள் ஆண்ட பகுதிகள்மீது படையெடுத்து வந்தனர்.

0

முகமது, அபூபக்ர் ஆகிய இரண்டு தலைமைகளுக்குப் பிறகு இரண்டாம் கலீஃபாவான உமர் தலைமையிலான இஸ்லாமியர்கள் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உள்நாட்டில் அரேபியர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக அவர் அண்டைப் பகுதிகளில் படையெடுத்துக் கொண்டிருந்தார். இதன் ஒரு முயற்சியாக இஸ்லாமியர்கள் அடிக்கடி பைசாந்திய எல்லைக்குள்ளும் புகுந்து சண்டையிட்டு வந்தனர். ஆனால் ரோமானியர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏதோ புதிதாக உருவாகிய எலிக் கூட்டம் ஒன்று ஆர்வக்கோளாறில் எல்லைக்குள் புகுந்து பிரச்னை செய்வதாகவே அவர்கள் கருதினர். வருவது எலிகள் அல்ல புலிகள் என்பது பிறகுதான் புரிந்தது.

இஸ்லாமியர்கள் தரப்பில் படையை வழிநடத்தி வந்தவர் காலித் இப்னு அல்வலித். மிகப்பெரிய வீரர். தொடக்கத்தில் குரேஷிகளின் பக்கத்தில் இருந்து முகமதுவுக்கு எதிராக சண்டையிட்டவர். பின் இஸ்லாத்தின் மகிமையில் மனம் மாறி முகமதுவின் படையில் இணைந்துகொண்டார். பிறகு முதல் இரண்டு கலீஃபாக்களுக்கு நம்பகமான தளபதியாக விளங்கினார். அவர்தான் அந்த முக்கியமான படையெடுப்பை நடத்தினார்.

இன்றைய ஈராக்கில் ஃபிராஸ் (Firaz) எனும் பகுதியில் அந்த யுத்தம் நடந்தது. ஃபிராஸ் பகுதி பைசாந்திய, பெர்சிய பேரரசுகளின் எல்லையாகவும் இருந்தது. அதனால் இருதரப்புப் படைகளுமே அங்கே அணிவகுத்து நிற்கும். மிகவும் பதற்றமான இடம். ஆனால் இந்த இடத்தில் பெர்சிய ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளை வீழ்த்த வேண்டும் என்ற வேகத்தில்தான் காலித் படையெடுத்து வந்தார்.

தங்களது எல்லைக்குள் திடீரென்று மூன்றாம் ஆள் ஓருவரது படை வந்து சண்டையிடுவதை பெர்சிய வீரர்கள் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சுதாரிப்பதற்குள் இஸ்லாமியப் படை வெறியாட்டம் ஆடிவிட்டிருந்தது. பெர்சியர்களிடம் அசாத்தியமாக சண்டையிட்டு வரும் இஸ்லாமியப் படையைப் பார்த்த பைசாந்திய படை விழித்துக்கொண்டது. விட்டால் நம்மையும் அவர்கள் ஏறி மிதிப்பார்கள் என்று எண்ணிய பைசாந்தியப் படை, பெர்சியப் படைக்கு உதவிக்குச் சென்றது. வரலாற்றில் இரு பேரரசுகளின் படைகள் இணைந்து காலித்தின் சிறிய படையை எதிர்த்தன. ஆனாலும் திறன்மிக்க இஸ்லாமியப் படையின் முன் அவர்களால் எதுவுமே செய்யமுடியவில்லை.

இஸ்லாமியப் படை மிகத் துரிதமாகச் செயல்பட்டது. பல நுட்பமான திட்டங்களை வகுத்து போரிட்டது. காலித் தன் படை வீரர்களை மிகச் சிறப்பாக வழி நடத்தினார். சரியாக ஒருங்கிணைந்து அவர்கள் சண்டையிட்டனர். போரின் முடிவில் பெரும் தோல்வியை ரோமானிய, பெர்சியத் தரப்பு தழுவியது.

ஃபெரஸ் போரின் தோல்விக்குப் பிறகு பைசாந்தியம் முழுக்கவே அச்ச உணர்வு பரவத் தொடங்கியது. எதிரிகள் நவீன ஆயுதங்களை ஏந்தி வரவில்லை. அவர்களிடம் கவச உடைகளோ, போர் தளவாடங்களோ இல்லை. வெறும் குதிரைகளையும் ஒட்டகங்களையும் வைத்துக்கொண்டு நம்மை விரட்டியடிக்கிறார்கள். வழியில் காணும் தடைகளை எல்லாம் உடைத்து முன்னேறுகிறார்கள்.

அடுத்த சில தினங்களிலேயே ரோமானியர்களின் முக்கிய நகரங்களில் ஒன்றான டமாஸ்கஸ் வீழ்ந்தது. அப்போதுதான் பேரரசர் ஹெராக்ளியஸுக்கு விபரீதமே புரிந்தது. 636ஆம் ஆண்டு மிகப்பெரிய படை ஒன்றை ஹெராக்ளியஸ் திரட்டினார். சுமார் 1.50 லட்சம் ஆற்றல்மிக்க வீரர்கள் அதில் இருந்தனர். அன்றைய தேதியின் மிகப்பெரிய படை அது. வரலாற்றிலேயே முதன் முறையாக மிகப்பெரிய பேரரசு ஒன்று சிறிய படையெடுப்புக்காக இத்தனை லட்சம் வீரர்களைக் கூட்டியிருந்தது.

எதிரிகள் யாராக இருந்தாலும் துவம்சம் செய்துவிடும் வலிமை வாய்ந்த படையாக அது இருந்தது. எல்லா இனத்தினரும் அந்தப் படையில் இருந்தனர். அதன் முக்கிய தளபதிகளாக கசந்திய வீரர்கள் அணிவகுத்து நின்றனர். எதிரில் போரிட இருந்த இஸ்லாமியப் படையோ மிகச் சிறியதாக வெறும் 15,000 முதல் 40,000 வீரர்களை மட்டுமே கொண்டிருந்தது. அவர்களைக் கொசுவைப்போல நசுக்கிவிடலாம் என்று ஹெராக்ளியஸ் கருதினார்.

ஆனால் தன் படையின் எண்ணிக்கையே பின்னாளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இத்தனைப் பெரிய படையை வழிநடத்துவதற்கு வேண்டிய தளபதிகள் அவர்களிடம் இல்லை. காசானியர்களுடனான இடைவிடாத போரில் முக்கியத் தளபதிகளை பைசாந்தியப் பேரரசு இழந்திருந்தது.

இரண்டாவது, போரிட வரும் வீரர்களுக்கு வேண்டிய வசதிகள் அளிக்கப்படவில்லை. தரமான உணவு கிடைப்பதே பெரும் பாடாக இருந்தது. மூன்றாவது, பைசாந்தியர்களின் படையில் பல்வேறு இனக்குழுவினர் இருந்ததால் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. இன ரீதியாக, மத ரீதியான பிளவுகள் ஏற்பட்டு சச்சரவுகள் எழுந்தன. அவர்களுக்குள் சரியான ஒருங்கிணைப்போ திட்டமிடலோ இல்லை.

இதை எல்லாம் விட முக்கியமான பின்னடைவு அப்போது ஹெராக்ளியஸ் போர்க்களத்தில் படைகளை வழிநடத்தும் நிலையில் இல்லை. அவருக்கு ஏற்கெனவே வயதாகியிருந்தது. அதனால் தான் மிகவும் நம்பிய தியடோர், வாஹன் எனும் இரண்டு தளபதிகளைக் கொண்டு ஒட்டுமொத்தப் போரையும் வழிநடத்த அவர் எண்ணினார். போர் நடக்கும் பகுதியில் இருந்து வெகுதூரத்தில் இருந்த அந்தோக்கியா எனும் இடத்தில் தங்கியிருந்தால். சிக்கல் என்னவென்றால் அவரது இரு தளபதிகளுக்கு இடையிலும் ஒற்றுமை இல்லை. யார் பெரியவர் எனும் மோதல் ராணுவத்தின் திறனைக் குறைத்தது. இத்தகைய குழப்படிகள் மிகுந்த படைதான் காலித்திடம் இருந்து டமாஸ்கஸை மீட்க அனுப்பப்பட்டது.

மிகப்பெரிய படை தன்னை நோக்கி வருகிறது என்று தெரிந்தவுடனேயே காலித் டமாஸ்கஸைவிட்டு வெளியேறிவிட்டார். தன்னுடைய இஸ்லாமிய வீரர்களை அழைத்துக்கொண்டு யார்முக் நதியின் தெற்கே இருந்த மிகப்பெரிய சமவெளியை வந்தடைந்தார். இத்தகைய பெரிய நிலப்பரப்பு அரேபிய குதிரைப் படைக்கு மிகவும் சாதகமாக இருந்தது. காலித்தை டமாஸ்கஸுக்குத் தேடிச் சென்ற பைசாந்தியர்களுக்கு அவர் யார்முக் சென்றுவிட்டார் என்று தெரிந்தவுடன் அத்தனைப் பெரும் படையை மீண்டும் வேறு இடத்திற்கு நகர்த்துவது தலை வலியானது.

இந்தச் சமயத்தில் சாசானியர்களுக்கும் இஸ்லாமிய வீரர்கள் பெரும் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்தனர். அதனால் யுத்தத்தை சாசானியர்களுடன் ஒருங்கிணைந்து நடத்தலாம் என்றும் பைசாந்திர்கள் திட்டமிட்டனர். ஆனால் அந்தத் திட்டமும் இறுதி நேரத்தில் தோல்வியில் முடிந்தது.

ஆகஸ்டு 15ஆம் தேதி யார்முக் யுத்தம் தொடங்கியது. வெறும் ஆறு நாட்களே நடைபெற்ற இந்த யுத்தத்தில் மாபெரும் பைசாந்தியப் படை குறைந்த வீரர்களைக் கொண்ட இஸ்லாமிய வீரர்களிடம் படுதோல்வி அடைந்து ஓடியது. யுத்தத்தின் தொடக்க நாள் பைசாந்தியர்களின் கரம் ஓங்கி இருந்தது. இரண்டாவது நாளில் போரே முடிந்துவிடும் என்பதுபோல இருந்தது. ரோமானியர்கள் வெற்றிக் களியாட்டம் ஆடினர். ஆனால் மூன்றாவது நாளில் போர் இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ரோமானியர்கள் முடிவெடுக்க முடியாமல் தடுமாறினர். இந்தச் சமயத்தில் சிறந்த வியூகங்களை வகுத்த இஸ்லாமிய படை நான்கு பக்கத்தில் இருந்தும் ரோமானியர்களைத் தாக்கி ஓட வைத்தது.

நான்காவது நாளில் காலித்தின் படையை நிச்சயம் எதிர்க்க முடியாது என்று பைசாந்தியர்களுக்குத் தெரிந்துவிட்டது. உடனே அவர்களுடைய தளபதியான வாஹன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். இதைத்தான் காலித் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். மிகப்பெரிய படையின் தளபதியே தம்மை அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பது அவருடைய படை வீரர்களை தளர்ச்சி அடைய வைத்துவிடும் என நினைத்தார். அதுபோலவே நடந்திருந்தது. பேச்சுவார்த்தையை மறுத்த அவர் தொடர்ந்து போரிட வலியுறுத்தினார். ஏற்கெனவே திடம் குன்றியிருந்த பைசாந்திய வீரர்கள் இஸ்லாமிய வீரர்களின் வாளுக்கு இரையாகினர்.

கவச உடை அணிந்த குதிரைப் படையை இஸ்லாமிய படை துவம்சம் செய்துவிட்டது என்று தெரிந்தவுடன் காலாட்படை வீரர்கள் தப்பித்து ஓடத் தொடங்கினர். பலர் ஓடும்போது நதியில் விழுந்து மூழ்கி உயிரிழந்தனர். சிலர் மலைகளில் இருந்து உருண்டு விழுந்து இறந்துள்ளனர். காலித்தின் தரப்பில் மிகப்பெரிய ராணுவத்தை வீழ்த்துவதற்கு விலையாக அவர் வெறும் 4,000 வீரர்களின் உயிரை மட்டுமே கொடுக்க வேண்டியதாகி இருந்தது.

இந்தத் தோல்வி ரோமானிய சரித்திரத்தையே மாற்றி எழுதியது. ஹெராக்ளியஸ் கான்ஸ்டன்டைனோபிளில் இருந்து வெளியேறினார். சிரியா பகுதியின் ஆதிக்கத்தில் இருந்து முழுவதுமாக பைசாந்தியப் படை பின் வாங்கியது. அவர் ஆசிய மைனாருக்குத் தப்பிச் சென்று அங்கிருந்து எகிப்து வீரர்களையும் சேர்த்துக்கொண்டு இஸ்லாமியப் படையெடுப்பை தடுத்து நிறுத்தலாம் எனக் கருதினார்.

ஆனால் சுனாமிபோல வந்துகொண்டிருந்த இஸ்லாமிய வீரர்களை அவரால் தடுப்பணைகளைக் கொண்டு நிறுத்த முடியவில்லை. ஒரு நூற்றாண்டுக்குள் கிழக்கு மாகாணங்கள், சிரியா, மெசபடோமியா, எகிப்து, வடக்கு ஆப்பிரிக்கா அனைத்தும் அடுத்தடுத்து இஸ்லாமியர்களின் ஆளுகைக்குள் விழுந்தன. ஆசிய மைனாரில் மட்டுமே ரோமானியப் பேரரசு எஞ்சியிருந்தது. மறுபக்கத்தில் சாசானியப் பேரரசு ஒன்றுமே இல்லாமல் கரைந்துபோனது.

யார்முக்கின் வெற்றிக்குப் பிறகு பைசாந்தியர்களின் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை இஸ்லாமியர்கள் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினர். இதில் ஒரு பகுதியாக 637ஆம் ஆண்டு ஜெருசலேம் இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்பட்டது. வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் பெற்ற இடம். மத ரீதியாகவும் முகமதுக்கு முன்னால் தோன்றிய நபிகள் வாழ்ந்த இடம். இஸ்லாமியர்கள் பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடினர். பொயு 638இல் பாலஸ்தீனம் ஃபிலாஸ்தின் (Filastin) என்ற பெயரில் அறியப்பட்டது.

 

0

7ஆம் நூற்றாண்டு மத்தியில் பெரும்பான்மையான பாலஸ்தீன மக்கள் கிறிஸ்தவர்களாக இருந்தனர். கலீஃபாக்கள் இஸ்லாமிய ஆட்சியை அந்நிலத்தில் நிறுவியிருந்தாலும் அங்கு வாழ்ந்த மக்கள் இஸ்லாத்தைப் பின்பற்றவேண்டும் என்று எந்தக் கட்டாயத்தையும் ஏற்படுத்தவில்லை. உண்மையில் பாலஸ்தீன மக்களின் மொழியாக அரபிக்கூட அப்போது இல்லை. அராமிக் மொழியையே அவர்கள் பேசி வந்தனர். அந்த மொழி கிட்டத்தட்ட அரபு மொழியின் சாயலில் இருந்ததால் இஸ்லாமியர்களுக்கும் அது பிரச்னையாக இல்லை.

ஆனால் நிர்வாக ரீதியாக பாலஸ்தீனம் பெரும் மாற்றம் கண்டது. இஸ்லாமியர்கள் ராணுவம் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக பிலாத் அல்ஷாம் பகுதியை (இன்றைய சிரியா, லெபனான், ஜோர்டன் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியது) டமாஸ்கஸ், அல் உர்துன், ஹோம்ஸ், கின்னாஸ்ரின் உள்ளிட்ட ஐந்து மாகாணங்களாகப் பிரித்தனர். அதில் ஒன்றாக பாலஸ்தீனமும் இருந்தது.

இந்த ஐந்து மாகாணங்களும் சுற்று வட்டாரத்தில் இருக்கும் மாவட்டங்களின் குடிமை, நிர்வாகப் பொறுப்பினை கையாண்டது. இந்த மாகாணங்களின் ஆளுநர்கள் அமீர் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர்.

கலீஃபாக்களின் ஆட்சிக்காலம் பாலஸ்தீனத்தின் பொற்காலம் என்றே அறியப்பட்டது. அவர்களின் ஆட்சி குரான் மற்றும் ஹதீஸின் வழியில் அமைந்திருந்தது. கலீஃபாக்களின் ஆட்சிக்காலத்தில் ஷூரா எனும் அமைப்பு இருந்தது. அதில் அறிஞர்கள் பலர் இடம்பெற்றிருந்தனர். இவர்களிடையே கலந்தாலோசித்து, ஆலோசனைகளைப் பெற்றுதான் கலீஃபாக்கள் முக்கிய முடிவுகளை எடுத்தனர். நாட்டில் சமூகரீதியான பன்முகத்தன்மை, கலாசார பரிமாற்றங்கள் ஆகியவற்றுக்கான இடத்தை ஷுராக்கள் ஏற்படுத்திக்கொடுத்தனர்.

இஸ்லாமியர்கள் அல்லாதவர்களின் அறிவு சார்ந்த செயல்பாடுகளில் இருந்தும் இஸ்லாம் தனக்கான படிப்பினைகளை எடுத்துக்கொண்டது. இவற்றில் ஒன்றாகத்தான் கசந்திய அரேபியர்கள் ஏற்படுத்திய அரசவை அறிவு கட்டமைப்பை இஸ்லாமிய கலீஃபாக்கள் நீட்டிக்கச் செய்தனர்.

 

()

 

முகமதின் நேரடி தோழர்களான கலீஃபாக்களின் ஆட்சிக்குப் பிறகு உமையாக்கள் கலீஃபாக்களின் ஆட்சி ஏற்பட்டது. டமாஸ்கஸ் இந்தச் சாம்ராஜ்ஜியத்தின் தலைமையகம் ஆனது. இவர்களுடைய ஆட்சியில் இரண்டு மாகாணங்கள் மையமாகக் கருதப்பட்டன. ஒன்று டமாஸ்கஸ், மற்றொரு பாலஸ்தீனம்.

இந்தக் காலகட்டத்தில்தான் பாலஸ்தீனத்தில் அரபு மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு முன்னிலைக்கு வந்தது. நாம் முன்பே பார்த்ததுபோல பாலஸ்தீனத்தின் பொதுமக்கள் அனைவரும் அராமிக் மொழி பேசுபவர்களாகவே இருந்தனர். அங்கிருந்த யூதர்கள்கூட அராமிக் மொழி பேசியவர்கள்தாம். அப்போது ஹீப்ரு மொழி வழக்கில் இல்லாத, அழிந்த மொழியாகவே அறியப்பட்டது.

பைசாந்தியர்களின் ஆட்சியில் பாலஸ்தீனத்தில் ஆட்சியாளர்களின் மொழியாக கிரேக்கமே இருந்தது. பொது மக்கள் மொழியாகத்தான் அராமிக் இருந்தது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே எப்போதும் ஒருவித இடைவெளி இருந்து வந்தது. ஆனால் உமையாக்கள் ஆட்சியில் முழுவதுமாக அரேபிய மொழியே அரசு மொழியானது, இங்கேதான் அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான உறவு வலுவடைந்தது.

ஆனால் இஸ்லாமியர்கள் ஆட்சி அமைத்தவுடன் எடுத்தவுடனேயே முன்பு இருந்த அரசுக் கட்டமைப்புகளை அவர்கள் மாற்றிவிடவில்லை. அதில் இடம்பெற்ற அதிகாரிகளைகூட கலீஃபாக்கள் துரத்தவில்லை. பைசாந்தியப் பேரரசுக்குத் தலைமுறை தலைமுறையாக பணியாற்றி வந்த குடும்பங்களே இஸ்லாமிய ஆட்சியிலும் அதிகார நிலையில் இருந்தன.

உமையாக்கள் கலீஃபாவான அப்துல் மாலிக் இபின் மார்வன் ஆட்சியில்தான் மேற்கூறிய மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வரப்பட்டன.

அப்துல் மாலிக் செய்த மொழி புரட்சியை அவருக்குப் பின்னால் வந்தவர்களும் தொடர்ந்தனர். அப்போது உலக மக்கள் தொகையில் 30 சதவிகிதத்தினர் இஸ்லாமிய ஆட்சி நிலவும் பகுதிகளுக்குள் இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் பொது மொழியாக அரேபிய மொழி மாறியது. ஸ்பெயினில் இருந்து மத்திய ஆசியா வரை சர்வதேச வணிகத்தை விரிவு செய்ய அவர்களுக்கு இந்த மொழிப் புரட்சிதான் உதவியது.

அரபுமயமாக்கல் பாலஸ்தீனத்தை மேலும் வளமிக்க பூமியாக்கியது. கலீஃபாக்களின் ஆதரவில் பல்வேறு நூல்கள் அரபிக்கு மொழிபெயர்க்கப்பட்டன. அதேபோல பல நூல்கள் அரபி மொழியில் இருந்து உலக மொழிகளுக்குச் சென்றன. அப்போதைய அறிவியல் முன்னெடுப்புகள் பலவும் அரேபியர்களாலேயே நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தது. இதனால் அன்றைய அறிவியல் மொழியாகவும் அரபியே இருந்தது.

பாலஸ்தீனம் அரேபிய இஸ்லாமியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டாலும் இஸ்லாம் உடனேயே பரவிவிடவில்லை. நாம் முன்னரே பார்த்த்துபோல கிறிஸ்தவமே அப்போது பொதுமக்களின் மதமாக இருந்தது. பிறகு வந்த காலத்தில்தான் இஸ்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கியது. அப்துல் மாலிக் அரபு மொழி வளர்ச்சிக்கு வித்திட்டவுடன் இஸ்லாமிய மதமும் வேகமாகப் பரவத் தொடங்கியது.

இந்தச் சமயத்தில் பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்களின் ஒரு பிரிவினரான சமாரியர்கள் என அழைக்கப்பட்டர்களும் கொத்தாக இஸ்லாம் மதத்துக்கு மாறியதற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றன.

அரபுமயமாக்கலுக்குப் பிறகுதான் அங்கிருந்த அராமிக் மொழி பேசிய பெரும்பான்மை கிறிஸ்தவர்கள் இஸ்லாமுக்கு மாறினர். ஏற்கெனவே பைசாந்தியர்களின் தலைமையில் ஒற்றைக் கடவுள் தத்துவத்தைப் பெரும்பான்மை மக்கள் ஏற்றிருந்ததால் அவர்கள் இஸ்லாமிய மதத்துக்கு மாறுவது கடினமாக இருக்கவில்லை. கிறிஸ்தவத்தின் மேம்பட்ட வடிவமாகவே இஸ்லாம் பார்க்கப்பட்டது. இது பல கடவுள்களை வழிபட்ட அரேபியர்கள் கிறிஸ்தவத்துக்கு மாறியதை விடச் சுலபமான ஒன்றாகவே இருந்தது. அதேசமயம் தங்கள் மத வழக்கங்களையே தொடர்ந்த கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் எந்தத் தொந்தரவும் அளிக்கப்படவில்லை. அவர்களுக்கு அவரவர் மதங்களைப் பின்பற்ற முழு உரிமையும் அளிக்கப்பட்டது.

இதே காலகட்டத்தில்தான் உமையாக்கள் மிகப் பிரமாண்டமான அரண்மனைகளை, கட்டடங்களை பாலஸ்தீனத்தில் எழுப்பினர். இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் மையமாக பாலஸ்தீனம் உருவானது.

இஸ்லாமியர்கள் ஜெருசலேமிற்குப் புண்ணிய யாத்திரை போவது முகமதின் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கிவிட்டாலும் உமையாக்களின் ஆட்சியில் வெகுவாக அதிகரித்தது. உமையாக்கள் அரசின் கலீஃபாக்கள் ஜெருசுலேமை பெரிதாக விரிவு செய்தனர்.

பைசாந்தியர்கள் ஆட்சியில் ஏலியா கேபிடோலினாவாக இருந்த ஜெருசலேம் இஸ்லாமியர்கள் ஆட்சியில் இலியா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஜெருசலேமைக் கட்டமைப்பதற்கும் விரிவு செய்வதற்கும் ஏகப்பட்ட செலவுகளை உமையாக்கள் செய்தனர். அந்நகர் மீது சிறப்பு அக்கறையை எடுத்துக்கொண்டனர். பாலஸ்தீனத்தின் நிர்வாகத் தலைநகராக அல்-ரம்லாவும் சமயத் தலைநகராக ஜெருசலேமும் இருந்தன.

புண்ணியப் பயணம் மேற்கொள்ளும் காலத்தில் மெக்காவிற்குச் செல்ல முடியாத ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஜெருசலேமிற்குச் செல்லத் தொடங்கினர். ஆண்டுக்கு 20,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அங்கு வருகை புரிந்ததாகக் கூறப்படுகிறது. இதேசமயத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து கிறிஸ்தவர்களும் யூதர்களும்கூட ஜெருசலேமுக்கு வந்துகொண்டிருந்தனர்.

கலீஃபா அப்துல் மாலிக் பொயு 691இல் இஸ்லாமியர்களின் பிரசித்திப்பெற்ற வழிபாட்டுத் தலமான Dome of the Rockஐ கட்டி முடித்தார். 705ஆம் ஆண்டு அல் அக்ஸா மசூதி திறக்கப்பட்டது. இரண்டும் இன்றுவரை பாலஸ்தீனத்தின் பண்டைய கலாசார அடையாளங்களாக விளங்குகின்றன. இந்த அல் அக்ஸா மசூதி ஹாரம் அல் ஷரிப் சற்றுச்சுவர்களுக்கு உள்ளே அமையப்பட்டுள்ளது. முகமது நபி விண்ணேறிய நிகழ்வைக் குறிக்கும் வகையில் இந்த மசூதி கட்டப்பட்டது.

ஒருகட்டத்தில் உமையாக்கள் தங்களுடைய தலைநகரையே டமாஸ்கஸில் இருந்து ஜெருசுலேமிற்கு மாற்றுவதற்கு ஆலோசித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக அந்தத் திட்டம் கைவிடப்பட்டு, வெறும் அரண்மனைகள் மட்டும் அல் அக்ஸா மசூதிக்கு எதிரில் கட்டப்பட்டன. இது பாலஸ்தீனத்தை மையப்படுத்தி நிகழ்ந்த வணிகத்தை மேலும் அதிகரிதத்து.

இவ்வாறு ஜெருசலேத்தின் முகத்தையே மாற்றி அமைக்கும் வேலையில் அவர் இறங்கி இருந்தார். அவரது ஆட்சியில் பல்வேறு சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. புதிய நாணயங்கள் புழக்கத்திற்கு வந்தன.

இஸ்லாமிய ராஜ்ஜியங்களும் பரஸ்பர சமூக ஒப்பந்த அமைப்பில்தான் பாலஸ்தீனத்தை ஆண்டனர். இந்த அமைப்பு உள்ளாட்சி அமைப்புகளை சுயேட்சையாக இயங்கவும், புதிய மேட்டுக்குடிகள் உருவாகவும் வழி செய்தது.

பாலஸ்தீனத்தின் ஆளுநர்கள் கலீஃபாக்களால் நேரடியாக நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள்தான் இஸ்லாமியப் படைத் தளபதிகளைத் தேர்ந்தெடுத்தனர். இஸ்லாமிய மத தலைவர்களையும் பணிக்கு அமர்த்தினர். வரி வசூல், காவல், குடிசார் பொறுப்புகளுக்கு தலைமை ஏற்றிருந்தனர்.

பாலஸ்தீனத்தில் ஆறு நூற்றாண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய ஆட்சியே நிலவியது. உமையாக்கள் கலீஃபாக்களின் ஆட்சிக்குப் பிறகு அப்பாசியக் கலீபாக்கள் (Abbasid Caliphate) ஆட்சிப் புரிந்தனர். இவர்களது ஆட்சியின் இறுதியில் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் உடைந்து சிதறத் தொடங்கியது.

அபூபக்கரின் ஆட்சியில் இருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான இஸ்லாமியப் பேரரசில் பல்வேறு புரட்சிகள், கலகங்கள், கொலைகள், ஆட்சிக் கலைப்புகள் நிகழ்ந்திருந்தன. ஆனாலும் அவர்கள் ஆட்சி செய்த பகுதி மக்களின் ஆதரவை இஸ்லாமிய ஆட்சி பெற்றிருந்தது.

இஸ்லாமியர்கள் வெளிநிலங்களைக் கைப்பற்றும் அதே நேரத்தில் அந்நிலத்தின் கலாசாரம் செழிக்கவும் வழி வகை செய்தனர். வெறும் அதிகாரத்தையும் ஆதிக்கத்தையும் செலுத்துவது மட்டுமே இஸ்லாமிய ஆட்சியாளர்களின் விருப்பமாக இல்லை. பெர்சியா, ஸ்பெயின், ஆப்ரிக்கா, மத்தியக் கிழக்கு என எங்கே நுழைந்தாலும் இஸ்லாம் உள்ளூர் மக்களுடன் கலந்தது. அவர்கள் கலாசாரத்தை உள்வாங்கிக்கொண்டது.

தாங்கள் ஆட்சிக்கு உட்பட்ட நிலத்தின் அறிவார்ந்த விஷயங்களைத் தயங்காமல் இஸ்லாமிய கலீஃபாக்கள் ஆதரித்தனர். இஸ்லாமியர்களின் ஆட்சியின் கீழிருந்த வேறுபட்ட, பலதரப்பட்ட சமூகங்கள் பல்வேறு நலன்களுக்காக ஒன்றிணைந்தன. ஒன்றையொன்று தொடர்புகொண்டு சிறப்படைந்தன.

இசை, கலை, அறிவியல், இலக்கியம் என எல்லாத் துறைகளிலும் இஸ்லாமியச் செல்வாக்கு நிலவியது. மேற்கூறிய துறைகளை ஒரு நிலத்துக்கு உரியதாக அடைக்காமல், எல்லா மக்களுக்கும் உரியதாகப் பரவச் செய்ததில் இஸ்லாம் பங்கு வகித்தது. சொல்லப்போனால் இந்த அரேபியப் பொற்காலம்தான் பின்னாட்களில் ஐரோப்பிய மறுமலர்ச்சி காலம் அமைவதற்கு வித்திட்டது என்பதுதான் உண்மை.

இஸ்லாமியர்களின் தலைநகரங்களாக ஸ்பெயினின் கோர்டோபா, எகிப்தின் கெய்ரோ, டமாஸ்கஸ், பாக்தாத் என மாறிக்கொண்டே இருந்தன. இந்த நகரங்கள் உயரிய கலாசாரங்களின் அடையாளங்களாக அறியப்பட்டன. கலையும் அறிவியலும் அப்பகுதியில் செழிப்புற்று வளர்ந்தன. பாலஸ்தீனமும் இஸ்லாமியக் கலாசாரச் செழிப்பின் முக்கியப் புள்ளியாக விளங்கியது. அப்பாசிய கலீஃபாக்களுக்கு அடுத்ததாக ஃபாத்திம கலீஃபாக்கள் 970களில் பாலஸ்தீனத்துக்குள் நுழைந்தனர். இவர்களுடைய ஆட்சியில் பாலஸ்தீனம் பெரும் குழப்பங்களையும் மாற்றங்களையும் கண்டது.

பலதரப்பட்ட படையெடுப்புக்குள் பாலஸ்தீன எல்லைக்குள் நிகழத் தொடங்கின. 1025, 1068 இரு ஆண்டுகளில் இரு பெரும் நிலநடுக்கங்கள் அந்நகரைச் சிதைத்தன. ஆனால் இதன்பிறகு நடைபெற்ற வரலாற்றுச் சம்பவங்கள் பாலஸ்தீனத்தின் முகத்தையே மாற்றி அமைத்தன.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

1 thought on “பாலஸ்தீனம் #6 – இஸ்லாமிய ஆட்சி”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *