Skip to content
Home » பாலஸ்தீனம் #8 – சியோனியக் குடியேற்றம்

பாலஸ்தீனம் #8 – சியோனியக் குடியேற்றம்

Theodor Herzl

நிலம் இல்லா மக்களுக்காக, மக்கள் இல்லாத நிலம் – புகழ்பெற்ற யூத வாக்கியம்.

பாலஸ்தீனத்தில் இருந்த ஒரு சிறிய கிராமம் அல்-யஹுதியா. மத்தியப் பாலஸ்தீனத்தின் கடற்கரை நகரமான யோப்பாவுக்கு (Jaffa) அருகே மலைப்பிரதேசத்தின்கீழ் அமைந்திருந்த கிராமம். அப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு விவசாயமே வாழ்வாதாரம். அங்கிருந்த மக்கள் கரடு முரடான மலைப்பிரதேசத்தை புனரமைத்து விவசாய நிலமாக்கி, பயிரிட்டு வந்தனர். அவர்கள் முன்னோர் ஏற்படுத்திக்கொடுத்த நீர்ப்பாசன அமைப்பால் அந்த நிலம் கொஞ்சம் செழிப்புற்று இருந்தது.

அந்த நிலத்தில் அவர்கள் சிட்ரஸ் பழங்களை விளைவித்தனர். ஆலிவ் மரங்களை வளர்த்தனர். மற்ற தானியங்களும் அங்குதான் உற்பத்தி செய்யப்பட்டன. அவர்கள் யாருமே நிலச்சுவான்தார்கள் கிடையாது. அந்தப் பகுதியில் அப்படியொரு வழக்கமே அப்போது ஏற்படவில்லை. அவர்கள் எல்லோரும் விவசாயிகள். நிலம் என்பது அனைவருக்குமே பொதுவானது. அந்த நிலத்தில் எல்லோரும் சேர்ந்து உழுது, விதைகள் விதைத்து, விளைச்சல் செய்து, அறுவடை செய்த பொருட்களைச் சமமாகப் பிரித்துக்கொள்வர். நிலம் என்பது கடவுள் கொடுத்த பரிசு. இதுதான் அவர்களுடைய நம்பிக்கை.

இதே மலைப்பகுதிகளில் சில பழங்குடி மக்களும் வாழ்ந்து வந்தனர். அவர்களுடைய தொழில் செம்மறியாடு, கழுதை உள்ளிட்ட கால்நடைகளை மேய்ப்பது. தரிசு நிலங்களில் வளர்ந்திருக்கும் புற்களை மேயவிடுவது. இதுதான் அவர்களது வாழ்க்கையாக இருந்தது.

1880களின் மத்தியில் இந்த நிலைமை மாறியது. நிலங்களை உரிமையாளர்களின் பெயரில் பதியச் சொன்னது ஓட்டோமான் பேரரசு. அந்த நிலங்களுக்கு வரிகளையும் வசூலிக்கத் தொடங்கியது. இதனால் மக்கள் தங்கள் நிலங்களை அங்குள்ள செல்வ வளமிக்க நபர்களிடம் விற்றனர். உழும் உரிமையை தாங்களே வைத்திருந்தனர். இந்த நிலைமை புதிதாக அந்த கிராமங்களில் குடியேறியவர்களால் மாறத் தொடங்குகிறது.

1878ஆம் வருடம். ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள் எனக் கூறிக்கொண்ட சிலர் நிலத்தைப் பெரிய தொகை கொடுத்து வாங்கினர். பிறகு அந்த நிலத்தைச் சுற்றி குடில்கள் அமைக்கப்பட்டன. அந்த இடத்தின் பெயர் பெட்டா திக்வா (Petah Tiqva) என்றாகிறது.

உள்ளூர் மக்களுக்கு வந்தவர்கள் யார் என்று தெரியவில்லை. பார்ப்பதற்கு வெளியூர்காரர்களைப் போல இருக்கிறார்கள். நாகரிகமாக உடை அணிந்திருக்கிறார்கள். ஆனால் ஏன் இந்த நிலங்களைச் சுற்றிக் குடில்கள் அமைக்கிறார்கள் என்பது புரியவில்லை.

வந்த சில ஆண்டுகளுக்குப் பிரச்னைகள் எதுவும் இல்லை. ஆனால் போகப்போக நிலத்தின்மீது அந்தப் புதியவர்கள் உரிமை எடுத்துக்கொண்டனர். நிலங்களைச் சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டன. அங்கே காலம் காலமாக விவசாயம் செய்து வந்த மக்கள் இனி விவசாயம் செய்யக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டன. கால்நடைகளை ஓட்டி வந்த நாடோடிகள் புதியவர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். இனி இந்த நிலம் எங்களுடையது. இதில் யாரும் விவசாயம் செய்யக்கூடாது.

1886ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்த வயல்களில் மேய்ப்பதற்காக கால்நடைகளை ஓட்டி வந்த பழங்குடி மக்களிடம் இருந்து பத்து கழுதைகளைப் புதியவர்கள் பறிமுதல் செய்தனர். இங்கேதான் பிரச்னை ஆரம்பமானது.

யார் நீங்கள்? எதற்காக எங்கள் கழுதைகளை பிடுங்குறீர்கள்? நாங்கள் என்ன பயிரிடப்பட்ட நிலத்திலேயா மேயவிட்டோம்? இது தரிசு நிலங்கள் அல்லவா? இதில்கூட கால்நடைகளை மேய்ப்பதற்கு உரிமை கிடையாதா? பழங்குடிகளுக்கும் – புதிதாக குடியேறியவர்களுக்கும் இடையே கைகலப்பு உண்டானது. பழங்குடிகளுடன் 50 விவசாயிகளும் இணைந்துகொண்டு புதிதாக வந்தவர்களுக்குப் பாடம் புகட்ட நினைத்து பிரச்னை பெரிதானது.

விஷயம் துருக்கிய அதிகாரிகளிடம் சென்றது. அவர்கள் படைவீரர்களை அனுப்பி குடியேறிகளை கோபக்கார கிராமத்தினரிடம் இருந்து காப்பாற்றினர். அடுத்த இரண்டு நாட்களில் விவசாயிகள் 31 பேரைத் துருக்கிய அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களுக்குத் தண்டனைகள் வழங்கப்பட்டன. இத்துடன் அந்தப் பகுதியில் அதுவரை பாரம்பரியமாக விவசாயம் செய்து வந்த கிராமத்தினரும் பழங்குடிகளும் வேறு பகுதிகளுக்கு விரட்டப்பட்டனர். இப்படியாகத் தொடங்குகிறது பாலஸ்தீனத்தின் ரத்தச் சரித்திரம்.

மேலே கூறியது ஒரு நிகழ்வு. 1878இல் ஒரு சிறிய கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வு. இந்தக் காட்சியின் விரிவடைந்த வடிவம்தான் இன்றைய பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்னை. பெட்டா திக்குவாவில் தொடங்கிய அந்தச் சண்டைதான் நூறு ஆண்டுகளாக பாலஸ்தீன மக்களுக்கும் குடியேறியவர்களுக்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இது கேட்பதற்கு விநோதமாகத் தோன்றலாம். ஆனால் அது அத்தனைச் சிறிய பிரச்னை இல்லை. இந்தச் சிறிய சண்டைக்குப் பின்னால் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா போன்ற நாடுகளின் தலையீடு இருந்தது. உலக நாடுகளின் சதுரங்கக் காய் நகர்த்தல்கள் இருந்தன. பல்வேறு தேசங்களுக்கு இடையேயான அரசியல் சந்தித்த இடம்தான் பாலஸ்தீனத்தில் நடைபெற்ற கைகலப்பு.

0

1517ஆம் ஆண்டு பாலஸ்தீனம் துருக்கியின் ஓட்டோமான் பேரரசின்கீழ் வந்தது. அடுத்த 400 ஆண்டுகள் துருக்கியர்களே அந்நிலத்தை ஆண்டனர். அதுவரை வரலாற்றில் தனி மாகாணமாக இருந்த பாலஸ்தீனம் துருக்கியர்களின் ஆட்சியில் அகண்ட சிரியா எனும் பெரும் நிலத்தின் ஒரு சிறிய பகுதியாகச் சுருங்கியது.

பாலஸ்தீனத்துக்கு என்று அப்போது வரையறுக்கப்பட்ட எல்லைகள் கிடையாது. அல்பேனியாவில் இருந்து எகிப்து வரையிலான தேசங்கள் ஓட்டோமான்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஓட்டோமான் ஆட்சியாளர்கள் தங்கள் பகுதிக்குக் கீழிருந்த நாடுகளின் எல்லைகளை மாற்றிக்கொண்டே இருந்தனர். ஒரு குறிப்பிட்ட பகுதியின் ஆட்சியாளரைப் பிடிக்கவில்லை என்றால் அந்த மாகாணத்தைத் துண்டுத் துண்டாகப் பிரித்து அருகில் இருக்கும் மாகாணங்களுடன் இணைத்து விடுவர். ஓர் ஆட்சியாளரைப் பிடித்துவிட்டால் அவர்களுக்குப் பரிசளிக்கும் விதமாகப் பல எல்லைகளை ஒன்றாக இணைத்து புதிய மாகாணமாக்கி அவரிடம் கொடுத்துவிடுவர். இதுதான் அன்றைய நிலை.

ஓட்டோமான்களின் ஆட்சியின்கீழ் இருந்த பகுதிகள் அனைத்தும் மாகாணங்களாக இருந்தன. மாகாணங்களுக்குக் கீழ் மாவட்டங்கள் இருந்தன. அந்த வகையில் ஜெருசலேம் என்பது ஒரு மாகாணம். அதன்கீழ் பாலஸ்தீனத்தின் தெற்கு பகுதிகள் இருந்தன. அந்த மாகாணத்தின் கட்டுப்பாட்டை நேரடியாக ஓட்டோமான்களே வைத்துக்கொண்டனர். பாலஸ்தீனத்தின் நேபுலஸும் ஏக்கரும் பெய்ரூட் மாகாணத்தின் மாவட்டங்களாக இருந்தன.

இந்த மாகாணங்கள் பொதுவாக உள்ளூர் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. இதனால் உள்ளூர் மக்களுக்கும் அந்த ஆட்சியாளருக்குக் கட்டுப்பட்டவர்களாகவே இருந்தனர். இதுதான் ஓட்டோமான்களின் நிர்வாக முறை.

பாலஸ்தீனத்தைப் பொறுத்தவரை ஓட்டோமான்களின் முழுக் கவனமும் ஜெருசலேமின்மீதே இருந்தது. மற்ற பகுதிகளில் எல்லாம் அவர்கள் அக்கறை காட்டவில்லை. அதனால் அந்தப் பகுதிகளில் வளர்ச்சி என்பது குறைவாகவே இருந்தது. ஓட்டோமான்களின் பொருளாதாரம் வீழத் தொடங்கிய நேரத்தில் பாலஸ்தீனம் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படாத நிலமாகவே இருந்தது.

அன்றைய பாலஸ்தீனத்தின் பிரதான தொழிலாக விவசாயமே இருந்தது. பாலஸ்தீன செல்வந்தர்களான ஓட்டோமான் அரசுக்குக்கீழ் பணியாற்றும் அதிகாரிகள், வணிகர்கள், தரகர்கள் எல்லாம் ஜெருசலேமில் வாழ, ஏழை விவசாயிகள், பழங்குடிகள் மட்டுமே கிராமப் பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.

பண்டைய பாலஸ்தீனத்தின் பாரம்பரியமாக ஒருவகை கூட்டுறவு விவசாய முறையே அமலில் இருந்தது. அதாவது விவசாயிகள் கூடி விவசாயம் செய்வர். பிறகு உற்பத்தி செய்யப்படும் பொருட்களைப் பிரித்துக்கொள்வர். 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் இந்த நிலைமை மாறத் தொடங்கியது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய ஓட்டோமான் பேரரசு, மாகாணங்களில் நடைபெறும் ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்த புதிய வருமான சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. இதன் ஒருபகுதியாக புதிய நிலச் சட்டம் 1858இல் அமலுக்கு வந்தது.

இந்தத் சட்டத்தின்படி பாலஸ்தீனத்தில் இருக்கும் நிலங்கள் அனைத்துக்கும் யாராவது ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்யப்பட்ட அந்த நபரிடம் இருந்து நிலத்துக்கான வரியை அரசு வசூலித்துக்கொள்ளும். இதுதான் திட்டம். ஆனால் பாலஸ்தீன விவசாய நிலங்களுக்கு என்று உரிமையாளர்கள் யாரும் கிடையாது அல்லவா? பிறகு யாருடைய பெயரில் பதிவு செய்வது?

அது மட்டுமில்லாமல் சாதாரண விவசாயிகளுக்கு வரி செலுத்தும் அளவுக்கு செல்வமும் இல்லை. இதனால் அவர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் பகுதியில் இருக்கும் செல்வந்தர்களுக்கும் கிராமத் தலைவர்களுக்கும் நிலங்களை விற்றனர். நிலங்கள் செல்வந்தர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டன. ஆனால் அந்த நிலத்தில் விவசாயம் செய்யும் உரிமையைத் தங்களிடமே விவசாயிகள் வைத்துக்கொண்டனர். நிலத்தில் விளையும் பயிர்களில் ஒரு கனிசமான பங்கு உரிமையாளர்களுக்குச் சென்றுவிடும். இதுதான் நடைமுறையாக மாறியது.

இந்த நிலங்களுக்குச் சொந்தக்காரர்கள் பெரும்பாலும் நகரங்களிலேயே வசித்து வந்தனர். அதனால் அவர்களுக்கு நிலத்துடன் நேரடி பந்தம் எதுவும் இல்லை. இதனால் அவர்கள் தங்கள் நிலங்களைச் சில ஆண்டுகளில் விற்கத் தொடங்கினர். ஆனால் யாரிடம் விற்பது? ஏழைகள் என்றால் செல்வந்தர்களிடம் விற்கலாம். விற்பதே செல்வந்தர்கள் அல்லவா?

இதற்கும் அப்போது அமலாகியிருந்த சட்டம் வழி வகை செய்துகொடுத்தது. அதன்படி ஓட்டோமான் ராஜ்ஜியத்தில் வாழ்பவர்கள் மட்டுமல்ல வெளிநாட்டவரும் நிலங்களை வாங்கிக்கொள்ளலாம் என்று உரிமை வழங்கப்பட்டது. இங்கேதான் சிக்கல் ஏற்பட்டது. நில உரிமையாளர்கள் விற்கும் நிலங்களை ஐரோப்பியர்கள் வாங்கத் தொடங்கினர். முதலில் பெய்ரூட் பகுதியில் இருந்த கிறிஸ்தவர்கள் நிலங்களை வாங்கினர். பிறகு செல்வம் படைத்த பிற அரேபியர்கள் நிலங்களை வாங்கினர். இப்படித்தான் ஐரோப்பாவில் வந்த யூதர்களும் பாலஸ்தீன நிலங்களை வாங்கத் தொடங்கினர்.

0

பாலஸ்தீனத்தின் துறைமுக நகரமான யோப்பாவில்தான் முதலில் யூதர்கள் வந்து இறங்கினர். சியோனியம் எனும் பதாகையின்கீழ் ஆயிரக்கணக்கில் பாலஸ்தீனத்துக்கு வந்த அவர்கள் ஜெருசலேமிலும் குடியேறத் தொடங்கினர்.

இந்தக் குடியேற்றங்களைத் தடுக்க ஓட்டோமான்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சொல்லப்போனால் அவர்கள் இந்தக் குடியேற்றத்துக்கு மறைமுகப் பங்களிப்பைச் செய்திருந்தனர். 1867ஆம் ஆண்டு நிறைவேற்றிய இன்னொரு சட்டம், அந்நிய முதலீடுகளை ஊக்குவிப்பதாக இருந்தது. இதனால் வெளிநாட்டினர் ஓட்டோமோன் பேரரசுக்கு உட்பட்ட நிலங்களை வாங்கி அங்கே வாழும் உரிமையை அவர்களுக்கு வழங்கி இருந்தது.

இந்தச் சட்டம்தான் சியோனியர்கள் பாலஸ்தீன நிலங்களை ஆக்கிரமிப்பதற்கான வழியையும் ஏற்படுத்திக்கொடுத்தது. முதல் சில வருடங்களில் மட்டும் இந்தக் குடியேறிகள் எட்டு விவசாய காலனிகளை உருவாக்கி இருந்ததாக வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அவர்களிடம் போதுமான அளவுக்குச் செல்வ வளம் இருந்தது. இதனால் யூதர்கள் பாலஸ்தீன நகரங்களில் புதிய வியாபாரங்களை உருவாக்கினர். ஆனால் அவர்கள் பாலஸ்தீன மக்களிடம் ஒற்றுமையாக இருக்கவில்லை. அவர்களை இரண்டாம் தரமாக நடத்தத் தொடங்கினர். யூதர்கள் பாலஸ்தீனர்களை எப்படி நடத்தினார்கள் என்பதைப் பிரபல யூத எழுத்தாளர் அஹத் ஹாம் (Ahad ha’am) இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘யூதர்கள் அரேபியர்களை எதிரிகளைப்போலக் கொடூரமாகவும் நடத்தினர். அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உரிமைகளை மறுத்தனர். காரணமே இல்லாமல் அவர்களைத் துன்புறுத்தினர். தங்களுடைய அருமை பெருமைகளை அவர்களிடம் தம்பட்டம் அடித்தனர். நம்மவர்கள் யாரும் இந்த இழிவான போக்கை எதிர்க்கவில்லை.’ இத்தனைக்கும் அஹத் ஹாம் சியோனியத் தலைவர்களுள் ஒருவர்.

இத்தகைய சூழலில்தான் பெட்டா திக்குவாவில் நாம் மேலே பார்த்த தாக்குதல் தொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அடுத்த சில ஆண்டுகளுக்கு இதேபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே யூதக் குடியேற்றங்களுக்கு அருகே நடக்கத் தொடங்கின. ரெஹோவோட் எனும் இடத்தில் 1892ஆம் ஆண்டு மிகப்பெரிய கலகமே வெடித்தது.

வளர்ந்து வரும் குடியேற்றங்களின் ஆபத்துகளை முதலில் உணர்ந்தது கிறிஸ்தவர்கள்தான். கத்தோலிக்கத் திருச்சபைகள் சியோனிய நடவடிக்கைகளுக்குக் கண்டனங்கள் தெரிவித்தன. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பாலஸ்தீனர்களுக்கு விபரீதம் புரியத் தொடங்கியது.

சியோனியர்களின் வருகைக்கு முன்பே பாலஸ்தீனத்தில் சிறுபான்மை யூதர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு அரேபியர்களுடன் எந்தச் சண்டை சச்சரவும் கிடையாது. அன்றைய நிலையில் கிட்டத்தட்ட 15000-20000 யூதர்கள் வரை இருந்ததாகத் தரவுகள் கிடைக்கின்றன. செபார்டிக் யூதர்கள் என அறியப்பட்ட இவர்களும் அரபு மொழி பேசியவர்கள்தாம். புதிய சியோனிய யூதர்களின் குடியேற்றம் இந்த யூதர்களையும் அச்சுறுத்தியது.

இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஐரோப்பியர்களுக்குத் துருக்கியர்கள் நிலங்களை விற்பனை செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று போரட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். இந்தப் போராட்டங்கள் கிராமங்களில் தொடங்கி சிறு நகரங்களுக்கும் பெரும் நகரங்களுக்கும் பரவத் தொடங்கின. ஒருவிதமான கொந்தளிப்பனா சூழல் பாலஸ்தீனத்தில் வளர்ந்துகொண்டிருந்தது.

செல்வம் படைத்த பாலஸ்தீனக் குடும்பங்களுக்கும் தங்களுடைய கட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக ஐரோப்பியர்கள் வசம் சென்றுகொண்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்த தொடங்கியிருந்தது. அவர்கள் அகண்ட சிரியாவில் இருந்த மற்ற சக்தி வாய்ந்த குடும்பங்களுடன் இணைந்து தங்களைப் பாதிக்கும் இந்த விஷயங்கள் குறித்து சுல்தான்களுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். ஆனால் 19ஆம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக துருக்கிய சுல்தான்களின் ஆதிக்கம் குறைந்து ஐரோப்பியர்களின் செல்வாக்கு அதிகரித்துக்கொண்டிருந்தது.

குறிப்பாக பிரிட்டனின் ஆதிக்கம் ஓட்டோமான்களின் பேரரசில் அதிகரித்து இருந்தது. 1881ஆம் ஆண்டு, முதல் சியோனிய குடியேறிகள் பாலஸ்தீனத்துக்கு வந்த அதே ஆண்டு பிரிட்டன் எகிப்தை ஆக்கிரமித்திருந்தது. அடுத்த இருபது ஆண்டுகளில் பிரிட்டன் துருக்கிய சுல்தான்களை தங்கள் போக்குக்கு ஏதுவாக நடக்கும் விதத்தில் மாற்றி இருந்தது.

துருக்கிய சுல்தான்கள் பிரிட்டன் பேச்சைக் கேட்பதா அல்லது பாலஸ்தீன செல்வந்தர்களின் பேச்சைக் கேட்பதா என்று குழப்பத்தில் இருந்தனர். அவர்கள் நிலையைச் சோதிக்கும் விதமாக 1903ஆம் ஆண்டு ஒரு சம்பவம் நடந்தது.

பாலஸ்தீனத்தில் குடியேறிய சியோனியர்கள் யோப்பாவில் ஆங்கிலோ – பாலஸ்தீன நிறுவனம் ஒன்றைத் தொடங்குவதற்கு துருக்கிய சுல்தான்களிடம் அனுமதி கோரி இருந்தனர். நிறுவனம் என்று சொல்லப்பட்டாலும் அது ஒரு தனியார் வங்கி. பாலஸ்தீனத்தில் இருக்கும் நிலங்களை சியோனியர்கள் வாங்குவதற்கு உதவக்கூடிய வகையில் ஏற்படுத்தப்பட்ட ஒரு வங்கி.

அந்த வங்கியைத் தடை செய்ய வேண்டும் என்று பாலஸ்தீனர்கள் சுல்தானிடம் வலியுறுத்தினர். சுல்தானும் முதலில் சம்மதம் தெரிவித்தார். ஆனால் அந்த வங்கிக்குப் பின்னால் பிரிட்டன் இருப்பதை அறிந்துகொண்ட சுல்தான் தனது ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்டு வங்கியை நிறுவ அனுமதி கொடுத்துவிட்டார். இந்த நடவடிக்கைகள் பாலஸ்தீனர்களை ஆத்திரப்படுத்தியது. சிலர் மிகக் காட்டமாக துருக்கிய ஆட்சியை விமர்சனம் செய்யத் தொடங்கினர்.

இந்தச் சமயத்தில்தான் இளம் துருக்கியர்கள் எனும் அமைப்பினர் 1908ஆம் ஆண்டு சுல்தானை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினர். இது பாலஸ்தீனர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தது.

பாலஸ்தீனத்தில் இத்தகைய சூழல் நிலவிய அதே காலத்தில் அரபு தேசிய எழுச்சியும் ஏற்பட்டு இருந்தது. அரேபிய மாகாணங்கள் முழுவதும் பல இயக்கங்கள் உருவாகி அரபு மக்களின் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தன. அரேபியர்கள் துருக்கிய பேரரசினை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்த அரபு தேசிய இயங்கங்களில் ஒன்றாக பாலஸ்தீனர்களும் இருந்தனர்.

அறிவுத்தளத்தில் இருந்தவர்கள் ஃபாலஸ்தீன், அல்-கர்மல் எனும் இரண்டு தினரிகளைத் தொடங்கி அதில் தங்கள் பிரச்னைகளைப் பேசத் தொடங்கினர். இந்தச் செய்தித்தாள்கள் சியோனியர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கத் தொடங்கின. குறிப்பாக ஐரோப்பியக் குடியேறிகளின் இயக்கங்களைப் பற்றிப் பொது மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பல கட்டுரைகளைப் பிரசுரிக்கத் தொடங்கின.

இந்தச் சமயத்தில் பாலஸ்தீனத்தின் மிகப்பெரிய நிலம் ஒன்று சியோனியர்களால் வாங்கப்பட்டது. இதை எதிர்த்து ஃபாலஸ்தீன் செய்தித்தாள், ‘இந்த நிலைமை தொடர்ந்தால் சியோனியர்கள் நமது நாட்டில் ஒவ்வொரு கிராமத்தையும், ஓவ்வொரு நகரத்தையும் உரிமைக் கொண்டாடுவார்கள். நாளைக்கு முழு ஜெருசேலமும் விற்கப்பட்டு, பாலஸ்தீனம் முழுவதும் அவர்களுக்குச் சொந்தமாகிவிடும்’ என்று எழுதியது.

1913ஆம் ஆண்டு யோப்பாவைச் சேர்ந்த பாலஸ்தீன வழக்கறிஞர் ஒருவர் சியோனியத்தை எதிர்ப்பதை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்ட தேசியக் கட்சி ஒன்றைத் தொடங்கினார். சியோனியர்களுக்கு எதிரான அமைப்புகள் பாலஸ்தீன நகரங்களான ஜெருசலேம், நேபுலஸில் தொடங்கப்பட்டன. எகிப்து, ஈராக்கில் இருந்தும் சில பாலஸ்தீன அமைப்புகள் செயல்பட்டன. இவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து நிதி திரட்டி சியோனியர்கள் ஆதிக்கத்துக்குச் செல்வதற்கு முன்பே அங்கிருந்த நிலங்களை வாங்க முயற்சி செய்தனர்.

அன்றைய பாலஸ்தீனத்தில் ஹுல்லா சதுப்பு எனும் இடத்தையும் சியோனியர்கள் வாங்க முற்பட்டனர். அந்த நிலம் அதிக கனிமங்கள் அடங்கிய இடமாகக் கருதப்பட்டது. இதனை சியோனியர்கள் வாங்க முயற்சிப்பதை எதிர்த்து திபேரியுவில் பாலஸ்தீனர்கள் போராட்டங்கள் நடத்தினர்.

பாலஸ்தீனத்தில் உள்ள அரபு மக்களுக்கும் சியோனிய குடியேற்றவாதிகளுக்கும் இடையேயான மோதல் வலுக்கவே, அறிவுத் தளத்தில் இருந்தவர்கள் மேலும் சியோனிய இயக்கங்களின் அசைவுகளைத் தீவிரமாகக் கண்காணிக்கத் தொடங்கினர்.

பாலஸ்தீன மாணவர்கள் சியோனிய ஆவணங்களை ஐரோப்பாவில் இருந்து பெற்று, அவற்றை மொழிபெயர்ப்பு செய்து ரகசியமாகப் பிரசுரித்தனர். இந்தப் பிரசுரங்களைப் படித்தபோதுதான் பாலஸ்தீனத்தில் நடப்பது வெறும் குடியேற்ற பிரச்னை இல்லை என்பது அவர்களுக்குப் புரிந்தது. சியோனியர்களின் இலக்கு என்ன என்பதும் அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தது.

சியோனியர்களின் நோக்கம் பாலஸ்தீன நிலத்தில் குடியேறுவது மட்டுமல்ல. பாலஸ்தீனத்தை முழுமையாக ஆக்கிரமித்து ஒரு யூத நாட்டை உருவாக்குவது. அதாவது பாலஸ்தீனம் எனும் நிலத்தை வரைபடத்தில் இருந்து அழித்துவிட்டு அவர்களின் கனவு தேசமான இஸ்ரேலை நிறுவுவது என்பது அப்போதுதான் பாலஸ்தீனர்களுக்குப் புரிந்தது.

0

யார் இந்தச் சியோனியர்கள்? அவர்கள் ஏன் பாலஸ்தீனம் வர வேண்டும்? அவர்களுக்குக் கீழ் யூதர்கள் ஏன் ஒன்று திரள வேண்டும்? சியோனியர்களுக்கு ஆதரவாக ஏன் பிரிட்டன் இருந்தது? பிரிட்டன் பேச்சை ஏன் ஓட்டோமான்கள் எந்த விமர்சனமும் இன்றி ஏற்றுக்கொண்டிருந்தனர்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்வது மூலமே அன்றைக்கு பாலஸ்தீனத்தை மையப்படுத்தி நடந்த அரசியலையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.

அன்றைய யூதர்களில் 75% பேர் ஐரோப்பாவில்தான் வாழ்ந்து வந்தனர். ஐரோப்பாவில் அப்போதுதான் தேசியவாதம் உதயமாகி வந்தது. இந்தக் கருத்து யூதர்களையும் வசீகரித்தது.

1789ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சி சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது. அந்தப் புரட்சிக்குப் பிறகு மனிதர்களின் அடிப்படை உரிமைகள் சட்டங்களாக மாற்றம் கண்டிருந்தன. சுதந்திரம், சொத்து, பாதுகாப்பு மற்றும் ஒடுக்குமுறைக்கான எதிர்ப்பு ஆகியவை அவர்களது உரிமைகளாகப் பார்க்கப்பட்டன. இந்தச் சட்டங்களால் யூதர்களும் பலன் அடைந்தனர். அடுத்த அரை நூற்றாண்டுகளாக யூதர்கள் சுற்றுப்புறத்தில் வாழும் மக்களுடன் இணைந்து வாழத் தொடங்கினர். அவர்களுக்கென்று தனி கலாசாரம் எதுவும் இல்லாமல் இருந்தது. ஐரோப்பிய மக்கள் எந்தக் கலாசாரத்தைப் பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்களின் ஒரு பகுதியாகவே யூதர்களும் மாறி இருந்தனர்.

இது அவர்களுக்கு சமூக அளவிலும் சட்ட அளவிலும் சமத்துவத்தைப் பெற்று தந்தது. அவர்கள் பல தொழில்களில் ஈடுபடவும், அதன்மூலம் வருமானம் ஈட்டுவதும் அதிகரித்து சமூகத்தில் யூதர்கள் என்றால் பெரும் செல்வந்தர்கள் எனும் நிலை உருவாகி இருந்தது. ஆனால் இது அனைத்தும் மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வாழும் யூதர்களுக்குத்தான்.

கிழக்கு ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் காட்சியே வேறாக இருந்தது. ஜார் மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த ரஷ்யாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் யூதர்களின் செல்வச் செழிப்பும் அங்கிருந்தவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி இருந்தது. யூதர்கள் என்றால் வணிகர்கள், இடைத்தரகர்கள், பணப் பிசாசுகள் என்னும் தோற்றம் உருவாகி இருந்தது. இதனால் அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் யூதர்களை வேண்டாத அந்நியர்களைப்போல பார்த்தனர். அவர்களுக்கு எதிராக அரசும் திட்டமிட்டு கட்டுப்பாடுகளையும், கலவரங்களையும் நடத்தி வந்தது.

1800ஆம் ஆண்டு இறுதியில் ரஷ்யாவில் நிலவுடமை கட்டமைப்பால் பொருளாதார பிரச்னைகள் சீர் தூக்கி இருந்தன. இதனால் ரஷ்ய மக்கள் அப்போது தங்களை ஆட்சி செய்துவந்த ஜார் மன்னர்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்துகொண்டிருந்தனர். இந்தக் கிளர்ச்சிகளை திசைத் திருப்புவதற்காக ஜார் மன்னர் யூதர்களுக்கு எதிராக படுகொலைகளைத் திட்டமிட்டு நடத்திக்கொண்டிருந்தார்.

ஜார் மன்னரின் அதிகாரிகள் திட்டமிட்டு இன துவேஷங்களைப் பரப்பினர். அங்கிருந்த யூதர்கள் ரஷ்ய வளங்களைச் சுரண்டுவதே மக்களின் வறுமைக்கும் திண்டாட்டத்துக்கும் காரணம் எனப் பரப்புரை செய்தனர். ஜார் மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ரகசிய காவல் அமைப்பு நிலமில்லா விவசாயிகள் யூதர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தூண்டிவிட்டது. இதனால் யூதர்கள் மீது ஆங்காங்கு தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

உண்மையில், ரஷ்யாவில் வாழ்ந்த பெரும்பாலான யூதர்கள் நிலையும் அன்று பரிதாபமானதாகவே இருந்தது. அவர்களில் பலர் வறுமையில் வாடிக்கொண்டிருந்தனர். அவர்கள்மீதுதான் இந்தத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன. இந்தச் சூழல் யூதர்களை ரஷ்யாவை விட்டு வெளியேறும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. இந்தக் காலகட்டம்தான் ரஷ்யாவில் சியோனிய அமைப்புகள் பரவுவதற்கும் காரணமாக இருந்தன.

தொடக்கத்தில் தோன்றிய சியோனிய அமைப்புகளுக்கு எந்த அரசியல் கொள்கைகளும் கிடையாது. அவர்கள் மதப் பிரசாரங்களையே செய்துவந்தனர். அந்த சியோனிய அமைப்புகள் யூதர்களின் இன்னல்கள்தீர யூதர்கள் தாய்நிலம் திரும்புவதே வழி என்று சொல்லி வந்தன. இந்தக் கருத்து அவர்களுடைய மத நம்பிக்கை அடிப்படையிலானது. இஸ்ரேலில் இருந்து குடிபெயர்ந்த யூதர்களை மீண்டும் தாய்நிலம் நோக்கி அழைத்து வர ஒரு தூதுவர் வருவார் என்பது அவர்களது நம்பிக்கை. அந்த அடிப்படையில் சொல்லப்பட்ட கருத்துகளே ஆரம்பத்தில் பிரசாரம் செய்யப்பட்டன.

ரஷ்யப் படுகொலைகளுக்கு அஞ்சிய மக்களை மூளைச்சலவை செய்யும் வேலைகளைதான் அவை செய்து வந்தன. இஸ்ரேல் சென்று அங்கு தாவீது மற்றும் சாலமான் மன்னர்கள் உருவாக்கிய யூத அரசை நாமும் நிறுவலாம் என்று கூறி வந்தன. ஆனால் ரஷ்ய யூதர்கள் இந்த மதகுருமார்களின் பேச்சைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை.

தங்கள்மீது நடத்தப்படும் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க அவர்கள் கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி மேற்கு ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவுக்கும்தான் குடிபெயர்ந்துகொண்டிருந்தனர். 1900களில் மட்டும் கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்ட யூதர்கள் அமெரிக்காவில் குடிபெயர்ந்தனர்.

அதே வருடத்தில் புதிய பொருளாதார நெருக்கடி ஒன்று ரஷ்யாவை உலுக்கியது. 1901 முதல் 1903 வரை மட்டும் 3000க்கும் மேற்பட்ட வணிகங்கள் இழுத்து மூடப்பட்டன. பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து நடுத்தெருவில் நின்றனர். ஒருபக்கம் வேலையிழப்பு, மறுபக்கம் பசி என்று நரக வேதனையாக ரஷ்ய மக்களின் வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது.

அப்போது வேலையில் இருந்த ஊழியர்களுக்கும் சம்பளம் குறைக்கப்பட்டது. இதையடுத்து பெரும் நகரங்களில் பல இடங்களில் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன. மற்றொரு பக்கம் கிராமங்களில் நிலமில்லா விவசாயக் கூலிகள் நிலம் கேட்டு போராடிக் கொண்டிருந்தனர். இவர்கள் அனைவரையும் ஜார் மன்னரின் படையினர் ஒடுக்கிக் கொண்டிருந்தனர்.

இந்தச் சமயத்தில்தான் ரஷ்யாவில் புரட்சிகர இயக்கங்கள் பெரும் அளவில் தோன்றத் தொடங்கின. அவர்கள் ஜார் மன்னரை அரியணையில் இருந்து தூக்கியெறிந்துவிட்டு ஜனநாயக அரசை நிறுவும் லட்சியத்தை முன்வைத்து இயங்கிக்கொண்டிருந்தனர்.

இந்தச் சூழலைத் திசைத்திருப்ப மீண்டும் ஜார் மன்னர் மூன்றாம் நிகோலஸும், அவரது உள்துறை அமைச்சரான வென்சல் வான் ப்ளேவும் இணைந்து புதிய யூதப் படுகொலைகளைத் திட்டமிட்டனர்.

ஏப்ரல் 6, 1903 அன்று ஜார் மன்னரின் ஆதரவாளர்கள் சிலர் கிஷினேவ் எனும் இடத்தில் இருந்த யூதக் கடைகளையும் வீடுகளையும் நாசப்படுத்தினர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் இரண்டு நாட்களில் 46 யூதர்கள் கொல்லப்பட்டனர். 86 யூதர்கள் கை, கால்கள் உடைக்கப்பட்டு சாலையில் வீசப்பட்டனர். குழந்தைகளைக்கூட விட்டுவிடாமல் அடித்துக் கொலை செய்யும் சம்பவங்களும் அரங்கேறின.

இந்தச் சமயத்தில்தான் சியோனிய அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட்டு யூதர்களை ரஷ்யாவை விட்டு வெளியேறும்படி வலியுறுத்தத் தொடங்கின. அவர்கள் பாலஸ்தீனம் சென்று குடியேற வேண்டும் என அறிவுறுத்தின. அப்போது சியோனியர்களுக்கு என்று ஒரே ஒரு செய்தித்தாள் மட்டுமே இத்திய (Yiddish) மொழியில் இயங்கி வந்தது. அப்போது இத்திய மொழி மட்டுமே பெரும்பாலும் ரஷ்ய, கிழக்கு ஐரோப்ப யூதர்கள் பேசும் மொழியாக இருந்தது. ஹீப்ரு எல்லாம் அப்போது யூதர்களால் பேசப்படவில்லை.

ரஷ்யாவில் எல்லாச் செய்தித்தாள்களையும் தடை செய்திருந்த ஜார் அரசு சியோனிய செய்தித்தாளை மட்டும் தடை செய்யவில்லை. காரணம், இரு தரப்புக்கும் ஒன்று மட்டுமே இலக்காக இருந்தது. அது யூதர்கள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என்பது.

பாதிக்கப்படும் யூதர்களுக்கு ஆதரவாக அப்போது புரட்சிகர இயக்கங்களும் குரல் கொடுத்து வந்தன. ஆனால் அவர்கள் சியோனிய கருத்துகளையும் எதிர்த்து வந்தனர். அப்போது பண்ட் (Bund) எனப்படும் யூதர்கள் இடம்பெற்ற சோசியலிச அமைப்பு ஒன்று புரட்சிகர இயங்களின் ஒரு பகுதியாக இயங்கி வந்தது. அந்த அமைப்பு யூதர்கள் பற்றிய சியோனிய லட்சியங்களைக் கடுமையாக எதிர்த்தது. சியோனியர்களின் தாய்வீடு திரும்பும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பண்ட், ‘நமது முன்னோர்கள் மிகவும் சாதுவானவர்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர்கள் தங்கள் சுற்றுவட்டார மக்களுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலத்தில் கலாசார வளர்ச்சி யூதர்களின் வியர்வையால் நீரூற்றப்பட்டு, அவர்கள் சிந்திய ரத்தத்தாலும் எலும்பும் சதையும் கொண்ட உழைப்பாலும் ஏற்பட்டு இருக்கிறது. இது நாம் பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் நிலம். நாம் ஆயிரத்துக்கும் அதிகமான பிணைப்புகளால் இந்த நிலத்துடன் இணைந்துள்ளோம். இதுதான் நமது வீடு. தாயகம் என்பது வேறு தேசத்தில் இல்லை’ என்று எழுதியது.

மேலும் யூதர்களுக்கு எதிரான மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தீர்வையும் பண்டின் ஐந்தாவது கூட்டமைப்பு முன்வைத்தது. அது, ‘எல்லாத் தேசிய இனங்களையும் சேர்ந்த பாட்டாளி வர்க்க மக்கள் ஒன்றிணைந்து போராடுவதே கிஷ்னெவ் படுகொலை போன்ற நிகழ்வுகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்த சூழலை அழிக்க உதவும்’ என்றது. சமூகப் புரட்சி ஒன்றே எல்லா இனத்தினருக்கும் எதிரான துவேஷங்களை அகற்றும் என்று புரட்சிகர இயக்கங்களும் வாதாடின.

போல்ஷ்விக் கட்சியின் தலைவரான விளாதிமிர் லெனின் யூத வெறுப்புக்கு எதிராக தனது ஆதரவாளர்களை திரட்டினார். ஜார் மன்னரின் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டிய அவர், ‘ஜார் காவல்துறை நில உரிமையாளர்களுடனும் முதலாளிகளுடன் கூட்டணி வைத்துகொண்டு யூதர்களுக்கு எதிரான படுகொலைகளைத் திட்டமிடுகிறது. நில உரிமையாளர்களும் முதலாளித்துவர்களும் தங்களுக்கு எதிரான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பு மனநிலையை யூதர்களுக்கு எதிராகத் திருப்புகின்றனர். யூதர்கள் உழைக்கும் மக்களுக்கு எதிரிகள் கிடையாது. உழைப்பாளர்களின் உண்மையான எதிரிகள் எல்லா நாடுகளிலும் இருக்கும் முதலாளித்துவம்தான்’என்றார்.

உண்மையில் புரட்சிகர அமைப்பின் செயல்பாடுகள் ரஷ்ய யூதர்களுக்கு நம்பிக்கையளித்தது. அவர்கள் கூட்டம் கூட்டமாக புரட்சிகர அமைப்புகளில் இணைந்தனர். ஆனால் இது ரஷ்யாவில் இயங்கிய சியோனிய அமைப்புகளுக்குப் பெரும் கவலையை உருவாக்கின. 1903ஆம் ஆண்டு சைம் வைஸ்மென் எனும் ரஷ்ய சியோனிய உறுப்பினர் அப்போதைய சர்வதேச சியோனிய அமைப்பின் தலைவர் ஹெர்சலுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், ’ரஷ்ய சியோனிய அமைப்பு இங்கு தோல்வி அடைந்துவிட்டது. இளம் யூதர்களை ஈர்ப்பதில் அது வெற்றியடையவில்லை. இங்கு இருக்கும் பெரும்பான்மையான இளைஞர்கள் சியோனியத்தை எதிர்க்கின்றனர். இதற்குக் காரணம் அவர்கள் புரட்சிகர மனநிலையில் இருக்கின்றனர். கிட்டத்தட்ட அனைத்து யூத மாணவர்கள் அமைப்புகளும் புரட்சிகர அமைப்புக்கு பின்னால் இருக்கின்றன’ என்றார்.

1903ஆம் ஆண்டு கிஷினெவ் படுகொலைகள் நடந்து முடிந்து ஒரு மாதம் கழித்து மே மாதம் ஹெர்சல் ரஷ்யாவிற்கு வருகை புரிந்தார். அவர் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட யூதர்களைச் சந்திக்கவில்லை. மாறாக இந்தப் படுகொலைகளுக்கு காரணமான உள்துறை அமைச்சர் வென்சல் வான் பிளேவைச் சென்று சந்தித்தார். சரி, கண்டனம் தெரிவிப்பதற்கு அவர் அங்கு சென்றாரா என்றால் அதுவுமில்லை. மாறாக ஜார் மன்னரின் உதவியை நாடியே அவர் வந்திருந்தார்.

அவருடைய கோரிக்கை இதுவாகத்தான் இருந்தது. துருக்கிய சுல்தான் பாலஸ்தீனத்தில் சியோனியக் குடியேற்றத்தைத் தாமதப்படுத்துகிறார். மாண்புமிகு ஜார் மன்னருக்கு துருக்கிய சுல்தானுடன் நல்ல உறவு இருக்கிறது. இதனால் அவர் சியோனியர்கள் சார்பில் சுல்தானிடம் பேசினால் யூதக் குடியேற்றம் வேகம் எடுக்கும். ஜார் மன்னர் அவ்வாறு செய்யும் பட்சத்தில் அவருக்கு உதவியாக நடைபெறும் சியோனிய காங்கிரஸில் யூதர்களுக்கு எதிராக ஜார் மன்னர் நிகழ்த்திய படுகொலைகள் எதுவும் பேசப்படாது. இதுவே எனது கோரிக்கை என்றார்.

இதற்கு ஜார் மன்னரும் சம்மதிக்க, ஹெர்சல் சொன்னவாரே செய்தார். 6வது சியோனிய காங்கிரஸில் ரஷ்யாவின் யூத வெறுப்பு குறித்து எந்த ஒரு கண்டனமும் எழவில்லை. ஐரோப்பாவில் நிலவும் யூத வெறுப்பு குறித்து மட்டுமே பேசப்பட்டு, அதற்கு தீர்வாக யூதர்கள் தாய்நிலம் திரும்பும் தீர்வு வழக்கம்போல் முன்வைக்கப்பட்டது.

இங்கே ஒரு கேள்வி வரலாம். சியோனியம் யூதர்களை அவர்கள் துயரங்களில் இருந்து மீட்கும் அமைப்பு அல்லவா? ஹெர்சல் யூதர்களின் பாதுகாவலர் அல்லவா? பிறகு ஏன் அவர் ஜார் மன்னருடன் இணங்கிச் சென்றார்? இதற்குப் பின்னால்தான் சியோனியம் உண்மையில் யாருக்கான அமைப்பு என்ற உண்மை மறைந்திருக்கிறது. அதைத் தெரிந்துகொள்வதற்கு முன் நாம் ஹெர்சலைப் பற்றியும் பார்த்தாக வேண்டும்.

1839ஆம் ஆண்டில் இருந்தே சியோனியம் எனும் கொள்கை ஆரம்பமாகிவிட்டது. நாம் முன்பே பார்த்ததுபோல் சில யூத ரபிமார்கள் இணைந்து தாய் நிலம் திரும்புவதற்கான தீர்வை முன்வைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் மத ரீதியான முன்னெடுப்பாகவே அவை இருந்தன. 1880களில் ரஷ்யப் படுகொலைகள் காலகட்டத்திற்குப் பிறகுதான் இந்தக் கொள்கை தீவிரமெடுத்தது. சியோனின் காதலர்கள் (Hibbaat Zion) எனும் அமைப்பு பல்வேறு சமூக, அரசியல் முன்னெடுப்புகளின்மூலம் தங்கள் கொள்கையைப் பரப்பிக்கொண்டிருந்தது. ரஷ்யாவின் கொடூர நிலையில் இருந்து தப்பிக்க இஸ்ரேலை நிறுவுவதே தீர்வு எனச் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் அப்போது இருந்த அமைப்புகள் எதுவும் பாலஸ்தீனத்தை யூதர்களின் நிலம் என முன்வைக்கவில்லை.

இந்தச் சமயத்தில் பிஐஎல்யூ (BILU) எனும் உக்ரைனைச் சேர்ந்த சியோனிய அமைப்புதான் முதன்முதலில் பாலஸ்தீனத்தை முன்வைத்து அங்கே விவசாய நிலங்களை கைப்பற்றி யூத குடியிருப்புகளை நிறுவும் திட்டத்தைத் தீட்டியது. முதலில் 14 யூதர்கள் மட்டும் உக்ரைனில் இருந்து கிளம்பி பாலஸ்தீனம் சென்றனர். பின்பு அங்கிருந்த நிலையை தாக்குப் பிடிக்க முடியானல் திரும்பி தங்கள் நாட்டிற்கே வந்தனர்.

இதே சமயத்தில்தான் மேற்கூறிய அமைப்புடன் இணைந்து மற்ற சியோனிய அமைப்புகளும் பாலஸ்தீனத்தில் யூதக் குடியிருப்புகளை நிறுவத் தொடங்கின. 1882ஆம் ஆண்டு முதல் குடிபெயர்வு (First Aliyah) எனப்படும் குடியேற்றம் தொடங்கியது.

1882 முதல் 1903 வரையிலான காலகட்டங்களில் கிட்டத்தட்ட 25,000 யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறினர். இவர்களுக்கு மேற்கு ஐரோப்பாவில் இருந்த ரோத்ஷீல்ட் போன்ற பணக்கார யூதர்கள் நிதியுதவி செய்தனர். ஆனாலும் இந்தக் குடியேற்றத்திற்குப் பிறகு எந்த ஒரு திட்டமிட்ட அரசியல் இலக்கும் இல்லை. மேலும் குடிபெயர்ந்தவர்கள் இடையே ஒற்றுமையும் இல்லை. ஆனால் இது ஒன்றே அப்போதைக்கு யூதர்கள் வாழ்வில் விளக்கேற்றும் வழி என்று சியோனிய இயக்கங்கள் நம்பிக்கொண்டிருந்தன.

ஆனால் இந்த வழிமுறை தவறு என்று ஒருவர் அடித்துப் பேசினார். பழைய மத சாத்திரங்களில் கூறப்பட்டதுபோல தேசத்தை உருவாக்க முடியும் என்று யூதர்கள் நம்புவது முட்டாள்தனம். யூதக் குடியிருப்புகள் தன்னிச்சையாக நடைபெறுவதால் ஒரு தனித்த தேசத்தை உருவாக்க முடியாது. அதற்கு வேறு ஒரு வழி இருக்கிறது என்றார். அது என்ன வழி என்பதை வெறும் 30,000 வார்த்தைகள் கொண்ட ஒரு சிறிய புத்தகத்தில் எழுதி வெளியட்டார். அவ்வளவுதான், யூதர்கள் அனைவரும் தங்களை இஸ்ரேல் நோக்கி அழைத்துச் செல்லும் தேவ தூதரை கண்டுகொண்டதாக பூரிப்படைந்தனர். அவர் எழுதிய நூலை வேத வாக்காக பாதுகாத்தனர். அந்த நூலின் பெயர் ‘The Jewish State’ அதை எழுதியவைன் பெயர் தியோடோர் ஹெர்சல்.

0

நவீன அரசியல் சியோனியத்தின் தந்தை என அழைக்கப்படும் ஹெர்சல் ஹங்கேரியில் வசதி வாய்ப்பான குடும்பத்தில் பிறந்தவர். நல்ல படிப்பாளி. மாணவர் பருவத்தில் இருந்தே ஆஸ்திரியப் பகுதிகளில் நிலவும் யூத வெறுப்பு குறித்து அவருக்கு பரிச்சயம் இருந்தது. ஆனால் நேரடியாக அவர் வாழ்க்கையில் அனுபவித்தது இல்லை. ஹெர்சல் படித்து வழக்கறிஞரானவுடன் யூதர் எனும் ஒரே காரணத்திற்காக ஆஸ்திரிய அரசாங்கத்தில் கிடைக்கவிருந்த உயரியப் பொறுப்பு அவருக்குக் கிடைக்காமல் போனபோதுதான் அதன் தாக்கத்தை அவர் நேரடியாக உணர்ந்தார். ஆனால் அப்போதும் அவர் யூதச் செயற்பாட்டாளராக மாறவில்லை. வியன்னாவைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று அவரை பாரிஸின் பத்திரிகையாளராக நியமித்தவுடன்தான் அவரது சமூக வாழ்வு தொடங்குகிறது. அங்குதான் அவர் சியோனியவாதியாக மாறுகிறார்.

1895ஆம் ஆண்டு பிரெஞ்சு ராணுவத்தில் உயர் பொறுப்பில் இருந்த ஆல்ஃபிரட் டிரேஃபஸ் எனும் யூத ராணுவ அதிகாரி ஒருவரின் மீதான குற்ற வழக்கை ஹெர்சல் கண்காணிக்க நேரிட்டது. அந்த அதிகாரி பிரெஞ்சு நாட்டுக்கு எதிராக உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டவர். பிரெஞ்சு வலதுசாரி அமைப்புகள், அந்நாட்டின் தாராளவாத அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ராணுவத்தை உடைக்க வேண்டும் என்று நினைத்து டிரேஃபஸ்குக்கு எதிராகத் தீவிரப் பரப்புரைகளை செய்தன. இதன் அடிநாதமாக அரசியல் ரீதியான யூத வெறுப்பும் இருந்தது.

வலதுசாரி அமைப்புகள் சமூகத்தின் பிரச்னைகள் எல்லாவற்றுக்கும் அரசாங்கம் மற்றும் தொழில்களில் இருக்கும் யூதர்களே காரணம் எனப் பரப்புரை செய்தன. ஊழியர்களின் வேலைநிறுத்தங்களில் இருந்து ராஜ தூரகம் வரை அத்தனைக் கணக்குகளையும் யூதர்களின் மேலேயே எழுதின. இந்தச் சமயத்தில்தான் டிரேஃபஸ் உளவாளி எனக் குற்றம்சாட்டப்பட்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு தண்டனை அளிப்பதற்காக நடைபெற்ற விசாரணை நிகழ்வில் கூடியிருந்த மக்கள், ‘துரோகி சாக வேண்டும். யூதன் சாக வேண்டும்’ எனக் கோஷமிட்டனர். இதுதான் ஹெர்செல்லின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. இத்தனைத் தீவிரமாக யூதர்களின் மீது வெறுப்பு கட்டவிழ்க்கப்படுவதை அவர் உணர்ந்தார்.

ஆனால் அவருடைய எண்ணம் எல்லா யூதர்களையும் உள்ளடக்கியதாக இல்லை. இந்த வெறுப்பினால் ஐரோப்பாவில் இருக்கும் யூதர்களின் செல்வ வளங்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றே அவர் கருதினார். இதன்பிறகு அவர் எழுதிய யூத தேசம் எனும் புத்தகத்தில்தான் இத்தகைய யூத வெறுப்பை அழிப்பதற்கு தனி யூத நாட்டை உருவாக்குவதுதான் ஒரே தீர்வு என முன்மொழிந்தார்.

ஐரோப்பாவை அவர் அந்நிய தேசம் எனக் கருதினார். இந்தச் சமயத்தில்தான் ரஷ்யாவில் இருந்தும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்தும் ஏராளமான யூதர்கள் மேற்கு ஐரோப்பாவிற்கு வந்துகொண்டிருந்தனர். இந்த யூதர்களின் வருகை கூட அங்கே செல்வ செழிப்புடன் வாழும் யூதர்களின் வாழ்க்கையை சீர் குலைத்துவிடும் என்றுதான் அவர் கவலைப்பட்டார். இதனால் பணக்கார, நடுத்தர வர்க்க யூதர்கள் எல்லாம் இணைந்து யூத நாட்டை உருவாக்கும் இயக்கத்திற்கு போராட வேண்டும். அல்லது தங்கள் ஆதரவையாவது தெரிவிக்க வேண்டும் என்றார். ஏழை யூதர்களையும் நம் திட்டத்தில் இணைத்துக்கொண்டால் குடியேற்றம் நிகழ்த்துவது சுலபமாகிவிடும் என்பதால்தான் அவர் சியோனிய அமைப்பை ஏழை யூதர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என எண்ணினார்.

சியோனியம் ஏழைகள், உழைக்கும் வர்க்க யூதர்களின் பாதுகாவலன் என்று சொல்லிக்கொண்டாலும் அது ஐரோப்பாவில் இருந்த மத்தியதர, மேல்தட்டு யூதர்களுக்கு உதவும் நோக்கில் செயல்பட்டு வந்தது.

நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல் ரஷ்யாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் யூதர்கள் நிலை மோசமாக இருந்தாலும் மேற்கு ஐரோப்பாவில் அவ்வளவு மோசமாக இல்லை. அவர்கள் வசதி வாய்ப்புடனே வாழ்ந்து வந்தனர். பலர் தொழில், வணிகம், பொருளாதாரம் ஆகியவற்றில் உயரிய சமூக நிலையில் இருந்தனர்.

ரஷ்யாவில் ஜார் மன்னர்களின் தாக்குதலுக்கு உள்ளான யூதர்கள் மேற்கு ஐரோப்பாவிற்கு குடிபெயரத் தொடங்கினர். இது செல்வம் படைத்த யூதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. அவர்கள் மீதான வெறுப்பு தங்கள்மீதும் படருமோ என அவர்கள் பயந்தனர். இதற்காகத்தான் தனியாக ஒரு யூத தேசத்தை நிறுவ வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினர்.

சர்வதேச சியோனிய அமைப்பு முதல் சியோனிய காங்கிரஸால் சுவிட்சர்லாந்தில் பேசல் எனும் இடத்தில் 1897ஆம் ஆண்டு உதயமானது. அந்தக் கூட்டத்தின் ஒரே குறிக்கோள் இதுதான். ‘பொதுச் சட்டத்தால் பாதுக்காக்கப்பட்ட ஒரு தாய்வீட்டினை யூத மக்களுக்காக உருவாக்க வேண்டும்.’

சர்வதேச சியோனிய அமைப்பின் முதல் தலைவரான தியோடர் ஹெர்சல் பேசியபோது இவ்வாறு குறிப்பிட்டார். ‘நாடு என்பதைத்தான் நாம் வீடு என்று நாசுக்காகச் சொல்கிறோம். நமது மக்கள் வீடு என்பதை நாடு என்றுதான் படிப்பார்கள்’ என்றார்.

ஹெர்சல் பாலஸ்தீனம் அல்லது அர்ஜெண்டினாவைத்தான் முதலில் யூத நாடாக தேர்ந்தெடுத்தார். ஆனால் அவர் எந்த குறிப்பிட்ட காரணங்களுக்காகவும் பாலஸ்தீனத்தில் ஆர்வம் செலுத்தவில்லை. ரஷ்யாவில் இருக்கும் சியோனிய அமைப்புகளைப்போல் அவர் பாலஸ்தீனத்தைத் தாய்வீடு என்றெல்லாம் கூறவில்லை.‘ஒரு வாக்களிக்கப்பட்ட நிலம் இருக்கிறது என்பதை மட்டும்தான் நான் கூறுவேன். அது எங்கே இருக்கிறது என்று இப்போது என்னால் சொல்ல முடியாது’என்று அவர் தெளிவாகவே சொன்னார்.

அவர் பேசி வந்த சமயத்தில்தான் யூதர்களின் முதல் குடிப்பெயர்வு நிகழ்ந்திருந்தது. இந்தக் குடிபெயர்வு எந்த ஒரு பலனையும் தராது என்றும் அவர் தீர்க்கமாகச் சொன்னார். காரணம், ஒரு குடிப்பெயர்வு ஓர் அதிகார வர்க்கத்தின் ஆதரவில் நடைபெற்றால் மட்டுமே நிலைக்கும் என்பது அவர் நிலைப்பாடாக இருந்தது.

‘யூதர்கள் கட்டமைக்கப்போகும் தேசம், சக்திவாய்ந்த ஒரு தேசத்தின் ஆதரவில் நடைபெற வேண்டும் அப்போதுதான் அந்தத் தேசம் நிலையானதாக இருக்கும். சக்தி வாய்ந்த தேசம் என்றால் இப்போது அது ஐரோப்பிய தேசமாகத்தான் இருக்க வேண்டும். ஒரு ஐரோப்பிய தேசம் நமக்கு ஆதரவு தர வேண்டும் என்றால் நாம் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப சேவையாற்ற வேண்டும்’ என்று கூறினார்.

இந்த அவதானிப்பு, இந்தப் பார்வைதான் மற்ற சியோனிய இயக்கங்களில் இருந்து அவரது இயக்கத்தை வேறுபடுத்திக் காட்டியது. இதுதான் யூதர்களுக்கு ஹெர்சலின் முக்கியமான பங்களிப்பாகவும் கருதப்படுகிறது. ஹெர்சலின் நூல் சியோனியம் தங்களுக்குத் தேசத்தைப் பெற்றுத்தரும் என்று யூதர்கள் அனைவரையும் நம்ப வைத்தது. அவர் பின்னால் அத்தனை ஐரோப்பிய யூதர்களும் திரண்டு நின்றனர். அடுத்ததாக அவர் செய்ய வேண்டி இருந்தது ஐரோப்பிய ஆட்சியாளர்களின் ஆதரவைத்தான்.

முதலில் யூதர்களைத் தன் பின்னால் திரட்டிய ஹெர்சல் அடுத்ததாக தங்களுக்கு ஆதரவாக ஓர் ஐரோப்பிய பேரரசைத் தேடத் தொடங்கினார். ஐரோப்பியர்கள் தங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்றால் முதலில் தங்களால் அவர்களுக்கு ஏதாவது ஒரு பயன் இருக்க வேண்டும் என்று அவர் நம்பினார். என்ன பயன் இருக்கும் என தேடியபோதுதான் அவருக்கு ஏகாத்தியபத்தியம் எனும் வழி தோன்றியது. அதே பலனுக்காகத்தான் அவர் பாலஸ்தீனத்தையும் தேர்வு செய்தார்.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் முதலாளித்துவத் தொழிற்சாலைகளுக்கு இடையேயான கொடூரமான போட்டி தனியாதிக்கங்கள் (Monopolies) உருவாக வழி வகுத்தன. இந்தப் புதிய தனியாதிக்க நிறுவனங்கள் அவற்றில் வேலைபார்க்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களால் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தன. கூலி மற்றும் வேலையிழப்புக்கு எதிரான போராட்டங்கள் முதலாளித்துவ அமைப்புக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தன.

1880களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் ஊடாக சோசியலிச இயக்கங்கள் வேகமாக வளர்ந்தன. வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்குக் காரணம் முதலாளித்துவத்தின் தோல்வியே என அவை எடுத்துரைத்தன. இந்த முதலாளித்துவ சமூக முறையால் மக்கள் அடிப்படை தேவைகளைக்கூடப் பெற முடியாத நிலையில் இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டின.

தனியாதிக்க நிறுவனங்கள் ஆடைகள், உருக்கு கம்பிகள் போன்ற ஏராளமான பண்டங்களைக் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் உற்பத்தி செய்தன. ஆனால் அதனை விற்க முடியாமல் அந்தப் பொருட்களின் விலைகள் விழும்போது தொழிற்சாலைகள் இயங்காமல் மூடப்பட்டன. இதனால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. தொழிலாளர்களும் வேலையில் இருந்து தூக்கப்பட்டு, பணம் இல்லாமல் திண்டாடினர்.

இது அரசுக்கு எதிராகவே திரும்பும் நிலையை உருவாக்கியது.

இதனால் தனியாதிக்க நிறுவனங்கள் தங்கள் எல்லைகளை விரிவாக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டன. அவர்களால் விற்க இயலாத பண்டங்களை விற்பதற்குச் சந்தைகளைத் தேட வேண்டும் என நிர்பந்தம் ஏற்பட்டது. அவர்களுடைய மூலதனத்தை முதலீடு செய்ய புதிய இடங்களைக் கண்டடையும் தேவை தோன்றியது. மூலப் பொருட்களுக்கும், குறைந்த கூலிகளுக்கும் அவர்களுக்கு ஆட்கள் தேவைப்பட்டன. அதனால் ஐரோப்பியர்கள் பிற நாடுகளை ஆக்கிரமிக்க கிளம்பினர்.

ஐரோப்பிய ஆதிக்கச் சக்திகள் தேசங்களைக் கைப்பற்றுவதற்குப் புதிய வழிகளைத் தேடிக்கொண்டிருந்தன என்பதை ஹெர்சல் உணர்ந்திருந்தார். இதற்கான ஒரு வழியாக சியோனியக் குடியேற்றத் திட்டங்கள் இருக்குமானால் அவற்றுக்கு ஐரோப்பிய தேசங்கள் உதவும் என்று உறுதியாக நம்பினார்.

சியோனியம் எப்படி ஏகாதியபத்தியங்களின் இரண்டு முக்கியத் தேவைகளுக்கு உதவும் என்று அவர் கூறினார். ‘என்னுடைய இயக்கம் இரண்டு வழிகளில் உங்களுக்கு உதவும். முதலில் யூத உழைக்கும் வர்க்க மக்களைப் பிற மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தி, அவர்களின் கூட்டமைப்பை நீர்த்துப்போகவைக்கும். இரண்டாவது நீங்கள் சர்வதேச மூலதனத்தை உற்பத்தி செய்ய பயனளிக்கும்’ என்றார்.

தொடக்கத்தில் இந்த ஐரோப்பிய நாடுகளுடன்தான் கூட்டணி வைக்க என்று அவருக்கு எந்தத் திட்டமும் இல்லை. அவருக்கு ஆப்ரிக்காவை ஆக்கிரமித்த பிரிட்டன் தொழிலதிபர் செசில் ரோட்ஸ்மீது நல்ல அபிமானம் இருந்தது. இதனால் அவர் முதலில் ரோட்ஸை அணுகினார். ரோட்ஸ் அப்போது தென் ஆப்ரிக்காவில் கேப் குடியேற்றத்துக்கு இருந்தார். ரோட்ஸ் பிரிட்டன் ராணுவத்தை வழிநடத்திச் சென்று தெற்கு ஆப்ரிக்காவை ஆக்கிரமித்தவர். அங்கிருந்த கருப்பினத்தவர்களை அடிமைப்படுத்தி சுரங்கங்களிலும் விவசாய நிலங்களிலும் உழைப்பில் ஈடுபடுத்தி பிரிட்டிஷ் தொழிற்சாலைகளுக்கு வேண்டிய மூலப் பொருட்களை உற்பத்தி செய்தவர்.

பிரிட்டிஷார் ஜிம்பாவேயின் பெயரையே ரோடேஷியா என மாற்றினர். அவரிடம்தான் தன்னுடைய சியோனிய திட்டத்துக்கு ஆதரவு வேண்டி ஹெர்சல் கடிதம் எழுதினார். அதில், ‘ஒரு வரலாற்றை நிறுவ நான் உங்களை அழைக்கிறேன். இது உங்களை அச்சுறுத்தாது. உங்கள் ஆப்பிரிக்க நலனைப் பாதிக்காது. ஆங்கிலேய நலனையும் பாதிக்காது. இது ஆசிய மைனாரைப் பற்றியது. யூதர்களைப் பற்றியது…’ எனத் தொடங்குகிறார்.

ஹெர்சலைப் பொறுத்தவரை ரோடேஷியா, யூத தேசம் இரண்டுமே குடியேற்ற-காலனியாதிக்கத் திட்டங்கள். அதனால் ரோட்ஸ் தனக்கு ஏகாதிபத்திய நிலையில் இருந்து ஆதரவு வழங்குவார் என்று ஹெர்சல் கருதினார். இதனால்தான் அவர் தன் நூலில், பாலஸ்தீனத்தில் தொடக்கக்கட்டத்தில் யூத குடியேற்றம் நடைபெற்ற விதத்தைக் கடுமையாக எதிர்த்தார். ஏகாதியபத்தியத்தின் சக்தி இல்லாமல், அந்தத் தனிப்பட்ட முயற்சிகள் ஊடுருவலாகவே பார்க்கப்படும். அது நிச்சயம் தோல்வியில் முடியும் என்றார்.

‘தவிர்க்க இயலாத நிலையில் உள்ளூர் மக்கள் அச்சுறூத்தலாக உணர்ந்து, அரசாங்கத்தை வலியுறுத்தி மேலும் யூதர்கள் உள்நுழைவதை தடுக்கும் விளைவுதான் இதனால் ஏற்படும். ஆயுதங்கள் ஏந்திய ராணுவ ஆதரவுடன் காலனித்துவம் நடைபெற வேண்டும். அப்போதுதான் அதிக மக்கள் குடியேறுவர்’ என்றார்.

அவர் சொன்னதுபோலவே நடைபெற்றது. நாம் பார்த்த முதல் குடிப்பெயர்வில் 25,000 யூதர்கள் வந்தனர். இவர்களுடைய நோக்கம் பாலஸ்தீனத்தை அபகரிப்பது என்றில்லை. அவர்களும் நிலம் வாங்கிக்கொண்டு அங்கே குடியேறுவதுதான் திட்டம். ஆனால் அவர்கள் வந்த வேகத்திலேயே பாலஸ்தீனத்தின் வறுமையையும் வாய்ப்புகள் அற்ற நிலையையும் கண்டு திரும்பிவிட்டனர்.

குறிப்பாக அவர்கள் பாலஸ்தீனத்திற்கு வரும்போது அங்கே மக்கள் வாழவில்லை, நிலங்கள் பண்படாமல் கிடக்கின்றன என்றே நம்பி வந்தனர். வந்து பார்த்தவர்களுக்கு அங்கே விவசாய நிலங்கள் இருப்பதும், மற்ற கலாசார மக்கள் இருப்பதும் வியப்பளித்தது. பாலஸ்தீனம் வந்த மூன்று மாதங்களில் ஐரோப்பிய யூதக் கட்டுரையாளரும், சியோனிய தலைவருமான அஹாத் ஹாம் எழுதுகிறார். ‘வெளிநாட்டில் இருந்த நாங்கள் இஸ்ரேல் என்பது தனித்துவிடப்பட்ட நிலமென நினைத்தோம். இங்கே பாலை நிலங்கள் மட்டுமே பண்படுத்தப்படாமல் இருப்பதாக அறிந்திருந்தோம். இங்கே வந்து நிலத்தை வாங்கி எங்கள் விருப்பப்படி அவற்றை மாற்றலாம் என்பதுதான் திட்டம். ஆனால் உண்மை அவ்வாறாக இல்லை. இந்த நாடு முழுவதுமே மக்கள் வாழ்கின்றனர். விவசாய நிலங்கள் இருக்கின்றன. இங்கிருந்தவர்களுக்கு எங்களையும், நம்மவர்களுக்கு அவர்களையும் பிடிக்கவில்லை.’

இதனால் ஒரு ஏகாதிபத்திய ஆதரவாளரைக் கண்டடையும் பணியை முதல் சியோனிய காங்கிரஸ் ஹெர்சலிடம் வழங்கியது. அவர் ஐரோப்பியத் தலைநகரங்களுக்குத் தொடர்ச்சியாகப் பயணம் செய்தார். முதலில் அவர் ஜெர்மனியின் கெய்சரைத் தொடர்புகொண்டார். பிறகு ரஷ்யாவின் ஜார் மன்னரைத் தொடர்புகொண்டார். பிறகு போப்பாப்பாண்டவரைச் சந்தித்து பேசினார்.

ஒவ்வொரு ஆட்சியளரைச் சந்திக்கும்போதும் சியோனியம் எப்படி அவர்களுக்கு உதவும் என்ற விதத்தில் பேசினார். இதன் ஒரு முயற்சியாக பலவீனமடைந்த துருக்கிய சுல்தானான அப்துல் ஹமீதையும் ஹெர்சல் சந்தித்தார். ஓட்டோமான் பேரரசு பல பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி இருந்தது. அதன்மீது அந்நிய ஆதிக்கமும் சுரண்டல்களும் வளர்ந்திருந்தன. அதனால் அதன் கடன் பலவாறு உயர்ந்திருந்தது. இந்தப் பலவீனத்தை உணர்ந்த ஹெர்சல் அவர்களுக்கு நிதியுதவி வழங்குவதாகக் கூறினார்.

உங்கள் கடன் முழுவதையும் யூதர்கள் அடைத்துவிடுவார்கள். அதற்குப் பதில் நீங்கள் பாலஸ்தீனத்தை குறைந்தது அந்த நிலத்தில் பாதியையாவது விட்டுக்கொடுக்க வேண்டும் என்றார். இதற்கு விலையாக 20 மில்லியன் துருக்கிய லிராவை (அன்றைய துருக்கிய நாணயம்) பாலஸ்தீனத்துக்கு வழங்குவதாகவும் உறுதியளித்தார். ஆனால் துருக்கிய பாராளுமன்றத்தில் அவருடைய சந்திப்பு பெரும் போராட்டங்களை உருவாக்கியது. மற்ற அரபு உறுப்பினர்களும் இணைந்துகொள்ளவே சுல்தான் பின் வாங்கினார். எல்லா இடங்களிலும் பிரச்னை ஏற்பட சுல்தானால் வெளிப்படையாக தன் ஆதரவை சியோனியர்களுக்கும் தரமுடியவில்லை.

அப்போதும் ஹெர்சல் விடுவதாக இல்லை. அவர் ஜெர்மனியின் கெய்சர் வில்லியம்ஸைச் சந்தித்துப் பேசினார். ரஷ்ய ஜார் மன்னரிடம் பேசினார். மற்ற ஏகாதிபத்தியங்களிடம் பேசினார். இறுதியாகத்தான் ஹெர்சல் அப்போது உதயமாகிக்கொண்டிருக்கும் பிரிட்டனின் உதவியை நாடினார். அதிர்ஷ்டவசமாக பிரிட்டனுக்கும் அப்போது சரியாக ஹெர்சலின் உதவி தேவைப்பட்டது.

துருக்கியப் பேரரசு அப்போது பலவீனம் அடைந்து வந்தது. பொருளாதார அபாயத்தில் இருந்து மீள்வதற்கு அப்போது துருக்கிய மன்னர்கள் ஐரோப்பிய நாடுகளை நாட வேண்டியது இருந்தது.

பிரிட்டன் அப்போது மத்தியக் கிழக்கு முழுவதையும் கட்டுப்படுத்துவதற்கு பெரிய அக்கறை எடுத்துக்கொண்டது. இரண்டு நூற்றாண்டுகளாக பிரிட்டன் பேரரசின் முகவர்கள் உலகம் முழுவதும் பயணித்து ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் வளங்களைச் சுரண்டிக்கொண்டிருந்தனர். ஆப்ரிக்காவில் இருந்து அடிமை வணிகமும், தங்கம், வெள்ளி, பருத்தி, வாசனைப் பொருட்கள் மற்றும் இதர சரக்குகளும் பிரிட்டனை உலகின் முன்னணி தொழில்மயமிக்க நாடாக மாற்றி இருந்தது.

பிரிட்டன் தொழிற்சாலைகள் மேலும் மேலும் பொருட்களை உற்பத்தி செய்ய அந்தப் பொருட்களை விற்பதற்கான புதிய சந்தைகளை பிரிட்டன் தேடிக்கொண்டிருந்தது.

1838ஆம் ஆண்டு ஆங்கிலோ-துருக்கிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் பிரிட்டனின் வணிகர்கள் தங்கள் பொருட்களைத் தங்கு தடையில்லாமல் அரபு சந்தைகளில் விற்பதற்கான வழி திறக்கப்பட்டது. அடுத்த பத்து ஆண்டுகளில் பிரிட்டனில் இருந்து அகண்ட சிரியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு மூன்று மடங்காக உயர்ந்தது. பிரிட்டனின் பொருளாதாரம் எந்தப் பகுதியில் வளர்கிறதோ, அங்கே அவர்களுடைய அரசியல் ஆதிக்கமும் வளரத் தொடங்கியது.

பிரிட்டனுக்கு பாலஸ்தீனத்தின்மீது ஒரு கண் இருந்தது. காரணம், அன்றைக்கு பிரிட்டனின் செல்வவளமிக்க காலனியாக இந்தியா இருந்தது. இந்தியாவுக்குச் செல்லும் முக்கியமான குறுக்குப் பாதையாக பாலஸ்தீனம் இருந்தது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பருத்தியால்தான் பிரிட்டனின் ஆடை தொழிற்சாலைகள் கொள்ளை லாபம் பார்த்துக்கொண்டிருந்தன. இதனால் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றுவது மூலம் இந்தியா – இங்கிலாந்துக்கு இடையேயான வணிகம் மேலும் சிறக்கும் என்பது பிரிட்டனின் திட்டம்.

1875ஆம் ஆண்டுதான் பிரிட்டன் எகிப்தில் புதிதாகக் கட்டப்பட்ட சூயஸ் கால்வாயைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது. இதன்மூலம் பிரிட்டிஷ் வணிகக் கப்பல்கள் இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்குப் பயணிக்கும் நேரம் பாதியாகி இருந்தது. இப்போது பாலஸ்தீனத்தையும் கைப்பற்றுவது சூயஸ் கால்வாயிக்கு கிழக்கு பகுதியை நம்பகமான இடமாக வைத்துக்கொள்ளலாம் என பிரிட்டன் திட்டம் தீட்டியது. மேலும் இதன்மூலம் சுற்றி இருக்கும் எதிரி நாடுகளின் ஆதிக்கத்தை முறியடிக்கலாம் என்பதுதான் அதன் எண்ணமாக இருந்தது.

இதனால் பாலஸ்தீனத்தில் யூதக் குடியேற்றம் என்பது பிரிட்டன் அதிகார சுற்றுவட்டாரத்தில் மிகவும் அதிகம் பேசப்பட்ட திட்டமாக இருந்தது. பாலஸ்தீனத்தில் தங்கள் தடங்களைப் பதிக்க வேண்டும் என்றால் அங்கே ஒரு குடியிருப்பை நிறுவ வேண்டும் என்று பிரிட்டன் நினைத்தது. இந்தச் சாதகத்தைத்தான் ஹெர்சல் பயன்படுத்திக்கொண்டார்.

ஹெர்சல் பிரிட்டனின் நலனுக்கு யூதக் குடியேற்றம் எப்படி உதவிகரமாக இருக்கும் என்று பல கடிதங்களை எழுதினார். ஹெர்சலின் வேண்டுகோளுக்குப் பிறகு பிரிட்டன் முழுவதும் யூதக் குடியேற்றம் பற்றிய பேச்சாகத்தான் இருந்தது. பிரிட்டன் அரசிடம் நெருக்கமான இருந்தவர்களில் ஒருவரான ஷாஃப்ட்ஸ்பெரி (Lord Shaftsbury) என்பவர் 1876ஆம் ஆண்டு பிரிட்டன் அரசுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், யூதக் குடியேற்றங்கள்மூலம் என்னென்ன பலன்கள் தங்களுக்குக் கிடைக்கும் எனக் குறிப்பிடுகிறார்.

சிரியா, பாலஸ்தீனம் இரண்டும் நமக்கு மிகவும் முக்கியமான பகுதிகள். அந்த நாடுகளுக்கு முதலீடுகளும் வேண்டும். மக்கள் தொகையும் வேண்டும். இரண்டையும் யூதர்களால் கொடுக்க முடியும். அந்த நடவடிக்கைக்கு இங்கிலாந்து ஏன் சிறப்பு அக்கறை எடுத்துக்கொள்ளக்கூடாது? நமது எதிரிகள் யாராவது சிரியாவைக் கைப்பற்றிவிட்டால் இங்கிலாந்துக்கு பெருத்த பின்னடைவாக அமையும். நமது ராஜ்ஜியம் மேற்கில் கனடாவில் இருந்து தென் கிழக்கில் கல்கத்தா ஆஸ்திரேலியாவரை நீண்டுள்ளது. இது இரண்டாகச் சிதறிவிடும் அபாயம் இருக்கிறது. இதற்காக நாம் சிரியாவைப் பாதுகாக்க வேண்டும். இதற்கு நாம் இயற்கையாக செய்ய வேண்டியது, யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறுவதற்கு வழி ஏற்படுத்தித் தருவது மட்டும்தான்’ என்கிறார்.

பிரிட்டன் ஏகாதிபத்தியமும் சியோனியத்தைப் பயன்படுத்தி தங்கள் பேரரசை விரிவு செய்ய ஆர்வம் காட்டியது. ஆனால் பாலஸ்தீனம் அதுவரை பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. ஆனாலும் சியோனியம் எப்படியாவது தங்களுக்கு உதவும் என்று கருதிய பிரிட்டனின் காலனிய அதிகாரி ஜோசப் சாம்பர்லின், யூதர்களின் தேசம் அமைவதற்கு பிரிட்டனின் கட்டுப்பாட்டில் உள்ள வேறு இடத்தைத் தேடத் தொடங்கினார். அந்த இடத்தை சியோனியர்கள் சொல்வதுபோல, ‘நிலம் இல்லாத மக்களுக்காக மக்கள் இல்லாத இடமாக இருக்க வேண்டும்’ என்ற அடிப்படையில் தேடினார்.

சாம்பர்லினைப் பொறுத்தவரை மக்கள் இல்லாத நிலம் என்பது வெள்ளை மக்கள் இல்லாத நிலம். அதனால் சியோனியத்திற்காக எங்கு வேண்டுமானாலும் ஒரு காலனியை உருவாக்கி அவர் தயாராக இருந்தார். அப்படியாக வெள்ளை மக்கள் இல்லாத நிலமாக அவருக்குக் கண்ணில்பட்டது ஆப்பிரிக்க நாடான உகாண்டா. யூதக் குடியேற்றத்துக்கு உகாண்டா வேண்டுமா என சாம்பர்லின் கேட்டார்.

ஹெர்சல் குதூகலத்தில் துள்ளிக் குதித்தார். அவருக்கு உகண்டாவில் யூத நாடு அமைவது சம்மதம்தான். இதனால் ஏழாவது சியோனிய காங்கிரஸில் உகண்டாவில் குடியேறுவது பற்றியே அவரது பேச்சு அமைந்தது. ஆனால் மற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் ஹெர்சலின் பேச்சுக்கு உடன்படவில்லை. காரணம் மற்ற சியோனியர்களால் பாலஸ்தீனத்தைத் தவிர வேறு எந்த இடத்தையும் தங்கள் தாயகமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடுத்த ஒரு வருடத்தில் ஹெர்சல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்குப் பிறகு நாம் மேலே பார்த்த சைம் வெயிஸ்மேன் என்ற ரஷ்ய சியோனிய உறுப்பினர் சர்வதேச சியோனிய அமைப்பின் புதிய தலைவரானார்.

அவர் ஹெர்சலின் திட்டமான ஏகாதிபத்திய ஆதரவையும் சியோனிய ஆதரவாளர்களின் ஏகோபித்த விருப்பமான பாலஸ்தீனத்தையும் இணைத்து தன் திட்டத்தை தீட்டினார். இப்போது சியோனிய பாலஸ்தீனமே யூதர்களின் தாய் நிலமாக இருந்தது.

இதன்பிறகு ஹெர்சல் வழிகாட்டிய இரண்டாவது குடியேற்றம் தொடங்கியது. 1904 முதல் 1914 வரை நடைபெற்ற இந்தக் குடியேற்றத்தில் சுமார் 30,000 யூதர்கள் திரண்டு வந்தனர். இந்தமுறை அவர்களிடம் ஓர் அரசியல் லட்சியம் இருந்தது. அது யூத நாட்டை நிறுவுவது. அவர்கள் வந்த வேகத்தில் நிலங்களை வாங்கத் தொடங்கினர். அப்போதுதான் பாலஸ்தீன மக்களின் பெரும்பாலான நிலங்கள் யூதர்களின் கைகளுக்குச் சென்றன.

இதுகுறித்து பாலஸ்தீனத்தின் உள்ள சியோனிய அமைப்பு அலுவலகத்தின் தலைவர் இவ்வாறு சொல்கிறார். ‘பாலஸ்தீனத்தில் எங்கள் வேர்களை நிறுவ வேண்டும் என்றால் நிலம் முக்கியமாகிறது. இங்கே விவசாய நிலங்களே அதிகம் இருப்பதால் நாங்கள் அவற்றை வாங்கி, எங்கள் குடியிருப்புகளை நிறுவி, அங்கே விவசாயம் செய்து வந்தவர்களை கலையெடுக்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டோம்’ என்கிறார்.

1878 முதல் 1908 வரை 27 மில்லியன் துனாம்கள் (1 துனாம் என்பது 0.25 ஏக்கர்) நிலம் சியோனியர்களால் வாங்கப்பட்டது. இதனால் அங்கே இருந்த மக்கள் வெகுண்டு எழுந்து யூதர்களுக்கு எதிராக திரள வேண்டியதாகியது.

அப்போதுதான் புதிய நூற்றாண்டு தொடங்கி இருந்தது. ஏகாதிபத்தியப் போட்டி ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே வளர்ந்து முதல் உலகப் போராக உருபெற்றது. ஜெர்மனி அப்போது மத்தியக் கிழக்கில் ஆதிக்கத்தைப் பரப்பி வந்தது. அதுவரை பிரிட்டனுக்கு ஆதரவுக் கரம் நீட்டி வந்த துருக்கியப் பேர்ரசு இந்தமுறை ஜெர்மனி பக்கம் இடம் மாறியது. இது தெரிந்தவுடனேயே அரபு ஆதிக்கத்தின்மீது கண் வைத்திருந்த பிரிட்டன் அரசு, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இணைந்து ஜெர்மனிக்கு எதிராக யுத்தத்தை அறிவித்தது.

இந்தப் போரில் வெற்றிபெறும் படைக்கு துருக்கிய கட்டுப்பாட்டில் உள்ள காலனிகள் பரிசாக வரும் என எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்திருந்தது. அதில் குறிப்பாக பாலஸ்தீனமும் வரும் என்பதை சியோனியர்கள் நன்கு உணர்ந்து இருந்தனர். இதனால் நடைபெறவுள்ள உலகப் போரில் பிரிட்டனுக்கு முழு ஆதரவையும் வழங்குவதாக சியோனியர்கள் தீர்மானம் கொண்டனர்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *