Skip to content
Home » பாலஸ்தீனம் #10 – யூத சோசியலிசம்

பாலஸ்தீனம் #10 – யூத சோசியலிசம்

பாலஸ்தீனம்

‘பாலஸ்தீனம் அரேபிய நிலம். அங்குள்ள இஸ்லாமியர்கள் அரேபியர்கள், கிறிஸ்தவர்கள் அரேபியர்கள், ஏன் யூத மக்களும் அரேபியர்கள்தாம். சிரியாவில் இருந்து பாலஸ்தீனத்தைப் பிரித்து சியோனியர்களின் தேசமாக மாற்றினால் அங்கு அமைதி குடிகொள்ளாது.’

பாலஸ்தீனத்தில் வெளிவந்த செய்தித்தாள் ஒன்று மேன்டேட் சகாப்தத்தில் நடைபெறபோகும் ரத்தச் சரித்திரத்தை 1920ஆம் ஆண்டிலேயே கணித்திருந்தது. உண்மையில் அதுதான் நடந்தது.

0

1948ஆம் ஆண்டு இஸ்ரேல் எனும் யூத தேசம் உதயமானபோது அங்கிருந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டார்கள். லட்சக்கணக்கானோர் விரட்டியடிக்கப்பட்டார்கள். இந்த நிகழ்வை ‘அல் நக்பா’ (பேரழிவு) எனப் பாலஸ்தீன மக்கள் நினைவுகூர்கிறார்கள். உண்மையில் இஸ்ரேல் உருவாவதற்கு 28 ஆண்டுகளுக்கு முன்பே 1920இல் யூதக் குடியேற்றம் வெகுத் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பாலஸ்தீனச் செய்திதாள் ஒன்று அந்நிகழ்வை ‘ஆம் அல் நக்பா’என்றே குறிப்பிட்டிருந்தது.

1920இல் சிரியா, லெபனான், பாலஸ்தீனம் என்று மூன்று துண்டுகளாக அகண்ட சிரியா பிரிக்கப்பட்டது. இரண்டு துண்டுகள் பிரான்ஸிடம் ஒப்படைக்கப்பட்டன. ஒரு துண்டை பிரிட்டன் எடுத்துக்கொண்டது. ஆக்கிரமிப்பாளர்கள் பிரிக்கப்பட்ட நாடுகளுக்குள் காலடி எடுத்துவைத்தபோது கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள நேர்ந்தது.

புதிதாக உருவாகி இருந்த சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் ஏராளமான மக்கள் கூடி நின்று பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்தார்கள். விளைவு, அவர்கள் ஈவு இரக்கமின்றிக் கொன்று குவிக்கப்பட்டனர். சிரியாவில் ராணுவ ஆட்சியை அமல்படுத்தி கடும் ஒடுக்குமுறையை ஏவியது பிரெஞ்சு அரசு. இந்தச் சமயத்தில் அங்கிருந்த ஃபைசல் தப்பியோடினார்.

மறுபுறம் பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குள் வந்த ஈராக்கிலும் ஆயுதம் தாங்கிய கலகம் வெடித்தது. பிரிட்டன் பார்த்தது, பிரான்ஸைப்போல ராணுவ ஆட்சியை நிறுவுவது எல்லாம் நீண்ட நாட்கள் வேலைக்கு ஆகாது என அதற்குத் தெரிந்திருந்தது. புதிதாக ராஜதந்திரம் ஒன்றைச் செய்து, சிரியாவில் இருந்து தப்பியோடிய ஃபைசலை அழைத்து அவரை ஈராக்கின் மன்னராக நியமிப்பதாக அறிவித்துவிட்டது. ஆனால் அவர் பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டே ஆட்சி செய்ய வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தது. அவரும் மகிழ்ச்சியாக இதனை ஓப்புக்கொண்டார்.

அவ்வளவுதான் ஈராக்கின் பிரச்னையை சுமூகமாக முடித்து வைத்தது பிரிட்டன். என்ன இருந்தாலும் அவர் அரேபியர் அல்லவா, மக்களும் அமைதியாகினர். இதனைத் தொடர்ந்து ஃபைசலின் சகோதரர் அப்துல்லாவையும் அழைத்து அவருக்கும் டிரான்ஸ் ஜோர்டனின் மன்னர் பதவியை வழங்கி கெளரவப்படுத்தியது. டிரான்ஸ் ஜோர்டன் என்பது கிழக்கு பாலஸ்தீனைக் கூறுபோட்டு ஏற்படுத்தப்பட்ட நாடு.

இவ்வாறு அரபு புரட்சிக்குத் தலைமை தாங்கிய ஆளுமைகளுக்குப் பொம்மை ஆட்சியை வழங்கியவுடன் அவர்களும் வாயை மூடிக்கொண்டு சுதந்திரம் வழங்கிய பிரிட்டனுக்கு நன்றி சொல்லிவிட்டு அரசாளத் தொடங்கிவிட்டனர். ஆனால் இந்த நடவடிக்கையால் பாலஸ்தீனர்களின் கடைசி நம்பிக்கையும் நொறுங்கிவிட்டது.

பாலஸ்தீனர்கள் பிரிட்டனுக்கு எதிரான போராட்டத்தை அகண்ட சிரியா மக்களுடன் ஒன்றிணைந்து நடத்துவதே பலன் தரும் என்று நினைத்து வந்தனர். ஆனால் அந்த நிலம் துண்டாக்கப்பட்டு பிரெஞ்சு ராணுவத்தால் சிரிய தேசிய இயக்கங்கள் ஒடுக்கப்பட்டதும், அங்கிருந்த ஃபைசல் பிரிட்டனுக்கு ஆதரவாக ஒடுங்கிப்போனதும் பாலஸ்தீனர்களின் நம்பிக்கையைச் சுக்குநூறாக உடைத்தது. அவர்கள் சிரிய மைய அரசியல் களத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இனி சிரியாவிற்கும் உங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. சிரிய மக்கள் உங்களது போராட்டங்களில் பங்கேற்க மாட்டார்கள் என்றது இந்தச் செய்தி.

இந்தச் சமயத்தில்தான் பாலஸ்தீனத்தின் அரசாகப் பொறுப்பேற்றுக்கொண்டது பிரிட்டன். பாலஸ்தீனத்தைப் பொருத்தவரை பிரிட்டனுக்கு வேறு ஒரு திட்டம் இருந்தது. ஃபைசலுக்கு வழங்கியதுபோலவோ அப்துல்லாவுக்கு வழங்கியதுபோலவோ பாலஸ்தீனத்தின் ஆட்சி அதிகாரத்தை அரேபியர்களிடம் வழங்கப்போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தது பிரிட்டன். மாறாக பால்ஃபர் பிரகடனத்தின்படி பாலஸ்தீனத்தின் அதிகாரம் சியோனியர்களுக்குத்தான் என முடிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் பாலஸ்தீனத்தின் உயர் ஆணையராக ஹெர்பர் சாமுவேல் எனும் பிரிட்டன் சியோனியத் தலைவர் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து 1920ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலஸ்தீன அரபு காங்கிரஸ் கூடியது. இதுதான் பாலஸ்தீனர்கள் மட்டும் இடம்பெற்றிருந்த முதல் அரசியல் கூட்டமைப்பு. ஆனால் இதன் உறுப்பினர்களில் பொதுமக்களிலிருந்து யாரும் இடம்பெறவில்லை. பெரும் வணிகர்களும் நிலக்கிரார்களுமே காங்கிரஸின் உறுப்பினர்களாக இருந்தனர். தங்கள் நிலத்தில் வளர்ந்து வரும் சியோனியம், தங்களுடைய அரசியல் பதவிகளுக்கும் பொருளாதார ஆதிக்கத்துக்கும் ஆபத்து விளைவிக்கிறது என்றவுடன்தான் அவர்கள் செயல்படத் தொடங்கினர்.

இந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் 24 அரேபிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தனர். அதில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என்று இரு மதத்தினருமே அடங்கி இருந்தனர். இவர்கள் தொடர்ந்து ஆலோசித்து பிரிட்டன் மேன்டேட் அரசுக்குக் கோரிக்கை மனுக்களை அளிக்க முடிவு செய்தனர். அந்தக் கோரிக்கைகள் மூன்று விஷயங்களை உள்ளடக்கியதாக இருந்தது.

1. சியோனியத்துக்கு பிரிட்டன் தரும் ஆதரவை நிறுத்த வேண்டும்.

2. யூதக் குடியேற்றத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

3. பாலஸ்தீனர்களையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவ அரசை உருவாக்க வேண்டும்.

மேற்கூறிய கோரிக்கைகளைக் கொண்ட மனுக்களைத் தொடர்ந்து அளிப்பதன் மூலம் தாங்கள்தான் பாலஸ்தீனத்தின் உண்மையான தலைவர்கள் என்று பிரிட்டனிடம் எடுத்துரைக்கவே அவர்கள் விரும்பினர்.

மேன்டேட் காலத்தின் தொடக்கத்தில் பாலஸ்தீனத்தின் பெரும்பான்மை மக்கள் இந்த அரேபிய பிரதிநிதிகளையே நம்பிக்கை நாயகர்களாகக் கருதினர். அவர்கள் வைக்கும் எந்தக் கோரிக்கைக்கும் மறுபேச்சு இல்லாமல் ஆதரவு வழங்கி வந்தனர்.

காங்கிரஸ் உருவாவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு நவம்பர் 2ஆம் தேதி பால்ஃபர் பிரகடனம் வெளியாகி ஓர் ஆண்டு ஆகியிருந்தது. அந்த நாளை பாலஸ்தீனர்கள் துக்க தினமாக அனுசரித்தனர். அரேபியர்கள் அனைவரும் கடைகளை அடைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீனத்தில் வெளியான செய்தித்தாள்களின் முதல் பக்கம் எந்த ஒரு செய்தியும் இல்லாமல் கறுப்பு நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தது. மக்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடிகளை ஏற்றி, வாசலில் கறுப்பு நிற கம்பளங்களைத் தொங்கவிட்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

யூதக் குடியேற்றத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது. 1920ஆம் ஆண்டு பெய்ரூட்டில் வாழும் பாலஸ்தீன நிலக்கிழார் ஒருவரிடம் இருந்து சியோனிய அமைப்பு அன்றைய தொகையில் சுமார் 3 லட்சம் பவுண்டுகள் மதிப்புள்ள நிலங்களை வாங்கி இருந்தது. பாலஸ்தீனத்தின் வடக்குப் பகுதியில் இருந்த அந்த நிலத்தில் 22 கிராமங்கள் அமைந்திருந்தன. சியோனியர்கள் அந்த நிலங்களைக் கைப்பற்றியவுடன் அங்குள்ள விவசாயிகளை வெளியேற்றத் தொடங்கினர். சுமார் 688 விவசாயக் குடும்பங்கள் தங்கள் வீடுகளில் இருந்து துரத்தப்பட்டனர். அந்தக் கிராமங்கள் முழுவதுமே ஒன்றுவிடாமல் அழித்தொழிக்கப்பட்டது. பிறகு அந்தப் பகுதிகளில் புதிய யூதக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டன.

சியோனியர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறுவதும், நிலங்கள் அபகரிக்கப்படுவதும் அதிகரிக்கத் தொடங்கியவுடன், விவசாயிகள் நகரங்களுக்குக் குடிபெயர்ந்து தங்க இடம் இல்லாமல் சாலைகளில் தாற்காலிகக் குடில்கள் அமைத்து தங்கும் நிலை ஏற்பட்டது. 1921ஆம் ஆண்டு பிறந்தவுடன் இந்தக் கோபம் அனைத்தும் யோப்பா நகரத்தில் வன்முறையாக வெடிக்கத் தொடங்கியது.

யோப்பா நகரத்தில் ஊர்வலம் ஒன்றின் தொடர்பாக இரு சியோனிய அமைப்புகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் இரு தரப்புகளும் அடித்துக்கொள்ள, அங்கே நடப்பது என்னவென்று புரியாத அரேபியர்கள் தங்கள் மீதுதான் தாக்குதல் நடத்தப்படுகிறதோ என நினைத்து அவர்களும் கற்களை வீசத் தொடங்கினர். சிறிது நேரத்தில் ஒரே களேபரமாகி யூதக் குடியேற்ற மையங்கள்மீது பாலஸ்தீனர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 13 யூதர்களும், 47 பாலஸ்தீனர்களும் உயிரிழந்தனர். மேலும் அந்நகரத்தில் இருந்த பல்வேறு இடங்களில் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்தத் தாக்குதலை விசாரிப்பதற்காக பிரிட்டன் அரசாங்கம் ஹேகிராஃப்ட் ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையம் பாலஸ்தீனர்களின் கொலைவெறிக்கு இரண்டு காரணங்களைப் பட்டியலிட்டது. ஒன்று, அதிகரித்து வரும் சியோனியக் குடியேற்றம். இரண்டாவது பாலச்தீனத்தில் யூத நாட்டை அமைக்கத் திட்டமிடுவது.

இந்த அறிக்கையைப் பரிசீலிப்பதாகச் சொன்ன பிரிட்டன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வழக்கம்போல யூதக் குடியேற்றங்களை அனுமதித்து வந்தது. முந்தைய ஆண்டுதான் பிரிட்டிஷ் அரசு வெள்ளை இதழ் எனும் அறிக்கையை வெளியிட்டு பாலஸ்தீனத்தின் பொருளாதார நிலைமையை ஆராய்ந்து அதற்கு ஏற்றாற்போர் குடியேற்றத்தில் இடஒதுக்கீடு செய்து குறிப்பிட்ட ஆட்களை மட்டும் அனுமதிப்போம் எனச் சத்தியம் செய்திருந்தது. ஆனால் வழக்கம்போல இந்த வாக்குறுதியை பிரிட்டன் காற்றில் பறக்கவிட்டிருந்தது.

பாலஸ்தீனத்தை யூத நாடாக மாற்றுவதற்கு அங்கு அதிகம் யூதர்களைக் குடியேற்றுவது சியோனியர்களுக்குத் தேவையாக இருந்தது. இதனால் அந்த எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு என்னவெல்லாம் செய்யமுடியுமோ அனைத்தையும் சியோனியர்கள் செய்துகொண்டிருந்தனர்.

முதல் உலகப்போரின் முடிவின்போது 65,000 யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறி இருந்தனர். 1919 முதல் 1923வரை 35,000 யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு வந்திருந்தனர். 1925இல் மட்டும் 35,000 பேர் வருகை புரிந்தனர். இவ்வாறு யூதக் குடியேற்றம் காட்டாற்று வெள்ளம்போல அதிகரித்து வந்தது.

இந்தக் குடியேற்றங்களுக்கு ஐரோப்பாவில் நிலவி வந்த பிரச்னைகள் நேரடிக் காரணமாக அமைந்தன. அங்கு நிலவி வந்த பொருளாதார மந்தநிலை மற்றும் யூத இனவெறி காரணமாக பலர் தங்கள் சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு பாலஸ்தீனத்தில் குடியேறிக்கொண்டிருந்தனர். இதில் பெரும்பான்மையானோர் போலாந்தில் இருந்து வந்திருந்தனர்.

சொல்லப்போனால் ஐரோப்பாவில் இருந்து கிளம்பிய யூதர்களுக்கு முதல் நோக்கமாக பாலஸ்தீனம் இருக்கவில்லை, அமெரிக்காவே இருந்தது. அமெரிக்காவில் நிலவி வரும் வாய்ப்புகளுக்காக அங்கே குடியேற நினைத்துதான் அவர்கள் சென்றுகொண்டிருந்தனர். ஆனால் அவர்களிடம் அதிகம் சோசியலிச ஈடுபாடுகள் இருப்பதாகக் கருதிய அமெரிக்கா 1923ஆம் ஆண்டு கிழக்கு ஐரோப்பியர்கள் குடியேறுவதில் பல கெடுபிடிகளைக் கொண்டு வந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த யூதர்கள் எங்கு செல்வது என்று குழம்பியபோது, இதனைப் பயன்படுத்திய சியோனிய அமைப்புகள் அவர்களை பாலஸ்தீனம் வரவழைத்தன.

இத்தனை யூதர்கள் திடீரென்று படையெடுத்தால் பாலஸ்தீனத்தால் தாங்க முடியுமா? அதன் பொருளாதாரம் ஆட்டம் காண தொடங்கியது. இந்தப் பாதிப்பும் பாலஸ்தீன அரேபியர்களை வஞ்சித்தது.

சியோனியர்கள் யூதர்களுக்கு என்று தனியாகத் தொழிற்சாலைகளைத் தொடங்கினர். அவர்களுக்கு என்றே தனியாக வங்கிகள், பள்ளிக்கூடங்கள், தொழிற்சங்கங்கள் தொடங்கப்பட்டன. யூதர்களுக்கு என்று தனி கிராமங்கள் இருந்தன. ஏன் தனி துறைமுக நகரமும்கூட இருந்தது.

இன்றைய இஸ்ரேலின் முக்கிய நகரங்களின் ஒன்றான டெல் அவிவ் இப்படித்தான் உருவாக்கப்பட்டது. 1903ஆம் ஆண்டு யோப்பாவிற்கு அருகே புதிதாக உருவாக்கப்பட்ட அந்நகரம், யோப்பா துறைமுகத்தின் வணிகத்தையும் கப்பல்கள் வருகையையும் அபகரிக்கவே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது. யூத தேசிய நிதி நிலங்களை வாங்கும்போது விவசாய நிலங்களை மட்டும் வாங்கவில்லை, எதிர்கால யூத தேசம் அமைவதற்கு எந்தெந்த கட்டமைப்புகள் எல்லாம் இருக்க வேண்டுமோ அத்தனையும் முன்பே தீர்மானிக்கப்பட்டு, திட்டமிட்டு வாங்கப்பட்டன, ஏற்படுத்தப்பட்டன.

குறிப்பாக சியோனிய தொழிலாளர் அமைப்புகள் பாலஸ்தீனத்தை வஞ்சிப்பதில் பெரும் பங்கு வகித்தன. சியோனியர்கள் யூதர்களுக்கு என்று பிரத்தியேகமான ’ஹிஸ்டாட்ரட்’ எனும் தொழிற்சங்கத்தை 1920களில் ஏற்படுத்தினர். இந்த அமைப்பு யூதர்களை அரபு மக்களிடம் இருந்து பிரிப்பதில் பெரும் ஈடுபாடு காட்டியது. குறிப்பாக இந்தச் சங்கம் பாலஸ்தீன எதிர்ப்பு நடவடிக்கைகளின் கூர்முனையாகச் செயல்பட்டது.

ஹிஸ்டாட்ரட் தனது திட்டங்களை எல்லாம் சோசியலிச திட்டங்கள் என்று அறிவித்துக்கொண்டு பிரிவினையை ஏற்படுத்தும் வேலைகளில் இறங்கியது. இந்தச் சங்கம் அமையப்போகும் யூத தேசம் யூதத் தொழிலாளர்கள் சிந்திய ரத்தத்தால், அவர்கள் சிந்திய வியர்வையால் மட்டுமே எழ வேண்டும் என்று கூறி வந்தது. ‘யூத நிலம், யூதத் தொழிலாளர்கள், யூத உற்பத்தி’ – இது மூன்றுமே யூத தேசத்தின் அடிப்படைகள் என்று கூறி வந்த ஹிஸ்டாட்ரட் யூதர்கள் அரேபியர்களை விவசாய, தொழிற்சாலைப் பணிகளில் அமர்த்தக்கூடாது என்று வற்புறுத்தியது.

இதன்படி யூத அமைப்புகள் அவர்களுடைய நிலங்களை யூதர்களுக்கு மட்டுமே குத்தகைக்கு விட்டன. யூத விவசாயப் பண்ணைகள், தொழிற்சாலைகள் யூதர்களை மட்டுமே பணிக்கு அமர்த்தின. யூதர்கள் அல்லாத நிலங்களில் இருந்து வரும் காய்கறிகள், பழங்களை யூதர்கள் புறக்கணித்தனர். இவை அனைத்தும் சோசியலிசம் என்ற பெயரில் செய்யப்பட்டு வந்தன.

உண்மையில், சோசியலிசம் என்ற போர்வையில் பொருளாதார வாய்ப்புகளை பாலஸ்தீனர்களிடமிருந்து பிடுங்கி அவர்களைத் தனிமைப்படுத்தும் வேலையைத்தான் அந்தத் தொழிற்சங்கம் செய்தது. இது ஒருபுறம் நடக்க, இதனால் வாய்ப்பு பறிக்கப்பட்ட பாலஸ்தீனர்களை அடிமாட்டு விலைக்கு கூலி கொடுத்து வேலை வாங்கிக்கொண்டிருந்தார்கள் யூத வியாபாரிகள்.

ஹிஸ்டாட்ரட்டின் திட்டம் பெரும்பாலான யூதர்களை பாலஸ்தீனம் வரவழைப்பதிலும் முக்கியப் பங்கு வகித்தது. ஐரோப்பாவின் மந்த நிலையால் வேலையிழந்து, கையில் காசில்லாமல் வாழ வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்ட யூதர்கள் பாலஸ்தீனத்தில் சோசியலிச ஆட்சி நடப்பதாகக் கருதிக்கொண்டு படையெடுத்தனர். இவர்கள் எல்லோரும் ஐரோப்பாவில் சோசியலிச இயக்கங்களில் பங்கெடுத்தவர்கள் என்பதால் சியோனிய தலைவர்களின் நம்பிக்கையூட்டும் பேச்சு அவர்களை வெகுவாக ஈர்த்தது. இவர்கள் அனைவருக்கும் யூதர்களே பாலஸ்தீனத்தின் வரலாற்று உரிமையாளர்கள் என்ற போதனைகளும் வழங்கப்பட்டன. அதனால் அவர்களும் பாலஸ்தீனர்களை விலக்கிய ஓரு பொருளாதாரம் உருவாகிக் கொண்டிருப்பதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் பாலஸ்தீனர்களை எதிரிகளைப்போல நடத்தத் தொடங்கினர்.

1920களில் யூதக் காலனிகள் வளர்ச்சியடைய தொடங்கிய நேரத்தில் யூதத் தொழிற்சங்கமும் சில தைரியமான முன்னெடுப்புகளை எடுக்கத் தொடங்கின. ஹிஸ்டாட்ருட்டின் உரிப்பினர்கள் ஆயுதங்களை ஏந்தி காவலர்கள்போல யூத விவசாயப் பண்ணைகளில் நிற்கத் தொடங்கினர். அரேபியர்கள் யாருக்கும் யூதர்கள் வேலை கொடுக்காமல் தடுப்பதற்கே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சில சமூக ஆர்வலர்கள் சந்தைகளில் நுழைந்து அரேபிய நிலங்களில் விளைந்த காய்கறிகளில் மண்ணெண்ணையை ஊற்றுவது, அரேபியப் பண்ணைகளில் விளைந்த முட்டைகளைப் பாழ்படுத்துவது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

சொல்லப்போனால் இந்த ஹிஸ்டாட்ரட் தலைவர்கள்தான் பின்னாளில் சியோனிய இயக்கங்களில் தலைவரானர்கள். இஸ்ரேலின் மூன்று பிரதமர்களான டேவிட் பென் குரியன், கோல்டா மேயர், லெவி எக்ஸ்கோல் ஆகியோர் இந்த தொழிற்சங்கத் தலைவர்களாக இருந்து பின் அரசியலுக்கு வந்தவர்கள்தாம்.

ஹிஸ்டாட்ரட் எதிர்காலத்தில் அமையப்போகும் யூத தேசத்திற்குச் சிறந்த நிர்வாகிகளை உருவாக்கும் பயிற்சிகளைத் தொடக்கத்தில் இருந்தே மேற்கொண்டு வந்தது. அந்தத் தொழிற்சங்கமே வணிகத்தில் ஈடுபடுவது, நிதிகளை ஒதுக்கி, கட்டடங்களை ஏற்படுத்துவது, யூதர்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதி செய்வது, விவசாயக் குடியேற்றங்கள் வளர்ச்சியைக் கண்காணிப்பது என்று அதன் ஆதிக்கத்தைப் பல்வேறு தளங்களுக்கு விரிவு செய்தது.

உண்மையில் அங்கு இருந்த சிறிய பாலஸ்தீன கம்யூனிஸ்ட் கட்சியே இந்த சியோனிய சோசியலிசத்துக்குப் பின் உள்ள பித்தலாட்டங்களைப் பரப்புரை செய்தது.

‘சியோனிய முதலாளிகள் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நிலைமையைப் பயன்படுத்தி யூதர்களைச் சுரண்டும் கருவிகளாக மாற்றி பாலஸ்தீனத் தொழிலாளர்களை வஞ்சிக்கின்றனர்’ என்று சுட்டிக்காட்டியது.

ஆனால் வழக்கம்போல இந்த கம்யூனிஸ்டுகளின் குரல் சிறுபான்மையினர் குரலாகவே ஒடுங்கியது. இவர்களுக்கு மாற்றாக சியோனியர்கள் ஐரோப்பா, அமெரிக்காவில் இருந்து வரும் யூதர்களுக்குத் தங்களால் யூத மக்களுக்கு ஏற்பட்ட முன்னேற்றங்களை அடையாளம் காட்டினர். தங்கள் கட்டமைப்பால் யூதர்கள் அடைந்த வளர்ச்சியைக் குறிப்பிட்டு பிரசாரம் செய்தனர்.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் யூத தேசிய நிதி பெரும் மதிப்பிலான தொகையை யூதர்களுக்கு வழங்கி பாலஸ்தீனத்தில் வாழாத நிலக்கிழார்களிடம் இருந்து நிலங்களை வாங்குவதற்கும், கடனில் சிக்கித் தவிக்கும் சிறிய விவசாயிகளுக்கு அழுத்தம் கொடுத்து நிலங்களைக் கைப்பற்றுவதற்கும் உதவிக்கொண்டிருந்தது. இவ்வாறு வாங்கப்பட்ட நிலங்களில் இருந்து விவசாயக் கூலிகள் வெளியேற்றப்பட்டனர்.

1929 வாக்கில் சியோனியக் குடியேற்றங்கள் கிட்டத்தட்ட 2000 பாலஸ்தீனக் குடும்பங்களை அவர்களுடைய சொந்த நிலங்களில் இருந்து விரட்டியிருந்தன. அந்த நிலங்களிலேயே அவர்கள் கூலி வேலை செய்யும் நிலையும் ஏற்பட்டது. சில அரேபியர்கள் சிறிய அளவிலான அரபுத் தொழிற்சாலைகளில் பணியாற்றினர். ஆனால் பெரும்பாலான அரேபியர்கள் வேலை வாய்ப்புகள் எதுவும் இன்றியே வாழும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர்.

ஊதிய நிலையிலும் பாலஸ்தீனர்களுக்கும் யூதர்களுக்கும் வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடாக இருந்தது. 1929ஆம் ஆண்டு யூதத் தொழிலாளர்கள் பாலஸ்தீனர்களைவிட ஒன்பது மடங்கு அதிகச் சம்பளத்தைப் பெற்றனர். சியோனியக் குடியேற்றங்கள் முதலாளித்துவப் பொருளாதார முறையைப் பின்பற்றியதால் அவர்கள் பொருளாதாரம் வேகமாக விரிவடைந்ததோடு நில்லாமல், பாலஸ்தீனத்தின் பாரம்பரியப் பொருளாதாரத்தையும் ஆட்டம் காண வைத்தது.

1928ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யூத நிறுவனம் உலகளவில் சியோனியசத்திற்காக நிதி திரட்டிக்கொண்டிருந்தது. இதைத் தவிர பிரிட்டனும் சியோனியர்களுக்குப் பயன் தரும் வகையில் 90% அனைத்துப் பொருளாதார உதவிகளை செய்து வந்தனர். இந்த நிதிகளே புதிய வியாபாரத்தைத் தொடங்குவதற்கும், அதிக நிலங்களை வாங்குவதற்கும் முதலீடாக அமைந்தன.

இதற்கு மாறாக பாலஸ்தீனர்களின் கூப்பாடு பிரிட்டன் அதிகாரிகளின் காதுகளில் விழவே இல்லை. பாலஸ்தீன விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் கடன் தரும் வங்கிகளை ஏற்படுத்தித் தரக்கோரியும், பாலஸ்தீனப் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் கடன் கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்தித் தரும்படியும் பாலஸ்தீனர்கள் கேட்டு வந்தனர். இதற்கு பிரிட்டன் ஒரு முயற்சியும் செய்யவே இல்லை.

சியோனியர்களுக்கு பொருளாதார வளர்ச்சிக்கான அனைத்துச் சலுகைகளும் வழங்கப்பட்டன. மின்சாரத்துக்கும் பாசனத்துக்கும் ஜோர்டன் ஆற்றின் நீரை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள யூதர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அரேபியனாக இருந்தால் அந்த உரிமை கிடையாது. இதுபோன்ற சலுகைகளைப் பயன்படுத்தி சியோனிய வியாபரிகள் சாக்கடலில் இருந்து உப்பு எடுக்கும் வியாபாரம், புதிய துறைமுகங்களை அமைக்கும் வேலைகளில் ஈடுபட்டனர்.

இத்தனைப் பொருளாதார நலன்களைப் பெற்ற சியோனியர்கள் அடுத்து பாலஸ்தீன அடையாளங்களையும் ஆட்சியையும் ஆக்கிரமிக்கும் வேலைகளில் இறங்கினர். இதுதான் பாலஸ்தீனப் புரட்சிக்கு முதல் விதையைத் தூவியது.

0

15 ஆகஸ்டு 1929 அன்று சியோனியக் குடியேற்றவாதிகள் ஜெருசலேமில் இருந்த அழுகைச் சுவரைச் (Wailing wall) சுற்றிப் பெரும் படையுடன் சூழ்ந்தனர். இந்தச் சுவர்தான் சாலன் ஆலயம் இருந்ததன் மிச்சம் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை முகமது நபி விண்ணுலகம் சென்று திரும்பி வந்து இறங்கியதாகக் கருதப்படும் Dome of the Rock அமைந்திருக்கும் இடம்.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் கூடிய குடியேறிகள் முதலில் சியோனிய தேசியக் கொடியைப் பறக்கவிட்டனர். பின் சியோனிய தேசிய கீதத்தை ஒற்றைக் குரலுடன் பாடினர். இது இஸ்லாமியர்களிடையே சங்கடத்தை ஏற்படுத்தியது.

உண்மையில் தாவீதின் நட்சத்திரம் அடங்கிய கொடியே சியோனியர்களின் கொடியாக இருந்தது. தாவீதனும் தாவூத் என்ற பெயரில் இஸ்லாமியர்கள் வழிபடும் நபிமார்தான். ஆனால் இப்போது அவருடைய நட்சத்திரம் ஆக்கிரமிப்பின் அடையாளமாகிப் போயிருந்தது. இத்துடன் வேறு ஒரு செயலும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது அங்கு வந்திருந்த சில வலதுசாரி சியோனியர்கள் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். அதில் ஆயுதம் துணைக்கொண்டு பாலஸ்தீனத்தைக் கைப்பற்றுவோம் என்று எழுதியிருந்தது. இதுதான் இஸ்லாமியர்களின் கோபத்தைத் தூண்டியது.

மறுநாள் சியோனியர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாலஸ்தீன அரேபியர்கள் அங்கு கூடினர். அவர்கள் வெறும் எதிர்ப்பைப் பதிவு செய்யத்தான் அங்கு கூடியிருந்தனர். ஆனால் இஸ்லாமிய வழிபாட்டுத்தலம் யூதர்களால் ஆபத்தில் இருப்பதாக செய்தி காற்றில் தீயைப்போல பரவவே ஆகஸ்டு 23ஆம் தேதி விவசாயிகள் படையெடுத்து வந்து ஜெருசலேமிற்குள் நுழைந்தனர். ஏற்கெனவே பொருளாதார ரீதியாக தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்ற கோபத்தில் இருந்த விவசாயிகளுக்குத் தங்கள் அடையாளமும் அழிக்கப்படுகிறது என்ற உணர்வு எழுந்ததன் விளைவாகக் கலவரம் உருவெடுத்தது. இந்தக் கலவரம் ஜெருசலேமில் இருந்து சுற்றுவட்டார நகரங்களுக்கும் பரவத் தொடங்கியது.

உடனே பிரிட்டன் படை சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டது. அவர்கள் வந்து குண்டுகளை வீசி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தபோது 133 யூதர்களும் 116 பாலஸ்தீனர்களும் இறந்திருந்தனர். இதில் பெரும்பாலான பாலஸ்தீனர்கள் பிரிட்டன் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனர்கள் கடும் சீற்றத்தில் இருந்தனர். நடைபெறும் சியோனிய அத்துமீறல்களுக்கு எதிராக பிரிட்டன் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். இதற்குத் தங்களுடைய அரபுப் பிரதிநிதிகள் களத்தில் முன்நின்று உதவுவார்கள் என்றும் நினைத்தனர். ஆனால் நடந்தது வேறொன்றாக இருந்தது.

இந்தக் கலவரத்தையும் வழக்கம்போல ஆராய்ந்த பிரிட்டன் எந்த முடிவையும் எடுக்காமல் விட்டுவிட்டது. அரபுப் பிரதிநிதிகள் இந்தக் கலவரத்திற்கும் வெறும் கண்டனம் மட்டும் தெரிவித்துவிட்டு, வழக்கம்போல மேன்டேட் அரசிடம் கோரிக்கை மனுக்களை அளித்துவிட்டு அமைதி காத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைப் பின்வாங்கும்படியும் அறிவுறுத்தினர்.

ஏற்கெனவே நாம் பார்த்ததுபோல பாலஸ்தீனத்தின் உயர்த்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அப்போது பிரதிநிதிகளாக இருந்தனர். அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத அளவுக்கு எந்தப் போராட்டமும் வெகுஜன இயக்கமாக வளர்ந்துவிடாது என்பதில் கவனமாக இருந்தனர். இதனாலேயே கலவரங்கள் நடைபெறும்போதும், போராட்டங்கள் வெடிக்கும்போதும் அவர்கள் பாலஸ்தீன மக்களை அழைத்து அமைதிப்படுத்தி அனுப்பி வைத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் இந்தச் சூழல்தான் மக்களுக்குக் கோரிக்கை மனுக்கள்மீதும், அரபு பிரதிநிதிகள்மீதும் நம்பிக்கை இழப்பதற்குத் தொடக்கமாக அமைந்தது. அரபுப் பிரதிநிதிகளின் இந்த அற்பத்தனங்களால் கோபம் கொண்ட எழுத்தாளர்களும், அறிவுத்தளச் செயல்பாட்டாளர்களும் அவர்களுக்கு எதிராகக் கேள்வி எழுப்பத் தொடங்கினர். உண்மையில் இந்த அரபுப் பிரதிநிதிகள் தங்கள் நிலங்களை சியோனியர்களுக்கு விற்றதால்தான் மக்கள் இப்படி இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என்று அவர்கள் எடுத்துக்கூறத் தொடங்கினர்.

பிரபல பாலஸ்தீன கவிஞரான இப்ராஹிம் டோகுவான் அவர்களைக் கடுமையாக விமர்சிக்கும் வகையில் கவிதை ஒன்றை எழுதினார்.

‘பணப் பேராசையால் நாட்டை எதிரிகளுக்கு விற்றுவிட்டார்கள்
அவர்கள் விற்றது அவர்களின் வீடுகளைத்தான்
பசியால் அவ்வாறு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தால் மன்னித்திருக்கலாம்
ஆனால் அவர்கள் ஒருபோதும் பசியையோ, தாகத்தையோ உணர்ந்ததில்லை என்பதைதான் கடவுள் அறிவார்.’

1929ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டம் பாலஸ்தீன எதிர்ப்புணர்ச்சியை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றிருந்தது. மக்கள் இனியும் அரபு நிர்வாகிகளை நம்புவதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்திருந்தனர். சியோனியர்களிடம் இருந்தும் பிரிட்டின் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்தும் தங்கள் நாட்டை மீட்பதற்குப் போர்குணமிக்க நீடித்த நடவடிக்கையே தேவை என உணர்ந்தனர். இப்படியாகத்தான் 1936ஆம் ஆண்டு பாலஸ்தீனப் புரட்சி வெடித்தது.

(தொடரும்)

பகிர:
நன்மாறன் திருநாவுக்கரசு

நன்மாறன் திருநாவுக்கரசு

மாலை மலரில் இணைய எழுத்தாளராகப் பணிபுரிந்து வருகிறார். சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஊடகக் கல்வி ஆகிய துறைகள் சார்ந்து சமூக வலைத்தளங்களிலும் வலைப்பூவிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தொடர்புக்கு : tnmaran25@gmail.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *