Skip to content
Home » பாலஸ்தீனம் #9 – பால்ஃபர் அறிக்கை

பாலஸ்தீனம் #9 – பால்ஃபர் அறிக்கை

பால்ஃபர் அறிக்கை

முதல் உலகப்போர் உலகச் சரித்திரத்தையே புரட்டிப்போட்ட ஒரு நிகழ்வு. ராணுவ வீரர்களை மட்டுமல்ல, சாமானியர்களையும் பெருமளவுக் கொன்றுக் குவித்த குரூரப் போர் அது. ஒருபுறம் குண்டடிப்பட்டு மரணம், மற்றொருபுறம் நோய்வாய்ப்பட்டு மரணம், வேறொருபுறம் பஞ்சம், பசி, பட்டினியால் மரணம். ஐரோப்பாவில் குருதி நிரம்பிய பதுங்குகுழிகளில் 90 லட்சம் வீரர்கள் செத்து உயிர் துறந்தனர் என்றால், அகண்ட சிரியாவில் எட்டில் ஒரு பங்கு மக்கள் உணவு கிடைக்காமல் பட்டினியால் உயிர் நீத்தனர்.

ஆனால் இந்த மரணமும் ஓலமும் சாதாரண மக்களுக்குத்தானே ஒழிய ஐரோப்பியப் பேரரசுகளுக்கு உலகப்போர் என்பது விளையாட்டுக் களம். சிறுவயதில் நாம் நாடு பிரிக்கும் விளையாட்டு விளையாடி இருப்போம் அல்லவா? அதுபோல உலகைப் பங்குபோடும் ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டில் வெற்றிபெறுபவர்கள் அழிவின் விளிம்பில் இருந்த துருக்கிய, ஆஸ்திரிய-ஹங்கேரிய நிலங்களை அபகரிக்கக் காத்திருந்தனர். குறிப்பாக பிரிட்டனும் பிரான்சும் மத்தியக் கிழக்கில் இருந்த நாடுகள்மீது பந்தயம் கட்டித்தான் இந்த ஆட்டத்தை ஆடிக்கொண்டிருந்தன.

முதல் உலகப்போர் பாலஸ்தீனத்தில் எத்தகைய ரத்தக்களறியை உண்டு பண்ணியது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன் உலகப் போருக்கு முந்தைய ஆண்டுகளில் இருந்த அரேபிய மனநிலையையும் கொஞ்சம் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த அரசியல் போக்கையும் தனது யுத்த களத்துக்கு ஏற்ற சதுரங்கக் காயாய் பிரிட்டன் எப்படிப் பயன்படுத்திக்கொண்டது என்பதும் புரியும்.

0

யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேற்றத்தைத் தொடங்கிய காலத்தில் பாலஸ்தீன மக்கள் ஆட்டோமான் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தார்கள் என்று பார்த்தோம் அல்லவா? அப்போது பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல மத்தியக் கிழக்கு முழுவதிலுமே ஒருவித அரபு அலை எழுந்திருந்தது. ஓட்டோமான்களின் நிர்வாகத்தைக் கேள்விக்கேட்டு பல்வேறு இயக்கங்கள் உருவாகி இருந்தன. அவற்றில் முக்கியமான ஒன்று இளம் துருக்கியர்கள் என அழைக்கப்பட்ட இயக்கம்.

இந்த இயக்கம் அரேபியர்களுடையது அல்ல. துருக்கியர்களாலேயே முன்னெடுக்கப்பட்டது. இவர்கள் ஓட்டோமான்களின் பழமைவாதப் பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளைத் தீவிரமாக எதிர்த்தனர். இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் ராணுவம், நிர்வாகம் என எல்லா இடங்களிலும் இருந்தனர். இவர்கள் ஒருகட்டத்தில் கிளர்த்து எழுந்து சுல்தானை அரியணையில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு ஆட்சியைப் பிடித்தனர். ஆட்சியைப் பிடித்த கையோடு ஓட்டோமான் அரசு அதற்குமுன் கையாண்டு வந்த தணிக்கை முறைகள், அமைப்புகளின்மீதான தடைகள் அனைத்தையும் நீக்கினர்.

இந்த இளம் துருக்கியர்கள் அனைத்து மக்களுக்கும் சமத்துவத்தை ஏற்படுத்துவோம் என உறுதியளித்தனர். மேலும் துருக்கியப் பாராளுமன்றத்தில் அனைத்து அரபு மாகாணங்களுக்கும் பிரதிநிதிகளை ஏற்படுத்தினர்.

இந்தச் சமயத்தில் பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் உருவாகி அந்நிய ஆதிக்கத்தின் பிடியில் இருந்து அரபு மக்களின் விடுதலையைக் கோரி போராடி வந்தன. நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல இந்த இயக்கங்கள் அப்போது தனிச் சுதந்திர நாடு கோரவில்லை. பேரரசின் நிர்வாகத்தைச் சீர்த்திருத்தம் செய்ய வேண்டும் என்றுதான் எதிர்பார்த்தன.

ஆனால் புதிதாக ஆட்சி அமைத்த இளம் துருக்கியர்களுக்குச் சுத்தமாக நிர்வாகத்தில் அனுபவம் இல்லை. அவர்கள் தங்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய பொறுப்பை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று தெரியாமல் தள்ளாடினர். உள்ளுக்குள்ளேயே பல்வேறு சீர்கேடுகள் ஏற்படத் தொடங்கின.

இந்தச் சமயத்தில்தான் அரபு மாகாணங்களில் இதழியல் வளர்ந்து செய்தித்தாள்கள் பிரசுரமாயின. இவர்கள் இளம் துருக்கியர்களின் மோசமான நிர்வாகத்தையும் கேள்வி எழுப்பத் தொடங்கினர். உடனே இளம் துருக்கியர்கள் அரபு தேசிய இயக்கங்களால் தங்கள் ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உணர்ந்தனர். அதனால் அடுத்த சில நாட்களிலேயே அனைத்து வகை இயக்கங்களையும் தடை செய்தனர். முன்பைவிட கடும் தணிக்கைகளையும் அமல்படுத்தினர்.

பள்ளிகளில், அரசாங்க அலுவகங்களில் துருக்கிய மொழி அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தது. எங்கெல்லாம் அரபு வரலாறு பேசப்படுகிறதோ, எங்கெல்லாம் அரபு மொழிக்கு ஆதரவான குரல்கள் எழுகின்றனவோ, அங்கெல்லாம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இந்த ஒடுக்குமுறை அரேபியர்களுக்கு இடையே ஒற்றுமையுணர்வையும் எதிர்ப்புணர்வையும் ஒருசேர வலுப்படுத்தியது.

1911ஆம் ஆண்டு ஏழு அரபு மாணவர்கள் இணைந்து அல்-ஃபதாத் (Al-Fatat) எனும் அமைப்பை பாரிஸ் நகரில் தொடங்கினர். தொடக்கத்தில் சிறு அறைகளில் ரகசியமாக நடைபெற்ற இந்த அமைப்பின் சந்திப்புகள் அடுத்த சில மாதங்களில் பெரிய அளவில் வளரத் தொடங்கின. ஒருசில மாதங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து ஆயிரங்களைத் தொட்டது. துருக்கிய ஆட்சியின்கீழ் இருந்த பல்வேறு அரபு மாகாணங்களில் இருந்தும் அந்த அமைப்பில் உறுப்பினர்கள் சேர்ந்த வண்ணம் இருந்தன. இந்த அமைப்பு அரபு மாகாணங்களுக்கு துருக்கியர்களிடம் இருந்து முழுச் சுதந்திரத்தைக் கோரியது.

1913ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சீர்த்திருத்த கூட்டமைப்பு (Committee of Reform) எனும் மற்றொரு அமைப்பு பெய்ரூட்டில் தொடங்கப்பட்டு சுயேட்சை அரசாங்கத்தை அரபு மாகாணங்களில் நிறுவும் கோரிக்கையை வெளிப்படையாக முன்வைத்தது. இந்த அமைப்புக்கான ஆதரவாளர்கள் சிரியா மற்றும் பாலஸ்தீனத்தில் இருந்து அதிகம் வந்ததனர். இவர்கள் துருக்கிய அரசுக்கு எதிராகப் பல கடிதங்களை எழுதி இஸ்தான்புல்லுக்கு அனுப்பினர். உடனே துருக்கிய அரசு இந்தக் கூட்டமைப்பைத் தடை செய்தது. இதன் காரணமாக பெய்ரூட்டில் கடைகளும் வணிக நிறுவனங்களும் மூடப்பட்டு போராட்டங்கள் நடைபெற்றன.

அடுத்தடுத்த ஆண்டுகளில் சீர்த்திருத்த கூட்டமைப்பு, அல்-ஃபதாத்துடன் இணைந்து முதல் அரபு காங்கிரஸை பாரிஸில் ஜூன் 1913ஆம் ஆண்டு கூட்டியது. இந்தக் காங்கிரஸ் துருக்கியத் தணிக்கை நடைவடிக்கைகளுக்கு எதிராகவும், அலுவலகங்களில் அரபு மொழி பயன்பாட்டை வலியுறுத்தியும், அரேபிய சுயேட்சை அரசை நிறுவ வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.

பாலஸ்தீனர்கள் இந்தத் தீர்மானத்திற்கு தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்தனர். ஆனால் காங்கிரஸ் சியோனிய நடவடிக்கைகளைக் கவனிக்கத் தவறியது. இதனை பாலஸ்தீனர்களும் சுட்டிக் காட்டினர். அரபு காங்கிரஸின் போராட்டங்கள் முழுவதும் தனி அரபு ஆட்சியை எதிர்ப்பார்த்துத்தான் இருந்தது. இந்தத் தருணத்தில்தான் முதல் உலகப்போர் தொடங்கியது.

உலகப்போர் தொடங்கியவுடனேயே பிரிட்டன் துரிதமாகச் செயல்பட்டு மத்திய கிழக்கில் தங்கள் ஆதரவைப் பெருக்கிக்கொள்ளும் வேலையில் இறங்கியது. போருக்கு முன்பே அரேபிய தீபகற்பத்தைச் சேர்ந்த ஷெரிப் ஹுசைன் என்பவருடன் கூட்டணி வைக்க முயற்சித்தது.

ஷெரிப் ஹூசைன் அரேபிய தீபகற்பத்தின் ஹெஜஸ் (Hejaz) பகுதியின் தன்னிகரற்ற ஆளுமை. முகமது நபியின் குடும்ப வழியில் வந்தவர். மெக்கா, மதினா பகுதிகளின் மிக முக்கிய இஸ்லாமியத் தலைவர். இவருக்கு அப்துல்லா, ஃபைசல் என்று இரு மகன்கள் இருந்தனர். உலகப்போருக்கு முன்பே இவர் தனது மகன்கள்மூலம் பிரிட்டனின் ராணுவம் மற்றும் அரசியல் ஆதாயங்களைத் தேடி வந்தார். அவருக்கு அரேபியப் பகுதிகள் முழுவதையும் ஆள வேண்டும் என்பது ஆசை. அதனால் அரேபியர்கள் துருக்கிய ஆட்சிக்கு எதிராகப் போராட்டங்களைத் தொடங்கியவுடனேயே பிரிட்டனின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய ஆதரவுடன் அப்பகுதியைக் கைப்பற்ற விரும்பினார். ஆனால் அப்போது பிரிட்டனுக்கு இவருக்கு உதவுவதில் நாட்டமில்லை.

ஆனால் துருக்கி முதல் உலகப்போரில் ஜெர்மனியின் பக்கம் நிற்கப்போவதாக அறிவித்தவுடன் அந்தப் பகுதியில் அரேபியர்களின் ஆதரவை எதிர்ப்பார்த்த பிரிட்டன் ஷெரிப் ஷுசைனுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது.

பிரிட்டனுக்கு அப்போது துருக்கியர்களை எதிர்ப்பதற்கு மிகப்பெரிய தடையாக இருந்ததே இஸ்லாம் மதம்தான். ஓட்டோமான் அரசு தங்களை இஸ்லாமின் பாதுகாவலர்களாக முன்னிறுத்தியது. கலீபாக்களின் வழிவந்தவர்களாக காட்டிக்கொண்ட சுல்தான்கள் இஸ்லாமின் பிரதிநிதிகளாக இருந்தார்கள். இதனால் துருக்கிய அரசைத் தாக்குவது இஸ்லாமைத் தாக்குவதுபோல் ஆகிவிடும் என பிரிட்டன் அஞ்சியது.

என்னதான் ஓட்டோமான் அரசின்கீழ் வாழும் மக்கள் ஒடுக்குமுறையைச் சந்தித்தாலும் நெருக்கடி என்று வரும்போது இஸ்லாம் பக்கமே நிற்பார்கள் என அவர்கள் நினைத்தனர். அதனால் உலகப்போரில் இஸ்லாமிய மக்களிடம் துருக்கியர்களுக்கு இருக்கும் ஆதரவை உடைக்கவேண்டும் என்று நினைத்தனர். இதைச் செய்ய வேண்டும் என்றால் இஸ்லாத்தையும் அரசியலையும் தனியாகப் பிரித்துக் காட்ட வேண்டும். இஸ்லாமுக்கு தனிப் பிரதிநிதியாக வேறு ஒருவரை மக்கள் கருத வேண்டும். அவ்வாறு நடந்துவிட்டால் மக்கள் துருக்கிய ஆட்சியாளர்களிடம் இருந்து அந்நியப்பட்டுவிடுவார்கள் என பிரிட்டன் நினைத்தது. அதிர்ஷ்டவசமாக அந்த இடத்தில் பிரிட்டனுக்கு ஷெரிப் ஹுசைன் உதவினார்.

துருக்கிய சுல்தான்கள் தங்களை கலீபாக்களின் வாரிசாகக் காட்டிக்கொண்டாலும் உண்மையில் அவர்கள் அரேபியர்கள் கிடையாது. ஆனால் ஷுசைனோ முகமது நபியின் ரத்தத்தின் தொடர்ச்சி. அதனால் அவரே உண்மையான இஸ்லாமியக் காவலருக்கான தகுதி பெற்றவர் என பிரிட்டன் கருதியது. அவர் துருக்கிய ஆட்சிக்கு எதிராக நிற்பதாக இருந்தால் மக்களின் ஆதரவும் அவருக்குத்தான் என்று திட்டமிட்டது. இதனால்தான் ஷுசைனின் வேண்டுகோளுக்கு பிரிட்டன் செவி சாய்க்கத் தொடங்கியது.

பிரிட்டன் தனக்கு ஆதரவு தருவதாகச் சொன்னவுடன் ஷுசைனுக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனாலும் முகமது நபியின் வாரிசு எனச் சொல்வதற்கு அவருக்கு கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. ஒருவேளை மக்கள் தன்னை நிராகரித்துவிட்டால்? அதனாலேயே அவர் அரேபியர்களிடம் பேசும்போதுகூட முகமதுவின் பெயரைத் தவிர்த்தே வந்தார். ஆனால் துருக்கிய ஆட்சிக்கு எதிராகப் போராட்டங்கள் வலுவடைந்தவுடன் அவர் தன்னை அரேபியர்களுக்குப் பிரதிநிதியாக காட்டிக்கொள்ளத் தொடங்கினார்.

பிரிட்டனும் ஹுசைன் தங்களுக்கு ஆதரவு கொடுக்கும் பட்சத்தில், துருக்கியர்களுக்கு எதிராக அரேபியப் புரட்சியை வழிநடத்தும் பட்சத்தில் போர் முடிவுக்கு வந்தவுடன் அரபு நாடுகளுக்குச் சுதந்திரம் அளிப்பதாக உறுதியளித்தது. கெய்ரோவில் இருந்த பிரிட்டனின் பிரதிநிதி ஹென்றி மெக்மேகன் ஹுசைனுக்கு இது தொடர்பாகத் தொடர்ந்து கடிதங்களை எழுதிக்கொண்டிருந்தார். அதில் எந்தெந்த இடங்களுக்கு எல்லாம் சுதந்திரம் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டு வந்தார். அந்தப் பட்டியலில் பாலஸ்தீனமும் இடம்பெற்றிருந்தது.

ஹுசைன் பிரிட்டனுக்குத் தனது முழு ஆதரவையும் தருவதாக உறுதியளித்தார். அவர் தனது மகன் ஃபைசலை டமாஸ்கசுக்கும் பெய்ரூட்டுக்கும் அனுப்பி அரபு தேசிய அமைப்புகளைத் தொடர்புகொள்ள செய்தார். இந்த அரபு தேசிய அமைப்புகளிலேயே பெரிதானதும், முக்கியமானதுமான அல்-ஃபதாத்தில் பைசல் 1916ஆம் ஆண்டு தொடக்கத்தில் இணைந்தார்.

அல்-ஃபதாத் அமைப்பின் உறுப்பினர்கள் பெரும்பாலும் தொழில்வல்லுநர்களாகவும், பெரும் வணிகர்களின் வாரிசுகளாகவும், நிலம் வைத்திருந்த பெரும் பணக்காரர்களாகவும் இருந்தனர். இதனால் இவர்களுக்கு மதிப்புமிக்க இஸ்லாமியத் தலைவரின் மகனான ஃபைசலுடன் நெருங்கிய இணைப்பு ஏற்பட்டது. இவர்கள் துருக்கியர்கள் மற்றும் ஐரோப்பியர்களிடம் இருந்து தங்கள் நாடுகளின் சுதந்திரத்தை வேண்டிப் போராடிக் கொண்டிருந்தார்கள். இவர்களுடைய ஒரே நோக்கமே அகண்ட சிரியா எனும் தனிச் சுதந்திர அரசை நிறுவுவதாகத்தான் இருந்தது.

ஹுசைனும் ஃபைசலும் ஏற்கெனவே நிலப்பிரப்புத்துவத் தலைவர்களாக இருந்ததால் பிரிட்டனுடன் நல்ல உறவில் இருப்பது தங்கள் தனிப்பட்ட அதிகாரத்தைப் பாதுகாக்க உதவும் என நினைத்தனர். 5 மே 1916 அன்று ஜெமெல் பாஷா என்னும் அகண்ட சிரியாவைச் சேர்ந்த துருக்கிய அதிகாரி அரபு தேசியவாதிகளைக் கைது செய்து, முக்கியமான 21 தலைவர்களுக்கு மரண தண்டனை வழங்கினார். இதில் அல்-ஃபதாத்தின் தலைவர்களும் சில உயிர் இழந்தனர். இதன்பின்தான் அரேபியப் புரட்சி புதிய தீவிரத்தை எட்டியது.

0

அரபு தேசிய இயக்கங்களின் தலைவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்று தெரிந்தவுடனேயே ஃபைசல் அரேபியர்கள் அனைவரையும் ஆயுதங்கள் தாங்கி துருக்கியர்களை எதிர்க்கும்படி அழைப்பு விடுத்தார். ஏற்கெனவே துருக்கியர்களால் பெரும் ஒடுக்குமுறையைச் சந்தித்திருந்த மக்கள் சண்டையிடுவதற்கு உடனே களத்தில் குதித்தனர்.

இங்கே ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரேபியர்கள் என்றவுடன் இஸ்லாமியர்கள் என்று மட்டும் நினைத்துவிடக்கூடாது. இது மதப் புரட்சி அல்ல, அரசியல் புரட்சி. அரபுப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சில முக்கிய தலைவர்களில் கிறிஸ்தவர்களும் அடங்குவர். ஏன் ஒருசில யூத தலைவர்களும் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. மதங்களை மறந்து அரேபியர்கள் எனும் ஒற்றை அடையாளத்துடன் இவர்கள் துருக்கியர்களுக்கு எதிராகச் சண்டையிட்டனர். அதில் பெரும்பான்மையாக இருந்தது இஸ்லாமியர்கள்.

1916ஆம் ஆண்டு அரபுப் புரட்சி தொடங்கியது. அதன் தலைவர்களாக ஹுசைனும் ஃபைசலும் இருந்தனர். முதல் தாக்குதல் மதினாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோமான் படையினர்மீது நடந்தது. அடுத்த ஐந்து நாட்களில் ஹுசைன் தலைமையில் மெக்காவில் சண்டை நடந்தது.

அரேபிய படை வீரர்கள் ஒட்டகங்களில் அமர்ந்துகொண்டு வீரதீரச் சண்டையிட்டனர். வெற்றி மேல் வெற்றியாக குவிந்து கொண்டிருந்தது. ஒருபக்கத்தில் உலகப்போரில் கவனம் செலுத்திய துருக்கிய ஆட்சியாளர்களால் உள்நாட்டில் நிலவும் குழப்பங்களைச் சமாளிக்க முடியவில்லை.

அரேபியர்களின் நோக்கம் துருக்கிய வீரர்களைக் கொல்வது அல்ல. காரணம், துருக்கிய ராணுவத்திலும் பெரும் பகுதி அரேபியர்கள்தான் இருந்தார்கள். அதனால், அவர்களை ஒரே இடத்தில் பிடித்து வைப்பது. இதன்மூலம் உலகப்போரில் பங்கேற்க முடியாமல் துருக்கியைத் தோற்கடிப்பது. இதுதான் அவர்களுடைய திட்டமாக இருந்தது.

அரபுப் படைகள் அடுத்ததாக ஹெஜஸ் ரயில் நிலையத்தில் இருந்த அத்தனை தொலைதொடர்புச் சாதங்களையும் அடித்து நொறுக்கின. அரேபியர்களின் எழுச்சியைக் கண்டவுடன் துருக்கியப் படையில் இருந்த அரேபியர்கள் பலர் தங்கள் பதவியைக் தூக்கி எறிந்துவிட்டு புரட்சியாளர்களுடன் இணைந்துகொண்டார்கள். இதனாலேயே துருக்கிய நடவடிக்கைகள் தடைபட்டு நின்றன.

உடனே துருக்கிய அதிகாரிகள் விழித்துக்கொண்டார்கள். அவர்கள் அகண்ட சிரியா முழுவதும் இயங்கிவந்த பத்திரிகைகள் அனைத்தையும் தடை செய்தனர். குறிப்பாக அரபுப் புரட்சியாளர்கள் பற்றி வரும் செய்திகள் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டன. ஆனாலும் அரேபியர்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. செய்தித்தாள்கள் நிறுத்தப்பட்டாலும் விஷயம் காட்டுத்தீயைப்போல் செவிவழிச் செய்தியாகப் பரவிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்தனர். சாதாரண அரபு மக்கள் எல்லோரும் தங்கள் வேலையை விட்டுவிட்டு போராட்டத்தில் குதித்தனர். துருக்கிய அரசாங்கம் செயல்பட முடியாமல் தவித்தது. சுதந்திர வேட்கை அவர்களிடம் கொளுந்துவிட்டு எரிந்தது.

ஜெமல் பாஷா பார்த்தார். இதற்குமேல் தாமதிக்க முடியாது எனத் தீர்மானித்தார். உடனேயே அகண்ட சிரியா முழுவதும் அவசர நிலையைக் கொண்டுவந்தார். ராணுவ ஆட்சியை அமல்படுத்துவதாக அறிவித்தார். ஒவ்வொரு பகுதியிலும் ராணுவத்தைக் கொண்டு வந்து குவித்தார். யாரெல்லாம் சாலையில் திரிகிறார்களோ அனைவரையும் கைது செய்யுங்கள். அருகில் இருக்கும் முகாம்களில் அவர்களைச் சிறை வையுங்கள். உத்தரவுகள் பறந்தன.

புரட்சிகர இயக்க உறுப்பினர்கள் எனச் சந்தேகப்படுபவர்கள் எல்லோர்மீதும் அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டது. அரேபியர்கள் பகுதிகளுக்குச் செல்லும் உணவுப் பொருட்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. அனைவரும் பட்டினியில் சாகட்டும் என்றது துருக்கிய அரசு. இத்தனைக் கொடூரங்களாலும் அரபு அமைப்புகளைத் தடுக்கமுடியவில்லை.

இந்தத் தருணத்தில் அரேபியர்களை மேலும் தூண்டிவிடும் விதமாக பிரிட்டன் களத்தில் இறங்கியது. பிரிட்டன் தளபதி எட்மண்ட் ஆலன்பி என்பவர் பாலஸ்தீனத்திலும் சிரியாவிலும் நுழைந்தார். பிரிட்டன் விமானங்கள் பாலஸ்தீன கிராமங்கள் முழுவதிலும் துண்டு பிரசுரங்களை வீசிவிட்டுச் சென்றன. அதில் ‘சுதந்திரம் வேண்டுமா? இன்றே போராடுங்கள்’போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

இதையடுத்து பாலஸ்தீனர்களும் பிரிட்டனுக்கு உதவியாக போராட்டத்தில் குதித்தனர். ஜெருசலேமுக்குள் நுழைந்த பிரிட்டிஷ் ராணுவ வீரர்களை அவர்கள் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். யூதக் குடியேற்றங்கள் மற்றும் போரினால் ஏற்பட்ட பஞ்சத்தால் பாலஸ்தீன மக்கள்தொகை ஏற்கெனவே பாதியாக குறைந்திருந்தது. ஆனால் அவர்களுக்கும் தங்கள் சுதந்திரத்திற்காக உயிர்விடத் தயாராக இருந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கிளம்பி வந்து ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் முகாமிற்குள் நுழைந்து தங்களையும் அரேபியப் படைகளில் இணைத்துக்கொள்ளும்படி மன்றாடினர்.

1 அக்டோபர் 1918. போர் முடிவுக்கு வருவதற்கு ஓரு மாதத்துக்கு முன் அரபு வீரர்களும் பிரிட்டன் படையும் டமாஸ்கசுக்குள் நுழைந்தன. அங்கிருந்த துருக்கிய வீரர்கள் ஏற்கெனவே அடித்துத் துரத்தப்பட்டிருந்தனர். புதிய அரசு உருவானதற்கு அடையாளமாக அரபுப் புரட்சியாளர்களின் கொடி ஏற்றப்பட்டு பறந்துகொண்டிருந்தது. அங்கிருந்த மக்கள் அனைவரும் துருக்கியர்களிடம் இருந்து ரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்காக தயாராகிக் கொண்டிருந்தனர். வெற்றி முழக்கங்கள் எட்டுத் திசையும் ஒலித்துக்கொண்டிருந்தன.

மக்களைப் பொறுத்தவரை அவர்கள் எதிர்பார்த்த முடிவு இதுதான். பசி, பஞ்சத்துக்கு உண்டான முடிவு. அரேபியர்களுக்கு நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிரான முடிவு. இறுதியாக சுதந்திரம் கிடைத்துவிட்டது. அகண்ட சிரியா சுதந்திர தேசமாகிவிட்டது!

ஆனால் இந்தக் கொண்டாட்டம் அனைத்தும் பிரிட்டன் அடுத்ததாகச் போட்டிருக்கும் திட்டங்களில் வெறும் கானல் நீராய் மறைந்துபோகும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

பிரிட்டனுக்கு இது மிகப்பெரிய வெற்றி. மத்தியக் கிழக்கில் ஜெர்மனியின் ஆதிக்கத்தை முழுமையாகத் தகர்த்து எரிந்துவிட்ட வெற்றி. நீண்ட நாட்கள் கைப்பற்ற காத்திருந்த ஓட்டோமான் நிலங்களை மொத்தமாகச் சுருட்டியெடுத்த வெற்றி. ஆனால் இந்த வெற்றி அரேபியர்களுக்குச் சுதந்திரம் தருவதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதியின் விளைவால் கிடைத்த வெற்றி என்பதை பிரிட்டன் மறந்துபோனது. நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமே இல்லை என்றும் சொல்லலாம்.

0

போர் உக்கிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த 1916ஆம் ஆண்டே மெக்மோகன் தனது வாக்குறுதிகள் குறித்த கடிதம் ஒன்றை பிரெஞ்சு ஆட்சியாளர்களுக்கு எழுதினார். அதன்பின் பிரிட்டிஷ் அதிகாரிகள் ரகசியமாகச் சந்தித்து அகண்ட சிரியாவின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்யத் தொடங்கினர்.

போருக்குப் பிறகு சிரியாவை எப்படித் துண்டு போடலாம் என்று பிரிட்டன் போர் அலுவலகத்தின் தலைவர் மார்க் சைக்ஸ் என்பவரும் பெய்ரூட்டில் இருந்த பிரெஞ்ச் பிரதிநிதி ஹெரின் பிகாட்டும் பேச்சுவார்த்தை நடந்தினர்.

சைக்ஸ்-பிகார்ட் உடன்படிக்கை என அறியப்பட்ட இந்தத் திட்டத்தின்படி இன்றைய சிரியாவின் பெரும்பாலான பகுதிகள் பிரான்சுக்குச் சென்றுவிடும். ஈராக்கை பிரிட்டன் எடுத்துக்கொள்ளும். இதுதான் உடன்படிக்கை. பிறகு பாலஸ்தீனம்? அதுதான் குழப்பமாக இருந்தது. இரு நாடுகளுக்கும் பாலஸ்தீனத்தின்மீது கண்கள் இருந்தன. அதனால் பாலஸ்தீனம் என்பது சர்வதேச நிர்வாகத்தின்கீழ் இருக்கும் என ஒரு பேச்சுக்குச் சொல்லப்பட்டது. பிரிட்டனின் இந்தப் பேச்சு வார்த்தைகள் போர் நடைபெற்ற நாட்களில் அரபு மக்களுக்குத் தெரியாமல் ரகசியமாக மறைக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் புகழ்பெற்ற பால்ஃபர் பிரகடனம் எழுதப்பட்டது.

வெறும் 67 வார்த்தைகள் கொண்ட ஓர் அறிக்கை என்ன செய்துவிடும்? ஒரு நிலப்பரப்பையே ஆயுதங்கள் கொண்டு அழித்து, ரத்தத்தை மையாகக் கொண்ட பேனாவால் அங்கு வாழ்ந்த மக்களின் வரலாற்றையே திருத்தி எழுதிவிடும். வார்த்தைகளுக்கு அவ்வளவு பெரிய சக்தி இருக்கிறதா? அதை யார் எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. பாலஸ்தீனத்தை ரத்தக் களறியாக்கிய அந்தக் கடிதத்தை எழுதியவர் பிரிட்டனின் வெளியுறவுத்துறை செயலாளர் ஆர்தர் மேல்ஸ் பால்ஃபர். அந்தக் கடிதம்தான் இன்றுவரை பாலஸ்தீனத்தை படுகொலைகளின் தேசமாக வைத்திருக்கிறது. அந்தக் கடிதம் ஏன் எழுதப்பட்டது? எதற்காக எழுதப்பட்டது?

உலகப்போருக்குப் பிறகு அரேபியர்களை மட்டுமல்ல பிரான்ஸையும் கழட்டிவிடத் திட்டமிட்டிருந்தது பிரிட்டன். பாலஸ்தீனம் விட்டுத்தர முடியாத பொக்கிஷமாகப் பிரிட்டனுக்கு இருந்தது. அதனால் பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு அது சென்றுவிடாமல் இருக்க பிரிட்டன் அதிகாரிகள் சியோனிய இயக்கத்தினரைப் பயன்படுத்தி பாலஸ்தீனத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் கைப்பற்றுவதற்கு முடிவு செய்தனர்.

சியோனியர்களுக்கும் தங்களுடைய முக்கியத்துவம் என்ன என்பது புரிந்திருந்தது. எனக்கு பாலஸ்தீனம், உனக்கு சூயஸ் கால்வாயின் அதிகாரம். பிரிட்டனின் நோக்கத்துக்கு அவர்களும் சம்மதித்தனர்.

இங்கே ஒரு கேள்வி எழலாம். பிரிட்டனுக்கு பாலஸ்தீனம்தான் வேண்டும் என்றால் ஏன் அவர்கள் வாக்குறுதி அளித்ததுபோல் அரேபியர்களுக்கே அந்த நிலத்தைக் கொடுத்துவிட்டு அதன் கட்டுப்பாட்டை மட்டும் வைத்திருந்திருக்கக்கூடாது? ஏற்கெனவே பாலஸ்தீனம் அரேபியர்களின் நிலம் அல்லவா? ஏன் இங்கு புதிதாக வேலை மெனக்கெட்டு யூதர்களுக்காக அந்தத் தேசத்தைக் கூறுபோட வேண்டும்? போரில் தங்களுக்கு ஆதரவாக நின்ற அரேபியர்களை ஏன் ஏமாற்ற வேண்டும்?

காரணம் இருக்கிறது. போரில் அரேபியர்கள் சண்டையிட்டது பிரிட்டனுக்காக இல்லை, தங்களுக்காக. அரேபியர்கள் வேண்டியது தனிச் சுதந்திர நாடு. அவர்கள் நாம் முன்பே பார்த்ததுபோல் ஐரோப்பிய ஆதிக்கத்தையும் எதிர்த்துதான் போராட்டங்களைத் தொடங்கினார். துருக்கியர்களிடம் இருந்து பிரிட்டன் சுதந்திரம் பெற்றுத் தரும் என்றவுடன் அவர்களுடன் இணைந்து போரிட்டார்கள். மற்றபடி பிரிட்டனின்கீழ் வாழவேண்டும் என்பதிலெல்லாம் அவர்களுக்கு விருப்பமில்லை. இதற்காகத்தான் பிரிட்டன் அரேபியர்களை நம்பாமல் யூதர்களை நம்பியது.

1917ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சியோனியத் தலைவர் கைம் வெய்ஸ்மேனும், பிரிட்டன் அதிகாரி மார்க் சைக்சும் ஒன்றாக அமர்ந்து யூதக் குடியேற்றத்துக்கு ஆதரவு தரும் அந்த உடன்படிக்கையைத் தயார் செய்யும் வேலையில் இறங்கினர். வெய்ஸ்மேன் தெளிவாகச் சொன்னார். ‘சியோனிய குடியேற்றத்துக்கு நீங்கள் அதிகாரபூர்வமான உறுதிமொழியைத் தாருங்கள். நாங்கள் பாலஸ்தீன நிலத்தின் பிரிட்டன் ஆதிக்கத்துக்கு முழு ஆதரவைத் தருகிறோம்’.

சுமார் ஆறு மாத காலங்கள் பிரிட்டன் அதிகாரிகளும் சியோனிய அதிகாரிகளும் இணைந்து அந்த அறிக்கையைத் தயார் செய்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தினர். ஒருவழியாக பாலஸ்தீனத்தின் கோடைக்காலம் முடிந்தவுடன் முதல் அறிக்கை தயாரானது. அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது. ‘பாலஸ்தீனத்தை யூதர்களின் நாடாக மறுகட்டமைப்பு செய்யும் கொள்கைகளுக்கு மாண்புமிகு பிரிட்டன் அரசாங்கம் ஒப்புதல் அளிக்கிறது. மேலும் சியோனிய அமைப்பு விரும்பும்பட்சத்தில் அவர்கள் முன்வைக்கும் ஆலோசனைகளையும் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறது.’

இதுதான் பிரிட்டன் யூதக் குடியேற்றத்துக்கு ஒப்புதல் அளித்த முதல் அறிக்கை. ஆனால் இந்த அறிக்கை வெளியாகவில்லை. காரணம், இதை இப்படியே வெளியிடுவது பாலஸ்தீன மக்களைக் கொந்தளிப்பில் ஆழ்த்திவிடும் என்பது பிரிட்டனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் அப்போது இங்கிலாந்தில் வாழ்ந்த யூதர்களும் சியோனியத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தபடி இருந்தனர். இங்கிலாந்தில் இருந்த மிகப்பெரிய அதிகாரம் படைத்த யூத அமைப்பு ஒன்று இந்தக் குடியேற்றத்தைக் கடுமையாக விமர்சித்து வந்தது.

யூதர்களுக்கு என்று தனி தேசம் அமையுமானால், இப்போது இருக்கும் நாடுகளில் உள்ள யூதர்கள் அந்நியர்களாகப் பார்க்கப்பட்டு விரட்டப்படுவார்கள் என்று அச்சம் தெரிவித்தது. இதனால் பாலஸ்தீனர்களையும் இங்கிலாந்து யூதர்களையும் புண்படுத்தாத வகையில் அறிக்கை பலமுறை மாற்றி எழுதப்பட்டு இறுதி வடிவம் வெளியிடப்பட்டது.

உண்மையில் இறுதி வடிவமும் மறைமுகமாக மேற்கூறிய அதே அர்த்தங்களை வெளிப்படுத்தும் வார்த்தைகளிலேயே எழுதப்பட்டிருந்தது. குறிப்பாக யூதர்களின் நாடு என்கிற வார்த்தை திரிக்கப்பட்டு ‘உறைவிடம் (National Home)’ என்று மாற்றப்பட்டிருந்தது. அர்த்தம் ஒன்றுதான்.

2 நவம்பர் 1917 அன்று இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டது. பிரிட்டன் வெளியுறவுத்துறைச் செயலாளர் பால்ஃபர் இங்கிலாந்தில் இருந்த யூத செல்வந்தரான ரோத்ஷீல்ட் என்பவருக்கு எழுதிய கடிதத்தின் வடிவத்தில் அது இருந்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது இதுதான்:

‘யூத மக்களின் விருப்பங்களுக்கு ஆதரவான இந்த அறிக்கை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை மாட்சிமை பொருந்திய அரசாங்கத்தின் சார்பில் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். யூத மக்களுக்குப் பாலத்தீனத்தில் உறைவிடம் அமைக்கப்படுவதற்குப் பிரிட்டனின் மாட்சிமை பொருந்திய அரசாங்கம் ஆதரவாக உள்ளது. இந்த இலக்கை அடைவதற்கான அனைத்து உதவிகளையும் பிரிட்டன் செய்துகொடுக்கும் என்பதில் உறுதியுடன் இருக்கிறது. ஆனால், பாலத்தீனத்தில் வாழும் யூதர் அல்லாத மக்களின் மத மற்றும் சமூக உரிமைகள் அல்லது வேறு எந்த நாட்டில் வாழும் யூத மக்களின் உரிமைகள் மற்றும் அரசியல் நிலை எதையும் மோசமாகப் பாதிக்கக் கூடாது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.’

இந்த அறிக்கை பற்றிய தகவல்களை நீங்கள் சியோனியக் கூட்டமைப்புக்கு அனுப்பினால் நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்.

இப்படிக்கு

ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபோர்.

இதுதான் அந்தக் கடிதம். யூத தேசம் அமைவதற்கு வெளிப்படையாக பிரிட்டன் ஆதரவு தெரிவித்த கடிதம். இந்த மாதிரியான ஓர் அறிக்கையைப் பெறுவதற்குத்தான் இருபது அண்டுகளுக்கு முன்பு ஓட்டோமான்களிடன் ஹெர்சல் போராடிப் பார்த்து தோல்வி கண்டிருந்தார். ஆனால் ஹெர்சல் விரும்பியதுபோலவே இப்போது மிகப்பெரிய ஏகாதிபத்திய அரசாக இருந்த பிரிட்டனிடம் இருந்து இப்படி ஒரு கடிதம் வந்துவிட்டது. ஹெர்சல் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தில், வெய்ஸ்மென் யூத நாட்டை உருவாக்குவதற்கான வேலையைத் தொடங்கி வைத்தார்.

பால்ஃபர் அறிக்கை வெளியானபோது பாலஸ்தீனத்தில் 90,000 யூதர்கள் இருந்தனர். இஸ்லாமிய-கிறிஸ்தவ அரேபியர்கள் என சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இருந்தனர். அதாவது பாலஸ்தீன மக்கள் தொகையில் 93 சதவிகிதம் அரேபியர்கள்தான். வெறும் 7 சதவிகிதம் மட்டுமே யூதர்கள். அந்த 93 சதவிகித்தினரிடம்தான் 95 சதவிகித நிலங்களும் இருந்தன. இத்தகைய நிலையில் இப்படி ஒரு கடிதம் வெளியானால் அது எத்தகைய பிரளயத்தை உண்டாக்கும் என்று நினைத்துப்பாருங்கள்.

பாலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேற்றங்களை அமைத்தபோதே எதிர்த்த அரேபியர்கள், இப்போது தங்கள் நாட்டில் ஒரு தனி நாட்டை பிரிட்டன் உருவாகப்போகிறது என்று சொன்னால் சும்மா இருப்பார்களா? அதுவும் இது போர் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் சமயம். இந்தச் சமயத்தில் அரேபியர்கள் பின் வாங்கினால் மத்தியக் கிழக்கு என்னாவது? அதை வைத்து புனையப்பட்டிருந்த கனவுகள் என்னாவது? அதனால் இந்த அறிக்கை முதலில் பாலஸ்தீன அரேபியர்களுக்குத் தெரியக்கூடாது என்பதில் பிரிட்டன் கவனமாக இருந்தது. மாறாக, அன்றைக்கு யூதர்கள் பிரதானமாக இருந்த ரஷ்யாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும்தான் இந்த அறிக்கை பிரசுரங்களாக விமானங்கள் மூலம் தூவப்பட்டன.

இதை மற்ற நாட்டு யூதர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்றதிலும் பிரிட்டனுக்கு ஓர் உள்நோக்கம் இருந்தது. இந்த அறிக்கை ரஷ்ய யூதர்களுக்குத் தெரியவந்தால் உலகப்போரின்போது அவர்களுடைய முழு ஆதரவும் தமக்குக் கிடைக்கும் என பிரிட்டன் கருதியது. அதேபோல ரஷ்யாவில் ஜார் மன்னருக்கு எதிராக உருவாகி வரும் புரட்சிகர மனநிலையையும் தகர்க்கலாம் என்று பிரிட்டன் நினைத்தது.

ஆனால் பால்ஃபர் அறிக்கை வெளியான ஐந்து நாட்களிலேயே ரஷ்யப் புரட்சி வெடித்து, லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி ரஷ்யாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஜாரின் ஆட்சிக்கு லெனின் நிரந்தரமாக முடிவுரையை எழுதினார்.

ரஷ்யாவில் புதிதாக சோவியத் ஆட்சியை நிறுவிய லெனின், ஏகாதிபத்திய கச்திகளுக்கு இடையே நடைபெறும் உலகப்போரில் பங்கேற்பதால் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எந்த பலனும் இல்லை என்பதை உணர்ந்திருந்தார். அதனால் ரஷ்யர்கள் போரில் இருந்து பின்வாங்கப்போவதாக அறிவித்தார். இதையடுத்து ரஷ்ய வீரர்கள் பாதியிலேயே போர் நடைபெறும் இடங்களில் இருந்து கிளம்பி, தங்கள் தாய்நிலம் நோக்கித் திரும்பத் தொடங்கினர். ரஷ்யக் கூட்டணியில் இருந்த பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாய்தான் இருந்தது. ஆனாலும் பெரிய வருத்தமில்லை. இப்போது ரஷ்யாவுக்கு தருவதாகச் சொல்லியிருந்த நிலங்களையும் தாங்களே பங்குபோட்டுக்கொள்ளலாம் அல்லவா?

புதிய சோவியத் அரசாங்கம் போரை விரும்பவில்லை என்று வெளிப்படையாக அறிவித்தது. ரஷ்யா தனது காலனிய ஆதிக்கத்தில் வைத்திருந்த மத்தியக் கிழக்கு, ஆசிய பகுதி மக்களின் சுதந்திரமும் அமைதியுமே தமக்கு முக்கியம் என அறிக்கை வெளியிட்டது.

‘ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்த நாட்டு மக்கள் இனி தங்கள் சொந்த நம்பிக்கைகளையும் கலாசாரங்களையும் பின்பற்றிக்கொள்ளலாம். அவர்களது தேசிய மற்றும் கலாசார நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்படலாம். ஜார் மன்னர்கள் மேற்கொண்டிருந்த ரகசிய உடன்படிக்கைகள் அனைத்தும் இனி செல்லாது’என சோவியத் அறிவித்தது.

இதுமட்டுமில்லாமல் புரட்சிக்கு முன் போல்ஷ்விக்குகள் வாக்களித்ததுபோல் சோவித் அரசு அமைந்தவுடன், ஜார் மன்னர் ஆட்சியில் ரஷ்யா மேற்கொண்டிருந்த அனைத்து ரகசிய ஆவணங்களும் பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டன. அப்போதுதான் அரபு நாடுகளைப் பங்கு பிரிப்பதற்கு பிரிட்டன்-பிரெஞ்சு நாடுகள் மேற்கொண்டிருந்த சைக்ஸ் – பிகாட் உடன்படிக்கை வெளியில் வந்தது. அப்போதுதான் பிரிட்டனின் உண்மையான நோக்கம் அரேபியர்களுக்குத் தெரியவந்தது. அத்துடன் பால்ஃபர் பிரகடனத்தையும் சோவியத் வெளியிட்டது. அப்போதுதான் தங்கள் நிலம் யூதர்களுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது என்ற உண்மையும் பாலஸ்தீன மக்களுக்குப் புரிந்தது.

0

பிரிட்டனின் குட்டு வெளியானபோது முதலில் அரேபியர்கள் அதை நம்பும் மனநிலையில் இல்லை. அரேபியர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதியின்படி பிரிட்டனுடன் இணைந்து சண்டையிட்டு துருக்கியர்களை விரட்டியிருந்தனர். அதனால் பிரிட்டனும் தங்களுக்கு வாக்குறுதி கொடுத்தபடி சுதந்திரம் கொடுத்துவிடும் என்றுதான் அவர்கள் நினைத்தனர்.

சைக்ஸ்-பிகாட் உடன்படிக்கை, பால்ஃபர் பிரகடனம் குறித்து தெரியவந்தவுடனேயே விளக்கம் அளிக்கும்படி ஹுசைன் பிரிட்டனை வலியுறுத்தினார். தொடர்ச்சியான சந்திப்புகள் நிகழ்ந்தன. அடுத்தடுத்த கடிதங்கள், தந்திகள் பிரிட்டனுக்கு அரேபியர்களால் அனுப்பப்பட்டன. ஆனால் பிரிட்டன் இந்த அறிக்கை முழுவதும் பொய் எனச் சத்தியம் செய்தது. ஜார் மன்னரின் ஆட்சியைக் கவிழ்த்த போல்ஷ்விக்குகள், துருக்கியர்கள், ஜெர்மனியர்களுடன் இணைந்துகொண்டு அரேபியர்களை முட்டாளாக்கப்பாக்கிறார்கள் என்று ஒன்றைக் காலில் நின்று சாதித்தது. போர் முடிவுக்கு வந்தவுடன் அரேபியர்கள் சுயமாக அரசை நிர்ணயம் செய்துகொள்ளும் அதிகாரம் வழங்கப்படும் என்று உறுதியளித்தது. அரேபியர்களும் அப்பாவிபோல் பிரிட்டன் சொல்லும் கட்டுக்கதைகளை எல்லாம் நம்பினர். 1918ஆம் ஆண்டு நவம்பர் மாதம் போர் முடிந்தபோதுதான் பிரிட்டிஷ் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என்பது அரேபிய உலகுக்குப் புரிந்தது.

பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் போரில் இறுதியாக இணைந்துகொண்ட அமெரிக்கா ஆகிய நாடுகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவை ஒன்றிணைந்து அழித்து ஒழித்த பகுதிகளில் அமைதியைக் கொண்டு வரும் முயற்சியாக 1919ஆம் ஆண்டு ஜனவரியில் வெர்சாய் ஒப்பந்தத்தை எழுதுவதில் மும்முரமாக இருந்தன. அதற்காக பாரிஸில் கூட்டப்பட்ட மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அரேபியர்களின் பிரதிநிதியாக ஃபைசல் சென்றிருந்தார். அப்போதுதான் அவருக்குள் இருந்த பயம் உண்மைதான் என உறுதியானது.

போல்ஷ்விக்கின் ’கற்பனை’என்று சொல்லப்பட்ட சைக்ஸ்-பிகாட் உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டே அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அரேபிய நாடுகளைப் பங்குபோடுவதற்காக பிரிட்டனும் பிரான்சும் மிகவும் காரசார விவாதங்களில் ஈடுபட்டிருந்தன.

போருக்குப் பின் பல மடங்கு வலுவடைந்திருந்த பிரிட்டன் மத்தியக் கிழக்கில் பெரும்பான்மையான நிலங்களைக் கோரியது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் ஈராக்கில் உள்ள மொசுல் எண்ணெய் கிணறுகளையும் உரிமைக் கொண்டாடியது. முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள், விமானங்கள், கப்பல்களின் காரணமாக எண்ணெய் வளங்களுக்கு கடும் கிராக்கி உருவாகி இருந்தது. இதனால் என்ணெய் வளம் கொழிக்கும் அரேபியப் பகுதிகளை பிரிட்டன் தன் ஆதிக்கத்தில் வைத்துக்கொள்ள விரும்பியது. ஈராக் மற்றும் அரேபிய தீபகற்பத்தில் இருந்து மத்தியத் தரைக்கடலில் அமைந்துள்ள பாலஸ்தீனத்தின் கைஃபா துறைமுகத்துக்கு எண்ணெய்க் குழாய் அமைக்கத் திட்டம் தீட்டி இருந்தது.

0

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகள் வாக்களித்திருந்த அரேபியர்களின் சுய நிர்ணய உரிமை எனும் வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டு வெற்றிபெற்ற அரசுகள் போரினால் அழிந்த ஜெர்மன், துருக்கிய நிலங்களை பங்குபோட்டுக்கொண்டன. இதன் விளைவாக பாலஸ்தீனத்துக்கு வழங்கப்பட்டதுதான் மேன்டேட் அந்தஸ்து. காலனிய ஆதிக்கத்துக்கு 20ஆம் நூற்றாண்டில் ஏகாதிபத்திய அரசுகள் கொடுத்திருந்த புதிய பெயர்தான் மேன்டேட்.

அதாவது மேன்டேட் உரிமையைப் பெற்ற நாடுகள் முன்னேறி, சுயமான அரசை நிர்ணயம் செய்துகொள்ளும் தகுதியைப் பெறும்வரை நிலங்களும் வளங்களும் ஏகாதிபத்திய நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதன்பிறகு அவர்கள் சுயமாக ஆட்சி செய்துகொள்ளலாம். கேட்பதற்கு நல்ல திட்டமாக இருக்கிறது இல்லையா? ஆனால் சிக்கல் என்னெவென்றால் அந்த நாடு போதுமான அளவு முன்னேறிவிட்டதா இல்லையா என்பதையும் ஏகாதிபத்திய நாடுகள்தான் முடிவு செய்யும்.

இப்படியாக பிரெஞ்சின் மேன்டேட் நாடுகளாக சிரியா, லெபனான் ஆகிய நாடுகள் உருவாகின. பிரிட்டனின் மேன்டேட் நாடாக பாலஸ்தீனம் உதயமானது.

அமைதி மாநாட்டில் பங்கேற்ற ஃபைசல் சைக்ஸ்-பிகோட் ஒப்பந்தத்தைக் கடுமையாக விமர்சித்தார். அதே மாநாட்டில் அவர் தனது அறிக்கையையும் வாசித்தார். அந்த அறிக்கையில் ஆசியாவில் உள்ள அரபு மொழி பேசும் மக்களைச் சுதந்திர அரசினை உடைய மக்கள் என அங்கீகரிக்குமாறு கோரப்பட்டிருந்தது. மேலும், சர்வதேச ஆணையத்தை சிரியாவுக்கும் பாலஸ்தீனத்தும் அனுப்பி மக்களின் விருப்பத்தைக் கேட்கும்மாறும் வலியுறுத்தி இருந்தது.

ஃபைசலின் அறிக்கையில் நியாயம் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய அமெரிக்க அதிபர் உட்ரூ வில்சன் ஒருவாறு அந்தக் கோரிக்கைக்குச் சம்மதித்தார். ஆனால் உண்மையில் அமெரிக்காவுக்கு ஃபைசலுக்கு உதவும் எண்ணம் எல்லாம் துளிக்கூட இல்லை. வில்சனுக்கு மத்தியக் கிழக்கில் அமெரிக்க மான்டேட்டை உருவாக்கும் எண்ணம் இருந்தது. இதற்காக அந்த ஆணையத்தைப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தார்.

சிரியா, பாலஸ்தீனத்தில் ஆய்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஆணையத்தில் ஹென்றி கிங், சார்லஸ் கிரேன் ஆகிய இரண்டு அமெரிக்கப் பிரதிநிதிகளையும் இடம்பெற வைப்பதாக வாக்குறுதியளித்தார். இப்போதுதான் பைசலுக்கு கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. அவர் மாநாட்டை முடித்துக்கொண்டு டமாஸ்கசுக்குத் திரும்பினார்.

0

அகண்ட சிரியாவில் இருந்த மக்கள் சுதந்திரத்திற்கு தயாராகி இருந்தனர். தேசிய காங்கிரசுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக சிரியா, பாலஸ்தீனம், லெபனானில் தேர்தல்கள் நடைபெற்றன. மக்கள் ஆர்வமாகப் பங்கேற்று வாக்களித்தனர்.

2 ஜூலை 1919 அன்று சிரியா காங்கிரஸ் டமாஸ்கஸில் கூடியது. அதன் உறுப்பினர்கள் ஒருமனதாக சைக்ஸ் -பிகாட் ஒப்பந்தம் மற்றும் பால்ஃபர் பிரகடனத்துக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றினர். அதே கூட்டத்தில் சியோனியர்களின் திட்டங்களும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. அவர்கள் பிரிட்டன், பிரான்ஸ் அரசுகளிடம் சியோனியர்கள் குறித்த முக்கிய கேள்வி ஒன்றையும் முன்வைத்தனர்.

‘2000 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளின் அடிப்படையில் சியோனியர்கள் பாலஸ்தீனத்தை யூத வீடு எனக் கூறுவதை நீங்கள் எப்படி நம்புகிறீர்கள்? சியோனியர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு 10 லட்ச அரேபிய தேசியவாதிகளுக்கு எதிராக எப்படி உங்களால் செயல்பட முடியும்?’ இதுதான் அந்தக் கேள்வி.

அதேகூட்டத்தில் சிரியா காங்கிரஸ் மேன்டேட் உரிமைக்கும் கடும் கண்டனம் தெரிவித்தது. அகண்ட சிரியா ஒன்றிணைந்த சுதந்திர நாடாக வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என வலியுறுத்தியது. இந்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு மக்களிடம் கொண்டு செல்லப்பட்டன. இதற்கு சிரியா, பாலஸ்தீனம், லெபனானில் உள்ள மக்கள் தங்களுடைய ஏகபோக ஆதரவை வெளிப்படுத்தினர்.

இதேசமயத்தில் அமெரிக்க ஏற்பாடு செய்திருந்த கிங்-கிரேன் ஆணையம் பாலஸ்தீனத்தின் யோப்பாவுக்கு வந்தது. அந்த ஆணையத்தில் இரண்டு அமெரிக்கர்கள் மட்டுமே மொத்தமாக இடம்பெற்றிருந்தனர். பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி ஆகிய அரசுகளின் உறுப்பினர்கள் யாரும் இடம்பெறவில்லை.

அந்த ஆணையம் சிரியா, பாலஸ்தீனப் பகுதிகளில் ஆறு வாரங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்குள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் மக்களிடம் பேச்சு வார்த்தை, வாக்கெடுப்புகளை நடத்தியது. மேலும் அவர்களது கோரிக்கைகளை எல்லாம் கேட்டுக்கொண்டது. இறுதியில் அந்த ஆணையம் இரண்டு முக்கியமான முடிவுகளுக்கு வந்தடைந்தது. அதன் சுருக்கம் இதுதான்: முதலில் பெரும்பான்மை மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்றவாறு சிரியா, பாலஸ்தீனம், லெபனான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்த பகுதியாகப் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்கு அமெரிக்க மேன்டேட் அமைய வேண்டும்.

இரண்டாவது, யூதப் பிரதிநிதிகளிடம் பேசியதில் இருந்து சியோனியர்கள் பாலஸ்தீனத்தில் வாழ்ந்து வரும் பெரும்பான்மையான மக்களின் நிலங்களை வாங்கிக்கொண்டு அவர்களை வெளியேற்றப் பார்க்கிறார்கள் என்பது தெரிகிறது. அவர்கள் ஆயுதங்கள் இல்லாமல் பாலஸ்தீனர்களை வெளியேற்ற முடியாது என்று பிரிட்டிஷ் பிரதிநிதிகள் கருதுகிறார்கள். மேலும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்பட்ட சம்பங்களின் அடிப்படையில் இன்றைய பாலஸ்தீனத்தில் தங்களுக்கு உரிமை இருப்பதாக சியோனியர்கள் கூறுவது நம்பகமானதாக இல்லை.

இந்த ஆணைய முடிவுகளுக்குப் பிறகு 1920ஆம் ஆண்டு பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்க நாடுகள் இத்தாலியில் உள்ள சான் ரெமோ எனும் இடத்தில் சந்தித்தன. அங்கே அமெரிக்கா தன்னுடைய பரிந்துரைகளை முன்வைத்தது. ஆனால் பிரிட்டனும் பிரான்சும் அவற்றைக் காதில்கூட வாங்கிக்கொள்ளவில்லை. அன்றைய தேதியில் பிரிட்டன், பிரான்சுடன் ஒப்பிடும்போது அமெரிக்கா ஒரு கத்துக்குட்டி தேசம். அதனால் மத்தியக் கிழக்கில் ஒரு மேன்டேட் அமைக்க வேண்டும் என்கிற அதன் விருப்பத்தை அமெரிக்காவால் திணிக்க முடியவில்லை.

சொல்லப்போனால் அகண்ட சிரியாவில் இருக்கும் மக்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன விரும்புகிறார்கள் என்று அந்த மாநாட்டில் கலந்துகொண்ட எந்த அரசாங்கத்துக்கும் கவலையே இல்லை. சிரியா மற்றும் லெபனான் மேன்டேட்டுகளை பிரான்ஸ் பெற்றது. பிரிட்டன் தான் விரும்பியவாறு பாலஸ்தீனத்தையும் ஈராக்கையும் பெற்றது. இந்த மேன்டேட் உரிமைதான் பால்ஃபர் பிரகடனத்தை வெளிப்படையாக அமல்படுத்துவதற்கான சுதந்திரத்தை பிரிட்டனுக்கு வழங்கி இருந்தது.

1920ஆம் ஆண்டு பிப்ரவரியில் பாலஸ்தீனத்துக்கு வந்த பிரிட்டன் அதிகாரிகள் பொது மக்களுக்கு முன்பாக பால்ஃபர் பிரகடனத்தை வாசித்தனர். இது பாலஸ்தீன நகரங்களில் பெரும் எதிர்ப்புகளை கிளப்பியது. ஏப்ரல் மாதம் சான் ரெமோவில் மேற்கூடிய மாநாடு நடைபெற்ற அதே மாதத்தில், ஈஸ்டர் கொண்டாட்ட நாட்களில் ஜெருசலேமில் கலவரங்கள் வெடிக்கத் தொடங்கி இருந்தன. பிரிட்டன் அதிகாரிகள் பாலஸ்தீனத்தை ஆட்சி செய்ய தயாரான நேரத்தில், அவர்களுடைய ஆதரவில் குடியேறியுள்ள யூதர்களுக்கு எதிராகப் பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை கொடுக்க தொடங்கி இருந்தனர்.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *