Skip to content
Home » பாலஸ்தீனம் #7 – சிலுவைப் போர் முதல் ஓட்டோமான் வரை

பாலஸ்தீனம் #7 – சிலுவைப் போர் முதல் ஓட்டோமான் வரை

சிலுவைப் போர்

முதல் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இன்றைய மத்திய ஆசியா மற்றும் மங்கோலியா பகுதிகளில் இருந்து கிளம்பிய சில நாடோடி இனக்குழுக்கள் பெர்சியாவிற்குள் நுழைந்தனர். அதே மக்கள் அடுத்த நூற்றாண்டுக்குள் மத்தியக் கிழக்கிற்கும் வந்தனர். அப்போது மத்தியக் கிழக்கு முழுவதும் இஸ்லாமிய ராஜ்ஜியம் விரிவடைந்து கொண்டிருந்தது. தெற்கு ஆசியாவில் இருந்து ஸ்பெயின் வரை இஸ்லாம் தனது நெடுங்கரங்களை விரித்திருந்தது. முகமதின் நேரடித் தோழர்களின் ஆட்சி முடிந்து, உமையாக்கள் காலம் முடிந்து, அப்பாசியக் கலீபாக்கள் ஆண்டுகொண்டிருந்த காலம். அவர்களுடைய ஆட்சியில் அந்த நாடோடிகள் இஸ்லாமியர்களாக மதம் மாறினர்.

அந்தப் பிரிவினரின் பெயர் செல்யூக்கியர்கள் (Seljuk). இந்த செல்யூக்கியர்கள் அப்பாசியக் கலீபாக்களுடன் இணைந்து கசனாவித்திய ராஜ்ஜியத்தை (Ghaznavid) வீழ்த்தி இன்றைய துருக்கி, சிரியா, பாலஸ்தீனம், ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக அவர்கள் பைசாந்தியர்களின் தலைநகரான கான்ஸ்டன்டைனோபிளுக்கும் செல்ல வேண்டியிருந்தது.

அப்போது பைசாந்தியப் பேரரசு அண்மைக் கிழக்கில் இருந்து முற்றிலும் விலகி ஆசியா மைனர் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தது. அதன் பேரரசராக இருந்தவர் அலெக்ஸிஸ். அவர் தங்கள் தலைகருக்குள் செல்யூக்கியர்கள் படையெடுத்து வரப்போகிறார்கள் என்றவுடனேயே பதறிவிட்டார். திருச்சபைகளின் தலைவரான போப்பாண்டவரைத் தொடர்புகொண்டு (இரண்டாம் அர்பன்) உதவி கேட்டார்.

அன்றைய ஐரோப்பிய நிலபரப்பின் பெரும் பகுதிகளில் கிறிஸ்தவர்களின் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கிருந்த மன்னர்கள் அவர்களுடைய ஆட்சியை அண்மைக் கிழக்கிலும் விரிவு செய்வதற்கு விரும்பினர். போப்பாண்டவருக்கும் அத்தகைய தேவை இருந்தது. சரியான சமயத்துக்குக்காகக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு அலெக்ஸிஸின் வேண்டுகோள் நல்லதொரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்தது.

போப்பாண்டவர் இரண்டாம் அர்பன் கிளர்மோண்ட் எனும் இடத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் அறிவிப்பு வெளியிட்டார். உலகக் கிறிஸ்தவர்களே ஒன்றுகூடுங்கள். நமது புனித நகரமான ஜெருசலேத்தை அரேபியர்கள் கைப்பற்றி வைத்திருக்கிறார்கள். அங்கே நம் மக்கள் அடிமையிலும் கொடுமை வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இயேசு பிறந்த மண்ணில் அவரைப் பின்பற்றி வாழும் மக்கள் சந்திக்க வேண்டிய நிலையா இது? இந்தச் சூழலை மாற்ற வேண்டும். ஜெருசலேமை மீட்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

உண்மையில் போப்பாண்டவர் அழைப்பு விடுத்ததற்குப் பின்னணியில் பல அரசியல், பொருளாதார நலன்கள் ஐரோப்பாவிற்கு இருந்தன. ஜெருசலேத்தை மீட்பது கிறிஸ்தவர்களின் வலிமையையும் சாம்ராஜ்ஜியத்தையும் உயர்த்தும் என ஐரோப்பிய ஆட்சியாளர்கள் கருதினர். அப்போதைய முக்கிய வணிகப் பாதைகளில் ஒன்றாக பாலஸ்தீனமும் இருந்தது. அவற்றைக் கைப்பற்றினால் புதிய வணிக நலன்கள் சாத்தியப்படும் என்றும் கருதினர்.

குறிப்பாக இஸ்லாமியர்களின் செல்வ வளத்திற்குக் காரணமாக இருந்த வாசனைப் பொருட்கள், ஆடைகள் வணிகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்பது அவர்களுடைய திட்டம். அதோடு கிழக்கையும் ஐரோப்பாவையும் இணைக்கும் புதிய வணிகப் பாதைகளை உருவாக்கி தங்களிடம் இருக்கும் பொருட்களை மத்தியக் கிழக்கிலும், அங்கே இருக்கும் பொருட்களை ஐரோப்பாவிலும் விற்கலாம் என்பதும் எண்ணம்.

அதோடு அன்றைய காலத்தில் அசுர வேகத்தில் பரவிச் சென்ற இஸ்லாமின் வீச்சைத் தடுத்து நிறுத்தும் தேவையும் அவர்களுக்கு ஏற்பட்டது. பைசாந்தியப் பேரரசையே பகைத்துப் பார்க்க பயப்படாதவர்கள் நாளை நம் மண்ணிலும் கை வைத்தால்? இத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்கு ஜெருசலேமைக் கைப்பற்றுவது உதவும் என்று நம்பப்பட்டது. போப்பாண்டவரின் வேண்டுகோளுக்கு அரசர்களும் சம்மதித்தனர்.

மேலும், இந்தத் திட்டத்தால் திருச்சபைகளுக்கும் பொருளாதார நன்மைகள் கிடைக்கும் அல்லவா? மத்தியக் காலகட்டத்தில் திருச்சபைகளின் கட்டுப்பாட்டில் வாழும் குடிமக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களில் 10 சதவிகிதத்தைத் திருச்சபைகளுக்கு வழங்க வேண்டும். இப்போது திருச்சபைகள் எல்லைகளை விஸ்தரிக்கும்போது, மேலும் சில நிலங்களைத் தங்கள் ஆதிக்கத்துக்கு கொண்டு வரும்போது, அங்குள்ள மக்களும் தங்களுக்குக் கீழ் வாழ வேண்டிய நிலை ஏற்படும் இல்லையா? அதனால் அவர்கள் போர் செய்ய விரும்பினர்.

ஆனால் மத்தியக் கிழக்கைக் கைப்பற்ற வெறும் போர் வீரர்கள் மட்டும் பங்கேற்றால் போதாது என்பதும் தெரிந்தது. தங்கள் வலிமையை அதிகரித்துக்கொள்ள சாதாரண மக்களும் போரில் பங்கு பெற வேண்டும் என்று அரசர்களும் போப்பாண்டவரும் விரும்பினர்.

ஒவ்வொருவரும் தங்களின் புனிதக் கடமையாக இந்தப் போரை முன்னெடுக்க வேண்டும். தங்கள் வாழ்வின் முக்கிய கடமையாக இதனைக் கருத வேண்டும். என்ன செய்யலாம்? ஒரு கையில் வாளை ஏந்திச் செல்லும் வீரர்களுக்கு போப்பாண்டவர் மறு கையில் சிலுவையைக் கொடுத்தார். இது சிலுவைப் போர். அந்நிய ஆதிக்கத்தில் இருந்து கடவுளின் நிலத்தை மீட்கும் போர். கிளம்புங்கள் என்றார்.

இந்தப் புனித போரில் பங்குபெறும் மக்களுக்குச் சில வாக்குறுதிகளை போப்பாண்டவர் அளித்தார். முதலில் புனித ஜெருசலேமை மீட்கும் முயற்சியாக நடைபெறும் இந்தப் போரில் பங்கேற்கும் வீரர்களுக்கு அவர்கள் செய்த பாவம் அனைத்தும் மன்னிக்கப்படும். இந்தப் போரில் இறந்தவர்களுக்குச் சொர்க்கத்தில் இடம் நிச்சயம். உயிருடன் இருப்பவர்களுக்கு இப்பூலோகத்தின் அத்தனைப் பெருமை வாய்ந்த பட்டங்களும் அளிக்கப்படும். போரில் பங்கேற்கும் ஐரோப்பிய அடிமைகளுக்குச் சுதந்திரம் வழங்கப்படும். இப்படி எக்கச்சக்க சலுகைகளை போப்பாண்டவர் வாரி வழங்கினார்.

இத்துடன் பலதரப்பட்ட இனவாதப் பரப்புரைகளும் மக்களிடையே செய்யப்பட்டன. இஸ்லாமியர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட வெறுப்பு நிலை உருவாக்கப்பட்டது. 1096ஆம் ஆண்டு போர் தொடங்கியது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் (இவர்கள் பிராங்கியர்கள் என அழைக்கப்பட்டனர்) இந்தப் போரில் பங்கேற்க கான்ஸ்டன்டைனோபிளுக்குப் புறப்பட்டுச் சென்றனர். பிறகு அங்கிருந்து ஜெருசலேமுக்குக் கிளம்பிய அவர்கள் பல்வேறு கட்டங்களாக முற்றுகையிட்டு அந்நகரைக் கைப்பற்றினர்.

முதல் சிலுவைப் போரில் அரங்கேறிய விஷயங்களை வரலாற்றாசிரியர்கள் இவ்வாறாக விவரிக்கிறார்கள். அந்த நாட்களில் சிந்தப்பட்ட ரத்தத்தை விவரிக்கவே முடியாது. கிறிஸ்தவ வீரர்கள் எதிரிகளின் தலைகளைத் துண்டாக்கி எரித்தனர். சிலர் அம்புகளை எய்தி கோட்டைகளில் மேல் நிற்கும் வீரர்களை விழச் செய்தனர். உயிரோடு பிடிப்பட்ட வீரர்கள் நெருப்பில் இடப்பட்டு வாட்டப்பட்டனர். நிலத்தில் குத்தி வைக்கப்பட்டிருந்த ஈட்டிகள் மனிதத் தலைகளைத் தாங்கி நின்றன. வெட்டி வீசப்பட்ட கைகளும் கால்களும் ஜெருசலேம் தெருக்கள் முழுவதும் தூவப்பட்டிருந்தன. அனைத்தும் கடவுள் செயல். இந்த இடம் அவநம்பிக்கையாளர்களின் ரத்தத்தால் சிவந்திருக்க வேண்டும் என்பது கடவுளின் நீதி. இது பாவம் செய்தவர்களுக்கு நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகளைவிடக் குறைவானதே என்று நம்பப்பட்டது.

இஸ்லாமியர்கள் மட்டுமல்ல யூதர்களும் இந்தப் போரில் கொல்லப்பட்டனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் இதில் அடக்கம். கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாராக இருந்தாலும் கொல். இதுதான் அந்தப் போர் வீரர்களின் மனநிலையாக இருந்தது. இத்தகைய கொடூர யுத்தத்துக்குப் பிறகு ஜெருசலேமில் இருந்து இஸ்லாமியர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அந்த நிலம் சிலுவை வீரர்களின் கைகளுக்குள் சென்றது. அங்கே கிறிஸ்தவர்களின் ராஜ்ஜியம் அமைக்கப்பட்டது. அடுத்த 200 ஆண்டுகள் ஜெருசலேம் அவர்களின் ஆளுகைக்குள் இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் பாலஸ்தீனத்தின் பெரும்பாலான நிலப்பரப்புகள் கிறிஸ்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அதன் மாகாண அந்தஸ்து நீடித்தே வந்தது. அதன் எல்லை கிழக்கில் டிரான்ஸ் ஜோர்டன் வரையிலும், தென் கிழக்கிலும் அகன்றது.

இந்தத் தருணத்தில்தான் இஸ்லாமியர்கள் தரப்பில் மிகப்பெரிய தலைவர் ஒருவர் உருவாகினார். அவரது பெயர் சலாவுதின். சலாவுதின் எகிப்தில் நடைபெற்ற ஃபாத்திம கலீபாக்கள் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். பின் அந்த ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு அய்யூபிய ஆட்சியை (Ayyubid Dynasty) நிறுவியவர்.

சலாவுதின் மிகவும் திறமையான அரசர். தனது வசீகரத் தலைமையால் சிரியா, பாலஸ்தீனம், எகிப்து ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்த அவர் இழந்த ஜெருசலேத்தை கிறிஸ்தவர்களின் கைகளில் இருந்து மீட்க முடிவெடுத்தார். இப்படியாக 1187ஆம் ஆண்டில் இரண்டாவது சிலுவைப் போர் தொடங்கியது.

முதலில் ஏக்கர் (Acre) பகுதியைச் சிலுவைப் போர் வீரர்களிடம் இருந்து மீட்ட அவர், பிறகு தனது படையைக் கொண்டு நாசரத், சஃபூரியாக், ஹைஃபா, காசா என ஒவ்வொன்றாகச் சென்று இறுதியில் ஜெருசலேமையும் மீட்டார். ஹாட்டின் யுத்தத்துக்குப் பிறகு ஜெருசலேம் உட்பட பெரும்பான்மையான நிலங்கள் மீண்டும் இஸ்லாமியர்களின் கைகளுக்குள் வந்தது.

முதல் சிலுவைப்போரைப் போல இந்த முறை கொடூரக் கொலைகளோ, ரத்த வெறியாட்டமோ நிகழ்த்தப்படவில்லை. சலாவுதின் ஜெருசலேத்தில் இருந்த சிலுவை வீரர்கள்மீது கருணைக் காட்டி பிணைத் தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களை உயிருடன் செல்ல அனுமதித்தார். இந்தப் பிணைத் தொகையை வைத்து தனது படையை மேலும் வலுப்படுத்தினார்.

அயூப்பியர்களின் வெற்றி பாலஸ்தீனத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்த நூற்றாண்டுக்குள் பாலஸ்தீனத்தில் பெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டது. கல்வியில் பாலஸ்தீனத்தில் பெரும் புரட்சி ஏற்பட்டது. பள்ளி, கல்லூரிகள் கட்டப்பட்டன. தொழில்நுட்ப வளர்ச்சியும் ஓங்கியது. அறிவியல், பொறியியல், மருத்துவம், கல்வி, கட்டடக் கலை ஆகியற்றின் வளர்ச்சியால் அரேபிய மற்றும் இஸ்லாமிய உலகில் ஏற்பட்ட தாக்கம் பாலஸ்தீனத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது.

முக்கியமாக ஐரோப்பிய, பிராங்கிய ஆதிக்கத்தை அந்தப் பகுதியில் இருந்து சலாவுதின் நீக்கினார். இதனால் முதல் சிலுவைப் போரின் அச்சத்தில் அங்கிருந்து புலம்பெயர்ந்திருந்த இஸ்லாமியர்களும் யூதர்களும் மீண்டும் ஜெருசலேமிற்கு திரும்பி வந்தனர். சேதமடைந்திருந்த புனிதத் தலங்கள் மீண்டும் கட்டப்பட்டன. குறிப்பாக சிலுவை வீரர்கள் ராஜ்ஜியத்தில் அங்கிருந்த இஸ்லாமியக் கோயில்களும் அலுவலங்களும் கிறிஸ்தவமயமாகி இருந்தது. அவற்றை மீண்டும் இஸ்லாமியமயப்படுத்தினார் சலாவுதின். அதே சமயம் அங்கிருந்த கிறிஸ்தவர்களுக்கும் வழிபடும் உரிமையை அவர் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.

அவரது ஆட்சியில் பாலஸ்தீனத்தின் தலைநகராக இருந்த அல்-ரம்லா மாற்றப்பட்டு ஜெருசலேம் தலைநகரமானது. இதற்கு முன் இருந்த ரோமானியர்கள், பைசாந்தியர்கள், கலீபாக்களின் ஆட்சிகளில் பாலஸ்தீனத்தின் சமயத் தலைநகர் ஒன்றாகவும், நிர்வாகத் தலைநகரம் ஒன்றாகவும் இருந்தன. இந்த வேறுபாட்டை சலாவுதீன் நீக்கினார். அவரது ஆட்சியில் பாலஸ்தீனத்தின் முழுமையான தலைநகராக ஜெருசுலேம் உருமாறியது. இதேநிலையே அடுத்து வந்த மம்லுக்கிய, ஓடாமான்கள், பிரிட்டிஷ் பேரரசிலும் தொடர்ந்தது.

அயூப்பியர்கள் பாலஸ்தீனம் உட்பட தங்கள் ஆட்சியில் இருந்த நிலங்களை, அறிவுசார்ந்த வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் சென்றனர். இஸ்லாமியக் கல்விச்சாலைகள் ஜெருசலேமில் தொடக்கத்தில் இருந்தாலும், அது சிலுவைப் போர் வீரர்களால் இடிக்கப்பட்டது. இதனை மீண்டும் கட்டமைத்து விரிவுப்படுத்தினார் சலாவுதீன். இதேபோல கல்விச் சாலைகளுக்கு சிறப்பு நிதிகள் அவரது ஆட்சியில் வழங்கப்பட்டது. இதனால் வர்த்தகம், கட்டடக்கலை, கலைத்துவ எழுச்சி பாலஸ்தீனத்தின் நகரங்களில் ஏற்பட்டது.

பாலஸ்தீனத்தில் இருந்த அரசு நிறுவனங்களில் சன்னி இஸ்லாமிய ஆதிக்கம் நிலவியது. அடுத்த சில ஆண்டுகளில் ஜெருசலேமில் இருந்த கால்வாசி நிறுவனங்கள், வியாபார சொத்துகள் அனைத்தும் இஸ்லாமிய அறக்கட்டளையின்கீழ் வந்தன. ஓட்டோமான் இறுதி நாட்கள் வரை அந்த நிலையே நீடித்தது.

மூன்றாவது சிலுவைப்போர் சலாவுதினிடம் இருந்து மீண்டும் ஜெருசுலேத்தைக் கைப்பற்றும் முயற்சியாகத் தொடங்கியது. எட்டாம் கிரிகோரி என்கிற போப்பாண்டவரின் ஆசியில் பிரெஞ்சு மன்னர் இரண்டாம் பிலிப்பும், இங்கிலாந்து மன்னர் முதலாம் ரிச்சர்ட்டும் படையெடுத்து வந்தனர். இந்தப் படை ஜெருசலேமை அடைவதற்கு முன்பே ஏக்கர் எனும் இடத்தில் சலாவுதீனின் படையினரால் தோற்கடிக்கப்பட்டது.

இரண்டாம் சிலுவைப் போருக்கு வந்த ஐரோப்பிய வீரர்கள் சரியாக ஒருங்கிணைக்கப்படாமல் இருந்தனர். ஐரோப்பியத் தளபதிகளிடம் வித்தியாசங்கள் நிலவின. இதனால் அவர்களால் சலாவுதினின் படையைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

சலாவுதினுக்கு ரிச்சர்டின்மீது மரியாதை இருந்தது. ரிச்சர்டும் சலாவுதின்மீது மரியாதை வைத்திருந்தார். இருவரும் சந்தித்துக்கொள்ளவே இல்லை. ஆனால் ரிச்சர்ட் சலாதீனுக்கு ஒரு கடிதம் எழுதி, அதில் இந்தப் போரை அமைதியாக முடிக்க விரும்புவதாகத் தெரிவித்தார். இதற்கு சலாவுதினும் உடன்படவே போர் அமைதி வடிவில் முடிவுக்கு வந்தது. ரிச்சர்ட் தன் நாட்டுக்குத் திரும்பினார். இந்தப் போர் நிறுத்தம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.

போர் நிறுத்தக் காலத்திலும் அருகே தங்கிவிட்ட சிலுவை வீரர்கள் தொடர்ந்து பாலஸ்தீனக் கடற்கரை நகரங்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்துக்கொண்டே இருந்தனர். மத்தியத் தரைகடல் வழியாக அவர்கள் தொடர்ந்து அப்பகுதிகளுக்குள் நுழைந்த வண்ணம் இருந்தனர். சிலுவை வீரர்கள் முற்றுகையிடுவதில் திறமைசாலிகளாக இருந்தனர். அதேபோல தடுப்புகள் அமைப்பதிலும் அவர்களின் திறன் வெளிப்பட்டது.

இதுபோன்ற தாக்குதல்களை தடுப்பதற்கு சலாவுதின் முடிவு செய்தார். கடல் வழியாக அவர்கள் வருகை புரிவதை முழுவதுமாக நிறுத்துவதற்குப் பாலஸ்தீனத்தையே அவர் மாற்றியமைக்கத் திட்டமிட்டார்.

இதன் ஒருபகுதியாக அவர் பாலஸ்தீனத்தின் கடற்கரை நகரங்களில் இருந்த சுவர்களை இடிக்கத் தொடங்கினார். அவற்றின் உள்கடமைப்புகளைச் சிதைத்தார். வடக்கில் டையரில் இருந்து தெற்கில் காசா வரை உள்ள சுவர்கள் முழுவதும் இடிக்கப்பட்டன. பிறகு உடைந்த இந்தச் சிதிலங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கொட்டப்பட்டன. இதன் மூலம் சிலுவை வீரர்களின் படகுகளும் கப்பல்களும் துறைமுகங்களில் கரையிறங்குவதை தடுக்கும் முயற்சி ஏற்படுத்தப்பட்டது.

இன்றும் சிசேரியாவில் உள்ள துறைமுகத்தில் அந்த இடிபாடுகள் காணக்கிடைக்கின்றன. இந்தக் காலகட்டத்தில்தான் பாலஸ்தீனத்தின் கடற்கரை நகரங்கள் முக்கியத்துவம் இழந்து உள்நாட்டு நகரங்கள் வளர்ச்சி அடையத் தொடங்கின.

1202ஆம் ஆண்டு நான்காவது சிலுவைப் போர் தொடங்கியது. இந்த முறை சிலுவைப் போர் வீரர்கள் மத்தியத் தரைக்கடல் வழியாக எகிப்தை அடைய திட்டமிட்டனர். ஆனால் வரும் வழியிலேயே வெனிஸில் அவர்களுடைய திட்டம் திசைமாறியது. இஸ்லாமியர்களுடன் யுத்தம் செய்வதற்குப் பதில் வெனிஸ் மக்களுக்கு உதவுவதாக அவர்களுடைய எதிரியுடன் சண்டையிட்டு வந்தனர். இதில் கொடுமை என்னன்வென்றால் அவர்கள் தாக்குதல் நடத்தியதும் கிறிஸ்தவர்கள்மீதுதான்.

அதன் பிறகாவது அவர்கள் ஜெருசலேம் திரும்பினார்களா என்றால் கிடையாது. நேராக அவர்கள் கான்ஸ்டன்டைனோபிளுக்குள் நுழைந்து அந்நகரை முற்றுகையிட்டனர். யாருக்கு உதவ முன்வந்தார்களோ அதே பைசாந்தியர்கள்மீது தாக்குதல் நடத்தி அந்நகரத்தின் முக்கிய இடங்களை எல்லாம் இடித்து நொறுக்கிவிட்டு, செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

1212ஆம் ஆண்டு சரித்திரத்தில் மேலும் சில விநோத சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்தமுறை சிலுவைப் போரை நடத்தியவர்கள் சிறுவர்கள். ஸ்டீபன் எனும் சிறுவன் பிரான்ஸின் மார்செலஸ் எனும் இடத்தில் இருந்து 30,000 பிரெஞ்ச் – ஜெர்மானிய சிறுவர்களை அழைத்துக்கொண்டு ஜெருசலேம் நோக்கி நகர்ந்தான். அவன் சண்டையிடாமல் அமைதி வழியில் இஸ்லாமியர்களைக் கிறிஸ்தவர்களாக மாற்றப்போவதாக அறிவித்தான். அவனுடன் வந்த சிறுவர்களை எல்லாம் வணிகர்கள் வழிநடத்திச் சென்றனர். ஆனால் அவர்கள் புனித நகரத்தை அடைவதற்கு முன்பே வட ஆப்பிரிக்காவிற்குக் கப்பல்களை திருப்பி வணிகர்கள், சிலுவைப் போர் சிறுவர்களை அங்கே அடிமைகளாக விற்றுவிட்டுச் சென்றனர். சில சிறுவர்கள் பசியும் பட்டினியுமாக உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இரண்டாவது சிறுவர்கள் சிலுவைப் போரும் நடைபெற்றது. அதன் முடிவும் முதலாவதுபோலவே இருந்தது.

ஐந்தாவது சிலுவைப் போர் எகிப்தில் நடைபெற்றது. திருச்சபைகளின் ஆதரவில் நடைபெற்ற கடைசி சிலுவைப் போர் இதுதான். இதில் சிலுவை வீரர்கள் தொடக்கத்தில் சில வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் இறுதியில் தோல்வியைத் தழுவினர். ஆறாவது சிலுவைப் போர் என்பது உண்மையில் போரே இல்லை. பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக ரோமானியப் பேரரசர் இரண்டாம் ஃபிரெடரிக் ஜெருசலேமிற்கு சென்று இஸ்லாமிய வீரர்களைச் சந்தித்து அமைதியாக புனித நகரத்தின் அதிகாரத்தையும், பெத்தலஹத்தின் அதிகாரத்தையும் கிறிஸ்தவர்களிடம் கொடுத்துவிடும்படிக் கேட்டார்.

தன்னை ஜெருசலேமின் முடிசூட்டிக்கொண்ட அரசர் என்றும் அறிவித்தார். விநோதமாக அப்போதைய சுல்தானாக இருந்த அல் கமில் ஃபிரெடரிக்கின் வேண்டுகோளுக்கு இணங்க ஜெருசுலேமின் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுத்தார்.

ஆனால் கொஞ்ச நாட்களிலேயே இஸ்லாமியர்கள் மீண்டும் சென்று ஜெருசலேத்தை அடித்துப் பிடுங்கிக் கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்தும் ஏழாவது, எட்டாவது சிலுவைப் போர்கள் நடைபெற்றன. ஏழாவது சிலுவைப் போருக்குத் தலைமைத் தாங்கிய அரசன் பிரான்ஸின் லூயிஸை இஸ்லாமிய வீரர்கள் பிடித்துக்கொண்டு சென்றுவிட்டார்கள். பிறகு நல்ல பிணைத் தொகையை வாங்கிக்கொண்டு விட்டுவிட்டார்கள். ஆனாலும் அவர் விடமாட்டேன் என எட்டாவது சிலுவைப் போரைத் தொடங்கினார். இந்தமுறை அவர் வட ஆப்பிரிக்காவிற்குள் நுழைந்தபோது கொள்ளை நோய் தாக்கி அவரும் அவரது படைகளும் இறந்துவிட்டனர். இதன்பின்னும் ஒரு முயற்சி நடந்து தோல்வி அடைந்தது. இப்படியாகச் சிலுவை போர்கள் முடிவுக்கு வந்தன.

உண்மையில் முதல் சிலுவைப் போருக்குப் பிறகு நடைபெற்ற அனைத்துச் சிலுவைப் போர்களும் ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள் தோல்வியையே சந்தித்தனர். இந்த யுத்ததம் இரண்டு தரப்புகளுக்கும் எதையுமே கொடுக்கவில்லை. ஒருபுறம் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் அதளபாதாளத்தில் விழுந்தது. கிறிஸ்தவர்களின் உண்மை முகத்தை உலகுக்குக் காட்டியது. பல கனவுகளைக் கண்ட ஐரோப்பிய தேசம் தொடர்ந்து தோல்வியையே சம்பாதித்து இருந்தது. ஆனால் ஒரே ஒரு பலன்தான் ஐரோப்பியர்களுக்கு கிடைத்தது.

ஜெருசலேம் எனும் நகரத்தை ஆக்கிரமிக்க வந்த சிலுவை வீரர்கள் மத்திய கிழக்கின் கலாசார, அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தங்கள் தாய் நாட்டுக்கு எடுத்துச் சென்றனர். இதுதான் மத்தியக் காலத்தில் மந்த நிலையில் இருந்த ஐரோப்பாவில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அரேபிய தாக்கத்தால் ஏற்ற்படுத்தப்பட்ட முன்னெடுப்புகளே ஐரோப்பாவை மறுமலர்ச்சி யுகத்துக்கு அழைத்துச் சென்றது.

இஸ்லாமியர்களும் இந்தப் போருக்கு பெரிய விலையைக் கொடுக்க வேண்டி இருந்தது. இந்த யுத்தங்களால் இஸ்லாமியர்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் அதிகரித்து இருந்தாலும் பலநூறு ஆண்டுகள் நடைபெற்ற யுத்தம் அவர்கள் பகுதியில் ஏற்பட்டு இருந்த பல முன்னேற்றங்களைச் சிதைத்திருந்தது. சிலுவைப் போருக்குப் பின்னும் பல தரப்பட்ட படையெடுப்புகள் அம்மண்ணில் நிகழ்ந்த வண்ணமே இருந்தன. குறிப்பாக சிலுவைப் போர் காலத்தில்தான் முக்கியமான அந்நியப் படையெடுப்பு ஒன்று நிகழ்ந்தது. இந்தப் படையெடுப்பு பல உயிர்களை பலி கேட்டது.

எந்த நோக்கமும் இல்லை என்று வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட அந்தப் படையெடுப்பு அந்நிலம் முழுமையையும் சிவப்பு நிறமாக்கியது.

0

ஐந்தாவது சிலுவைப் போர் ஆரம்பித்த நாட்களில் இஸ்லாமியர்கள் கட்டுப்பாட்டில் இருந்த மத்தியக் கிழக்கு மற்றொரு அச்சுறுத்தும் படையெடுப்பால் நிலை தடுமாறி நின்றது. இந்தமுறை படையெடுத்து வந்தது மங்கோலியர்கள். தலைமை தாங்கியது பேரரசர்களே நடுங்கி ஒடுங்கும் செங்கிஸ்கான்.

13ஆம் நூற்றாண்டில் இனக்குழுக்களை எல்லாம் திரட்டி மிகப்பெரியப் படையை உருவாக்கி இருந்த செங்கிஸ்கான் சீனா முழுவதையும் கைப்பற்றுவதை தன் லட்சியமாக வைத்து படையெடுப்புகளை நிகழ்த்திக்கொண்டிருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக இன்றைய கிர்கிஸ்தான் பகுதியில் இருந்து அவருக்கு ஓர் அழைப்பு வந்தது.

அப்போது கிர்கிஸ்தான் பகுதி செங்கிஸ்கானின் எதிரிகளான காரா கிதையர்களால் (Kara-Khitay) ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. உடனே கிரிகிஸ்தான் மக்கள் தங்களுக்கு உதவும்படி செங்கிஸ்கானிடம் உதவி கோரினர். தன்னுடைய எதிரியை வீழ்த்த இதுதான் சரியான சமயம் என்று நினைத்த செங்கிஸ்கான் கிர்கிஸ்தானை நோக்கிப் புறப்பட்டார். ஆனால் அந்த நொடி அவருக்கு மற்றொரு எண்ணம் உதயமானது. ஏன் நாம் சீனப் பகுதிகளில் படையெடுத்துக் கொண்டிருக்க வேண்டும்? இந்தப் பக்கத்தில் தென்மேற்கு ஆசியா, பெர்சியா பகுதிகளில் பெரிய தேசங்கள் இருக்கின்றன. அவற்றைப் பிடித்தால் என்னவென்று யோசித்தார். அப்படியே கிழக்கு நோக்கியும் புறப்பட்டார்.

அண்மைக் கிழக்கில் அவர் நிகழ்த்திய படுகொலைகள் சரித்திரம் இருக்கும் வரை மறையாதது. கலீபாக்களின் ஆட்சியின்கீழ் இருந்த மெர்வ் நகரத்தில் 7 லட்சம் பேர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். குர்கஞ்சியை முற்றுகையிட்ட மங்கோலியர்கள் அருகில் இருந்த பெரிய அணையை உடைத்து நகரத்தையே நீரில் மூழ்கடித்தனர். அதை ஆட்சி செய்துகொண்டிருந்த இஸ்லாமிய ஆளுநர்களின் தொண்டையில் தங்கத்தை உருக்கி ஊற்றினர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியக் கலைஞர்கள் மங்கோலியாவிற்கு அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். ஈரானில் உள்ள நிஷபூர் பகுதியில் உள்ள கல்லறைகளில் அங்கிருந்த ஆண், பெண், குழந்தைகளின் வெட்டப்பட்ட தலைகள் புதைக்கப்பட்டன.

இத்தனை களேபரங்கள் அங்கு நடைபெற்றன.

1227ஆம் ஆண்டு கெங்கிஸ்கானின் மரணத்துக்குப் பிறகு அவரது பேரன் குலாகு கான் (Hulegu Khan) தனது படையெடுப்பை எகிப்து வரை நகர்த்த விரும்பினார். இதன் ஒரு பகுதியாக 1256ஆம் ஆண்டில் ஈரான், ஈராக், சிரியாவிற்குள் மங்கோலியர்கள் நுழைந்தனர். 1258ஆம் ஆண்டு பாக்தாத் நகருக்குள் நுழைந்த அவர்கள் அங்கிருந்த நூலகங்கள், மசூதிகள், வரலாற்று முக்கியத்துவம் பெற்ற தளங்களை இடித்து தரைமட்டமாக்கினர். இஸ்லாமியரா, கிறிஸ்தவரா, யூதாரா என்று எந்த வேறுபாடும் பார்க்கவில்லை. பார்க்கும் அனைவரையும் படுகொலை செய்தனர். கலீபாக்களின் ஆட்சியில் இருந்த பல நகரங்கள் தரைமட்டமாகின.

அப்போதுதான் பாக்தாத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த அப்பாசிய கலீபாக்களின் ஆட்சியும் முடிவுக்கு வந்தது. அந்தக் குடும்பத்தை சேர்ந்த சரணடைந்த ஆண்கள் அனைவரும் கம்பளத்தில் சுருட்டப்பட்டு குதிரையால் மிதித்துக் கொல்லப்பட்டனர். அவர்களின் அழுகிய பிண நாற்றம் பாக்தாத் நகரம் எங்கும் வீசியது என்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள். தப்பிய ஒரு சில தலைவர்கள் மட்டும் எகிப்தில் தஞ்சம் அடைந்தனர். அதன் பின் அந்த நகரம் மீளவே இல்லை.

மங்கோலியர்கள் இதனுடன் நிறுத்தவில்லை. அடுத்ததாக குலாகு கான் எகிப்து நோக்கி சென்றார். அவருடைய படைகள் சிரிய நகரங்களான அலெப்போவையும் டமாஸ்கஸையும் கைப்பற்றின. அவர்களுடைய பட்டியலில் அடுத்து இருந்தது ஜெருசலேம்.

0

மங்கோலியர்கள் மேற்கு பகுதிகளில் சுற்றிக்கொண்டிருந்தபோது சத்தமில்லாமல் மற்றொரு சக்தி வாய்ந்த ராஜ்ஜியம் எகிப்தில் உருவாகிக் கொண்டிருந்தது. அவர்களுடைய பெயர் மம்லுக்கியர்கள். இந்தப் பெயருக்கு அடிமைகள் அல்லது உடமைகள் என்று அர்த்தம்.

உண்மையில் மம்லுக்கியர்கள் அப்பாசிய கலீபாக்களின் ராணுவப் பிரிவில் இருந்தவர்கள். ஒன்பதாம் நூற்றாண்டில் இஸ்லாமியர்கள் அல்லாத சிறுவர்களைப் பிடித்து வந்து அவர்களுக்குப் பயிற்சி அளித்து தனது ராணுவத்தின் ஒரு பகுதியாக வைத்துக்கொண்டது இஸ்லாமிய படை. ஆனால் அவர்கள் ஒருகட்டத்தில் மிகச் சக்தி வாய்ந்த அமைப்பாக எகிப்தில் உருவாகி இருந்தனர். ஆட்சியையும் கைப்பற்றினர்.

மங்கோலியர்களின் இரக்கமற்ற படை ஜெருசலேமை நோக்கி வருகிறது என்று தெரிந்தவுடனேயே உள்ளே புகுந்து அவர்களின் கொட்டத்தை அடக்கியது மம்லுக்கிய படைதான். வெறிகொண்டு வந்த மங்கோலியப் படையை இடைமறித்து யுத்தம் செய்தனர் மம்லுக்கியர்கள். அயுன் ஜலூத் யுத்தம் (Battle of Ayn Jalut) என அழைக்கப்படும் அந்த யுத்தத்தில் மங்கோலியப் படை தோல்வி அடைந்து ஜெருசலத்தைப் பிடிக்காமல் பின் வாங்கியது. வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை மங்கோலியப் படை சந்தித்தது மம்லுக்கியர்களிடம்தான்.

அத்துடன் மம்லுக்கியர்கள் விடவில்லை, மங்கோலியப் படையை ஈராக் வரை துரத்திச் சென்றனர். திரும்பி வந்தவர்கள் சிரியா மற்றும் பாலஸ்தீன அரசர்களாக ஆட்சியில் அமர்ந்தனர். இவர்கள்தான் 1291ஆம் ஆண்டு கடைசி சிலுவைப் போர் வீரர்களையும் துரத்தி அடித்தனர். 1517ஆம் ஆண்டு வரை பாலஸ்தீனத்தில் ஆட்சி புரிந்தனர்.

மத்திய பாலஸ்தீன வரலாற்றில் மம்லுக்கியர்களுக்கு முக்கியமான இடம் ஒண்டு. அவர்கள் ரத்த வெறி பிடித்த மங்கோலியர்களைத் தடுத்து நிறுத்தியதாலேயே புகழையும் நம்பிக்கையையும் உரிமையையும் பாலஸ்தீன மக்களிடம் பெற்றனர். மக்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தனர். அதுமட்டுமில்லாமல் சிலுவை வீரர்களின் இறுப்பையும் மொத்தமாக பாலஸ்தீனத்தில் இருந்து அழித்தவர்கள் அவர்களே. மம்லுக்கியர்கள் சிலுவை வீரர்களை பாலஸ்தீனத்தில் இருந்து மட்டுமல்லாமல் லெபனிய, சிரிய கடற்கரை நகரங்களில் இருந்தும் விரட்டியடித்தனர்.

பொதுவாக ராணுவ ஆட்சியில் மக்களின் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இருக்காது என்பதுதான் பொது கருத்து. மாறாக மம்லுக்கியர்களின் ஆட்சி பாலஸ்தீனத்தின் மற்றொரு பொற்காலமாக அமைந்தது.

மம்லுக்கியர்கள் நீண்ட கால இலக்கினைக் கருத்தில் கொண்டு பாலஸ்தீனத்திலும் ஜெருசலேமிலும் பல மாற்றங்களைச் செய்தனர். அந்தக் காலகட்டத்தில் மட்டும் பாலஸ்தீன மாகாணத்துக்கு ஆண்டு வரியாக 310,000 தங்க தினார்களும் 3 லட்சம் பவுண்ட் எடையுள்ள ஆலிவ் எண்ணெயும் வழங்கப்பட்டன.

மம்லுக்கியர்கள் எல்லைகளைக் கடுமையாகக் கண்காணித்தனர். வெளி ஆட்கள் உள்ளே நுழைவது பாலஸ்தீனத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் உள்ளூர் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்கு அவர்களுக்கு அதிக நேரம் கிடைத்தது. அந்த நகரத்தில் பல பொதுக் கட்டடங்கள் உருபெற்றன, நிறைய பொது சேவைகள் திட்டங்கள் அமலுக்கு வந்தன.

ஜெருசலேம் அதன் புகழை மம்லுக்கியர்கள் ஆட்சியில் பெற்றது. மெக்கா நகருக்கு இணையாக பாலஸ்தீனத்தில் இருந்த கட்டடங்கள், நினைவுக்கூடங்கள் ஆகியவை இஸ்லாமிய நெறியை எதிரொலிக்கும் வகையில் அமைக்கப்பட்டன. சிலுவைப் போர்களின் முடிவுக்குப் பிறகு இஸ்லாமியர்களின் கவனம் ஜெருசலேமின்மீது விழுந்தது. அங்கே வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.

உள்கட்டமைப்பில் மம்லுக்கியர்கள் அதிகம் கவனம் செலுத்தினர். அங்கே வசித்தவர்களுக்கு வேண்டிய சுத்தமான நீர், சுகாதாரம், குளியல் வீடுகள், நீரூற்றுகள் ஏற்படுத்திக்கொடுப்பட்டன. Arab Bath என்று அழைக்கப்பட்ட இந்தக் கட்டடங்களைத் சிலுவை வீரர்கள் தங்களுடைய நாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

அந்நகரத்தின் பொருளாதாரச் செயல்பாடுகளை விரிவு செய்ய புதிய சந்தைகள் ஏற்படுத்தப்பட்டன. பழைய சந்தைகள் விரிவு செய்யபப்பட்டன. பொருளாதாரச் செயல்பாடுகள் இஸ்லாமிய நெறியின் ஊடாக நடைபெற வேண்டும் என்பதை உறுதி செய்ய எண்ணி முஹ்தாசிப் (Muhtasib) எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் அதிகாரிகள் மம்லுக் சுல்தான்களால் நேரடியாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் சந்தையில் விற்கப்படும் பொருட்களின் விலைகளைக் கண்காணிக்கவும் கட்டுப்பாட்டில் வைக்கவும் பணிக்கப்பட்டிருந்தனர். சந்தை நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வது, அவ்வப்போது ஆய்வு செய்வது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பாலஸ்தீனம் மட்டுமின்றி எகிப்து, அல்ஷாம் பகுதிகளிலும் நடைபெறும் வணிகத்தைக் கண்காணிப்பவர்களாக முஹ்தாசிப் அதிகாரிகள் இருந்தனர்.

மத்திய காலகட்டத்தில் கொள்ளை நோய் போன்ற பரவல் சர்வ சாதாரணமாக இருந்தது. குறிப்பாகப் பெரும் நகரங்கள் இத்தகைய தாக்குதலுக்கு ஆட்பட்டன. இதனால் சுகாதார நிலையை உறுதி செய்வது, தொடர்ந்து சுத்தமான நீர் விநியோகம் செய்வது, பொதுக் குளியலறை, குடிநீர் நீரூற்றுகளை நிறுவுவது ஆகியவற்றில் மம்லூக்கியர்கள் கவனம் செலுத்தினர். இந்தக் காலகட்டத்தில் பாலஸ்தீனத்தில் ஏற்பட்ட குடிமுறைப் பொறியியல் முன்னெடுப்புகள் இஸ்லாமிய உலகுக்கே எடுத்துக்காட்டாக இருந்தது.

கட்டட தரத்தை உறுதி செய்வதிலும் முஹ்தாசிப்புகள் பங்கு வகித்தனர். கட்டடக் கலைஞர்கள், பொறியாளர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்களா என்பதில் கவனம் செலுத்தினர்.

மம்லுக்கிய காலத்தில் பல்வேறு இஸ்லாமிய அறிஞர்கள் பாலஸ்தீனத்தில் உருவாகினர். இவர்கள் பாலஸ்தீனத்தில் இருந்து எகிப்துக்கும் அல்ஷாமுக்கும் பயணம் செய்தனர். படிப்பதற்காக மட்டும் இல்லாமல் வேலை வாய்ப்புகளாகவும் பயணித்தனர்.

இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி மிக முக்கிய இஸ்லாமிய அறிஞர். 1372ஆம் ஆண்டு பிறந்த இவரது தந்தையும் அறிஞராகவும் கவிஞராகவும் இருந்தவர். இவரது குடும்பம் அஸ்கலான் எனும் பாலஸ்தீன நகரத்தில் இருந்தது. இதன் காரணமாகத்தான் அவர் தன் பெயரில் அந்நகரத்தின் பெயரையும் இணைத்துக்கொண்டார். இது பாலஸ்தீன நகரங்கள் கல்வியில் சிறந்து விளங்கியதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

இப்னு ஹஜர் இஸ்லாமிய சட்டவியலை டமாஸ்கஸிலும் ஜெருசுலேமிலும் படித்தார். பிறகு எகிப்தில் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் சட்டவியல் தொடர்பாகவும் வரலாறு தொடர்பாகவும் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய கவிதை நூல்களும் நமக்குக் கிடைக்கின்றன.

பண்டைய பாலஸ்தீனத்தின் முக்கிய நகரங்கள் கடல்களுடனோ மலைகளுடனோ தொடர்புகொண்டு இருந்தன. பாலஸ்தீனப் பொருளாதாரத்தின் முக்கியப் பகுதிகளாக இந்த மலைப் பிரதேசங்கள் இருந்தன. அங்கே இயங்கி வந்த ஆயிரக்கணக்கான கல் குவாரிகள் விலைமதிப்புமிக்க மார்பிள் கற்களையும் வெள்ளைக் கற்களையும் அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தன. அங்கிருந்த பிரசித்திப் பெற்ற மசூதிகள், தேவாலயங்கள், தூபிகள் ஆகியவற்றின் கட்டுமானங்களும் புனித நிலத்தின் பொருளாதாரமும் குவாரி பொருளாதாரத்தையும், கல்தச்சு கலையையும் மையப்படுத்தியே இருந்தன. அதேபோல முக்கியமான பாலஸ்தீன நகரான நேபுலஸ், ஜெருசலேம், அல் காலில் ஆகியவற்றில் இருந்தும் கோதுமைகள், ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை டமாஸ்கஸ், கெய்ரோ ஆகிய நகரங்களுக்கு ஏற்றுமதி செய்தன.

சிலுவைப் போர்களுக்குப் பிறகு மம்லுக்கியர்கள் மலைகளையொட்டிய பகுதிகளில் முக்கிய நகரங்களை அமைத்தனர். இது பாதுகாப்பையும், நிலைத்தன்மையையும் உறுதி செய்வதாக இருந்தது.

கண்ணாடிகள் உற்பத்தித் துறையும் மம்லுக்கிய காலத்தில் வளர்ச்சியடைந்தது. கண்ணாடியில் கலைப் பொருட்கள் செய்வது, நகைகள் செய்வது ஆகியவை ஊக்குவிக்கப்பட்டன. இந்த வேலைபாடுகளை இன்றும் ஜெருசலேமின் பழங் காலத்து கட்டங்களில் காணலாம். கண்ணாடி விளக்குகள், அலங்கார பொருட்கள் எகிப்து, சிரியா, அரேபியா, ஆப்ரிகா போன்ற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல் மொசைக் கற்களில் தீட்டப்படும் கலையும் அங்கு செழித்தோங்கி இருந்தது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆட்சி 1516ஆம் ஆண்டு ஓட்டோமான்களின் படையெடுப்பால் பாலஸ்தீனத்தில் முடிவுக்கு வந்தது.

0

ஓட்டோமான்களின் உதயம் பைசாந்தியர்களின் வீழ்ச்சி, செலுக்கியர்களின் சிதறல், மங்கோலியர்களின் படையெடுப்புக்கு இடையில் ஏற்பட்டது.

நான்காவது சிலுவைப் போரினால் பைசாந்தியர்கள் பெரும் அழிவைச் சந்தித்திருந்தபோது, செலுக்கியர்கள் மங்கோலியர்களால் வீழ்த்தப்பட்டிருந்தபோது காசிஸ் (Ghazis) என அழைப்பட்ட நாடோடி இனக்குழு வீரர்கள் சிலர் ஆசிய மைனர் பகுதியில் நுழைந்தனர். மங்கோலியர்களிடம் இருந்து தப்பிக்கும் நோக்கிலும், சில பொருளாதார நலன்களுக்காகவும் ஆசியா மைனரின் மத்திய, நடுப் பகுதிகளைக் கைப்பற்றினர். பிறகு வடக்கு, மேற்கு பகுதிகளில் இருந்த தங்களுடைய எதிராளிகளிடமும் சில அமைதி ஒப்பந்தங்களை மேற்கொண்டுவிட்டு சிறிய சமஸ்தானங்களை அமைத்தனர். இவற்றில் பலவீனமாள, முக்கியத்துவமற்ற சமஸ்தானத்தை முதலாம் ஓஸ்மன் என்பவர் ஆண்டு வந்தார். இந்தச் சிறிய, பலவீனமான சமஸ்தானம்தான் பின்னாளில் விரிவடைந்து, வலுவடைந்து ஓட்டோமான் பேரரசாக உருவெடுத்தது.

ஓஸ்மானின் சமஸ்தானம் பைசாந்திய எல்லைக்கு அருகே இருந்தது. இதனால் அந்தப் பேரரசுக்கும் ஓஸ்மானின் வீரர்களுக்கும் இடைவிடாத சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதில் ஓஸ்மானின் படையினருக்கு வெற்றி கிட்ட தொடங்கி இருந்த நேரம். பைசாந்தியப் பேரரசுப் படைகளையே அடித்து ஓடவிடும் ஓஸ்மானின் வீரர்களைப் பார்த்து மற்ற இனக் குழுவினரும் அச்சம் கொள்ளத் தொடங்கினர். அவர்கள் தாங்களாக வந்து தங்கள் விஸ்வாசத்தை ஓஸ்மானிடம் அளித்தனர். அவர்களுடைய படைகள் ஓஸ்மானின் படைகளுடன் இணைந்தது. இதைத் தொடர்ந்து ஓஸ்மானும் அவரது மகன் ஓர்ஹானும் இணைந்து அருகே இருந்த நிலங்களில் படையெடுப்புகளைத் தொடங்கினர். இப்படியாக ஓட்டோமான் பேரரசு உருவாகத் தொடங்கியது.

அடுத்தடுத்த தலைமுறையில் ஓட்டோமான்கள் கிழக்கு ஐரோப்பாவின் பால்கனைக் கைப்பற்றினர். 1453ஆம் ஆண்டு ஓட்டோமான்கள் வரலாற்றில் மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. பல இடைவிடா முயற்சிகளுக்குப் பிறகு இரண்டாம் மெஹ்மெத் என்கிற சுல்தான் கான்ஸ்டன்டைன்நோபிளைக் கைப்பற்றினார். பின் அதன் பெயரை இஸ்தான்புல் என மாற்றினார். ஓட்டோமான்களின் புகழ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கின.

ஓட்டோமான்கள் இஸ்தான்புல்லை சீரமைப்புச் செய்து அதன் பழைய புகழை மீட்டெடுத்தனர். முதலாம் செலிம், அவருக்கு பின் வந்த சுலைமான் ஆகியோரின் ஆட்சியின் கீழ் ஓட்டோமான் பேரரசு மிகப்பெரிய அளவில் விரிவடைந்தது. சுலைமானின் ஆட்சியின் முடிவில் ஓட்டாமான் பேரரசு ஹங்கேரி, யூகஸ்லோவாக்கிய, வடக்கு ஆப்ரிக்கா, எகிப்து, ஈராக், ஈரான், அரேபியாவின் மேற்கு பகுதிகள் எனப் பெரிதாகி இருந்தது. இதன் ஒரு பகுதியாக சிரியா இருந்தது. சிரியாவின் ஒரு பகுதியாக பாலஸ்தீனம் இருந்தது.

சுலைமான் ஓட்டோமான் பேரரசை உச்சத்துக்கு எடுத்துச் சென்றார். 16ஆம் நூற்றாண்டில் ஓட்டோமான் பேரரசு மிகப் பெரிய, மிகவும் சக்தி வாய்ந்த பேரரசாக இருந்தது. வானின் முகடு வரை, சூரியனைத் தொடும் உச்சத்தில் ஓட்டோமான் பேரரசு இருந்ததாக வரலாற்றாசிரியர்கள் வர்ணிக்கின்றனர்.

ஓட்டோமான் பேரரசு துருக்கிய பேரரசாக இருந்தாலும் அதில் துருக்கியர்கள் மட்டும் இல்லாமல் அரேபியர்கள், அர்மேனியர்கள், கிரேக்கர்கள் என பரந்துபட்ட மக்கள் பங்கு பெற்றிருந்தனர். ஓட்டாமான்களின் நிர்வாகம் எல்லோரையும் அணுசரித்துச் செல்வதாக இருந்தது. அவர்களது ஆட்சியில் எல்லாத் தரப்பினரும் அதிகாரிகளாக இருந்தனர்.

ஓட்டோமான்களின் தலைநகரமான இஸ்தான்புல் அன்றைய தேதியிலேயே ஒற்றை மதத் தத்துவத்தைப் பின் தொடரும் 7 லட்சம் மக்களைக் கொண்டிருந்தது. அதில் 58% பேர் இஸ்லாமியர்களாக இருந்தனர். 32% பேர் கிறிஸ்தவர்களாகவும், மீதமிருந்த 10% பேர் யூதர்களாகவும் இருந்தனர்.

இஸ்தான்புல் பல கலாசாரங்கள் சங்கமிக்கும் இடமாக இருந்தது. பலதரப்பட்ட கலாசார, மதப் பாரம்பரியத்தைக் கொண்ட மக்கள் வாழ்ந்து வந்தனர். அதுவே அதன் வெற்றிக்கும் காரணமாக இருந்தது. இஸ்லாமியர்கள் அல்லாத மக்களுக்கென்று தனிக் கொள்கைகள் வகுக்கப்பட்டு அவர்கள் சுயேச்சையாக செயல்படும் விதமாக சட்டத்திட்டங்கள் இருந்தன. அவர்களுக்கு தங்கள் பழக்கவழக்கங்களைப் பின்பற்றவும், கல்வி முறைகளைப் பின்பற்றவும் எந்தத் தடையும் இல்லாமல் இருந்தது. இதனாலேயே அந்தப் பேரரசில் எதிர்ப்புகள் ஏற்படுவது குறைவாக இருந்தது. மதத்தலைவர்களே வரி வசூல் செய்பவர்களாகவும் இருந்தனர். அதனால் அந்தந்த மத மக்கள் எந்த இடர்பாடுகளும் இல்லாமல் தங்களது ஆட்சியாளர்களை ஏற்றுக்கொண்டனர்.

இத்தகைய ஓடாமான்கள் ஆட்சியின் இறுதியில்தான் இன்றைய பாலஸ்தீன – இஸ்ரேல் பிரச்னைக்கான தொடக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து வரும் அத்தியாயங்களில் நாம் விரிவாகப் பார்ப்போம்.

எத்தகைய பெரிய ராஜ்ஜியத்துக்கும் வீழ்ச்சி என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? 17ஆம் நூற்றாண்டில் ஓட்டோமான்களின் வீழ்ச்சி தொடங்கியது. சர்வதேச அளவில் மாற்றங்கள் வந்துகொண்டிருந்தன. ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களும் போட்டிகளும் புதிய அதிகார வர்க்கத்தினரை உருவாக்கி இருந்தது. மறுமலர்ச்சி யுகத்தில் ஏற்பட்டிருந்த நிலையான வளர்ச்சி ஐரோப்பியர்களைப் புதிய ஆதிக்கச் சக்தியாக வளர்த்தெடுத்தது. அவர்கள் உலக சரித்திரத்தையே மாற்றத் தொடங்கினர். இதன் தாக்கம் ஓட்டாமான் பேரரசிலும் எதிரொலித்தது.

ஓட்டோமான்களின் பொருளாதாரச் சுதந்திரம் குறைந்து அவர்கள் ஐரோப்பியர்களைச் சார்ந்து இருக்கும் நிலை உருவாகியது. வெளியில் இருந்து வந்த தாக்கம் பத்தாது என்று உள்ளுக்குள்ளேயும் அந்த பேரரசு ஆட்டம் கண்டது. சுல்தான்களில் திறமையின்மை, ஒற்றுமையின்மை பேரரசை பாதித்தது. அமைப்புகளும் ஊழல், வாரிசு அரசியலால் சீரழிந்தன.

இறுதிக் கட்டத்தில் ஓட்டோமான் சுல்தான்கள் தங்கள் நாட்டின் அமைப்புகளை மேற்குலகத்தின் தாக்கத்தில் மாற்ற விரும்பினர். மூன்றாம் செலிம், இரண்டாம் மக்முத் ஆகிய அரசர்கள் பெரும் முயற்சிகள் எடுத்தனர். இரண்டாம் மக்முத்துக்குப் பிறகு டான்சிமாத் (Tanzimat) எனப்படும் சீர்த்திருத்தங்கள் ஒட்டாமான்களின் அரசில் ஏற்படத் தொடங்கின. இந்தக் காலகட்டத்தில் புதிய இலக்கிய இயக்கங்கள் உருவாகத் தொடங்கின. கவிதைகள், இதழியல் ஆகிய துறைகள் வளர்ச்சிப் பெற்றன. இந்த முன்னெடுப்புகளைச் செய்தவர்கள் இளம் ஓட்டோமான்கள் என அழைக்கப்பட்டனர்.

இந்த இயக்கங்கள் ஓட்டோமானிய, இஸ்லாமிய பாரம்பரியத்தை அடித்தளமாகக் கொண்டு அமைப்புகளை மேற்கத்தியமயமாக்க முயற்சித்தன. இதன் விளைவாக அரசியல் சாசனம் எழுதும் தேவை ஏற்பட்டது.

1876இல் ஓட்டோமான்களுக்கு என்று ஒரு சாசனம் உருவாகி முடித்த வேலையில் ரஷ்யப் படையெடுப்பு அப்பேரரசின்மீது நிகழ்ந்தது. இதன்பின் பேரரசின் உள்ளேயே பல பிரிவுகள் உருவாகி, அவர்கள் ஒன்றிணைந்து இளம் துருக்கியர்கள் எனும் அமைப்பை ஏற்படுத்தினர். இந்த அமைப்பு ரகசியமாகச் செயல்பட்டு Commitee of Union and Progress (CUP) எனும் அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பு அதுவரை இருந்து வந்த அரசை தூக்கியெறித்துவிட்டு 1876ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சாசனத்தின்கீழ் ஆட்சி அமைக்க முயற்சி செய்தது.

நல்ல நோக்கத்தில் இந்த முயற்சிகள் நடைபெற்றாலும் இளம் துருக்கியர்களுக்குப் புதிய அரசாங்கத்தை எப்படி நடத்துவது என்று தெரியவில்லை. உள்ளேயே நிலையற்ற அமைப்புகளைக் கொண்டிருந்த இந்த ஆட்சியில் ஓட்டோமான் பேரரசு தன் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை இழந்தது. அதன்பின்னும் இரண்டு ஆட்சிக் கவிழ்ப்புகள் நடைபெற்று மீண்டும் சியூபி ஆட்சிக்கு வந்தது. இந்தத் தருணத்தில் ஓட்டோமான் ராஜ்ஜியத்தின் ஜனநாயகம், அரசாங்கம் எல்லாமும் மாறி இருந்தன. முதல் உலகப்போர் தொடங்க ஒரு சில ஆண்டுகள் மட்டுமே இருந்த நிலையில் 600 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க பேரரசும் தன் முடிவை எண்ணிக் கொண்டிருந்தது.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *